:
ஜேர்மனி
Arguments of an authoritarian state: Brandenburg intelligence service
slanders the WSWS
ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் வாதங்கள்: பிராண்டன்பேர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச
வலைத் தளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது
By Ulrich Rippert
11 November 2003
Back to screen version
செப்டம்பர் 16ம் தேதி அதிகாலையில், பிராங்க்பேர்ட்-ஒடெர் நகரத்திலுள்ள குடிவரவு-அகல்வு
அலுவலகத்தில், ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. ஒரு சில மணி நேரத்திற்குள், பிரான்டன்பேர்க் உளவுப்பணித்துறையின்
(Verfassungsschutz)
வலைத் தளம், உலக சோசலிச வலைத் தளத்தை,
"இடதுசாரி தீவிரவாத அமைப்புக்களின்" ஒரு பகுதி, என வர்ணித்து ஒரு
கட்டுரையை வெளியிட்டது. இக்கட்டுரை, கருத்துச்சிதைவுகள், பகுதி-உண்மைகள், குற்றச்சாட்டுக்கள், தவறான கூற்றுக்கள்
ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
இதில் முதலாவதாக வெளிப்பட்டு நிற்பது, கட்டுரை வெளியிடப்பட்டுள்ள தேதியாகும். போலீசார்
கூறியபடி, செப்டம்பர் 16ம் தேதி, செவ்வாய்க்கிழமை, காலை 3.50 க்கு, குடிவரவு-அகல்வு அலுவலகத்தின்மீது
தாக்குதல் நடந்தது.
போலீஸ் விசாரணையோ நாள் முழுவதும் நடந்தது. உள்ளூர்ச் செய்தித்தாளான
Märkische Allgemeine Zeitung
மறுநாள் தெரிவித்தது போல், பகலில் இடம் பெற்ற "சம்பவம் நடந்த
இடத்திலேயே தகவல் கொடுப்பு", "பிராங்பேர்ட் குடிவரவு-அகல்வு அலுவலகத்தின், பிரிவுத்தலைவர், ரெய்னர் டார்லக்"
செய்தியாளர்களிடம் பேசினார்.
புதன்கிழமை காலை, முதல் செய்தி ஊடகத் தகவல்கள் வெளிவரலாயின. ஆனால்,
உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையோ, தாக்குதல் நடந்த தினமான, செவ்வாய், செப்டம்பர், 16ம் தேதி இடப்பட்டு
வந்தது. இப்பொழுது இந்தக் கேள்வி எழுகிறது; தாக்குதலைப்பற்றி, முன்தகவல் உளவுத்துறைக்குக் கிடைத்ததா? இரவுச்
சம்பவங்கள் பற்றி, யாரால், எப்பொழுது, அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது?
இரண்டாவது முரண்பட்ட தன்மை, சம்பவ இடத்தில் கண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும்
உலக சோசலிச வலைத் தள கட்டுரை பற்றிய மதிப்பீடு ஆகும். சம்பவத்தைப்பற்றி செய்தி நேரடியாகத் தெரிந்தவுடனேயே,
எந்தத் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்படும் முன்னரே, உளவுப்பணித்துறை, குற்றவாளிகள் சம்பவ இடத்தில்,
கட்டுரையை விட்டுச்சென்றதாகவும், இதுவே கடிதமூலம் நிகழ்ந்ததற்குப் பொறுப்பு ஏற்பதுபோலாகும் என்றும் முடிவிற்கு
வந்துவிட்டனர். ஏன்? எந்தத் தகவலின்பேரில் இந்த மதிப்பீடு ஆதாரம் கொண்டுள்ளது?
போலீசார் கருத்தின்படி, கட்டுரையில் எந்தக் கையெழுத்தோ, யாரால் செய்யப்பட்டது
என்றோ குறிப்பிடப்படவில்லை. இக்கட்டுரை, அலுவலகக் கட்டிடத்தின் "நுழைவாயிலில்" கண்டு எடுக்கப்பட்டது.
கட்டிடமோ, சாலையை ஒட்டி நேரடியாக அமைந்துள்ளது. அங்கு முன்புற முற்றம் ஏதும் கிடையாது. குற்றவாளிகளோ
கட்டிடத்தில் நுழையவில்லை. சொல்லப்போனால், கட்டுரையானது அலுவலகங்களுக்குச் செல்லும் பக்கப் பாதையில் காணப்பட்டது.
அது அங்கே, முன்னதாகவோ அல்லது பின்போ, எவராலும் வைக்கப்பட்டு இருக்கலாம்.
இவ்வாறு, தாக்குதலையும் கட்டுரையையும் தெளிவாக நேரடியாகத் தொடர்பு படுத்துவது
ஏதுமில்லை. இதுவரை கட்டுரையை யார் விட்டுச் சென்றுள்ளார் என்பது தெளிவாக இல்லை என்பதோடு, குற்றவாளிகளாக
இருக்கமுடியாது என்பதற்கு சில தடயங்கள்தான் உள்ளன. காற்று அதிகமுள்ள செப்டம்பர் இரவு, அது உள்ளே
பறந்துவந்திருக்கலாமோ என்ற கோணம் ஒருவரால் கணக்கில் எடுத்து ஆராயப்பட்டிருக்கவும் கூடும். குற்றவாளிகள்,
தங்கள் நடவடிக்கைகளுடன், கட்டுரையை தொடர்புபடுத்த நினைத்திருந்தால், உடைக்கப்பட்ட ஜன்னல்கள் வழியே, அதை
எளிதாக உள்ளே போட்டிருக்கமுடியும். அலுவலகத்திற்குள், துர்நாற்றம் வீசும் திரவங்கள், பல ஜாடிகள், அவ்வாறுதான்
வீசப்பட்டிருந்தன.
உலக சோசலிச வலைதள கட்டுரைக்கும், தாக்குதலுக்கும் இடையே உள்ள தொடர்பு, தெளிவற்றதாகவும்
சந்தேகத்திற்குரியதாகவும் இருக்கும்போது, தாக்குதல் நடந்த சிலமணி நேரத்திற்குள்ளேயே, உளவுத்துறை, இக்குற்றத்தின்
மிகமுக்கியமான தன்மை, கட்டுரை எனச் சாதித்தது. உளவுத்துறையின் ஒன்றரைப்பக்க அறிக்கை, உலக சோசலிச வலைத்
தள கட்டுரை பற்றியே முற்றிலும் கருத்துத் தெரிவித்திருந்தது. வறட்சியான சொற்களில், உடைமைக்கு ஏற்பட்ட சேதம்
பற்றிக் குறிப்பிட்ட முதல் ஐந்து வரிகளுக்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தள கட்டுரை பற்றி, முழுக் குற்றச்
சாட்டுக்களாக ஒன்பது பத்திகள் எழுதப்பட்டிருந்தன.
இரண்டாவது பத்தியில், உளவுத்துறை கீழ்க்கண்ட உண்மை நிகழ்ந்ததாகக் கூறுகிறது: "அவர்கள்
(குற்றவாளிகள்) குற்றம் நடந்த இடத்தில், ஓர் அறிவிப்பை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் வெளிவந்ததை,
விட்டுச் சென்றுள்ளனர்."
முதலில், கட்டுரையை யார் விட்டுசென்றது என்பதே முற்றிலும் தெளிவாகத் தெரியாது. இரண்டாவது,
"அறிவிப்பு" என்ற சொல் தவறான அர்த்தத்தைக் கொடுக்கக் கூடும்; இது கட்டுரைக்கும், குற்றவாளிகளுக்கும் நேரடித்
தொடர்பு இருப்பது போல் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. அறிவிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நபரைப்பற்றி அல்லது நிகழ்ச்சியை
பற்றி கூறுவது ஆகும். ஆனால், இந்தக் கட்டுரை, குற்றவாளிகள் கூறும் அறிவிப்பு அல்ல, உலக சோசலிச வலைத் தளம்
வெளியிட்ட ஒரு கட்டுரை ஆகும்.
இதைப்பற்றி விசாரிக்கும் அரசாங்க வக்கீலும் இவ்வாறுதான் கருதுகிறார்.
