WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
The Najaf bombing: US occupation yields catastrophe
நஜாப் குண்டு வெடிப்பு: ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட
பெரும் நாசம்
By Bill Vann
1 September 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
நஜாப் நகரில் ஆகஸ்ட் 29 அன்று ஒரு காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில்
82 பேர் பலியானார்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஈராக் மக்கள் மீது அமெரிக்கா
தொடுத்துள்ள போர் மற்றும் ஈராக்கை அமெரிக்க துருப்புக்கள் பிடித்துக் கொண்டிருப்பதன் பேரழிவை வலியுறுத்தவதாக
இந்தக் குண்டு வெடிப்பு அமைந்திருக்கிறது. புஷ் நிர்வாகம் தானே உருவாக்கிக்கொண்ட புதைசேற்றுக்குள் சிக்கிக்கொள்கின்ற
நிலையில் புஷ் நிர்வாகத்தில் நிலவுகின்ற குழப்பத்தையும், இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் அம்பலப்படுத்துவதாக
அமைந்திருக்கின்றது
புதிய காலனி ஆதிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னோடும் பிள்ளையாக, வாஷிங்டன் தேர்ந்தெடுத்து
நியமித்துள்ள ஈராக் நிர்வாகக்குழுவில் ஷியாட் மக்களின் மிகுந்த செல்வாக்கை பெற்ற ஹாயத்துல்லா முஹம்மது பக்கர்
அல்ஹக்கீம் நியமிக்கப்பட்டார். அவரை குறி வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவர்
மடிந்தார். இந்த தாக்குதல் நடைபெற்ற மறுநாள் மற்றொரு ஷியாட் மத போதகர் முகம்மது பஹர் அல் உலூம்,
ஈராக் நிர்வாக குழுவிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தை சரி செய்வதற்கு
அமெரிக்க அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால், தான் விலக்கொள்வதாக
அவர் கூறினார்.
நஜாப் நகரில் உள்ள போலீஸார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 19 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக
தெரிவித்தனர். இப்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய நபர்கள் இஸ்லாமிய அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள்
என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். ஈராக்கில் நிர்வாகம் நடைபெற முடியாத அளவிற்கு நாடு முழுவதிலும்
தாக்குதல்களை நடத்தி வருவதாக, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக
கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டிருப்பவர்களில் சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஜோர்டானை சேர்ந்தவர்கள்
இடம் பெற்றிருக்கின்றனர். அத்துடன் ஈராக்கை சேர்ந்தவர்களும் இந்தக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர் என்று போலீசார்
தெரிவித்தனர். அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
இத்தாக்குதலுக்கு எந்தக் குழு காரணம் என்று புலனாய்வு அதிகாரிகள் விளக்கம் தரவில்லை.
அமெரிக்க தலைமையில் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்ட துருப்புக்களுக்கு, அல்ஹக்கீம்
ஒத்துழைப்பு தந்து வருகிறார் என்பதற்காக அவர்மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதில் சந்தேகத்திற்கு
இடமில்லை. ஆனால், அல்கொய்தா மற்றும் சதாம் ஹூசேனின் முன்னாள் பாத் கட்சி ஆதரவாளர்கள் மட்டும்தான் அவரைக்
கொன்றுவிட வேண்டும் என்று நோக்கம் கொண்டிருக்கவில்லை.
ஈராக்கில் இயங்கிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய புரட்சி உயர் அதிகாரக் குழுவின் தலைவரான
ஹக்கீம் (Supreme Council for Islamic Revolution
in Iraq - SCIRI) ஈரானிய இஸ்லாமிய ஆட்சியோடு நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.
SCIRI யின் ஆயுதம் தாங்கிய பாதர் படையினர்தான் (Badr
Brigade) ஈரான் - ஈராக் போரின் போது ஈரான் தரப்பில் போரில் கலந்துகொண்டார்கள் ஆவர்.
அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்கள் மாண்டனர்.
