World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

An international socialist strategy to oppose militarism and war

Statement of the Socialist Equality Party (Britain)

இராணுவவாதத்தையும் போரையும் எதிர்ப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம்

சோசலிச சமத்துவக் கட்சி (பிரிட்டன்)

19 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதி, ஜோர்ஜ் டபுள்யூ புஷ் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியால் கீழ்கண்ட அறிக்கை விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இவ்வறிக்கையானது வலைதளத்தில் PDF- கோப்பிலும் இடப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையை கணினிகளிலிருந்து இறக்கம்செய்து, முடிந்தவரை மிகப் பரவலாக அதனை விநியோகிக்குமாறு எமது வாசகர்களையும் ஆதரவாளர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பல்லாயிரக் கணக்கான மக்கள் லண்டன் தெருக்களில் அணிவகுத்து வந்து ஜனாதிபதி, ஜார்ஜ் டபுள்யு புஷ்ஷின் அரசுமுறைப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் ஈராக் மீது அமெரிக்காவும், பிரிட்டனும், படையெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டதைக் கண்டிக்கும், கண்டன பேரணிகளை நடத்தவிருக்கின்றனர். ஈராக் மீது சட்ட விரோதமாக நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அந்த நாட்டையும், அதன் மக்களையும் தொடர்ந்து அடிமைபடுத்திக் கொண்டிருப்பதையும் நோக்கி எழும் பல பத்துலட்சக் கணக்கான மக்களால் உணரப்பட்டுவரும் கோபாவேசத்திலிருந்து புஷ்ஷையும் பிரதமர் டோனி பிளேரையும் பாதுகாப்பதற்காக மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் பவுன்கள் செலவிடப்பட்டு வருகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன், பிரிட்டனின் முதலாளித்துவம் கொண்டிருக்கும், கூலிப்படை உறவுகளை பேணிக் காப்பதற்காக உழைக்கும் மக்களது ஜனநாயக உரிமைகள் எதிர்த்து துவைத்து மிதிக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான போலீசார் மற்றும் நூற்று-க் கணக்கான ஆயுதம் தாங்கிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் லண்டன் நகரத்தில் தெருக்களில் அணிவகுத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதோடு மனநிறைவு கொள்ளாமல், நிர்வாகத்தினர் தலைநகரில், பெரும்பாலான பகுதிகளை வாகனப் போக்குவரத்துக்களை முடக்கிவிட்டனர் மற்றும் கொடுமையான அதிகாரங்களைப் பயன்படுத்தி வாகனங்களையும் தனிமனிதர்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர்.

புஷ்-சும், பிளேயரும் நிழலில் ஒளிந்து மறைந்து நடமாடுகின்ற மனிதர்களாக மாறிவிட்டனர், மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமே இருவரும் கலந்து கொள்கின்றனர், இப்படி நடமாடுவது பிரிட்டனில் நிலவுகின்ற அரசியல் உறவுகளை, போதிய அளவு சான்றுகாட்டி விளக்குகிறது. புஷ்-மீது, எந்த அளவிற்கு வெறுப்பு வளர்ந்திருக்கின்றது என்றால், வழக்கமாக, திறந்த வாகனங்களில், நடத்தப்படும் அணிவகுப்பு அல்லது நாடாளுமன்ற உரைக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை, ஏனென்றால், வழியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகொட்டி பரிகாசம் செய்யக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக.

இவ்வளவு ஆழமான மக்கள் வெறுப்பிற்கு இலக்கான புஷ் விஜயத்தை பிளேயர் அரசாங்கம் சகித்துக் கொண்டிருப்பது பொது மக்களது அரசியல் விருப்பங்களை துச்சமாக மதிக்கிறது என்பதன் காரணமாகவே ஆகும். இந்த நிகழ்ச்சிகளில் தற்போதைய நிலைமையை ஏற்கெனவே உணர்ந்த்தற்கான பிரமைக்கான குறிப்புக்கள் இருக்கின்றன. ஈராக் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பின் பொழுது, புஷ்ஷின் சட்ட விரோதப்போருக்கு, "தார்மீக" அடிப்படையில் முலாம் பூசுவதற்கான முயற்சியில் பிளேயர் ஈடுபட்டார். ஈராக்கில் இல்லாத பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக பொய் மூட்டைகளை உள்ளடக்கிய ஆவணங்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதன் குறிக்கோள் பொது மக்களை ஏமாற்றி அவர்களை போருக்கு ஆதரவாக சூழ்ச்சியுடன் திருப்பவும் உண்மையான போருக்கான நோக்கங்களை மூடிமறைப்பதற்காகவும் இருந்தது, இது ஈராக்கிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை மையப்படுத்தி இருந்தது.

இன்றையதினம், போருக்கான சாக்குபோக்குகள் அத்தனையும் பொய்யானவை என்று அம்பலத்திற்கு வந்து விட்டன. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை ஏகாதிபத்திய காலனியவாதத்தைப் புதுப்பிக்கும் முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று வெளிப்படுத்திக் காட்டி இருக்கின்றது.. இது ஈராக்கிற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றது மற்றும் சர்வதேச அளவில் பொது மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது பிளேயர் மீண்டும் ஒருமுறை தன்னால் சமாதானம் கூறமுடியாததற்கு சப்பைக் கட்டு சமாதானம் கூற முன்வந்திருக்கிறார்.

அரசுப் பயணத்தின் பகட்டாரவாரம் மற்றும் விழாவின் மூலம், மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள இரத்தம் தோய்ந்த புதைசேற்றிலிருந்தும் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உழைக்கும் மக்களால் அவரது அரசாங்கம் மீதும் புஷ் அரசாங்கம் மீதும் உணரப்படும் அதிகரித்துவரும் குரோதத்திலிருந்தும் கவனத்தைத் திசை திருப்புவதற்கு பிளேயர் நம்புகிறார்.

ஈராக்கில் போரானது தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் பிரிட்டீஷ் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவுகளில் ஆற்றுப்பள்ளத்தாக்குகளைப் பிரிக்கும் ஒரு வரையாக இருக்கும். நிதி ஆதிக்க சிறு குழுவின் நலன்களை மட்டிலுமே முன்னெடுத்துச்செல்வதில் அக்கறை கொண்டுள்ளது மற்றும் விரும்பாத வாக்காளர்களின் மீது, அவர்கள் ஆழமாக வெறுக்கின்ற கொள்கைகளை திணிப்பதற்கு புதிய தொழிற்கட்சி தயாராக உள்ளது என்பதையும் ஈராக் போர் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

பிப்ரவரி 15-ந் தேதி சர்வதேச அளவில் நடந்த போர் எதிர்ப்பு பேரணிகளுக்கு டோனி பிளேயர், பொது மக்களது உணர்வுகளுக்கு தான், தலைவணங்கப் போவதில்லை என்று அறிவித்தபொழுது, ஈராக் மீதான தாக்குதலுக்கு ஆதரவாக தனது அரசாங்கத்தின் அணுகு முறைக்கு மேலே சென்று இந்தக் கருத்தை அவர் கூறினார். ஜனநாயக முறையில் பொறுப்பான அரசாக செயல்பட்டுவதை தான் மதிக்கப் போவதில்லை என்றும், மேலும், ரூபர்ட் முர்டோக் மற்றும் இதர கம்பெனி ஆதிக்கக்காரர்கள் சொல்லுகின்ற கருத்தை மட்டுமே மதிக்கப் போவதாகவும் அவர் அப்போதே தெளிவுபடுத்தி விட்டார்.

