World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Military sent into hospitals

Striking Sri Lankan health workers defy intimidation

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை சுகாதார ஊழியர்கள் அச்சுறுத்தல்களை சவால் செய்கின்றனர்

By Ajitha Gunaratna
27 September 2003

Back to screen version

இலங்கையில் 80,000 க்கும் அதிகமான அரச சுகாதார ஊழியர்களின் போராட்டத்துக்கு முடிவு கட்டுவதன் பேரில் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை காண்பதற்காக தொழிற்சங்க தலைவர்கள் நேற்று மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டதையடுத்து ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மத்தியில் எந்தவொரு பின்னடைவுக்கும் எதிராக வளர்ச்சி கண்டு வரும் எதிர்ப்புக்கு முகம் கொடுத்துள்ள தொழிற்சங்கங்கள் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்திடம் எதிர்பார்த்திருந்த சலுகைகளில் எதையும் பெறவில்லை.

செப்டம்பர் 17ம் திகதி ஆரம்பமான இந்த வேலை நிறுத்தம் அரசாங்கத்தின் பயமுறுத்தல்கள் மற்றும் பரந்தளவில் இராணுவங்களை கருங்காலிகளாக பயன்படுத்துதல் போன்றவை இருந்த போதிலும் தொடர்கின்றது. 2001 டிசம்பரில் ஐ.தே.மு அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து பெரிய மற்றும் மிகவும் நீண்ட தொழிற்சங்க நடவடிக்கை இதுவேயாகும். மருத்துவ உதவியாளர்கள், குமாஸ்தாக்கள், அரச சுகாதார பரிசோசதகர்கள், பிரசவ தாதிகள் மற்றும் தாதிகளும் பணி நிறுத்தம் செய்துள்ளதால் தீவு பூராவும் வைத்தியசாலைகளும் மருத்துவ நிலையங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

54 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது, சமரச உடன்பாட்டுக்கான பேரத்தில் தமது முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து காலவரையறை அற்ற வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டது. கடந்த மாதங்களில் தொழிற்சங்கங்கள் இரண்டு அடையாள வேலை நிறுத்தங்களை முன்னெடுத்த போதிலும் அரசாங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கத் தவறியது.

கடந்த ஏப்பிரலில் வைத்திய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 43 வீத ஊதிய அதிகரிப்பால் உருவாக்கப்பட்ட விதிமுரண்பாட்டிற்கு முடிவு காணும் முகமாக தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பை கோருகின்றன. உண்மையில், கடினமான வாழ்க்கைச் செலவு நெருக்கடியால், தொழிற்சங்க நடவடிக்கையில் இணையாத வைத்தியர்கள் தவிர எல்லா சுகாதார ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டனர். இது முன்னைய பிரச்சாரங்களில் இணைந்து கொள்ளாத ஆயுர்வேத பயிற்சியாளர்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தாதிமாரின் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்க மறுத்த அரச சேவை ஐக்கிய தாதிமார் தொழிற்சங்க தலைவர்களை ஊழியர்கள் சவால் செய்தனர். தொழிற்சங்கத்தின் நிலைப்பாட்டை பேதமையான வாதத்தால் நியாயப்படுத்திய அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் தலைவரும் பெளத்த பிக்குவுமான முருத்தெட்டுவ ஆனந்த, முன்வைக்கப்பட்டுள்ள சம்பள உயர்வானது மருத்துவ உதவியாளர்களுக்கும் தாதிமாருக்கும் இடையில் சம்பள விதிமுரண்பாட்டை உண்டு பண்ணும் எனக் குறிப்பிட்டார்.

திங்கட் கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 30,000 சுகாதார ஊழியர்கள் பிரச்சாரத்தை தொடர்வதற்கான தமது திடசங்கற்பத்தை வெளிக்காட்ட கொழும்பின் மையப் பகுதியில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்தில் அணி திரண்டார்கள். தொழிலாளர்களைப் பிரிப்பதற்கான சகல முயற்சிகளும் இருந்துகொண்டுள்ள போதிலும் ஆர்ப்பாட்டமானது அதன் மாறுபாட்டுக்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. இது பல பாகங்களில் இருந்தும் சுகாதார ஊழியர்கள் மற்றும் பங்களிப்பின் மூலம் தமது ஆதரவை வெளிக்காட்டிய வங்கி, புகையிரத மற்றும் அச்சகங்கள் உட்பட்ட ஏனைய துறைகளில் இருந்தும் சிங்களத் தமிழ் தொழிலாளர்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளது.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் கோரியுள்ள பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை நேரடியாக சவால் செய்யும் இந்த வேலை நிறுத்தத்தை நசுக்குவதன் முயற்சியாக ஆத்திரமூட்டல்களை குவிக்கின்றது. அதன் திட்டங்கள் பொது சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட மேலதிக வரவு செலவு வெட்டை உள்ளடக்கிக் கொண்டுள்ளதோடு இந்த சேவைகளை தனியார்மயப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துவருகிறது. சுகாதார ஊழியர்களுக்கு வருடாந்த ஊதியமாக 3,300 மில்லியன் ரூபாய்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்க வேண்டும் என திறைசேரி முறைப்பாடு செய்துள்ளது.

