World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு ஜிலீமீ ஷிணீuபீவீ தீஷீனீதீவீஸீரீஷ்லீஷீ தீமீஸீமீயீவீts யீக்ஷீஷீனீ tலீவீs ணீtக்ஷீஷீநீவீtஹ்? செளதியில் குண்டுவீச்சு - இப்பயங்கரக் கொடுமையால் யாருக்கு நன்மை? By Bill Vann நவம்பர் 8ம் தேதி, செளதி அரேபியத் தலைநகரான ரியாத்தில், பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல், மனித உயிர்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாமல், மிகப்பிற்போக்கான அரசியல் நோக்கங்களுக்காக நிகழ்த்தப்பட்ட கொடூரமான செயலாகும். இந்தத் தாக்குதலின் இலக்கு, ஒரு காம்பெளண்டிற்குள் வசித்துவந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினருமாவர்; இவர்கள் அனைவருமே, பெரும்பாலும், லெபனானிலிருந்தும், மற்ற அரபு நாடுகளிலிருந்தும், தெற்கு ஆசியா நாடுகளிலிருந்தும், வந்துள்ள முஸ்லீம்கள் ஆவர். வெடிமருந்துகள் ஏராளமாக கொள்ளப்பட்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று காம்பெளண்டிற்குள் செலுத்தப்பட்டு, ஒரு வீட்டிற்கருகில் வெடித்தது. குறைந்தது 18 பேருடைய உயிர்களையாவது குடித்த இந்தக் குண்டுத்தாக்குதல் 122 பேருக்கும் அதிகமானோரை காயப்படுத்தியும் விட்டது. இத்தாக்குதலில் குறைந்தது 5 குழந்தைகளாவது கொல்லப்பட்டனர், இன்னும் டஜன் கணக்கில் காயம் அடைந்தனர். காம்பெளண்டில் வாழுபவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதமாக இருக்கும், லெபனிய ஒப்பந்தத் தொழிலாளிகள், இறப்பையும் காயங்களையும் பற்றிக் கூறியுள்ளதை லெபனானின் Daily Star, செய்தி வெளியிட்டுள்ளதாவது: "உயிரிழந்தவர்கள் ஜாட் மற்றும் ரயா மெழெர் இருவரும் குழந்தைகள்; நீனா ஜெப்ரன், இரு குழந்தைகளுக்கு தாயாரான ரானியா செலே; ரிச்சர்ட் ஹைதர், அவருடைய மனைவி நான்ஸி, அவர்கள் சிறிய குழந்தை ஜாட்.... ஐந்து லெபனியர்கள் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது: நீமெஹ், அலைன் ம்ஷண்டப், காசன் டாவிலே, ஜாட், ரயா, ஆகியோரின் பெற்றோர்கள், சர்பல், மாகை மெழெர், குழந்தைகள் இறந்த விவரம் இன்னும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்க, செளதி அரசாங்கங்கள், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணம் அல் கொய்தாதான் என்று, சீக்கிரமாக குற்றஞ்சாட்டியுள்ளன; ஒரு செளதி அரேபிய நாளேடு, இஸ்லாமிய குழுதான் காரணம் என மின்னஞ்சல் வந்துள்ளதாக கூறியுள்ளது. "அரச குடும்பத்தையும், செளதி அரேபிய அரசாங்கத்தையும் அகற்ற அல்கொய்தா முயலுகிறது என்பது எனக்கு நன்கு தெளிவாகிறது" என்று அமெரிக்க அரசு துணை செயலாளர், ரிச்சார்ட் ஆர்மிடேஜ், தாக்குதலுக்கு மறுநாள், முன்னரே ஏற்பாடுசெய்யப்பபட்டிருந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்திற்காக இந்நாட்டிற்கு வந்திருந்தபோது தெரிவித்தார். முடியாட்சியின் உண்மை ஆட்சியாளராகிய பட்டத்து இளவரசர் அப்துல்லாவிடம், ஜோர்ஜ் புஷ், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு "செளதி அரேபியா பயங்கரவாதத்தின் மீது மேற்கொண்டுள்ள போரில்" அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளித்தார். பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை பிடிக்க, செளதிய பாதுகாப்புப்படைகளுக்கு, அமெரிக்க அரசாங்கம் உதவியளிக்கவும் முன்வந்துள்ளது. தன்னுடைய பங்கிற்கு, அரசர் பஹ்ட் (Fahd) தன்னுடைய இஸ்லாமிய விரோதிகளை "இரும்புக் கரங்களுடன்" நசுக்குவதாக உறுதிபூண்டார். ஆளும் குடும்பம் நாட்டின் பொருளாதாரத்தை நடத்துவதற்கு வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதால், அவர்களை இலக்காகக் கொண்டு தாக்கும் புதிய தந்திரத்தை அல்கொய்தா கொண்டிருப்பதைத்தான் ரியாதில் நடந்துள்ள தாக்குதல் சுட்டிக்காட்டியுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். லெபனிய, மற்ற வெளிநாட்டு முஸ்லிம்கள் சற்றுக்குறைவான சமய பழக்கவழக்கங்களை கொண்டுள்ளதால் அவர்கள் "சமய நம்பிக்கையற்றவர்கள்", என்று தீவிர இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கருதப்படுவதுதான் இத்தாக்குதலுக்குப் பின்னணியில், இருக்கும் நோக்கமாகும் என அவர்கள் மேலும் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் அல்கொய்தா பற்றிய உளவுத்துறை கல்வித்துறை ஆராய்ச்சியாளர்கள், இந்த அரசாங்க விளக்கத்தைப் பற்றி அவநம்பிக்கைதான் தெரிவித்துள்ளனர். "(அல்கொய்தாவின்) இலக்கு 1990களின் இடைப்பகுதியிலிருந்து கடைசிப்பகுதி வரை, அமெரிக்காவாகத்தான் உள்ளதே ஒழிய, தங்கள் சொந்த அரசங்கமாக இருந்தது கிடையாது" என்று வாஷிங்டனிலுள்ள ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள்பற்றிய பேராசிரியராக உள்ள நாதானியல் ப்ரெளன், சுதந்திர ஐரோப்பிய வானொலிக்குக் கூறினார். "மிகச் சமீபத்திய தாக்குதல் இலக்காக கொண்டிருப்பது, செளதி அரேபிய அரசாங்கம் அல்ல, ஆனால் செளதி குடிமக்களும், நாட்டில் வாழும் அயல்நாட்டு முஸ்லிம்களும் ஆவர். இது அல்கொய்தாவின் தாக்குதலாக இருந்தால், அது வழக்கமாக அவர்கள் கையாளும் முறையிலிருந்து மாறுபட்டதுமட்டும் அல்ல, அதிர்ச்சிதரும் வகையில் மாறுபட்டது ஆகும்." கிளின்டன் மற்றும் புஷ் நிர்வாகத்துடன் ஒரு பழைய பயங்கரவாத-எதிர்ப்பு அதிகாரியாக இருந்த ரோஜர் கிரீசே, இத்தாக்குதலை, அல்கொய்தா முன்னர் நடத்தியிருந்த தாக்குதல்களிலுருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார்; அவர்கள் எப்பொழுதும் தங்கள் செயல்கள் முஸ்லீம் நாடுகளில் உணரப்படும் என்பதில் கவனமாக இருந்தனர் என்றும், இத்தாக்குதலில் நிரபராதியான பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டிருப்பது, எந்தக் காரணத்தையும் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் முயற்சியில் அவர்களுக்கே பின்தாக்குதல் ஏற்படும் என்று கிரசே, Los Angeles Times க்கு கூறினார். உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன்மீது நடைபெற்ற செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள், அதேபோல 1998 ல் நடைபெற்ற கிழக்கு ஆப்பிரிக்க தூதரக அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல்கள் உட்பட, பொதுவாக அல்கொய்தாதான் செய்துள்ளது எனக்கூறப்படும் பயங்கரத்தாக்குதல்கள், நிரபராதியான உயிர்களைப் பாதிக்கும் செயலில் ஈடுபட்டதில் கொடூரத்துடன் மனித உயிர்களை நடத்தியதை பொருட்படுத்தவில்லை என்பது உண்மை. ஆனால், கடந்த சனிக்கிழமையன்று நடந்த தாக்குதலில் கொண்டிருந்த விருப்ப இலக்கு, மிகவும் சுற்றி வளைத்த தன்மையுடையதாகவும், தர்க்க அறிவிற்கே பொருந்தாததாக உள்ள பிற்போக்குத்தனத்தையும்தான் கொண்டுள்ளது. இத்தகைய தாக்குதலின் தன்மை, மறைந்திருக்கும் சிலருடைய தொடர்பும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என சுட்டிக்காட்டுகிறது; ஏனென்றால், தன் அரசாங்கத்தின் நோக்கங்களைச் செயல்படுத்த விரும்பும் ஒரு அல்லது இன்னொரு உளவுத்துறையினரும், இதுபோன்றவற்றில், குறிப்பாக செயல் பட்டிருக்கக்கூடும். அல்கொய்தாவைப் பொறுத்தவரையில், அத்தகைய நிறுவனங்களிடம் அதன் தொடர்பு மிக நெருங்கியதும், நீண்டகாலமாக இருப்பதும் ஆகும். இந்த அமைப்பின் பெயரளவுத் தலைவரான, ஓசாமா பின் லேடன், ஒரு பெரிய செல்வம் கொழிக்கும், அமெரிக்காவில் புஷ் குடும்பத்தோடு வணிக உறவுகளைக் கொண்டிருந்த, செளதி குடும்ப வழித்தோன்றலும் ஆவார். இவரே CIA ஆதரவுடன் ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் ஆதரவுடன் செயல்பட்டுவந்த ஆட்சியைக் கவிழ்க்க முஜாஹைதீன் அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியும், ஆதரவு கொடுத்தும், முக்கிய பிரமுகராக உயர்ந்தார். கிட்டத்தட்ட இதேநேரத்தில்தான் செளதி உளவுத்துறைத் தொடர்புகளும் ஆரம்பித்து, பின்னர், தொடர்ந்திருக்க வேண்டும். இராச்சியத்தின் உளவுத்துறையின் பழைய தலைவரான இளவரசர் துர்கி அல்-பைசல், அரச குடும்பத்திலிருந்து பின் லேடன் அமைப்பிற்கு பணம் செல்ல வழிவகை செய்ததாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறார். பின்னர், அல்கொய்தா மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான் இரண்டிற்குமே முக்கியமான நேரத்தில் ஆதரவளித்த பாகிஸ்தானிய இராணுவ உளவுத் துறையாக ISI உள்ளது. செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல்களுக்கு பிறகு, ISI க்கும் விமானத்தை கடத்தியதாகக் கூறப்படுபவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும், 100,000 டாலர்கள் தொகை செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு காரணம் எனக் கருதப்பட்ட மொகம்மது அட்டாவிற்கு, அப்பொழுது ISI இன் தலைமை இயக்குனராக இருந்த, துணைத் தளபதி மக்மூத் அஹ்மத் ஆணையின் பேரில் அனுப்பிவைத்ததற்கு சான்று உட்பட ஆதாரம் காண்பித்த அறிவிப்பையும், Times of India வெளியிட்டது. வாஷிங்டனுடைய வலியுறுத்தலின் பேரில், அகமது அறிக்கை வந்த சிறிது காலத்தில் பதவியைவிட்டு நீக்கப்பட்டாலும்கூட, ISI க்கும் CIA க்கும், இடையே இருந்த உறவுகள் நெருங்கிய தொடர்புகளாகத் தொடர்ந்தன. அதேபோல், இஸ்ரேலிய உளவுத்துறையுடனான தொடர்பு இருக்கக் கூடும் என்ற கருத்தையும் புறக்கணிக்க முடியாது; ஏனெனில், இதன் ஒற்றர்கள், இஸ்ரேலிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளின் நோக்கங்களுக்காக, பல இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களில் இருப்பதாகவும், பல பயங்கரவாத தாக்குதல்களை இது தூண்டி விடுவதாகவும், பரந்த அளவில் சந்தேகப்படப்படுகிறது. ரியாத்தில், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலுக்கான குண்டுவீச்சுக்கள் நடத்துவதற்கு வெளிநாட்டு உளவுத்துறையின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும்? கிட்டத்தட்ட உலகின் கால்பகுதி எண்ணெய் இருப்புக்களின் இருப்பிடமாக உள்ள இடத்தில், இன்னும் சொல்லப்போனால், உறுதி இல்லா நிலையில் செளதி முடியரசு அமர்ந்துள்ளது. எனவே இது பூகோள உறவுகளில், மிக முக்கிய மூலோபாய காரணியாக இருக்கிறது. அரசகுடும்பமே மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளது, சிலர் புரட்சி வெடிப்பதைத் தவிர்க்க சர்வாதிகாரமுறையில் சில சீர்திருத்தங்கள் வேண்டுமெனக் கூறியும், சிலர் அப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் தங்கள் அழிவைத்தான் விரைவில் கொண்டுவருமெனக் கூறியும் வருகின்றனர். சமூக துருவமுனைப்படல், இவ் இராச்சியத்தை அரசியல் வெடிமருந்துக் குவியலாகச் செய்துள்ளது. 7,000 க்கும் மேற்பட்ட இளவரசர்கள் கும்பல் கொண்ட அரச குடும்பம் 800 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய எண்ணெய் செல்வத்தை தனியார் வங்கிக் கணக்கில் வைத்திருக்க, நாட்டு மக்கட்தொகையில் 30லிருத்து 40 சதவிகிதம், வேலையில்லா திண்டாட்டத்தில் வாடுகின்றனர். மக்கட்தொகை வளர்ச்சியும் பொருளாதார தேக்கமும், சராசரி வருமானத்தை முன்பிருந்ததைவிட மூன்றில் ஒரு பகுதியாகக் குறைத்துவிட்டன. இந்த குண்டுவீச்சு, அல்கொய்தாவோடு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படும் இஸ்லாமிய போராளிகள்மீது மிகப்பெரிய அளவில் ஒடுக்குமுறைப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுவதற்கு மட்டுமல்லாமல், கூடுதலான பரந்தமுறையில் உண்மையான எதிராளிகள் மீதும், எதிர்காலத்தில் அரசியல் விரோதிகளாகும் திறன் கொண்டவர்கள் மீதும் கடுமையான அடக்குமுறை பிரச்சாரத்தை செளதிய ஆட்சி மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில், நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள ஷியைட்டுக்களும் அடங்குவர்; இப்பகுதி எண்ணெய் உற்பத்தியின் மத்திய பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்கள் நெடுநாளாகவே, பிரித்தாளப்படுவதினாலும், சுரண்டுதலுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாலும் மிகுந்த வேதனையில் குமுறிவந்துள்ளனர். ஜனநாயக உரிமை கோருவோரும், வேலை கேட்போரும் கூட சிறையில் தள்ளப்படுகின்றனர். சமீபத்திய கடும் நடவடிக்கைகளுக்கு முன்பே, மனித உரிமைக்குழுக்கள் செளதி அரேபியச் சிறைகளில் 400க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் உள்ளதாகவும், இவர்களில் கடந்த மாதம் அமைதியான முறையில் ஜனநாயகமயப்படுத்தலையும், வேலைகளையும் கேட்டதற்காக சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டோரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கின்றன. தங்கள் பங்கிற்கு, வாஷிங்டனில் உள்ள உளவுத்துறை முகவாண்மைகள், செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் உட்பட, அமெரிக்க தாக்குதல்கள் பலவற்றில் தொடர்புடைய, அடையாளம் காட்டப்பட்ட விமானக்கடத்தல்காரர்கள் 19 பேரில் 15 பேர், செளதி அரேபியர் என்றும், இவ்விஷயத்தில் செளதி ஆட்சி போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறியுள்ளன. அமெரிக்க-செளதி கூட்டு பயங்கரவாத - எதிர்ப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாளில், சமீபத்திய குண்டு வெடிப்பின் காலப் பொருத்தம், அமெரிக்க குறிக்கோள்களுக்கு மிகவும் சாதகமாக இருந்திருக்க முடியாது. இந்த முகவாண்மைகளில் ஏதாவது ஒன்றினால் பயங்கரவாத சீண்டிவிடல் அல்கொய்தா கூறுகளினை சூழ்ச்சியாய் கையாளுதல் மூலம் அரங்கேற்றப்படலாம் என்பதை எவ்விதத்திலும் விலக்கிவிட முடியாது. அல்கொய்தா போன்ற பயங்கரவாத குழுக்களின் அரசியலும் நடைமுறைகளும், அரசாங்க ஒற்றர்படைகளின் உந்துதலுக்கு எளிதில் எதிர்விளைவை ஏற்படுத்தும் தன்மையுடையனவாகும். அரசியல் கருத்தளவில், அல்கொய்தா, ஏழாம் நூற்றாண்டின் அரேபியப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமியக் காலிப்பின் (சுல்தானின்) ஆட்சியை மீட்கவேண்டும் என்ற சிந்தனையை தீவிரமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு இயக்கமாகும். இந்த பிற்போக்குக் கருத்துடைய, சமயக் கண்ணோட்டம், செளதிய ஆளும் செல்வந்த தட்டிற்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்களையுடைய பிரிவிலேயே இருக்கிறது; இதைத்தான் பின் லேடன் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். பின் லேடனும், அவருடைய சகாக்களும், தங்கள் விருப்பப்படியோ அல்லது பிற உளவுத்துறைச் செல்வாக்கிற்குட்பட்டோ, முற்றிலும் சாதாரணத் தொழிலாளர்களுக்கு இலக்கு வைக்கும் எண்ணம் உடையவர்களேயாவர்; ஏனெனில், தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் விரோப்போக்குடைய சமூக சக்திகளின் நலன்களுக்காகத்தான் அவர்கள் எப்பொழுதும் பேசி வருகின்றனர். அல்கொய்தா உபயோகிக்கும் பயங்கரவாத வழி முறைகள், கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கப்படுபவையே ஒழிய, செளதி அரேபியாவில் ஆட்சி நடத்தும் முடியரசையோ, ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கவேண்டும் என்ற இலக்கையோ கொண்டிருக்கவில்லை. இறுதிப் பகுப்பாய்வில், இந்த சமீபத்திய செயல்கள் இன்னும் கடுமையான அடக்குமுறைகள் கொண்டுவருவதைத்தான் இவை நியாயப்படுத்தும்; மேலும், "பயங்கரவாதத்தின் மீதான போரில்" அமெரிக்க-செளதி தொடர்புகளை நெருக்கமாக்கும். குற்றத்தை யார் தயாரித்தவர்கள் எனக் கேட்கப்படும் தேடலில், ஒரு அடிப்டைக் கேள்வி, காலம் காலமாகக் கேட்கப்படுவது உண்டு; "இதில் யார் இலாபம் அடைகிறார்கள்?" ரியாத் குண்டு வெடிப்பைச் செய்ததற்கு யார் பொறுப்பு என்ற வினாவிற்கு அமெரிக்காவிலும், செளதியிலும் துப்புதுலக்க முற்படுபவர்கள், தங்களுக்கருகிலிருந்து தேடத்தொடங்குவதே சாலவும் சிறந்தது. |