பொதுமக்களது கடுமையான எதிர்ப்பிற்கு அப்பால் அரசாங்கம் பிற்போக்குத்தனமான கொள்கைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியும் என்றால் அதுவே, பாரம்பரிய ஜனநாயக வடிவங்களும் வழிமுறைகளும் எந்த அளவிற்கு சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. தொழிற்கட்சி பகிரங்கமாக, மற்றொரு வலதுசாரி-பெரும் வர்த்தக நிறுவனம் சார்ந்த கட்சியாக தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது, இதனால் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்து விட்ட நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர், தொழிலாள வர்க்கத்தின் சமுதாய நிலைப்பாடு வரலாற்று அடிப்படையில் இதுவரை நடைபெற்றிராத அளவிற்கு கீழறுக்கப்பட்டிருக்கின்றது. இப்போது நிலவுவதைப்போல், முன்பு எந்தக்காலத்திலும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி இருந்தது கிடையாது. எனவே, பெரிய வர்த்தக நிறுவனங்கள் அரசியலில் ஆதிக்கத்தை அனுபவித்து வருவதை எதிர்கொள்வதற்கு இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு வேறுவழியில்லை, என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எல்லா கட்சிகளுமே தொழிற்கட்சியில், வலதுசாரி பொருளாதார செயல்திட்டத்தை பகிர்ந்து கொள்கின்றன, அவரது போர்க் கொள்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான அளவிற்கு ஆதரவை தெரிவித்ததைப் போன்று பிளேயருக்கு எல்லா கட்சிகளுமே ஆதரவு காட்டி வருகின்றன. அவரது, வெகுசில நாடாளுமன்ற விமர்சகர்களும் கூட -கையளவேயான தொழிற்கட்சி இடதுகள் மற்றும் தாராண்மை ஜனநாயகவாதிகள்- போரில் முதற்சூடு சுடப்பட்டதுமே, பிளேயரின் நிலைப்பாட்டை ஆதரிக்கத் துவங்கிவிட்டனர்.

புஷ் விஜயத்திற்கு மறுமொழியாக லண்டனின் "சுயேட்சை" மேயர் கென் லிவிங்ஸ்டனின் அருவருப்பான வளைந்து நெளிதல் பிளேயரின் உத்தியோகபூர்வ எதிர்ப்பின் உதவாக்கரைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. பிளேயரை மேலும் தேர்தல் தோல்விகளில் இருந்து காக்கும் பொருட்டு, தொழிற்கட்சியில் தனது மறுநுழைவுக்கான நிபந்தனைகளை அவர் பேசுகின்ற அதேவேளையில், லிவிங்ஸ்டன் பல்வேறு போர் எதிர்ப்புபகட்டுவித்தைகளை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார்.

தொழிற்கட்சியுடன் அரசியல் முறிவையும் உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூக நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஒரு புதிய கட்சியைக் கட்டி எழுப்பலும் உடனடித் தேவை என பலர் இப்பொழுது உணர்கின்றனர். ஆனால் இது எத்தகைய கட்சி தேவைப்படுகிறது, மற்றும் அது எந்த அரசியல் வேலைத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டாக வேண்டும் என்ற கேள்விகளைக் கேட்கிறது.

வெளியேற்றப்பட்ட தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் காலோவே மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியினால் வழி நடத்தப்படும் போரை நிறுத்து கூட்டணியில் உள்ள ஏனேயோர், புதிய கட்சியானது போர் எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் விரிவாக்கமாக இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். இத்தகைய இயக்கத்தின் பலம் எதுவாகயிருக்கும் என்றால் முற்றிலும் வேறான கருத்துக்களைக் கொண்ட மக்களை-- தாராண்மைவாதிகள், பசுமைக் கட்சியினர், தொழிற்கட்சியினர், சோசலிஸ்டுகள், ஏன் டோரிகளைக் கூட போர் எதிர்ப்பு என்கிற ஒரே பிரச்சனையில் ஒன்று சேர்த்து விட முடியும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த போரை நிறுத்து கூட்டணியின் தலைமைக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், புதிய கட்சியின் முன்நோக்கு போர் எதிர்ப்பு இயக்கத்தின் எந்த பிரிவினரையும் அந்நியப்படுத்தாத அளவிற்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் மையம் கொண்டிருக்கின்றது. சிலர் இப்புதிய கட்சி பழைய சீர்திருத்தவாத தொழிற்கட்சிக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர், அதே நேரத்தில் காலோவே இந்த புதிய கட்சியில் முஸ்லீம்களுக்கு இடமில்லை ஜனநாயகத்தை நம்புகின்ற டோரிகளுக்கும் கூட இடமில்லை என்பதால் இதுவும் கூட மிகத் தீவிரமான ஒரு அடிஎடுப்பு என்று வலியுறுத்துகிறார்.

இந்த விவாதத்தின் இரண்டு தரப்புகளுமே அரசியல் அடிப்படையில் உழைக்கும் மக்களை நிராயுதபாணிகளாக ஆக்கும் முன்னோக்கை முன்னெடுக்கின்றன. ஈராக்கிற்கு எதிரான போர் எதிர்ப்பு பூகோள அளவில் மடைதிறந்த வெள்ளம்போல் வந்து கொண்டு இருந்தாலும், போருக்கு எதிரான கூட்டணித் தலைமையில் உள்ளவர்கள் ஐ.நா-விற்கும், மற்றும் பிரதான ஐரோப்பிய அரசுகளுக்கும், சமாதான கோரிக்கைகள் விடுப்பதற்கு அந்த இயக்கத்தை கீழ்ப்படிய வேலைசெய்தனர். பல்லாயிரக்கணக்கான ஈராக் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் தங்களது ரத்தத்தை சிந்திக் கொண்டிருப்பதும் அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் அதன் நட்பு நாடுகளின் படையினர் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதுமான கசப்பான அனுபவம், ஒரு ஏகாதிபத்திய அரசை மற்றொரு ஏகாதிபத்திய அரசிற்கு ஆதரவு தருவதன் மூலம் எதிர்க்க இயலாது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின் முழு ஆதரவோடு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்கு ஐ.நா அங்கீகார முத்திரை அளித்திருப்பது, ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டு வருகின்ற ஆளும் செல்வந்த தட்டினர், தங்களது சொந்த வர்க்க நலன்களை இறுதியாக அச்சுறுத்துகின்ற வகையில் எந்த சமுதாய இயக்கத்தையும் இயங்க வைத்து தங்களது எதிர்காலத்திற்கே ஆபத்தை உண்டாக்கிக் கொள்வதை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசமாக நடந்து கொள்ளவே விரும்புகின்றனர்.

குறைந்த பட்ச அரசியல் அளவுகோல் அடிப்படையில் புதிய கட்சியை உருவாக்கி விட முடியாது. வர்க்க முரண்பாடுகளால் பிளவுபட்டுள்ள மற்றும் இராணுவவாதத்தினால் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுள்ள சமுதாயத்தில், போர் எதிர்ப்பில் பற்றுறுதிகொள்வது மட்டுமே போதுமானது அல்ல. இன்றைய தினம் தங்களது வாக்கு உரிமையை இழந்து விட்ட மக்களது நலன்களை முன்னிலைப்படுத்துவதற்கு, ஒரு புதிய கட்சியானது உழைக்கும் மக்களை எதிர்நோக்கியுள்ள அவர்களது அனைத்து ஜனநாயக மற்றும் சமுதாய பிரச்சனைகளுக்கு -- இராணுவவாதம் மற்றும் போர் இவற்றிலிருந்து பொருளாதார பாதுகாப்பு இன்மை, வீட்டு வசதியின்மை , சுகாதார வசதிகள் இன்மை, கல்வியின்மை, மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் வரையிலான பிரச்சினைகளுக்கு -- தீர்வை வைத்தாக வேண்டும். அது உண்மையான ஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையைக் கொண்டிருக்கும் அடிப்படைக் கோட்பாடுகளில் அது உறுதியாக நின்றாக வேண்டும்.

* தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக.

ஏகாதிபத்தியப் போரானது முதலாளித்துவ இலாப அமைப்பிலும், நெருக்கடி ஏற்படுகின்ற நேரத்தில் வன்முறை கிளர்ச்சிகள் வெடித்து, ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டிற்கு எதிராக செயல்படும், பகைமை கொண்ட தேசிய அரசுகளாக உலகம் பிளவுண்டிருப்பதிலும் வேரூன்றி இருக்கிறது. எனவே போருக்கு எதிரான போராட்டமானது, எல்லா நாடுகள், இனங்கள், மற்றும் மதங்கள் ஆகியவற்றை சேர்ந்த தொழிலாள வர்க்கத்தை பொது எதிரியான முதலாளித்துவ இலாப அமைப்பிற்கு எதிராக ஓர் அணியில் ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

புஷ் பிளேயர், ஷூரோடர், சிராக் முதலியோருக்கு எதிராக பிரிட்டிஷ், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக நாம் அழைக்க வேண்டும்.

* சமூக சமத்துவத்திற்காக

வெளிநாடுகளில் ஏகாதிபத்திய படையெடுப்பிற்கு கட்டளை பிறப்பிக்கும் அதே கார்ப்பொரேட் நிறுவனங்களின் நலன்கள்தான் உள் நாட்டில் தொழிலாளர்களது வாழ்க்கைத் தரத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கும் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றன. வேண்டும் என்றால், முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார அடித்தளத்தையே - உற்பத்தி சக்திகளின் தனிச்சொத்துடைமை மற்றும் இலாபத்திற்கான உற்பத்தி இவற்றை - ஒழித்துக்கட்டுகின்ற மற்றும் சமுதாயத்தின் செல்வத்தை ஒரு குழு ஏகபோகமாக தனது ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து, உழைக்கும் மக்களால் ஜனநாயக கட்டுப்பாடு மூலம் பொருளாதார வாழ்வை ஒழுங்கு படுத்தும், ஒரு அரசியல் இயக்கத்தினைக் கட்டுவதன் மூலம்தான் இந்த நிலையை எதிர்த்து போராட முடியும்.

*உழைக்கும் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்காக

முதலாளித்துவ முகாமில் தங்களது ஏதாவதொரு பாதத்தை ஊன்றிக் கொண்டுள்ள தொழிற்கட்சி மற்றும் எல்லாக் கட்சிகளில் இருந்தும் கட்டாயமாக முழுமையாக முறித்துக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு நிர்பந்தம் கொடுப்பது, அல்லது வெறும் கண்டனம் தெரிவிப்பது என்ற அளவில் அமைந்திருக்கும் அனைத்து முன்னோக்குகளையும் கட்டாயம் நிராகரிக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்க மற்றும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஏற்படுத்த அதனை ஒரு சுயாதீனமான சக்தியாக அணிதிரட்டுவதற்கு விழையும் ஒரு புதிய கட்சி உருவாக்கப்பட்டாக வேண்டும்.

இதுதான் பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியாலும் சர்வதேச அளவில் எங்களது சக சிந்தனையாளர்களாலும் முன்னெடுக்கப்படும் முன்னோக்காகும். உலக சோசலிச வலைதளம் மூலம், வழங்கப்படும் தினசரி செய்தி ஆய்வுகள் மூலம் புதிய சர்வதேச சோசலிச கட்சியைக் கட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் அணியைக் கல்வியூட்ட முயன்று வருகிறோம். ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தில் அர்ப்பணித்துக் கொண்ட அனைவரையும் , உலக சோசலிச வலைதளத்தை தொடர்பு கொள்ளுமாறும் லண்டன் மாலேசாலையில் உள்ள, லண்டன் பல்கலைக்கழக சங்கத்தில், நவம்பர் மாதம் 30-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இந்த பொதுக் கூட்டம் நமது உலக இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு மற்றும் முன்னோக்கை ஆய்வு செய்யும்.

Top of page