வேலை நிறுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் தொழிற்சங்க கூட்டத்தை தகர்ப்பதற்காக பிரதான ஆஸ்பத்திரிகளிலும் மற்றும் தேசிய வைத்திய சாலையிலும் பொலிசார் கடமையில் இருத்தப்பட்டிருந்தனர். அடுத்த நாள் சுகாதார அமைச்சு சுகாதார ஊழியர்களுக்கான எல்லா விடுமுறைகளையும் விலக்கிக் கொண்டதோடு வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்ட 1,600 உபரி மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களையும் வேலை நீக்கம் செய்தது.

இலங்கை சட்டத்துக்கு நேரடி முரணான வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் கடமைகளை பொறுப்பேற்பதற்காக ஆயிரக்கணக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் பொது வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். நாட்டின் கொடூரமான அவசரகாலச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே அரசாங்கத்தால் ஆயுதப் படைகளை நிறுத்த முடியும். அதன் சட்டவிரோத நடவடிக்கையின் முதற் படியாக ஜூலை மாதம் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு எதிராகவும் மற்றும் புகையிர ஊழியர்களின் கண்டன வேலை நிறுத்தத்திற்கு எதிராகவும் இராணுவத்தை பயன்படுத்தியது. இந்த நடவடிக்கையின் சட்டவிரோதத் தன்மையை எந்தவொரு தொழிற்சங்கமும் சவால் செய்யவில்லை.

அகில இலங்கை சுகாதார ஊழியர்கள் சங்க மாத்தறைக் கிளைச் செயலாளர் எச்.ஐ.நிஷாந்த லேகம்கே மற்றும் தொழிற்சங்க உறுப்பினரான ஜி.ஏ.சந்திரசேனவையும் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அம்பாறையில் உள்ள நிர்வாக அலுவலரான மாலா ஸ்ரீவர்தன மற்றும் மருத்துவ உதவியாளர் உட்பட பல தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த இருவரும் பலாத்காரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசாங்கம் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை பதிலீடு செய்வதற்காக 700 புதிய தொழிலாளர்களை சேர்த்துக்கொண்டதோடு சில ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் மீள அழைப்பு விடுத்தது. சுகாதார அமைச்சர் பி.தயாரத்ன, ரேடியேசன் தெரபிஸ்டுகளின் கடமைகளை மேற்கொள்வதற்காக ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்புமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிவித்தார். அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதன் பேரில் முன்னணி தனியார் வைத்தியசாலைகள் தாம் சில சேவைகளை இலவசமாக வழங்குவதாக சுட்டிக்காட்டின.

அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக "மாபியா முறையிலான" தாக்குதல்களைத் தொடுக்கின்றன. அவை, அவர்களை நோயாளிகளின் சாவுக்காக குற்றம்சாட்டுவதோடு இன்னமும் இறுக்கமான நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுக்கின்றன. அரசாங்க சார்பு டெயிலி மிரர் பத்திரிகை ஜூலை மாதம் பொதுத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தடை செய்து பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்த தமிழ் நாட்டை அரசாங்கம் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என பிரகடனப்படுத்தியுள்ளது. அது வேலை நிறுத்தக்காரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யுமாறு நோயாளிகளைத் தூண்டிவிடுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலதுசாரி ஐ.தே.மு. அரசாங்கத்தின் பக்கம் சார்ந்து தீவின் வடக்கு கிழக்கில் உள்ள தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு கோரியுள்ளது. சில தொழிலாளர்கள் உடல் ரீதியான தாக்குதல் உட்பட பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்ற பீதியில் வேலைக்குத் திரும்பினர் ஆனால் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் விடுதலைப் புலிகளை சவால் செய்ததோடு செப்டெம்பர் 25 அன்று ஒரு மறியல் போராட்டத்தையும் நடத்தினர்.

