World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US media sanctions campaign of atrocities in Iraq

ஈராக்கில் கடுந்தாக்குதல்களுக்கு அமெரிக்கச் செய்தி ஊடகம் இசைவு தருகிறது

By Patrick Martin
17 November 2003

Back to screen version

ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்படுதல், தற்கொலைப்படை குண்டுத்தாக்குதல்கள், மத்திய பாக்தாத்தில் உள்ள "பச்சைப்பகுதியில்" (Green Zone) அமெரிக்க ஆக்கிரமிப்புத் தலைமையகத்தின் மீதான மோட்டார் தாக்குதல்கள் என்று தொடர்ந்த இராணுவ - அரசியல் பேரழிவுகளால், புஷ் நிர்வாகத்தின் கண்ணுக்கு நேரே புலனாகும் நிலைகுலைந்த தன்மை ஈராக்கியப் போரில் ஒரு திருப்புமுனையாகும்.

நிர்வாகத்தின், ஈராக்கிலிருந்து "வெளியேறும் உபாயம்" சடுதியில் பின்வாங்கிவிடுதல் என்பதாகிவிடும் என்று எவரும் நினைத்துவிட வேண்டாம். மாறாக, வெள்ளை மாளிகையும், பென்டகனும் ஈராக்கியர்களின் எதிர்ப்பிற்குப் பதிலடியாக பெரும் படுகொலைகள், சந்தேகத்திற்குரியவர்களுக்குக் கடுஞ்சிறை முகாம்களை நிறுவுதல் உட்பட மிகக்கடுமையான இராணுவ வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு அடக்கத் தயாராகி வருகிறது என்ற குறிப்புக்கள்தான் கிடைத்துள்ளன.

ஈராக்கில், பரந்தமுறையில் எதிர்ப்பு இயக்கங்களைக் கூடுதலான வன்முறையைப் பயன்படுத்தி அடக்கவேண்டும் என்று வற்புறுத்தும் கட்டுரையாளர்களின் கருத்துக்கள் அமெரிக்கச் செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளதை ஆய்வு செய்வது, நிர்வாகத்தின் மிக உயர்மட்டங்களில் விவாதிக்கப்படும் திட்டங்களைப்பற்றி கணிப்பதற்கு ஒரு அளவுகோலாகும். இந்தக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அமெரிக்கப் பொதுமக்களைக் கருத்திற்கொண்டு எழுதப்படுபவை என்று சொல்லுவதைவிட - சூழ்நிலை கனியும்போது அத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் - நிர்வாகத்துடைய மனஉறுதியை வலுப்படுத்தவும், ஆட்சிலுள்ள உயர்சிறுகுழுவினரை கொடூரமான செயல்களைப் புரிய மொத்தமாக ஊக்குவிக்கவும்தான் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்ற முறையாக இருக்கிறது.

அமெரிக்கத் தலைநகரிலிருந்து வெளிவரும் முக்கிய நாளேடான Washington Post தான் இந்த செய்தி ஊடகப் பிரச்சாரத்தின் தலைமையைக் கொண்டிருக்கிறது. முன்னர் அரசியல் தாராளவாதக் கொள்கைகளிலேயே முக்கியமானவை எனக்கருதப்பட்டவற்றில் முதலிடத்திலிருந்து, இப்பொழுது மிக வன்முறை வெறிபிடித்து எப்படியும் ஈராக்கில் முனைப்புடன் வெற்றியைக் காணவேண்டும் என்ற துடிப்புடன் இப்பத்திரிகை வெளிப்பட்டு நிற்கிறது.