Berliner Zeitung,
சம்பவம் நடந்த மறுநாள் இவ்வாறு எழுதியது: "மேலும், அலுவலக பகுதிக்குள் நுழையும் இடத்தில், ஒரு கடிதம் கண்டு எடுக்கப்பட்டது.
ஆனால், அரசாங்க வக்கீல் உல்ரிக் ஷேர்டிங்கின் (Ulrich
Scherding) கருத்தின்படி, 'இதைப் பொறுப்பேற்கும் ஒரு கடிதமாகக்
கொள்ளமுடியாது'; ஏனெனில், இது வெளியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக இரண்டரை ஆண்டுகளுக்குமுன் வெளியிடப்பட்ட,
ஒரு 'பொதுக்கட்டுரை'யாகும்." பின்பு ஒரு தொலைபேசி உரையில், ஷேர்டிங்க், பொறுப்பு ஏற்றுக்கொண்டு
எந்தக்கடிதமும் இல்லையென்றும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட கட்டுரை, பொதுவாக அனைவருக்கும் கிடைக்கக் கூடிய
ஆதாரங்களிலிருந்து, தஞ்சக் கொள்கை பற்றிய குறைபாடுகளைக் கூறியது என்றார்.
இதற்கு மாறாக, உளவுத்துறை, கட்டுரைக்கும் தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு
ஒன்றைக் கற்பித்து, இக்கட்டுரை, " குற்றத்தின், இடது-சாரி தீவிரப் பின்னணியைப்" புலப்படுத்துவதாக அமைந்துள்ளது
என்று கூறுகிறது. தாக்குதலின் இலக்கு, கட்டிடத்தில் எழுதப்பட்டுள்ள கோஷங்கள், "முக்கியமாக சம்பவ இடத்தில், எழுதப்பட்டுள்ள
முறை, இவை அனைத்தும், குற்றவாளிகளின், இடதுசாரி தீவிர தன்மையை" தெளிவாகக் காட்டுகின்றன என்று தெரிவிக்கிறது.
இதே கூற்று அடுத்த பத்தியிலும், பழையபடி சொல்லப்படுகிறது: "குறிப்பாக,' உலக சோசலிச வலைதளத்தில்',
2001 பெப்ரவரியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை, இக்குற்றத்தின் தீவிர இடதுசாரிப்பின்னணியைத் தெளிவாகக் காட்டுகிறது."
இந்த "இடதுசாரி தீவிரம்" என்பது, கட்டுரை, மற்றும் உலக சோசலிச வலைத்
தளத்தை பொறுத்தவரையிலும், முற்றிலும் தவறானது, அவதூறானது. சட்டப்படி, இது ஒரு தவறான குற்றச்சாட்டு
ஆகும்.
உலக சோசலிச வலைத் தள கட்டுரை, சம்பவ உண்மைகள், அவற்றின் மதிப்பீடுகள் ஆகியவற்றை
கூறியதை பொறுத்தவரை சரியானதேயாகும். ஜேர்மன் எல்லைப் பகுதிகளில் மோசமான நிலைமை இருப்பதை அம்பலப்படுத்துவதோடு,
பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் பற்றியும் திட்டவட்டமான எண்ணிக்கையைத்தான் மேற்கோள்களாகக் காட்டியுள்ளது.
பொதுவாகச் சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களை, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் போன்றவற்றைத்தான் அடிப்படையாகக்
கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையோ அல்லது உலக சோசலிச வலைத் தளத்தின் எந்தக் கட்டுரையோ வன்முறை நடவடிக்கைகளுக்கு
அழைப்பு விடுத்தது கிடையாது. முற்றிலும் மாறாக, கட்டுரையானது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அரசு மற்றும் இனவாத
தாக்குதலைக் கண்டனம் செய்கின்றது மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கிறது.
இறுதியாக, WSWS,
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் அதன் ஜேர்மன் பகுதியான, சோசலிச சமத்துவக் கட்சி (PSG,
Partei fur Soziale Gleichheit) ஆலும் வெளியிடப்படுகிறது.
