World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party condemns Sri Lankan president's constitutional coup

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்பு சதியை கண்டனம் செய்கின்றது

By Socialist Equality Party
6 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனநாயக விரோதமான முறையில் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டதை மிகவும் வன்மையாகக் கண்டனம் செய்கின்றது. பாதுகாப்பு, உள்துறை மற்றும் தகவல்துறை ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தமை, மற்றும் அதைத் தொடர்ந்து அவசரகால நிலைமையை பிரகடனம் செய்தமையும் ஒரு அரசியலமைப்பு சதிக்கு சமமானதாகும். முற்றுமுழுதாக இராணுவத்தைச் சார்ந்திருக்கும் குமாரதுங்க, முதற்படியாக இராணுவ சர்வாதிகாரத்தை திணிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தற்போது குமாரதுங்க பாதுகாப்புப் படையின் மீதான முழுக் கட்டுப்பாட்டையும் தன்வசம் வைத்திருப்பதோடு, கொழும்பின் பிரதான மின்சார நிலையம், பல தூதரகங்கள் அதேபோல் அரசாங்கத்துக்குச் சொந்தமான தகவல்துறை மற்றும் அச்சகங்கள் உட்பட்ட பிரதான இடங்களில் இராணுவத்தை பணியில் ஈடுபடுத்தியுளார். அவர் இந்த நிறுவனங்களையும் அமைச்சகங்களையும் நிர்வகிப்பதற்கு தனது சொந்த நிர்வாகிகளை நியமித்திருப்பதோடு, ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அரசியல் யாப்பின்படி சவால் செய்ய முடியாத வகையில் பாராளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், பரந்தளவிலான வேலையின்மை, தொழில் வெட்டு, தனியார்மயமாக்கல் மற்றும் சீரழிந்து வரும் சமூக நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களும் கிளர்ந்தெழும் நிலைமைகளின் கீழ் அவசரகால நிலைமை பிரகடனமானது இலங்கை மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழித்துக்கட்டுகிறது. அதன் உள்ளடக்கங்கள் எதுவும் இன்னமும் முழுமையாக தெளிவுபடுத்தப்படாத அதேவேளை, முன்னைய அவசரகால பிரகடனங்கள், அரசியல் நடவடிக்கைகளை தடை செய்ததுடன் கடுமையான செய்தி தணிக்கையை திணிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமளித்ததோடு, மற்றும் நினைத்த மாத்திரத்தில் கைதுசெய்வதற்கும் காவலில் தடுத்துவைப்பதற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கும் அதிகாரங்களை வழங்கியது.

சோசலிச சமத்துவக் கட்சி, குமாரதுங்கவின் சதியை கண்டனம் செய்யும் அதேவேளை, லங்கா சமஜமாஜ கட்சியும், நவ சமஜமாஜ கட்சியும் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் வகித்த குற்றம்மிக்க பாத்திரத்தையும் கண்டனம் செய்கின்றது. "தொழிலாளர் அமைப்புகள்" என்று சொல்லப்படுகின்ற இந்த அமைப்புகள் குமாரதுங்கவுடனும் மற்றும் அவரது இராணுவ ஆதரவு சூழ்ச்சித்திட்டங்களோடும் அணிசேர்ந்து கொண்டு சர்வாதிகார இயந்திரத்துக்கு எண்ணெய் பூசும் நடவடிக்கைக்கு உதவுகின்றனர்.

1970 களில் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிக்கு எதிராக, ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட, இலங்கையின் 1978 அரசியல் யாப்பில் உள்ளடங்கியுள்ள நிறைவேற்று மற்றும் சர்வாதிகார ஜனாதிபதி அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தியே குமாரதுங்க அதிகாரத்தைப் பறிமுதல் செய்துள்ளார்.

முன்னர் குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க் கட்சியாக இருந்தபோது இந்த "சர்வாதிகார அரசியல் யாப்பிற்கு" எதிராக இருந்ததுடன், நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு முடிவுகட்டுவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் 1994ல், அவரது பொதுஜன முன்னணி தேர்தலில் வெற்றியீட்டியதும் தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார். 2001 தேர்தல்களில் பொதுஜன முன்னணி தோல்வி கண்டபோதும் குமாரதுங்க ஜனாதிபதி பதவியைத் தொடர்ந்தார். இப்போது அவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அந்தப் பதவியை பயன்படுத்திக் கொள்கின்றார்.

அரசைக் கட்டுப்படுத்துவதற்கான மையமாக விளங்குவது, நாட்டின் 20 வருடகால அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முயற்சி பற்றி ஆளும் கும்பல்களுக்கிடையில் எற்பட்டுள்ள முரண்பாடுகளேயாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தீவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக ஒரு மலிவு உழைப்பு மேடையாகத் திறந்து விடுவதன் பேரில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு அதிகாரப் பகிர்வு தயாரிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தவிருந்தார். பெரும் வர்த்தகர்களைப் போலவே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவும் தனது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாயக் காரணங்களுக்காக விக்கிரமசிங்கவின் ஆரம்ப நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. யுத்தத்தின் மூலம் இலாபம் பெற்ற வியாபாரிகளில் மிகவும் பின்தங்கிய பகுதியினர், அதே போல் இராணுவ மற்றும் அரச அதிகாரத்துவ பகுதியினரின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் குமாரதுங்கவும் பொதுஜன முன்னணியும் "சமாதான முன்னெடுப்புகளை" எதிர்த்ததோடு, (Janatha Vimukthi Peramuna -JVP) மற்றும் சிங்கள உறுமைய (Sihala Urumaya-SU) போன்ற சிங்கள பேரினவாதக் கட்சிகளோடு அதிகளவில் இயைந்து போகின்றனர்.

குமாரதுங்கவின் அரசியலமைப்பு சதியானது, இடை நிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதன் பேரில், வடக்கு-கிழக்கில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தமது திட்ட வரைவை விடுதலைப் புலிகள் வெளியிட்டு 3 நாட்களின் பின்னர் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரங்களாக பொதுஜன முன்னணியும், மக்கள் விடுதலை முன்னணியும் மற்றும் சிங்கள உறுமயவுடன் சேர்ந்து இடைக்கால நிர்வாக சபைத் திட்டங்களை ஒரு "காட்டிக் கொடுப்பு" எனவும் அது நாட்டைப் பிளவுபடுத்தும் எனவும் கண்டனம் செய்தன.

குமாரதுங்கவுக்கும் அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் பேரினவாதிகளுக்கும் இடையிலான கூட்டணியானது அவரது சதியின் உள்ளடக்கம் பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு மிகத் தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது. இனவாதத்துக்கு தூபமிடும் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் மற்றும் "நாட்டைக் காட்டிக் கொடுத்தல்" எனும் அதன் குற்றச்சாட்டுக்களும், 1980 களில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது, சோசலிச சமத்துக கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அங்கத்தவர்கள் உட்பட அதன் "நாட்டுப்பற்று" பிரச்சாரத்திற்கு எதிரானவர்களை கொலை செய்வதற்காக ஆயுதம் தரித்த குண்டர்களை அணிதிரட்டி அது இட்டுநிரப்பிய பாத்திரத்தை நினைவுபடுத்துகின்றது.

தொழிலாள வர்க்கம், குமாரதுங்கவின் நடவடிக்கைகளையும் அவரின் சதியையும் கண்டனம் செய்யும் அதே வேளை, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு அரசியல் ஆதரவு வழங்கக் கூடாது. சாதாரண உழைக்கும் மக்கள் ஜனநாயக உரிமைகளை காக்கவும் வாழ்க்கை நிலைமைகளை அபிவிருத்தி செய்யவும் கொண்டுள்ள அபிலாசைகளை ஐக்கிய தேசிய முன்னணியின் சமாதானத் திட்டங்கள் இட்டு நிரப்பப் போவதில்லை. அவர்களுக்கிடையாலான முரண்பாடுகள் என்னவாக இருந்தபோதிலும், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படாத ஒரு இனவாத அடிப்படையிலான இடைக்கால நிர்வாக சபையை வடக்குக் கிழக்கு மக்கள் மீதும், கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை முழு இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் திணிப்பதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலை அபிவிருத்தி செய்வதில் ஐக்கிய தேசிய முன்னணியும் விடுதலைப் புலிகள் அமைப்பும் ஈடுபட்டுள்ளன. செப்டம்பரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 80,000 வைத்தியசாலை ஊழியர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்துவதில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தந்திரோபாயரீதியான அணிதிரளலானது அதிகாரப் பகிர்வு உடன்பாட்டின் கீழ் தொழிலாளர்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதை தெளிவாக காட்டுகின்றது.

அதற்கும் மேலாக, குமாரதுங்கவுக்குப் பதிலாக விக்கிரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்திருப்பாரேயானால், அவரும் சந்தேகத்துக்கிடமின்றி குமாரதுங்கவைப் போலவே செயற்பட்டிருப்பார். ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தொழிலாளர் வர்க்கத்தை இனரீதியில் பிளவுபடுத்துவதற்கு பல தசாப்தங்களாக பயன்படுத்திவந்த சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கிப் போயுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்னர்தான், வர்த்தகர்களும் பெரும் வல்லரசுகளும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் ஒரு அரசியலமைப்பு சீர்திருத்த பொதியை நடைமுறைக்கிடுமாறு குமாரதுங்கவை நெருக்கிவந்தன. மக்கள் விடுதலை முன்னணியாலும் மற்றைய சிங்கள இனவாத குழுக்களாலும் கட்டவிழுத்துவிடப்பட்ட இனவாத பிரசாரத்தினால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க முன்னர் தான் வழங்கிய உறுதிமொழியிலிருந்து பின்வாங்கிய விக்கிரமசிங்கா அத்தீர்வு பொதியை குமாரதுங்கா பின்வாங்குவதற்கு நிர்ப்பந்தித்தார்.

அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு முதலாளித்துவ கட்சியும் மற்றைய கட்சியை பின்பற்றி இனவாத துரும்பு சீட்டை பயன்படுத்தியதுடன், அதிகரித்தவகையில் பிற்போக்கான ஜனநாயக விரோத ஆட்சி முறைகளை அபிவிருத்தி செய்தன. இந்த இனவாத சகதியில் வெளியேறுவதற்கு தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை அடிப்படையாகக்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் நெருக்கடியின் மூலம், 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளை கைவிட்டு, குமாரதுங்கவின் தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்ததோடு நேரடியாக தொடர்புபட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தமிழர் விரோத சிங்கள பேரினவாதத்துக்கு தன்னை அடிபணியச் செய்ததன் மூலம் லங்கா சமஜமாஜ கட்சி, 1983ல் உள்நாட்டு யுத்தத்தின் வெடிப்புக்கு வழிவகுத்த இனவாத அரசியலின் எழுச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியது. அதே சமயம், 1964 மற்றும் 1970ல் முதலாளித்துவ அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம், தமிழ் தொழிலாள வர்க்கத்தையும், சிங்கள மக்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினரையும், எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்களையும், கிராமப்புற மக்களையும் கைகழுவி விட்டது. சமசமாஜக் கட்சியின் பாரிய காட்டிக் கொடுப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் வெற்றிடமானது தமிழீழ விடுதலைப்புலிகளினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் வளர்ச்சிக்கு காரணமானது.

இலங்கையின் ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கான ஒரு முற்போக்கான தீர்வை வழங்கக்கூடிய ஒரேயொரு சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மாத்திரமேயாகும். ஐக்கிய தேசிய முன்னணிக்கோ அல்லது பொதுஜன முன்னணிக்கோ தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் அபிலாசைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கொள்கைகள் கிடையாது. எனவேதான் அவர்கள் அழிவுகரமான ஏமாற்றுக்கள் மற்றும் இனவாதம் ஊடாகவும் இராணுவத்தை அணிதிரட்டுவதன் மூலமும் தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள முனைகின்றனர்.

முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் மற்றும் அதற்கு அரசியல் வக்காலத்துவாங்கும் லங்கா சமஜமாஜ கட்சி, நவசமஜமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றிலிருந்தும் முற்றுமுழுதாக அரசியல் சுயாதீனத்தை உருவாக்கிக்கொள்வதன் மூலமே தொழிலாளவர்க்கம் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். இது, ஒரு சிறு பகுதியினரின் இலாபத்திற்காக அன்றி பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பேரில், சமுதாயத்தை மேலிருந்து கீழ் வரை மீளமைப்பதை இலக்காகக் கொண்ட சோசலிச வேலைத் திட்டத்தை சூழ நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களை அணிதிரட்டுவதை வேண்டிநிற்கிறது.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு, தொழிலாளர்கள் அனைத்து வடிவிலான இனவாதம் மற்றும் வகுப்புவாதத்தையும் தீர்க்கமான முறையில் நிராகரிக்க வேண்டும். அவர்கள் சிங்களம், தமிழ் அல்லது முஸ்லிமாக இருக்கலாம், எல்லாத் தொழிலாளர்களும் நாளாந்தம் உயிர்வாழ்வதற்கு ஒரே வர்க்க எதிரிக்கு எதிரான அன்றாடப் போராட்டத்துக்கு முகம்கொடுக்கின்றனர். தொழிலாளர் வர்க்கம் அனைத்துலக ரீதியிலும், இந்திய உபகண்டத்திலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசுக்காக இனவேறுபாடுகளை கடந்து தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும். இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் அனைத்துலக ஊடகமான உலக சோசலிச வளைத் தளமும் ஆகும்.

Top of page