அக்டோபர் 29 ம் தேதி "ரம்தான் தாக்குதல்" என்று வந்த தலையங்கம் ஒன்றில், ஈராக்கில் நடைபெறும் சமீபத்திய நிகழ்ச்சிகளை, வியட்நாம் போரில் 1968 ம் ஆண்டு (Tet Offensive) டெட் தாக்குதல் என்பதோடு ஒப்பிட்டு, அது எவ்வாறு அதி அமெரிக்கத் தோல்விக்குத் திருப்புமுனையாயிற்று என்பதை Post சுட்டிக்காட்டுகிறது. வியட்நாம் புத்தாண்டு (டெட்) விடுமுறையின்போது நாடெங்கிலும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்ப்பாளர்களுக்குப் பெரும் இராணுவத் தோல்வியாக இருந்தபோதிலும்கூட, போருக்கான ஆதரவைப் பொதுமக்களிடையே உறுதியாக இழந்தநிலை தோன்றியது என Post வாதிடுகிறது. ஈராக்கிய எதிர்ப்பாளர்களால் இஸ்லாமியப் புனித மாதமாகிய ரம்தானில் தொடக்கப்பட்டுள்ள அத்தகைய தொடர்ந்த தாக்குதல்களும், அதேபோன்ற அரசியல் விளைவுகளின் முக்கியத்துவத்தைக் கொள்ளும் என்ற ஆபத்து உள்ளது எனக்கூறலாம்.

"எதிரிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து பெருகியுள்ள நிலையில், இந்தப்பணிக்குத் தேவையான ஆதாரங்களையும், போர்த் தந்திரமுறைகளையும் அமெரிக்கப்படைகள் தேர்ச்சியான முறையில் வளர்த்துள்ளனரா என்பது ஒரு கேள்விக்குரியதுதான். கூடுதலான படைகள், குறைந்தபட்சம் எதிர்ப்புகளை முறியடிப்பதற்குத் தேவையான குறைந்த படைகளாவது, இருந்தால்தான் உபயோகமாக இருக்கும். கூடுதலான, திறமைவாய்ந்த முறியடிப்பு நடைமுறைகளும், சீரமைப்புப் பணிகளும்தான் எதிரியின் ரம்தான் தாக்குதலைச் சமாளிக்கக் கூடிய பொறுப்பான வழியாகும்'' என்று தலையங்கம் வாதிடுகிறது.

ஒரு வாரம் கடந்தபின் Post மேலும் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டது. ஒன்று பழைய வியட்நாம் போர்ச்சிறைக் கைதியாக இருந்தும், தற்பொழுது கூடுதலான அமெரிக்கப் படைகளை ஈராக்கிற்கு அனுப்பவேண்டும் என்று வாதாடும் அரிசோனா செனட்டர் ஜோன் மக்கையன் (John McCain) பெயரில் வந்துள்ளது.

ஈராக்கும் வியட்நாமும்

"ஈராக் ஒன்றும் வியட்நாம் அல்ல" என்று மக்கையன் அறிவிக்கிறார். "இங்கு மக்கள் ஆதரவுபெற்ற காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் இல்லை. 23 மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் நம்முடைய விரோதிகள் ஒரு சில ஆயிரம் பேர்தான் இருக்கின்றனர். இவர்களும் பெரும்பாலான ஈராக்கியர்களால் வெறுக்கப்படுகின்றனர். வியட்நாமில், ஹோ சி மின், பல பத்தாண்டுகள் செய்து வந்தது போல், இந்தக் கொலையாளிகள் ஈராக்கியத் தேசிய அடையாளத் துணித் தோரணத்தைத் தூக்கிக் கொண்டு வெளிவரமுடியாது'' என்று மக்கையன் கூறுகின்றார்.

(வியட்நாமிற்கும் ஈராக்கிற்கும் பல இணைநிகழ்வுகள் இருப்பதை மறுக்கும் மக்கையனும் மற்றவர்களும், வியட்நாம் விடுதலை வீரர்கள் பெற்றிருந்த மக்களிடையேயான நெறிநம்பிக்கை, ஆதரவு ஆகியவற்றை விடாமல் இப்பொழுது புகழ்வது வினாதமானதாகும். ஆனால், அப்போர் கடுமையாக நடைபெற்று வந்தபொழுது அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், பொதுவாக தேசிய விடுதலை முன்னணி/வியட்கொங்கைப்பற்றி (National Liberation Front (NLF) / Vietcong) புஷ்ஷும், அவருடைய கூட்டாளிகளும் இன்று ஈராக்கிலுள்ள ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராளிகளைப்பற்றி கூறுவதுபோல், பயங்கரவாதிகள், அரசியல் கொலை செய்பவர்கள், கொலையாளிகள், "சர்வாதிகாரி" ஹோ சி மின்னுடைய ஆதரவாளர்கள் எனத்தான் கூறியிருந்தனர்.)

''போரிடவேண்டும் என்ற உறுதியை இழந்ததாலும், ஈடுபட்டுள்ள போரின் தன்மையை அறிந்து கொள்ளாமல் போரிட்டதாலும், குறைந்த அளவேயான கருவிகள் நம்மிடையே இருந்ததாலும்தான் வியட்நாமில் நாம் தோற்றுப் போனோம்'' என்று மக்கையன் மேலும் கூறுகிறார்.

இச்சொற்கள் சிந்திக்க வேண்டியவையாகும். எந்த விதத்தில் அமெரிக்க அரசாங்கம் வியட்நாமில் இராணுவக் கருவிகளைக் குறைத்திருந்தது? 500,000 துருப்புக்களுடன் ஆயிரக்கணக்கான போர் விமானங்கள் நாட்டின் வட, தென் பகுதிகளில் மூழ்கிப்போகும் அளவிற்கு குண்டுகளை வீசித் தள்ளியது. இரண்டாம் உலக்போரில் அனைத்துக் களங்களிலும் போடப்பட்ட குண்டுகளின் தொன் கணக்கைவிடக் கூடுதலான குண்டுகள் வியட்நாமில் வீசப்பட்டது. நேபாம், ஏஜன்ட் ஆரஞ்சு, வேறுசில இராசயன மயக்கம் தரும் பொருட்கள், மிகுந்த தொழில்நுட்பம் இருந்த மின்னணுச் சரிபார்க்கும் கருவிகள், அப்பொழுதைய நிலையில் சிறந்த பொறிகள் என்ற அனைத்துமே ''அடக்காமான ஆயதங்கள்தாம்'' இப்போரில் பயன்படுத்தப்பட்டன.

திறனான ஆயுதங்களான எரிபொருள்-காற்று வெடிகுண்டுகள், (அப்பொழுது முற்றிலும் பயன்படுத்தத் தயாராகவில்லை) மற்றும் அணுகுண்டு, நீராவி அணுகுண்டு ஆகியவைதாம் அமெரிக்க ஆயுதக் கிடங்கிலிருந்து உபயோகிக்கப்படாத ஆயதங்களாகும். இந்தக் குண்டுகள் உபயோகிக்கப்படாததற்கான காரணம் இவை இனக்கொலையாகுமே என்ற வாஷிங்டனின் தன்னைத்தானே தடை செய்துகொண்ட தன்மை என்பதைவிட, அத்தகைய ஆயுதங்களைப் பெற்றிருந்த சோவியத் ஓன்றியம், சீனா போன்றவை பதிலடி கொடுத்துவிடக் கூடிய தெளிவான ஆபத்து இருந்தது என்பதினால்தான் உபயோகிக்கப்படவில்லை.

நிர்வாகத்தின் கருத்தான "இராணுவத்தை ஈராக்கிய மயமாக்கி முடுக்கிவிடல்" என்பது பொருந்தக்கூடிய போர் உபாயம் என்பதை மதிமழுங்கிய கூற்று என்ற பார்வையுடன் மக்கையன் முடித்துள்ளார். "உலகத்தின் தலைசிறந்த போரிடும் ஆற்றல் மிக்க அமெரிக்க இராணுவம், ஈராக்கிய எதிர்ப்பாளர்களைத் தோற்கடிக்க முடியவில்லை என்றால், ஒரு சில வாரங்கள் பயிற்சிக்குப் பிறகு ஈராக்கிய போராளிகள் இதைவிடச் சிறந்து எவ்வாறு செயல்படமுடியும்? என அவர் வினவுகிறார். ஈராக்கில், இன்னும் குறைந்தது ஒரு பெரிய டிவிஷன் படையை புஷ் நிர்வாகம் அனுப்பவேண்டும் என்றும், "அப்பொழுதுதான் நமக்கு, எதிரிகளை மூடித்தள்ளியிருக்கும் சன்னிப்பிரிவு முக்கோணத்தைக் ஊடறுத்து, முறியடிப்பு நடவடிக்கைகளைத் திறம்பட, குவிப்போடு செயல்படுத்தி, எதிரியுள்ள பகுதிகளில் தேடியழிக்கும் பணிகளையும் மேற்கொண்டு, அப்பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய அளவிற்கு மனிதசக்தி இருக்க வேண்டும்'' என்று அவர் முடிவுரையாகக் கூறுகிறார்.

அதே நாளன்று Post ன் முக்கிய அயல்நாட்டு விவகாரங்கள் பற்றிய கட்டுரையாளரான ஜிம் ஹோக்லாண்ட்டும் (Jim Hoagland) தீவிரமான இராணுவப் பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மே 1 ம் தேதியிலிருந்து நவம்பர் 8 வரை 149 அமெரிக்க இராணுவத்தினர்கள் ஈராக்கில் எதிரியின் குண்டுகளால் தாக்கப்பட்டு மடிந்துள்ளபோது, அத்தாக்குதல்களுக்காக பூச்சியமான ஈராக்கியர்கள்தான் தூக்கிலிடப்பட்டனர். அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர் என்று புலம்பி எழுதியுள்ளார்.

இந்தக் கருத்தும் சற்று சிந்திக்கப்பட வேண்டியதாகும். அமெரிக்கப்படைகள்மீது சுடும் ஈராக்கியர்கள் எதற்காகச் சிறையில் அடைக்கப்படவேண்டும்? அல்லது மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்? அமெரிக்கா அவர்கள் நாட்டின்மீது ஆக்கிரமித்துள்ளது. போர் இன்னும் அதிகாரபூர்வமாக முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை. சதாம் ஹுசைனின் அரசாங்கம் சரணடையவில்லை. அது வெறுமே மறைவாகப் போயிருக்கிறது. ஈராக்கிலுள்ள அமெரிக்க உயர் தளபதியான ஜெனரல் ரிக்கார்டோ வாடிக்கையாகக் கூறுவதுபோல், ஈராக்கில் நடக்கும் பூசல்களைப் பற்றி போர் என்றுதான் குறித்துள்ளார். ஆனால், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதமேந்திச் சண்டை இடுபவர்கள் போர்க் கைதிகளாவர். அவர்கள் சர்வதேசச்சட்டத்தின்படியும், ஜெனிவா மரபுகளின்படியும் போர்க்கைதிகளாக நடத்தப்படவேண்டிய உரிமை பெற்றவர்கள் ஆவர்.

நீண்டகாலம், அகமது சலாபியின் ஈராக்கியத் தேசிய காங்கிரஸ் போன்ற அகதிக் கும்பல்களுக்கு ஆதரவாக இருக்கும் ஹோக்லாண்ட், பென்டகன் அச்சக்திகளைப் பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களுடன் போரிடவேண்டும் என்று கூறுகிறார். "ஆக்கிரமிப்பு அதிகாரிகள் உடனடியாக ஈராக்கியப் போராளிகளையும், இதர உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளையும், எதிர்ப்புசக்திகளின் மையத்தானத்திலுள்ள மாஜி-பாத்திஸ்டுகளையும் வேட்டையாடிப்பிடிக்க உதவ அதிகாரம் கொடுக்கப்படவேண்டும்" என்று மேலும் கூறுகின்றார். இது அமெரிக்க ஆதரவில் 1970 களிலும், 1980 களிலும் இலத்தீன் அமெரிக்காவில் தற்கொலைப் படைகளை அமைத்து, இடதுசாரிக் கொரில்லாக்களையும், அரசியல் செயலாளர்களையும் பூண்டோடு அழித்ததின் ஈராக்கியப் பதிப்பை நிறுவ ஏற்பாடு செய்வது போலாகும்.

கொரில்லாப் போராளிகளின் தாக்குதல்கள் குவிந்துள்ள, சன்னி மக்கள் அதிகமாக நிறைந்துள்ள பாக்தாத்திற்கு வடக்கு, மேற்குப்பகுதிகளில் பொதுமக்களின் ஆதரவு திரட்டுவதில் வெற்றியடைய தீவிர ஆர்வமுடைய Post ன் கட்டுரையாளர், அதற்காக இராணுவத்தினர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையைப் பற்றியும் மனம் வெதும்புகிறார். சன்னி மக்கள் அனைவருமே மொத்தமாக இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும். ஏனெனில் "அவர்கள்தான் விருப்பத்துடன் கடல் போலச் செயல்பட்டு எதிர்ப்பாளர்களான மீன்கள் அங்கு நீந்துவதற்கு இடமளித்துள்ளனர்" என்று ஹோக்லாண்ட் வாதிடுகிறார்.