தொழிற்சங்க கொடுக்கல் வாங்கல்கள் வங்குரோத்தடைந்துள்ளன

தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்வதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ள அதேவேளை, தொழிற்சங்கத் தலைவர்கள் அதற்கு முடிவு கட்டுவதற்கான வழியைத் தேடுவதில் குழம்பிப் போயுள்ளனர். வியாழன் இரவு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒரு உடன்பாட்டை எட்டும் முயற்சியில் அமைச்சரவை உபகுழுவுடன் நான்கு மணித்தியலாங்களாக நீண்ட கலந்துரையாடலை நடத்தினர். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை அரசாங்கம் மீண்டும் வேலையில் இருத்துவதற்கான ஒரு உடன்பாடு காணப்பட்டதோடு, அதற்கு பிரதியுபகாரமாக தொழிற்சங்கங்கள் சம்பள விடயங்கள் தொடர்பான திறைசேரியின் தீர்மானத்துக்காக நவம்பர் 4ம் திகதி வரை காத்திருக்க உடன்பட்டன. இது வேலை நிறுத்தத்தின் வெடிப்பிற்கு முக்கிய விடயமாக அமைந்தது --தொழிலாளர்கள் மேலதிக ஒத்திவைப்புக்களை நிராகரித்தனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் நேற்று முழுவதும் ஒப்பந்தம் உறுதிசெய்யப்படுவதை எதிர்பார்த்து சுகாதார அமைச்சின் அலுவர்களைச் சூழ தொங்கிக் கொண்டிருந்தனர். எவ்வாறெனினும், அவர்கள் அச்சம் கொண்டிருந்ததற்கேற்ப எல்லாத் தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் இருத்த மறுப்புத் தெரிவித்த அமைச்சு, அவர்களின் வேண்டுகோள்களையிட்டு மட்டுமே அக்கறை செலுத்தும் என சுட்டிக்காட்டியது. எந்தவொரு பின்வாங்கலுக்கும் எதிராக தமது அலுவலகங்களில் குவிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு முகம் கொடுத்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தன.

உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடிய ஒரு மருத்துவ உதவியாளர்: "நாங்கள் எமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். கூட்டமைப்பின் தலைவர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராவார்களேயானால் மற்றும் அரசாங்க ஆவணத்தைக் காட்டி ஏமாற்றுவார்களானால் நாங்கள் அதை எதிர்ப்போம். அரசாங்கம் இதற்கு முன்னரும் எங்களது கோரிக்கைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து இவ்வாறான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு எதையும் கொடுக்கவில்லை," என்றார்.

இன்னுமொரு ஊழியர்: "தற்போது கூட்டமைப்பின் தலைவர்கள் தடுமாறுவதாக தெரிகிறது. நாங்கள் நவம்பரில் முடிவு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிராகரித்தே வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தோம். இப்பொழுது நாங்கள் ஏன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எங்களது கோரிக்கைகளைப் பெறும் வரை நாம் தொடர வேண்டும்," எனக் குறிப்பிட்டார்.

சுகாதார ஊழியர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பற்றிய பரந்த அக்கறையின் காரணமாக நூறுக்கும் அதிகமான ஏனைய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கடந்த புதன் கிழமையும் வியாழக் கிழமையும் கொழும்பில் சந்திப்பொன்றை நடத்தினர். எவ்வாறெனினும் அடுத்த திங்கள் அன்று ஒரு பேரணியையும் கூட்டத்தையும் நடத்துவது என வெறுமனே முன்வைத்த இந்த சந்திப்பானது, வேலை நிறுத்தக்காரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவையே வழங்கியது. சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைப் போலவே, அவர்களும் அதிகரித்த அழுத்தமானது அரசாங்கத்தை பின்வாங்கத் தள்ளும் என்ற மாயையை தோற்றுவிப்பதோடு ஆஸ்பத்திரிகளில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவதற்குக் கூட அழைப்பு விடுக்க மறுத்தன.

மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினருமான மாவீகும்புர கிரிபண்டா, இந்தக் கூட்டம் வைத்தியசாலைகளில் இருந்து பாதுகாப்புப் படைகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்க வேண்டும் என சுட்டிக் காட்டியதோடு சுகாதார சேவையை தனியார்மயப்படுத்துவதையும் எதிர்த்தார். அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதை விட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என அவர் தெளிவுபடுத்தினார். நோயாளிகளின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பது தொழிலாளர்கள் அல்ல, ஆனால் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சுகாதார சேவையை வெட்டித் தள்ளின. தேவைப்படுவது என்னவென்றால் தொழில், சமூகத் திட்டங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கான மக்கள் சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதேயாகும் என அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக, மிகவும் குறைந்த சம்பளத்தில் உள்ள பெரும்பான்மையான சுகாதார ஊழியர்கள் நெருக்கடியான நிலைமைகளின் கீழ் வாழ்கின்றனர். ஒரு கீழ் மட்டத் தொழிலாளியின் மாதாந்த சம்பளம் சுமார் 3,400 ரூபாய்களாகும் (36 அமெரிக்க டொலர்கள்). ஒரு நிர்வாக அலுவலர் 7,925 ரூபாய்களை (84 அமெரிக்க டொலர்கள்) பெறும் அதே வேளை பற் தொழில்நுட்பவியலாளர்கள் 6,160 ரூபாய்களையே (66 அமெரிக்க டொலர்கள்) பெறுகின்றனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கொழும்பில் விடுதி மற்றும் தங்குமிடத்துக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதோடு ஆஸ்பத்திரி வாசல்களில் படுத்துறங்க தள்ளப்பட்டுள்ளார்கள். ஏனையவர்கள் கடன்களில் மூழ்கிப் போயுள்ளார்கள்.

மொத்த தேசிய வருமானத்தின் விகிதப்படி சுகாதார செலவீனமானது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்துள்ளதோடு தற்போது 1.6 வீதமாக உள்ளது. 2002 மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடுவதாவது: "கிடைக்கப்பெறும் வளங்களிலான மட்டுப்படுத்தல்களின் காரணமாக பொது சுகாதார சேவையானது அளவிலும் தரத்திலும் சீர்கெட்டு வருகின்றது." ஆனால் சுகாதார சேவையில் ஏற்கனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத் துறையை மேலும் தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உக்கிரப்படுத்த வேண்டும் என மத்திய வங்கி முன்மொழிகின்றது.

"தாங்க முடியாத வாழ்க்கை செலவு"

பல வேலைநிறுத்தக்காரர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் உரையாடினார்கள்.

இலங்கை தேசிய வைத்தியசாலையின் தாதியான எச். மானெல், தனது தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்க மறுத்ததை எதிர்த்தார். "இந்தப் பொது போராட்டத்தில் இருந்து எமது தொழிற்சங்கம் ஏன் பின்வாங்குகிறது என்பது எனக்குத் தெரியாது. குறைந்த பட்சம் அவர்கள் ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு படைகளை நிறுத்துவதையாவது கண்டனம் செய்ய வேண்டும். விவகாரங்கள் இவ்வாறு முன்செல்லுமானால் எதிர்காலத்தில் எமது உரிமைகளுக்காக எம்மால் போராட முடியாமல் போகும்," என்றார்.

தற்போதைய சம்பளத்தில் வாழ்வது சிரமமானது என சுனிதா புஷ்பராணி விளக்கினார். "நான் தேசிய வைத்தியசாலையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றுகிறேன். ஒரு மாதத்துக்கான எனது அடிப்படை சம்பளம் 4,365 ரூபாவாகும். இந்த அற்ப சம்பளத்தில் நாம் எப்படி வாழ்வது? எனக்கு ஒவ்வொரு நாளும் பயணச் செலவுக்காக 52 ரூபா செலவாகிறது. இப்போது வாழ்க்கைச் செலவு தாங்கமுடியாததாக உள்ளது."

ஆஸ்பத்திரியின் தொற்று நோய் பிரிவில் உள்ள ஒரு ஊழியர் பேசும் போது: "நான் எமது போராட்டத்தை தகர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முழுமையாக எதிர்க்கிறேன். வேலை நீக்கம் செய்யப்பட்ட எல்லாத் தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் ஆஸ்பத்திரிகளில் உள்ள ஏல்லா பாதுகாப்புப் படைகளையும் விலக்கிக்கொள்ள வேண்டும். எமது வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் இன்றி நாம் வேலைக்குச் செல்லமாட்டோம்," எனக் குறிப்பிட்டார்.

டி சொய்சா பிரசவ ஆஸ்பத்திரியின் ஒரு தொழிலாளர் குழுவினர், நோயாளிகள் முகம்கொடுக்கும் நிலைமைகளுக்கு தொழிலாளர்களைக் குற்றம்சாட்டும் முயற்சிகளைக் கண்டனம் செய்தனர். "எங்களது கோரிக்கைகளை ஒழுங்கு செய்வதில் அரசாங்க சார்பில் நீண்ட தாமதத்தை ஏற்படுத்துவது ஏன்? நாங்கள் சூரியனையும் நிலவையும் கேட்கவில்லை. நாங்கள் மிக மோசமான நிலைமையில் இருக்கின்றோம். எங்களுக்கு சீருடைகளை மாற்றுவதற்கோ சாப்பிடுவதற்கோ கூட இடமில்லை. எங்களது பதவி உயர்வுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாங்கள் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றோம். அரசாங்கம் மக்களின் உயிர் மற்றும் கடுமையான வருமை நிலைமை ஆகிய இரண்டையும் கணக்கில் கொள்ள வேண்டும்," என அவர்கள் குறிப்பிட்டார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved