WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Bush's visit to London: Is a state provocation being prepared?
புஷ் லண்டன் விஜயம்: அரசே ஆத்திர மூட்டலுக்கு தயாரிப்பு செய்கிறதா?
By Julie Hyland
18 November 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
லண்டனுக்கு இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யு. புஷ் விஜயம் மேற்கொள்வதையொட்டி
முன்என்றுமிருந்திராத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அரசி எலிசபெத்தின் விருந்தினராக புஷ் நவம்பர் 18-முதல் 19-வரை பக்கிங்காம் அரண்மனையில்
தங்கி இருப்பார். அவரது பயண நிகழ்ச்சி நிரலில் நவம்பர் 18-ந்தேதி பிரதமர் டோனி பிளேயரை டெளனிங்
தெருவில் சந்திப்பதும் உள்ளடங்கும். அப்போது ஈராக் போருக்கு எதிராகவும் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஆக்கிரமிப்பு
செய்து கொண்டிருப்பதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி லண்டனுக்கு வெளியில்
ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டும் -அதுவும் டோனி பிளேயரின்
Sedgfield நாடாளுமன்ற தொகுதியில் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அரசுமுறைப் பயணம், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால்
அண்மைக்கால சம்பவங்கள் இரண்டு தலைவர்களுக்கும் அதன் அரசியல் முக்கியத்துவத்தை அதிகமாக்கி இருக்கிறது. ஈராக்
மக்களால் எதிர்ப்பு அதிகரித்து வருவதும் இறப்பு எண்ணிக்கை பெருகிவருவதும் ஈராக்கை காலனியமுறையில் கைப்பற்றுவதற்கு
உள்நாட்டு எதிர்ப்பைத் தூண்டி விட்டிருக்கின்றன, இது புஷ்ஷின் பயண நிகழ்ச்சி நிரலை பெருமளவில் வெட்டிக் குறைத்திருக்கிறது.
இச்சுற்றுப் பயணம் பிரிட்டனில் போருக்கு எதிரான மக்களின் ஆத்திரத்தை மீண்டும்
கிளறிவிட்டிருக்கின்றது. சென்ற பெப்ரவரி 15-ந்தேதி சர்வதேச எதிர்ப்பின் ஒரு பகுதியாக லண்டனில் 20 லட்சத்திற்கும்
மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். ஈராக் போரில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் துருப்புக்களின் உறவினர்கள் புஷ்-ன்
விஜயத்தை கண்டித்திருக்கின்றனர் மற்றும் இரண்டு தலைவர்களுக்கும் எதிராக பல்லாயிரக்கணக்கானோர் கண்டனப் பேரணியில்
இணைந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட மக்களது இயல்பான ஜனநாயக உணர்வுகளை கொச்சைப்படுத்துகின்ற வகையில்
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசாங்கங்களின் பதில் விளைவு கெடுநோக்குடைய குரலொலியாக இருக்கின்றன. இத்தகைய
கண்டனங்களை ஒரு கவசமாக பயன்படுத்தி பயங்கரவாதிகள் நடவடிக்கைகளில் இறங்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக
எச்சரிக்கை செய்யும் செய்திகள் ஊடகங்களில் பெருமளவிற்கு இடம் பெற்றிருக்கின்றன. இதில் மிக குறிப்பிடத்தக்க ஓர்
அம்சம் என்னவென்றால், பிரிட்டனின் காவல் துறையினரே பகிரங்கமாக கண்டன பேரணிகளுக்கு புஷ் மீது அல்கொய்தா
நடத்த இருக்கின்ற தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவித்திருக்கின்றன.
இது சம்பந்தமாக லண்டன் ஸ்கொட்லன்ட் யார்ட் மூத்த அதிகாரி ஒருவர்
Times, நாளேட்டிடம், ''சில போர் எதிர்ப்பு
கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மீது அழுகிவிட்ட பழங்களை விட்டெறிவதைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை,
எங்களது கவலை எல்லாம் இப்போது இங்கு மிக ஆபத்தான சக்திகள் இருக்கக் கூடும்'' என்பதுதான் என்று கூறி இருக்கிறார்.
அல்கொய்தா இயக்கம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று போலீஸ் அதிகாரிகள் கருதி
அதை கண்டனப் பேரணிகளோடு தொடர்புபடுத்துவது ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு
ஆயத்தம் செய்து வருகிறதோ, என்ற கடுமையான கவலையை எழுப்பியிருக்கிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் என்று
கூறப்படுவது தொடர்பாக எந்தவிதமான விபரங்களும் வெளியிடப்படவில்லை. பிரிட்டனின் உள்துறை அலுவலகம் அது பற்றி
கருத்துக் கூற மறுத்துவிட்டது. ஆனால் லண்டன் பெருநகரம் முற்றுகையிடப்பட்டது போன்ற ஒரு நிலையில் உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 19 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படுகின்றன. ஸ்கொட்லன்ட் யார்ட்டின் அனைத்து
ஆயுதம் தாங்கிய பிரிவுகளும் மற்றும் 5,000 போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்,
எல்லோருடைய எல்லா விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புஷ்ஷிற்கு பாதுகாப்பாக 250 நன்கு ஆயுதம் தாங்கிய ரகசிய போலீஸ் அதிகாரிகளும்
150 தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றும் 50 வெள்ளை மாளிகை உதவியாளர்களும் அவருக்கு இரண்டு பக்கங்களிலும்
அணிவகுத்து வருவார்கள். புஷ் இரண்டு 747 மற்றும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜம்போ விமானங்களில் லண்டனுக்கு
புறப்பட்டு வருகிறார். பிரிட்டன் வந்து சேர்ந்ததும் புஷ்சை பின் தொடர்ந்து சிறப்பு ஹாக்-ரக ஹெலிகாப்டரும், 20
ஆயுதம் தாங்கிய மோட்டார் வாகனங்களும் அணிவகுத்து வரும்.
செய்தி அறிக்கைகளின் படி, ஆரம்பத்தில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் லண்டன் சுரங்க
ரயில் போக்குவரத்தை மூடிவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இது சம்பந்தமாக
Observer, ''பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜனாதிபதியைச்
சுற்றி "சுத்திகரிக்கப்பட்ட மண்டலத்தை" உருவாக்குதல் உள்பட, பல்வேறு சலுகைகள் வழங்க ஒப்புக்கொண்டனர்,
மற்றும் மத்திய லண்டனில் சாலைகளை மூடிவிடுவதற்கு போலீசார் சம்மதித்தனர்" என்று அறிவிக்கிறது.
வைட்ஹால் (Whitehall)
பகுதிக்கு மேலே விமானம் எதுவும் பறக்காத மண்டலம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பகுதியில் பறக்கும்
"அடையாளம் கண்டுகொள்ள இயலாத எந்த விமானத்தையும் சுட்டுத் தள்ளுவதற்கு
RAF தயாராக நிற்கும்" என்று
Mirror பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
வடக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த அல்கொய்தா ஆதரவாளர்களின் எச்சரிக்கையை தொடர்ந்து பிரிட்டன் இரண்டாவது
உச்சபட்ச பயங்கரவாத முன்எச்சரிக்கை படுத்தலில் வைக்கப்படிருக்கின்றது.
அறிவிப்பு வந்த நொடிப்பொழுதில் சாலைப் போக்குவரத்துக்களை நிறுத்தி விடுகின்ற உரிமை
போலீசாருக்கு உள்ளதாக போலீசும் அறிவித்துள்ளது. பிரிட்டனின் மூத்த போலீஸ் அதிகாரியான ஜோன் ஸ்டீவன்ஸ் அமெரிக்க
ஜனாதிபதியின் விஜயத்திற்கான பாதுகாப்பு "முன்என்றுமிருந்திராதது" என்று ஒப்புக்கொண்டிருக்கிறார், ஆனால் இது
அவசியம், ஏனெனில் "ஒன்று, பயங்கரவாதிகள் மிரட்டலின் அளவு, மற்றொன்று ஜனாதிபதி விஜயத்தின் தன்மை" என்று
அவர் கூறினார்.
இத்தகைய சூழ்நிலைகளில், ஏற்கனவே கொந்தளிப்புக்கள் முற்றிக்கொண்டு செல்வதால்
போலீசாரோ அல்லது இதர சில பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க அரசு முகவாண்மைகளோ, கும்பலில் ஆத்திரமூட்டல்
நடவடிக்கையை தூண்டி விடுகின்றவர்களை புகுத்தி அவர்கள் மூலம் பாதுகாப்பு தொடர்பான ஒரு சம்பவத்தை உருவாக்கி
விடக்கூடும் என்பது முற்றிலும் சாத்தியமான ஒன்றுதான். இத்தகைய சம்பவத்தை இரண்டு வகையான நோக்கங்களுக்காக
பயன்படுத்திக் கொள்ள முடியும். போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை, பயங்கரவாத குழுக்களோடு சேர்த்து
இனங்காண பயன்படுத்திக்கொள்ள முடியும் மற்றும் ஈராக்கை ஆக்கிரமித்து கொண்டிருப்பதற்கும், மேலும் ''பயங்கரவாதத்திற்கு
எதிரான போரை'' நடத்துதல் என்ற சாக்கில் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டு வருகின்ற அதிகரித்துவரும்
தாக்குதல்களை மூடி மறைக்கவும் சட்டப்பூர்வமான முகமுடி கிடைக்கும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அதை நடத்துவதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு படுமோசமான
பாதிப்புக்கள் ஏற்படுகின்ற சாத்தியக் கூறுகள் உண்டு. செப்டம்பர்-11 நிகழ்ச்சிக்கு பின்னர் இயற்றப்பட்ட 2001- பயங்கரவாதத்திற்கு
எதிரான, குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், போலீஸ் அரசோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் அதிகாரங்களை
பாதுகாப்பு சேவைகளுக்கு கூடுதலாக தந்திருக்கின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டன் பெருநகரம் வெளியில் விவரிக்க முடியாத அவசர
நிலை பிரகடனத்தில் வைக்கப்பட்டிருப்பது போன்ற நிலையில் உள்ளது. உள்துறை செயலாளரின் விருப்புரிமைப்படி, சட்டத்தின்
44-வது பிரிவின் கீழ் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டிடங்களையும், தனிமனிதர்களையும் 28 நாட்கள் வரை
தீவிரமாக சோதனையிட அதிகாரம் வழங்கியிருக்கின்றது.
பெப்ரவரி-15-ந்தேதி போருக்கு எதிராக மிகப்பெரிய கண்டனப் பேரணி நடத்தப்படுவதற்கு
முன்னர் ஹூத்ரூ சர்வதேச விமான நிலையத்திலும், லண்டனில் சில பகுதிகளிலும் 450-க்கு மேற்பட்ட துருப்புக்களும் கூடுதலாக
1700-க்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த
நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை
பிரிட்டன் குடிமக்கள் அல்லாத பிறநாட்டு குடிமக்களை பிரிட்டனில் உள்துறைச் செயலாளர்
''சந்தேகத்திற்குரிய சர்வதேச பயங்கரவாதிகள் அவர்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து'' ஏற்படக்கூடும்
என்று கருதுவாரானால் அப்படிப்பட்டவர்களை எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லாமல் அல்லது நீதிமன்ற விசாரணைகளை
அனுமதிக்காமல் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமென்றாலும் சிறையில் வைத்திருக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கின்றது.
ரகசிய வாக்கு மூலங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட முடியும். அதனை கைது செய்யப்பட்டவரோ அல்லது அவரது
வழக்கறிஞரோ பார்க்க முடியாது மற்றும் சவால்செய்யவும் முடியாது. இதனடிப்படையில் பதினாறு வெளிநாட்டு தேசியவாதிகள்
பிரிட்டனின் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம், பத்து பேர் எந்த வித குற்றச்சாட்டும் இல்லாமல் இரண்டு
வருடம் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது மனநல மருத்துவமனையில் வைக்கப்பட்டனர், தடுப்பு
காவலுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை இழந்தனர்.
இன்னும் கூடுதலாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போலீசுக்கு தடுத்து, சோதனையிட
மற்றும் கைது செய்ய அதிக அதிகாரம் வழங்குகின்றது. லண்டனில் செப்டம்பர் மாதம் நடந்த சர்வதேச ஆயுதங்கள்
கண்காட்சியின்போது, கண்காட்சி அரங்கிற்கு வெளியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ததில் 150-க்கும் மேலானோர்
கைது செய்யப்பட்டனர். ஒரு மாணவர் மற்றும் தனிநிலை புகைப்பட பத்திரிகையாளர் உட்பட பலர் இந்த சட்டப்படி
கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதுகிற தன்மை அளவு ஆகியவற்றிற்கு "தகவுப்
பொருத்தம்" என்ற வகையில்தான் போலீஸ் நடவடிக்கைகள் இருந்தன என்ற அடிப்படையில் இந்த இரண்டு பேர் தடுப்புக்காவலுக்கு
எதிரான வழக்கில் தோல்வியுற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி விஜயத்தை ஒட்டி எழுப்பப்பட்டுள்ள பரபரப்பு, மீண்டும் அதே சட்டப்பிரிவுகள்
ஆர்ப்பாட்டம் செய்ய உத்தேசித்துள்ளவர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படலாம், என்ற சாத்தியக்கூறுகளை அதிகரித்திருக்கின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்படும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.
இந்தக் கவலைகள் மேலும் அதிகரிக்கின்ற வகையில் பிரிட்டனின் உள்துறை அலுவலகம் மிகவும்
ஆபத்தான ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியுடன் பாதுகாப்பிற்காக வருகின்ற ஆயுதம்
தாங்கிய சிறப்பு அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை ''தற்செயலாக சுட்டுவிடுவார்களானால்'' அவர்களுக்கு சட்டப்படி
வழக்குத் தொடர்வதற்கான விதிகளிலிருந்து விலக்கு தரப்படும் என உள்துறை அறிவித்திருக்கிறது.
இத்தகைய விதிவிலக்கு பற்றி ஆராய்வதற்கு அவசியம் என்ன? ஆயுதம் தாங்கிய அதிகாரிகள்
ஏன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பக்கத்தில் வருகிறார்கள்? இந்த அறிக்கைகள் ஆர்ப்பாட்டம் செய்ய உத்தேசித்திருப்பவர்களை
அச்சுறுத்துவதற்கா? அல்லது இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்பவர்கள் அடுத்த பல நாட்களில் அவர்களின்
பாதுகாப்பு தொடர்பாக மிக விழிப்புணர்வுடன் இயங்க வேண்டும் என்று அவர்களை எச்சரிப்பதற்கா?.
Top of page
|