இராணுவத் தலைமையானது சன்னிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே ஒழிய அவர்களை வற்புறுத்தக் காணோம் என்றும், "ஜனநாயகத்தின் வியப்புத்தன்மைகளைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைவிட, தொடர்ந்து கொன்றுகொண்டிருக்கும் மீன்கள் அவர்களிடையே உலவிக் கொண்டிருந்தால், அதற்காக அவர்கள் கொடுக்கவேண்டிய விலையைப்பற்றி இடித்துரைத்தால்தான் உடனடியாக அதிகப்பலன்கள் கிடைக்கும்" என்றும் கேலியுரையுடன் கட்டுரையை முடிக்கிறார்.

ஹோக்லாண்ட் இந்த விலை என்ன என்பது பற்றி விவரமாகக் குறிப்பிடவில்லை. அதற்காகவும், முரட்டுத்தனமான இரத்தவெறிக்கும், முன்பு ஆட்சி நடைமுறையின் தாராளவாதக் கொள்கையை வெளியிட்டு வந்திருந்த New York Times ஐ முதலில் பார்க்கவேண்டும். அதற்குப்பிறகு செய்தி ஊடகப் பேரரசரும், தீவிர வலதுசாரித் தொலைக்காட்சியான Fox, மற்றும் உலகெங்கிலும் நிறைந்துள்ள செய்திப் பத்திரிகைகளின், New York Post உட்பட உரிமையாளராக உள்ள ரூபர்ட் முர்டோக்கிடம் (Rupert Murdoch) செல்லவேண்டும்.

Times பத்திரிகை, அதன் நவம்பர் 16, ஞாயிறு பதிப்பில், அடிக்கடி மற்றும் ஒரு வலதுசாரியான Wall Street Journal தலையங்கப் பக்கங்களுக்கு கட்டுரை அளிக்கும் மாக்ஸ் பூட்டின் (Max Boot) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"வியட்நாமில் நடந்தவற்றோடு இணைத்துப்பார்க்கும் திறனாய்வாளர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடிய" வகையில்தான் ஈராக்கில் இம்மாதம் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டுள்ள இறப்பு இழப்புக்கள் இருக்கின்றன என பூட் தன்னுடைய கட்டுரையைத் தொடக்குகிறார்.

"அந்த முன்னாள் போரிலிருந்து முக்கியமான பாடங்களை, எவ்வாறு எதிர்ப்பாளர்களைச் சமாளிப்பது எனக் கற்றுக்கொள்ள முடியும்" என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.

குறிப்பாக, அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம், வியட்நாமில் பினிக்ஸ் நடவடிக்கை (Operation Phoenix) என்று கூறப்பட்ட பதிலடி முறைகளை இங்கும் பயன்படுத்தவேண்டும் என்று பூட் வாதிடுகிறார். CIA யின் சிறப்புப்படைகள் இணைந்து அப்பொழுது கொலைப்படைகளை அமைத்து வியட்நாமிய விடுதலை இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட பலரை, குறிப்பாக அரசியலில் ஈடுபட்டவர்கள், கிராமத் தலைவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட 26,000 ம் பேருக்கும் மேற்பட்டவர்களை வேட்டையாடிக் கொன்றனர்.

இப்படிப்பட்ட பெரும் மக்கள் படுகொலை போதாதென்று, பூட் சித்திரவதை செய்வதையும் ''ஈராக்கியர்களுக்கு ஜனநாயகம்'' கொண்டு வருவதற்குத் தக்க கருவியாகக் கருதுகிறார். இந்தக் கறைபடிந்த, அழுக்குற்ற காரியங்களைச் செய்வதற்கு ஈராக்கியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பூட் கூறுகிறார்.

ஒரு சந்தேகத்திற்குரிய ஈராக்கியரை தவிர்க்கமுடியாத தாக்குதல் பற்றித் தகவல் வெளியிட வற்புறுத்தும் வகையில், ஒரு இராணுவ லெப்டினட் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதற்கு, அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுந்திய நம்முடைய இராணுவம், போரின் கடினமான தன்மைக்கு சிறிதும் இலாயக்கற்ற சிறுவர் ஸ்கெளட்டிஸ் படைபோலத்தான் (Boy Scoutish) இது என்று பொருமுகிறார் பூட். "சதாம் ஹுசேனின் கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்பட்டுள்ள ஈராக்கியர்கள் அத்தகைய மன உளைச்சல்களைக் காண்பிக்க மாட்டார்கள்" என்று மேலும் தொடர்கின்றார்.

Wall Street Journal, Los Angeles Times, மற்றும் பல முக்கியமான நாளேடுகளில் அடிக்கடி இராணுவத் தொடர்புடைய கட்டுரைகளை எழுதிவரும் கட்டுரையாளரான ஓய்வு பெற்ற கேர்னல் ரால்ப் பீட்டர்சுடைய (colonel Ralph Peters) பத்தி ஒன்றை முர்டோக்கினுடைய New York Post பத்திரிகை நவம்பர் 5 ம் தேதியன்று வெளியிட்டது.

"செய்தி ஊடகம் அறிவிப்பதைவிட மிகச் சிறந்த முறையில்" நம்முடைய ஈராக் போர் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்ற வழக்கமான பல்லவியுடன் தொடங்கும் தன்னுடைய கட்டுரையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் அமெரிக்கப் படைகள் மிகப்பரந்த, சக்திவாய்ந்த எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதால், இரத்தம் சிந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால்தான் வெற்றியடைய முடியும் என்று அதற்கான திட்டத்தையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

"முதலில், பயங்கரத்தை வெளிக்கொண்டு வருவதுடன், கொடிய செயல்கள் புரியக் களித்து மகிழும் சன்னி-அரேபியர் சிறுபான்மையினரை கொஞ்சிக் கொண்டிருக்கும் முறையை நிறுத்தவேண்டும். மிகவெகுளியான வகையில் ஒருபுறத்துச் செயலாக, தடிகொண்டு தாக்காமலேயே இருக்கும் ஆக்கிரமிப்புக் கொள்கையின் கூறுபாடுகளை மாற்றவேண்டும்" என பீட்டர்ஸ் வாதிடுகிறார்.

"குறைந்தபட்சம் ஒரு பயங்கரவாதப் பாதுகாப்பிடத்தையாவது கடினமாகத் தாக்க வேண்டும் என்ற உள்வெறி நமக்கிருந்து, அதைச் செயல்படுத்தினால்தான் அது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும். அதற்கு பல்லுஜாதான் (Fallujah) வெளிப்படையான இலக்காகிறது" என்று கூறுகின்றார்.

"அங்குள்ள மக்கள் தொடர்ந்து நம்முடைய விரோதிகளுக்கும், சிறந்த ஈராக்கியக் குடிமக்களுடைய விரோதிகளுக்கும் புகலிடம் கொடுத்து ஆதரித்து வருவார்களேயானால், நாம்தான் கடுமையான இராணுவச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அந்த நகரத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கான பணத்தை வாரி இறைப்பதற்குப் பதிலாக --இத்தகைய லஞ்சமுறைகள் செயல்படவில்லை-- நாம் மின்சாரவசதியைக் குறைத்து, தண்ணீரைக் கடுமையாகக் குறைத்து வினியோகம் செய்து, நகரத்தை அணுகுவதற்கு கடும் தடைகளைப் போட்டு, உணவும் அங்கு ரேஷன் அட்டை மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று மேலும் கூறுகின்றார்.

இப்பட்டினி அடக்குமுறைத் திட்டம், கிளீவ்லாந்து, ஓஹையோ, அட்லான்டா, ஜோர்ஜியா அளவுள்ள 450,000 பேர் கொண்ட ஒரு நகரத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இது சாதாரண மக்களைப் பொறுத்த வரையில் எத்தகைய, கணிக்கக் கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணரலாம்.

ஈராக்கின் மொத்த மக்கட் தொகையான 23 மில்லியனில், 5 மில்லியன் வாழும் சன்னி ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் பொருளாதார இடுக்கிப்பிடிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பீட்டர்ஸ் வாதிடுகிறார். இதற்கு ஈராக்கின் எண்ணெய் வள வருவாய் ஏனைய மக்கட் தொகுப்பிற்கு மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தையும் கூறியுள்ளார். வடக்குப்புற எண்ணெய் வளங்கள் குர்துகளுக்கும், தெற்குப் புறத்திலுள்ளவை ஷியைட்டுக்களுக்கும் கொடுக்கப்பட்டு, "ஆயுதமற்ற, வளமற்ற வறியவராக" சன்னி மக்கள் நாட்டின் நடுப்பகுதியில் வாழ வழிவகை செய்யவேண்டுமென்று அவர் கூறுகிறார்.

இறுதியாக, ஈராக்கில் கிடைத்த பரந்த படிப்பினையும் பீட்டர்ஸ் எடுத்துக் காட்டுகிறார். அமெரிக்கா சந்தேகத்திற்கிடமின்றி வருங்காலத்தில் பல நாடுகளின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்யும். ஆகையால், அதற்குத் தகுந்தவாறு இனி கண்டிப்பாகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

"நமக்கு முன்பிருந்த ரோமானியர், பிரித்தானியர் ஆகியோரிடமிருந்து நாம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள ஏற்கனவே காலதாமதம் ஆகிவிட்டது. தண்டனை கொடுக்கும் படையெடுப்புக்களின் மதிப்பை நாம் உணரவேண்டும்" என்று முழங்கும் பீட்டர்ஸ், "பிறருக்குப் பாடம் புகட்ட ஒருவருக்குத் தண்டனை கொடுப்பது இக்காலத்தில் நடைமுறையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், ஆட்சிக்கலையில் அது காலம் கடந்து பலன் கொடுக்கும் திறைமைமிகுந்த கருவிகளுள் ஒன்றாக இருக்கிறது. எங்கு உனக்கு அன்பு கிடைக்கவில்லையோ, அங்கு உன்னைக் கண்டு பிறர் அஞ்சுமாறு நடந்துகொள்" என்று மேலும் கூறுகின்றார்.

ரோமானியர்கள் கார்த்தேஜிற்கு (Carthage) எதிராக நகரத்தைத் தரைமட்டமாக அழித்தும், நிலங்களில் உப்பைப் போட்டு விளைச்சல் வராமல் செய்தவற்றை இங்கு செயல்படுத்த வேண்டும் என்று பீட்டர்ஸ் வாதாடுகிறாரா? அல்லது, 1920 களில் பிரிட்டிஷார் ஈராக்கில் கிளர்த்தெழுந்த பழங்குடி மக்களிடம் கையாண்ட முறைகளைக் கையாளக் கூறுகிறாரா? அப்பொழுது காலனி குடியேற்ற மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சேர்ச்சில் போர் விமானங்களையும், இயந்திரத் துப்பாக்கிகளையும் பயன்படுத்திப் பாலைவனச் சோலைகளை குண்டுவீச்சிற்கு உட்படுத்தி, விஷவாயுத் தாக்குதலை எதிர்ப்பாளர்கள்மீது உபயோகிக்க உத்தரவு இட்டதைக் கூறுகிறாரா?

பீட்டர்ஸ் தனது உதாரணப் பட்டியலில், சமீபத்தில் மிக இழிவான, இரண்டாம் உலகப் போரின்போது "தண்டனைப் படையெடுப்பை" மேற்கொண்ட நாஜி ஆட்சிக்கு எதிராகப் போராடிய, எதிர்ப்புப் போராளிகளுக்கு எதிராக குற்றத்தை உணரவைக்கும் தண்டனையென அளிக்கப்பட்ட கொடுமைகளை அடுக்கடுக்காகச் சுமத்தியதை விட்டுவிட்டார். ஆனால், கெஸ்டாபோவும், வாபென் எஸ் எஸ் (Gestapo and the Waffen SS) போலத்தான் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved