World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament expands army mandate in Afghanistan

ஜேர்மன் நாடாளுமன்றம் ஆப்கானிஸ்தானில் தனது படைகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனுமதி

By Martin Kreickenbaum
6 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

இது தற்செயலாக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. அக்டோபர் 24 ந் தேதி ஜேர்மன் நாடாளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கமும் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி எதிர் அணியும் இணைந்து ஆப்கனிஸ்தானில் ஜேர்மன் படைகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இதற்கு மூன்று நாட்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணங்களில் ஆப்கான் அரசாங்க படைகளுக்கும், ஆக்கிரமிப்பு அமெரிக்கப் படைகளுக்கும் எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டுக் கொண்டு வருவதால் ஐ.நா விற்கு தனது அதிகாரிகளையும், அலுவலர்களையும் திரும்பப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதவியிலிருந்து விரட்டப்பட்ட தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள நான்கு மாவட்டங்களில் மீண்டும் நிர்வாகத்தை தங்கள் கைவசம் எடுத்துக் கொண்டிருப்பதாக ஆப்கானிஸ்தானில் ஐ.நா குழுவிற்கு பொறுப்பு ஏற்றுள்ள துணைப் பொதுச்செயலாளர் ஜேன் மேரி குகன்னோ குறிப்பிட்டார். கடந்த சில வாரங்களில் தலிபான் ஆதரவாளர்களும், அல்கொய்தா அமைப்பினரும் ஆப்கான் அரசாங்க படைகளுக்கும், ஆக்கிரமிப்பு படைகளுக்கும் எதிராக போர் புரிவது, மிகப்பெரும் அளவில் பெருகிக் கொண்டிருப்பதால் ''மிகவும் ஆபத்தானவை'' என்று ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஐ.நா பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா-துணை பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

இப்படி தென் பகுதியில் மோதல் நிலவரம் முற்றிக்கொண்டு வருவதால் வடக்குப் பகுதியில் உள்ள குண்டூஸ் பிராந்தியத்தில் ஜேர்மன் படைகள் நீடிப்பதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே காபூலில் 1800 ஜேர்மன் படையினர் பணியாற்றி வருகின்றனர். தற்போது புதிதாக 230 ஜேர்மன் படைகள் குண்டூஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் அங்கு பணியாற்றும் அமெரிக்கப் படையினருடன் இணைந்து கொள்வர். இவர்கள், வடக்கிலிருக்கும் அமெரிக்க படையினரை ஈராக்கிற்கு மேலும் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு அனுப்புவதற்கும், தெற்கிலிருக்கும் தலிபான்களை தாக்கி பின்தள்ளுவதற்கும் உதவியாக இருப்பர்

காபூலுக்கு வெளியே உள்ள பிராந்தியத்தில் அரசியல் மற்றும் நிர்வாக சீரமைப்பு பணிகளுக்கு ''பாதுகாப்பு அம்சத்தை'' கருத்தில் கொண்டு அதிகாரப்பூர்வமாக ஜேர்மன் படைகள் ஆப்கனிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று பூசி மெழுகிடப்படுகின்றன. ஆனால் உண்மையிலேயே படைகள் அனுப்பப்பட்டதன் நோக்கம் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் படைகளுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டு வருவதை சமாளிப்பதற்கும், வாஷிங்டனுடன் அரசியல் சமரசம் செய்து கொள்வதை முக்கிய குறிக்கோளாகக் கொள்வதற்கும் இப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

செப்டம்பர் 2 ந் தேதி ஜேர்மன் காபினெட் அமைச்சர்கள் தமது படைகளின் பணியை விரிவுபடுத்த முடிவு செய்தனர். அதற்கு பின்னர் ஜனாதிபதி புஷ் பகிரங்கமாக ''ஜேர்மன் இராணுவம் ஆப்கானிஸ்தானில் செய்து வருகின்ற மகத்தான பணியை'' பாராட்டினர். இது, ஈராக் போர் தொடங்கிய பின்னர் ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட நெருக்கடியை போக்குகின்ற வகையில் அமைந்தது. இதற்கு பின்னர் அதிபர் சுரோடர் புஷ்ஷை சந்தித்துப் பேசினார். ஜேர்மனியில் ஈராக் போருக்கு பரவலாக மக்கள் எதிர்ப்பு இருப்பதால், ஈராக்கில் குறைந்தளவே ஜேர்மன் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. ஆதலால், அதனை ஈடுகட்டுகின்ற வகையில் ஆப்கானிஸ்தானில் கூடுதலாக படைகளை அனுப்புவதற்கு ஜேர்மனி முடிவு செய்தது.

அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியதும் ஆப்கானிஸ்தானில் கூடுதலாக ஜேர்மன் துருப்புக்கள் பணியாற்றுவதற்கான செயல்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டது.

ஜேர்மன் மக்கள் இதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக ''சுதந்திரத்தை நிலைநாட்டும்'' அமெரிக்க துருப்புக்களின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜேர்மன் படைகள் பங்கெடுத்துக் கொள்ளாது என்றும், மாறாக சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின் (ISAF - International Security Assistance Force) ஒரு பகுதியாக இத்துருப்புக்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகுவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை, ISAF பணிகளை காபூல் நகரத்திற்கு அப்பால் ஆப்கானிஸ்தான் முழுவதற்கும் விரிவுபடுத்தியாகவேண்டும். ஆதலால், அக்டோபர் 13 ந் தேதி ஐ.நா வில் பணியாற்றும் ஜேர்மனியின் தூதர் ஜென்டர் பிளேகர் இதற்கான அனுமதியைப் பெற்றார். இதற்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு தீர்மானம், ஜேர்மன் இராணுவத்தின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாக அமைந்திருந்தது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் ஓரளவிற்கு சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 24 ந் தேதி நாடாளுமன்றம் ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு உடன்பாடு தெரிவித்தபோது, ஒரு சில உறுப்பினர்களே இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். தாராண்மை FDP மற்றும் இரண்டு ஜனநாயக சோசலிச கட்சி உறுப்பினர்களே இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடியும் முன்னரே ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதிக்கு 27 அதிரடிப்படையினர் விமானத்தில் பயணமானார்கள். 2004 ல் ஆப்கானிஸ்தான் செல்லவிருக்கும் 230 படையினரின் முன்னேற்பாடுகளை செய்வதற்காக இந்த முன்னோடி படைப்பிரிவு அனுப்பப்பட்டிருக்கின்றது. புதிய ஐ.நா கட்டளைப்படி ISAF ற்கு ஒதுக்கப்பட்டுள்ள எட்டு ஆப்கானிஸ்தான் பிராந்தியங்களில் ஒன்றிற்கு ஜேர்மன் படைகள் அனுப்பப்படுகின்றன.

குண்டூஸ் மாகாணத்தில் 120,000 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பதாக்சான், பாக்லான் மற்றும் டிக்கர் பகுதிகள் என்பன இராணுவ நடவடிக்கை பகுதிக்குள் வருகின்றன. இந்தப் பகுதிகள் ஜேர்மனியின் பவேரியா மற்றும் ஹெஸ் பிராந்தியங்களுக்கு இணையான பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்த மிகப் பரவலான மலைப்பாங்கான பகுதிகள், ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் காபூல் அரசாங்க அதிகாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், சிவிலியன் உதவி அமைப்புகளுக்கு பாதுகாப்பு தருகின்ற வகையிலும் இந்த 230 ஜேர்மன் படைகள் பணியாற்ற வேண்டும்.

ஆனால், இது மட்டுமல்ல. நாடாளுமன்ற கட்டளைப்படி ஆப்கானிஸ்தான் முழுவதிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதனைவிட மேலும் 220 படையினர்கள் பணியாற்ற வேண்டும். அத்துடன் இவர்கள் அங்கு தேர்தல் நடப்பதற்கு உத்திரவாதம் செய்து தரவேண்டும். ஆப்கானிஸ்தான் அரசியலில் தற்போது குழப்பம் நிலவி வருவதுடன், ஒவ்வொரு நாளும் முன்னாள் யுத்தப் பிரபுக்களுக்கும் மாகாண அதிபர்களுக்கும் இடையே மோதல்கள் முற்றிக்கொண்டு வருகின்றன. எனவே இதைப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் ஜேர்மனி, தனது துருப்புக்களை அனுப்ப முடியும். இதற்காக புதிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஸ்டிரக் சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்களுக்கு தகவல் தருவதற்கு மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை நடவடிக்கை

