World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : ICFI

David North addresses Sri Lankan Trotskyists on the 50th anniversary of the ICFI

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மத்தியில் டேவிட் நோர்த் உரை

By a correspondent
21 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டத்தில், தலைநகர் கொழும்பில் நவம்பர்16ம் தேதி உரை நிகழ்த்தினார். ஒரு நெருக்கடி நிலையைத் தூண்டி விட்ட ஜனாதிபதியின் அச்சுறுத்தலால் ஒரு வாரத்திற்கு முன்னரே இத்தீவில் தூண்டப்பட்ட அரசியல் நெருக்கடியின் மத்தியில் இவ் ஒன்றுகூடல் இடம்பெற்றது.

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதி மற்றும் யாழ்ப்பாணம், தெற்கில் அம்பலாங்கொட மற்றும் ஹிக்காடுவ, மற்றும் மத்திய மலைமாவட்டங்களான கண்டி, ஹட்டன் மற்றும் பண்டாரவல்ல உட்பட, தீவு முழுவதும் இருந்து வந்து பேராளர்கள் கொழும்பில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு மற்றும் கோட்பாடுகள் பற்றிய விரிவான உரையை வழங்கிய நோர்த்திற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் செயலாளர் விஜே டயஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் இதயங்கனிந்த வரவேற்பை நல்கினார். நோர்த்தின் உரை சிங்கள மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தனிச்சிறப்பான தன்மை பற்றி சுட்டிக்காட்டி நோர்த் உரையைத் தொடங்கினார். "உலகில் இன்று வேறெந்த அரசியல் இயக்கம் அதன் முழு வரலாற்றையும் மதிப்பீடு செய்ய வல்லதாய் மற்றும் வெளிப்படையாய் அது நிறுவப்பட்ட கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களுக்கு அதன் தற்போதைய நடைமுறையை தொடர்புபடுத்த வல்லதாய் இருக்கிறது?" என அவர் கேட்டார்.

அரசியலமைப்பு நெருக்கடியை அடுத்து இலங்கையில் ஆளும் வட்டங்களில் உள்ள தடுமாற்றத்தைப் பற்றி நோர்த் குறிப்பிட்டார். ஆயினும், அவர் கொழும்பு செய்தித்தாளில் காணப்பட்ட "வெறிமயக்கம் மதிமயக்கம்" என்ற தலையங்கம் இலங்கையின் அரசாங்கத்திற்குப்போலவே புஷ் நிர்வாகத்திற்கும் பொருந்த முடியும் என்று குறிப்பிட்டார்.

அவர், அமெரிக்கா முன்னர் இருந்திரா ஆயுதத் தளவாடங்களை வைத்திருக்கலாம், ஆனால் அதுதாமே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. "ஜோர்ஜ் புஷ் அவரது அறியாமையில் மற்றும் அவரது கொடுவெறியில் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளே உள்ள ஆளும் தட்டின் அரசியல் மற்றும் புத்திஜீவித திவாலுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். சர்வதேச சட்டத்தை மீறி மற்றும் பொய்கள், தவறான வழிகாட்டல்களின் அடிப்படையில் கடந்த மார்ச்சில் ஒரு போர் தொடங்கப்பட்டது, அவை முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டது." எனக் கூறினார்

அமெரிக்க ஆளும் வர்க்கம் "கடந்தகால வரலாற்றுப் படிப்பனைகளின் அறியாமையில் அதன் கொள்கைகள் விரிவுபடுத்தப்பட முடியும் என்றும் செய்தி ஊடகங்கள் என்னென்ன வலியுறுத்தி அறிவிக்கின்றனவோ அவை உண்மை என்றும் நம்புகிறது. ஆனால் வரலாறும் உண்மையும் தவிர்க்கவியலாது அறியாமை மற்றும் பொய்களுக்கு எதிராக தங்களின் பழிவாங்கலைத் தீர்த்துக் கொள்கின்றன" என்று நோர்த் விளக்கினார்.

உலகம் முழுவதும் அரசியல் மற்றும் சமூகப் பதட்டங்களைத் தூண்டி விடும் உலகப் பொருளாதாரத்தில் உள்ள புறநிலை முரண்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். உற்பத்தி சக்திகளின் பூகோள அபிவிருத்தியானது தனிச்சொத்துடைமை மற்றும் தேசிய அரசு கட்டமைப்பு இவற்றுடன் பொருந்த முடியாததாக ஆகிவிட்டது. பூகோளமயப்படுத்தப்பட்ட உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கிற்குள் ஆசியாவை ஒருங்கிணைத்தலின் பின்னே அசாதாரணமான தொழில்நுட்ப அபிவிருத்திகள் இருந்தன, ஆனால் மக்கள் தொகையின் ஒரு துளி சிறுபான்மைதான் அதன் பலாபலன்களை அறுவடை செய்தன.

உலக நெருக்கடியின் மிகவும் செறிவான வெளிப்பாடு அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்பில் காணக்கிடந்தது என்று நோர்த் விளக்கினார். அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழே உலக முதலாளித்துவத்தை மறுஒழுங்கமைக்கவும் ஸ்திரப்படுத்தவும் எடுத்த பைத்தியக்கார முயற்சிகள் என்னவாக இருந்தன, என அவர் கேட்டார். ஏற்கனவே ஈராக்கில் எதிர்ப்பு இருந்து வந்தது மேலும் அந்த எதிர்ப்பு பழமையான வடிவங்களான கெரில்லாப் போராட்டம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மட்டும் எடுக்காது. தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய அரசியல் அணிசேர்க்கை உருவாகும், அதற்கு ஒரு அரசியல் வேலைத்திட்டம் மற்றும் தெளிவான முன்னோக்கு தேவைப்படும்.

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் மத அடிப்படைவாத மற்றும் பேரினவாத அடிப்படையில் தீர்க்கப்பட முடியாது; பயங்கரவாத வழிமுறைகள் மூலமும் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க முடியாது.

நாம் தொழிலாள வர்க்கத்தின் பலத்தை எமக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளோம். மாபெரும் அரசியல் பிரச்சினைகள், சிறிய மற்றும் மறைந்து இயங்கும் குழுக்களில் வேலை செய்யும் தனிமைப்படுத்தப்பட்ட சதியாளர்களால் தீர்க்கப்பட முடியாது. தேவைப்படுவது என்னவெனில், பரந்த மக்களின் அரசியல் கலாச்சாரம் மற்றும் நனவினை உயர்த்துதல் ஆகும். அதனால்தான் நாம் தொழிலாள வர்க்கத்தை திசைவிலகச்செய்யும், குழப்பும் மற்றும் பயன்படுத்திக்கொள்ளும் பயங்கரவாத அமைப்புக்களை சமரசமற்று எதிர்க்கிறோம்.

"பயங்கரவாத இயக்கங்கள், தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளின் ஒடுக்கப்பட்ட பகுதியினரதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வேலைத் திட்டத்தை வழங்காதது மட்டுமல்லாமல், பரந்த மக்களுக்கு வேண்டுகோளும் விடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கார் குண்டு வெடிப்பானது, தொழிலாள வர்க்கத்திற்குள்ளே அதன் வரலாற்றுக் குறிக்கோள்கள் பற்றிய புரிதலை சிறிதுசிறிதாகப் புகட்டுதற்கு முயற்சிக்கும் ஒரு அரசியல் வேலைத் திட்டத்திற்கு நேரெதிரான பிற்போக்கான போக்கு ஆகும். அல்கொய்தா மற்றும் அதேபோன்ற இயக்கங்களின் பயங்கரவாத வழிமுறைகள், அவை மனமுறிவுகொண்ட தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற உண்மையிலிருந்து எழுகின்றன. அவர்களின் நடவடிக்கைகள், தற்போதுள்ள அதிகாரக் கட்டமைப்பில் மறு ஏற்பாட்டிற்கான நீண்டகால பேச்சுவார்த்தைகளில் பல்வேறு பேரம்பேசும் உத்திகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

"அப்பாவி மக்களை படுகொலை செய்யும் பயங்கரவாதத் தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக கல்வி புகட்டும் நிகழ்ச்சிப்போக்கை குறுக்கே வெட்டுகின்றது மற்றும் சீர்குலைக்கின்றது. அவர்கள் முதலாளித்துவ அரசின் மிகவும் பிற்போக்கான சக்திகளின் கைகளில் பகடைக்காயாக இருக்கின்றனர். மேலும் அவர்கள் போலீஸ் மற்றும் உளவுத்துறை சூழ்ச்சிக்கையாளலுக்கு தம்மையே கொடுத்துவிடுகின்றனர். ரியாத்தில் தொழிலாளர் இல்லங்களில் குண்டு வெடித்ததன்மூலம் அல்லது இஸ்தான்புல்லில் இரு யூத வழிபாட்டுத்தலத்திற்கு வெளியே குண்டுகளை வைத்ததன் மூலம் யார் லாபம் அடைந்தது? ஈராக்கில் போருக்கு துருக்கியில் கணிசமான எதிர்ப்பினை அமெரிக்க ஐக்கிய அரசுகள் எதிர்கொள்ளும் நிலைமையின் கீழ், இஸ்தான்புல்லில் குண்டுகள் வெடிக்கின்றன, அப்பாவி மக்களைக் கொல்கின்றன."

நான்காம் அகிலத்தின் அடிப்படை

நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்குத் திரும்புகையில், அனைத்துலக் குழுவானது கடந்த அரை நூற்றாண்டின்பொழுது அனைத்துவிதமான அரசியல் போலிவடிவங்ளுக்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது என்று நோர்த் குறிப்பிட்டார்.

"கடந்த ஐம்பது ஆண்டுகளின் பெரும்பகுதி, திருத்தல்வாதிகள், பப்லோவாதிகள் புரட்சிகர மார்க்சிசத்திற்கு பல்வேறு அமைப்புக்களை ஒரு மாற்றீடாகப் புகழ்ந்தேற்றினர் மற்றும் எமது இயக்கம் வரலாற்று ரீதியாக வேர்விட்டிருந்த வேலைத்திட்டத்தினை ஏளனம் செய்ததை நாம் கேட்டோம். ஆனால் நமது அனைத்து விமர்சனங்களும் என்னவாக ஆயின?"

"நாம் இப்பொழுது எமது வரலாற்றின் நீடித்த ஒரு காலப்பகுதியை ஆய்வு செய்ய முடியும் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி புறநிலைரீதியான மதிப்பீட்டைச் செய்ய முடியும். நாம் ஒரு கேள்வியை முன்வைக்க முடியும்: 1953ல் அனைத்துலகக் குழு நிறுவப்பட்ட கோட்பாடுகள் வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிரூபணம் ஆகி இருக்கின்றனவா? அரை நூற்றாண்டுக்கு முன்னர் சூடான அரசியற்போராட்டத்தில் தயாரிக்கப்பட்ட பத்திரங்களை ஒருவர் வாசிக்கும் பொழுது, அவற்றின் அசாதாரணமான முன்கூட்டிய அறிவியல் பார்வையால் அசந்துபோவார்."

1938ல் நான்காம் அகிலமும் 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நிறுவப்பட்டதில் பொதிந்திருந்த வரலாற்றுப் போராட்டத்தை நோர்த் மீளாய்வு செய்தார். "முப்பது வருடங்களுக்கு முன்னர் 1923ல் இடது எதிர்பு நிறுவப்பட்டதிலிருந்து, ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அபிவிருத்திக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் மற்றும் அதன் வேலைத்திட்ட திரித்தல்கள் மற்றும் திரும்புதல்கள் ஆகியவற்றை ஒரு ஈவிரக்கமற்ற விமர்சனத்திற்கு கீழ்ப்படுத்தினார். மார்க்சிச மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களின் ஒவ்வொரு அடிப்படைப் பிரச்சினையும் பெருமுயற்சியுடன் வெளிப்படுத்தப்பட்டது: அனைத்திற்கும் மேலாக, சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாத நோக்குநிலைக்கு எதிராக, இருபதாம் நூற்றாண்டின் சமூகப் புரட்சியின் சர்வதேசத் தன்மை நன்கு புடம்போடப்பட்டது.

காலனித்துவ நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகரப் பாத்திரம் ஆற்ற முடியும் என்ற கூற்றுக்கு ட்ரொட்ஸ்கியின் நிராகரிப்பு, 1927ல் ஷங்காயில் கோமிண்டாங்கால் கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதில் துன்பகரமாக நிரூபணமானது. ஜேர்மனியில், "சமூக பாசிசம்" என்ற அதிதீவிர இடது தத்துவத்திற்கு கோமின்ரேர்னின் திடீர் ஊசலின் விளைவாக ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தமை, அத்துடன் கம்யூனிஸ்ட் அகிலத்திற்குள்ளே எந்தவிதமான விமர்சனமும் இல்லாமையும் சேர்ந்து, ட்ரொட்ஸ்கியை, மூன்றாம் அகிலம் சமூகப் புரட்சியின் உலகக் கட்சியாக முடியாதது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. ஒரு புதிய சர்வதேசக் கட்சி கட்டப்பட வேண்டி இருந்தது. சர்வதேச தொழிலாள வர்க்கம் பாதிப்புக்குள்ளான தோல்விகளின் அளவு ஒரு புதிய ஏகாதிபத்தியப் போருக்கு அடித்தளமிட்டிருந்ததைப் புரிந்து கொண்ட அதேவேளை, ட்ரொட்ஸ்கி அவரது பரந்த வரலாற்று முன்கணிப்பில் நன்னம்பிக்கையை தொடர்ந்து கொண்டிருந்தார். இந்த தோல்விகளின் அளவு, தொழிலாள வர்க்கமானது தொடர்ந்து ஒரு புரட்சிகர வர்க்கமாக இருந்து வருவதை தடைசெய்துவிடவில்லை.

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம்

1953ல் நான்காம் அகிலத்திற்குள்ளே பிளவுக்கு வழிவகுத்த அரசியல் பிரச்சினைகளை நோர்த் மீளாய்வு செய்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், போரின் முடிவில் அரசியல் அபிவிருத்தியால் எடுக்கப்பட்ட வடிவத்தை ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்திருக்கவில்லை என்ற கருத்துரு ஒன்று நான்காம் அகிலத்தின் பகுதிகளுக்குள்ளே தோன்றியது." இந்தத் தட்டினர் ட்ரொட்ஸ்கி "உலகப் புரட்சி" பற்றி அவர்களுக்கு உறுதி அளித்திருந்தார் எனக் கூறினர். 1943-45ல் ஒரு புரட்சிகர எழுச்சி இடம்பெறுகையில், ஸ்ராலினிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஒன்றிணைந்த தாக்குதலினால் பத்தில் ஒரு பங்கான ட்ரொட்ஸ்கிச அணியினருக்கு, இந்த எழுச்சி ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது என அர்த்தப்படுத்தியது.

நோர்த் தொடர்ந்தும், பப்பலோவாலும் மண்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட சந்தர்ப்பவாத போக்கின் அடிப்படை பார்வையை ஆராய்கையில், அது யுத்தத்திற்கு பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல், சமூக உறவுகளுக்கு உறுதியாக அடிபணிய ஆரம்பித்தது என குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும், பப்பலோவாதிகளுக்கு சமூக யதார்த்தமானது, ஒரு பக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் மறுபக்கத்தில் சோவியத் அதிகாரத்துவமாக இருந்தது என குறிப்பிட்டார். அவர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை முற்றுமுழுதாக நிராகரித்தனர்.

பப்பலோவாதிகள் கூடுதலாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பங்கையும், பலத்தையும் மிகை மதிப்பீடு செய்தனர். கிழக்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதார கட்டமைப்பை, ஸ்ராலினிசம் எதிர்ப்புரட்சிகரமானது என்ற ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு பிழையானது என்பதற்கான சாட்சி என கூறினர். அதிகாரத்துவத்தின் ஒரு பகுதி ''சுய சீர்திருத்த'' போக்கினுள் செல்லும் என அவர்கள் விவாதித்தது மட்டுமல்லாது, அது உண்மையில் சோசலிச புரட்சிக்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறும் எனவும் குறிப்பிட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வரலாற்றின் "கெட்ட மனிதன்" தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என நோர்த் விளக்கினார். மிசேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் நான்காம் அகிலத்தை காட்டிக் கொடுப்பதை ஆரம்பித்து வைக்கவில்லை. இருவரும், ஒரு சமயம், நான்காம் அகிலத்திற்காக கணிசமான தியாகங்களைச் செய்திருந்தனர். இன்னும் சொல்லப் போனால், காலனித்துவ நாடுகளில் ஸ்ராலினிசத்திற்கும் முதலாளித்துவ தேசியவாத தலைவர்களுக்கும் ஒத்துழைப்பு முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய மறுஸ்திரத்தன்மையால் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட பெரும் அழுத்தத்தின் ஒரு உற்பத்திப்பொருளாக இருந்தது. இந்த அழுத்தங்கள் 1951-52ல் லங்கா சமசமாஜ கட்சிக்குள்ளே ஸ்ராலினிச ஆதரவு கன்னை தோன்றியதில் எதிரொலித்தது, அது கட்சியில் இருந்து பிளவுற்றது.

"நான்காம் அகிலத்திற்குள்ளே எழுந்த பிரச்சினைகள் உலக அளவில் வர்க்க உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிரொலித்தது: ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கும் பலமும், விவசாய மக்கள் மத்தியில் தீவிரமயமாதல், புதிய நடுத்தர வர்க்கத்தின் தோற்றம் ஆகிய இவ்வனைத்துப் போக்குகளும் நான்காம் அகிலத்தின் அரசியல் திசைவழி மீது அவற்றின் பாதிப்பைக் கொண்டிருந்தன. இந்த புதிய இயல்நிகழ்ச்சிக்கு சரியான அரசியல் பதில் மார்க்சிச இயக்கத்தின் போராட்டங்களின் முழு வரலாற்றினை ஆக்கபூர்வமாக மீள கிரகித்துக் கொள்வதில் மட்டுமே காணமுடியும்."

ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கும் எகிப்தில் நாசர் மற்றும் அல்ஜீரியாவில் பென்பெல்லா போன்ற முதலாளித்துவ தலைவர்களுக்கும் பப்லோ மற்றும் மண்டேல் நோக்குநிலையின் பின்னே இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் கட்சிகளைக் கட்டுவதில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் திறனில் ஆழமான நம்பிக்கையற்ற தன்மையாக இருந்தது என்று நோர்த் கூறினார். மேலும், அவர்கள் ஸ்ராலினிஸ்டுகளுக்கும் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும், இந்த அரசியல் சக்திகள் கொண்டிராத புரட்சிகர திறன்களை அளித்தனர். இந்த முன்னோக்கில் இருந்து பெறப்பட்ட அரசியல் முடிவுகள் என்ன? ட்ரொட்ஸ்கிச கட்சிகள், ஸ்ராலினிச கட்சிகளுக்குள்ளும் முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்குள்ளும் தங்களையே கரைத்துக் கொண்டன.

1951க்கும் 1953க்கும் இடையில், இந்த அரசியல் நிலைப்பாடு விரிவுபடுத்தப்பட்டபொழுது, நான்காம் அகிலத்தில் அரசியல் போராட்டம் வெடித்த பொழுது, இந்த நிலைப்பாட்டுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஏறக்குறைய நான்காம் அகிலத்தின் அரசியல் கலைப்பைக் கோரிக்கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாக ஆரம்பித்தது. அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜேம்ஸ். பி. கனனால், நவம்பர் 16, 1953 அன்று சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு பகிரங்கக் கடிதம் விடுக்கவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை அமைக்கவும் வழிவகுத்தது.

லங்கா சமசமாஜக் கட்சியின் "நடுநிலைமை"

1953 பிளவில் கனனின் தந்திரோபாயங்கள் பற்றி பல விமர்சனங்கள் செய்யப்பட்டிருந்ததை நோர்த் சுட்டிக்காட்டினார். ஆனால் பெரும்பாலான பகுதி, அவை முக்கிய பிரச்சினையைத் தவிர்க்கவே உதவின: பகிரங்கக் கடிதத்தில் தொடங்கி வைத்த அரசியல் நிலைப்பாடுகள் சரியா அல்லது தவறா? லெஸ்லி குணவர்தனா மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி தலைமை பற்றிய கனனின் நிலைப்பாட்டையும் அதன் அரசியல் விளைபயன்களையும் அவர் ஒப்பீட்டடிப்படையில் வேறுபடுத்திக்காட்டினார்.

"பப்லோவின் நிலைப்பாட்டின் விளைபயன்களை, இலங்கையின் அனுபவங்களிலிருந்தே குணவர்தனா நன்கு அறிவார். ஆனால் இலங்கைத் தலைமை, அதற்குப் பதிலாக, நான்காம் அகிலத்தை வதைத்துக் கொண்டிருந்த போராட்டத்தின்பால் மிகநடுநிலைமை போக்கை ஏற்பதைத் தேர்ந்தெடுத்தது. ஏன்? அது இலங்கைக்குள் தோன்றிக் கொண்டிருந்த சமூக சக்திகளுக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் ஒத்துழைப்பில் எதிரொலித்தது. அரசியல் ரீதியாக ஆபத்தான சமரசத்திற்கான தயாரிப்பாக அது இருந்தது."

பப்லோ வாதத்தை எதிர்த்த போராட்டத்தில் கனன் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியுடன் சேர்ந்துகொள்ளுதலானது, ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தை ஆழப்படுத்துவதை அர்த்தப்படுத்தி இருக்கும் மற்றும் உறுப்பினர்களை ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத் திட்டம் மற்றும் வரலாற்றில் மறு கல்வியூட்டல் செய்திருக்கும் என நோர்த் கூறினார். "லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள் அதை அறிவார்கள். ஆனால் இலங்கையில் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த அரசியல் உடன்படிக்கைகளுடன் எப்படி அது பொருந்தும்? அவர்களைப் பொறுத்த மட்டில் அவர்களின் சர்வதேச அரசியல் கடப்பாடுகளை விடவும் அவர்களின் பாராளுமன்ற கன்னை பற்றிய பிரச்சினைதான மிகவும் தீர்க்கமானதாக இருந்தது.

"உண்மையில், இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவர்களால் புரட்சிகரப் பதிலை தயாரிப்பதற்கும் அதனை விரிவுபடுத்துதற்கும் முடிந்திருக்கக் கூடிய ஒரேயொரு வழி சர்வதேச பிரச்சினைகளின் அடிப்படையில்தான் இருந்தது. பதிலாக, அவர்கள் நடுநிலை நிலைப்பாட்டை பின்பற்ற தேர்ந்து எடுத்தனர்: 'ஆம் பப்லோவின் நிலைப்பாடு தவறுதான், ஆனால் கனன் அந்த அளவுக்கு திடீர் உணர்ச்சிக்கு ஆட்படாதிருந்திருந்தால், விஷயங்களை ஒரு அமைப்பு ரீதியான முறிவுக்கும் தள்ளிச்செல்லாதிருந்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும்.' "

நோர்த் 1953ல் கனனால் வலியுறுத்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளை மீளாய்வு செய்தார்: "முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேசிய மட்டத்தில் நனவுபூர்வமாக தொடுக்கப்பட்டாக வேண்டும். முதலாளித்துவம் எந்தவொரு நாட்டிலும் முடிவாக தோற்கடிக்கப்பட முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள போராட்டங்கள் கட்டாயம் ஒரு சர்வதேச மூலோபாயத்தினால் வழிநடத்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேச மூலோபாயத்திற்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும். மேலும் அரசியல் கட்சிகள், தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளுபவர்கள் கூட, இந்த அடிப்படை உண்மையை மறுப்பவர்கள் அனைவரும் அடிப்படையில் பிற்போக்கானவர்களே.

"மேலும், இந்த சர்வதேச அடிப்படையில் கட்டாயம் விரிந்து வரும் போராட்டத்திற்கு நனவான அரசியல் தலைமை தேவைப்படுகிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடி எப்படி உக்கிரமாக இருந்தாலும் சரி, இலங்கையைப் போல, ஏதாவது ஒரு நாட்டில் முதலாளித்துவ வர்க்கம் எப்படி பலவீனமாக இருந்தாலும் சரி, தொழிலாள வர்க்கம் அது ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்குத் தேவையான வேலைத் திட்டம், மூலோபாயம், மற்றும் தந்திரோபாயங்களை தன்னெழுச்சியாக சிந்தித்து விரிவுபடுத்த முடியும் என நம்புவது தவறாகும். சோசலிச புரட்சியின் அரசியல் தலைமை ஒரு நனவான விஞ்ஞானப் பணியாகும். இதுதான் இருபதாம் நூற்றாண்டின் பிரதான படிப்பினை ஆகும்.

"இந்த நிலைப்பாட்டிலிருந்து, 1953ல் கனன் வலியுறுத்தியது போல், நான்காம் அகிலத்தின் காரியாளருக்கு வேறு எந்த அரசியல் கட்சியும் பதிலீடாக சேவை செய்ய முடியாது. இங்குதான் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் பப்லோவாத திருத்தல் வாதத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு இருக்கிறது. பப்லோவாதமானது - ஸ்ராலினிஸ்டுகள் மத்தியில், முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மத்தியில்- நான்காம் அகிலத்திற்கு மாற்றீடுகளை முடிவற்ற முறையில் தேடுவதில் ஈடுபட்டிருந்தது. இந்த வகையில் பப்லோவாதிகள் எமது சகாப்தத்தின் முக்கிய பணியை -தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிச காரியாளரைக் கட்டி எழுப்பல் மற்றும் பயிற்றுவித்தலை - கைவிட்டு விட்டனர்."

ஒருங்கிணைந்த உலக இயக்கம்

அவரது உரையின் கடைசிப் பகுதியில், நோர்த், 1961-63ல் பப்லோவாதிகளுடனான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மறு ஐக்கியத்திற்கு எதிரான போராட்டம் உள்பட, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் நீண்ட போராட்டத்தில் முக்கிய திருப்புமுனைகளை மீள்பார்வை செய்தார். அவர் 1953ல் லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்பாட்டின் அரசியல் கிளைத்தல்களுக்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தினார். அது அரசியல் கோட்பாடுகளைப் பலியிட்டு பாராளுமன்ற சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மேலும் மேலும் ஆக்கிரமித்திருந்தது. லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் .ஆர்.டி.சில்வா 1957ல் சீனப் பிரதமர் சூ என் லாயை சந்தித்த பொழுது, மாவோயிச சிறைகளில் நலிந்து கொண்டிருந்த சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் எதிர்காலம் பற்றிக் குரல் எழுப்பக் கூட தவறி விட்டார். 1964 அளவில், லங்கா சமசமாஜக் கட்சித் தலைமை ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் காட்டிக் கொடுத்திருந்ததோடு, திருமதி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்தது. இம் முடிவு அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான விளைபயன்களை ஏற்படுத்த இருந்தது.

நோர்த், பிரிட்டனில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமையின் அடுத்தடுத்த அரசியல் சீரழிவு பற்றியும் 1985-86 பிளவில் உச்சநிலைக்குச்சென்ற அரசியல் போராட்டம் பற்றியும் குறிப்பிட்டார். அனைத்துலகக் குழுவிலிருந்து முறித்துக்கொண்ட அனைத்து கன்னைகளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும் பல்வேறு தேசிய விடுதலை இயக்கங்களினதும் மேலோட்டமான பலத்தின் மீது தங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தனர், அவை சில வருடங்களிலேயே தகர்ந்து விட்டன. சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, ஏகாதிபத்தியத்திற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்ற இயக்கங்களின் நேரடி ஒத்துழைப்பால் பின்தொடரப்பட்டது. மற்றொரு புறம், அனைத்துலக் குழுவோ, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுதல் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்ளல் மீதாக தன்னை தளப்படுத்திக் கொண்டது. இந்த வகையில், அது கடந்த 18 ஆண்டுகளாக அடைந்த முன்னேற்றங்களுக்கான அடிப்படையை அமைத்தது.

சோசலிச சமத்துவக் கட்சிகளை ஸ்தாபித்ததனூடாகவும் உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்ததனூடாகவும் அனைத்துலகக் குழுவின் செல்வாக்கு பாரிய அளவில் விரிவடைந்து வருதலைப் பற்றி சுட்டிக்காட்டி நோர்த் முடிவுரைக்கு வத்தார். "அனைத்துலக குழு நிறுவப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவால் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அதன் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கான நமது கடப்பாட்டுறுதியை மீள உறுதிப்படுத்தவும், இதன் படிப்பினைகளை உள்ளீர்க்கவும், மற்றும் இந்த வரலாற்றில் சோசலிச புத்தி ஜீவிகளையும் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினரையும் பயிற்றுவிக்கவும் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் விலகி இருந்து விட்டு இப்பொழுது திருப்பிப் பார்ப்பதற்காக இதற்கு வரவில்லை. நாம் இன்று ஒருங்கிணைந்த உலக இயக்கமாக தொழிற்படுகின்றோம். உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத் திட்டம் பற்றிய எமது ஆய்வினை உலக சோசலிச வலைத் தளம் மூலம் சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கத்திற்குள் எடுத்துச் செல்வதற்கு ஒவ்வொருநாளும் நாம் போராடுகிறோம்.

"50 ஆண்டுகளுக்கு முன்னர், 1953ல் அனைத்துலகக் குழு தோன்றிய பிளவிலிருந்து அனைத்தும் ஊற்றெடுக்கும் என்று ஒருவரும் எதிர்ப்பார்திருந்திருக்க முடியாது. உண்மையில் அந்தப் போராட்டத்தில் செயலூக்கமாக பங்கேற்ற அனைவரும் இப்பொழுது காட்சியில் இருந்து மறைந்து விட்டனர். ஆனால் அவர்கள் போராடிய அரசியற் கோட்பாடுகள் தற்போதைய காலகட்டத்தில் ஆழமான அரசியல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது மற்றும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் நாம், உண்மையில், மார்க்சிசத்தின் அடிப்படையில் மிகப்பலமான அரசியல் கட்சிகளை இந்த உலகில் கட்டி எழுப்புவது சாத்தியம் என்பதை விளக்கிக் காட்டுவோம்.

"இதுதான் இந்த நிறைவு விழாவின் அர்த்தம். நாம் இப்போது பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த முழு அனுபவத்தையும் புதிய நூற்றாண்டுக்கு கொண்டு செல்வதிலும் எமது சர்வதேச இயக்கத்தின் ஒரு பரந்த விரிவாக்கத்தின் அடிப்படையாக இதனை ஆக்குவதிலும் ஆழமான பெருமிதத்தையும் திருப்தியையும் கொள்வதற்கு நமக்கு அனைத்து உரிமையும் உண்டு என நான் நினைக்கிறேன்."

Top of page