World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The political economy of the Sri Lankan "peace process"

இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்

பகுதி 1 | பகுதி 2

By Nick Beams
13 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

கடந்தவாரம் ஜனாதிபதி குமாரதுங்கா முயற்சித்த அரசியலமைப்பு சதியை நோக்கி சூழ்ந்துள்ள நிகழ்வுகள் முதலில் ஒரு வேடிக்கையான நாடக தன்மையானதாக கருதவைத்தது. இதற்கான காரணத்தை, அதை நடத்திய அதன் முக்கிய அரசியல் நடிகர்களின் நடத்தையில் காணமுடியாது. மாறாக, அது உலக பொருளாதாரத்திலும் மற்றும் அதனுடனான இலங்கை பொருளாதார உறவுகளிலும் ஏற்பட்டுள்ள அடிப்படையான மாற்றத்தில் தங்கியுள்ளது.

குமாரதுங்காவும் பிரதம மந்திரி விக்கிரமசிங்காவும் அவர்களது நிலைப்பாடு தொடர்பாக தத்திநடந்து தங்கள் கருத்தை தெரிவிக்கையில், உண்மையான முடிவுகள் திரை மறைவில், எல்லாவற்றிற்கும் மேலாக வாஷிங்டனிலும், ஓரளவிற்கு புதுடெல்லியிலும் எடுக்கப்பட்டன. இந்த நெருக்கடியின் மத்தியில் விக்கிரமசிங்கா அமைதியாக காணப்பட்டதற்கு காரணம், எங்கிருந்து வரும் ஆதரவு முக்கியமானதாக கருதப்படுமோ அந்த ஆதரவு தனக்கு கிடத்துள்ளது என்பது தெரிந்திருந்ததால் ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய விக்கிரமசிங்கா ''எனது தலைமையின் மீதும், சமாதான பேச்சுவார்த்தை தொடர்பான அரசாங்கத்தின் பாதை தொடர்பாகவும் ஜனாதிபதி ஜோர்ஜ். புஷ் தனது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அமெரிக்க அரசாங்கத்தினதும் காங்கிரசினதும் ஆதரவு எனக்கும் இந்த அரசாங்கத்திற்கும் உண்டு. இவ்வரசாங்கமே மக்களின் ஆணையைக் கொண்டுள்ளது.'' என உணர்ச்சிகரமாக கூறினார். இங்கு அவர் குறிப்பிடும் வரிசைக்கிரமத்தின் முக்கியத்தை கவனிக்கவும்: முதலில் புஷ் பின்னர் காங்கிரஸ், இறுதியில் இலங்கை மக்களின் ஆணை.

சிங்கப்பூரில், இச்சதியின் போக்கினை உன்னிப்பாக கவனித்துவரும் Straits Times பத்திரிகையின் நவம்பர் 10ம் தேதி ஆசிரிய தலையங்கம் சக்திகளின் உண்மையான உறவு பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது. ''குமாரதுங்காவின் நடவடிக்கை தொடர்பான செய்தியைத் தொடர்ந்து வாஷிங்டனில் இருந்து விக்கிரமசிங்கா உடனடியாக திரும்பாமல் இருக்க எடுத்த முடிவானது ''மிகவும் தந்திரோபாயமானது''. புஷ் ஆல் ''சமாதான பேச்சுவார்த்தையில் அவரின் தனிப்பட்ட ஈடுபாடு'' மறுக்கப்பட போவதில்லை என்ற பாதுகாப்புடனும், அவர் தான் தொடர்ந்தும் அதில் இருப்பேன் என்ற நம்பிக்கையுடனும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு திரும்பினார்''.

முன்னைய காலத்தில், இலங்கையின் அரசியல் தலைவர்கள் பரந்துபட்ட மக்களின் காலனித்துவ எதிர்ப்பு மனநிலை தொடர்பாக உணர்வுடன் இருந்ததுடன், மூடிய கதவுகளுக்கு பின்னால் உலக ஏகாதிபத்திய தலைவர்களுடன் இணைந்து இயங்கியபோதிலும் தேசிய சுதந்திரத்திற்கு ஒரு தோற்றத்தை வழங்க முயன்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, விக்கிரமசிங்காவின் மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜூனியஸ். றிச்சார்ட். ஜெயவர்த்தனாவே தற்போது குமாரதுங்கா வகிக்கும் சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி பதவியை உருவாக்கியவராவார். அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்த அவரின் தன்மை காரணமாக அவர் பரவலாக ''யங்கி வாத்து'' (Yankee Dick) என அழைக்கப்பட்டார்.

எவ்வாறு நிலைமை மாற்றமடைந்தது. தற்போது அமெரிக்க ஆதரவு, இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என பகிரங்கமாக பறை சாற்றுகிறது. இது தேசிய சுதந்திரத்திற்கான யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டம் முழுமையாகவும், உண்மையாகவும் முடிவிற்கு வந்துவிட்டதையே எடுத்துக்காட்டுகின்றது. உலகத்தின் பாரிய பிரிவினர், அவர்களது இராணுவ பலத்தால் அல்லது பாரிய பொருளாதார வளங்களால் உண்மையான காலனித்துவ நிலைமைக்கு திரும்பிவிட்டனர்.

தேசிய பொருளாதார சுதந்திரத்தின் முடிவு

காலனித்துவ எதிர்ப்பு போராட்ட அலையின் எழுச்சிக்கு மத்தியில், 1930 களின் பத்தாண்டுகளில், தேசிய சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கும் சோசலிச புரட்சிக்கும் உள்ள தொடர்பை லியோன் ட்ரொட்ஸ்கி தெளிவாக எடுத்துக்காட்டினார். தேசிய சுதந்திரத்திற்கான காலனித்துவ மக்களின் போராட்டம் அடிப்படையில் முற்போக்கானது என வலியுறுத்திய அவர், அப்போரட்டங்கள் காலனித்துவ நாடுகளின் அரசியல், பொருளாதார பின்தங்கிய தன்மைக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிராக முக்கிய தாக்கத்தைக் கொடுக்கிறது எனக்குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தார், "ஆனால் முன்கூட்டியே விளங்கிக்கொள்ளப்படவேண்டியது என்னவெனில், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தோன்றியுள்ள காலங்கடந்த புரட்சிகள் தேசிய அரசின் மறுமலர்ச்சிக்கான ஒரு புதிய காலகட்டத்தைத் திறந்து விட இயலாது. காலனிகளின் விடுதலையானது உலக சோசலிச புரட்சியில் ஒரு பிரமாண்டமான நிகழ்வாகவே இருக்கும்..... தேசிய பிரச்சினை எல்லா இடங்களிலும் சமூக பிரச்சனையுடன் இணைகிறது. உலக தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் எமது உலகத்தில் உள்ள சகல நாடுகளினதும் உண்மையான மற்றும் நீடித்த சுதந்திரத்தின் அபிவிருத்திக்கு உத்தரவாதத்தை வழங்கும். [Writings 1933-34, Leon Trotsky, p. 306].

இலங்கையில் நான்காம் அகிலத்தின் முன்னோக்கானது, பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இந்திய போல்ஷேவிக் லெனினிஸ்ட் கட்சியினதும் (BLPI) லங்கா சமஜமாஜ கட்சியினதும் (LSSP) ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் செய்யப்பட்ட போராட்டத்தினால் ஒரு பலமான உயிர்ப்பான வடிவத்தை எடுத்தது. 1948 இல் சோல்பரி ஆணைக்குழுவினால் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, இந்திய போல்ஷேவிக் லெனினிஸ்ட் கட்சியினது தலைவரான கொல்வின் ஆர். டி. சில்வா இதில் மக்கள் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை எனக்குறிப்பிட்டார். இந்த புதிய அந்தஸ்தானது சுதந்திரமில்லை, மாறாக ''இலங்கையின் அடிமைத்தளையை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு புதுப்பிப்பதாகும்'' எனவும், மக்களை கட்டுப்படுத்தும் கடமை பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஓய்வுபெறும் பின்னணியில் இலங்கையின் ''சொந்த'' முதலாளித்துவத்திடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், காலனித்துவத்திற்கு பிந்தைய உடன்பாடு பலமான அரசியல் அழுத்தங்களை உருவாக்கியது. முன்னாள் காலனித்துவ நாடுகளைப் பொறுத்தவரையில் 1950 களின் காலகட்டம் ஒரு புதிய அரசியல் எதிர்காலம் பற்றிய கருத்தை வழங்கியது போலிருந்தது. இதுதான் இந்தியாவில் நேரு, எகிப்தில் நாஸார் இந்தோனேசியாவில் சுகார்னோ மற்றும் கானாவில் என்க்ருமா போன்றவர்களால் பண்புருவாக்கப்பட்ட தேசிய சுதந்திரத்திற்கும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்குமான காலகட்டமாகும். ''ஆபிரிக்க சோசலிசம்'' மற்றும் ''நேருவாத சோசலிசம்'' போன்றவை இலங்கையினுள்ளும் எதிரொலித்ததுடன், அங்கு முதலாளித்துவ தேசியவாதிகளினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் (SLFP) அரசு பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதை அடிப்படையாகக் கொண்ட ''சோசலிச'' கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொதுத்துறை வளர்ச்சியடைந்துடன், ஓய்வூதிய திட்டங்களுடன் மருத்துவ பராமரிப்பு திட்டங்களும் உணவு மானியங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தநேரத்தில், ஆசியா முழுவதிலும் இலங்கை மக்கள் அதிஉயர்ந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவித்தனர்.

