World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியாHuman rights group condemns Indonesia's "hidden war" in Aceh இந்தோனேஷியாவின் மனித உரிமைகள் குழு அக்கே பகுதியில் நடைபெறும் ''மறைமுகப் போருக்கு'' கண்டனம் By Carol Divjak and James Conachy கடந்த மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு (Human Rights Watch - HRW) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தோனேஷிய அரசாங்கம் எண்ணெய் வளம்மிக்க அக்கே மாகாணத்தில் நடத்தி வருகின்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பற்றி மேலும் விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாகாணம் மே 19 அன்று இராணுவச்சட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இருந்து பிரிந்து சென்று தனிநாடாக ஆகவேண்டும் என்பதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகின்ற சுதந்திர அக்கே இயக்கத்தை (Free Aceh Movement - GAM)) நசுக்குவதற்காக 40,000 இந்தோனேஷிய துருப்புக்களும் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்கே நிலவரமானது மறைமுகப்போர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு குழு கண்டனம் செய்திருக்கின்றது. செப்டம்பர் 19ந் தேதியன்று இக்குழு வெளியிட்ட அறிக்கையில் ''நீண்ட காலமாக நடைபெற்றுவரும் கிளர்ச்சிக்கு எதிராக, கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக நடுநிலையான அவதானிகள் அனைவருக்கும் இந்தோனேஷிய இராணுவம் தடைவிதித்துள்ளது. இதன் மூலம் ஏற்படுகின்ற உயிர்சேதத்தின் அளவு மறைக்கப்படுகின்றது. இப்போது அங்கு நடப்பது தொடர்பாக தகவல்கள் பரிமாற்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தோனேஷிய அவதானிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. நடுநிலை பார்வையாளர்கள், வெளிநாட்டு நிருபர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் அக்கே மாகானத்தில் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மனிதநேய அடிப்படையில் ஒரு பேரழிவு மறைக்கப்படக்கூடும் அல்லது குறைந்தபட்சம் வர இருக்கின்ற பேரழிவை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்வதாக அமைந்திருக்கும்'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்கே மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 4.2 மில்லியன் ஆகும். அந்த மக்களில் பெரும்பாலோருடன் தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அறிக்கை கூறுகின்றது. இந்த அறிக்கை பிரசுரிக்கப்பட்ட நேரத்தில் ஐ.நா.வும் சர்வதேச மனித நேய உதவி அமைப்புகளும் இந்த மாகாணத்தின் தலைநகரான பன்டா அக்கேயில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டன. இராணுவச் சட்டம் தலைநகரில் செயல்படத் தொடங்கிய பின்னர் இந்தோனேஷியர் அல்லாத இரண்டு ஊழியர்கள் மட்டுமே அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அரசு சார்பில்லாத சர்வதேச தொண்டு நிறுவன உறுப்பினர் எவருக்கும் விசா வழங்கப்படவில்லை. இந்தோனேஷிய அரசாங்க அமைப்புக்கள்தான் நிவாரணப் பொருட்களை வழங்குகின்றன. இவற்றில் சில அமைப்புக்கள் இராணுவத்தோடு நேரடி தொடர்பு உள்ளவை ஆகும். அத்தோடு இந்த மாகாணப் பத்திரிகையாளர்கள் மாகாணத்திற்கு வெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 900 க்கு மேற்பட்ட சுதந்திர அக்கே இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அக்டோபர் 14 ந்தேதி Jakarta Post பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது. மேலும் 1,800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அல்லது சரணடைந்து கொண்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். இந்தப் போரில் அந்தப் பகுதிக்கு அப்பாற்பட்ட வெளி ஏஜென்சிகள் மற்றும் நடுநிலையான அவதானிகள் செல்ல முடியாததால் இந்த நடவடிக்கைகள் குறித்து கடுமையான கவலைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அக்கே இயக்க அனுதாபிகளை ஒழித்துக்கட்டவும் பொதுமக்களை பயங்கரமான முறையில் அச்சுறுத்தவும் இராணுவம் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதிகாரப் பூர்வமாக இறப்பு விகிதங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்த இறப்புக்கள் போரில் மடிந்த அப்பாவி பொதுமக்களாகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தோனேஷியாவில் செயல்பட்டுவரும் ஐ.நா மனித நேய விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் (Coordination of Humanitarian Affairs - CHA) அண்மையில் அக்கே மாகாண நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் அக்டோபர் 3 முதல் 10 ந் தேதி வரையில் 7 பொதுமக்களும், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 ந் தேதி வரையில் 13 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக வெளியிட்டுள்ள தகவல்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மனித உரிமை கண்காணிப்பு குழு அறிக்கையின் படி 77 கிராமத் தலைவர்கள் மற்றும் 13 மாவட்ட துணை நிர்வாகத் தலைவர்கள் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பதவிகளில் நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சர்வாதிகாரி சுகார்ட்டோ காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகளிலிருந்து இந்தோனேஷிய மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் வகையில் தற்போது அமைந்திருக்கின்றன. அக்கே மாகாண மக்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் தான் நடமாட முடிகின்றது. அப்படி நடமாடுகின்ற மக்கள் நாட்டு விசுவாச உறுதி மொழியை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தோனேஷிய தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும். அத்துடன் சுதந்திர அக்கே இயக்கத்திற்கு மிகப்பெரும் அளவில் ஆதரவுள்ள பகுதிகளில் 500 பள்ளிக்கூடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது மிகவும் சொற்பமான தகவல்கள்தான் கிடைக்கின்றன என்றாலும் போரில் சிக்கிக் கொள்ளாது தப்புவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். அல்லது உணவு மற்றும் தங்குமிடத்தை நாடி வெளியேறிச் செல்கின்றனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அறிக்கை எச்சரிக்கை செய்திருக்கின்றது. அந்தப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை நிலவுகின்றது. குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் சீர்குலைந்துள்ளன. சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகள் நிலைகுலைந்து விட்டன. குறைந்த பட்சம் 2,559 குடும்பங்கள் தற்போது தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி சென்றிருப்பதாக CHA மதிப்பீடு செய்திருக்கின்றது. இராணுவச்சட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் 24,730 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 ற்கு மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. அக்கே மாகாணப் பகுதியில் பணியாற்றி வருகின்ற இந்தோனேஷியாவின் மனித உரிமை அமைப்பு உறுப்பினரான Teuku Samsul Bahri செப்டம்பர் 30 ந் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இராணுவமானது அக்கே மாகாணத்தில் வாழும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ''மனித உரிமை நெருக்கடியை'' உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 30 கிராமங்களில் மிகப்பரவலாக, இராணுவம் அடக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கான்ட்ராஸ் (Kontras) என்கிற இந்தோனேஷிய மனித உரிமை அமைப்பு தகவல் தந்திருக்கிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் மூன்று மணிநேரம் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அந்தப் பணி முடிந்ததும் இராணுவ சோதனைச் சாவடியில் தங்களது அடையாள அட்டைகளை தந்துவிட்டு வீடு திரும்ப வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி செயல்படுகின்ற விவசாயிகள் அக்கே இயக்க உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். மீனவர்களும் மூன்று மணிநேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றனர். அந்த மூன்று மணி நேரத்தில் தாங்கள் வாழ்வதற்கு தேவையான மீனை அவர்களால் பிடிக்க முடியவில்லை. அக்கே இயக்கத்தினருக்கு உணவு கிடைத்துவிடாது தடுப்பதற்காகவும், பொதுமக்களை மிரட்டுவதற்காகவும் கிழக்கு அக்கே பகுதிகளில் உணவுப்பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைக்காரர்களும், வர்த்தகர்களும் மூன்று மூட்டை அரிசியும் ஒரு மூட்டை சர்க்கரையும் தான் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கிராம மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசி மற்றும் 500 கிராம் சர்க்கரை மட்டுமே வழங்கப்படுகின்றது. மேலும் இராணுவம் நியமித்துள்ள கொள்முதல் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு தங்களது தானியங்களை விற்குமாறு விவசாயிகளை இராணுவம் கட்டாயப்படுத்துகிறது. அக்கே இயக்கத்தினருக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை தடுப்பதற்காகத் தான் இந்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகின்றது. இராணுவம் நியமித்துள்ள கொள்முதல் வியாபாரிகளின் கொள்ளை லாப போக்கால் விவசாயிகள் தங்கள் தானியங்களை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதன் விளைவாக அந்த மாகாணத்தில் மக்களுக்கு சத்தூட்டக் குறைபாடுகள் தோன்றியுள்ளன. இந்தோனேஷிய மனித உரிமை அமைப்பான ''கான்ட்ராசில் பணியாற்றுகின்ற பல உறுப்பினர்களும் தொண்டர்களும் தலைமறைவாகி விட்டதாக'' இந்த அமைப்பின் உறுப்பினரான Teuku Samsul Bahri கூறுகிறார். இந்த அமைப்பின் தொண்டர்களில் ஒருவரான 21 வயது முசாக்கிர் அப்துல்லா வடக்கு அக்கே பகுதியில் ஜூன் 17 அன்று கொலை செய்யப்பட்டார். அத்துடன் இதர மனித உரிமைத் தொண்டர்களுக்கும் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கான்ட்ராஸ் திரட்டியுள்ள சான்றுகளின்படி இராணுவத்தினால் 329 சிவிலியன்கள் கொல்லப்பட்டு 78 பேர்கள் கானாமல் போயுள்ளனர். 213 பேர் முறைகேடாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 315 பேரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். இது மிகக்குறைவான மதிப்பீடுதான் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல மடங்காக இருக்கக்கூடும் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அறிக்கை மற்றும் கான்ட்ராஸ் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு இந்தோனேஷிய அரசாங்கம் மிகுந்த ஆவேசத்தோடு மறுப்பு தெரிவித்துள்ளது. கான்ட்ராஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று அக்டோபர் 2 அன்று இராணுவப் பேச்சாளரான Ahmad Yani Basuki பிரெஞ்சு செய்தி நிறுவனத்திற்கு (Agence France Presse) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ''இந்தோனேஷிய இராணுவம் அக்கே மக்களை கொன்று குவிக்க விரும்புகிறது என்று யாரும் கருதிவிட முடியாது. அக்கே இயக்கத்தினரின் பிடியிலிருந்து அக்கே மக்களை காப்பாற்றுவதற்குத்தான் இராணுவம் அங்கிருக்கின்றது'' என்று அவர் மேலும் கூறினார். ஆனால், ஆகஸ்ட் மாதக் கடைசியில் வடக்கு அக்கே கிராமம் ஒன்றில் பொதுமக்களை அடித்து நெருக்கியதற்காக, செப்டம்பர் 25 ந்தேதி 12 இராணுவத்தினரை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாக இராணுவம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. சுகார்ட்டோவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் ஆளும் செல்வந்த தட்டிற்கு அச்சுறுத்தலாக கருதப்படுபவர்கள் மீது இந்தோனேஷிய இராணுவம் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மிகக் கொடூரமான தாக்குதல்களை நடத்தியது. மிகவும் வளமிக்க அல்லது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அக்கே மற்றும் மேற்கு பாப்புவா மற்றும் கிழக்கு தீமோர் பகுதிகளில், பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்தவர்கள் மீது இராணுவம் பயங்கரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்தது. தற்போதைய ஜனாதிபதி மேகவதி சுகர்னோ புத்திரியின் அரசாங்கம் இராணுவத்துக்கு சுதந்திர உரிமைகள் வழங்கியிருப்பதை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் இதுபோன்ற அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இராணுவம் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றது. சர்வாதிகாரி சுகார்ட்டோ வீழ்ச்சியடைந்த பின்னர் இராணுவத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்த ஓரளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அந்த நடவடிக்கைகளையும் சீர்குலைக்கின்ற வகையில் இராணுவம் தனது தன்னிச்சையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மேகவதி அரசாங்கம் அக்கே மாகாணத்தில் மறைமுகப் போரை நடத்துவதற்கு பிரதான வல்லரசுகளான அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் உடந்தையாக செயல்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஐ.நா அமைப்பு இந்தோனேஷிய இராணுவத்தின் முறைகேடுகளை சிடுமூஞ்சித்தனமான முறையில் தங்களுக்கு சாதகமாக சுரண்டிக் கொண்டன. கிழக்கு தீமோரில் அவுஸ்திரேலிய இராணுவம் தலையிட்டதை நியாயப்படுத்துவதற்காக இந்தோனேஷிய இராணுவத்தின் அத்துமீறல்களை அவுஸ்திரேலியா பயன்படுத்திக் கொண்டது. ஆனால் தற்போது தனிநாடு கோரிக்கை தங்களது உடனடி நலன்களுக்கு உகந்தது அல்ல என்று வாஷிங்டனும், கான்பராவும் கருதுவதால் இந்தோனேஷிய இராணுவத்தின் அத்துமீறல்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றன. அடுத்த ஏப்ரலில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல்கள் வரை அக்கே இயக்கத்தினருக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நீட்டிக்க வேண்டும் என்று அக்கே பகுதி இராணுவத் தளபதியான ஜெனரல் என்டாங் சவாரியா ஜனாதிபதி மேகவதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நீண்ட காலத்திற்கு இராணுவச் சட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்தோனேஷியப் படைகளின் கமாண்டர் கருத்து தெரிவித்துள்ளார். ''அக்கே இயக்கத்தினரை முழுமையாக முடக்கிவிட முடியும் என்று கூற முடியாத நிலையிருப்பதால் கொரில்லாக்களை எதிர்த்துப் போராடுவதற்கு பல தலைமுறைகள் ஆகலாம். அத்தோடு உலக நடப்புகளை ஒட்டி இந்த நடவடிக்கைகளும் நீடிக்கும்'' என்று அவர் மேலும் கூறியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால் அக்கே மாகாணத்தில் காலவரையற்ற இராணுவ ஆட்சி நடைபெறும் என்பதாகும். இப்படி காலவரையற்ற இராணுவச் சட்ட நீட்டிப்பு தொடர்பான கோரிக்கையை அரசாங்கம் தற்போது ஒரு மாதத்திற்கு மதிப்பீடு செய்யும் என்று பாதுகாப்பு அமைச்சர் Susilo Bambang Yudhoyono குறிப்பிட்டார். நவம்பர் மத்தியில் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இராணுவச்சட்டம் காலாவதியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. |