குண்டூஸ் பிராந்தியத்தில் மட்டுமே ஜேர்மன் படைகள் பணியாற்றுவதாக வைத்துக்கொண்டாலும் அது தற்கொலை நடவடிக்கையாகத் இருக்கும். ஆப்கான் மக்கள் ஜேர்மன் படைகள் மீது மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றும், இப்படைகள் ''ஆக்கிரமிப்பு படைகள் அல்ல மாறாக தங்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்கள்'' என்றும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது மோசடியானது. காபூலில் ஜூன் மாதம் ஜேர்மன் இராணுவப் பிரிவினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு, 29 பேர் காயம் அடைந்த நிகழ்ச்சி நடக்காதது போல் பாதுகாப்பு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே அங்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைதான் நிலவுகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் உதவி அமைப்புக்கள் செஞ்சிலுவை சங்கம் உட்பட ஜேர்மன் படைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், வெளிநாட்டு துருப்புக்களின் வருகையானது அவர்கள் மீதான தாக்குதலுக்கு வழிகளை எற்படுத்திவிடும் என்பதினாலாகும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படையினரும் இதே நிலையில் தான் உள்ளனர். அவர்களது முகாமிற்கு வெளியிலேயே குண்டு வெடித்ததால், இதனைத் தெளிவாக புரிந்து கொண்டு தங்களது நடமாட்டத்தை குறைத்துக் கொண்டுள்ளனர்.

முன்னணி அதிரடிப்படை அதிகாரியான கேர்னல் Kurt Helmut Schiebold என்பவர் கூறுகையில் ''அந்தப் பகுதியில் நிலவரம் அமைதியாக உள்ளது ஆனால் அது நிலையானது இல்லை'' என்றார். பொதுமக்கள் கருத்து என்னவென்றால் தலிபானுக்கு எதிராக நடாத்தப்பட்ட போர் ஆப்கானிஸ்தான் சமூகத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவில்லை என்பதாகும். மிகப்பெரும்பாலான வீதிகள் சிதைக்கப்பட்டுவிட்டன. குடிநீர் விநியோகம் கிடையாது. அமெரிக்க இராணுவம் தனது கிளாஸ்டர் சர குண்டுகள் மூலம் நீர்மின்சார நிலையத்தை தகர்த்து விட்டதால் குண்டூஸ் நகரத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இந்த நிலையத்துக்கு வீசப்பட்ட நான்கு கிளாஸ்டர் சர குண்டுகளில் இரண்டு வெடிக்கவில்லை. வெடிக்காத குண்டுகளும், மற்றும் வெடித்த குண்டுகளில் இருந்து வெளியேறிய சின்னஞ்சிறு குண்டுகள் அந்தப் பகுதி முழுவதும் பரவலாக கிடப்பதால் நீர்மின்சார நிலையத்தை திரும்ப கட்டுவது வாழ்வா சாவா என்கிற ஜீவ மரணப் போராட்டமாக உள்ளது.

இந்தப் பிராந்தியத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் சிவிலியன் கவர்னரான ஹாசி அப்துல் லத்தீப் ஆகும். இப்பகுதியின் இராணுவத் தளபதியான ஜெனரல் தாவூத் தனிப்பட்ட முறையில் 30,000 பேர்களைக் கொண்ட தனி இராணுவத்தை தன்கையில் வைத்திருக்கிறார். அவர் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மது காசீம் பாஹிமின் நெருக்கமான நண்பராக இருக்கின்றார். காபூலில் உள்ள மத்திய அரசாங்கத்தில் ஹமீத் கர்சாய்க்கு, இந்த பாஹீம் எதிரி என்று கருதப்படுகிறது.

அத்தோடு லத்தீப்பும், தாவூத்தும் நெருக்கமாக இணைந்து போதைப் பொருட்கள் வியாபாரத்தில் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வர்த்தகத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தங்களது சொந்த இராணுவத்திற்கு செலவிட்டு வருகிறார்கள். குண்டூஸ் பிராந்தியமானது ஓபியம் (opium) என்ற போதைப்பொருளை வளர்க்கும் பிரதான பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த ஆண்டு 7,000 தொன் ஓபியம் உற்பத்தியில், சாதனையை எட்டியிருப்பதாக கருதப்படுகின்றது. குண்டூஸ் நகரத்திலிருந்து தாஜிகிஸ்தானுக்கு போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுவதுடன், இப்பகுதிதான் போதைப் பொருட்களுக்கான முக்கியமான வடக்கு தெற்கு வர்த்தக வழித்தடமாக அமைந்திருக்கின்றது.

எனவே இந்தப் பிராந்திய அரசியல் ஆதிக்கத்தில் போதைப் பொருட்கள் விற்பனை கேந்திர முக்கியத்துவம் பெற்றிருப்பதால், ஜேர்மன் படைகள் போதைப் பொருட்கள் வர்த்தகத்தில் தலையிடக்கூடாது என்று கருதப்படுகின்றது. இந்த வர்த்தகத்தில் குறிப்பாக ஓபியம் வர்த்தகத்தில் தலையீடு எதையும் செய்வார்களானால், ஜேர்மன் படைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று ஜெனரல் தாவூத் எச்சரிக்கை செய்திருப்பதை Spiegel online வெளியிட்டிருக்கின்றது. ஜேர்மனியின் FDP கட்சியின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரதிநிதி Werner Hoyer கருத்து தெரிவிக்கும் போது, ஜேர்மன் துருப்புக்கள் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு ''சர்வதேச அளவில்'' பாதுகாப்பு தரும் என்று கூறியிருக்கிறார். இப்படி இரண்டு செல்வாக்கு மிக்க அரசியல் அதிகாரம் படைத்த பிரபுக்களுக்கு எதிராக கர்சாயின் அதிகாரத்தை எப்படி வலுப்படுத்துவது என்பது தெளிவாக்கப்படவில்லை.

அருகாமையில் உள்ள மசார்- இ- ஹெரீப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அப்துல் ரஹீத் தோய்த்துங் என்பவராவர். போதைப் பொருட்கள் வியாபாரத்தில் லாபம் சம்பாதித்து கொண்டிருக்கும் இவர், ஜெனரல் தாவூத்திற்கு நீண்டகாலமாக எதிரியாக செயல்பட்டு வருகிறார். எனவே இருவருக்கும் இடையே பகிரங்க இராணுவ மோதல்கள் எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் எனக் கருதப்படுகின்றது. அத்துடன், தோய்த்துங்கிற்கும் அவரது மற்றொரு எதிரியான அட்டாவிற்கும் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக அண்மையில் முடிவிற்கு வந்திருக்கின்றது. இவர்களுக்கிடையில் மிகவும் பலவீனமான போர்நிறுத்தம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே குண்டூஸ் பிராந்தியத்தில் மிக விரைவில் ஜேர்மன் துருப்புக்கள் மிகப்பெரிய மோதலில் சிக்கிக் கொள்ளும்.

ஜேர்மனியின் சொந்த பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு அதன் துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முந்தைய ஜேர்மனியின் காலனி ஆதிக்க கொள்கையில் ஆப்கானிஸ்தான் ஏற்கெனவேயே முக்கிய இடம் பெற்றிருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த நெருக்கமான பொருளாதார உறவுகள் 1979 ம் ஆண்டு சோவியத் யூனியனின் படையெடுப்பிற்கு பின் சிதைந்தன. 1996 ல் தலிபான் பதவிக்கு வந்ததும் அந்த உறவுகள் மீண்டும் சீரமைக்கப்பட்டன.

ஜேர்மன் முதலாளி வர்க்கத்திற்கு ஆப்கானிஸ்தான் ஒரு பொருளாதார ஆதிக்க நுழைவு வாயிலாக அமைந்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் மூலமாக காஸ்பியன் பிராந்திய பகுதியில் கிடைக்கின்ற வளமான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களில் ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் புக முடியும். அதைத் தொடர்ந்து பக்கத்து நாடுகளில் புகுந்து அதற்கு எல்லாம் மேலாக சீனாவரை தனது பொருளாதார நலன்களை ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் விரிவுபடுத்தி செல்லமுடியும். இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் ஜேர்மன் படைகள் வெறும் தற்காப்பு தன்மை கொண்டவையாக இருந்தன. தற்போது இப்படைகள் வெளிநாட்டு கொள்கைக்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், உலகம் முழுவதிலும் பேர்லினின் செல்வாக்கை வளப்படுத்தவும், வர்த்தக நலன்களை வளர்க்கவும் ஜேர்மன் துருப்புக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Top of page