World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The political economy of the Sri Lankan "peace process"

இலங்கை ''சமாதானப் பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்

பகுதி 2

By Nick Beams
14 November 2003

Back to screen version

இவ்வருட ஆரம்பத்தில் விக்கிரமசிங்கவின் ஏழ்மை குறைக்கும் மூலோபாய பத்திரம் (Poverty Reduction Strategy Program) என அழைக்கப்படுவதை கடந்த யூனில் டோக்கியோவில் நிகழ்ந்த இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டமை, உலக நாணய சுற்றினுள் உள்ளிணைத்துக்கொள்வதின் அடுத்த கட்டமாகும். அமெரிக்காவின் தீவிர அரசியல் ஆதரவுடனும், குறிப்பிட்டளவு ஜப்பானின் நிதி உதவியுடனும், 50 நாடுகளினதும் மற்றும் 20 இற்கு மேற்பட்ட சர்வதேச நாணய அமைப்புகளினது பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இம்மாநாட்டில், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு அடுத்த 4 வருடங்களுக்கு $4.5 பில்லியன் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

எவ்வாறிருந்தபோதிலும், இவ் உதவிக்கான நிபந்தனையாக நாட்டின் தொடர்ச்சியான யுத்தத்தை ஒரு தீர்க்கரமான முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது இருந்தது. சர்வதேச மூலதனத்தின் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கொழும்பின் மோதலானது அப்பிராந்தியத்தில் அவர்களது திட்டங்களுக்கு தடையாக இருந்தது. உதவி வழங்குவதற்கான அவர்களது நோக்கமானது, இலங்கையின் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரு ஸ்திரமான நிலைக்கு கொண்டுவருவதோ அல்லது அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோ அல்ல. மாறாக இலங்கை, தென் ஆசியாவில் தனது நிதி மற்றும் சாதகமான இராணுவ நடவடிக்கையின் மத்திய நிலையமாக்குவதே அமெரிக்காவின் விருப்பமாகும்.

20 வருடங்களுக்கு மேலாக, இலங்கைவின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாகவோ அல்லது இலங்கை மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்தோ எவ்விதமான அக்கறையும் காட்டவில்லை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தென் ஆசியாவில் அதனது தலையீடு தீவிரமானதுடன், வாஷிங்டன் ''சமாதான பேச்சுவார்த்தைகளின்'' முக்கிய பங்குகொள்பவராக மாறியது. உதவி வெளிநாட்டு அமைச்சரான றிச்சார்ட் ஆர்மிடேஜ் இவ்வார ஆரம்பத்தில் வழங்கிய பேட்டியில் இதனை தெளிவாக குறிப்பிட்டார்.

''எங்களது முக்கிய நலன்கள் மனிதாபிமானம்தான்'' என்ற கடமைப்பாடான அறிவித்தலின் பின்னர், ''20 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை கொண்ட இந்த நாட்டை தென் ஆசியாவில் மட்டுமல்லாது உலக பொருளாதார வாழ்வின் ஒரு முக்கிய முழுமையான பங்காளியாக்குவதே எமது விருப்பமாகும். தென் ஆசியாவின் வளர்ச்சியின் உந்துசக்தியாக இலங்கை ஏன் இருக்கக்கூடாது என்பதற்கான ஒருவித காரணத்தையும் நாங்கள் காணவில்லை. அது அப்படியான நிலையிலிருக்கும் நாளைத்தான் நான் பார்க்க விரும்புகின்றேன்'' என குறிப்பிட்டார்.

இப்பிராந்தியத்தில் அதனது மேலதிக நலன்களுக்காக, புது டில்லியின் வாஜ்பாயி அரசாங்கத்தையும் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தையும் நெருங்கிய உறவுகளை வைத்திருக்குமாறு அமெரிக்கா நெருக்குகின்றது. 2004 மார்ச்சில் கையெழுத்திடப்படவுள்ள ஒரு பரந்த பொருளாதார கூட்டு உடன்பாடு ஒன்று இணைக்குழுவால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.

