World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
The ADL and Berlusconi: honoring a "flawed" friend of Zionism அவதூறு எதிர்ப்புக் கழகமும் பெர்லுஸ்கோனியும்: சியோனிசத்தின் "குறைகொண்ட" நண்பரை கெளரவப்படுத்துதல் By Fred Mazelis அவதூறு எதிர்ப்புக் கழகம் (Anti-Defamation League -ADL)) என்னும், 90 ஆண்டுகள் முன்பு செமிட்டிச மக்கள் விரோதம், மற்றைய சமய உணர்வுகளுக்காகத் தாக்குதல் இவற்றை எதிர்ப்பதற்காக அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, (Disinguished Statesman Award) சிறப்பு மிக்க ராஜ தந்திரி என்ற விருதை ஒரு முக்கிய ஐரோப்பிய அரசியல் பிரமுகருக்கு, செப்டம்பர் 23, செவ்வாயன்று அளித்துக் கெளரவப்படுத்தியது. நியூயோர்க் நகரத்தின் ஆடம்பர ப்ளாஸா ஹோட்டலில் நடைபெற்ற பெரும் நிதி திரட்ட இரவு உணவு இணைந்த இந்தக் கோலாகலமான விழாவில் பரிசு பெற்றவர், அண்மையில் பழைய பாசிச சர்வாதிகாரி முசோலினியின் கொள்கைகளுக்குப் பாதுகாப்பு அளித்ததால் பெரும் சீற்றத்திற்கும் தலையங்கங்களில் எழுதப்படுவதற்கும் ஆளான இத்தாலியப் பிரதம மந்திரி பெர்லுஸ்கோனி ஆவார். பிரிட்டனின் Spectator இதழுக்கு அளித்த பேட்டியொன்றில், இத்தாலியப் பிரதம மந்திரி இத்தாலிய பாசிச ஆட்சியாளர் முசோலினியை சதாம் ஹூசேனுடன் ஒப்பிட்டுக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். Spectatorக்கு அவர் பதில் கூறுகையில், "முசோலினியின் சர்வாதிகாரம் கூடுதலான கருணை ததும்பியதாக இருந்தது. முசோலினி யாரையும் கொலை செய்யவில்லை; உள்நாட்டிலேயே பலரையும் விடுமுறை அளித்ததுபோல் நாடுகடத்தி விட்டார்" என்று தெரிவித்தார். இத்தாலிய யூத சமூகங்கள் ஒன்றியத்தின் பழைய தலைவியாகிய Tullia Zevi, நியூயோர்க் டைம்சிற்கு கொடுத்த, ஒரு தொலைபேசி பேட்டியில், பலருடைய சீற்றத்தையும் வெளிப்படுத்திய முறையில் கூறியதாவது: "இவர் பாசிசம் மென்மையான சர்வாதிகாரம் என்று கூறுகிறார்! அது தொடக்கத்திலிருந்தே பல அரசியல் படுகொலைகள் செய்ததுடன், யூதர்களையும் கொலை செய்த அளவு 'மென்மையாக' இருந்தது." என்றார். அவதூறு எதிர்ப்புக் கழகம் இரவு உணவு விருது வழங்கும் விழாவிற்கு சற்று முன்னதாக, நியூயோர்க் டைம்ஸ், 3 நோபல் பரிசு வாங்கியவர்கள் பொருளாதார வல்லுனர்கள் பிராங்கோ, மொடிக்லியனி, பால் சாமுவல்சன், Massachusetts தொழில் நுட்பக் கல்வி நிலையத்திலுள்ள ராபர்ட் சோலோவ் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வெளியிட்டது. இந்த அவதுறு எதிர்ப்புக் கழகத்தில் விருது அளித்தால் "திரு. பெர்லுஸ்கோனியின் சர்ச்சை நிறைந்த வரலாற்றை அறிந்தவர்கள் எவருக்குமே அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்" என்று அது குறிப்பிட்டது.. இத்தாலிய பாசிச ஆட்சி, 1938ல் செமிடிக் இனத்திற்கெதிரான சட்டங்களை இயற்றி, யூதர்களை அனைத்துக் குடியுரிமைகளையும் இழக்க வைத்ததுடன், அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதற்கும், பொது மற்றும் தனி வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் பாகுபாடு காட்டப்படலுக்கும் வழிவகை செய்தது. இதே சட்டங்கள்தான் பின்னர் ஆயிரக்கணக்கில் யூதர்கள் நாடுகடத்தப்படுவதற்கும், நாஜிக்களுடைய கொடுஞ் சிறை முகாம்களில் உயிரிழக்கவும் அரங்கத்தை அமைத்துக் கொடுத்தவை ஆகும். ஹிட்லர் கூறிய "இறுதி முடிவு", எனப்பட்ட கருத்திற்கு முசோலினி வெளிப்படையாகத் தன்னுடைய ஆதரவை அறிவித்ததுடன், யூதப் பெண்மணிகளும் சிறுவர்களும் கொலை செய்யப்பட்டு, யூதர்களை விரட்டி, ஐரோப்பாவை "தூய்மையாக்கும்" முயற்சிக்கும் ஆதரவு கொடுத்தார். அவதூறு எதிர்ப்புக் கழக விருது ஒரு வருடம் முன்பே தீர்மானிக்கப்பட்டது; பெர்லுஸ்கோனியுடைய பாசிசத்தை சார்ந்த அறிவிப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. முசோலினியின் ஆட்சி பற்றியும் மற்றும் அதன் கம்யூனிச எதிர்ப்பு, தீவிர நாட்டு வெறி, சர்வாதிகாரப் போக்கு ஆகிய கொள்கைகள் பற்றியும் அடிக்கடி பரிவுணர்வுடன் பேசுவதின் மிகச் சமீபத்திய வெளிப்பாடுதான் இவை. 1994-ல் பிரதம மந்திரியானவுடனேயே வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் "முசோலினி இங்கே சில நல்ல காரியங்களைச் செய்தார்" எனக் கூறியிருந்தார். முசோலினியின் அரசியல் வாரிசுகளான "பாசிஸ்டுகளுக்குப் பிந்தைய" தேசியக் கூட்டணியின் துணையுடன்தான் பெர்லுஸ்கோனி இப்பொழுது ஆட்சி நடத்துகின்றார். சமீபத்தில் ஜேர்மனிய அரசியல் திறனாய்வாளர் ஒருவரை நாஜித் தளபதி ஒருவரோடு ஒப்பிட்டுத் தாக்கினார். தன்னை உள் நாட்டில் குறை கூறுபவர்களை, ஜேர்மன் நாஜிக்களும், இத்தாலிய பாசிச பங்காளிகளும் பயன்படுத்திய முறையைப் போலவே தொடர்ந்து கண்டனத்திற்குட்படுத்துகிறார். பெர்லுஸ்கோனியின் பார்வையில், இவரைப் பற்றிய ஊழல் விசாரணை நடத்துபவர்கள், நீதிபதிகளையும் அரசாங்க வழக்குரைஞர்களையும் "மன அளவில் பாதிக்கப்பட்டவர்கள்" மற்றும் மறைமுக கம்யூனிஸ்டுகள் என்றும் வர்ணிக்கப்படுகின்றனர். பெர்லுஸ்கோனியுடைய நீண்ட அரசியல் வாழ்வையும் மற்றும் நிறைய யூதர் குழுக்களுடைய வேண்டுகோளான ADL விருதை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொண்ட ADL இயக்குனர் ஆப்ரஹாம் பாக்ஸ்மன், குறைகளை "அரசியல் வண்ணம் சார்ந்தவை" எனக் கூறி உதறிவிட்டு, பிளாசா ஹோட்டலில் திட்டமிட்டபடி அவருடைய அமைப்பு பெரிய விழாவை நடத்தும் என்று கூறிவிட்டார். அமெரிக்க சியோனிசத்திற்குச் செய்தித் தொடர்பாளர் என்று ஊடகத்தால் அன்றாடம் மேற்கோளிடப்படும் பாக்ஸ்மன், பெர்லுஸ்கோனியை பற்றிக் கூறியதாவது: "எனக்கு அவர் உற்ற நண்பர், ஆனால் சற்று குறையுடைய நண்பர்". பாக்ஸ்மனுடைய கருத்தில் பெர்லுஸ்கோனியின் சமீபத்திய கருத்துக்கள் "சூழ்நிலைக்குப் பொருத்தமற்றவை" என்பதோடு "விவரமின்றித் தெரிவிக்கப்பட்டவையாகும்"; ஆனால் "இதற்காக இனி அவர் என் நண்பர் இல்லை என நான் சொல்ல முடியாது" என்றார். விருந்தின் பொழுது ADL தலைவர் இத்தாலிய பிரதம மந்திரியின் வருகையினால் தான் "களிப்புற்றதாகக்" கூறினார். கறுப்பு டை அணிந்து கலந்து கொண்டவர்கள் பெர்லுஸ்கோனிக்கு இரு முறை எழுந்து கரவொலி எழுப்பினர். முக்கிய விருந்தினர்களாக Barnes & Noble தலைவர் லியானர்ட் ரிக்கியோவும், Daily News வெளியீட்டாளர் மோர்ட்டைமர் சுக்கர்மான் (Mortimer Zuckerman) ம் இருந்தனர். வலதுசாரி செய்தி ஊடக சக்கரவர்த்தியான ரூபர்ட் முர்டோக்கும் கலந்து கொண்டு, பெர்லுஸ்கோனியைப் புகழ்ந்ததோடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில், "அரசியலில் நுழைந்து நாட்டைக் கம்யூனிஸ்டுகளிடமிருந்து காப்பாற்றுவேன்" என்று அவர் கூறியதை நினைவு கூர்ந்தார். பழைய அரசுத்துறை செயலர், ஹென்ரி கிஸ்ஸிங்கரும் விருந்தில் கலத்து கொண்டார். பெர்லுஸ்கோனியின் பாசிசம் பற்றிய ஏக்கம் இரகசியமானது அல்ல. ஆயினும், ADL இந்த மனிதனைத் தழுவிக் கொள்வது, Foxman தன்னைத்தானே வெள்ளை ஆதிக்கம் மற்றும் இன வெறியாளர் பலவகையினரையும் எதிர்ப்பவர் என்று பறைசாற்றிக் கொள்வதைக் கேட்டவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். ADL விருது கொடுப்பதை எதிர்த்தவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நின்றது பாக்ஸ்மனாலேயே தெளிவாக்கப்பட்டது. "சியோனிச எதிர்ப்பு, செமிடிய எதிர்ப்பே" என்று இத்தாலிய வலதுசாரியைப் பற்றிக் குறிப்பிட்டு, ''அவர் இஸ்ரேலின் நல்ல நண்பர்" என்றும் The Jewish Week என்ற இதழுக்கு தெரிவித்தார். ADL உடைய தர்க்கம் தெளிவாகத்தான் உள்ளது. "சியோனிச எதிர்ப்பு, செமிட்டிச எதிர்ப்பே" என்பதால் இஸ்ரேலுக்கு ஆதரவு செமிட்டிச எதிர்ப்பின் கறை ஏதாவது இருந்தால் அதை மறைத்து விடும்; அது யூதர்களைப் பூண்டோடு அழித்திருந்த பாசிச சர்வாதிகாரத்தின் பரிவுணர்வாளர்கள் என்று தம்மைத்தாமே கூறிக் கொள்பவர்களுக்கும் போலும்.டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டது: "மற்றைய யூதத் தலைவர்கள் இஸ்ரேலைப்பற்றி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்; அங்கு வன்முறை பெருகியிருக்கும் நிலையில், சில குறைகளை மறந்து நண்பர்கள் தேடப்படவேண்டும்." மற்றொரு சியோனிச அமைப்பின் "பிரதான ஓடை"யான, ஜேசன் ஐசக்சன் என்னும் அமெரிக்க யூதர் குழுவைச் சேர்ந்தவர், அறிவித்தார்: "இஸ்ரேலுக்குப் பரிவுணர்வு காட்டுபவர்கள் அதிக மதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்த ஒற்றுமை யூத சமூகத்திற்கு வெகுமதிகளைத் தேடித் தருகிறது." இந்த வளைந்த தர்க்கத்தின்படி, பிரான்சும் ஜேர்மனியும் ஈராக் தாக்குதலை எதிர்த்ததால் செமிடிச எதிர்ப்பை வளர்க்கிறார்கள் என்ற கருத்து வெளிப்படுகிறது. பெர்லுஸ்கோனி இஸ்ரேலைத் தழுவுவதால், அவருக்கு முசோலினிப்பற்று இருந்தாலும் யூத மக்களின் நண்பராகிறார். பல தலைமுறைகளாக, செமிட்டிச எதிர்ப்புக்கெதிரான போராட்டம் அனைத்துவிதமான ஜனநாயக விரோத அடக்கு முறைகளுக்கு எதிராக குறிப்பாக பாசிசத்துடன் பிரிக்க முடியாத அளவு தொடர்புடையதாக இருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் செமிட்டிச எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்போடும் கட்டுண்டிருந்தது. ஹிட்லர், முசோலினி இருவருமே மார்க்சிசத்தையும் சோசலிசத்தையும் "யூதத் தன்மையானது" என முத்திரையிட்டிருந்தனர். செமிடிச எதிர்ப்பை எதிர்ப்பது என்றால் அனைத்துவிதமான இன, மத பாகுபாடுகள், துன்புறுத்துதல்கள் இவற்றுக்கு எதிராக அனைவருக்கும் பொருந்தும் ஜனநாயக உரிமைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பது அர்த்தமாகும். இஸ்ரேலிய யூதர் சார்புடைய அமைப்புக்களான ADL போன்றவை வலது அணிக்குப் பல ஆண்டுகளாகவே பாய்ந்துள்ளன; குடியரசு கட்சி தொடங்கி கிறிஸ்துவ அடிப்படை வலதுசாரி வரை, இப்பொழுது பெர்லுஸ்கோனி என்று மிகப் பிற்போக்கான அரசியல் கூட்டாளிகளை தழுவியுள்ளன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் தங்கள் ஜனநாயகக் கொள்கைகளை அவர்கள் கைவிட்டு விட்டனர். பெரும்பாலும், இதற்கான காரணம் விமர்சனமற்ற ஆதரவை இஸ்ரேலுக்குக் கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதுதான்; அந்நாடோ சமய, இன தனித்தன்மையையும் அடக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது; அதே கொள்கையில்தான் அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் யூதர்கள் வரலாற்று அளவில் செமிட்டிச எதிர்ப்பை தோற்கடிக்கப் பாடுபட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்தால், ஷரோன் தலைமையில் தொடர்ந்து மிருகத்தனமான முறைகள் மேற்கொள்ளப்படுவது -- "ஒட்டுமொத்த தண்டனை", அரசியல் படுகொலைகள், சமீபத்தில் பாலஸ்தீனிய நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான யாசிர் அராபத்தைக் கொலை செய்யப்போவதாய் பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தது போன்றவை, தவிர்க்க முடியாமல் அந்நாட்டிற்கு மிருகத்தனப் போக்குடைய நண்பர்களைத்தான், குறிப்பாக புஷ், பெர்லுஸ்கோனி போன்றவர்களைத்தான் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. வேறோருபுறம் ADL போன்ற அமைப்புக்கள் பாலஸ்தீனிய மக்களை மிருகத் தனமாக நடத்துவதைக் குறை கூறினால், "செமிடிய எதிர்ப்பாளர்" என முத்திரையிட்டு வருகின்றன. இந்த வலதுபுறத் திருப்பத்திற்கு வேறு ஒரு கூறுபாடும் உள்ளது; முன்பு புலம் பெயர்ந்தோர், ஒடுக்கப்பட்டோரது போராட்டத்துடன் அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு சமுதாய அடுக்கு, செல்வம் நிறைந்ததாக மாறிவிட்டது. கறுப்பு 'டை' அணிந்த கூட்டம், மர்டோக், ஜக்கர்மன், கிஸ்ஸிங்கர் போன்றோரால் வழிநடத்தப்பட்டாலும், சிலர் பெர்லுஸ்கோனியுடன் சேர்ந்து கொண்டு முசோலினி அத்தனை மோசம் இல்லை என்று நம்பியும், டியூஸ் (முசோலினி) காலத்தின் கட்டாயத்தில் ஹிட்லருடன் கொண்ட கூட்டால் நிர்ப்பந்திக்கப்பட்டு செமிட்டிச எதிர்ப்பு "அத்துமீறல்களில்" கடுமையாக நடந்து கொண்டார் என பாசிச கட்டுக்கதையை நினைக்கலாம். புஷ்ஷையும், ஷெரோனையும் தழுவிய பின்னர், தங்கள் செல்வம் மற்றும் சலுகை இவற்றைக் காக்க ஒரு வலுவான மனிதனை அவர்கள் ஏற்க தயாராக உள்ளனர். இந்த இழிவான பெர்லுஸ்கோனிக்கு வக்காலத்து வாங்குபவர்களும் அவர்களுடைய சிந்தனையைப் போல் சிந்தனை கொண்டவர்களும், சியோனிச நாடு யூத மக்களுடைய நலனைப் பிரதிபலிக்கவில்லை என்ற உண்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்; அமெரிக்க புஷ் நிர்வாகமும் ஆளும் செல்வந்த தட்டும் அமெரிக்க மக்கள் நலன்களுக்காகப் பாடு படுகிறோம் என்று சொல்வது போலத்தான் இதுவும். இந்த சக்திகள், ஐரோப்பிய யூத இனம் ஹிட்லரின் கைகளில் பெற்ற கொடூர விதியை தாங்கள் ஆற்றும் பங்கைக் காப்பாற்றுவதற்காக நேர்மையற்ற முறையில் சுட்டிக் காட்டிக் கொண்டு இருப்பதும், இப்பொழுது அரசியல் ரீதியாய் முகத்திரை கிழிக்கப்படுவதும் வரவேற்கத்தக்கது. |