PSG சட்டபூர்வமாக
அங்கீகரிக்கப்பட்டுள்ள, பல மாநில கூட்டாட்சித் தேர்தல்களில் பங்கு பெறும் ஜனநாயகக் கட்சி
ஆகும். கொள்கை அடிப்படையில், தனிப்பட்ட வன்முறையை உடைமைகள்மீதும்
அதுவும் தனிநபர்களுக்கு எதிராகவும் இழைப்பதற்கு எதிர்ப்பையே கொண்டுள்ளது.
உளவுத்துறை இதுபற்றி நன்கு அறியும், இதையொட்டி, கட்டுரையின் ஆசிரியர் "சட்டப்படி
தாக்கமுடியாதவராகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும், கட்டுரையைக் குற்றம்
சார்ந்ததாக மாற்றுவதற்காக, அதிகாரிகள் கீழ்க்கண்ட தெளிவற்ற
வாதமுறையைக் கையாள்கின்றனர். சீர்கேடான சம்பவம் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும்
கட்டுரை இருந்ததால், வன்முறைச்சம்பவங்கள், "இடதுசாரி தீவிரத்தன்மை" வாய்ந்தவை எனக் கொள்ளப்படவேண்டும்.
இத்தகைய சுற்றுவாதங்கள், தங்களுடைய நினைப்புக் கருத்துக்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளன என்பதால் எதையும்
நியாயப்படுத்த பயன்படுத்த முடியும். அது அரசினால் செய்யப்படும் அச்சுறுத்தலையும் தன்னிச்சையான நடவடிக்கைகளையும்
நியாயப்படுத்த சேவை செய்கிறது.
கட்டுரை கண்டு பிடிக்கப்பட்ட இடத்தை வைத்துப் பார்க்கும்போது, "இக்கட்டுரையும்,
இதேபோன்ற பல வெளியீடுகளும், மொத்தமாக எடுத்துக்கொண்டால், வன்முறையை வளர்க்கும் அல்லது வளர்க்கத்தூண்டும்
தன்மையுடையவை" என புலனாய்வுத் துறைகூறுகிறது. அது மேலும்: "இத்தகைய கட்டுரைகள்தாம் வன்முறைக்கு
பாதைபோட்டுக் கொடுக்கின்றன." என கூறுகின்றது.
சிந்தனைகளை வெளியிடும் சுதந்திரம்
இத்தகைய வாதமுறை, ஒரு போலீஸ் அரசு வழியில் நின்று, கருத்துக்களை வெளியிடுதல், பத்திரிகை
சுதந்திரம் ஆகியவற்றின்மீதான அடிப்படை தாக்குதலைத்தான் வெளிப்படுத்துகிறது. சம்பவ உண்மைகளை ஆதாரமாகக்
கொண்டு எழுதப்பட்ட கட்டுரையில் வன்முறைக்கோ மற்ற குற்ற நிகழ்ச்சிகளுக்கோ தூண்டுதல் இல்லையென்றால், அத்தைகைய
முறையில் அவதூறு எனக் கூறமுடியாத தன்மை கொண்டது என்றால், அதனுடைய உள்ளடக்கங்கள், சிந்தனை வெளிப்படுத்துதற்கான
உரிமையால் பாதுகாக்கப்படுகின்றன.
ஜேர்மன் அரசியலமைப்பின் ஐந்தாவது பத்தி திட்டவட்டமாகக் கூறுகிறது: "பொதுவாகக்
கிடைக்கக்கூடிய ஆதாரங்களை தடையின்றி பயன்படுத்தி, தன்னுடைய கருத்துக்களை, சொற்கள், எழுத்துக்கள், படங்கள்
மூலம் வெளிப்படுத்தும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. செய்தி ஊடகத்தின் சுதந்திரமும், அச்செய்திகளை ஒலி/ஒளி பரப்புதல்,
திரைப்படங்கள் மூலம் அறிவித்தல் முதலியவற்றிற்கு உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. இதற்குத் தடை எதுவும் கிடையாது."
சட்டப்படி எக்குற்றத்திற்கும் உட்படாத ஒரு கட்டுரை பற்றி, வன்முறைச் சம்பவத்தோடு
தொடர்புபடுத்தி, அக்கட்டுரை வன்முறையை வளர்க்க அல்லது அதற்குக் காரணம் என உளவுத்துறை கூறுவது, தடைபோடுவதற்கு
உட்குறிப்பாக உள்ள கோரிக்கை என்பதோடு, அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சிந்தனை வெளீயீட்டு உரிமைக்கும்
முரணானது ஆகும்.
உளவுப்பணித் துறையின் வாதப்போக்கை எடுத்துக்கொண்டால், எவ்விதமான திறனாய்வுச் செய்தி
வெளியீட்டையும் பயங்கரவாதத்துடன் தொடர்பு உடையது எனக் கூறிவிட முடியும். ஒரு மூளைகலக்கமுடைய அல்லது
தூண்டுதலுக்குட்பட்டு யாரேனும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தால், அது அரசாங்கத்தின் அரசியல் விரோதிகளை
குற்றஞ்சார்ந்தவர்கள் எனக்கூறிவிடப் போதுமானது போலும்.
சமூக நலதிட்ட செலவுகள் பெரிதும் குறைக்கப்பட்ட, அரசாங்கத்தின் "2010 செயற்பட்டியல்"
திட்டம் பற்றி குறைகூறுவோர் அனைவர் மீதும், வழியற்ற, வேலையில்லாத இளைஞன் ஒருவன் மனமுடைந்து கிறுக்குப்பிடிக்கும்
செயலில் ஈடுபட்டாலும், இதே வாதங்களை பயன்படுத்தமுடியும். அல்லது, நாம் முன்பு ஒரு கட்டுரையில் எழுதியதுபோல்,
ஸ்வீடனின் யூரோ எதிர்ப்பாளர்கள் தான், வாக்கெடுப்பு உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அதற்கு முக்கிய ஆதரவாளராக
இருந்த அன்னா லிண்டின் கொலைக்கு "பாதை அமைத்துக் கொடுத்தனர்" என்று குற்றஞ்சாட்டக் கூடும். இத்தகைய வாதங்கள்
அபத்தமானவை என்பது மட்டுமில்லாமல், அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் மீறுகின்றன.
அக்டோபர்மாத நடுவில், ஒரு தொலைபேசி உரையாடலில், போஸ்ட்டாமிலுள்ள
உளவுத்துறை அலுவலகத்தின் துணை இயக்குனரும், இத்துறையின் வலைத் தள ஆசிரியருமான ஜொர்ஜ் மில்பிராட்
(Jörg Milbradt)
கட்டுரை ஆசிரியர் என்ற முறையில், அவரோ அல்லது உளவுத்துறையோ
WSWS கட்டுரையை குற்றச்சம்பவத்துடன் இணைக்கவில்லை என்றும், பிராங்க்பேர்ட்-ஒடெர்
தாக்குதல் நடத்திய குற்றவாகளிகள்தாம் அவ்வாறு தொடர்புபடுத்தியுள்ளனர் என்று, தாங்கள் வெளியிட்டதை காத்துக் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையும் தவறானது ஆகும்.
WSWS கட்டுரையை அங்கு
வைத்தவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியாது. தூண்டுதலுக்கு உட்பட்டவர் இல்லையென்றாலும், ஏதோ குழப்பமடைந்த
நபர், ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது அரசியல் செயல் எனக்கருதியவர், இதைச் செய்திருந்தாலும்கூட, இவ்வழியிலான
உளவுத்துறையின் வாதம் அறிக்கையை நியாயப்படுத்த முடியாது.
மில்பிரட்டின் கூற்றான, சம்பவ இடத்தில் கட்டுரை காணப்படுவது அதன் பொருளுரை குற்றவியலோடு
தொடர்புடையதை காட்டுகிறது என்பதும் அபத்தமானது ஆகும். குடிவரவு அகல்வு அலுவலகத்தில் உள்ள மற்றைய ஆவணங்களின்
தன்மை, உடைந்த ஜன்னலுக்கு அருகே இருப்பதால் மாறிவிடவில்லை. ஜொர்ஜ் மில்பிராட், மற்றும் உளவுத்துறை அறிக்கைதான்
WSWS
கட்டுரையை குற்றஞ்சார்ந்த செயலாகக் காரணத்தொடர்பு காட்டிப் பேசுகிறது.
"WSWS
கட்டுரையும், இதேபோன்ற கட்டுரைகளும் மொத்தமாக பார்க்கும்போது, வன்முறை ஏற்படுத்தக்கூடிய தன்மையை
வளர்க்க அல்லது செய்யத் தொடர்புடையவை" என்று மில்பிரட்டும் உளவுத்துறையாளர்களும் சொல்லுகின்றனரே ஓழிய, பிராங்க்பேர்ட்-ஒடெரில்
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தவரோ அல்லது உடைத்தவர்களோ அல்ல. அவர்கள்தான் "குற்றஞ்சார்ந்த செயல்களுக்கு
பாதைபோட்டுக் கொடுப்பவையே இத்தகைய கட்டுரைகள்தாம்." என்று எழுதியவர்கள்.
குற்றம் சார்ந்த செயல்கள் எனக்கூறும்போது, மிகநுட்பமானமுறையில், அதிகாரிகள் கவனத்தைச்
செலுத்தவேண்டும். அதுவும், அரசியல் பூசல்களில் சான்றாக கொள்ளப்படுபவை, அதிகாரபூர்வமானவை எனக்கருதப்படும்
உளவுத்துறை அறிக்கைகளுக்கு குறிப்பாக இது பொருந்தும். மில்பிரட்டும் போஸ்ட்டாமின் உளவுத்துறையும் இந்த நுட்ப புத்தியைச்
செலுத்தும் கடமையை மிகவும் அதிகமாக மீறிவிட்டனர்.
உளவுத்துறை, அதுவும் ஓர் அரச அதிகாரம் கொண்ட துறை, எந்தக்குற்ற நெறிகளையும்
மீறாத கட்டுரை ஒன்றை, குற்றம் சார்ந்தது என்று கூறுகிறார்களே என்ற கடிந்துரைக்கு, மில்பிரட் கூறிய பதில்:
"இந்தக் கட்டுரை ஒன்றும் அத்தனை தீமைகொள்ளாதது அல்ல. "ஜனநாயக அரசை அடிப்படையிலேயே குறைதான் கூறியுள்ளது."
இதுவும் உண்மையல்ல. WSWS
கட்டுரை, "ஜனநாயக அரசு பற்றி அடிப்படைக் குறை" எதையும் கூறவில்லை. "ஜனயநாயக அரசு" என்பதிலிருந்து வேறுபட்டுள்ள
அரசாங்கத்தைத்தான் குறை கூறியுள்ளது. மேலும் அதை, அது வெளியாரையும் அகதிகளையும் நடத்தும் முறையில் அடிப்படை
ஜனநாயக உரிமைகளை, கொள்கையளவில் மீறுவதாகத்தான் கூறியுள்ளது. அரசாங்கத்தை அரசியல் ரீதியாய் குறைகூறுதலை,
அரசின்மீதும் சமுதாய ஒழுங்கின்மீதுமான தாக்குதல் என்று இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல், உடனே எடுத்துக்கொள்வது,
சர்வாதிகார சிந்தனைப்போக்கின் வாடிக்கையான தன்மையே ஆகும்.
மேலும், சமுக ஒழுங்கு பற்றிய
தீவிர குறை கூறல்கூட, சிந்தித்தல், வெளிப்படுத்துதல் ஆகிய சுதந்திரங்களினால்
பாதுகாப்பிற்குட்படுகின்றன, எனப்படுதவதோடு, அவை "தீவிரவாதம்" என்று எடுத்துக்கொள்ளப்படமாட்டா. கூட்டாட்சி
உளவுத்துறை அலுலகமே, இக்கருத்தை, இணையத்தில் காணக்கூடிய, வெளியிட்டுள்ள குறிப்பு புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
"கடும் நடவடிக்கை அல்லது தீவிர" (Extremist or
Radical) என்ற பிரிவில், இந்த ஆவணம் தெரிவிப்பதாவது: "நியாயமற்ற
முறையில் இது ("கடும் நடவடிக்கை" என்ற சொல்), பலதடவை தீவிரவாத கொள்கையோடு சமன்படுத்திப் பேசப்படுகிறது.
உதாரணமாக, முதலாளித்துவம் பற்றிக் குறைகூறுவோர், நம்முடைய சமுக, பொருளாதார, அமைப்புக்கள் பற்றி
அடிப்படைச் சந்தேகங்கள் கொள்பவர்கள், இதை மாற்றவேண்டுமென்ற கருத்தை வெளியிடுபவர்கள், கடும் நடவடிக்கையாளர்களாக
(Extremist)
மாட்டார்கள். தீவிர அரசியற் கருத்துக்களை கொண்டுள்ளவர்களுக்கு, நம்முடைய பன்முகச் சமுதாய அமைப்பில் உரிய,
சட்டபூர்வமான இடமுண்டு. தங்கள் கடும் நடவடிக்கை (Extremist)
கருத்துக்களை அடைய வேண்டும் என நினைப்பவர்கள், எமது அரசியல் அமைப்புமுறையின் அடிப்படைக் கோட்பாடுகளை
அங்கீகரிக்கும் வரை, உளவுத்துறையினால் தங்களுக்கு ஆபத்து வருமோ என அச்சம் கொள்ளத் தேவையில்லை. மாற்று
அரசியல் கருத்துக்களில் பற்று உடையவர்கள், உதாரணமாக எவரேனும் கம்யூனிச இலக்கியங்களை ஆர்வத்துடன்
படித்துவிட்டு, அரசாங்கம் பற்றி விமர்சித்தால், அது உளவுத்துறையின் பரிசீலனைக்கு உட்படாது."
சர்வாதிகாரச் சிந்தனை
பிராண்டன்பேர்க் உளவுத்துறை கையாளும், கருத்துப்படிவங்களும், வாதங்களும், திகிலூட்டும்
வகையில், ஒரு சர்வாதிகார நாட்டின், தர்க்கத்தை நினைவிற்குக் கொண்டு வருகின்றன; கூர்ப்பான உச்சியைக் கொண்ட
ஹெல்மட் இருந்த பிரஷிய நாட்டின் அமைப்பில்மட்டும் அல்லாது, பலமுறை ஜேர்மானிய நாட்டின் வரலாற்றிலேயே அழிவுதரக்கூடிய
வகையில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது ரைக்கின் (நாசிகால ஜேர்மன் பாராளுமன்றம்) பாசிசமும், பழைய
கிழக்கு ஜேர்மனியில் (GDR)
ஸ்ராலினிச அடக்குமுறை ஆட்சியின் வழிவகையும், போலீஸ் அரசை நிறுவுவதில்
இதே முறைகளைத்தான் கையாண்டன.
மெட்டர்நிக்கின் இருண்ட பிற்போக்குக் காலத்தில் தோன்றி, 1848ம் ஆண்டு ஜனநாயகப்
புரட்சியின் தோல்வியினாலும் அதிபர் பிஸ்மார்க்கின் சகாப்தத்தாலும், உறுதிப்படுத்தப்பட்டு, ஜேர்மனிய சர்வாதிகார அரசு,
எப்பொழுதுமே ஜனநாயகக் கொள்கைகளை, மிகுந்த சந்தேகத்துடன்தான் பார்த்து வந்தது. அதன் அரசியல் சார்ந்த
போலீஸ், எல்லா போலீஸ் ஆட்சிகளைப்போலவே, தங்கள் அமைப்பையும் செயல்முறைகளையும் மக்களின் ஜனநாயக உரிமைகளின்
அடிப்படையில் கொண்டிருக்கவில்லை.
மனிதகுலம் முழுவதற்கும் பொருந்தும் உரிமைகளை, நாட்டின் இடையூறுகளிலிருந்து
காப்பாற்றும் பங்கை தனது கடமையாகக் கொள்ளாமல், அதற்கு எதிராகவே எப்பொழுதும் கருதிவந்துள்ளது. எல்லா
காலங்களிலும், அதன் முதல் முன்னுரிமை, அரசாங்கத்தோடு, அல்லது யார் அதிகாரத்திலுள்ளனரோ, அவர்கள் பகுதி,
வட்டார அதிகாரிகளாயினும், அவர்களுடைய உதவியாளர்களாயினும் சரி, அவர்களுடைய விருப்பத்திற்கு முற்றிலும் இணங்குவதில்தான்
கருத்துக்கொண்டிருந்தது. அத்தகைய தர்க்கத்தினுடய அடிப்படையில், கிட்டத்தட்ட இயற்கைவிதி போலவே அவர்கள்
கொண்டுள்ள தன்மையில், அதிகாரத்தில் உள்ளவர்மீது எவர் குறைகூறினாலும், அது எதிர்க்கப்பட வேண்டும். இதுதான் ஜேர்மனிய
மன்னரின் கீழ் நடந்ததும், மீண்டும் நாஜிகளின் கீழும், சற்று மாறுபட்ட விதத்தில் கிழக்கு ஜேர்மனியிலும் நடந்து வந்தது
ஆகும்.
இந்த சர்வாதிகார நாட்டு தர்க்கத்தின் உணர்வில், திரு. மில்பிரட், உலக சோசலிச வலைத்
தள கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் "ஜனநாயக நாட்டைப் பற்றிய அடிப்படை குறை கூறல்"
பற்றி, அதிர்வு அடைகிறார். தொலைபேசி உரையாடலில், பேச்சுரிமை தடைபற்றி தனக்கு நன்கு தெரியும் என வலியுறுத்திக்
கூறினார், ஏனெனில் பல பத்தாண்டுகள் காலம் அவர் கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச
SED (Socialst Uniy Party)
யின் ஆட்சியில் வாழ்ந்திருக்கிறார் அல்லவா.
அவ்வாறாயினும்கூட, தன்னுடைய அனுபவங்களிலிருந்து பேச்சுரிமை என்பது அரசாங்கத்தை
விமர்சித்தலையும் உள்ளடக்கியது என்ற முடிவைக் கொள்ள வெளிப்படையாகவே தவறிவிட்டார்.
பிராங்க்பேர்ட்-ஒடெரில் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டதும், துர்நாற்ற குண்டுகள் வீசப்பட்டதும்,
உளவுத்துறையினால் ஒரு சோசலிச வெளியீட்டை குற்றம்சார்ந்தது எனக் காரணம் காட்டத்தான் பயன்பட்டன. உளவுத்துறையின்
பதிலைத்தவிர, இந்த முட்டாள்தனமான, உபயோகமற்ற செயல், புலம்பெயர்ந்தோரின் நிலைமையை முன்னேற்றுவதிலோ,
அகதிகளுக்கு ஆதரவாக ஜேர்மன் மக்களை திரட்டுவதிலோ, அல்லது எந்தவிதமான முற்போக்கு நோக்கத்திலோ, அரசியல்
அளவிலோ பொருளுடைய தன்மையைக் காட்டவில்லை.
"யாருக்கு இலாபம்?"
("Cui
bono?") என்ற வினா எழுப்பப்பட்டால், ஒன்றிற்குத்தான் பலன் கிடைத்தது
என்பது தெளிவாகும்; அதாவது பிராண்டன்பேர்க் உளவுப்பணித்துறைக்குத்தான். ஏனென்றால், இந்தச் சம்பவத்தை அது
இருகைகளால் வாரி எடுத்து தன் நோக்கங்களுக்கு பயன்படுத்திக்கொண்டது. உளவுத்துறை இடது, வலது சாரி தீவிர
அணிகளுள் தன்னுடைய பணியாளர்களை இரகசியமாகப் புகுத்தியுள்ளது
அல்லது புகுத்த முயன்றுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையேயாகும்.
அப்படியானால் இப்பொழுது எழும் கேள்வி இதுதான்; 2003 செப்டம்பர் 16ம் தேதி, பிராங்க்பேர்ட்-ஒடெரில் நடந்த
சம்பவங்களில் உளவுப்பணித்துறை தொடர்பு கொண்டிருந்ததா? |