World Socialist Web Site www.wsws.org |
History, program and the "unity of the left": an exchange of letters வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் "இடது ஐக்கியம்": ஒரு கடிதப்பரிமாற்றம் 8 October 2003 நமது வாசகர்களில் ஒருவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றை கீழே பிரசுரம் செய்கிறோம் அதைத் தொடர்ந்து உலக சோசலிச வலைத் தளத்தின் ஜெரி ஐசக்சின் பதிலையும் கொடுத்துள்ளோம். ஆசிரியர் அவர்களுக்கு: அமெரிக்காவின் இடதுசாரி இயக்கத்தைப்பற்றிய பல விஷயங்கள் எனக்கு வேதனை தருகின்றன; ஆனால், எல்லாவற்றையும் விட அதிக மன உளைச்சல் கொடுப்பது, அரசியல் கட்சிகள் பெருகிக் கொண்டு போவதுதான். என்னுடைய எண்ணிக்கையின்படி, அமெரிக்காவில் முக்கியமாக ஐந்து இடது/சோசலிச கட்சிகள் உள்ளன; கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி, ஜனநாயக சோசலிச கட்சி, மற்றும் சுதந்திர சோசலிச கட்சி. இக்கட்சிகள் கொள்ளும் கண்ணோட்டங்கள், பிரச்சினைகளுக்கு அளிக்கும் விடைகள் அனைத்தும் ஒன்றாக உள்ளன. வரலாற்றளவில் சோசலிச-இடது இயக்கங்கள் மிகுந்த விரோத உணர்வில் உட்பூசல்களால் பிளவுபட்டுள்ளன என அறிவேன். ஆனால், நாம் அனைவரும், அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகள், நம்மைப்பிரிக்கும், சிறிய, அற்ப விஷயங்களை தள்ளிவைக்க வேண்டிய நேரம் இப்பொழுது என்று நான் கருதுகிறேன். இந்த அமைப்புக்கள் அரசியலில் ஓரமான இடத்திற்கு எப்பொழுதும் தள்ளப்பட்டு விடக்கூடாது என்று விரும்பினால், அனைத்து சோசலிச-கம்யூனிச கட்சிகள் ஒரு ஐக்கியப்பட்ட கட்சியாக/அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அர்த்தமுள்ளதாகப் படுகிறது. இக்கட்சிகள் ஒவ்வொன்றும் பல்வேறு வலிமைகளையும், குறைபாடுகளையும் பெற்றுள்ளன, ஆனால் அவையனைத்தும் ஒற்றுமையுடன் இணைந்தால், ஒரு நியாயமான, சமநீதியுடைய சமுதாயத்தை நிறுவ, வலுவான அரசியல் சக்தியாக வரமுடியும் என்று நம்புகிறேன். CJ ********** அன்புள்ள CJ, உங்களுடைய கடிதத்திற்கு நன்றி. பரவலாக சோசலிச சிந்தனைகள் மீது பரிவு கொண்டவர்கள் பலருடைய கருத்தைத்தான் உங்களுடைய கடிதம் பிரதிபலிக்கிறது. ஆனால், இவர்கள், சோசலிச தொழிலாளர்கள் இயக்கத்தை ஆதிக்கம் செலுத்தி, வடிவத்தைக் கொடுத்த பெரிய அரசியல் மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகளையும், போராட்டங்களையும் பற்றி அறிந்திராதவர்கள், அல்லது அவை பற்றிக் கவலையின்றி இருந்துவிட்டவர்களாவர். முந்தைய வகையினத்தில் உள்ளவர்களில், மிகுந்த கொள்கைப்பிடிப்பும் ஆர்வமும் உடையவர்கள், வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் அரசியல் வழிமுறைகள் இவற்றில், சோசலிச இயக்க வரலாற்றில், உண்மையான புரட்சிப் போக்குகளுக்கும் சந்தர்ப்பவாத போக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்து, அறிந்து, இவ்வேறுபாடுகள் எவ்வாறு உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள்மீது பாதிப்பு கொண்டிருந்தன என்றும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் இன்றைய அரசியல் நிலைமையை, இவை எந்த அளவிற்கு வடிவமைத்தன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். பிந்தைய வகையினத்தில் உள்ளவர்கள், வரலாறு, அரசியல் கோட்பாடுகள் இவற்றில் கூடுதல் ஆர்வம் இல்லாமல் விலகிவிடுவர் அல்லது, தெரிந்தோ தெரியாமலோ, உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகரத் திறன்கள் பற்றியதில் அல்லது சோசலிசத்தின் வெற்றிக்கான முன்னேற்றங்கள் பற்றியதில் அவநம்பிக்கை கொண்டுள்ள மற்றும் சந்தர்ப்பவாதம் மலிந்த தளத்தில் சேர்ந்துவிடுவர். அவர்களைப் பொறுத்தவரை, அரசியல் முன்கணிப்பு என்பது நல்லதல்ல. சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் கட்சியை அமைக்க முற்பட்டுள்ளது. இத்தகைய கட்சியை அமைக்கும் பணியில், மிக முக்கியமான அம்சம், தொழிலாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகியோருக்கு, வரலாற்றின் படிப்பினைகள், குறிப்பாக கடந்த நூறு ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தினுடைய முக்கிய வழிவகைகளின் அனுபவங்கள் பற்றியவற்றை கற்பிக்கவேண்டும். 20ம் நூற்றாண்டில் புரட்சிகரப் போராட்டங்களுக்கு குறைவு ஏதும் இல்லை. ஆனால், சர்வதேச தொழிலாளர் இயக்கங்களால் இறுதியில் உலக முதலாளித்துவத்தை வீழ்த்த முடியவில்லை. நீண்டகாலமாகவே, பழைய தீவிரவாதப் போக்கினருக்கும் குணப்படுத்த முடியாத ஐயுறவாதிகளுக்கும், தொழிலாள வர்க்கம் கண்ட தோல்விகளுக்கு, தொழிலாள வர்க்கத்தையே காரணமாகக் கொள்வது நவநாகரிகமாக இருந்து வருகிறது; இதைக் காரணம் காட்டி, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் பற்றிய மார்க்சிச கருத்துருவை அடிப்படையிலேயே பிழையானது என வலியுறுத்துவது வழக்கமாகிவிட்டது. இழந்த புரட்சிகர சந்தர்ப்பங்கள், தோல்விகள் போன்றவற்றின் காரணங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும்போது தலைவர்கள், அரசியல் கட்சிகள், வேலைத்திட்டங்கள் இவற்றை பற்றியும் ஆராயவேண்டும் என்று ட்ரொட்ஸ்கிச இயக்கம் எப்பொழுதும் வலியுறுத்தி வந்துள்ளது. அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து செய்யப்படும் ஆய்வு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் முதலாளித்துவம் இதுகாறும் உள்ள நிலையில் இருந்திட சரணாகதி அடைந்த அரசியல் இயக்கங்களால் தடைகளுக்கு ஆளாகியதை காட்டுகின்றன. கடந்த தோல்விகளையும், பின்னடைவுகளையும் மறுபடியும் ஏற்படாமல் தடுப்பதற்கும் வருங்கால வெற்றிகளை அடைவதற்கும் ஒரே அடிப்படை, அந்த அனுபவங்களின் படிப்பினைகளை உணர்ந்து, பல தலைவர்கள், கட்சிகள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றின் அரசியல் பங்கை மதிப்பீடு செய்தலாகும். எனவேதான் நாங்கள், பல அரசியல் போக்குகளின் கடந்த செயற்பாடுகளையும் வர்க்கப் போராட்டத்தில் அவை ஆற்றிய பங்கையும் தீவிர அக்கறையுடன் எடுத்துக்கொள்கிறோம். உங்கள் கடிதம் இரண்டு முக்கிய தன்மைகளைப்பற்றி தவறாக வழிகாட்டுகிறது. முதலில், எந்த ஆதாரமும் காட்டாமல் "இக்கட்சிகள் கூறும் கண்ணோட்டங்களும், அவை கொடுக்கும் முடிவுகளும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன" எனும் தவறான கருத்தை அது வலியுறுத்துகிறது. நீங்கள், இடதுசாரியில் மிகமுக்கியம் எனக் கூறும் ஐந்து அமைப்புக்களின் இடையேயும், நாங்கள் ஒன்றைக்கூட உண்மையான மார்க்சிச கோட்பாடுகளை எடுத்துரைப்பவையாகக் கருதவில்லை என்றாலும், முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, Democratic Socialists of America (இதைத்தான் நீங்கள் ஜனநாயக சோசலிச கட்சி எனக் கருதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்), இது வெளிப்படையாக ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளுக்கு ஆதரவு அளித்து, அக்கட்சிக்குள்ளேயே செயல்பட வேண்டும் என்ற கொள்கையையும் கூறி, அதை இடதுபுறம் நகர்த்த முயற்சிக்கிறது. இந்த முன்னோக்கிற்கு ஆதரவும், ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு சுயாதீனமான அரசியல் கட்சி வேண்டும் எனக்கூறுதலும் "அநேகமாக ஒரேவிதமான கருத்துக்கள்" ஆகுமா? இந்தக் கேள்வியில் வேறுபடுவது, 19ம் நூற்றாண்டில் அது ஆரம்பித்ததிலிருந்து அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தை ஆட்டிப்படைக்கும் கேள்வியாகும், அது "சிறியதும்", "அற்பமும்" ஆனதா? உங்களுடைய மருத்துவர், ப்ளு காய்ச்சல் அடையாளங்களுக்காக உங்களைச் சோதித்த பின், உங்களுடைய நோய்க்கு காரணம், ஒரு வைரஸ், பாக்டிரியம் அல்லது உருப்பெருக்கியில் காணப்படும் ஏதோ ஒரு விஷயம், அல்லது அது என்ன என நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவது, "சிறிய", "அற்ப" விஷயங்களைப்பற்றி தேவையில்லாத பரபரப்பு காட்டுகிறீர்கள் என்றால், எனக்கூறினால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்? அவரை ஓர் ஏமாற்று வைத்தியர் என நினைத்து வேறெங்காவது செல்வீர்கள். அதேபோலத்தான், இங்கும் அரசியல் ஏமாற்றுவித்தைக்காரர்கள் உள்ளனர். இரண்டாவது, இதோடு தொடர்புடைய பிரச்சினை உங்கள் கடிதத்தில் வெளிப்படுவது, வரலாற்றைப்பற்றிய அக்கறையின்மையாகும். கடந்தகாலத்தில் அவை எவ்வாறு இயங்கி இருந்தாலும்கூட, இப்பொழுது அனைத்து "இடது/சோசலிச அரசியல் கட்சிகளும்" இணைந்துவிடுவதன் மூலம் நன்கு செயல்படக்கூடிய சோசலிச இயக்கம் அமைக்கப்படலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளீர்கள். சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுசேரலாம் என நீங்கள் தெரிவிக்கும் கட்சிகளில், மூன்றைப்பற்றி ஆராய்வோம். கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்டாலினிசக்கட்சி, மொஸ்கோ விசாரணைகள், ஸ்பெயின், சிலி, மற்றும் ஏராளமான நாடுகளில் எதிர்ப்புரட்சி இயக்கத்தை நடத்தியது, முதலாளித்துவ முறையை சோவியத் ஒன்றியத்திலேயே மீட்டதைப்பற்றிக் கூறத்தேவையில்லை, இது இப்படிப்பட்ட கட்சியாகும். கிரெம்ளின் அதிகாரத்துவம், சோசலிசத்தைக் காட்டிக் கொடுத்ததை எதிர்த்த கணக்கிலடங்கா புரட்சியாளர்கள், ட்ரொட்ஸ்கி உட்பட, கொலை செய்யப்பட்டதற்கு இது பொறுப்பு ஆகும். இன்று, அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகக் கட்சியின் சில பிரிவுகளுக்கும், AFL-CIO தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவத்திற்கும், பகுதி- அதிகாரபூர்வ ஆலோசகராகவும் இருந்து வருகிறது. The Democratic Socialists of America, இரண்டாம் அகிலத்தின் ஒரு பகுதியாகும்; முதல் உலகப்போரின்போது, ஐரோப்பியத் தொழிலாளர்களை கொலைக்களத்திற்கு அனுப்பியது; பின்னர், மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வந்தது. இதனுடைய சகோதரக் கட்சிகளுள், இன்றைய புஷ்ஷின் ஈராக்கின் மீதான போருக்கு மிகவும் முக்கியமான ஆதரவு கொடுத்த, டோனி பிளேயரின் தொழிற் கட்சியும் ஒன்றாகும். DSA உடைய உறுப்பினர்களில், CIA உடைய எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிலுள்ள, AFL-CIO உடைய தலைவரான ஜோன் ஸ்வீனியையும், அடக்கமாவார்.பின்னர், மாவோயிசத்தை அடிப்படையாகக் கொண்டதும், தேசியவாத குட்டி முதலாளித்துவ முறையின் கண்ணோட்டத்தைக் கொண்டு, பின்தங்கிய நாடுகளில் ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரையும் மாற்றுக்கருத்துக்களில் ஈடுபடுத்திவிட்டு, சீன-ஸ்ராலினிச ஆட்சியின், அடக்குமுறைக்கும், முதலாளித்துவசார்புக் கொள்கைகளுக்கும் பொறுப்பாய் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. உங்கள் சக்தியை, இத்தகைய அமைப்புக்களுடன் இணைத்துச் செயல்பட, நீங்கள் விரும்பினால், அது உங்கள் சிறப்பு உரிமையாகும். ஆனால், சோசலிச பதாகையின்கீழ் இவற்றை உயர்வுபடுத்தி வருவது, சற்று கூடுதலான இறுமாப்பைக் கொண்ட செயலாகும். ஒரு முக்கியமான தற்பொழுதைய நிகழ்வான, கலிபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தலில், இவை அனைத்தும் மேற்கொண்ட நிலைப்பாடுகளை ஆராயும்போது, "இடதுபுறம்" எனும் பல அமைப்புக்களுக்கும், சோசலிச சமத்துவக் கட்சிக்கும், கொள்கையளவில் எவ்வாறு வேறுபாடு இருந்தது என்பது புலனாகும். ஒரு பெரும் அணியாகத்திரண்ட குழுக்கள், பகிரங்கமாகத் திருப்பியழைத்தலை ஆதரித்து, இந்தத் திருப்பியழைத்தல் முயற்சிக்குப் பின்னே வலதுசாரி சக்திகளால் முன்வைக்கப்பட்ட உழைக்கும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அச்சுறுத்தலை பொருட்படுத்தவில்லை. இவற்றில், Freedom Socialist Party, Socialist Workers Party, Sparticist League மற்றும் கலிஃபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட Socialist Action Group ஆகியவையும் அடங்கும். இதையும் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியும், அமெரிக்க ஜனநாயக சோசலிசக் கட்சி, உட்பட சில அமைப்புக்கள், கவர்னர் கிரே டேவிசைக் காக்கும் நிலைப்பாட்டை மட்டும் முழுமையாகக் கொண்டு, திருப்பியழைத்தலை எதிர்க்கின்றன; இவை தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக்கட்சியோடு பிணைத்து வைக்கவே விரும்புகின்றன. இறுதியாகச் சில குழுக்கள், திருப்பியழைத்தல் பற்றி எந்த முடிவும் எடுக்கமுடியாமல், வாக்காளர்களைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறின அல்லது எதுவுமே பேசாமல் இருந்துவிட்டன. இவற்றில், Socialist Party, Workers World Party, Revolutionary Communist Party மற்றும் International Socialist Organisation ஆகியவை அடங்கும். பசுமைக் கட்சி வேட்பாளரான பீட்டர் காமெஜோ, முதலில் மிகுந்த உற்சாகத்துடன், வலதுசாரிக் குடியரசின் கோட்டுத்துணியைப் பிடித்துக்கொண்டு, திருப்பியழைத்தலுக்கு ஒப்புதல் கொடுத்தார்; பின்னர் இந்தக் கவர்னர் பிரச்சாரத்தின் வழியாக முதலாளித்துவ பொதுக்கருத்தில் கெளரவம் பெருக்கிக் கொள்ளவும், பசுமைக் கட்சியும் அரசியல் நடைமுறையின் ஒரு பகுதி என ஏற்கப்படவும் முற்பட்டார். ஆனால், தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பு, கருத்துக்கணிப்புக்கள் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் ஆர்னோல்ட் ஷ்வார்ஷ்நீகர் கணிசமாக முன்னிலையில் இருப்பதாகக் காட்டியவுடன், அவருடைய ஆதரவாளர்கள் ஜனநாயக வேட்பாளர் க்ரூஸ் பஸ்டமன்டேக்கு வாக்கு அளித்தால், அவ்வுணர்வைத்தான் "புரிந்துகொள்ள" முடியும் என்று அறிவித்தார். 2002 கவர்னர் தேர்தல் முடிவுகளை தூக்கி எறியவும், தன்னுடைய பிற்போக்கான செயல்பட்டியலை நடைமுறைப்படுத்தவும் வலதுசாரிக் குடியரசினர் மேற்கொண்ட முயற்சியை அம்பலப்படுத்தவும், எதிர்க்கவும்தான் சோசலிச சமத்துவ கட்சியைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் தலையீடு அமைந்தது. அதேநேரத்தில் கவர்னர் கிரே டேவிசுக்கோ, துணை கவர்னர் க்ருஸ் பஸ்டமன்டேக்கோ அல்லது ஜனநாயகக் கட்சியின் எந்தப்பிரிவிற்குமோ நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. சோசலிச சமத்துவக் கட்சி இரு பெருவர்த்தக கட்சிகளுக்கும் எதிராக ஒரு சோசலிச மாற்று வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்த, ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனுக்கு இசைவு அளித்தது. குறுகிய கால அரசியல் திட்டங்களிலும், கொள்கையற்ற மற்றும் சந்தர்ப்பவாத அடிப்படையிலான கூட்டணிகளிலும், சோசலிச சமத்துவக் கட்சி அக்கறை காட்ட விரும்பவில்லை. சமுதாயம் இரு வகுப்புக்களாக உள்ளது என்றும், முதலாளித்துவ சமுதாயத்தில் அது உள்ள நிலையில், இப்பொழுதுள்ள அமைப்பில், தொழிலாள வர்க்கம் சமாதானப்படுத்திக்கொள்ள முடியாத பூசல்களில் தான் இருப்பதால், ஒரு புரட்சிகரமான போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், உழைக்கும் மக்களிடையே, அதற்காக சோசலிச நனவைக் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. அதாவது, அரசியல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதற்காக, உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டியுள்ளது. வரலாற்றின் படிப்பினைகளிலும், மாபெரும் சிந்தனைகளின் அடிப்படையிலும்தான், சுதந்திரத்திற்கான மகத்தான இயக்கங்கள் எழுப்பப்படும் என்று நாங்கள் கருதுகிறோம். உழைக்கும் வர்க்கம், மிக உயர்ந்த அளவு அரசியல் நனவைக் கொள்ளவேண்டும், அந்த முழு நனவை வளர்க்கவேண்டியது, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதனுடைய சக சிந்தனையாளர்களான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியாகும். ஜெரி ஐசக்ஸ், உலக சோசலிச வலைதள ஆசிரியர் குழுவிற்காக |