அண்மைக் காலம்வரை SCIRI
அமெரிக்க ஆட்சியாளர்களால் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டிருந்தது. ஜூலை மாதம் பயங்கரவாத
தாக்குதல் தொடர்பாக தேசிய கமிஷன் வெளியிட்ட அறிக்கையிலும்
SCIRI பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்கா
ஈராக் மீது ஆக்கிரமித்த நேரத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் பாதர் படையினருக்கு
எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். சதாம் ஹூசேன் ஆட்சிக்கு எதிராக இவர்கள் சுதந்திரமாக படையெடுக்க முயலுவார்களானால்
அவர்கள் எதிரிகள் என்று கருதப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் எச்சரித்தார்.
அதற்குப்பின்னர், ஹக்கீமும் அமெரிக்க அதிகாரிகளும் உடன்பாட்டிற்கு வந்தனர்.
SCIRI தனது கனரக ஆயுதங்களை கைவிட உடன்பட்டது.
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆரம்பத்தில் தெரிவித்து வந்த எதிர்ப்பை ஹக்கீம் கைவிட்டார். அதற்கு மாறாக, ஈராக்கியர்
ஆட்சிக்கு வழிவகை செய்யவேண்டும் என்று ஆயத்துல்லா கோரிக்கை விடுத்தார்.
ஈரானின் பகடைக் காயாக ஷியாட் மத போதகர் செயல்படுகிறார் என்று வாஷிங்டனுக்கு
சந்தேகங்கள் இருந்தாலும், அவர் ஈராக் ஆளும் குழுவில் இடம்பெற்றிருப்பது ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பின் தனக்கு கிடைத்த
ராஜதந்திர வெற்றிகளில் தலைசிறந்தது என்று கருதியது. அத்தோடு, பெரும்பாலான ஷியாட் பிரிவைச் சேர்ந்தவர்கள்
அவர்களிடையே தேசிய உணர்வு தோன்றி அது பகிரங்க கிளர்ச்சியாக மாறிவிடாது தடுப்பதிலும் அமெரிக்க அதிகாரிகள்
தீவிரமாக முயன்று வந்தனர்.
இந்த வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மட்டுமல்ல இந்த மண்டலம் முழுவதிலும்
உள்ள அரசாங்கங்கள் பெருமளவில் கவலை அடைந்துள்ளன. ஈரான் இஸ்லாமிய ஆட்சியில் நெருக்கடிகள் நிறைந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் ஈராக்கில் உள்நாட்டுப் போர் ஏற்படுமானால் அது தனது சொந்த மக்களிடையே கொந்தளிப்பை
அதிகரிக்கும் என்று ஈரான் அஞ்சுகிறது. ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின்
மன்னராட்சி அந்நாட்டு ஷியாட் சிறுபாண்மையினரின் பெருகி வருகின்ற கொந்தளிப்பை சந்தித்து வருகிறது. சவூதி அரேபியாவில்
10 சதவீதம் மக்கள் ஷியாட் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சவூதி அரேபியாவின் எண்ணெய்
வளம் மிக்க கிழக்கு மாகாணத்தில் குவியலாக வாழ்ந்து வருகின்றனர்.
ஈராக்கில் ஷியாட் சமுதாயம் பிளவுபட்டு நிற்கிறது. போட்டி மத போதகர் முக்தாதா
சதர் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தரப்படுவதை கண்டித்திருக்கிறார். பொதுமக்கள் அதிக அளவில்
எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்து வருகிறார்கள். நஜாப் பகுதியில் குண்டு வெடித்ததற்கு ஒரு வாரத்திற்கு
முன்னர் மத போதகர் ஹக்கீமின் மாமனார், குண்டு வெடிப்பிலிருந்து மயிரிழையில் தப்பினார். அந்த குண்டு வெடிப்பு
சம்மந்தமாக முக்தாதா சதரின் தொண்டர்கள் மீது ஆரம்பத்தில் சந்தேகங்கள் எழுந்தன.
