WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
பிலிப்பைன்ஸ்
Bush's Philippines model for Iraqi "democracy"
ஈராக்கிய ''ஜனநாயகத்திற்கு'' புஷ் எடுத்துக்காட்டும் பிலிப்பைன்ஸ் முன்மாதிரி
By John Roberts
29 October 2003
Back
to screen version
பிலிப்பைன்ஸ் நாடாளுமன்றத்தில் அக்டோபர் மாதம் 18ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி
ஜோர்ஜ் புஷ் உரையாற்றும்போது அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் ''விடுதலைக்கும்'', ஜனநாயகத்திற்கும்
பிலிப்பைன்ஸ் ஒரு முன்மாதிரியாக உள்ளது என குறிப்பிட்டார்.
''பிலிப்பைன்ஸ் மக்களின் மகத்தான வரலாற்றில், அமெரிக்கா தனது பங்களிப்பு தொடர்பாக
பெருமைப்படுகிறது. ஏனெனில் ஸ்பெயின் தனது காலனியாக நிலைநாட்டிவந்த பிலிப்பைன்ஸ் நாட்டை 1898ம் ஆண்டு அமெரிக்கா
விடுவித்தது'' என்று குறிப்பிட்ட ஜோர்ஜ் புஷ் அதற்கும் இன்றைக்கு ஈராக் மீது நேரடியாக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைக்கும்
ஒப்புநோக்கி ஆராய்வதற்கு பல்வேறு அம்சங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் திரண்டிருந்த பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகளிடம்
விளக்கம் அளித்தார். ''மத்திய கிழக்கு கலாச்சாரம் ஜனநாயக அமைப்புக்களை தாங்கி நிற்கின்ற வல்லமைக்கொண்டது
அல்ல, என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் இதே சந்தேகங்கள் ஆசியாவின் கலாச்சாரம் பற்றியும் எழுப்பப்பட்டன.
60 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சந்தேகங்கள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டன. பிலிப்பைன்ஸ் நாட்டு குடியரசு, ஆசிய
கண்டத்திலேயே முதலாவது ஜனநாயக நாடாக உருவாயிற்று.'' என்று புஷ் குறிப்பிட்டார்.
புஷ் உரையின் தன்மைகள் எப்படியிருந்தாலும், பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 105
ஆண்டுகளாக அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வருவது, அது ஈராக்கில் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு
என்ன சாதிக்க விரும்புகின்றது என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். பிலிப்பைன்ஸ் தொடர்பான உதாரணம் எடுத்துக்காட்டுவது
என்ன என்னவெனில், வாஷிங்டனைப் பொறுத்தவரை ஈராக் அரை-காலனித்துவ நாடாக செயல்பட வேண்டும், மத்திய கிழக்கில்
அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஈராக் நிபந்தனையற்ற ஆதரவு தரவேண்டும், அமெரிக்க வர்த்தக
நிறுவனங்கள் ஈராக்கின் வளங்களை சுரண்டுவதற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஈராக் தரப்பிலிருந்து வரக்கூடாது
என்பதுதான்.
1898ம் ஆண்டு ஸ்பெயினிற்கும், அமெரிக்காவிற்கும் நடைபெற்ற போரில் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின்
கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்தப் போர்தான் அமெரிக்கா உலக அரங்கில் ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக அடியெடுத்து
வைத்ததை குறிப்பதாக அமைந்தது.
ஈராக்கை போன்று பிலிப்பைன்சிலும் அமெரிக்காவின் சூறையாடல் நோக்கு மறைக்க முடியாததாகி
விட்டது. ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளை அடிமைப்படுத்தி அவற்றை தங்கள் மேலாதிக்கத்தில்
கொண்டுவந்துள்ளதுடன், ஏற்கனவே சீனாவினுள்ளும் ஊடுருவியுள்ளன. பொருளாதார வலிமை பெருகிக்கொண்டு வரும் அமெரிக்க
தொழிலதிபர்கள், அந்த பிராந்தியத்திலிருந்து தாம் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.
இருமருங்கும் ஆசியாவினை கொண்ட பிலிப்பைன்ஸ், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதுடன், ஆசியா நாடுகளில்
வர்த்தகத்திற்கான முன்னோடி தளமாகவும் பசுபிக் மகா சமுத்திர பகுதிகள் அமைத்ததால் வர்த்தக மற்றும் இராணுவ வலிமையை
நிலை நாட்டுவதாகவும் அமைந்திருந்தது.
கரிபியன் மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள ஸ்பெயின் காலனிகளுக்கு விடுதலை பெற்று
தருவதை நோக்கமாக கொண்டுதான் அமெரிக்கா போர் புரிந்து வருகிறது என்று நம்புகின்ற வகையில் அமெரிக்க
மக்களது கருத்து திரிக்கப்பட்டது. படையெடுப்பிற்கு முன்னர் ஸ்பெயின் கொடுமைமிக்க காலனி ஆதிக்கத்தை நடத்தி வருவதாக
திட்டமிட்ட பத்திரிகை பிரச்சாரம் நடத்தப்பட்டது. தொழில் அதிபர்களான ஜோசப் புளிட்சர், மற்றும் வில்லியம்
ரன்டோல்ப் ஹேர்ட்ஸ் (Joseph Pulitzer, William
Randolph Hearst) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நியூயோர்க்
பத்திரிகைகளான வேர்ல்ட் மற்றும் ஜேர்னல் (World,
Journal) ஆகியவற்றில் மிக பெரும் எடுப்பிலான பிரச்சார
இயக்கத்தை நடத்தி, அன்றைய ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி
(William McKinley) 1898ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி
ஸ்பெயின் மீது போர் தொடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றின. ஹாவானா துறைமுகத்தில் அமெரிக்க
போர்க்கப்பலான மெயின் (Maine)
மூழ்கிக் கொண்டிருந்தது. அதை ஒருசாக்காக பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதி ஸ்பெயின் மீது போர் பிரகடனம் செய்தார்.
அந்தக்கப்பலுக்கு அண்மையில் இருந்த நிலக்கரி சேமிப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்தக் கப்பல் மூழ்கிவிட்டதாக
கருதப்படுகின்றது.
சில மாதங்களில் மணிலா வளைகுடா மற்றும் கரிபீயன் பகுதிகளில் அமெரிக்கா, ஸ்பெயின் கப்பற்படையை
அழித்துவிட்டது மற்றும் கியூபா, போட்டோ றிக்கோ (Puerto
Rico), பிலிப்பைன்சில் துருப்புக்கள் இறக்கப்பட்டன. இத்தீவுகளின் மீதான
ஸ்பெயின் நாட்டின் பிடி தளர்ந்ததும் அமெரிக்காவின் உண்மையான போர் நோக்கம் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது.
ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதைப்போல் ''அமெரிக்காவின் எல்லா பகுதிகளையும் சேர்ந்த மக்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் ஆசிய மண்டலத்தில் உருவாகும் எதிர்கால சந்தைகளுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவாக
உணர்ந்து கொண்டனர். மேற்கில், 'கீழத்தேய நாடுகளுடன் தமது வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில்'' சான்
பிரான்ஸிஸ்கோ வர்த்தக சபை இத்தீவுகளை கைப்பற்றி வைத்திருக்குமாறு மனுச்செய்தது. (அமெரிக்க-வெளியுறவுகளில்
மாற்றம்- 1865-1900 சார்லஸ் எஸ்.கேம்பல் ஆர்பர்&ரோ-1976)
1898 டிசம்பர் 10 அன்று கையெழுத்தான பாரீஸ் ஒப்பந்தப்படி பிலிப்பைன்ஸ் குவாம்
(Guam),
மற்றும் போட்டோ றிக்கோவை ஸ்பெயினிடமிருந்து 20 பில்லியன் டொலருக்கு அமெரிக்கா வாங்கிக் கொண்டது. இது
ஜூன் மாதம் பிலிப்பைன்ஸ் விடுதலை இயக்கம் எமிலியோ அகில்நார்டோ தலைமையில் பிலிப்பைன்ஸ் சுதந்திரநாடு என
பிரகடனப்படுத்தியதை அமெரிக்கா புறக்கணித்து விட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்கா பசுபிக் தீவுகளான
ஹவாய் (Hawaii),
வேக் தீவுகளையும் (Wake Island)
அடுத்து ஆண்டு சமோவோ (Samoa)
தீவையும் தன்னோடு இணைத்துக்கொண்டது.
1898 டிசம்பர் 21 அன்று பிலிப்பைன்சை அமெரிக்க காலனியாக வாஷிங்டன் முறைப்படி சேர்த்துக்கொண்டது.
1899ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிலிப்பைன்சின் சுதந்திர போராளிகளுக்கும் அமெரிக்கா துருப்புக்களுக்கும் இடையே பகிரங்க
போர் ஆரம்பமாகியது. எந்த மக்களின் ''விடுதலைக்காக'' அமெரிக்கப்படைகள் அனுப்பப்பட்டனவோ அந்த மக்களை
கொன்றுகுவிக்க அமெரிக்கப்படைகளுக்கு கட்டளையிடப்பட்டது.
அமெரிக்க படை வலிமையின் முன்னர் தாக்கு பிடிக்கமுடியவில்லை என்றாலும் 1899 நவம்பர்
முதல் 1902 வரை ஏப்ரலில் அமெரிக்கா தனது வெற்றி பிரகடனத்தை வெளியிடுவது வரை உறுதி மிக்க கொரில்லா
போரை பிலிப்பைன்ஸ் படைகள் நடத்தி வந்தார்கள். அமெரிக்க இராணுவம் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல்
போராட்டத்தை நசுக்கியது. அப்போது நிலவிய பஞ்சத்தின் காரணமாகவும் அமெரிக்க நடவடிக்கைகளாலும் 200,000
பிலிப்பைன்ஸ் மக்கள் இறந்தனர். 69,000 பிலிப்பைன்ஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க இராணுவத்தினர்
4,234 பேர் இறந்தனர். மிண்டநாவோ தீவில் (Mindanao)
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முஸ்லீம் மக்கள் 1914ம் ஆண்டு வரை எதிர்ப்பு
தெரிவித்து வந்தனர்.
அமெரிக்காவின் நேரடி ஆட்சியின் கீழ் பிலிப்பைன்ஸ் மிக கொடூரமாக சூறையாடப்பட்டது.
அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. பிலிப்பைன்சில் நடத்தப்பட்ட சுதந்திர
வர்த்தகத்தின் மூலம் அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு மலிவு சந்தையாக அந்நாடு பயன்படுத்தப்பட்டு வந்தது. உள்நாட்டில்
தொழில்கள் எதுவும் உருவாக முடியாத அளவிற்கு தடுக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு மூலப்பொருட்களை தயாரிக்கின்ற ஒரு
நாடாக பிலிப்பைன்ஸ் மாற்றப்பட்டது.
பிலிப்பைன்ஸ் ''சுதந்திரம்''
1941 முதல் 1945 வரை பிலிப்பைன்ஸ் தீவுகள் மீதான கட்டுப்பாட்டை ஜப்பானிடம் அமெரிக்கா
இழந்தது. பசுபிக் பகுதியில் இரண்டாவது உலகப்போரின் போது நடைபெற்ற சண்டையில் பெரும் பகுதி பிலிப்பைன்ஸ் என்ற
லாபம் தரும் காலனியை அமெரிக்கா மீண்டும் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் வெளிப்பாடாகவும் அமைந்தது. இரண்டாம்
உலகப்போர் முடிந்த பின்னர் தேசிய விடுதலை போராட்ட இயக்கங்கள் ஆசியா கண்டம் முழுவதையும் ஆக்கிரமித்துக்
கொண்டு வளர்ந்தது. எனவே இனிநேரடியாக தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவது பயனற்றது என்று வாஷிங்டன் கணக்குப்போட்டது.
1946ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் குடியரசு உருவாக்கப்பட்டமை எவ்விதத்திலும் ஜனநாயக அல்லது
காலனித்துவ எதிர்ப்பு உள்ளடக்கத்தையோ கொண்டிருக்கவில்லை. அமெரிக்க காலனி நிர்வாகிகளிடம் இருந்து ஒரு
பொம்மை அரசாங்கத்திடம் அரசியல் அதிகாரம் மாற்றிக்கொடுக்கப்பட்டது. இந்த பொம்மை அரசாங்கத்தில் இடம்
பெற்றிருந்தவர்கள் அமெரிக்க ஆதரவு போக்குள்ள பிலிப்பைன்சின் நிலச்சொந்தக்காரர்கள் ஆகும். இந்த வகையில் வாஷிங்டன்
தனது பொருளாதார மேலாதிக்கத்திற்கு உத்திரவாதம் செய்து கொண்டது. பிலிப்பைன்ஸ் புதிய சுதந்திர அரசியல் சட்டத்தில்
பிலிப்பைன்ஸ் நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதைப் போல் சமமான உரிமைகள் அமெரிக்க நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது.
பிலிப்பைன்சின் இயற்கை வளங்களையும், நிலத்தையும் 60 சதவீதம் பங்குகள் சொந்தமாக உள்ள பிலிப்பைன்ஸ் நிறுவனங்கள்
தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்திலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டது. மேலும்
அமெரிக்க இராணுவம் தனது கடற்படை தளத்தையும் விமான தளத்தையும் பிலிப்பைன்சில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு
அனுமதி வழங்கப்பட்டது. அவை இரண்டும் பின்னர், நடைபெற்ற குளிர்யுத்த காலத்தில் அமெரிக்காவிற்கு சாதகமான
உயிர்நாடி மூலோபாய சொத்துக்களாக பயன்பட்டன.
சுதந்திரம் மிகப்பெரும்பாலான சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பயனையும் தரவில்லை.
முந்தைய தலைமுறைகளில் பொருளாதார வளர்ச்சி எதுவுமில்லாத காரணத்தினால் பிலிப்பைன்ஸ் மக்களில் மிகப்பெரும்பாலோர்
தாங்கள் உயிர்வாழ்வதற்கு விவசாயத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் விவசாயிகள்தான்
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக அதிகமான ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.
ஒப்பீட்டிற்காக, 108 நிறுவனங்கள் தொடர்பான ஆய்வு ஒன்று, 1956 முதல் 1965
வரை பிலிப்பைன்சில் அமெரிக்க நிறுவனங்கள் பிலிப்பைன்சில் 79.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தன.
அவற்றிற்காக 386.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்ளை இலாபமாக அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
தங்களது முந்தைய காலனியில் அமெரிக்க நிறுனங்கள் சராசரியாக 18 சதவீத இலாபத்தில் இயங்கியுள்ளது. சராசரியாக
அதே நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் கிடைத்த இலாபம் 14 சதவீதம்தான். பிலிப்பைன்ஸிலிருந்து இயங்கும் அமெரிக்க உணவு
தயாரிக்கும் நிறுவனங்களின் இலாப விதிதம் 25.2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தகவல் தொடர்பு, ரப்பர், இரசாயனப்
பொருட்கள், மற்றும் பெட்ரோலிய பொருட்களில் அமெரிக்க நிறுவனங்கள்தான் மேலாதிக்கம் செலுத்தி வந்தன.
மிகப்பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் வறுமையிலும் பின்தங்கிய நிலையிலும் வாழ்ந்து
கொண்டிருக்கும்போது அமெரிக்காவின் அரசியல் அதிகாரம் பெற்ற பிலிப்பைன்ஸ் நிலச்சுவாந்தர்கள் குழு பிலிப்பைன்சின்
நிலம் மற்றும் செல்வத்தை தங்கள் கையில் அதிக அளவிற்கு குவித்துக்கொண்டே வந்தது. நிலமற்ற ஏழை உழவர்கள்
எண்ணிக்கை 1903ம் ஆண்டு 29சதவீதமாக இருந்தது. இது 1964ம் ஆண்டு 50 சதவீதமாக உயர்ந்துவிட்டது. 1970களின்
ஆரம்பத்தில் செய்யப்பட்ட மதிப்பீட்டின் படி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 400 குடும்பங்களைச் சேர்ந்த உயர்குடியினர்
தேசிய செல்வத்தில் 90 சதவிதத்தை தங்கள் கைவசம் வைத்திருந்தமை தெரியவந்தது. அமெரிக்காவின் இராணுவ மற்றும்
அரசியல் ஆதரவு காட்டிய பிலிப்பைன்ஸ் ஆளும் செல்வந்த தட்டு ஆசியாவில் அமெரிக்காவின் குரலாக செயல்பட்டு வந்தனர்.
வியட்நாமில் நடைபெற்ற போரை பிலிப்பைன்ஸ் ஆதரித்தது. 1965ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு
மற்றும் இந்தோனேஷியாவில் நடைபெற்ற படுகொலைகள் மற்றும் குளிர்யுத்த காலத்தின் குற்றங்களை பிலிப்பைன்ஸ் ஆதரித்தது.
''ஜனநாயகம்'' தொடர்பாக பிலிப்பைன்சில் அமெரிக்காவின் அணுகுமுறை எவ்வாறு
அமைந்திருந்தது என்பதற்கு 1972ல் நடைபெற்ற சம்பவம் எடுத்துக்காட்டாகும். பிலிப்பைன்சில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு
எதிராக பரவலான சமுதாய கொந்தளிப்பு உருவாயிற்று. கிராமப்புறங்களில் விவசாயிகள் கிளர்ச்சி செய்தனர். அமெரிக்க
நிறுவனங்களுக்கு சம உரிமைகள் வழங்குவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென நிர்பந்தங்கள் உருவாயின. இந்த நேரத்தில்
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்கோசை வாஷிங்டன் உற்சாகப்படுத்தி இராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்ய தூண்டியது.
மார்க்கோஸ் ஆட்சிகாலத்தில் அரசியல் கொலைகளும், கிராமப்புற மக்களின் மீதும் மற்றும் தொழிலாளர்கள் இயக்கத்தின்
மீதும் மிகக்கொடூரமான இராணுவ ஒடுக்குமுறைகளும் ஏவிவிடப்பட்டன. அரசாங்கத்தின் எடுபிடிகள் பொருளாதாரத்தை எந்தவிதமான
கட்டுப்பாடும் இல்லாமல் சூறையாடிவந்தன.
1986 வரை அமெரிக்கா தொடர்ந்து மார்க்கோசை ஆதரித்து வந்தது. றீகன் நிர்வாகம்
தனது ஆதரவை பிலிப்பைன்ஸ் ஆளும் குழுவில் எதிர்தரப்பைச் சேர்ந்தவரும், ஆளும் செல்வந்த தட்டை சேர்ந்த
அக்கினோவின் (Corazon Aquino)
பக்கம் திருப்பியது. மார்க்கோசிற்கு எதிராக பொதுமக்களது கிளர்ச்சி கத்தோலிக்க
தேவாலயங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு அக்கினோவை சுற்றியுள்ள முற்போக்கு
அணியினர் பக்கம் ஆதரவாக திருப்பி விடப்பட்டது. பிலிப்பைன்ஸை விட்டு தப்பி ஓடுவதற்கு மார்க்கோசிற்கு அமெரிக்கா
உதவியது. அதே நேரத்தில் பதவிக்கு வந்த அக்கினோ ஆளும் குழுவிற்கு பாதகமாக அல்லது அமெரிக்க நலன்களுக்கு
ஆபத்து விளைவிக்கும் வகையிலோ நிர்வாக மாற்றம் எதையும் செய்யவில்லை.
அக்கினோவின் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தொடர்ந்து ஊழல் நிர்வாகங்களும், தோல்வியடைந்த
இராணுவ ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளும் நடைபெற்றன. தற்போதைய அரசாங்கம் குளோரியா அரோயோவை (Gloria
Arroyo) ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. அரசியல் சதிவேலைகளான
நீதிமன்ற கட்டளைகளாலும் 2001 ஜனவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோசப் எஸ்ராடா (Joseph
Estrada) ஆளும் செல்வந்த தட்டில் நிலவிய ஆதிக்க மோதல்களின்
காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஈராக்கிற்கு சிறிய அளவில் தனது துருப்புக்களை அனுப்பியதன் மூலம் வாஷிங்டனின் ''பயங்கரவாதத்திற்கு
எதிரான போரில்'' நிபந்தனையற்ற ஆதரவு காட்டியதற்காகவும், ஹாரோயாவிற்கு அமெரிக்கா ஆதரவு காட்டி
வருகின்றது. குத்தகைக்காலம் முடிவடைந்து விடுவதால் 1992ம் ஆண்டு அமெரிக்கா
Subic Bay இலும்
Clark base
இலும் உள்ள தனது இரண்டு இராணுவ தளங்களையும் காலி செய்து ஒப்படைத்திருக்க
வேண்டும். அப்படி இருந்தும் அரோயோ, பிலிப்பைன்சில் அமெரிக்க இராணுவம் தொடர்ந்து நீடிப்பதற்கு வகை செய்திருக்கிறார்.
பாசிலான் தீவில் (Basilan island)
அபுசாயிப் (Abu Sayyaf)
பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆயிரம் அமெரிக்க துருப்புக்கள்
ஏற்கனவே பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க இராணுவ வீரர்கள் ''பயிற்சியளிப்பவர்கள்'' என்ற முத்திரை குத்தி
பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் வெளிநாட்டு படைகளுக்காக அரசியல் சட்டம் விதித்திருக்கும் தடைகளை ஆராயோ சமாளித்து
வருகிறார்.
பிலிப்பைன்சிற்குள் ஜனநாயகம் என்பது வெறும் மோசடி தான். இந்நாட்டின் 200
பணக்கார குடும்பங்களும் அல்லது அவர்களது அடிவருடிகளும் அந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் 16,000 அரசியல் பதவிகளையும்
தங்கள் கையில் வைத்திருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதான் ஈராக்கிற்கு அமெரிக்கா தருகின்ற முன்மாதிரியாகும். அமெரிக்கா குற்றமிக்க
படையெடுப்பை நடத்தி ஈராக் மக்களை அடக்கி ஒடுக்கி வருவதுடன், அகமது சலாபி (Ahmed
Chalabi) போன்ற நபர்களை ஆதரித்து வருகிறது. அமெரிக்க ஆளும்
செல்வந்ததட்டிற்கு அவர்களது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு கீழ்படிந்து நடக்கின்ற ஒரு பொம்மை
நிர்வாகத்தை உருவாக்க புஷ் நிர்வாகம் முயன்று வருகின்றது.
ஆனால் இப்பொழுது இதில் அடிப்படை வேறுபாடு உண்டு. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
அமெரிக்கா ஓர் உலக வல்லரசாக வெடித்து கிளம்ப ஆரம்பித்தது. அதற்கு பின்னர் உலக மேலாதிகத்தின் நிலையின்
ஆரம்பத்தில் இருந்த அமெரிக்கா, இரண்டாம் உலகப்போரை தொடர்ந்த பல பத்தாண்டுகளில் தனது மேலாதிக்கத்தை
இழந்து வந்தது.
ஆனால் இன்றைய தினம், புஷ் நிர்வாகத்தின் செயல் திட்டங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை
உள்ளுக்குள்ளேயே சிதைத்துக்கொண்டு வருகின்ற ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றது.
ஈராக்கை ''விடுதலை'' செய்யப்போகிறோம் என்றும் அந்த நாட்டின் ''ஜனநாயகத்தை'' நிலைநாட்டப்
போகிறோம் என்றும் வாஷிங்டன் தனது படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு கூறிவந்த அனைத்தும் பொய்யானவை என தற்போது
அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்ல ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பது, பேரழிவு தருகின்ற மிகப்பெரும்
பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்ற புதை சேற்றினை நோக்கி அழிவிற்குள் கொண்டு செல்கின்றது. எனவேதான் 21ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் மீண்டும் வெடித்து எழுந்துள்ள அமெரிக்க இராணுவமயம் அமெரிக்க ஆளும் செல்வந்ததட்டினை, அமெரிக்காவிலும்
மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுடன் மோதிக் கொள்ளும் நிலையில் வைத்துள்ளது. |