ஆனால், யுத்தத்திற்கு பின்னைய உலக முதலாளித்துவத்தின் மறு-ஸ்திரப்படுத்தலும், இந்த போக்கின் ஒரு பகுதியாக நான்காம் அகிலத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மிசேல் பப்லோவாலும் (Michel Pablo) ஏர்னெஸ்ட் மண்டேலாலும் (Ernest Mandel) தலைமை தாங்கப்பட்ட ஒரு சந்தர்ப்பவாத போக்கனாது, இன்று அவர்கள் எதிர்நோக்கிய ''புதிய உலக யதார்த்தத்தின்'' முன்னே ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு தோல்வியடைந்துவிட்டது அல்லது அவசியமற்றதாகிவிட்டது என்ற முடிவிற்கு வந்தது. சர்வதேச சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தை, தேசிய நிலைமைகளுக்குள் உடனடி அரசியல் இலாபத்தை அடைவதை அடிப்படையாக கொண்ட தேசிய தந்திரோபாயங்களினால் அதிகரித்தவகையில் பதிலீடு செய்ய ஆரம்பித்தனர்.

லங்கா சமசமாஜ கட்சி பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளாலும் அவர்களின் இலங்கை கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்ட அரசு அமைப்பை நோக்கி உறுதியாக அடிபணிய ஆரம்பித்து, இறுதியில் 1964ம் ஆண்டு திருமதி.பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்துடன் இணைந்துகொண்டது. மீண்டும் 1970ம் ஆண்டு கூட்டரசாங்கத்தினுள் நுழைந்ததன் மூலம் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் கொல்வின்.ஆர்.டி.சில்வா சிங்கள இனவாதத்தைப் பேணுவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை 1972ம் ஆண்டு திருத்தி எழுதியதுடன், சிங்கள மொழியை அரசகரும மொழியாகவும், பெளத்த மதத்தை அரச மதமுமாக்கினார்.

சந்தர்ப்பவாதிகள் எப்பொழுதுமே தமது காட்டிக்கொடுப்புகளை தமது கொள்கைகள் ''யதார்த்தமானவை'' என கூறி நியாயப்படுத்திக்கொள்ள முனைவர். அவர்களுக்கு புரட்சிகர இயக்கத்தின் கொள்கைகள் மிகவும் சிறப்பானதாக தோன்றினாலும், அவை ''சிறிய கனவிற்கு'' சற்று மேலானதை தவிர வேறொன்றுமில்லை. உண்மையில், காலனித்துவ நாடுகளுக்கு முக்கியமாக தேசிய பொருளாதாரமும், அரசியல் சுதந்திரமும் என்ற முன்னோக்கானது முற்றுமுழுதாக இலாயக்கற்றது என்பதை வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எவ்வளவு பலமானதாக இருந்தாலும், இம்முன்னோக்கானது எப்போதும் இரண்டு இடைக்கால நிலைமைகளையே அடிப்படையாக கொண்டிருந்தது. ஒருபக்கத்தில், உலக முதலாளித்துவத்தின் யுத்தத்திற்கு பிந்தைய பொருளாதார செழிப்பிலும், மறுபக்கத்தில் குளிர் யுத்தத்திலும் தங்கியிருந்தது. யுத்தத்திற்கு பிந்தைய பொருளாதார செழிப்பானது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான சடத்துவ வழிகளை வழங்கியது. குளிர் யுத்தமானது, பொருளாதார மற்றும் அரசியல் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு முதலாளித்துவ தேசிய தலைவர்களுக்கு ஏகாதிபத்திய அரசுகளை ஒருபுறமும் சோவியத் யூனியனை மறுபுறமுமாக அவற்றுக்கிடையில் சமநிலைப்படுத்திக்கொண்டு நின்று கொடுக்கல்வாங்கல்களை செய்துகொள்ளவதற்கான குறிப்பிட்ட இடத்தைக் கொடுத்தது.

யுத்தத்திற்கு பின்னான பொருளாதார செழிப்பானது 1970 களின் மத்தியில் முடிவிற்கு வந்ததுடன், 1930 களின் பின்னர் ஆழமான பொருளாதாரப் பின்னடைவிற்கு வழியமைத்தது. இது இலங்கையிலும் பாரிய அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்த இருந்தது. இது கூட்டரசாங்கத்தின் ''சோசலிச'' போலித்தன்மை தங்கியிருந்த தேசியவாத வேலைத்திட்டத்தை தகர்த்தது.

அதிகரித்துவரும் சென்மதி நிலுவையின் பிரச்சனைகளும் மற்றும் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு உள்ளும், வெளியும் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் பொருளாதார பிரச்சனைகளை அதிகரிக்க செய்ததுடன், பரந்த மக்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பை உருவாக்கின. அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகள், மக்கள் எதை உண்ணலாம், எதை உண்ணக்கூடாது என்பதை திணிக்கும் நிலைமை அளவிற்கு சென்றதுடன், வாழ்க்கைச் செலவு முன்னெதிர்பாராத அளவு அதிகரித்துடன், இறக்குமதி மீதான கட்டுப்பாடு வேலையில்லாதோரின் அளவை அதிகரிக்க செய்தது. அதிகரித்துவரும் எதிர்ப்பை அரசாங்கத்தால் வேலைநிறுத்தத்தை சட்டபூர்வமற்றதாக்க அவசரகால அதிகாரங்களை பிரயோகிப்பதன் மூலமே முகம்கொடுக்க முடிந்தது.

1977 பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்காவின் அரசாங்கம் பதவியிலிருந்து துடைத்துக்கட்டப்பட்டது. பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதித்துவம் 8 ஆசனங்களுக்கு வீழ்ச்சி கண்டது.

''சுதந்திர சந்தையை'' நோக்கிய திருப்பம்

இலங்கை பொருளாதாரத்தின் நெருக்கடி ஒரு பூகோளரீதியான பிரச்சனையின் ஒரு பகுதியாகும். 1979--80 களில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான Paul Volcker இனால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது, இது சர்வதேச கடன்களில் தங்கியிருக்கும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என அழைக்கப்படுபவற்றில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி இயங்கா நிலைமையை அடைந்த ''இழந்த பத்தாண்டு'' என்பதை அனுபவித்தது. உப சகாரா ஆபிரிக்க நாடுகள் அதிலிருந்து மீளவேயில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ''கட்டுமான மறுசீரமைப்பு திட்டத்தின்'' கீழ் இறக்குமதி பதிலீட்டை (பிரதியீட்டை) அடித்தளமாக கொண்ட தேசிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், ''சுதந்திர சந்தை'' மற்றும் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களால் அதிகரித்தளவில் பிரதியீடு செய்யப்பட்டது.

1977ல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி இப்புதிய திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்தியது. பொருளாதார கட்டுப்பாடுகள் பின்வாங்கப்பட்டு, வங்கி மற்றும் நிதித்துறை உள்ளடங்கலான பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் திறந்துவிடப்பட்டன. இதன் விளைவாக வெளிநாட்டுகடன் விரைவாக அதிகரித்தது. 1960 இல் $62 மில்லியனில் இருந்து 1969 இல் $231 மில்லியனாக அதிகரித்த வெளிநாட்டுகடன் 1974 இல் $380 மில்லியனை அடைந்ததுடன், பின்னர் 1977-78 இல் படிப்படியாக அதிகரித்து 1986 இல் கிட்டத்தட்ட $4 பில்லியனாகியது.

சுதந்திர சந்தையை நோக்கிய அரசாங்கத்தின் திருப்பமும் அதனை தொடர்ந்த வாழ்க்கைத்தரத்தின் மீதான தாக்கமும் அதிகரித்தளவில் இனவாத கொள்கைகளை நோக்கி சரணடைவதுடன் ஒன்றிணைந்தது. பண்டாரநாயக்காவின் அரசாங்கம் தனது தேசியவாத வேலைத்திட்டத்தின் வங்குரோத்தை மூடிமறைக்க இனவாதத்தை பயன்படுத்தியதைப்போல், ஜெயவர்த்தனாவின் அரசாங்கமும் ''சுதந்திர சந்தை'' ஆட்சியை அறிமுகப்படுத்த இனவாதத்தை ஒரு பிரயோசனமான ஆயுதமாக கண்டுகொண்டது. 1980 களின் தமிழர் எதிர்ப்பு கலவரங்கள் 1983 இன் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பத்திற்கு நேரடியாக இட்டுச்சென்றன.

மில்லியன் கணக்கான மக்களுக்கு விபரிக்கமுடியாத ஏழ்மையை உருவாக்கையில், யுத்தத்தை நடாத்துவதற்கு அரசாங்கத்தால் அதிகரித்தளவில் பயன்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள் முக்கிய தனியார்மயமாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. 1987ம் ஆண்டின் அரச கொள்கையில் அரசு- உடைமை நிறுவனங்களை விற்றுத்தள்ளும் கொள்கை முதல்முதலாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 80 இற்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் கைகளுக்கு மாறியுள்ளன. 2000ம் ஆண்டளவில் தனியார்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் அளவு 21 சதவீத்த்தில் இருந்து 13.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

அரசு சொத்துக்களை தனியார்மயமாக்கல் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தபோதிலும், யுத்தத்தால் உருவாக்கப்பட்ட நிதிப்பிரச்சனையை சமாளிப்பதற்கு அது போதாததாக இருந்தது.1990 களின் மோதலின் போது ஒவ்வொருநாளும் அரசாங்கத்திற்கான யுத்தச்செலவு தலைசுற்றவைக்கும் 77.5 மில்லியன் டாலர்கள் என கணிப்பிடப்பட்டது.

மோதலில் இறுதியாக வெல்லலாம் என்ற அரசாங்கத்தின் கூற்று ஏப்பிரல்-மே 2000ல், கொழும்பு இராணுவத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை தொடுத்து வடக்கிற்கான பாதையையான ஆனையிறவு முகாமை கைப்பற்றியதன் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது.

அதிகரித்துவரும் நிதிநெருக்கடியுடன், அடுத்த வருடம் இலங்கையின் வரலாற்றில் முதல்தடவையாக பொருளாதார வீழ்ச்சியானது 1.4 சதவீதம் சுருங்கியதுடன், கடன் பாரிய அளவு அதிகரித்தது. மொத்த மக்கள் கடனானது கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதத்திற்கு உயர்ந்ததுடன், வெளிநாட்டுக்கடன் 10 பில்லியன் டாலர்களானது. ஜனவரி 2001ல் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 253 மில்லியன் டாலர்கள் கடனைப்பெற்றவுடன் மத்திய வங்கி ரூபாயைப் புழக்கத்தில் விட முடிவுசெய்தது.

2001 டிசம்பர் தேர்தலில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும், சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன்களுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. மிகவும் பலமான சர்வதேச நிதி நிறுவனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம், கடன்வாங்கும் நாட்டின் பொருளாதாரத்தை ''மறுசீரமைப்பதற்கான'' நிபந்தனையின் அடித்தளத்திலேயே கடன் வழங்கப்படும் என்றது. இந்த நடவடிக்கைகள் ''கட்டுமான சீர்திருத்த திட்டங்கள்'' என அழைக்கப்பட்டது. ஆனால், அண்மைய வருடங்களில் அவற்றின் தாக்கம், விஷேடமாக ஆபிரிக்காவின் ஏழ்மையான நாடுகள் சுகாதாரத்திற்கும் கல்வித்துறைக்கும் செலவழித்ததைவிட அதிகமான அளவு கடனுக்கான வட்டியாக திருப்பி செலுத்தியுள்ளன. இது சர்வதேச நாணய நிதியத்தை புதிய பெயர்களை புனைய நிர்ப்பந்தித்தது.

இதன்படி, கொழும்பு நிதியுதவிக்கான தனது விண்ணப்பத்தை ஏழ்மை குறைக்கும் மற்றும் உற்பத்தியை வசதிகளைப் பெருக்கும் (Poverty Reduction and Growth Facility) திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தது. இதுதான் வருமானம் குறைந்த நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சலுகைவழங்கும் வசதியாகும். விக்கிரமசிங்காவின் அரசாங்கம் முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகின்றது என்பதற்கு ஒரு ஏழ்மையை குறைக்கும் மூலோபாய பத்திரம் (Poverty Reduction Strategy Paper-PRSP) ஒன்றை முன்வைக்கவேண்டி இருந்தது.

2002 டிசம்பர் அரசாங்கம் ''இலங்கையை மீளப்பெறுதல்'' என்ற தலையங்கத்தின் கீழ் 252 பக்கங்களை அடங்கிய ஏழ்மையை குறைக்கும் மூலோபாயப் பத்திரத்தை முன்வைத்தது. அதன் ஆரம்ப பகுதியான ''வளர்ச்சிக்கான காட்சியை'' (Vision for Growth) கடந்த இரண்டு தசாப்தங்களாக இழந்த சந்தர்ப்பங்களுக்கான இலங்கை முதலாளித்துவத்தின் புலம்பல் என சுருக்கி கூறலாம்.

அப்பத்திரம் ''உண்மை என்னவெனில் இலங்கை பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது. இது கடனால் உருவான நெருக்கடியாகும். இதனை கட்டுப்படுத்தாவிட்டால், வேலையின்மையை அப்படியே இருக்க செய்வதுடன், எதிர்வரும் தலமுறையினரின் வருமானம் தாழ்வின் எல்லைக்கு சென்றுவிடும் '' என ஆரம்பிக்கின்றது.

நிலைமையை அவதானிக்கும் எவரும் இப்படியான ஒரு அறிவித்தலை, 50 வருட ஆட்சிக்கு பின்னர் இலங்கை முதலாளித்துவம் ஆளுவதற்கு முற்றுமுழுதாக அருகதையற்றது என்பதை ஒத்துக்கொள்கின்றது என்ற முடிவிற்கு வரவே கடமைப்படுவர். ஆனால் அரசாங்கத்தின் திரிக்கப்பட்ட சூழ்ச்சியின்படி, நெருக்கடிக்கான காரணம் அதன் முன்னைய ஆட்சியாளர்களுடன் இணைந்து பொறுப்பேற்கும் சர்வதேச நாணய நிதியத்தால் வழிநடாத்தப்பட்ட துரிதப்படுத்திய ''சுதந்திர சந்தை'' திட்டமே ஆகும்.

ஏழ்மையை மட்டுப்படுத்துவது தொடர்பாக அவ்வறிக்கை குறிப்பிடுவது வெறும் அலங்கார வேலையாகும். இந்த புதிய திட்டத்தின் உண்மையான நோக்கம், ஏற்கனவே பெறுமதியான நேரத்தை இழந்துவிட்ட நிலையில், புதிய பூகோள பொருளாதார ஒழுங்கமைப்பின் கீழ், இலாபத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு தன்னுடையை ஏனைய ஆசிய-பசுபிக் போட்டியாளர்களுக்கு மிகவும் பின்னால் இலங்கை தள்ளப்பட்டுவிடுமோ என்ற பயம்தான்.

அப்பத்திரம் தொடர்ந்தது, ''இலங்கை 1977ல் தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்க ஆரம்பித்தது. அதிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எவ்வாறிருந்தபோதிலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது உண்மையாக நிறுத்தத்திற்கு வராவிட்டாலும், அண்மைய வருடங்களில் இப்போக்கு மெதுவாகியுள்ளது. பலர் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் உள்ளீர்த்துக்கொள்வதன் மூலம் இப்போக்குடன் விரைவாகவும் வெற்றிகரமாகவும் சென்றுள்ளனர். அவர்கள் கூடியளவு திறந்த பொருளாதார கொள்கையையும், நெருக்கமான பொருளாதார உறவுகளையும் இக்காலகட்டத்தில் உருவாக்கிக்கொண்டனர். துரதிஸ்டவசமாக இந்த நாடு பின்தங்கிவிட்டது. ஒரு பலமான பொருளாதாரத்தை கட்டுவதற்கு மிகவும் முக்கியமானதான வேகத்தில் செல்லவில்லை அல்லது சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவில்லை'' என குறிப்பிடுகின்றது.

''முன்னுள்ள பாதை'' தொடர்பாக குறிப்பிடுகையில், ''அரசாங்க செலவுகளை வெட்டுதல், அரசுடமையான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், பொருளாதாரம் முழுவதிலும் வேலைத்தலங்களை வெட்டுதல் போன்றவற்றை அடித்தளமாக கொண்ட சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பொதுவான திட்டத்தை முன்வைக்கின்றது. கடன் நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ''பல துறைகளில் வெட்டுக்கள் அல்லது கத்தரிப்புகள்'' தேவை. ''முடிவற்ற வேலை'' என அழைக்கப்படும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு, முதலீட்டிற்கும் மற்றும் உலகம் முழுவதும் எமது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் சந்தை சாத்தியப்பாடுகளை தீவிரமாக தேடுதலும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, "உற்பத்தியை தனியார்துறையினர் கூடுதலாக எடுத்துக்கொள்வதற்காக வர்த்தக நடவடிக்கைகளை தனியார்மயமாக்கலை விரைவாக்குதல் அவசியம்" அத்துடன் "மக்கள் தொழில்களுக்கு இடையில் மாறுவதற்கு பாரியளவு நெகிழ்ச்சியுடன் இருத்தலை (Greater flexibility) உறுதிப்படுத்தவேண்டும்''. என குறிப்பிடுகின்றது. இது பாரிய வேலையின்மையையும், தொழில் பாதுகாப்பின்மையையும் மறைக்கும் வார்த்தையாகும்.

ஏழ்மையை குறைக்கும் மூலோபாயப் பத்திரத்துடன் அரசாங்கத்திடமிருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கான ''கடிதத்தின் நோக்கம்'' என்பதும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் அது நடைமுறைப்படுத்தவுள்ள கொள்கைகளை விபரிப்பதுடன், ஏற்கனவே ''மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயாராக'' உள்ளதாக கூறுவதுடன், ''நிதிக் கொள்கை தொடர்பான அவ்வாறான ஆலோசனைகளுடன் கலந்தாலோசிக்க தயாராக உள்ளதாக'' குறிப்பிடுகின்றது.

பொருளாதார, நிதிக்கொள்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு தாம் பொறுப்பெடுத்துள்ளதை வலியுறுத்துகின்றது. ''தனியார்துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தல்'', '' 'மறுபங்கீடு மற்றும் மாற்றீடு' செய்தல் தொடர்பான முன்னைய ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கையை விட்டொழித்தல்" போன்றவற்றிற்கு வசதியளிப்பது, பற்றாக்குறையான வளர்ச்சிக்கும், அதியுயர் ஏழ்மைக்கும் ''பொருளாதாரத்தின் மீது தொடர்ச்சியான பொதுத்துறையின் ஆதிக்கத்தை'' குற்றம்சாட்டுதல், ''உற்பத்தியை அதிகரிப்பதற்கு தடையாக உள்ளவற்றை கட்டுமான சீர்திருத்தத்தின் மீது கவனம் செலுத்தல் மற்றும் தனியார்துறையால் வழிநடத்தப்படும் அபிவிருத்திக்கு ஊக்கமளித்தல்'' போன்றவற்றை அது வலியுறுத்துகின்றது. இந்த முடிவினை சந்திப்பதற்கு பொதுநிதியை (அரசாங்க) மறுசீரமைக்கவுள்ளது.

இந்த அறிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களின் ஒப்புதலை தெளிவாகப் பெற்றுக்கொண்டது. ஏனெனில், அடுத்த 3 வருடத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய நிறைவேற்று அதிகாரிகள் குழு 18 ஏப்பிரல் 2003 அன்று 567 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

தொடரும்........

See Also:

இலங்கையில் அவசரகால நிலைமை பற்றிய குழப்பநிலை நிலவுகிறது

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்பு சதியை கண்டனம் செய்கின்றது

இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது

Top of page