நவம்பர் 10ம் திகதி Asia Times இல் வெளியிடப்பட்ட Ramtanu Maitra இனால் எழுதப்பட்ட ''வளர்ச்சியின் இயந்திரம்'' என்ற தலையங்கமிடப்பட்ட கட்டுரையானது, ''பரந்த பொருளாதார கூட்டு உடன்பாடு ஆனது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கான பொருட்கள், சேவை, வான்போக்குவரத்து, போக்குவரத்து, உல்லாசப்பிரயாணத்துறை, முதலீடு போன்ற பரந்தளவிலான துறைகளை கட்டுப்படுத்தும் தற்போதுள்ள வர்த்தக உடன்படிக்கையை பிரதியீடு செய்கின்றது. உண்மையில், இவ் உடன்பாடானது, இரண்டு நாடுகளையும் பலவிதமான சேவைகள் மற்றும் வரிக்கும் வர்த்தகத்திற்குமான பொது உடன்பாட்டினுள் (GATT-General Agreement on Tariffs and Trade) உள்ளடங்கும் விநியேக வழிகள் தொடர்பான ஒரு பரந்த பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும்.

இது இருபக்கத்திலும், அனுமதி பெறவேண்டிய மற்றும் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் எனக்குறிப்பிட்ட பாரிய முதலீடுகளை இலகுவாக்குவதுடன், பொருளாதார கூட்டுழைப்பை திறம்பட செய்வதை இலகுவாக்குவதுடன் மற்றும் வர்த்தகத்திற்கும் முதலீட்டு தாராளமாக்கலுக்குமான வழியைவகுக்கும்.

இலங்கையை ''வளர்ச்சியின் இயந்திரமாக்கும்'' அமெரிக்காவின் திட்டமானது, முழு தென் ஆசிய பிராந்தியத்திலும் தனது நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்பிற்காக சர்வதேச மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதை வசதியாக்கும் நோக்கத்தை கொண்ட ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இவ் ஒருங்கிணைப்பானது இராணுவத்துறைக்கும் நீடிக்கின்றது. கடந்த மாதம், புது டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் வாஜ்பேயியும் விக்கிரமசிங்கவும் இருநாடுகளுக்கு இடையிலான பொதுவான பாதுகாப்புக்கொள்கை குறித்து அறிவித்தனர். அவர்களின் கூட்டு அறிக்கையில் ''இலங்கையின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா தனது நீண்டகால நலன்களை தொடர்ந்தும் கொண்டிருக்கும் மற்றும் அதனது இறைமைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் தனது ஆதரவை வழங்கும்'' எனக் குறிப்பிடப்பட்டது.

நெருக்கமான பொருளாதார உடன்பாடுகளைப்போல், அதிகரித்துவரும் பாதுகாப்பு உறவுகளும் அமெரிக்காவின் மூலோபாய நலன்களின் அடித்தளத்தில் ஏற்படுத்தப்பட்டவையாகும். Maitra வின் Asia Times கட்டுரையின்படி ''தமிழ்-சிங்கள மோதலை தீர்த்துவைப்பதற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பது பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான சர்வதேச கவனம் ஒருங்கிணைக்கப்படுவதை பிரதிபலிக்கின்றது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அண்மைய அறிக்கைகள், இலங்கையின் ஆகாய பிரதேசத்தை 30 அமெரிக்க விமானப்படை வல்லுனர்கள் உள்நாட்டு விமானப்படையினருடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பு, மருத்துவ, பொறியியல் தேவைகளுக்காக கண்காணிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளதகா குறிப்பிடுகின்றது. தென் இலங்கையில் உள்ள வீரவில பிரதேசத்தில் அமெரிக்க விஷேட படையினர் அமைத்துள்ள நவீனவசதிகள் உள்ள இராணுவ முகாமில் இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்குவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட 8 வருடங்களாக குறிப்பிட்டுவருகின்றனர். வெளிநாட்டு தலையீடு தொடர்பாக கொழும்பு அரசாங்கம் ஒரு இராஜதந்திர மெளனம் சாதித்துவருவதுடன், புலிகளின் குற்றச்சாட்டுக்களை மறுக்கவுமில்லை''. என எழுதியுள்ளார்.

ஒரு புதிய ஏகாதிபத்தியம்

முக்கியமானது என்னெவெனில் விக்கிரமசிங்க, ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புடன் பகிரங்கமாக இணைந்துள்ளதுடன், எதிர்காலத்திலும் எவ்விதமான இராணுவ தலையீடுகளையும் ஆதரிப்பேன் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ''அமெரிக்காவிற்கும் அதன் கூட்டணியினருக்கும் தலையீடு செய்வதைவிட வேறு மாற்று வழியிருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் ''தோல்வி'' ஒரு புதிய ''உலக பொலிஸ்காரனை'' உருவாக்கும் தேவையை உருவாக்கியுள்ளது'' எனக்குறிப்பிட்டார்.

இக்குறிப்புக்கள், ''சமாதான பேச்சுவார்த்தைகள்'' எனக்கூறப்படுவது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உடன்பாடு என்பதற்கும் இன்னும் மேலானதை உள்ளடக்கியிருக்கின்றது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றது. இது அமெரிக்காவாலும், அதன் கூட்டணியினராலும், சர்வதேச நாணய நிதியத்தாலும் மற்றும் ஏனைய நிதி அமைப்புகளாலும் ஒத்தூதப்படுவதிலும் பார்க்க, முழு இந்திய துணைக்கண்டத்திலும் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மறுஒழுங்கமைக்கும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

உண்மையில் இத்திட்டங்களுக்கு சமாதானத்தையும் வளர்ச்சியினையும் பாதுகாப்பது என வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இலாபத்திற்கான புதிய வளங்களை பாதுகாத்துக்கொள்ளும் பாரிய நிறுவனங்களதும், நிதி அமைப்புகளினதும் தேவையால் உந்தப்பட்டதாகும். இது எவ்வளவிற்கு முக்கியமாக இருந்தாலும் மலிவான உழைப்பையும் மூலவளங்களையும் பெற்றுக்கொள்வதைவிட இன்னும் அதிகமான நோக்கங்களை கொண்டது. வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டு நிதிகள் போன்ற நிதி மூலதனத்திற்கு, தனது இலாபத்திற்கான புதிய வளங்களை உலகம் முழுவதும் பெரும்பசியுடன் தொடர்ச்சியாக தேடித்திரிகின்றது.

துணைக்கண்டம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள ஏகாதிபத்தியத்தின் இப்புதிய முறையானது, பிரித்தானிய இராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்டதைவிட வித்தியாசப்பட்டாலும், முக்கிய உள்ளடக்கத்தில் ஒரேமாதிரியானதாகவே இருக்கின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தொடர்பாக வரலாற்று ஆசிரியர்களான கைன் (Cain)உம், கொப்கின்ஸ் (Hopkins) உம் தமது பெறுமதிமிக்க ஆய்வில் பிரித்தானிய இராஜ்ஜியத்திற்கு முக்கிய கேள்வியாக இருந்தது காலனிகளை ஆக்கிரமிப்பது மட்டுமல்ல, மாறாக ''பொருளாதார வரையறைகளை'' திணிப்பது முக்கியமாக இருந்தது என குறிப்படுகின்றனர்.

மேலும் அவர்கள் ''இந்த பொருளாதார முன்னோக்கின் கீழ் இராஜ்ஜியத்தை ஒரு நாடுகடந்த அமைப்பாக பார்க்க கூடியதாக இருந்தது. இதன்மூலம் அது பரிமாற்ற செலவுகளை குறைத்ததுடன், தனது சொந்த நாட்டுடன் இணைந்த சொத்துடைமை உரிமைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது''. [British Imperialism 1688-2000, P. J. Cain and A. G. Hopkins, p. 4].

பிரித்தானிய இராஜ்ஜியத்தின் நடைமுறை வடிவங்கள் தொடர்பாக கைன்சும், கொப்கின்ஸும் வரையறுப்பது, தற்காலத்தின் ''பொருளாதார வரையறைகளை'' திணிக்கும் சர்வதேச நாணய நிதியத்தினதும் ஏனைய நிதி அமைப்புகளினதும் நடவடிக்கைகளை விபரமாக ஞாபகப்படுத்திகின்றது.

அவர்கள் மேலும் பின்வரும் தன்மைகளை அவதானித்தனர். ''பிரித்தானிய இராஜ்ஜியத்தின் கட்டமைப்பினுள், அரசியல் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் கொள்கைகள் தொலைவிலுள்ள நாடுகளுக்கு மிகவும் ஆர்வத்துடன் பிரயோகிக்கப்பட்டது. அவையாவன, உறுதிப்படுத்தப்பட்ட சொத்துடமை உரிமைகள், தனிமனிதவாதம், சுதந்திர சந்தை, உறுதியான நாணயம், வரவுசெலவுத்திட்டத்தில் சிக்கனமாக இருத்தல், ஒழுக்கநெறி (Moral) மற்றும் சடத்துவ வாழ்க்கையில் ஒழுங்கும், நோக்கத்தை அடைவதற்கான முயற்சியும், ஒரு சிறந்த அரசமைப்பும் மற்றும் ஒத்துணர்வான கூட்டின் முக்கியமுமாகும். [மேற்குறிப்பட்ட புத்தகம் பக்கம் 48].

இப்படியான நிலைமைகளை உருவாக்குவதற்கு தற்போது ஒரு காலனித்துவ வடிவமான ஆட்சி முறையை உருவாக்கவதற்கு அவசியமில்லை. லெனின் ஒரு தடவை குறிப்பிட்டபடி ''நிதி மூலதனமானது மிகவும் பாரியதும், மிகவும் தீர்க்கரமான சக்தியுமாகும்.... சகல சர்வதேச உறவுகளிலும் அதனால் முழு அரசியல் சுதந்திரமான நாட்டை கூட தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர கூடியதுடன், கட்டுப்பாட்டினுள் கொண்டும் வருகின்றது'' (லெனின்-தொகுப்பு நூல்கள், பாகம் 22, பக்கம் 259).

இக்கருத்து சுருக்கமாக இருந்தாலும், ''சமாதான பேச்சுவார்த்தைகளின்'' அரசியல் பொருளாதாரத்தின் ஆரம்ப நிலைகளில் கூட அதில் முக்கியமாக கலந்துகொண்டுள்ள சமூகசக்தி தொடர்பாக எடுத்துக்காட்டுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியானது, முதலாளித்துவத்தின் முக்கிய பிரிவினரின் ஆதரவுடன் அமெரிக்காவால் ஒழுங்கமைக்கப்படும் தென் ஆசியாவின் பொருளாதார ஒழுங்கினுள் இலங்கையை முதலீட்டிற்கும், நிதிக்குமான ''மத்திய நிலையமாக'' ஒன்றிணைப்பதற்கு முனைகின்றது.

இலங்கை ஒரு ''புலி பொருளாதாரமாக'' (Tiger economy) ஆக விரும்புவதை வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துவிட்டனர். அடிப்படை நோக்கத்தில் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எவ்விதமான முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. பேச்சுவார்த்தைகளின் போது எழுந்த பலவிதமான முரண்பாடுகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது தொடர்பானதல்ல. மாறாக, இலங்கை அரச அமைப்பினுள் தனக்கும் மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முதலாளித்துவ தட்டினருக்கும் மிகவும் சாதகமான கொடுக்கல் வாங்கலை செய்துகொள்ள அம்முரண்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றது.

சந்திரிகா குமாரதுங்கவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியும் இப்புதிய பொருளாதார உறவின் கீழ், தமது எதிர்காலம் தொடர்பான பயத்தை கொண்ட இலங்கை முதலாளித்துவ பிரிவினரின் சார்பில் பேசுகின்றனர். அத்துடன் அவர்கள் 20 வருட உள்நாட்டு யுத்தத்தால் இலாபமடைந்த இராணுவ, வர்த்தக பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பொதுஜன முன்னணி தொடர்ந்தும் பழைய தொழிலாள வர்க்க அமைப்புகளான லங்கா சமஜமாஜ கட்சி, நவசமஜமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியில் தங்கியிருக்கின்றபோதிலும் அவர்களின் பங்கு ஒருவித்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. பல பத்தாண்டுளான காட்டிக்கொடுப்பினதும், எண்ணற்ற சந்தர்ப்பவாத திருகுதாளங்கள் மற்றும் திருப்பங்களின் பின்னர் அரசியல் ரீதியில் குறிப்பிட்டால் இக்கட்சிகள் பிழிந்த தேசிக்காயை போலாகியுள்ளன.

இதனால்தான், பொதுஜன முன்னணிக்கு பரந்த ஆதரவை சேர்க்கும் மத்திய பணியை வகிப்பது மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன் தோள்களில் விழுந்துள்ளது. காலத்திற்கு ஒவ்வாத ''மறுபங்கீடு செய்யும்'' கொள்கையை இல்லாதொழிக்கும், சர்வதேச நாணய நிதியத்தினது கட்டளைகள் பரந்த வேலையழிப்பையும், அரசுக்கு சொந்தமான துறைகளையும் மற்றும் சமூகநல நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கல் என அர்த்தப்படுத்துகையில், மக்கள் விடுதலை முன்னணி ஏகாதிபத்தியத்தையும், அது இலங்கையை மீள்காலனித்தவப்படுத்தும் திட்டத்தையும் நிராகரித்து கிராமப்புற ஏழைகள், மத்தியதர வர்க்கத்தினர், மாணவ இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் தனக்கு ஆதரவை திரட்ட முனைகின்றது.

ஆனால் அதனது பகிரங்க வார்த்தை ஜாலங்களுக்கு மத்தியிலும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) வார்த்தையின் முழு அர்த்தத்திலும் ஒரு முற்றிலும் பிற்போக்குவாத முன்னோக்கை முன்வைக்கின்றது. அதனது முதலிடத்தில், தமிழர் எதிர்ப்பு சிங்கள இனவாதம் அதனது முன்னோக்கின் மத்திய புள்ளியாக இருப்பதுடன், இது பிரித்தானிய காலனித்துவ வாதிகளால் அதிகாரம் கையளிக்கப்பட்டதிலிருந்து ஆளும் வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு மிகவும் பயனுள்ள இனவாத கொள்கையான ''பிரித்தாளும்'' கொள்கையை மீண்டும் வெளிப்படுத்தலாகும்.

மேலும், தேசிய பொருளாதாரத்தையும் தேசிய கலாச்சாரத்தையும் புத்துயிர்ப்பதன் அடித்தளத்தில் ''தேசிய ஒருமைப்பாட்டிற்கு'' மக்கள் விடுதலை முன்னணி விடும் அழைப்பானது, கடந்த 2 சகாப்தங்களுக்கு மேலாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் முற்றுமுழுதாக வங்குரோத்தான முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டத்தின் தூசுபடிந்துபோன பிரதியாகும்.

அரசியல் அமைப்பு நெருக்கடியால் எழுந்துள்ள அரசியல் அறைகூவலை எதிர்நோக்கும் இலங்கை தொழிலாள வர்க்கம் தனது வளம்மிக்க (ஆழமான) வரலாற்று பாடங்களை உணர்மையுடன் உள்ளீர்த்துக் கொள்ளவேண்டும். சோசலிச சர்வதேசியவாதத்திற்கும் ''இடது'' வகையறாக்கள் உள்ளடங்கலான சகலவிதமான முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் இடையிலான பலபத்தாண்டு கால முரண்பாட்டிலிருந்து ஒரு கணக்கெடுப்பை கட்டாயம் செய்யவேண்டும்.

இப்படியான மதிப்பீடானது, நான்காம் அகிலத்தின் சர்வதேச முன்னோக்கை ''சாத்தியமற்றது'' என நிராகரித்த அரசியல் அறிவாளிகள் போல் நடித்த முட்டாள்களின் முன்னோக்கான முதலாளித்துவ தேசியவாதமே முற்றாக இலாயக்கற்றது என்பதை எடுத்துக்காட்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் முக்கிய உள்ளடக்கமான ஏகாதிபத்திய மீள்காலனித்துவ மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் அனைத்து தொழிலாளர்களும் இனவாதத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தில் அணிதிரளுவதால் மட்டுமே வெற்றிகரமானதாக்க முடியும். இப்படியான ஒரு போராட்டம் இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியிலும் மற்றும் இந்திய துணைக்கண்டத்திலும் சர்வதேச ரீதியாகவும் சக்திவாய்ந்த ஆதரவை பெற்றுக்கொள்ளும். இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் முன்னோக்கின் அடித்தளமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved