World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்Nick Beams reviews Keith Windschuttle's The Fabrication of Aboriginal History An assault on historical truthகீத் விண்ட்ஷட்டிலுடைய ``பழங்குடி மக்கள் வரலாறு திரிக்கப்படல்`` நூலை நிக் பீம்ஸ் விமர்சிக்கிறார் வரலாற்று உண்மையின் மீதான தாக்குதல் முதல் பகுதி By Nick Beams ``வரலாற்றாசிரியரின் பார்வை தற்காலப் பிரச்சினைகள் பற்றி ஒளிவீசும் தெளிவைப் பெறும்பொழுது பெரும் வரலாறு துல்லியமாக எழுதப்படுகிறது`` என்று சிறந்த ஆங்கில வரலாற்றாசிரியரான E.H.Carr விளக்கியுள்ளார். [E.H.Carr, What is History? p.37] அதே முறையில், தற்காலத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள் தெளிவற்றவையாகப் போகும்பொழுது வரலாற்றுப் பிழைகள்தோன்றுகின்றன என்று கூறமுடியும். கடந்த பத்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ``வரலாற்றுப் போர்கள்`` என அழைக்கப்படுபவை நடைபெறும் முறையில் வரலாறு எழுதுவதற்கும், தற்கால சமுதாய சிக்கல்களுக்குமான தொடர்பு நன்கு விளக்கப்படுகிறது. அவை சமீபத்திய வெளியீடான கீத் விண்ஷட்டிலால் எழுதப்பட்ட The Fabrication of Aborginal History யை ஒட்டி தீவிரத்தின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் மீது பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பாதிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் இயல்பின் மீதான மோதலாக அதிகரித்துவரும் சூடான விவாதத்தின் வடிவம் இருக்கையில், அதன் உள்ளடக்கமோ தற்கால சமுதாயத்தைப் பற்றியதாக இருக்கிறது. 1960களில் தீவிரப்போக்குக் கருத்துடைய மாணவராக இருந்த விண்ட்ஷட்டில், ஒரு காலத்தில் தன்னைத் தானே மார்க்சிச மற்றும் தீவிர பத்திரிகையாளர் எனக் கூறிக்கொண்டவர், ஆழ்ந்த பிற்போக்கு வலதுசாரி அரசியல் கட்டுரையாளர் பலருடைய கருத்துத் தலைவராக ஆகி இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். ஹோவார்ட் அரசாங்கத்திடமிருந்து பல புகழாரங்களைப் பெற்றுள்ள அவர் மர்டோக்கின் பத்திரிகைகளின் பக்கங்களிலும் கணிசமாக முன்னேற்றப்படுத்தப் பட்டுள்ளார். திரிக்கப்படல் 1803லிருந்து 1843 வரை (இப்பொழுது டஸ்மேனியா மாநிலமாக உள்ள) வான் டீமன்ஸ் நிலப்பகுதியில் பழங்குடி மக்களுக்கும் பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்களுக்கும் இடையேயிருந்த உறவுகளைப் பற்றி விவரிக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி வரத் திட்டமிட்டுள்ள மூன்று தொகுப்புக்களில் இது முதல் தொகுப்பு ஆகும். 150 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்சம் ``நாகரீகமான பொதுக் கருத்திலாவது`` டஸ்மேனியாவில் 20,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பழங்குடிச் சமுதாயத்தை அழித்தது பெரும் வரலாற்றுச் சோகம் என ஏற்கப்பட்டுள்ளது. 50 ஆண்டிற்குள் முடிக்கப்பட்ட இச்செயல் பிரிட்டிஷ் குடியேற்றம் நிறுவப்படுவதற்காக ஏற்பட்ட நிகழ்வு ஆகும். மேலும் ஒரு மக்கட்குழு முழுவதும் அழிக்கப்பட்டது காரணமின்றி உதறித்தள்ளிவிடவும் முடியாத செயல் என்பது பொதுவாகப் புரிந்துகொள்ளக்கூடியது. எப்படிப்பட்ட சமுதாயம் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பது பற்றிய ஆழ்ந்த கேள்விகளை அது எழுப்புகிறது. இது ஒன்றும் ``இடதுசாரி`` அல்லது மார்க்சிச நிலைப்பாடு அல்ல. பின்னர் ஒரு முன்னணி தாராளவாத அரசியல்வாதியாகவும், கடைசியில் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த வரலாற்றாசிரியர் போல் ஹஸ்லுக் எழுதினார்: தொடர்பின் முற்பகுதியில் வன்முறைக்காலம் அமைந்திருந்தது முக்கியமானது; ஏனென்றால் இரண்டு இனங்களுக்குமிடையே தவிர்க்க முடியாமல் அது பூசலை விட்டுச் சென்றது; ஓரளவு வெட்க உணர்வோ, நடந்ததை நியாயப்படுத்தவேண்டும் என்ற போக்கோ, முதலில் தன் மண்ணைக் காப்பாற்றியவரை இழிவுபடுத்தி நம்பிக்கைத்துரோகி, இதயத்தில் கடுமை படர்ந்தவர், கொலை நோக்குடையவர், பலம் ஒன்றைத் தவிர வேறெதற்கும் கட்டுப்படாதவர் என்றெல்லாம் கூறவைக்கும்.`` [Krygier Van Krieken, "The Character of the Nation" in Whitewash, p.105-ல் மேற்கோள் காட்டப்பட்டது]. வரலாற்றுப் பிரச்சினைகள் பலவற்றைப் பற்றியும் உடன்பாடு காணமுடியாத வேறுபாடுகள் எப்பொழுதும் இருக்கும். பழங்குடி சமுதாயத்தின் மீது பிரிட்டிஷ் குடியேற்றத்தின் தாக்கம் பற்றிய தோற்றமும் முக்கியத்துவமும், அரசாங்கக் கொள்கையின் பாத்திரம், பழங்குடி மக்களின் எதிர்ப்பும் பரப்பெல்லையும், குடியேற்றத்துக்கு முந்தைய பழங்குடியினரின் வாழ்க்கை என்ற பலவற்றுள்ளும் சில தலைப்புக்கள் விவாதத்திற்குரியதேயாம். அவை ஆராய்ச்சியின் பொருளாகவும், மாறுபட்ட கருத்துக்களின் பொருளாகவும் உள்ளன; தொடர்ந்தும் நீடிக்கும். கடந்தகாலம் மற்றும் வருங்காலம் இவற்றைப் பற்றிய உண்மையை அறியும் சிக்கல்வாய்ந்த, நுட்பமான வழிவகையில் இது இயல்பே ஆகும். ஆனால் விண்ட்ஷட்டிலுடைய புத்தகமோ, வரலாற்று உண்மையை மறைக்கும் நோக்கமுடையதாக உள்ளது. இவருடைய இலக்கு ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வாதத்தை அதாவது பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை பெருமளவில் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது என்பதை ``நிரூபணம்`` செய்வது ஆகும். ``மரபுவழி வரலாற்றாசிரியர்களை`` சில அரசியல் செயல்பட்டியலுக்காக ``திரித்துக் கூறும்`` சான்றுகளைத் தயாரிப்பவர்கள் என்று இவர் குற்றம் சுமத்துவதுடன், டஸ்மேனியப் பழங்குடி முழுவதும் அழிந்தது பழங்குடியினரின் குற்றமே எனக் கூறுகிறார். பிரிட்டிஷ் காலனித்துவத்தின் வருகைக்கு பழங்குடியினர் விடையாக எடுத்த தவறான "விருப்பத் தேர்வுகளே" அவர்கள் சோகத்தைத் தாங்களே தேடிக்கொண்ட நிலையின் காரணம் என்று விண்ட்ஷட்டில் கூறுகிறார். புதிய நாகரிகத்திற்கேற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளாமல் குற்றஞ்சார்ந்த நடவடிக்கைகளான கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட அவர்கள் "தேர்ந்தெடுத்ததால்" பிரிட்டிஷ் சமூகத்தின் நுகர்பொருட்களைத் துய்க்கும் நோக்கத்தில் அபகரித்ததால் இந்நிலை ஏற்பட்டது என்று கூறுகிறார். விண்ட்ஷட்டிலுடைய முறை, வரலாறு படிக்க `தடையற்ற சந்தை` சிந்தனையை பயன்படுத்துவது போலாகும் என்பதை நாம் காண இருக்கிறோம். இந்தப் பல காரணங்களுள் ஒன்றுதான் வலதுசாரிக் கருத்துரையாளர்கள் எப்பொழுதும் சமுக பிரச்சினைகளுக்கும் குற்றஞ்சார்ந்த செயல்முறைக்கும் தீய தனி மனிதரைப் பொறுப்பாக்குபவர்கள் இவருடைய புத்தகத்தை நன்கு வரவேற்பதற்குக் காரணமாகும். ``பழங்குடியினர் வரலாறு பற்றிய விவாதம் அதைச் சாக்கிட்டு அதன் உண்மையை மறைத்துக்காட்டும் வரம்பிற்கப்பால் தான் நடத்தப்படுகிறது`` என்பதை விண்ட்ஷட்டிலே ஒப்புக்கொள்கிறார். மேலும், ``இது நாட்டின் குணத்தைப் பற்றியது, இறுதியில் 1788-ல் பிரிட்டன் இக் கடற்கரைகளுக்குக் கொண்டுவந்துள்ள நாகரிகத்தின் சிறப்பு பற்றியது`` எனக் கூறுகிறார். இன உறவுகள் பற்றி எதிர் வரலாற்றை ஏற்படுத்த முயற்சிக்கும் இவர் அடக்குமுறை, மாறுபாடுகள் என்ற கூற்றுக்கள் முழு வழிவகையையும் தவறாக விளக்கமளித்துவிடும் என்று நிரூபிக்க முயல்கிறார். ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் குடியேற்றம் ``புது உலகம் முழுவதிலும் ஐரோப்பியர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளில் குறைந்த வன்முறை தன்மையைத்தான் கொண்டதாகும்`` என்று அவர் வாதிடுகிறார். [Fabrication, p.3] கொலையும், கொள்ளையும் பிரிட்டிஷ் ``ஆடம்பரப் பொருள்களைக்`` கொள்வதற்கு தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த தேவையாகிவிட்டதால், பழங்குடியினர் அவற்றைக் கையாண்டதுதான் அவர்கள் மீது வன்முறை செலுத்தக் காரணமாய் இருந்தது. பழங்குடி மக்களுடைய எதிர்ப்பில் பெருந்தன்மை இல்லை. இராணுவப் போராட்டங்கள் இல்லாத நிலையில், இந்தக் குற்ற நடவடிக்கைகள் அழிக்கப்படவிருந்தது, இறுதியில் அழிக்கப்பட்டன. இத்தகைய ``திரித்துக் கூறுதலைக்`` காணும் முயற்சியில் விண்ட்ஷட்டிலால் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு வாதத்தையும் இங்கு நாம் பரிசீலனை செய்ய முடியாது. அத்துறையிலுள்ள வல்லுனர்கள் தன்னுடைய செயற்பட்டியலுக்கு ஏற்றவாறு எங்கு, எப்படி அவர் முக்கியமான சான்றுகளைக் கையாண்டுள்ளார் என்பது பற்றி சந்தேகத்திற்கிடமின்றிக் கூறுவர். ஏற்கனவே வல்லுநர்கள் அவ்வாறு செய்யத் தலைப்பட்டுவிட்டனர். அத்தகைய ஆய்வு நூல்கள் வராவிடினும், விண்ட்ஷட்டிலுடைய வரலாற்று உண்மை மீதான தாக்குதலை நாம் அம்பலப்படுத்த முடியும். ஏனெனில் அவருடைய புத்தகத்திலேயே அதற்கான ஆதாரச் சான்றுகள் இருக்கின்றன. நாட்டுப்புற பொருளாதாரத்தின் தோற்றம் டஸ்மேனியா அல்லது வான் டீமனுடைய பகுதி என்று அப்பொழுது அழைக்கப்பட்ட பகுதியின் குடியேற்றத்தால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளின் மையத்தானம், குடியேற்றச் சமூகத்தில் 1820களின் நடுப்பகுதியிலிருந்து ஏற்பட்ட தெளிவான மாறுதல் ஆகும். 1803-04ல் குடியேற்ற முறை தொடங்கியது; 1804 மே மாதம் ரிஸ்டன்கோவில் நடந்த நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க அப்பொழுது மூன்று பழங்குடியினர் கொல்லப்பட்டனர்- குடியேறியவர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையே இருந்த உறவுகள் ஓரளவு அமைதியாகவே இருந்தன. 1824லிருந்து கறுப்பு போர் எனப்பட்ட போரை நோக்கி, குறிப்பிடத்தக்க மாறுதல் நிகழ்ந்தது; பின்னர் 1830ல் கறுப்புக்கோடு என்பதின் மூலம் தூண்டுதல் நிகழ்ந்து பின்னர் எஞ்சிய பழங்குடி மக்கள் பாஸ் நீரிணையில் (Bass Strait) உள்ள Flinders தீவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இப்பூசலின் வெடிப்பை பகுப்பாய்வு செய்யும் விண்ட்ஷட்டில் பெரும்பாலான வரலாற்றாசான்கள், ``1824 வரை பழங்குடியினருக்கும், குடியேறியோருக்கும் இடையே இருந்த உறவுகள் ஓரளவு அமைதியாக இருந்தது என்பதையே வலியுறுத்துகிறார்கள்`` என்று தொடங்குகிறார்; அத்தகைய கருத்தைப் பரப்பியோரில் முக்கிய இலக்காக ஹென்றி ரோனால்ட்ஸின் கருத்தில் ``டஸ்மேனியர்கள் அமைதியான போக்கையும், மென்மையான சுபாவத்தையும் கொண்டிருந்தனர்.`` [Fabrication, p.61] வரலாற்று ஆசிரியர் பிரையன் லோம்லியின் (Brian Plomley) கருத்தின்படி, குடியேற்றத்தின் முதல் 20 ஆண்டுகளில் பழங்குடியினரிடமிருந்து எந்தவிதமான இணைந்த தடுப்பு முயற்சிகளும் காணப்படவில்லை. ஆனால், 1824ல் எல்லாமே மாறியது. அப்பொழுதிலிருந்து ``தாக்குதல்கள் பொருள் பொதிந்தவையாகக் குடியேறியோரைத் தங்கள் பகுதியிலிருந்து விரட்டிவிட்டுத் தங்கள் இயற்கை வாழ்வை நடத்தும் உந்துதலைக் கொண்டிருந்தது; மேலும் தங்கள் நிலத்தைக் குடியேற்றியோர் ஆக்கிரமிப்புச் செய்ததனால் ஏற்பட்ட விளைவான பட்டினியும் ஓர் உந்துதலைக் கொடுத்தது.`` [Fabrication, p.62] வரலாற்று ஆசிரியர் லிண்டால் ரியன், கீழ்க்கண்ட பொருளாதார மாறுதல்கள் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்: 1817லிருந்து 1924க்குள் குடியேற்றத்தில் வெள்ளையர் எண்ணிக்கை 2000 த்திலிருந்து 12,643 ஆக உயர்ந்தது; ஆடுகளின் எண்ணிக்கை 54,600லிருந்து, 200,000ஆக உயர்ந்தது. [Fabrication, p.62]. மேய்ப்பு பொருளாதாரம் 1820களில் விரைவாக வளர்ந்த நிலையில் வான் டீமனுடைய பகுதி புதிய தெற்கு வேல்ஸைவிட கம்பளி ஏற்றுமதியில் அதிகமான அளவு இடத்தைப் பெற்றது. ஆனால் ரியானுடைய விளக்கம் விரிவான மேய்ப்பு பொருளாதார நிலைமைய அதிகரித்த வன்மையோடு தொடர்பு படுத்துதலை ``அரை மார்க்சிஸ்ட்`` என்று உதறித் தள்ளுகிறார். அதேபோல் லோம்லியுடைய கருத்தான வளர்ந்த பசி நிலையையும் ரேனால்டுடைய வாதமான நில அடைப்புக்களாலேற்பட்ட மாறுதல்களையும் ஏற்க மறுத்து உதறித் தள்ளுகிறார். டஸ்மேனிய பழங்குடியினர் கொரில்லா போர் முறையில் ஈடுபட்டதின் காரணம் அவர்கள் நிலத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்ததற்காக இல்லை என்று விண்ட்ஷட்டில் கூறுகிறார். அவர்கள் சொத்துரிமை கருத்துப் பெற்றிராததால் குடியேறியோரை சட்டவிரோதமாக வந்தவர்கள் எனக் கருதவில்லை என்றும் விண்ட்ஷட்டில் வாதிடுகிறார். டஸ்மேனியப் பழங்குடியினர் தாங்கள் நிலத்திற்குச் "சொந்தம் கொண்டாடியதாக" நினைக்கவில்லை என்றும் வாதிடுகிறார். அக்கருத்துரு ``அவர்களுடைய பண்பாட்டில் ஒரு பகுதியாக இருந்தது இல்லை.`` இதற்கு ``வலுவான வாதம்,`` ``குடியேறியோரின் நில உரிமை பழங்குடியாளரின் வன்முறைக்குக் காரணம் அல்ல என்பதற்கு, பிரிட்டிஷார் இருப்பதைத் தாக்க அவர்கள் நீண்டகால அவகாசம் எடுத்துக் கொண்டதே தக்கதாகும்`` என்கிறார். [Fabrication, p.111] டஸ்மேனியப் பழங்குடியினருக்கு நிலச்சொத்துடைமை அல்லது சொத்து பற்றிய கருத்துப்படிவங்கள் இருந்ததில்லை என்பது உண்மை தான். அதே போல் அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பும் சராசரி ஆங்கில விவசாயிக்கும் அத்தகைய உணர்வு இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 17-ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பொதுச் சொத்து என்ற கருத்து ஒன்றுதான் இருந்தது -- கடவுள் அனைவருக்கும் நிலத்தைக் கொடுத்துள்ளார் என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு. எனவேதான் தத்துவவியலார் ஜோன் லொக், தனி அதாவது பிரத்தியேகமான சொத்துக்கு கொள்கையளவில் புரட்சிகரமான கருத்து கொண்டுவர நேர்ந்தது. எனவேதான் நில அடைப்பு இயக்கம், செம்மறி ஆடுகளை அறிமுகப்படுத்துவதற்காக நோக்கங்கொண்டது கூட, ஆங்கிலச் சமுதாயத்திலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரத்தியேக நிலச்சொத்துடைமை கருத்து இல்லாததால் தங்கள் வாழ்க்கை முறையைக் காத்துக்கொள்ளக் குடியேறியோர் மீது பழங்குடியினர் தாக்குதல்களை நடத்தவில்லை எனக் கூறிவிட முடியாது. சற்று கூடுதலான உணர்வுடன் இருந்த குடியேறியோர் தாங்கள் பிரத்தியேகமாக நிலத்தைப் பயன்படுத்துவதால் பூசல்கள் எழுந்துள்ளன என்பதை நிச்சயம் அறிந்திருந்தனர்; அதோடு கூட வேட்டையாடுதலில் அவர்கள் பெற்ற பண லாபமும், முன்பு பழங்குடியினரைக் காக்க உதவியதால் வேட்டையாடலில் இழப்பும் நெருக்கடியை ஏற்படுத்தியது. உதாரணமாக 1830ல் Launceston பகுதியின் மேய்ப்பாளர் ரிச்சர்ட் டிரை கீழ்க்கண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார்: ``சிறந்த நிலப் பகுதிகள், பரந்த சமவெளிப் பகுதிகள், நேர்த்தியான காட்டுப் பகுதிகள் ஆகியவை மிக விரைவாகக் குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அளவில், முன்பு மிக அதிக அளவில் எமுக்களும் (Emu), கங்காருகளும் (Kangaroos) நிறைய இருந்து பொழுதுபோக்குபோல் அவற்றை வேட்டையாடி உண்ட பழங்குடியினருக்கு இப்பொழுதோ உறுதியற்ற தன்மையும், கடினமான உழைப்பும் உணவு கிடைப்பதற்கே தேவைப்பட்டது; இந்தக் குடியேற்றக்காரர்களின் நிலங்களிலிருந்து அவர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டனர்; அன்றாடம் குடியேறிகள் நில அடைப்புக்களை ஆக்கிரமிப்புப் பகுதியில் போடுவதை அவர்கள் காண்கின்றனர். இந்த நிலை குடியேற்றத் தன்மையிலிருந்து தவிர்க்க முடியாதது என்றாலும், கறுப்பர்களிடையே நாம் அவர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோக்கத்தைப் பற்றித் தவறான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும்; ஆயினும் வேண்டுமென்றே மிருகங்களைக் கொலை செய்து அதனால் வாழ்க்கை நடத்துவதை விட மோசமான நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை; கங்காருத் தோலை விற்பதற்காக அதன் சடலம் எந்தப் பயனையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 8000 பிராணிகளாவது இவ்வாறு கொல்லப்பட்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்; ஆனால் நாட்டின் உட்பகுதியில் இவற்றைச் சேகரிப்போர், (தோல்) வளப்பொருட்கள் விற்பனையில் நன்மையடைவோர், ஒரு தோலின் மதிப்பு 6 பென்ஸ் என்பதற்கு ஈடுபடுவோர் ஆறு பழங்குடியினருக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருள்களை அழிக்கிறார்கள்.`` [Fabrication, p.335] தன்னுடைய நூலின் ஆராய்ச்சிக்கு ஆதரவு கொடுப்பதாக விண்ட்ஷட்டில் நினைக்கும் பகுதியில் லோம்லி எழுதுகிறார்: ``பழங்குடிப் பகுதிகளை ஆக்கிரமித்தல் அவர்களது பண்பாட்டு முறையையும் ஓரளவு சீர்குலைத்திருக்கக்கூடும்; ஆனால் பழங்குடியினர் உறைவதற்கும், குடித்துக் களிக்கும் இடங்களுக்கும், உணவு சேகரிக்கும் பகுதிகளுக்கும் அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா என்பது சந்தேகந்தான்; ஏனெனில் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் போல் மிகுந்த ஒழுங்குற்ற புனிதக் கருத்துடைய வாழ்வு ஓர் இடத்தை அப்பகுதியின் உயிரோடு இணைக்கும் கருத்து, டஸ்மேனியர்களிடம் இருந்தது இல்லை.`` [Fabrication, p.115] லோம்லியுடைய திட்டவட்டக் கருத்தான பழங்குடியினருக்கு இடத்தின் மீதான பற்றினால் புனிதப் பண்பாடு இருந்ததில்லை, ஆகவே இவருடைய கருத்தின்படி சொத்து பற்றிய கருத்து இல்லாததால், லோம்லியுடைய கருத்துக்களில் அவற்றின் முழுமையை உணராமல், இவருடைய பிற்போக்கு ஆராய்ச்சியான பழங்குடியினரின் எதிர்ப்பு குற்ற நடவடிக்கை தவிர வேறொன்றுமில்லை எனக் குறைத்து மதிப்பீடு செய்கிறார். லோம்லி குறிப்பிட்டுள்ளது போல் பழங்குடியினரின் நில ஆக்கிரமிப்பு, பழங்குடியினரை முகாமிட்டு உறைதல், குடித்துக் களிக்க இடம் அமர்தல், வேட்டையாடி உணவு பெறும் பகுதிகள் அனைத்தையும் தடுத்தது என்றால் பழங்குடிச் சமுதாயத்தையே அழிக்க முற்பட்டது என்பதுதான் பொருள், ஏனெனில் இம்முறைகளைச் சுற்றித்தான் அவர்களுடைய வாழ்க்கையே அடங்கியிருந்தது. கறுப்புப் போர் கறுப்புப் போரைப் பற்றியே தன்னுடைய பகுப்பாய்வை 1823-24ல் குடியேறியோர் மீதான தொடக்க தாக்குதல்கள் டஸ்மேனிய பகுதி பழங்குடியினரால் ஏற்படவில்லையென்றும், சிட்னி பழங்குடி மஸ்கிடோ குழுவினரால், அதன் உறுப்பினர்கள் ``சட்டத்திற்கு புறம்பானவர்கள்``, அவர்களால் நிகழ்த்தப்பட்டவை என்று விண்ட்ஷட்டில் வலியுறுத்துகிறார். பின் அவ்வாறு மஸ்கிடோவும் ஏனையோரும் பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட பின்னரும் கூட நிகழ்ந்த அதன் தொடர்ச்சியையும், தீவிரத்தையும், எவ்வாறு விளக்குவது? இங்கு விண்ஷட்டில் ஒரு புதிய இயல்நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகிறார்: ஒரு குற்ற மனநிலை, "சட்டத்தின் காப்பிழந்த" ஒரு சிலரிடையே மட்டுமல்லாமல், அந்நிலை எல்லாப் பழங்குடி மக்களிடையேயும் காணப்பட்டது என்று கூறுவது. வன்முறையை நியாயப்படுத்தும் வாதங்களை நிறை செய்யும் உணர்வுடன் விண்ட்ஷட்டில் எழுதுகிறார்: ``பழங்குடியினரோ, மற்றவர்களோ கொண்ட நடைமுறையின் இயல்பான `கொடூரத்தன்மை`, ``காட்டுமிராண்டித்தனம்`` எனக் கூறப்படுதலை ஒரு சில வரலாற்றாசிரியரே இன்று ஏற்பர். ஆனால் இவர்களும் கூட, இன்றளவும் கறுப்பு மக்களிடையே செல்வம் போல பூரித்துப் பேணப்படும் உணர்வு இன்னும் மதிப்புள்ளதாய், காலம் முழுவதும் நிலைத்திருக்கும் ஊக்கமான உணர்வு எனக் கொள்ளும் தன்மை உள்ளது என்பதை ஏற்பர்; இது வெள்ளையரிடையேயும் உள்ளது.`` [Fabrication, p.122] சர்க்கரை, மாவு, கம்பளங்கள், தேயிலை, புகையிலை ஆகியவை தேவைப்பட்டதால் பழங்குடி மக்கள் குடியேறியோரைத் தாக்கினர். ``சட்ட முறையில் பெறுவதைவிடக்`` கொள்ளை முறையைப் பின்பற்றியதிற்கு இரண்டு காரணங்கள் உண்டு; போதுமான கால அவகாசம் ``புதிய பழக்க வழக்கங்கள், வேலை நெறி இவற்றைக் கொண்டு, காலனித்துவ தொழிலாளர் தொகுப்பில் சேர அவர்களுக்கு போதுமான கால அவகாசம் இருந்திருக்கவில்லை; தர்மத்தை நம்பியிருந்த அவர்கள் நிலை வெள்ளையரின் பெருந்தன்மையை பொறுத்திருந்தது; ஆனால் ``சட்டத்திற்குப் புறம்பான நிலையோ தங்கள் நன்மைகளைத் தாங்களே தேடிக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்தது.`` [Fabrication, p.127]. சுருங்கச் சொன்னால் அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினார்கள். ``பழங்குடி மக்கள் தங்களுக்கு குறுக்கீடு செய்வதால் எவரையும் கொல்வதில் குற்ற உணர்வைக் காட்டியதில்லை; ஏனென்றால் அவர்களுடைய பண்பாட்டில் தங்களுடைய சிறு இனக்குழுவைத் தவிர வேறுயாரைக் கொல்வதற்கும் தடைகள் கிடையாது. சிறு பிரிவுகளிடையே இடையறாப் பூசல்கள் இச்சமூகத்திடம் நிறைந்திருந்ததுடன் மற்றவரைக் கொல்வது, சாதாரணமாக நடைபெறும் பழக்கமாகத்தான் பழங்குடி ஆண்களிடையே காணப்பட்டது.... வெள்ளையர்கள் ஆயுதமற்று இருந்தனர் மற்றும் பழங்குடியினரின் முக்கிய நோக்கத்திற்குத் தடையாக இல்லை; அவர்கள் கொல்லப்பட எளிதாக இருந்தார்கள் என்பதால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்`` என்று விண்ட்ஷட்டில் கூறுகிறார். ``மேலும் பொதுவாக வெள்ளையர் குடியேற்றம் 1920-களில் பரந்து விரியத் தலைப்பட்டது, கறுப்பர் வன்முறையின் பெருக்கம் உறுதியாகப் பெரும் காரணமாயிருந்தது; மரபுவழிப் பள்ளிகள் முன்மொழியும் காரணங்களை ஒட்டி அல்ல. கறுப்பருக்கு எதிரான விரோத உணர்விற்குப் பதிலாக குடியேற்ற விரிவு, பழங்குடியினருக்கு மேலும், மேலும் வாய்ப்பையும், கொலை கொள்ளை செய்ய வேண்டும் என்ற தூண்டுதலையும் கொடுத்தது; இந்த இரு வழக்கங்களையும் அவர்கள் பெருமளவு மகிழ்வுடன் கொண்டனர்.`` [Fabrication, pp.128-29] இக்காலகட்டத்தின் பெருஞ்சோகம் பழங்குடியினர் ``நெறியற்ற வன்முறையை`` ப் பின்பற்றியதால் "தாங்களே முக்கிய பாதிப்பிற்குட்பட்டவர்களாகப் போயினர்`` என்று விண்ட்ஷட்டில் தொடர்ந்து எழுதுகிறார். [Fabrication, p.130] இந்த முடைநாற்றம் வீசும் ஆய்வுக்கட்டுரை- கறுப்புப் போர், பழங்குடியினரின் கொலை, கொள்ளை மீதான ஆர்வத்தில் தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொண்டனர் என்பது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டால் சரிந்துவிடுகிறது. மனத்தில் ஓர் உடனடி வினா தோன்றுகிறது. மேய்ப்பு பொருளாதார வளர்ச்சியின் அழுத்தத்தால் இம்மோதல் ஏற்படவில்லை என்றால் கொலையும், கொள்ளையும் 1820களின் நடுவிலிருந்து ஏன் முக்கிய பங்கினைக் கொண்டன? ஒரு பத்து ஆண்டுகள் முன்பேயோ, அல்லது துவக்கத்திலிருந்தோ ஏன் நடைபெறவில்லை? அனைத்திற்கும் மாறாக, பழங்குடியினருக்கு குடியேறிய முந்தைய காலகட்டத்தில் குடியேறியோர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோது அவர்களைத் தாக்குவது எளிதாயிருந்திருக்கும். மேலும் விண்ட்ஷட்டில் கூறுவதுபோல் ஐரோப்பிய பொருட்களில் ஆர்வம் இவர்களுக்கு கூடுதலான அழுத்தம் கொடுத்திருந்தால் முந்தைய காலத்தைப்போன்றே அமைதியான முறையில் பெற்றிருக்கவேண்டும்; அதை விடுத்துக் கொலையையும் கொள்ளையையும் எதற்குப் பயன்படுத்த வேண்டும்? ஒரு நீதிமன்ற விசாரணையில் செய்தித்தாள் அறிக்கையில் வந்த பழங்குடிச் சாட்சியம் ஒன்றைத் தன்னுடைய வாதத்திற்கு முத்தாய்ப்பு வைப்பதாக விண்ட்ஷட்டில் நினைக்கிறார். ``அவனிடமிருந்து கிடைத்த தகவல் எல்லாம் வெள்ளையன் அவனுடைய நண்பர்கள் சிலரைக் கொன்றுவிட்டதால் தான் குற்றம் கூறக் கூடுதல் காரணம் கொண்டவன்; பழங்குடியினர் குடியைத் தாக்கியது, உணவு, மற்ற பொருட்களை அவர்களிடையே புகுத்தியது முன்போல் ஆடம்பரப் பொருட்களாக இல்லாமல் இப்பொழுது தேவைப் பொருட்களாகிவிட்டதாலும், வேறு எந்த முறையிலும் அவற்றைப் பெற முடியாது என்பதாலும் தான்.`` [Fabrication, p.129] விண்ட்ஷட்டில் இந்தக் குறிப்பு, சட்ட முறையில் ``அவர்களைப் பொறுத்த வரையில் விருப்பமுடைய ஆடம்பரப் பொருட்களைப் பெற முடியாத நிலையில்`` பழங்குடியினர், எவ்வாறு ``அவற்றை வெள்ளையர் கொண்டிருந்த வீடுகளிலிருந்தும், குடிசைகளிலிருந்தும் கொள்ளையடித்தனர்`` என்பதை விளக்கிக் காட்டுகிறது. [Fabrication, p.130] ஆனால் பழங்குடி மக்கள் உணர்த்திய ``விருப்பங்களுக்குப்`` பதிலாக, விண்ட்ஷட்டிலின் கூற்றுப்படி, ஏதோ அவர்கள் உற்பத்திச்செலவு மற்றும் கூலி உழைப்பின் ஆதாயம் இவற்றுக்கும் இரந்து கேட்டல் மற்றும் சூறையாடல் இவற்றுக்கும் இடையிலான எதிரெதிர் நிலையை எடைபோடும், ஒரு வகை "சந்தை சமுதாயத்தை" அறிந்து வாழ்ந்ததுபோலவும், இந்த அறிக்கை சோகமும் மனத்தை உலுக்கும் தாக்கமும் புதிய குடியேற்றச் சமுதாயம் பழைய பழங்குடி மக்கள் அமைப்புக்கள் மீது பாதிப்பு ஏற்படுத்தியதைத்தான் விளக்குகிறது. தங்கள் வேட்டையாடும் பகுதிகள், புதிய உற்பத்தி வகைப் பொருட்களுக்காக இழக்கப்பட்ட அளவில், அதே நேரம் அவர்கள் அப்பொருட்களுக்கே அடிமையாயினர். தொடரும்....... |