The Heritage We Defend: A Contribution to the History of the Fourth
International
Chapter 17: The Split in the Fourth International
நாம் காக்கும் மரபியம்:
நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு
அத்தியாயம் 17 : நான்காம் அகிலத்தில் பிளவு
Use this version to print |
Send this link by email
| Email the author
சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியை அழிக்க அச்சுறுத்திய திருத்தல்வாத
புற்றுநோயை எதிர்க்க உலகெங்கிலுமுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளை அழைக்கும் ஆவணத்தின் மீதாக, அனைத்துலகக் குழுவைக்
கண்டனம் செய்வதை, ஓடுகாலி மைக்கல் பண்டா மையமாகக் கொண்டுள்ளதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.
நவம்பர் 1953ல், ஜேம்ஸ் பி. கனன் எழுதிய "பகிரங்கக் கடிதம்", நான்காம்
அகிலத்தின் வரலாற்றில், தனிப்பட்ட கெளரவமான இடத்தைக் கொண்டுள்ளது. எழுதப்பட்டு 33 ஆண்டுகள் ஆகியும் கூட
புரட்சியாளர்களுக்கு ஊக்கத்தையும், ஓடுகாலிகளிடத்தில் சீற்றத்தையும் கொடுக்கிறது என்ற முக்கியமான உண்மையிலிருந்து,
அதன் அரிய மாட்சிமையை அளக்க இயலும். இந்த "உலகெங்கிலுமுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு கடிதம்" நான்காம்
அகிலத்தின் வரலாற்றில் ஒரு தலைமுறைக்கும் மேலாக மார்க்சிசத்திற்கும் திருத்தல்வாதத்திற்கும் இடையே உள்ள எல்லைகளை
வரையறுக்கும் மாபெரும் அரசியல் மைல் கல்லாக உள்ளது.
1953லிருந்து "பகிரங்கக் கடிதம்", ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக்கொண்டு சென்ற
ஒவ்வொரு திருத்தல்வாதப் போக்கிற்கும் இறுதி அழிவாகத்தான் இருந்திருக்கிறது. பப்லோவின் திருத்தல்வாதத்திற்கு
எதிராக, "பகிரங்கக் கடிதம்" நான்காம் அகிலத்தின் அடித்தளங்களையும், வரலாற்று முன்னோக்கையும் மறு உறுதி செய்துள்ளது.
1953லிருந்து, அனைத்து திருத்தல்வாத போக்குகளும், பப்லோ தொகுத்த கருத்துச்செறிவின் சிறு மாற்றங்கள்தான்
என்பதைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க தன்மை அற்ற நிலையில், "பகிரங்கக் கடிதத்தில்" சிறப்பிக்கப்பட்டுள்ள
கொள்கைகளும், அதைத் தொடர்ந்து கனன்1953-54ல் எழுதிய ஆவணங்களும், நான்காம் அகிலத்தின் பகைவர்களோடு
போரிட, ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு அடிப்படை திசைவழியைக் கொடுத்துள்ளது.
அவருடைய அரசியல் வாழ்வு முழுவதும் இந்த தனித்தன்மை கொண்ட ஆவணத்துடன் பிணைந்து
நின்றிருந்த போதிலும்கூட, பண்டா இப்பொழுது எழுதுகிறார்:
பகிரங்கக் கடிதமும் அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டதும், டேவிட் நோர்த், மற்றும்
அவருடைய அதிகாரத்துவக் கும்பலினால், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுச் சிறப்பான வெற்றி என உயர்த்திப்பேசப்படுகிறது;
இது நிபந்தனையற்றமுறையில் ஒதுக்கப்படவேண்டும். இந்த ஆவணம், தத்துவார்த்த அளவில் வறுமை, மதிநுட்பத்தில்
ஆணவம், அரசியல் அளவில் பக்குவமற்ற நிலை ஆகியவற்றை, இந்தச்சிறிய பொய்யர் கூட்டம் பெற்றிருப்பதைத்தான்
சான்றளிக்கிறது. ஹீலியும், கனனும், மிகுந்த தன்னிச்சையுடனும், அவசரத்துடனும், தங்களுடைய நம்ப இயலாத, அரசியல்
தாகாவழி நடத்தைகளுக்கு போலிக்காரணம் கண்டுபிடிக்க எடுத்த, சந்தர்ப்பவாத விடையாகும்.
இந்தத் தெளிவற்ற, கெளரவமற்ற, தந்திர சூழ்ச்சி நடவடிக்கையில் தர்க்கமோ, நேர்மையோ,
உண்மையோ கிடையாது. அவர்கள் பப்லோவாதத்தை பப்லோவாதத்தாலேயே போராடினர். முதன்முதலில்
வேண்டுமென்றே திட்டமிட்டு, பப்லோ வடிவில் பிராங்கென்ஸ்டைன் பூதத்தை
சிருஷ்டித்தனர், பின்னர், பெரு முயற்சியுடன், பகிரங்கக் கடிதம் வாயிலாக, எல்லாப் பொறுப்புக்களிலிருந்தும்
தங்களை விடுவித்துக் கொண்டு விட்டு, பப்லோவாதத்தின் அரசியல், சமுதாய, வரலாற்று வேர்களின்மீது, உண்மையான
விவாதம், ஆராய்ச்சி ஆகியவற்றையும் வேண்டுமென்றே தடுத்துவிட்டனர்.
"பகிரங்கக் கடிதத்தின்" அரசியல் பொருளுரையை ஆராயாமல், பண்டா, அதை ஹீலியும்,
கனனும் முந்தைய காலகட்டத்தில் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கான "போலிக் காரணம்" என்று
உதறித்தள்ளுகிறார். உண்மையான வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் பகுப்பாய்விற்கு மாற்றாக, எத்தகைய வெற்றுப்
பதிலீடு இது! இந்த முறையை, உதாரணமாக அமெரிக்காவின் வரலாற்றுக்குப் பொருத்திப் பார்த்தோமானால், அடிமைகள்
விடுதலைப் பிரகடனமும், "பகிரங்கக் கடிதம்" போலவே, "தெளிவற்ற, அகெளரவமான சூழ்ச்சிக் கையாளல்",
லிங்கனின் "நம்பமுடியாத, அரசியல் தாகாவழி நடத்தை" க்குப் போலிக்காரணம், என்றுதான் முடிவுகட்டவேண்டும்.
உள்நாட்டுப் போரின் முதலாண்டின்போது, அவர் அடிமை முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்தார், பின்னர்
இரகசியமாக ஒரு பிரகடனத்தைத் தயார் செய்யச் சொன்னார், இராணுவத் தேவையின் அழுத்தத்திற்கு உட்பட்டுத்தான்
அதை அறிமுகப்படுத்தினார், பின்னர் அதன் வெளியீட்டை வடக்குப்பகுதி வெற்றியடையும் வரை ஒத்திப்போடுமாறு வற்புறுத்தப்பட்டார்,
பின் எல்லாவற்றிற்கும் மேலாக, 1863 ஜனவரி 1 வரை, இன்னமும் எதிர்ப்புக் காண்பிக்கும் மாநிலங்களில் மட்டுமே
விடுதலை என்று பிரகடனத்தை வரையறுத்தார், என்று கூறிக்கொண்டு போகவேண்டும். அதாவது, கூட்டாட்சிக்கு அதிகாரம்
இல்லாத இடத்தில், பொது அறிவிப்பை செயல்படுத்தமுடியாத அமெரிக்கப் பகுதிகளில்தான் "அடிமைகளை விடுவித்தார்"
என்பது பொருளாகும்!
ஏன், இன்னும் சற்றுக் கூடுதலாகச் சென்று, கூட்டமைப்பு அரசிலமைப்பு நிறுவியோர் ஒரு
"பிராங்கன்ஸ்ரைன் பூதத்தை" படைத்து, தெற்கில் அரசியலமைப்புச் சமரசமாக, அடிமை முறையைத் தோற்றுவித்தனர்
என்று ஏன் கண்டனத்திற்கு உட்படுத்தக்கூடாது? அரசியலில் முன்பு இருந்தவர்கள் தோற்றுவித்த நெருக்கடியிலிருந்து
எவ்விதத்திலாவது வடக்கை அதன் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும், விடுவிக்கவேண்டும் என்பதற்காக "மிகுந்த
தன்னிச்சையுடனும், அவசர முறையிலும்", "கூட்டமைப்பின் அரசியல், சமுதாய, வரலாற்று வேர்கள்பற்றி உண்மையான
விவாதமோ, ஆராய்ச்சியோ கூடாது" எனத் தடுக்கும் வகையில், சும்டர் கோட்டை
(Fort Sumter) சரணடைந்த பின்னர், 75,000
விருப்பமுடைய வீரர்கள் வேண்டுமென அழைப்புக்கொடுத்தார் என்றும், பேராசிரியர் பண்டா, லிங்கனை கண்டனம் செய்வதை
நியாயப்படுத்த, விளக்கவும் கூடும்.
இந்த ஒப்பிடுதல் கூடுதலான தன்மையுடையதாக இருக்கிறது என்று கருதுபவர்களுக்கு,
மார்க்சிச இயக்க வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ள உவமை ஒன்றைக் காண்போம். 1917ல் பெட்ரோகிராடில்
பண்டா இருந்திருந்தால், லெனினுடைய "ஏப்ரல் ஆய்வுரைகளை", லெனின் பாட்டாளிகள், விவசாயிகளின் ஜனநாயக
சர்வாதிகாரம் தேவை என்ற இகழ்வுறும் கருத்தை எழுதியவர், போல்ஷேவிக் கட்சிக்குள் நிலவிய கடும் நெருக்கடிக்கு
முற்றிலும் பொறுப்பானவர், அவருடைய பழைய போல்ஷிவிக்குகள் மீதான தாக்குதலில் "தர்க்க அறிவோ, நேர்மையோ
அல்லது உண்மையோ இல்லை" என்று நீண்ட கட்டுரை ஒன்றில் கண்டனத்திற்கு உட்படுத்தியிருப்பார். ஒருவேளை தன்னுடைய
கட்டுரையை, "போல்ஷிவிக் கட்சி ஏன் புதைக்கப்படவேண்டும்,
சோசலிசப் புரட்சி கைவிடப்படவேண்டும் என்பதற்கு 27 காரணங்கள்" என்ற தலைப்பையும் கொடுத்திருப்பார்!
வரலாற்றின் பிழைதிருத்துபவர்களாகத் தங்களையே நியமித்துக்கொள்ளும் இத்தகைய குட்டி
முதலாளித்துவ ஆய்வாளர்களுக்கு, மிகப்பெரிய மார்க்சிசவாதிகளின் வாழ்க்கையில் கூட "அச்சு பிழைகளை" காண்பதில்
குறைவான எண்ணிக்கை இருக்காது. இப்போராளிகளின் தவறுகளில், தங்களுடைய புன்மதியையும், ஒழுக்கம்
இன்மையையும், புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் தங்கள் இயலாமையையும், நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும்
கண்டுபிடிக்கின்றனர். 1951ம் ஆண்டில், மூன்றாம் உலகக் காங்கிரசின் ஆவணங்களின் முழு உட்குறிப்புக்களையும் உணராமற்போனதற்கு,
கனனை குற்றம் காண்பது மிக எளிதேயாம். அந்தத் தவறுதான் நான்காம் அகிலத்தில் பண்டா உட்பட பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது,
இதுபற்றிப் பின்னர் அவர் முதலிலேயே அவை பற்றி தனக்குச் சந்தேகமிருந்ததாக கூறிக்கொண்ட போதிலும், அதை
உறுதிப்படுத்தப்பெறாததாக தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு விட்டதாகக் கூறுகின்றார். ஆனால், கனனுடைய அரசியல்
வரம்புகளும், தவறுகளும் எப்படி இருந்தபோதிலும்கூட, நான்காம் அகிலத்தை கலைக்கும் முயற்சியை எதிர்ப்பதில்
தன்னுடைய அனுபவம், போராடும் குணத்திறன் அவ்வளவையும் திரட்டி, 1953ல் மிக உயர்ந்து நின்றார். அனைத்து
ட்ரொட்ஸ்கிஸ்டுகளும், பப்லோவின் விஷமத்தனமும் ஆபத்தும் நிறைந்த பங்கை சற்று முன்கூட்டியே ஒருவேளை
ஊகித்தவர்கள்கூட, கலைப்பாளர்களின் சூழ்ச்சிக்கு எதிராக, இந்த 63 வயது புரட்சியாளரின் ஆற்றல்மிகுந்த, தீர்க்கமான
தலையீட்டை ஆர்வத்துடன் வரவேற்றனர். சமீபகாலத்திய அனுபவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதைப் போல், அக்காலகட்டத்தில்
திருத்தல்வாதிகளுக்கு எதிராகப் போரிட களத்தில் இறங்க முன்வந்தவர்கள் அரிதேயாவர்!
இந்தப் போராட்டத்தில், அதாவது, தொழிலாளர் இயக்கத்திற்குள்ளேயே ஸ்ராலினிசம்
மற்றும் பிற ஏகாதிபத்திய முகவாண்மைகளின் இடுக்குப்பிடியிலிருந்து உடைத்துக்கொள்ளும் போராட்டத்தில், கனன்
தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பிரதிபலிக்கிறார். நான்காம் அகிலத்தில், பல பகுதிகளுக்குள்ளே
அவரது கலைப்பு வழிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும், பெரும்பான்மை உறுப்பினர்களை வெளியேற்ற, பப்லோ தான்
வகித்த தலைமையின் நிர்வாகப் பதவியை தவறாகப் பயன்படுத்தியதைத் தடுக்க, 1953ல் கனன் என்ன செய்திருக்கவேண்டும்
என்று பண்டா குறிப்பிடவில்லை என்பதும் முக்கியத்துவமானது.
Militant பக்கங்களில் பப்லோவை வெளிப்படையாக கண்டனம் செய்தல் போன்ற தீவிரமான
நடவடிக்கையிைன் தேவையை நியாயப்படுத்த, துப்பாக்கிச் சண்டை ஆரம்பித்துவிட்டால், விவாதம் முடிவடைந்து விடுகிறது
என்று குறிப்பிட்டார். தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP)
யில் விவாதம் தொடங்குவதற்கு முன்பே, துப்பாக்கிச் சண்டை ஆரம்பித்தது என்ற உண்மையை எடுத்துக் கொண்டால்,
இத்தகைய கருத்து பண்டாவிற்குப் புரிந்திருக்க வழியில்லை. எவ்வாறாயினும், சோசலிசத் தொழிலாளர் கட்சியானது,
அனைத்துலக செயலகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை விவாதங்களை அடக்குவதற்கும், நான்காம் அகிலத்திலருந்து
ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வெளியேற்றவும் பயனுபடுத்துவதற்கு நோக்கங்கொண்டுள்ள, ஓர் இரக்கமற்ற, கொள்கையற்ற
குழுவுடன் செயல்படவேண்டும் என்பதை உணர்ந்த பின்னரே "பகிரங்கக் கடிதத்தை" வெளியிட்டது.
இப்பொழுது பண்டா "பகிரங்க கடிதம்" வெளியிடப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார்
என்றால், பப்லோவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கு அவர் உடன்படுகிறார் என்றுதான்
பொருளாகும். இவருடைய இன்றைய நிலையில், "பகிரங்க கடிதம்" எழுதப்படாமலும், அனைத்துலகக் குழு தோற்றுவிக்கப்படாமலும்,
பப்லோ அனைத்துலக் குழுவைக் கலைத்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும் என பண்டா நினைக்கிறார்.
பப்லோவாதத்திற்கெதிரான போராட்டத்திற்கு பண்டாவின் மறுதலிப்பு, சர்வதேச
அரசியல் நிலைமைக்குள்ளே காணப்பட்ட பெரும் அபிவிருத்திகளான-1953 மார்ச் மாதம் ஸ்ராலின் மரணமடைந்தது,
1953 ஜூன் மாதம் கிழக்கு ஜேர்மனியில் எழுச்சி, 1953 ஆகஸ்ட் மாதம் பிரான்சின் பொது வேலை நிறுத்தும்,
போன்றவை குறித்து, பண்டா எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை என்ற உண்மையால் உயர்த்திக்காட்டப்படுகிறது; அவைதாம்
பிளவிற்கு புறநிலையான பின்னணியை உருவாக்கியவை மற்றும் போராட்டத்தில் பணயம் வைக்கப்பட்ட கோட்பாடு மற்றும்
வேலைத் திட்டம் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகளை தெளிவூட்டுவதற்கு பங்களிப்பு செய்தவை. ஓர் உண்மையான சர்வதேசிய
ஆவணம் என்னும் முறையில் "பகிரங்க கடிதம்" இப்பிரச்சினைகள் அனைத்தையும் பற்றி விவாதித்துள்ளது.
ஸ்ராலின் இறந்த சில வாரங்களுக்குப் பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சியில்
(SWP) பப்லோவின் நெருங்கிய நண்பராக கொக்கிரானுடன்
இருந்தவரான ஜோர்ஜ் கிளார்க், "ஸ்ராலினின் பங்கு -- ஸ்ராலினிசத்தின் வருங்காலம்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைக்
கொடுத்தார். இவ்வுரை ஸ்ராலினிசத்தைப் பற்றிய ட்ரொட்ஸ்கிச மதிப்பீட்டில் இரண்டு அடிப்படைத் திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
முதலாவதாக, சோவியத் ஒன்றியத்தில் "சோசலிச சொத்து வடிவங்கள்" இருக்கின்றன என்ற ஸ்ராலினிஸ்டுகள் கூற்றைத்
தெரிவிக்கிறது; இந்தக் கருத்து ட்ரொட்ஸ்கியால் எப்பொழுதுமே நிராகரிக்கப்பட்டது. இரண்டாவதாக, 20 ஆண்டுகளுக்கும்
மேலாக நான்காம் அகிலத்தால் வளர்க்கப்பட்டு வந்திருக்கும் அரசியல் புரட்சி என்ற கருத்திற்கு கிளார்க் சவால்
விட்டார். ஸ்ராலினிசத்தின் வீழ்ச்சி எடுக்கும் வடிவம் குறித்து ஊகத்துடன் கிளார்க் எழுதியதாவது:
சோவியத் ஒன்றியத்தில், இந்த வழிமுறை, அதிகாரத்துவ ஆட்சிக்கு எதிராக வன்முறை
எழுச்சியாக வடிவமெடுக்குமா? அல்லது எழுச்சிபெற்றுவந்த முதலாளித்துவத்திற்கும் சரிந்துகொண்டிருந்த பிரபுத்துவமுறைக்கும்
இடையே இருந்த அரசியல் உறவு முறையில் ஆங்கில முதலாளித்துவ புரட்சியின் நீண்டகாலப் போக்கினைப்போல மக்களுக்குச்
சலுகைகள் கொடுத்தலும், அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளுதலும், சிறிது சிறிதாக அதிகாரத்துவத்தின் அடித்தளத்தைக்
கீழறுக்குமா? அல்லது இப்பரிணாமம் இருவடிவங்களையும் இணைத்த ஒரு சேர்க்கையாக இருக்குமா? அதை நாம் முன்கணிக்கமுடியாது.
ஆனால் இந்நிகழ்ச்சிப்போக்கு சோசலிசத்தின் முடிவை அர்த்தப்படுத்தவில்லை, மாறாக அதன் மாபெரும் புத்துயிர்ப்பாகத்தான்
இருக்கும் என்பது உறுதி.[1] (கிளார்க்கின் வலியுறுத்தல்)
பலாத்காரமான அரசியல் புரட்சியைத் தவிர வேறு எந்த முறையிலும் சோவியத் ஒன்றியத்தில்
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கி வீச முடியும் என்ற கருத்தை, வெளிப்டையாக ட்ரொட்ஸ்கி நிராகரித்திருந்தார்.
ஆனால் கிளார்க்கோ, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அமைதியான முறையில் சோசலிசமாக வளர்ந்து மாறக்கூடும் என்ற
கருத்தை முன் வைத்துள்ளார்; இக்கருத்து போலந்திலிருந்து பிரிட்டனுக்குப் புலம் பெயர்ந்து, பத்திரிகையாளராகவும்,
ஸ்ராலின், ட்ரொட்ஸ்கி இருவருடைய வாழ்க்கைச் சரிதத்தையும் எழுதிப் புகழ்பெற்ற இடைநிலைவாதியான, ஐசக்
டொய்ச்சர் (Isaac Deutscher) என்பவரால்,
முன்பே கூறப்பட்ட கருத்தாகும். பப்லோ சமகாலத்திய எழுத்துக்களில், அவருடைய சிந்தனையையும் தாக்கம் செய்தவகையில்
டொய்ச்சர், ஸ்ராலினிசமோ, ட்ரொட்ஸ்கிசமோ இல்லாத அரசியல் போக்குகளினாலும்கூட சோசலிசத்தை அடைய
முடியும் என்று வாதிட்டார். இன்னும் சொல்லப்போனால், அதிகாரத்துவத்தின் படிப்படியான சுயசீர்திருத்தம், ஸ்ராலினிசம்,
ட்ரொட்ஸ்கிசம் இரண்டிலும் வரலாற்றுரீதியாக முன்னேற்றகரமான கருத்துக்களை இணைத்து எடுத்துக்கொண்டு, ஒரு சோசலிச
வடிவமாக உருவெடுக்கும் என்று வலியுறுத்தினார்.
"ஸ்ராலினுக்குப் பிந்தைய 'புதிய வழி',"
("The Post Stalin New Course',")
என்று தலைப்புக் கொடுக்கப்பட்ட கட்டுரையொன்றில், திரும்பி வரமுடியாத, "ஸ்ராலினிசம் அகற்றப்பட்ட"
அதிகாரத்துவத்தை முன்நிலைப்படுத்தி பப்லோவால் கிளார்க்கின் திருத்தல்வாத நிலைப்பாடு, மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது.
கிழக்கு ஜேர்மன் எழுச்சியின் முக்கியத்துவம் பற்றிய மதிப்பீட்டு உரையில், பப்லோ அதை, எழுச்சியோடு வெளிப்பட்ட
வன்முறையும், இரக்கமற்றவகையில் அது அடக்கப்பட்ட தன்மையும் இருந்த போதிலும் கூட, வரவிருக்கும் ஸ்ராலினிசத்திற்கு
எதிரான ஓர் அரசியல் புரட்சி என்றோ, தொழிலாள வர்க்கத்திற்கும் அதிகாரத்துவத்திற்கும் இடையே உள்ள சமரசப்படுத்த
முடியாத குரோதத்தின் வெளிப்பாடு என்றோ காணவில்லை. மாறாக, அதிகாரத்துவம் கிழக்கு ஜேர்மனியின்
தொழிலாள வர்க்கத்திற்கு அரசியலளவில் கொடுத்த சலுகைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்:
"சலுகைகள் விரிவாக்கப்பட்ட பின்னர், ஸ்ராலினிச ஆட்சியின் உண்மையான தகர்ப்பிற்கான அச்சுறுத்தல் தடுக்கமுடியாததாகிவிடும்."[2]
ஸ்ராலினிசம் பரந்த மக்களின் அழுத்தத்திற்கு சலுகைகள் கொடுக்கும் நிகழ்ச்சிப்போக்கின்
மூலம் கலைக்கப்பட்டுவிடும் என்ற கருத்தின் அடிப்படையில், "இருப்பதை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும், அல்லது
இன்னும் பின்னோக்கிச் செல்லவேண்டும் எனப்போராடும் கூறுகளுக்கும், பரந்த மக்களின் சக்திமிகுந்த அழுத்தத்தினால்
இழுக்கப்படும் கூறுகளுக்கும் இடையே அதிகாரத்துவ வன்முறைப் போராட்டங்களின்" விளைவாக, சோவியத் ஒன்றியத்திலும்,
கிழக்கு ஐரோப்பாவிலும் பப்லோ சோசலிசத்தின் வெற்றியைக் கண்டார்..."[3]
சோசலிச தொழிலாளர் கட்சியின் இதற்கான விடை கிளார்க்-பப்லோ நிலைப்பாட்டிற்கு
முற்றிலும் மாறாக இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் கொடுத்த சலுகைகள் எனப்படுபவற்றை, "குரல்வளையைப் பிடித்துத்
தொழிலாளர்களை தொடர்ந்து அடக்கியாளும் ஆட்சியை" வைத்திருக்க நோக்கங்கொண்டது என அது கண்டனத்திற்கு
உட்படுத்தியது.[4] அது மேலும் வலியுறுத்தியதாவது:
ஜேர்மன் தொழிலாளர்களின் இந்த அரசியல் எழுச்சி, உழைக்கும் மக்களுக்கும் ஒட்டுண்ணி
ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையேயான சமரசப்படுத்த முடியாத பூசலைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. கிழக்கு
ஜேர்மனியில் இந்நிகழ்ச்சிகளை தோற்றுவித்த இந்த உறவுகளும், நிலைமைகளும், கிழக்கு ஜேர்மனியுடன் நின்றுவிடவிடவில்லை;
அவை இடைப்பட்ட பகுதிகளிலுள்ள நாடுகளிலும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளும் காணப்படுகின்றன. ஸ்ராலினிசத்தின் ஆதிக்கத்திற்கு
உட்பட்டுள்ள நாடுகளில் வர இருக்கின்ற போராட்டங்களையும் புரட்சிகர அபிவிருத்திகளையும் கிழக்கு ஜேர்மனி முன்னிழலிட்டுக்
காட்டுகிறது. [5]
1949லிருந்து வளர்ந்து வந்திருந்த கலைப்புவாத நிலைப்பாட்டின் உச்சக் கட்டத்தை,
பப்லோ அரசியல் புரட்சியை நிராகரித்தலும் அதிகாரத்துவம் தன்னைத் தானே சுயசீர்திருத்தம் செய்து கொள்ளும்
என்ற அவரது முன்னிலைப்படுத்தலும் பிரதிபலித்தன. 1953 அளவில், ஸ்ராலினிசத்திற்கெதிரான நேரடிப்போராட்டத்தில்
தொழிலாளர்கள் நுழையும் நிலைமைகள் வந்த சமயத்தில், சோவியத் ஒன்றிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய அதிகாரத்துவங்களுக்காக
வாதாடும் வழக்கறிஞருடைய நிலையே பப்லோவின் பங்காயிற்று
ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதன் "தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து முறித்துக்கொள்வதற்கு",
மற்றும் பலவிதமான சந்தர்ப்ப வாதிகளுக்கு மிகவும் பிடித்த வாதங்களைப்பற்றிய மேம்போக்கான அனைத்து வகையான
குறிப்புக்களுடன், பப்லோ அவரது அரசியல் நிலைப்பாட்டின் திருத்தல்வாத மற்றும் கலைப்புவாத உள்ளடக்கத்தை இனியும்
மறைக்க முடியாமல் போயிற்று. மூன்றாம் உலகக் காங்கிரசின் மூலோபாயத்தை மேலும் "ஸ்தூலப்படுத்தல்" வேண்டி,
பப்லோ "உண்மையான மக்கள் இயக்கத்துடன் நம் பிணைப்பு, நமது அனுபவம் மற்றும் முன்னோக்குகள்" என்ற தலைப்பில்
வெளியிட்ட அளவில், நான்காம் அகிலத்தின் பகுதிகள் சிலவற்றை ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் துணை உறுப்புக்கள் ஆக்க
அல்லது பல்வேறு நாடுகளில் பரந்த தொழிலாளர் அமைப்புக்களில் ஆதிக்கம் செலுத்தும் குட்டிமுதலாளித்துவ கருவிகள்
எவையாக இருந்தாலும், அவற்றின் துணை உறுப்பாக உருமாற்றுவதற்கு அவர் நனவுபூர்வமாக வேலை செய்து
கொண்டிருந்தார் என்பது தெளிவாயிற்று. உலகம் முழுவதும் "நுழைவுவாதம்" என்பதற்கான இவரின் முன்மொழிவு
நான்காம் அகிலத்தை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மார்க்சிசக் கட்சி என்பதிலிருந்து அரசியல் கலைப்பிற்கு
அமைப்பு ரீதியான வழியாகக்கூறத் தலைப்பட்டது.
ஒரே புரட்சிகர மார்க்சிசப் போக்கு என்ற முறையில், நம்முடைய மூலோபாயம்,
பாட்டாளி வர்க்கத்தால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படல், உலக அளவில் சோசலிச புரட்சி வெற்றியடைதல் என
இருக்கும்போது, நம்முடைய தந்திரோபாயமானது, நம்முடையதைவிடப் பெரிய நனவூபூர்வமான புரட்சிகர சக்திகளை
மிகச்சரியான நேரத்தில் மற்றும் இயன்ற அளவு மிகவும் திறமையுடன் மறு ஒழுங்குபடுத்துவதற்கும் அவைகளுடன் கலந்து
பெரிய மார்க்சிச கட்சிகளை உருவாக்குவதற்கும் ஏற்றவாறு, ஸ்தூலமான அகநிலைமை மற்றும் புறநிலைமைகளைக்
கட்டாயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதிப்பகுப்பாய்வில், நம்முடைய தந்திரோபாயம், உலக சோசலிசப் புரட்சியின் விரைவான,
முழுமையான வெற்றிக்கு இன்றியமையாத அத்தகைய புரட்சிகரக் கட்சிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.
ஆனால் நாம் அவற்றின் உருவாக்கத்தை ஸ்தூலமாக ஒவ்வொரு நாட்டின் வர்க்க இயக்கத்தின்
நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக கருதுதல், அதன் ஸ்தூலமான அனுபவத்தினூடாக அரசியல் ரீதியாக அதன் முதிர்ச்சியடையும்
போக்கில் ஆகும், அது ஒருபுறம் சாதகமான காலகட்டத்தின் புறநிலைமைகளினாலும், மறுபுறம் உண்மையான வர்க்க
இயக்கத்தில், நாம் நம்முடைய வேலைத்திட்டம், கருத்துக்கள் மற்றும் எமது செயல்பாடு ஆகியவற்றின் மூலம் நமது
சொந்த பங்குபெறலின் மூலம் உதவப்படும்.[6]
"வர்க்கத்திற்குள்ளான இயக்கம்" என்ற இப்பேச்செல்லாம், நான்காம் அகிலத்தை எதிர்
வர்க்க சக்திகளுக்குக் கீழ்ப்படுத்துவதற்கும் அதன் கொள்கைகளைக் காட்டிக்கொடுப்பதற்கும் பகட்டுக் காரணங்கள்
கற்பித்தல் என்பவைதவிர வேறு ஏதுமில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ளவாறு வர்க்கத்தை, அதன் தனித்தன்மைகளுடன் எடுத்துக்
கொண்டு, அவற்றின் இயற்கையான நகர்வுகளை ஆராய்ந்து, அவற்றின் முன்னேற்றகரமான தனிச்சிறப்புக்கூறுபாடுகளை தெளிந்து
கண்டு, நம்முடைய தந்திரோபாயத்தை அதற்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்வோம்.
வடிவம் பற்றி நாம் அதிகம் பொருட்படுத்த வேண்டியதில்லை; வர்க்க உள்ளடக்கம் வழமையாக
சிதைந்திருக்கலாம், மறைக்கப்பட்டிருக்கலாம், உள்ளுறைந்திருக்கலாம் அல்லது செயல் திறனையே கொண்டிருக்கலாம்;
அதுதான் தீர்மானகரமாய் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆனால் இதனைக் கண்டறிவதற்கு மிக உயர்ந்த அளவு
பக்குவம் தேவைப்படும், நம்முடைய இயக்கம் அதற்குப் போதிய சான்றுகளைக் கொண்டுள்ளது.[7]
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தன்மையை அறிந்துகொள்ளவேண்டும் என
விரும்புகிறவர்கள், மேலுள்ள இரண்டு பந்திகளையும் கவனத்துடன் படிக்கவேண்டும்; இது இன்றுவரைக்கும் உயர்த்தப்பட்ட
பழைய சந்தர்ப்பவாத சூத்திரப்படுத்தலான "இயக்கம்தான் அனைத்தும், இறுதி இலக்கைப்பற்றிக் கவலைப்பட
வேண்டாம்" என்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நான்காம் அகிலத்திற்குள் இருந்த, தடையற்ற சந்தர்ப்பவாதத்தை
ஒரு நெறியாக்கிய திருத்தல்வாத "இயக்கிகளுள்" நீண்ட பட்டியலில் இருந்தவர்களுள், பப்லோ முதலாவதாக இருந்தார்.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சிறுஅளவு, அதன் தனிமைப்படலில் இருந்து வெளிவரவேண்டும் என்பதைப் பற்றிக் குறிப்புக்கள்
கொடுத்து, தங்கள் தந்திரோபாய திடீர் ஏற்பாடுகளை எப்பொழுதும் அவர்கள் நியாயப்படுத்தினர். "வடிவத்தை
நாம் பொருட்படுத்தவில்லை" என்று கூறுவது, அவற்றின் சமூக அடித்தளம் மற்றும் வேலைத்திட்டத்தின் வர்க்கத் தன்மை
இவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் உண்மையில் எப்படிப்பட்ட அரசியலமைப்புடனும் தொடர்பு கொள்ளலாம் என்பது
கோட்பாடற்ற உறவுகளுக்கான ஒரு நியாயப்படுத்துதலாகும். "சிதைந்த, மறைக்கப்பட்ட, உள்ளுறைந்த அல்லது
எதிர்கால செயல்திறனைக்கூட கொண்டுள்ள", அமைப்புக்களின் வர்க்கத்தன்மை "தீர்மானகரமான முக்கியத்துவத்தைக்
கொண்டுள்ளவை" என்பது மார்க்சிச, வரலாற்று சடவாத, அரசியல் எண்ணக்கரு மீது போர் தொடுப்பதாகும். அத்தகைய
பார்வை, கடினமான வகையில் செயல் வகையில், பதிவுவாதம்,
சூழ்ச்சி கையாளல் மற்றும் தந்திரோபாய செப்படிவித்தை போன்றவை, இவ்வழிமுறையை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளின்
அன்றாட அச்சு ஆகிவிடும்.
அனைத்து இரட்டைப் பேச்சுக்களுக்கும், ராஜீயமுறையில் தவிர்த்தல்களும் ஒருபுறம்
இருக்க, பப்லோவுடைய "நுழைவு" முன்மொழிவுகள், ஸ்ராலினிச, சீர்திருத்தவாத மற்றும் முதலாளித்துவ தேசியவாத
அமைப்புக்களில், ட்ரொட்ஸ்கிச இரத்தத்தைச் செலுத்தினால், ஏதோ ஒரு தெளிவற்ற அரசியல் இரசாயன மாற்றத்தின்படி,
இந்த சோசலிச- எதிர்ப்பு சக்திகளை பாட்டாளி வர்க்கப் புரட்சி இறுதியில் அடையப்படும் ஒரு ஊடகமாக மாற்றி
விடும் என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டவை.
1938ல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதற்கான அடிப்படைக் கருத்துருவை, அதாவது,
புரட்சிகரத் தலைமை நெருக்கடி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் மட்டுமே தீர்க்கமுடியும், அதுதான் மார்க்சிசத்தின்
மரபியத்தையும் தொடர்ச்சியையும் கொண்டுள்ளது என்பதை, "குறுங்குழுவாதம்" என பப்லோ கண்டித்திருந்தார்.
நான்காம் அகிலத்துக்கு வெளியே, "உண்மையில் பெயருக்கு ஏற்றாற்போல் இவ்வுலகில் ஒரு இயக்கம் கூட புரட்சிகர
உணர்வுடையதாக இல்லை"[8] என்று ட்ரொட்ஸ்கி கருத்துக் கொண்டிருந்தார்.
நான்காம் அகிலத்தின் இந்த முக்கிய வரலாற்றுப் பாத்திரத்தின் மீதான நம்பிக்கை,
பப்லோவினால் இகழ்ச்சியுடன் நிராகரிக்கப்பட்டது; 1953 அக்டோபரில் இவர் எழுதினார்: "இப்பொழுதுள்ள ஸ்தூலமான
வரலாற்று நிலைமைகளில், மேலும் மேலும்
மிகவும் குறைந்தபட்சமானதாக நிகழக்கூடியதாக இருக்கும் மாறுபாடான ஒன்று என்னவெனில், சீர்திருத்தவாதிகளினாலும்
ஸ்ராலினிஸ்டுகளினாலும் ஏமாற்றமடைந்த மக்கள், தங்களின் பாரம்பரிய வெகுஜன இயக்கங்களிலிருந்து முறித்துக்கொண்டு,
நமது தற்போதைய கருவைச் சுற்றி தம்மைத்தாமே துருவமுனைப்பட வருவர், பின்னையது வெளியிலிருந்து அடிப்படையில்
எதையும் சாராமல் சுதந்திரமான வகையில் செயல்படும்."
[9]
1917ல் ஒரு புரட்சிகரச் சூழலின் உள்ளடக்கத்திற்குள்ளே, ஒப்பீட்டளவில் தொழிலாள
வர்க்கத்திற்குள்ளே மிகச்சிறிய சிறுபான்மை நிலையிலிருந்து சில மாதங்களுக்குள்ளாகவே ஒரு பெரிய வெகுஜனக் கட்சியாக
எழுந்த பொழுது, போல்ஷிவிக்குகள் சாதித்ததைப்போல், நான்காம் அகிலத்தின் பிரிவுகளும் சாதிக்கக் கூடும், என்று
ட்ரொட்ஸ்கி உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்ததை, பப்லோ நம்புவதற்கு நடைமுறை சாத்தியமற்ற கருத்தென
நினைக்கிறார். பப்லோ வாதிடுகிறார்:
சர்வதேசத் தொழிலாளர்களின் இயக்கத்தைப் பண்பிட்டுக்காட்டிய பொதுவான வரலாற்று
நிலைமைகளுக்கும், ரஷ்ய தொழிலாளர்களின் இயக்கத்திற்கும், குறிப்பாக 1917ல் இருந்த இயக்கத்திற்கும் ஒரேமாதிரியான
நிலைமைகள் இனி இல்லை, அடுத்துவந்த சோவியத் ஒன்றியமும் ஸ்ராலினிசமும் இருந்ததன் காரணமாக மட்டும்.......
பெரிய முதலாளித்துவ நாடுகளில், அதிலும் குறிப்பாக மரபுவழியிலான மக்கள் இயக்கம், சீர்திருத்தவாதிகள் தலைமையிலோ
அல்லது ஸ்ராலினிச தலைமையிலோ அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில், இது முற்றிலும் மாறுபட்ட தன்மையில் இப்பொழுது
உள்ளது.[10]
இதுதான் பப்லோவின் உண்மையான முன்னோக்காகும்: நான்காம் அகிலம் ஒருபோதும்
தொழிலாள வர்க்கத்தின் தலைமைக்கு ஆசைப்பட முடியாது; ஸ்ராலினிச, சமூக ஜனநாயக வாதிகளை ஒருபோதும் வெற்றிகரமாக
சவாலிட முடியாது. சக்திவாய்ந்த அதிகாரத்துவங்களுக்கு எதிராக சளையாது போராட்டம் நடத்தி, ட்ரொட்ஸ்கிச
இயக்கத்தின் அதிகாரத்தை விரிவுபடுத்த பொறுமையாகப் போராடுவதில் அர்த்தம் இல்லை. மாறாக, நான்காம்
அகிலம், ஐரோப்பாவில் ஸ்ராலினிச கட்சிகளுக்குள் (அல்லது வேறுநாடுகளில் தொழிலாளர் இயக்கத்தில் மேலாதிக்கம்
செய்யும். மக்கள் இயக்கங்கள் என்னென்ன உண்டோ அவற்றுள், உதாரணத்திற்கு, ஆர்ஜென்டினாவில் பெரோனியம்)
தன்னைக் கரைத்துக்கொண்டுவிட வேண்டும். பப்லோவின் குட்டிமுதலாளித்துவ அவநம்பிக்கை, மக்களைக் கவரும் நியாயப்படுத்தும்
காரணங்களில் மறைந்து கொண்டு, இன்னும் அனைத்து வகையான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்புத் திருத்தல் வாதிகளால்
திருப்பிக் கூறப்படுகின்றன: "நாங்கள் உண்மையான புரட்சியுடன் இருப்போம்,
இருக்க விரும்புகிறோம். " [11]
பப்லோவின் இந்த செய்தி, நான்காம் அகிலத்துக்குள் இருந்த, தங்கள் நாடுகளில்
நொழிலாளர் இயக்கங்களினுள்ளே இருந்த மார்க்சிச முன்னோக்கினால் நன்மை கிடையாது என்று கருதி மனம்
தளர்ந்திருந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினாலும், பழமைவாத தொழிலாளர்களாலும், ட்ரொட்ஸ்கிசத்துடன் சலித்துப்
போனவர்களாலும், வரவேற்கப்பட்டது. பப்லோ வெகுஜனக் கட்சிகளைக் கட்டுவதற்கு, ஒரு மந்திர வழிவகை
கண்டுபிடித்து விட்டார் என்று அவர்கள் பாசாங்கு செய்தபோதிலும், உண்மையிலேயே இருக்கும் சீர்திருத்த தொழிலாள
வர்க்க அமைப்புக்கள் என்ற சேற்றுக்குள் தாங்கள் " ஒருங்கிணைத்தலை" உண்மையில் அவர் முறைமைப்படுத்துகிறார்
என்பதை உணர்ந்து கொண்டனர். அக்டோபர் 1953ல், பப்லோவின் ஆஸ்திரேலிய ஆதரவாளர்
Win Brad Jr. என்பவர், நான்காம் அகிலம்
இதழின் சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP)
ஆசிரியர்களுக்கு, கிழக்கு ஜேர்மன் எழுச்சிபற்றி கிளார்க் கருத்துக் கூறியதை மாரிஸ் ஸ்டீன் குறைகூறியது பற்றிக்
கோபமான கடிதம் ஒன்றை எழுதிக் கண்டனம் செய்திருந்தார்:
லியோன் ட்ரொட்ஸ்கி 13 ஆண்டுகளுக்கு முன்பு
1940ல் இறந்துபோனார் -- ஒரு புதிய தலைமுறை, தோன்றி உலக அளவில் சோசலிசத்தை
அமைக்கவுள்ளது. அந்த தலைமுறையின் உறுப்பினராக நான் இருக்கிறேன். இந்தப் புதிய தலைமுறையில் பலருக்கு
எப்பொழுது லியோன் ட்ரொட்ஸ்கி உயிரோடு இருந்தார் என்பதுகூடத் தெரியாது. மாஸ்கோ விசாரணைகள், மக்கள்
முன்னணி, ஐக்கிய முன்னணி போன்றவை பற்றி எங்களுக்குத் தெரியாது, நாங்கள் அப்பொழுது பிறந்திருக்கக் கூடவில்லை.
இரண்டாம் உலகப்போரைப் பற்றியேகூட, மங்கலான நினைவுகள்தான் எங்களுக்கு உள்ளது; போரைப்பற்றி எங்களுக்கு
தெரிந்த ஒரேகாலம் போர் முடிந்துவிட்ட காலம்தான்; எங்களுக்கு நனவு இருக்க கூடிய ஓரேகாலம் பழைய, மற்றும்
புதிய ஒழுங்கமைப்புக்களுக்கு இடையிலான -முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கும் இறுதிமோதல் எங்கள் நடுத்தர
வயதுக்காலத்திற்கு முன்நிகழும் என்பதுதான்.
ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு, அதை நிரூபிப்பதற்காக, 12 ஆண்டுகள் முன்பு இறந்த
ஒருவரின் மேற்கோளைக் காட்டுவது, அவர் எவ்வளவு மதிக்கூர்மையுடனும், எவ்வளவு ஆழ்ந்து சரியான சிந்தனைகளைக்
கொண்டிருந்தாலும், 1945க்குப் பிறகு உலகம் எப்படி மாறியுள்ளது என்பது பற்றிக் கருதாமல் இருப்பது, எங்களுக்கு
திருப்தியளிக்கவில்லை. லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட சூழ்நிலைக்கு எழுதினார்....
12 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும், அதுவும் இந்த நூற்றாண்டில், 1933-41 என்பது 1945-53 என்பதுடன்
ஒன்றாகிவிடாது...[12].
அவ்வாண்டு இலையுதிர்காலத்திற்குள், நான்காம் அகிலத்தில், கிட்டத்தட்ட ஒரு
உள்நாட்டுப்போரே வெடித்துவிட்டது. பப்லோவிற்கு ஆதரவு கொடுத்தவர்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கு காண்பித்த உட்பிரிவு
(கன்னைவாத) வெறுப்பு கட்டுக்கு அடங்காமல் போயிற்று; இவர்கள் வெளிப்படையாகவே சோவியத்
அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர அரசியலைத் தழுவினர். நான்காம் அகிலத்திற்குள்ளேயே நடத்தப்பட்ட
வாழ்வா-சாவா போராட்டத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு சோசலிசத் தொழிலாளர் கட்சியின், சியாட்டில்
கிளையின் கொக்கிரான் வாதிகளால் எடுக்கப்பட்ட நிலைப்பாடு ஆகும். சோசலிசத் தொழிலாளர் கட்சியின்
பெரும்பான்மையின் ஆதரவாளர் ஜோர்ஜ் பிளின்ட், பாரல் டொப்சிற்கு எழுதிய அறிக்கை ஒன்றிலிருந்து ஒரு
மேற்கோளைக் கொடுக்கிறோம்:
புரட்சிகர சோசலிசக் கட்சியை விட்டு நீங்குதல், அல்லது கட்சிக்குள் நுழைதல் அல்லது
ஸ்ராலினிச எதிர்ப் புரட்சிகர அமைப்பில் சேர்தல் என்ற தங்களுடைய பந்தயத்தில் சில்வியா, பட், ரோஜேர் மற்றும்
ஜிம் ஓ ஆகியவர்கள் நம்முடைய கிளையின் வியாழக்கிழமை இரவுக்கூட்டத்தில் மிக நெருக்கமான முடிவுகளிலிருந்தனர்.
சில்வியா தன்னுடைய அறிக்கையில், ட்ரொட்ஸ்கிச எண்ணக்கருக்கள் அனைத்தையும்
நிராகரிப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வரலாற்றளவிலான புரட்சிகரக் கட்சி என்று கருதுவதாகவும் கூறினார்.
தான், கம்யூனிஸ்ட் கட்சியை ஒருபொழுதும் எதிர்ப்புரட்சிகர போக்கு உடையதாக
நினைத்தது இல்லை என்பதால், ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் முழுமையாக இணைந்திருந்ததில்லை, என்று ரோஜேர்
தெரிவித்தார்.
சோசலிசத் தொழிலாளர் கட்சியில், 6 ஆண்டுகள் இருந்தபின்னர், உண்மையற்ற,
இன்றைய உலகைப் பற்றி கற்பனையில் மிதக்கும் இயக்கத்திலிருந்து தன்னை வெளியேற்றிக் கொள்ளும் முடிவிற்கு
வந்துவிட்டதாக, ரோஜேர் கூறினார். எமது கட்சி பெரும்பாலான மக்களின் கம்யூனிச விரோத உணர்வில் வாழ்கிறது
என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் ஜிம் ஓ சார்பாகவும் இவ்வறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர்.
அவர்கள் சென்றபிறகு அங்கு வந்த ஜிம் ஓவும் இதை உறுதிப்படுத்தினார்.
கூட்டத்தில் கேள்வியொன்றுக்கு விடையிறுக்கையில், இடது எதிர்ப்பாளர்களை சோவியத்
ஒன்றியத்தில் கொலைசெய்ததானது சோவியத் பாதுகாப்பிற்காகச் செய்யப்பட்டதால்,
முன்னேற்றகரமான தேவையான செயல்தான் என்று சில்வியா தெரிவித்தார்.
[13]
1953 கோடைகாலமும், இலையுதிர்காலத் தொடக்கமும் நான்காம் அகிலத்தின்
உட்போராட்டத்தில், திருப்புமுனையாக அமைந்த காலம் ஆகும். பிரான்ஸ் நாட்டில் வெடித்த போது வேலைநிறுத்தம்,
தொழிலாளர்கள் இயக்கத்தினுள் பப்லோவாத நிலைப்பாட்டின் நடைமுறை உட்குறிப்புக்களை அம்பலப்படுத்தியது. இந்த
மக்கள் இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அரசாங்கத்துடன் ஒரு புரட்சிகரமான மோதலைத் தவிர்த்த
ஸ்ராலினிசப் பங்கை, ஒரு காட்டிக்கொடுப்பு என்று வருணனை செய்வதை பப்லோ எதிர்த்தார். ஸ்ராலினிஸ்டுகள்
கொள்கைப்பிடிப்பு காட்டவில்லை என்று மட்டும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், பப்லோவின் பிரெஞ்சு
ஆதரவாளர்கள் ஸ்ராலினிசக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருந்த CGT
தொழிற்சங்கங்கள் அரசியல் கோரிக்கைகளை முன்னெடுப்பதை மறுப்பதற்கு முன்பே அதற்கு ஒப்புதல்
கொடுத்திருந்தனர்.
ஆகஸ்ட் பொது வேலை நிறுத்த அனுபவம் பப்லோவின் அழைப்பான கம்யூனிஸ்ட்
கட்சிகளுக்குள் ஆழமாக நுழைவது என்பது ஸ்ராலினிசத்திற்கு ஒட்டுமொத்தச் சரணடைதலின் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தைக்
கைவிடுதலின் ஒரு பகுதியே என்பது பற்றி ஏதேனும் அரைகுறை சந்தேகம் இருப்பின் அதனை அகற்றியது.
பப்லோவின் வலதுசாரி நிலைப்பாட்டிற்கு கனனின் நேரடி எதிர்ப்பை எதிர்கொள்கையில்,
பப்லோவின் உட்பிரிவு (கன்னைவாத) சூழ்ச்சிக் கையாளல் ஒரு தீவிர, இடரைப் பொருட்படுத்தாத தன்மையை
எடுத்துக் கொண்டது. "பகிரங்கக் கடிதத்திற்கு" பண்டா "ஓர் ஆணவமான இறுதி எச்சரிக்கை" என்று கண்டனம்
தெரிவித்த செயல், வரலாற்று உண்மையைத் தலைகீழாக ஆக்கியது. உண்மையில், உலகம் முழுவதும் உள்ள
ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு பொது அழைப்பு கொடுக்கவேண்டும் என்ற கனனின் முடிவு நான்காம் அகிலத்தில் எல்லாப்
பிரிவுகளும் அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் தான் இருந்தது. பண்டாவிற்கே நன்கு
தெரிந்தது போல், பிரிட்டனுக்குள் மிக ஆபத்தான நிலைமை நிலவியது; அங்கு பப்லோவின் மேற்பார்வையில்
தொழிற்பட்ட லோரன்சின் தலைமையிலான பிரிவு (கன்னை), ஹீலி பாரிஸ் வழியோடு நிற்காவிடில் மற்றும் தன்னுடைய
அரசியல் உறவுகளைக் கனனுடன் துண்டிக்காவிடில் அமைப்பையே அழிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டு இருந்தது.
1953 செப்டம்பர் 23ம் தேதி
ஹீலிக்கு எழுதப்பட்ட அசாதாரண கடிதத்தில் பப்லோ, ஹீலியை கமிண்டேர்ன் முறைக் கட்டுப்பாடுபோல்
உட்பட்டிருக்காவிட்டால், தன்னுடைய கருத்து வேறுபாடுகளைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்ளாவிட்டால், சோசலிசத்
தொழிலாளர் கட்சிக்கு எதிராக அனைத்துலக செயலகத்தினை ஆதரிக்காவிட்டால், அரசியலளவில் அவரை
அழித்துவிடுவதாக எச்சரித்தார். உண்மையான "இறுதி ஆணவ எச்சரிக்கை" பப்லோவினால் ஹீலிக்கு வழங்கப்பட்டது;
ஹீலிக்கு கட்டளையிட்டதாவது:
a. போராட்டத்தை அரசியல்
வகையிலான எண்ணங்களோடு நிறுத்திக் கொள்ளவேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை அனைத்துலக நிர்வாக
குழு [International Executive Committee
-IEC] மற்றும் அனைத்துலக செயலகம்
(IS) இவற்றின்
உறுப்பினராக நடத்திக்கொள்ள வேண்டும், அனைத்துலக செயலகமானது நான்காம் உலக காங்கிரஸ் வரை
பெரும்பான்மை நிலைப்பாட்டையும், அகிலத்தின் கட்டுப்பாட்டையும் பேணும்.
b. பெரும்பான்மை அமெரிக்கப்
பிரிவின் (கன்னையின்) உறுப்பினராக நடந்துகொள்ளுவதை நிறுத்திவிட்டு, அது கூறும் வகையில் அரசியல் நிலைப்பாட்டைப்
பேணுவதை விட்டுவிட்டு, IS, IEC-க்கு
முடிவாக உங்கள் அரசியல் வேறுபடுதல்களை தெரிவிப்பதற்குமுன், இங்கிலாந்தில் அதன் ஆவணங்களை உங்கள் பிரிவிற்குள்,
சுற்றறிக்கைக்கு விடுவதை நிறுத்தவேண்டும்.
c.
அனைத்துக்கும் முதலில் உங்களை அகிலத்தினுடைய கட்டுப்பாடு மற்றும்
நிலைப்பாடுகளில், வைத்து இருக்கவேண்டியது கட்டாயம் போன்று, உங்கள் பிரிவில் தோழர்கள் அவ்வாறு கட்டாயம்
இருப்பதைப் பேணுகையில், அவர்களை எதிர்ப்பதில் அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எதனையும் தவிர்க்க வேண்டும்.
[14]
அனைத்துலக செயலகம், ஹீலியைப் பற்றி "அவர் சோசலிசத் தொழிலாளர் கட்சியின்
கருத்துக்களை தன்னுடைய பிரிட்டிஷ் பிரிவில் விவாதம் நடத்த அனுமதித்தால் "தீவிரமான கடுமையுடன்" தீர்மானிக்கும்,
என்ற பகிரங்க அச்சுறுத்தல் இக்கடிதத்தில் இருப்பதைப் பார்த்து கனன் அதிர்ச்சியுற்றார். மூன்றாம் அகிலத்தின்
பகுதிகளுக்குள்ளே ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் விவாதிக்கப்படுவதை நசுக்குவதற்கு "சர்வதேசக் கட்டுப்பாடு"
கோமாளித்தனமான நையாண்டியாக (பகடியாக) பயன்படுத்தப்பட்ட பொழுது, கமிண்டேர்ன் ஸ்ராலினிசமயமாக
ஆக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தமையால், அத்தகைய ஊழல்மிகுந்த அரசியல் நடைமுறைகளை, பப்லோ,
நான்காம் அகிலத்திற்குள்ளே புதுப்பிக்கும் முயற்சியைக் கண்டு அவர் அதிர்ந்துபோனார். பிரிட்டிஷ் அமைப்பு, ஏற்கனவே
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு உடைய, ஸ்ராலினிச சார்பு உடைய லோரன்சால் தலைமை
தாங்க இருப்பதை ஏற்று, ஹீலி வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்றும் பப்லோ கோரி இருந்தார்.
கனன், லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்டு, நான்காம் அகிலத்திற்குள் ஏற்பட்டுள்ள
நெருக்கடி பற்றி, அரசியல் குழுவிடம் விவாதம் நடத்த, நியூயோர்க் அடைந்தார். 1953 அக்டோபர் 25 அன்று,
கனனை இப்பொழுது ஆதரிக்கும் பாரெல் டாப்ஸ், ஹீலிக்கு, சோசலிசத் தொழிலாளர் கட்சி எவ்வாறு ஒரு "பகிரங்க
கடிதம்" வெளியிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தது என்பது பற்றி, இந்த ஆவணத்தின் முற்றிலும் கொள்கையடிப்படையில்
இது அமைந்துள்ளது என்பது பற்றி, ஒரு விரிவான அறிக்கையை அனுப்பிவைத்தார்.
ஜிம் நியூயோர்க் வந்ததிலிருந்து, சர்வதேசப் போராட்டங்கள் பற்றிய போக்கையும்,
அதன் சமீபத்திய வளர்ச்சிகள் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்து கொண்டு வருகிறோம். நாங்கள் வெகு கவனத்துடன்
உங்கள் அனைத்துக் கடிதங்களையும் படித்தோம், எங்கள் சிந்தனையில் சர்வதேசப் பிரச்சினைகள்பால் அவை மிகுந்த
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எல்லாவற்றையும் விட கெடுநோக்குடையது, உங்கள் கட்சியின் பெரும்பான்மையைத் தூக்கி
எறிந்து விட்டு, ஒரு திருத்தல்வாத சிறுபான்மையினர் கொண்டுவரும் கருத்தைத் தெரிவித்து, பப்லோ உங்களுக்கு
கொடுத்துள்ள இறுதி எச்சரிக்கை ஆகும். இந்த தீய தாக்குதலை உங்கள் மீது தொடங்கியுள்ள அவர், எங்களிடத்தில்
இன்னும் கூடுதலான எச்சரிக்கையுடன் இருக்கிறார். அதற்குக் காரணம் இருக்கிறது. எங்களை சர்வதேச அரங்கில்
செயலற்று இருக்கச் செய்து, இங்குள்ள அவருடைய மறைமுக ஆதரவுடைய திருத்தல் வாதிகளுடன் போராடுவதிலேயே
முழுகவைத்து, தான் ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் குழுவையும் மற்றய மரபுவழி ட்ரொட்ஸ்கிசக் குழுக்களையும் துண்டு
துண்டாக வெட்டி விட முயற்சிக்கிறார்.
சர்வதேச இயக்கத்திற்கு நாங்கள் செய்யக்கூடிய சிறந்த பணி, இந்த பப்லோவாத முழு
சதிவலையையும் சிதைத்து, அவர்களுடைய திருத்தல் வாத கலைப்புவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக அறைகூவல்
விடுவதுதான் என்று நினைக்கின்றோம். நான்காம் அகிலத்தைக் காக்கவும், இந்த அதிகாரத்தை முறையற்றுக் கைப்பற்ற
நினைக்கும் திருத்தல் வாத குழுவைத் தூக்கி எறியவும் உலகெங்கிலுமுள்ள மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு பகிரங்கமான
அழைப்பு விடுக்கும் காலம் வந்து விட்டது என நினைக்கிறோம். பப்லோவின் பிரித்தல், வெளியேற்றுதல் போன்ற
தந்திர உத்திகளிடமிருந்து, இயக்கம் பாதுகாக்கப்பட்டாக வேண்டும், பிரான்சில் பெரும்பான்மையை ஒரு சிறுபான்மை
வெளியேற்றியதுபோல், சர்வதேச அளவில் அவர்களின் தந்திரத்தை திரும்பவும் செய்யும் முயற்சியில் நிர்வாகத்தின்
மீதான கட்டுப்பாட்டை அவர் துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராகவும் இயக்கத்தைப் பாதுகாத்தாக வேண்டும்.
பாதுகாப்பிலிருந்து தாக்குதலுக்கு செல்லும், இம் முடிவின் வழியில், நாங்கள் உங்களுக்கு
அனுப்பி வைத்துள்ள வேண்டுகோள் விடுக்கும் வரைவு ஆவணத்தின் முழுத் தன்மையையும் மாற்ற உள்ளோம். அந்த வரைவு
எங்கள் கட்சிக்குள் திருத்தல் வாதம் பற்றிய விளக்கத்தையும், திருத்தல் வாதிகளுக்கு பப்லோ கொடுத்த ஆதரவு
பற்றியும் மட்டுமே குறிப்பிட்டு, எங்களது போராட்டத்தில் உலக மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் உதவியை
நாடிக் கோரிக்கை விடுத்திருந்தது. இப்பொழுது நாங்கள் எங்கள் அகல் பேரவையில் (பிளீனம்) இருந்து உலக
இயக்கத்திற்கு, சர்வதேச அரங்கில் பாப்லோவாதிகளுக்கு எதிராகப் போரிட அழைப்புக் கொடுக்கும்
பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட நோக்கங் கொண்டுள்ளோம்.
இந்த அறிக்கை, கிழக்கு ஜேர்மனி, பிரான்ஸ், ஈரான் ஆகியவற்றில் புரட்சிகர
நிகழ்வுகள் சோவியத் ஒன்றியத்தின் புதிய அபிவிருத்திகள் இவை சம்பந்தமான பப்லோவாதத்தின் குற்றஞ் சார்ந்த
கொள்கைகளை புறப்பாட்டுப் புள்ளியாக எடுக்கும். அரசியல் பிளவுகள் ஆழ்ந்த தன்மையுடையவையாக ஆகிவிட்டதையும்,
வாழும் முறையில் சரியாக இயங்க வாய்ப்பு இல்லாத அளவுக்கு பப்லோவாத நிர்வாக அமைப்பு முறைகள் நமது
இயக்கத்திற்கு முற்றிலும் விரோதமாகிவிட்டதையும் நாம் விளக்கிக் காட்டுவோம். பப்லோவாதிகளின் நடத்தை,
இயக்கத்தின் சக்திகளில் உண்மையான உறவுகளை அவர்கள் இழிவு படுத்துவதைக் காட்டுகிறது. ஏதோ பப்லோவும்
அவர்களுடைய உட்குழுவும் அகிலத்தை சொந்தமாக வாங்கி விட்டதைப்போல் நடந்துகொள்ளுகின்றனர். மரபுவழியிலான
ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தங்கள் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முழுமையாகப் பணிந்தால் ஒழிய வாழும் வகையில்
ஒருவரையும் எதையும் செய்யவிடாது இருக்கும் பப்லோவையும் அவரைச் சுற்றியுள்ள குழுவையும் விரட்டி அடித்தாக
வேண்டும்.
பலரும் முன்னர் எதிர்பார்த்தது போல், அடுத்த காங்கிரஸ் வரை இந்த பலப்பரீட்சை
காத்திருக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானது. பிரான்சில் தங்களின் நடவடிக்கை மூலமும் மற்றும்
பிரிட்டனில் உங்களுக்கு எதிரான அவர்களின் நகர்வுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலமும் ஏற்கனவே பப்லோவாதிகள்
ஜனநாயகரீதியான காங்கிரசை நடத்தவும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதைக் காட்டிவிட்டனர். காங்கிரஸ் கூடுவதற்கு
முன்பாகவே, மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிஸ்டுகளை கழற்றிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம். நாம்
இப்பொழுது விரைவாகவும் உறுதியாகவும் செயல்படவேண்டும். அதாவது, எதிர்தாக்குதலைக் காலதாமதப்படுத்தாமல்
உடனே தொடங்கவேண்டும். இந்த கும்பலுடன் அமைதியான, அல்லது சமரசமான உடன்பாட்டைக் காணலாம் என்று
நாம் பிரமை கொள்ள முடியாது.
இங்கு ஒருமனதாக எடுக்கப்பட்ட இந்த முடிவான, தந்திரோபாயத்தில் மாறுதல்
என்பது, உங்களுடைய போராட்டத்தில் நாங்கள் எந்த அளவிற்கு சிறப்பாக உதவமுடியும் என்பதைக் கருத்திற்கொண்டு
எங்களது ஆழ்ந்த ஆராய்விற்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இப்பொழுதுள்ள நிலைமையின்படி, நீங்கள்
அவதூறுகள், பொய்யாகப் புனையப்பட்ட சட்டவிதிகள் என்ற வலையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய
சூழ்நிலையில் உள்ளீர்கள். பப்லோவின் களத்தில், பப்லோவினால் இயலக்கூடிய அரசியல் குழப்பத்தையும், அமைப்பு
ரீதியான சதிகளைப் பயன்படுத்தலையும் அவர் விதைக்கக் கூடிய தன்மையினால் ஏமாந்துவிடக்கூடிய, அனுபவமற்ற
தோழர்கள் துணையுடன் எதிர்கொள்ள நீங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளீர்கள்.
நம்முடைய பிளீனம் ஒரு நேரடி அரசியல் சவாலைப் பப்லோவிற்குக் கொடுத்தால்,
எல்லாம் மாறும், அவருடைய குழப்பம் மிகுந்த மூலோபாயத்தைத் தகர்த்துவிடும், மற்றும் எங்கள் அறிக்கைக்கு ஆதரவு
தருவதில் தற்காப்பிலிருந்து தாக்குதலுக்கு உங்களை மாற்றுவதற்கான சிறந்த அடிப்படையையும் ஏற்படுத்தும். நீங்கள்
இவ்வாறு உடனடியாக, எல்லா மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் இந்த யுத்தத்திற்காக அணிதிரட்டவும்
ஆயுதபாணியாக்கவும் முடியும்.
இப்பொழுது மேற்கொள்ள இருக்கின்ற யுத்தம் எதிர்காலத்திற்கு முக்கியமானவையாகவும்,
முடிவானவையானவாகவும் அமையும் என்பது, 25 ஆண்டுகளுக்கு முன்பு, அசல்
(Original)
ட்ரொட்ஸ்கிச காரியாளர்கள் கூடி, பெரும் யுத்தங்களை நடத்தியதற்கு எந்தவிதத்திலும் குறைவானதல்ல.
இந்த அரசியல் கட்டாயங்களுக்கு முன்பாக, சிறு அவதூறுகள், அமைப்பு ரீதியான சூழ்ச்சி நடவடிக்கைகள் அனைத்தும்
முக்கியத்துவத்தை இழந்துவிடும். சற்றும் விட்டுக்கொடுக்காத அரசியல் அறைகூவலினால், நீங்கள் உங்கள் சக்திகளை
விரைவாக ஒன்று திரட்டி, ஒரு பிரிவாக (கன்னையாக) ஒருமித்த முறையில் இணைப்பீர்கள், அது இங்கிலாந்தின்
வருங்கால இயக்கமாக ஆகும்.
நாம் இப்பூசலை இதேமுறையில் இன்னும் தொடர்ந்து நடக்க விட்டோம் என்றால்,
உங்கள் இயக்கத்தையும் குழப்பத்தில் ஈடுபடுத்திவிட்டு சீர்குலையவும், மனஉறுதித் தளர்ச்சி ஏற்படவும் காரணமாகும்
அபாயத்திற்கு உட்படுத்திவிடுபவர்கள் ஆகிவிடுவோம். அதுதான் நாங்கள் இப்பொழுது மிகவும் அஞ்சுவது.
கடந்த வியாழன் இரவு, நியூயோர்க்கில் இந்த தந்திரோபாய மாறுதலின் பாதிப்பின்
ஆரம்ப சோதனையை, பிரெஞ்சுப் பொது வேலைநிறுத்தம் தொடர்பான உள்விவாதம் ஒன்றில் நடத்தினோம். இந்த
விவாதத்தில், முதல் முறையாக புனிதப் பசுவான பப்லோ பற்றித் தொடங்கினோம். கொக்கிரான் வாதிகள் நாங்கள்
அவ்வாறு செய்ததைப் பற்றி அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர்; நம்முடைய சக்திகளோ இறுதியில் பப்லோ பற்றிய
போர் வெளிப்படையாக வந்தது பற்றி மகிழ்ச்சி
அடைந்தனர். நாங்கள் பப்லோவைத் தாக்கியதைக் கண்டு கொக்கிரான் வாதிகள் அடைந்த வியப்பு, அவருடன்
நாங்கள் பகிரங்கமாக போரிடத்தயாராக இருக்கமாட்டோம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்ற எங்களது
மதிப்பீட்டை உறுதிப்படுத்தியது. எங்களிடம் நேர்த்தியான முறையில் இரட்டை விளையாட்டு விளையாடுவதன் மூலம்,
பிரிட்டனிலும் ஒரு பிரெஞ்சு செயல் முடிவடையும் வரை, சர்வதேசப் போராட்டத்தில், எங்களைச் செயல்
அற்றவர்களாக வைக்க முடியும் என்று அவர் கருதியிருந்தார்.
இந்த விவாதத்தின் முக்கிய காரணி, நம்முடைய ஆதரவாளர்கள் அனைவரும் பப்லோவின்
திருத்தல்வாதம், உலக இயக்கத்தில் கலைப்புவாதம் மற்றும் பப்லோவாத திருத்தல் வாதம் ஆகியன மீது நாங்கள்
சண்டையிடத் தயாராகி விட்டோம் என்பதின் அடையாளத்திற்கு மிகுந்த ஆர்வம் காட்டியதாகும். இந்த நல்ல
முறையிலான பதில் விளைவு, இயக்கம் இருக்கும் இடங்களில் எல்லாம், நீங்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளபடி, ட்ரொட்ஸ்கி
என்ன கற்றுக்கொடுத்துள்ளார் என்பதை மறக்காதவர்கள் மற்றும் நீங்கள் பல நேரங்களில் குறிப்பிட்டவாறு,
சோசலிசத் தொழிலாளர் கட்சியுடன் பேசுவதற்காகக் காத்திருந்தவர்கள் மத்தியில் இரட்டிப்பாகும் என நாங்கள்
நினைக்கிறோம்.[15]
1953 கோடை முழுவதும் கொக்கிரான் வாதிகள் சோசலிசத் தொழிலாளர் கட்சி
தலைமையின் அதிகாரத்தை ஏற்காமல், கட்சிப்பணியை முறையாக நாசப்படுத்தினர். உதாரணமாக, கட்சியின்
பத்திரிகையை விற்கவோ பணம் திரட்டவோ மறுத்தனர். இந்த எதிர்ப்பின் உச்சகட்டம் 1953 அக்டோபர் 30ம்
தேதி, நியூயோர்க்கிலுள்ள கொக்கிரான் வாதிகள், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொடங்கப்பட்டு 25
ஆண்டுகள் நிறைவு அடைந்ததைக் கொண்டாட வைக்கப்பட்ட உணவுவிருந்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். பொதுவில்
இவ்வாறு கொக்கிரான் வாதிகள் கட்சியைப் புறக்கணித்தது, கட்சியை உடைத்ததற்கு சமமாகும் என்பதால் சோசலிசத்
தொழிலாளர் கட்சி அவ்வாறே கருதியது. 1953 நவம்பர் 23 அன்று, தேசியக் குழுவின் பிளீனத்தில் சோசலிசத்
தொழிலாளர் கட்சி, கொக்கிரான், கிளார்க் மற்றும்
புறக்கணிப்பில் கலந்துகொண்ட ஏனைய அனைவரையும் கட்சியைவிட்டு வெளியேற்றியது.
கொக்கிரானுக்கு எதிரான, நீண்ட போராட்டத்தை மறு ஆய்வு செய்த, கனன்,
தேசியக் குழு பிளீனத்தில் பிளவின் முக்கியத்துவம் பற்றித் தன்னுடைய முடிவுரையில் சுருக்கிப் பேசினார்:
உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது
தலைமை பற்றியதுதான். உலகத் தொழிலாள வர்க்கத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே உள்ள ஒரே தடை
தீர்க்கப்படாத தலைமைப் பிரச்சினைதான். இதுதான் "கட்சியின் பிரச்சினை" என்பதின் பொருளாகும். இதுதான்
இடைமருவு வேலைத் திட்டம், தொழிலாளர் இயக்கத்தின் நெருக்கடி, தலைமையின் நெருக்கடியே ஆகும் என்று
கூறியதின் பொருளாகும். அதாவது, தொழிலாள வர்க்கம் புரட்சிக் கட்சியைத் தோற்றுவிக்கும் பிரச்சினையைத் தீர்த்து
வைக்கும் வரையில், போராட்டத்தில் வெகுஜனங்களுக்கு தலைமைதாங்கக் கூடிய, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின்
நனவான வெளிப்பாடு வரும்வரை, பிரச்சினை தொடர்ந்து தீர்க்கப்படமுடியாதது என்பது அதன் பொருளாகும்.
அனைத்துக் கேள்விகளிலும், கட்சியைப் பற்றிய இந்தப் பிரச்சினை தலையானதாகும்.
இப்பொழுது நாம் தெளிவாகப் பார்ப்பதுபோல், பப்லோவாதத்துடன் நமது முறிவு
ஒருமுனைப்போடு, ஒரு தீவிரத்தோடு கவனம் செலுத்தப்பட்டால் ஒரே ஒரு கருத்திற்குத் தான் வரும், அதாவது:
கட்சியைப் பற்றிய பிரச்சினை. அது இப்பொழுது எங்களுக்குத் தெளிவாகியுள்ளது, நாங்கள் பப்லோவாத வளர்ச்சியை
செயல் முறையில் பார்த்துவிட்டோம். பப்லோவாதத்தின் திருத்தல்வாதத்தின் சாராம்சம் என்னவென்றால்,
ட்ரொட்ஸ்கிசத்தின் பகுதியை, இன்றைய முக்கிய பகுதியான, மனிதகுல நெருக்கடி, தொழிலாளர் இயக்கத்தின் தலைமை
நெருக்கடி என்ற கருத்துருவைத் தூக்கி எறிவதாக இருக்கிறது.
ட்ரொட்ஸ்கிசத்தை தூக்கி எறிந்து விடுவதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்காமல்,
பப்லோவாதம் லெனினிடமிருந்து ட்ரொட்ஸ்கி கற்ற பகுதியையும் தூக்கி எறிய நோக்கம் கொண்டிருக்கிறது. தன்னுடைய
சகாப்தத்திற்கு லெனினுடைய மகத்தான பங்களிப்பு, அவருடைய கருத்து மற்றும் புரட்சியில் தொழிலாளர்கள் தலைமை
வகிக்க திறனுடையதாக்கும் ஒரு முன்னனிப்படைக் கட்சியைக் கட்டி எழுப்புவதற்கு அவரது உறுதியான போராட்டமாகும்.
அவர் தன்னுடைய தத்துவத்தை தன்னுடைய சொந்த நடவடிக்கையின் காலத்திற்கு மட்டும் எல்லைப்படுத்திக்
கொள்ளவில்லை. அவர் 1871க்குப் பின்சென்று, பாரீஸ் கம்யூனுடைய, முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சியின்
தோல்விக்கு முக்கிய காரணம், வெகுஜன இயக்கத்திற்கு ஒரு நனவான வேலைத் திட்டத்தையும் உறுதியான
தலைமையையும் வழங்க வல்ல, மார்க்சிய முன்னணிப்படையின் கட்சி இல்லாமையாகும் என்று கூறினார். லெனினுடைய
இப்பகுதியை ட்ரொட்ஸ்கி ஏற்றதுதான், 1917ல் ட்ரொட்ஸ்கியை ஒரு லெனினிசவாதியாக மாற்றியது.
அதுதான் இடைமருவு வேலைத்திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது; அது புரட்சிக்
கட்சியின் முக்கிய பங்கு பற்றிய லெனினுடைய கருத்துரு. அதைத்தான் பப்லோவாதிகள் தூக்கி எறிய முற்பட்டுள்ளனர்
ஸ்ராலினிஸ்டுகளோ, சீர்திருத்தவாதிகளோ, எப்படியோ, எவர் மூலமாகவோ கருத்துக்கள் ஏதாவது அடிப்படையில்
நம்பிக்கைத்துரோக அதிகாரத்துவத்திற்கு சென்று அடையும், "வால் நட்சத்திரம் தோன்றும் தினத்தில்", சோசலிசப்
புரட்சி அடையப்படும் என்ற கருத்துருவிற்கு ஆதரவாக இருந்தனர், மற்றும் அது ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட்
இல்லாமல், அதாவது ஒரு லெனினிச-ட்ரொட்ஸ்கிசக் கட்சி இல்லாமல் நடந்தேறும் என்ற முடிவுக்கு வருகிறது. அதுதான்
பப்லாவாதத்தின் சாரம் ஆகும். ஒரு கட்சிக்கும் வேலைத் திட்டத்திற்கும் மாற்றாக ஒரு வழிபடலையும், ஒரு அருள்
வெளிப்பாட்டையும் வைப்பதே பப்லோவாதமாகும்.
[16]
குறிப்புக்கள்:
[1] National Education Department Socialist Workers Party, Towards a
History of the Fourth International, June 1973, part 4, vol. 3, p.
110.
[2] Ibid., p. 114.
[3] Ibid.
[4] Ibid. p. 126.
[5] Ibid. p. 125.
[6] Ibid. p. 130.
[7] Ibid. pp. 130-31.
[8] Leon Trotsky, The Death Agony of Capitalism and the Tasks of the
Fourth International: The Transitional Program, (New York: Labor
Publications, 1981), p. 42.
[9] SWP, Towards a History, part 4, vol. 3, p. 141.
[10] Ibid., p. 142.
[11] Ibid., p. 144.
[12] Ibid., p. 128.
[13] SWP, Towards a History, part 3, vol. 2, p. 98.
[14] SWP, Towards a History, part 4, vol. 4, pp. 150-51141.
[15] SWP, Towards a History, part 3, vol. 2, pp. 122-23.
[16] James P. Cannon, Speeches to the Party (New York: Pathfinder
Press, 1973), pp. 181-82
|