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பின்னர் ஷியாட் பெரும்பான்மையினரை தங்கள் பக்கம்
திருப்புகின்ற முயற்சியாக அமெரிக்கா, லண்டனில் தஞ்சம் புகுந்திருந்த மற்றொரு ஈராக் மத போதகரான அப்துல்
மஜீத் கோயிைைய ஈராக்கிற்கு கொண்டு வந்தது. ஆனால் நஜாப் பகுதியில் ஆத்திரம் கொண்ட கும்பல் ஒன்று திட்டமிட்டு
அவரை கொன்றது.
அஞ்சலி செலுத்தியவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக முழக்கம்
அண்மையில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு யார் காரணமாகயிருந்தாலும் நஜாப் பகுதியில்
சனிக்கிழமையன்று அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டம் கூட்டமாக திரண்டு வந்திருந்த மக்கள் ஈராக்கை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கும் அமெரிக்க துருப்புக்கள் மீதுதான் பழிபோட்டனர். இமாம் அலியின் சமாதி பகுதியில்தான் இந்த குண்டு
வெடிப்பு தாக்குதல் நடந்திருக்கிறது. அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் ''அமெரிக்கா
ஒழிக'' என்ற முழக்கத்தை எழுப்பினர். சதாம் ஹூசேனும் புஷ்ஷூம் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று சித்தரிக்கும்
பதாகைகளை ஏந்தி வந்தனர்.
பாக்தாத்தில் ஐ.நா. தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் டிரக்கில் குண்டு வெடித்து
23 பேர் பலியான பத்து நாட்களுக்குப் பின்னர் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. ஐ.நா. தலைமை
அலுவலகத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னர் ஆகஸ்ட் 7 ந் தேதி ஜோர்டான் தூதரகத்தில்
குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்கள் ஈராக்கில் படிப்படியாக வழக்கமான மாமூல் வாழ்க்கை திரும்பிக்
கொண்டிருக்கின்றது என்ற வாஷிங்டனின் கூற்றை பொய்யாக்குகின்றன. அமெரிக்கா தலைமையில் ஈராக்கை ஆக்கிரமித்துக்
கொண்டுள்ள 1,40,000 துருப்புக்களால் அங்கு அமைதியை நிலைநாட்ட இயலவில்லை என்பதையும் இந்தக் குண்டு
வெடிப்புக்கள் நிரூபித்துள்ளன. இதன் விளைவு என்னவென்றால் ஈராக்கில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அல்லது
மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கு வந்திருக்கும் ஐ.நா. ஊழியர்களும் மற்றும் அரசு சார்பு இல்லாத
தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் ஒட்டுமொத்தமாக வெளியேறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நஜாப் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து ஐ.நா. அதிகாரிகள் ஒட்டு
மொத்தமாக ஈராக்கிலிருந்து வெளியேறி விட ஆலோசித்து கொண்டிருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் கோடிட்டு காட்டினர்.
''ஐ.நா. அமைப்பிற்குள் பணியாற்றுகின்ற நாங்கள் ஈராக் நிலவரத்தை பார்க்கும்போது இங்கு ஐ.நா. பணிகளை
நிலை நாட்டுவதில் பாதுகாப்பானதா என்பது குறித்து சிந்திக்கவேண்டிய நிலைமை எங்களுக்கு ஏற்படுகின்றது'' என்று
ஐ.நா.வின் முன்னணி அதிகாரி ஒருவர் Agence
France Press செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் தலைமை நிர்வாகியான போல் பிரேம்மர் (Paul
Bremer) குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் ஈராக்கைவிட்டு வெளிநாடு
சென்றிருந்தார். விடுமுறையில் சென்றிருந்த அவர், இந்தத் தாக்குதலை தொடர்ந்து திரும்பி வருவதற்கான திட்டம்
எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவரது அவலுவலகத்தின் சார்பில் தொடக்கத்தில் ஓர் அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது.
''இந்த முக்கியமான புலன் விசாரணையில் ஈராக் போலீசாருக்கு நமது முழு ஒத்துழைப்பு உண்டு'' என்று மட்டுமே
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படி நழுவிச் செல்கின்ற அணுகுமுறைக்கு இரண்டு வகையான அடிப்படைக் காரணங்கள்
உண்டு. ஒன்று ஈராக்கில் சம்பங்கள் நாளுக்கு நாள் மிகுந்த ஆபத்தான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பது அமெரிக்காவில்
கொள்கை வகுப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி குழப்பத்தை ஆழ்த்தியுள்ளது. இரண்டாவதாக அமெரிக்கா ஈராக்கை
ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு முன்னோடும் பிள்ளையாக ஈராக்கியரே நிர்வாகத்தை நடத்துகிறார்கள் என்ற தோற்றத்தை
உருவாக்குவதற்காக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது ஈராக் ஆளும் குழுவினர் அறிக்கைகளை வெளியிடவேண்டும்
என்று வாஷிங்டன் தூண்டிக் கொண்டிருக்கிறது.
நியூயோர்க் டைம்ஸ் ஈராக் நிர்வாகக் குழு ஒருவரை பேட்டி கண்டது. நிர்வாகக்
குழுவின் இயலாமை குறித்து அவர் பேட்டியளித்தார். யாரோ ஒருவர் அறிக்கை எழுதுகிறார். அது பற்றி நிச்சயமாக
எனக்குத் தெரியாது. ஏனென்றால், நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசி வசதிகள் இல்லை.
ஈராக்கிற்குள் உள்நாட்டுப் போர் ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலை வளர்ந்து
கொண்டிருக்கும்போது, அமெரிக்கப் படைகளுக்கு எதிராக கொரில்லா போர் நாளுக்கு நாள் பெருகிக்
கொண்டிருக்கும் போது, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் நஜாப் தாக்குதல் அமெரிக்காவின்
நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். ''இந்த காலக்கட்டத்தில் வெற்றி வளரும்போது அந்த
வெற்றிக்கு எதிரானவர்கள் சுதந்திர ஈராக்கின் எதிரிகள் தங்களது விரக்தியின் காரணமாக நடவடிக்கைகளை முடுக்கிவிடவே
செய்வார்கள்'' என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.
பிரேம்மர்: ஈராக் சீரமைப்பு செலவு பற்றி மதிப்பீடு
இதர அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் ஈராக்கில் சீர்குலைந்து கொண்டுள்ள நிலை குறித்து
மிக பிரதானமாக தங்களது மதிப்பீடுகளை வெளியிட ஆரம்பித்திருக்கின்றனர். பிரேம்மரே கூட அண்மையில் ஈராக் சீரமைப்பிற்கு
எவ்வளவு செலவாகும் என்பது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். ஈராக்கை சீரமைப்பதற்கு கற்பனை செய்ய
முடியாத அளவிற்கு ''பல ஆயிரம் பில்லியன் டொலர்கள்'' தேவைப்படலாம். மற்றும் பிற நாடுகளின் பங்களிப்பும்
இதில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவரோ அல்லது நிர்வாகத்திலுள்ள வேறு எந்த அதிகாரியுமோ, அமெரிக்க அரசாங்கத்திற்கு
ஈராக்கில் எவ்வளவு செலவாகும் என்பதை மதிப்பீடு செய்யவில்லை. 2.5 பில்லியன் டொலர்களை ஈராக்கிற்காக அமெரிக்க
நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்தது. அத்துடன் வெளிநாடுகளில் முன்னாள் ஈராக் அரசாங்கத்தின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்திருந்த
பணமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவ்வளவு தொகையும் ஏற்கெனவே ஈராக்கில் செலவாகிவிட்டது. பாக்தாத்தில் அமெரிக்கா
தனது நடவடிக்கைகளை இந்த ஆண்டு இறுதிவரை நடத்திச் செல்வதற்கு பட்ஜெட்டில் கூடுதல் செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்
வரை மேலும் 3 பில்லியன் டொலர்களை கோருவதற்கு நிர்வாகம் முயன்று வருகின்றது. ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்திற்கு
ஒரு வாரத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் அளவிற்கு செலவாகி
வருகின்றது. ஆப்கானிஸ்தானில் மாதத்திற்கு ஒரு பில்லியன் டொலர் வரை அமெரிக்கா செலவிட்டு வருகின்றதுடன், இரண்டாவது
ஆண்டாக அங்கு இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
ஆரம்பத்தில் புஷ் நிர்வாக அதிகாரிகள் ஈராக்கில் ஆகும் செலவினங்கள் குறித்து ஒரு
மதிப்பீடு செய்தனர். ஈராக் எண்ணெயை எடுத்து விற்பனை செய்து அதன் மூலம் செலவை ஈடுகட்டிவிட முடியும் என்று
அவர்கள் கருதினார்கள். இதில் லாபம் தருகின்ற ஏலம் எதுவும் விடாமல் குடியரசுக் கட்சியோடு நெருங்கிய உறவு வைத்துக்
கொண்டிருக்கும் ஹலிபர்டன் மற்றும் பெக்டல் (Halliburton and
Bechtel) போன்ற கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள்
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு அனுமானங்களைப்போல் இந்த அனுமானங்களும்
கானல் நீராக ஆகிவிட்டன.
ஈராக்கில் 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரத் தடைகள் போரினால்
ஏற்பட்ட சேதங்கள் மற்றும் போருக்கு பின்னர் நடைபெற்ற சூறையாடல்கள் ஆகியவற்றால் எண்ணெய் வயல்கள் சிதைந்து
கிடக்கின்றன. எண்ணெய் உற்பத்தி மூலம் எந்தவிதமான லாபமும் பெறமுடியாத அளவிற்கு தொடர்ந்து நாசவேலைகள்
நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. வடக்கு கிர்குக் எண்ணெய்க் வயல்களிலிருந்து துருக்கிக்கு எண்ணெய் கொண்டு செல்லும்
குழாய் இணைப்புக்களில் குண்டு வெடித்து பெருந் தீவிபத்து உருவாயிற்று. ஆகஸ்ட் 30 ந் தேதி குண்டு வெடித்ததால்,
அந்தக் குழாய் இணைப்பில் தீ விபத்து ஏற்பட்டது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த குழாய் இணைப்பில் எண்ணெயை
செலுத்துகின்ற பணி துவங்கிய பின்னர் நான்காவது பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ச்சி இதுவாகும்.
ஈராக்கில் தனது காலனி ஆதிக்கத் திட்டத்திற்கு பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவைத்
திரட்டுவதற்கு வாஷிங்டன் மேற்கொண்ட முயற்சிகள் எந்தவிதமான பயனையும் தரவில்லை. லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்
ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி அமெரிக்க அதிகாரிகள் அதிக உதவி பெறுவதற்கு மேற்கொண்ட
முயற்சிகள் வெற்றிபெறவில்லை. நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் இந்த முயற்சிகள் விரக்தி தருகின்ற வகையில்
தோல்வியடைந்துள்ளன என்பதை அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய முயற்சிகளை
"ஆபரேஷன் டின் கப்"
(Operation Tin Cup)
என்று சிலர் கேலி புரிந்து வருவதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.
இதற்கிடையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்களின் பாதிப்பு அதிகரித்துக்
கொண்டே இருக்கின்றது. சனிக் கிழமையன்று வடக்குப் பகுதி நகரான கிர்குக்கிற்கு அருகில்
RPG ராக்கெட் தாக்குதல்களால் மேலும் இரண்டு படையினர்
காயம் அடைந்தனர். மே முதல் தேதியன்று பெரும்பாலான போர் நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாக ஜனாதிபதி புஷ்
அறிவித்த பின்னர், நூற்றி நாற்பத்து மூன்று படையினர் இதுவரை மாண்டுள்ளனர். ஆக்கிரமிப்பு நேரத்தில் நடைபெற்றதைவிட
அதற்குப் பின்னர் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போர் தொடங்கிய காலத்திற்குப் பின்னர் புஷ் நிர்வாகம் ஈராக்கில் ஐ.நா.விற்கு எந்தவிதமான
குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் தருவதற்கு மறுத்துவிட்டது. ஈராக்கின் எண்ணெய் வளத்தையும், செல்வத்தையும் தன்னுடைய
ஏகபோக கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் ஈராக்கில் தொழில்களை தனியார்
மயமாக்குவதின் மூலம் போரில் சிதைந்து கிடக்கும் ஈராக்கின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்வதன்
மூலம் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கவேண்டும் என்ற நோக்கத்தை மிகவும் எச்சரிக்கையோடு
காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஈராக்கில் தனக்கு வாடிக்கையாளராக செயல்படுகின்ற ஆட்சியை உருவாக்கி, அரபு
மண்டலம் முழுவதிலும் தனக்கு இராணுவத் தளங்களை அமைத்து கொள்வதிலும், ஈராக் எண்ணெய் வளத்தை பயன்படுத்திக்
கொள்வதிலும் வாஷிங்டன் உறுதியாக நிற்கின்றது.
பென்டகனிலும், துணை ஜனாதிபதி டிக் செனி அலுவலகத்திலும் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரி
சக்திகள் திடீர்த் தாக்குதல் போர் மற்றும் ஒருதலைப்பட்சமான, தன்னிச்சையான இராணுவ வலிமையால் உலகம் முழுவதிலும்
அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களை பேணி காப்பதற்கான தங்களது கொள்கைக்கு சோதனைக் களமாக பயன்படுத்திக்கொள்ள
விரும்புகின்றனர். இந்த சக்திகள் புஷ் நிர்வாகத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக்கில் ஐ.நா.விற்கு
கொள்கை முடிவுகளை எடுக்கும் எந்த பங்களிப்பையும் தருவது அமெரிக்காவிற்கு தலை குனிவை ஏற்படுத்தும் என்றும்,
மிகவும் ஆபத்தான பின்வாங்கும் நடவடிக்கையாக அமையும் என்றும் இந்த தீவிர வலதுசாரிகள் கருதுகின்றனர்.
அப்படியிருந்தும் சென்ற வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர்
ரிச்சார்ட் ஆர்மிடேஜ் ஊடகங்களில் ஒரு ஆலோசனையை உலா வரவிட்டிருக்கிறார். அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு
நடைபெறும் ஈராக்கில் ஐ.நா.வின் பங்களிப்பை அதிகரிக்கலாம் என்பதுதான் அந்த ஆலோசனையாகும். இப்படி செய்வதின்
மூலம் ஐ.நா. ஒரு தீர்மானத்தை இயற்றி ஈராக்கில் தனது பங்களிப்பை தொடக்குமானால் துருக்கி, பாக்கிஸ்தான்
மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்க இராணுவ முயற்சியை வலுப்படுத்துகின்ற வகையில் ஈராக்கிற்குள் தங்களது
துருப்புக்களை அனுப்புவதற்கு அரசியல் முக மூடி ஒன்று கிடைக்கும்.
பென்டகனில் இடம்பெற்றுள்ள சிவிலியன் தலைமைகள், இத்தகைய மாற்றத்தை எதிர்க்கின்றன.
அங்கிருக்கும் ஈராக் நிர்வாகக் குழுவும் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகளிடம்
இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஈராக் இராணுவம் தயாராகவேண்டும் என்ற யோசனை கூறப்பட்டு
வருகின்றது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த, வங்கி ஒன்றில் மோசடி செய்து
தண்டிக்கப்பட்ட அஹமது சலாபி இந்த ஆலோசனையை மிக தீவிரமாக கூறி வருகிறார். இவருக்கு பென்டகனுக்குள் மிகத்
தீவிரமான ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.
போருக்கு முன்னர் பென்டகனில் உள்ளவர்களுக்கும், செனி அலவலகத்தில் இருந்தவர்களுக்கும்
மிக நீண்ட தகராறு நிலவியது. செனி அலவலகத்தில் இடம்பெற்றிருந்தவர்கள், சதாம் ஹூசேன் ஆட்சி கவிழ்ந்த பின்
சலாபி தலைமையில் பொம்மை ஆட்சியை நிறுவவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால்,
CIA மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையில் இடம்
பெற்றிருந்தவர்கள் சலாபியின் மக்கள் ஆதரவை கணக்கில் கொண்டு, இந்த எடுபிடியை ஆட்சியில் அமர்த்துவது பேரழிவிற்கு
இடம் தந்துவிடும் என்று எச்சரித்தனர்.
ஆரம்பத்தில் சலாபிக்கு எதிரான குழு வெற்றி பெற்றது. சலாபியின் அமெரிக்காவில் பயிற்சி
பெற்ற சுதந்திர ஈராக் படைகள் கலைக்கப்பட்டன. அமெரிக்கா ஆக்கிரமித்து சென்ற ஆரம்பக்கட்ட நாட்களில் இந்த
படையைச் சேர்ந்தவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. தற்போது அமெரிக்கப்
படைகளுக்கு நாசம் விளைவிக்கும் ஆபத்துக்கள் உருவாகிக் கொண்டிருப்பதால் சலாபிக்கு ஆதரவான குழுவினர் மிகுந்த
துணிச்சலோடு அவரை அமெரிக்க ஆதரவு பெற்ற வல்லாட்சியராக வளர்ப்பதற்கு கோரி வருகின்றனர்.
இதுபோன்ற குழுக்கள் அனைத்தையும் ஒரே அணியின்கீழ் கொண்டு வருவதற்கான அமெரிக்க
முயற்சியின் மூலம் எதிர்மாறான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். சலாபியின் குழு,
SCIRI மற்றும் குர்து இனத்தவர்கள் தங்களுக்குள்ளேயே
தனித்தனி குழுக்களை உருவாக்கி, தலைமை சக்தியாக வர முயற்சிப்பதன் மூலம் ஈராக்கில் உள்நாட்டுப்போர் உருவாகுவதற்கான
சூழ்நிலை உருவாகி வருகின்றன.
ஈராக் புதைசேற்றில் அமெரிக்கா ஆழமாக சிக்கிக் கொண்டிருப்பது, அமெரிக்காவின்
சட்ட விரோதமான போரினால் ஏற்பட்ட விளைவாகும். இந்தப் போர் அமெரிக்க பெரும் கம்பனிகளின் நலன்களை
காப்பதற்காக தொடக்கப்பட்டது. தற்போது அரசியல் பண்டிதர்கள் என்று சொல்லப்படுகின்ற ''தாராளவாத''
சிந்தனையாளர்கள், ஜனநாயகக்கட்சி அரசியல்வாதிகள் முதலிய பல்வேறு தரப்பினர் அமெரிக்கப் படைகள் அதிகமாக
ஈடுபடுத்தப்படவேண்டும் என்பதில் தொடங்கி ஐ.நா.விற்கு அதிக பங்களிப்பு இருக்கவேண்டும் மற்றும் ஈராக்கில்
பொம்மை ஆட்சி உருவாக்கப்படவேண்டும் என்பது வரை பல்வேறு ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் எந்த ஆலோசனையிலும், முற்போக்கு ஜனநாயகத் தன்மை, அல்லது மனிதநேயம் இல்லை. ஏனென்றால், இவை
அத்தனையும் அமெரிக்கா மேற்கொண்ட கிரிமினல் நடவடிக்கையிலிருந்து வந்தவை. ஈராக் மக்கள் அமெரிக்கர்களையோ
மற்றும் பிரித்தானியர்களையோ தங்கள் மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடவில்லை.
உடனடியாக, நியாயமான மறு நிர்மாணம் ஈராக்கிற்கு உருவாகவேண்டும் என்றால், அதற்கு தவிர்க்க முடியாத ஒரே
ஒரு நிபந்தனை உண்டு. அது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் அனைத்தும் ஈராக்கிலிருந்து வெளியேறவேண்டும்
என்பதாகும்.
இப்படி அனைத்துப் படைகளும் வெளியேறிய பின்னர் முழுமையான, சுதந்திரமான மற்றும்
பொது விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த ஏகாதிபத்திய போருக்கு இட்டுச் சென்ற பொய் மூட்டைகள் மற்றும்
சதி ஆலோசனைகள் அனைத்தையும் முழுமையாக விசாரித்து, இதற்கு அரசியல் அடிப்படையில் பொறுப்பானவர்கள்
தண்டிக்கப்படவேண்டும்.
Top of page
|