World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Confusion surrounds Sri Lanka's state of emergency

இலங்கையில் அவசரகால நிலைமை பற்றிய குழப்பநிலை நிலவுகிறது

By our correspondents
7 November 2003

Back to screen version

புதன் கிழமையன்று தீவு பூராவும் அவசரகால நிலைமையை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தீர்மானத்தையிட்டு ஒரு அசாதாரணமான குழப்பநிலை நிலவுகிறது. பாதுகாப்பு, உள்துறை மற்றும் தகவல் துறை ஆகிய மூன்று முக்கியத் துறைகளின் அமைச்சர்களை பதவி விலக்கியதோடு பாராளுமன்றத்தையும் ஒத்திவைத்ததையடுத்து உருவான இந்த நிலைமை, இராணுவ ஆட்சியொன்றை ஸ்தாபிப்பதை நோக்கிய மேலுமொரு நடவடிக்கையாக உள்ளது.

கடந்த இரு தசாப்தங்களுள் மிகுந்த அளவில், பதவிக்கு வந்த அரசாங்கங்கள் கொடூரமான அவசரகால விதிகளை அமுல்படுத்தியிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் என்ற பெயரில் இலங்கை படைகளுக்கு, தேடுதல், விசாரணையின்றி கைது செய்தல், ஊடக தணிக்கை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வது மற்றும் அத்தியாவசிய சேவைகளின் பேரில் வேலை நிறுத்தங்களை தடை செய்வது போன்ற பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும், 2002 பெப்ரவரியில் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் ஒன்றில் கைச்சாத்திட்டதிலிருந்து மோதல்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன், முன்னய பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் அவசரகால நடவடிக்கைகளை பேணுவதற்கிருந்த அடிப்படைகளும் நீக்கப்பட்டது.

குமாரதுங்க, தனது பரந்த ஜனாதிபதி அதிகாரங்களை நிறைவேற்றி, அவசரகால நிலமையை பிரகடனம் செய்தமைக்கு ஒத்திசைவான நியாயப்படுத்தல்களை வழங்கவில்லை. எத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது மிகைப்படுத்தப்பட்டதாகவும் தெளிவற்றதாகவுமே இருந்தது. உதாரணமாக, ஜனாதிபதி அலுவலகமானது, ஏஜன்ஸ் பிரான்ஸ் பிரசிற்கு "நிர்வாக மற்றும் தர்க்கவியல் காரணங்களுக்காவே" குமாரதுங்க இத்தீர்மானத்தை எடுத்தார் என கூறியிருந்தது. ஜனாதிபதி உதவியாளர் எரிக் பெர்னான்டோ வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு "நிலைமையை கருத்திற் கொண்டே" இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

முதல் நாள் இரவு உலக சோசலிச வலைத் தள நிருபர் தொடர்பு கொண்ட போது, பெர்னான்டோ இதே விளக்கத்தையே கொடுத்தார். அவரை மேலும் நெருக்கி கேட்டபோது, தனக்கு இப்படித்தான் கூற வேண்டும் என போதிக்கப்பட்டதை அப்படியே திருப்பி கூறுவதாக பிரகடனம் செய்தார். இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் "அவசர நிலை" என்ன என வினவியபோது, தனது மனைவி உட்பட ஏனையவர்களும் இக்கேள்வியையே கேட்கின்றனர். ஆனால் தன்னிடம் பதில் இல்லை என சிறிது எரிச்சலுடன் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு, அதாவது அவசரகால நிலைமை அமுல்படுத்தப்படவிருந்த நேரத்துக்கு சற்றுமுன் தொடர்புகொண்டபோது, ஜனாதிபதி ஊடாக பேச்சாளர் ஹக்கீம் பீரிசுக்கோ அல்லது ஊடக ஆலோசகர் ஜனதாச பீரிசுக்கோ மேலதிகமாக எதுவும் கூறுவதற்கு இருக்கவில்லை. அவசரகால சட்ட விதிகள் நள்ளிரவுக்கு வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக இருவரும் வெறுமனே பிரகடனம் செய்த போதிலும், பிரகடனம் செய்யப்படவுள்ள அதிகாரங்கள் பற்றிய விபரங்களை வழங்க மறுத்துவிட்டனர். அரசாங்க வர்த்தமானியின் ஒரு பிரதி கூட யாருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கை நிலைமைகளைப் பொறுத்தவரையிலும் கூட, இது முன்னெப்போதும் காணப்படாத ஒரு நிலவரமாகும். கடந்த காலங்களில், அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யும்போது திட்டவட்டமான நிச்சயமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன: அவை அமுல்படுத்தப்படுவதற்கு முன்னரே விதிகள் ஒழுங்கமைக்கப்பட்டு வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. அமுல்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடுகள் எவை, பொலிசாருக்கு வழங்கப்படவுள்ள மேலதிக அதிகாரங்கள் எவை என்பதை முன்கூட்டியே அனைவரும் அறிந்துகொள்வர். இன்றோ, இலங்கை மக்களுக்கு எதுவும் அறிவிக்காமல், இராணுவத்திற்கும் பொலிசுக்கும் அளவற்ற புதிய அதிகாரங்ளை வழங்கும் அவசரகாலச் சட்டம் ஏற்கனவே அமுலாகியுள்ளது.

குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாஷிங்டனிலிருந்து திரும்பிவரும் சமயத்தில் அவசரகால விதிகளை கொண்டுவர தருணம் பார்த்திருந்தார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரதமரை வரவேற்கவும் ஐ.தே.மு. அரசாங்கம் மீதான ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான தாக்குதலை கண்டித்தும் திரள உள்ளனர். விக்கிரமசிங்க ஜனாதிபதி புஷ்ஷை சந்தித்தபோது அளவான அமெரிக்க ஆதரவைப் பெற்றுக் கொண்டார். புஷ்சின் பேச்சாளரும், குமாரதுங்கவின் நடவடிக்கைகள் "சமாதான முன்னெடுப்புகள்" எனக் கூறப்படுவதை பாதிக்கக்கூடும் என சுட்டிக் காட்டியிருந்தார்.

நாட்டின் உள்நாட்டு போருக்கு முடிவுகட்டும் பொருட்டு, ரணில் விக்கிரமசிங்க பெரு வர்த்தகர்கள் மற்றும் வல்லரசுகளின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளுடன் ஒரு அதிகார பகிர்வு ஒழுங்குக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். அவரது முக்கிய சில அமைச்சர்களை குமாரதுங்க பதவிநீக்கம் செய்து, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததற்கு சில தினங்களுக்கு முன்னரே, முறிவடைந்து போன சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர்வதற்கான ஒரு உந்து சக்தியாக, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபைக்கான தனது தீர்மானங்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்னர். அத்தகைய ஏற்பாடுகள் மூலம் நாட்டை காட்டிக் கொடுப்பதாக கண்டனம் செய்ததோடு, அரசாங்கம் தேசிய பாதுகாப்பை ஆபத்துக்குள் தள்ளுவதாகவும் எச்சரிக்கை செய்த குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி, பலவாரங்களாகவே பேரினவாத சிந்தனைகளை தூண்டிவந்தது.

புதனன்று, குமாரதுங்கவின் உயர்மட்ட ஆலோசகரான லக்ஸ்மன் கதிர்காமர், ஜனாதிபதி "சமாதான முன்னெடுப்புகளை" ஆதரிப்பதாகவும் யுத்தத்தை தூண்ட மாட்டாரெனவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆளும் கும்பல்களுக்கு உறுதியளித்தார். ஆனால், அவர் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதோடு, விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் எந்தெவொரு சலுகையையும் அரச துரோகமாக கருதும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்கள தீவிரவாத கட்சிகள் பக்கம் பலமாக சாய்ந்து வருகின்றார்.

கடந்த புதன் கிழமை, ஜனாதிபதி "நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றி விட்டதாக" பிரகடனம் செய்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, குமாரதுங்கவுக்கு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளார். "நாட்டு நலனுக்காக, பின்வாங்காது சகல தீய சக்திகளையும் அழிக்க துணிவுடன் முன்செல்ல வேண்டுமென நாம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றோம்," எனவும் அவர் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் எதிராக ஒரு பேரினவான இயக்கத்தை தூண்டிவிடும் நோக்கில், தேசாபிமான தேசிய இயக்கம் எனும் பாசிச அமைப்பால் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணியின் பின்னணியில் இருக்கும் பிரதான அமைப்புகளில் ஒன்றாக ஜே.வி.பி. இருந்து கொண்டுள்ளது.

குமாரதுங்க தனது காரணத்தை பகிரங்கமாக கூற மறுக்கும் அதேவேளை, அவர் அவசரகால நிலைமையின் உதவியை நாடியதானது அதிகரித்தளவில் தொடர்ந்தும் நலிவுற்றுவரும் அரசியல் நிலைமையின் கீழ், கட்டுப்பாட்டைத் தொடர்ந்தும் பேணும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகவே தோன்றுகின்றது. ஐ.தே.மு. அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் அவசரகால நடவடிக்கைகளின் உடனடி இலக்காக இருந்து கொண்டுள்ள போதிலும், ஐ.தே.மு.வின் நீண்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைக்ளுக்கு எதிராக, போராளித்தனமான வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்ற தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு தலையீட்டுக்கும் எதிராக நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

குமாரதுங்கவால் இதுவரை தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தமைக்கு, தொழிலாளர் அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் முழு இழிவான பிரதிபலிப்புகளே பொறுப்பாகும். பொதுஜன முன்னணி கூட்டணியின் கனிஷ்ட பங்காளிகளான லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு அரசியலமைப்பு சதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ல.ச.ச.க. பொதுச் செயலாளர் பட்டி வீரக்கோன், "ஜனாதிபதி தனது உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்குள் நின்று செயற்பட்டுள்ளார்," மற்றும் "அவரது நடவடிக்கையின் விவேகத்தை காலம் சொல்லும்," என டெயிலி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

நேற்றைய பிரதான பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்கங்கள் நெருக்கடியையிட்டு புலம்பியதோடு புத்திசாலித்தனமான கலந்துரையாடல்கள் வெல்லும் என்ற தெளிவற்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்தியிருந்தன. எடுத்துக்காட்டாக ஐலண்ட் பத்திரிகை, கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தமக்கிடையிலுள்ள போட்டி மற்றும் குறுகிய பொறாமைகளிலில்" இருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்" என ஒப்பாரிவைக்கின்றது. தேவைப்படுவது என்னவென்றால் ஒரு அரசியல் மேதையாகும் என பிரகடனப்படுத்தும் அந்த செய்தித்தாள், பின்னர் இதுவரை எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என முடிக்கின்றது. "தற்போதைய நெருக்கடியானது இந்த நாட்டுக்கு வரவுள்ள வியாதியை முன்கூட்டியே அறிவிக்கின்றது", என அது எச்சரித்தது. "இந்நாட்டின் உடல்களை வியாதியில் ஊறவைத்துள்ளது" என அது எச்சரிக்கிறது. இப்போது ஜனாதிபதியின் உதிவியாளர்கள் அரசுக்குச் சொந்தமான லேக் ஹவுஸ் வெளியீடுகளின் தலையங்கங்களை பகிரங்கமாக நெறிப்படுத்துகின்றனர்.

கைகளை முறுக்கிக்கொள்ளும் நிலைமைகளுக்கு மத்தியில், ஒரு பத்திரிகை கூட சாதாரண உழைக்கும் மக்களது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தாக்குதலைப் பற்றி ஒரு வார்த்தை தன்னும் பேசவில்லை. குமாரதுங்கவின் அவசரகால நிலைமை பிரகடனம் பற்றியோ அல்லது அது மேற்கொள்ளப்பட்ட விதம் பற்றியோ ஒரு கண்டனச் சொல்கூட வெளியிடப்படவில்லை. இது இலங்கை ஆளும் கும்பல்களுக்குள் அல்லது பழைய தொழிலாள அமைப்புகள் மற்றும் கட்சிகளுக்குள், ஜனநாயக செயல்முறை மற்றும் விதிமுறைகளைக் காக்க எந்தவொரு நேர்மையான பகுதியினரும் எஞ்சியிருக்கவில்லை என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தற்போதைய நிலைமை மிகவும் ஸ்திரமற்றதாகும். குமாரதுங்கவின் அவசரகால நிலைமை பிரகடனம் அரசியலமைப்பின் படி 10 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கவல்லது. அதன் பின்னர் அவரது அரசியல் எதிரிகள் பெரும்பான்மையாக உள்ள பாராளுமன்றத்தின் அனுமதியை கோர வேண்டும். அதே சமயம், வர்த்தகர்களும் ஏகாதிபத்திய சக்திகளும் நாட்டை அரசியல் மற்றும் பொருளாதார இயல்நிலைக்கு திருப்புவதன் பேரில், விக்கிரமசிங்கவுடனும் ஐ.தே.மு.வுடனும் சமரத்துக்கு செல்லுமாறு ஜனாதிபதியை நெருக்கிவருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுள் பங்குச் சந்தை 15 சதவீதத்தால் வீழ்ச்சியுற்றதுடன், 2000 உல்லாசப் பிரயாணிகளின் வருகை இரத்துச் செய்யப்பட்டன. ஆனால் சிங்களத் தீவிரவாத குழுக்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் குமாரதுங்க தன்னால் இலகுவில் கட்டுப்படுத்த முடியாத சமூக சக்திகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இது எதனை சுட்டிக் காட்டுகிறதெனில், எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியைத் தவிர வேறு யாராலும் ஸ்திரத்தன்மை பற்றி கூறமுடியாமல் இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved