WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan opposition launches anti-government campaign
இலங்கையில் எதிர்க் கட்சி அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது
By Panini Wijesiriwardena and W.A. Sunil
1 November 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
அக்டோபர் 24 அன்று எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணியின் பிரதானக் கட்சியான
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சி
கண்டுவரும் அதிருப்தியை மூலதனமாக்குவதை இலக்காகக் கொண்ட பிரச்சாரத்தின் ஒரு பாகமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள
ஒரு தொடர்ச்சியான போராட்டத்தில் முதலாவது போராட்டத்தை நடத்தியது. அதன் தீர்மானிக்கப்பட்ட இலக்கானது
"சமாதான முன்னெடுப்புகளின் அரசாங்கத்தின் தலையீடு" மற்றும் "அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை தவிர்க்க
நடவடிக்கை எடுக்க முடியாமை" ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக இருந்தது.
இந்த கூட்டமானது "ஜன சேனா" அல்லது மக்கள் அணிதிரட்டல் எனும் பெயரில்
கொழும்புத் தலை நகரின் மத்திய பகுதியில் உள்ள நகர மண்டபத்துக்கு பத்துலட்சம் பேரை கொண்டுவருவதாக அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இத்தகைய ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதற்கான சிறிய ஆதாரங்கள் வெளிவந்தது ஒரு வாரத்துக்கு
முன்னரேயாகும். ஆனால் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ.ல.சு.க. தலைவியான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை
முதன்மைபடுத்திய போதிலும், இதை இந்து சமய கொண்டாட்ட தினத்தன்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமையால்
அதை ஒத்தி வைக்குமாறு கோரும் தமிழ் கட்சிகளின் அழைப்புக்களைத் தவிர வேறு கலந்துரையாடல்கள் அல்லது வாதங்கள்
எதுவும் ஊடகங்களில் நடைமுறையில் காணப்படவில்லை.
நிகழ்வின்போது, நகருக்குள் நுழையும் நான்கு வேறுபட்ட வழிகளில் இருந்து நகர
மண்டபத்துக்கு சுமார் 100,000 பேர் குவிந்தனர். அது பல வருடங்களின் பின்னர் இடம்பெறும் ஸ்ரீ.ல.சு.க. வின்
பெரும் கூட்டங்களில் ஒன்றாக இருந்தது. பங்குபற்றியவர்களில் பலர் ஸ்ரீ.ல.சு.க வின் உத்தியோகபூர்வ நிறமான நீல
நிறத்தில் அலங்கரித்துக்கொண்டிருந்தனர் அல்லது நீல நிற கொடிகளையும் பதாகைகளையும் சுமந்து சென்றனர். சமூகப்
பிணைப்பு மாறுபட்டிருந்தது. நாடு பூராவும் உள்ள கட்சிக் கிளைகள் இளைஞர் மற்றும் பெண் அமைப்புகள், கட்சியோடு
இணைந்த தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் வேலையற்றோர்களின் அமைப்புகள் ஆகியவை தமது சொந்தப்
பதாகைகளின் கீழ் பிரிவுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஸ்ரீ.ல.சு.க. வின் கூட்டணிகளான லங்கா சமசமாஜக்
கட்சி (ல.ச.ச.க) மற்றும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் தனிப் பிரிவாக இணையாமல் உத்தியோகபூர்வ மேடைக்கு
சமூகமளித்திருந்தன.
உத்தியோகபூர்வ பதாகைகள் மற்றும் சுலோகங்களில், நாட்டின் நீண்ட உள் நாட்டு யுத்தத்துக்கு
முடிவுகட்டுவதன் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்ல முயற்சிப்பதாக பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவை கண்டிக்கும், தேசியவாதத்துக்கும் பேரினவாதத்துக்கும் அழைப்புவிடுக்கும் செய்திகள் ஆதிக்கம்
செலுத்தின. ஐ.தே.மு. நாட்டை வெளிநாட்டாருக்கு விற்பதாக கண்டனம் செய்யும் தெளிவற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு
சுலோகங்களில், "ரணில் நாட்டை பிரிக்கின்றார்," "ரணில் நாட்டை விடுதலைப் புலிகளிடம் காட்டிக்
கொடுக்கின்றார்" போன்றவை முதன்மையாகக் காணப்பட்டன. கோசங்கள் விக்கிரமசிங்கவை வெளியேற்றி நாட்டைக்
காக்க பொறுப்பேற்குமாறு குமாரதுங்கவுக்கு அழைப்புவிடுத்தன.
எவ்வாறெனினும், மேலும் சில கையால் எழுதப்பட்ட, தொழிலாளர்கள், விவசாயிகள்
மற்றும் வேலையற்றவர்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஏனைய சுலோக அட்டைகளும்
ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. "வாழ்க்கைச் செலவைக் குறை", "5000 சம்பள உயர்வு கொடு",
"அபிவிருத்தி உதவித்தொகையை மீளமை", "நெல்லுக்கு நிலையான விலை வழங்கு", "வேலையற்றவர்களுக்கு வேலை
வழங்கு", "தனியார்மயத்தை நிறுத்து" மற்றும் "இலவசக் கல்வியில் கை வையாதே" போன்றவையும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஒரு தொழிலாளர் குழுவினர் இலங்கை போக்குவரத்துச் சபையின் (அரசாங்கத்துக்குச் சொந்தமான பஸ் சேவை)
முடிவை அர்த்தப்படுத்தும் வகையில் ஒரு சவப்பெட்டியை எடுத்துச் சென்றனர்.
2002 ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்
கொண்டு, பின்னர் அதனது பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன் முன்சென்ற ஐ.தே.மு அரசாங்கத்துக்கு எதிராக
வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியின் ஒரு சிறிய சமிக்ஞையை பல ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகள் வெளிப்படுத்தின.
பெரும்பான்மையான சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் "சமாதானம்" வாழ்க்கை நிலைமைகளில் மாற்றத்தைக்
கொண்டுவரவில்லை. ஆனால் பொதுச் செலவில் வெட்டு, தனியார்மயம் மற்றும் வேலை பறிபோதல், சேவை மற்றும்
உதவித் தொகையில் வெட்டு போன்றவற்றை முற்றிலுமாகத் தினித்தது. கடந்த சில மாதங்களாக வேலை நிறுத்தம்
மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பு அலைகளுக்கு அரசாங்கம் முகம்
கொடுத்துள்ளது.
ஐ.தே.மு. மீதான எதிர்ப்பு, எதிர்க்கட்சிக்கான ஆதரவாக மாற்றமடையாமல்
இருப்பதே குமாரதுங்கவும் பொதுஜன முன்னணியும் முகம் கொடுக்கும் பிரச்சினையாகும். பெரும்பாலான வாக்காளர்கள்
சமாதானம் மற்றும் சிறந்த வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமான வாக்குறுதிகளோடு 1994ல் ஆட்சிக்கு வந்த பொதுஜன
முன்னணி அரசாங்கத்தின் பதிவுகளை நினைவூட்டுகின்றனர். விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்காக
குமாரதுங்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டதையடுத்து, அவர் நாடகபாணியில் யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு,
தற்போது ஐ.தே.மு. அரசாங்கத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதாரக் கொள்கைகளை
அமுல்படுத்தினார்.
பலவீனமான நிலைமை
ஸ்ரீ.ல.சு.க வின் அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரமானது மக்களின் அதிருப்தியை
சுரண்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக விளங்கும் அதேவேளை அதன் பலவீனமான அரசியல் நிலைமையையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால் மக்களில் பெரும்பான்மையினர் முகம் கொடுக்கும் சமூக நெருக்கடிக்கு பொதுஜன முன்னணியிடம் தீர்வு கிடையாது.
அடுத்து அடுத்து ஒவ்வொரு பேச்சாளரும் நாட்டில் யுத்தத்தால் அழிவுற்ற பிராந்தியமான வடக்குக் கிழக்கில் ஒரு
இடைக்கால நிர்வாக சபைக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு உடன்படுவதன் மூலம் "நாட்டைப் பிளவுபடுத்துவதாக"
ஐ.தே.மு வை கண்டனம் செய்தனர். அவர்கள் பொதுஜன முன்னணியின் சொந்தக் கொள்கையும் ஏறத்தாள அதுவே -வடக்குக்
கிழக்குக்கான ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு- என்பதை என்பதைக் குறிப்பிடத் தவறிவிட்டார்கள்.
சொற்பொழிவுகள் அனைத்தும், ஐ.தே.மு நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றது, விடுதலைப்
புலிகளின் "சட்டவிரோத" முகாம்கள் மற்றும் ஆயுதக் கப்பல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்
தவறுவதன் மூலம் பாதுகாப்பைக் கீழக்கின்றது மற்றும் வெளிநாட்டாருக்கும் "வெள்ளையருக்கும்" நாட்டை விற்கின்றது
என்ற பொருளில் மையப்படுத்தப்பட்டிருந்தன. எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி குமாரதுங்கவுக்கு
ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அவரது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய நேரம்
வந்துவிட்டது எனப் பிரகடனம் செய்தார்.
அரை மணித்தியாலமாக உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரச்சார
செயலாளர் விமல் வீரவன்ச, பாசிச வசை மாரி பொழிந்தார். மக்கள்வாதம், மற்றும் சோசலிச சொல் வார்ப்புகள்
மூலம் கூட சிங்களத் தீவிரவாதத்தோடு இணைந்து கொண்டுள்ள ஜே.வி.பி, சீரழிந்துகொண்டிருக்கும் இரண்டு பிரதான முதலாளித்துவக்
கட்சிகளில் இருந்து அதிகளவு ஆதாயமடைந்துள்ளது. ஜே.வி.பி உத்தியோகபூர்வமாக பொதுஜன முன்னணியின் பகுதியாக
இல்லாத அதேவேளை, உத்தியோகபூர்வமான கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக குமாரதுங்கவுடனும் ஸ்ரீ.ல.சு.க வுடனும்
-நெடுங்காலமாக வெற்றி கிட்டாமல்- நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளது.
அருவருத்தக் குரலில் பேசிய வீரவன்ச, விக்கிரமசிங்க மற்றும் "அவரது நம்பிக்கைத்
துரோக அரசாங்கத்தை" விரட்டவும் மற்றும் உயிர் தியாகம் செய்தேனும் நாட்டை "சரியான பாதைக்குத்"
திருப்பவும் ஸ்ரீ.ல.சு.க வுடன் ஒரு கூட்டணியை அமைக்க சபதம் செய்தார். அவர், "விடுதலைப் புலிகளோடு
மறைந்திருந்து செயற்படும்" "மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளுக்கு" நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும், "எமது
பொருளாதாரத்தின் பிரதான மையங்களை" நாடுகடந்த கூட்டு நிறுவனங்களுக்கு விற்றுத்தள்ளுவதாகவும் விக்கிரமசிங்கவை
கண்டனம் செய்தார்.
ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பிரதான அனுசரனையாளர்களில் ஒன்றான வாஷிங்டனை
அவமதிப்பதை கவனமாகத் தவிர்த்துக்கொண்ட வீரவன்ச, அமெரிக்காவுக்கோ அல்லது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான்
மீதான அதன் நவீன காலனித்துவ ஆக்கிரமிப்புத் தொடர்பாகவோ எந்தவொரு நேரடிக் குறிப்பையும் வெளியிடவில்லை.
உண்மையில், விடுதலைப் புலிகளுடன் மறைந்திருந்து செயற்படுவதற்கு அப்பால், அமெரிக்கா விடுதலைப் புலிகள்
பேச்சுவார்த்தைகளில் இறங்கவும் அதன் தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிடவும் செய்துள்ளது. தனியார்மயப்படுத்தல்
பற்றிக் குறிப்பிடும்போது அரசாங்க சொத்து மற்றும் நிறுவனங்களை விற்றுத் தள்ளுவதில் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின்
பாத்திரம் பற்றி வீரவன்ச எதையும் குறிப்பிடவில்லை. அதிகாரத்தின் சாத்தியத்தியப்பாடுகளை உணர்ந்த ஜே.வி.பி,
தனது ஆற்றல்மிக்க பங்காளர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளுக்கு தனது செய்தியை கவனமாக அனுப்புகின்றது.
ஸ்ரீ.ல.சு.க வின் ஒரு பகுதியினர் கட்சியின் சோர்ந்துபோன நற்பேறுகளுக்கு முண்டு
கொடுப்பதன் பேரில் ஜே.வி.பி யுடன் ஒரு கூட்டணிக்காக பரிந்துரைக்கின்றனர். எவ்வாறெனினும், 1980 களில் ஜே.வி.பி
யின் கொலைகார நடவடிக்கைகளை நினைவூட்டும் ஏனையவர்கள், இத்தகைய ஒரு ஸ்திரமற்ற அமைப்புடனான
எந்தவொரு அரசியல் கூட்டணி பற்றியும் விழிப்புடன் உள்ளனர். ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணிக்கு பிரதான தடையாக
விளங்குவது குமாரதுங்கவால் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு உட்பட விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு சலுகையும்
வழங்கப்படுவதை ஜே.வி.பி எதிர்ப்பதேயாகும்.
எல்லாப் பேச்சாளர்களிலும், முன்னால் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஐ.தே.மு.
அரசாங்கம் பற்றி மிக அடக்கமான விமர்சனங்களை முன்வைத்தார். எந்தவொரு எதிர்கால பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும்
விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கலுக்கு செல்வதற்காக உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் அனைத்துலக மூலதனத்தினதும்
இதே போன்ற அழுத்தத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதில் மிகவும் விழிப்புடன் இருந்த அவர், சமாதானப் பேச்சுவார்த்தைகளில்
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாத்திரங்களைப் பாராட்டியதோடு அரசாங்கத்தின் மூலோபாயத்துக்கு எதிராக
மட்டுப்படுத்தப்பட்ட தந்திரோபாய எதிர்ப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினார். ஜே.வி.பி. உடனான எந்தவொரு
கூட்டணியையும் எதிர்க்கும் ஸ்ரீ.ல.சு.க. பிரிவுகளில் கதிர்காமரும் சேர்ந்துகொள்ளவுள்ளார்.
நம்பமுடியாத அரசியல் விசுவாசம்
கூட்டம் "நீலக்" கடலாகவும் மற்றும் சுலோகங்கள் ஐ.தே.மு. அரசாங்கத்தை வெளியேற்ற
குமாரதுங்கவை தூண்டுவதாகவும் இருந்த போதிலும் தோற்றம் ஏமாற்றத்தைத் தந்தது. அரசியல் விசுவாசிகள் ஒரு நிலையற்ற
நிலையில் இருந்துகொண்டுள்ளனர். இருந்து கொண்டுள்ள விவகாரங்களுக்கு நேர்மையான பதிலீடு அற்ற நிலைமை தொடர்பான
கோபம் மற்றும் சீற்றமும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டுள்ளது. சமூகமளித்திருந்தவர்களில் பெரும்பான்மையானர், தமது
பிரதான எதிர்பார்ப்புகளை கணக்கில் எடுக்காத சொற்பொழிவுகளில் குறைந்த அக்கறையே செலுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்வத்துடன் நகர மண்டபத்தை அடைந்த அதேவேளை, பல பேர் உடனடியாக நெறிபிறழ்ந்து தங்களுக்குள் உரையாடினர்
அல்லது சாதாரணமாக வெளியேறினார்கள்.
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பரந்தளவில் அரசியல் கருத்துக்களைக்
கொண்டிருந்த பலருடன் உரையாடினார்கள். பெரும்பாலான ஸ்ரீ.ல.சு.க. ஆதரவாளர்கள் முன்னாள் பொதுஜன முன்னணி
அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி மெளனத்தை வெளிப்படுத்தினர். பலர் ஐ.தே.மு மற்றும் பொதுஜன முன்னணிக்கிடையில்
உண்மையில் வேறுபாடுகள் கிடையாது எனவும் எல்லாக் கட்சிகளும் ஒவ்வொன்றும் மோசமானவை எனவும் பிரகடனப்படுத்தினர்.
ஏனையவர்கள் தமது எதிர்பார்ப்புகளுக்காக இதுவரையும் அதிகாரத்தில் இல்லாத ஜே.வி.பி யில் நம்பிக்கை வைத்தனர்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான லேக் ஹவுஸ் வெளியீட்டகத்தின் போக்குவரத்து
தொழிலாளி ஒருவர் தெளிவுபடுத்தியதாவது: "இந்தத் தாக்குதல்களை எம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. விசேடமாக
ராக்கட் வேகத்தில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் தற்போதைய வேலை நிலைமைகள். குறைந்த பட்சம்
5,000 ரூபா சம்பள அதிகரிப்பின்றி ஒரு சாதாரண தொழிலாளியால் வாழ முடியாது. நான் எங்களது பிரச்சினைகளுக்கு
ஒரு பதிலீட்டைத் தேடுவதற்காக இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுகிறேன். ஆனால் இங்கு யாரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்
இல்லை. அதனால்தான் நான் இந்தக் கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன்."
வட மத்திய மாகாணத்தில் இருந்து வருகைதந்திருந்த ஒரு விவசாயிகள் குழுவினர், உர
மானிய இழப்பு பற்றியும் மற்றும் தமது உற்பத்திகளுக்கு நிலையான விலையின்மை எவ்வாறு தமது வருமானத்தை விழுங்கியது
என்பதையும் விளக்கினர். "நாம் கடந்தத் தேர்தலில் ஐ.தே.மு. வுக்கு வாக்களித்தோம். ஏனெனில் எங்களுக்கு ஒரு
மாற்றம் தேவை. இப்பொழுது இரண்டு வருடங்கள் ஆகியும் எந்தவொரு அபிவிருத்தியும் காணப்படவில்லை. உண்மையில்
நாம் இந்த அரசாங்கத்திடம் சமாதானத்தை எதிர்பார்த்தோம். ஆனால் யுத்த நிறுத்தத்தின் பின்னர் நாம் இரண்டு
அரசாங்கங்களின் கீழ் -கொழும்பு மற்றும் விடுதலைப் புலிகள்- வாழத் தள்ளப்பட்டுள்ளோம். இப்பொழுது நாங்கள்
இருவருக்கும் வரி கட்டவேண்டியுள்ளது. நாங்கள் அரசாங்கத்துக்கு எமது எதிர்ப்பைக் காட்டுவதற்காகவே இந்தக் கூட்டத்தில்
பங்குபற்றுகின்றோம்."
ஒரு மூத்த தபால் தொழிலாளி ஜே.வி.பி.க்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். அது
ஸ்ரீ.ல.சு.க. வை தொழிலாளர்களுக்குச் சார்பான கொள்கையை நடமுறைப்படுத்த தள்ளும் என அவர் நம்பிக்கை
கொண்டுள்ளார். "எம்மால் இந்த அரசாங்கத்தை வெளியேற்றி பொதுஜன முன்னணி-ஜே.வி.பி அரசாங்கமொன்றை
நிறுவ முடியுமானால், இந்த வாழ்க்கைச் செலவை குறைப்பதோடு தனியார்மயத்துக்கு எதிராக அரசாங்க ஸ்தாபனங்களை
பாதுகாக்க முடியும் என நான் நினைக்கின்றேன். கடைசி முறை நான் ஜே.வி.பி.க்கு வாக்களித்தேன். பொதுஜன முன்னணி
மற்றும் ஜே.வி.பி. ஆகியவற்றுக்கிடையிலான கூட்டணியை விரும்புகிறேன். அவ்வாறான ஒரு அரசாங்கத்தில் ஜே.வி.பி.
மக்கள் சார்பாக பொதுஜன முன்னணியை கட்டுப்படுத்தும்," என்றார்.
கொழும்புக்கு வடக்கே உள்ள நீர்கொழும்பைச் சேர்ந்த இரண்டு ஈயத் தொழிலாளர்கள்
விளக்கியதாவது: "இந்த நாட்களில் எங்களுக்கு போதிய வேலை இல்லை. ஏனெனில், மக்களிடம் குழாய் புதைப்பதற்கும்
குழாய் கிணறுகளுக்கும் செலவு செய்ய பணம் கிடையாது. கடந்த அரசாங்கத்தின் கீழ் எங்களுக்கு போதியளவு வேலை
இருந்தது. நான் நினைக்கிறேன் மீண்டும் பொதுஜன முன்னணி ஆட்சிக்கு வந்தால் எமக்கு நல்லதாக அமையும். ஆகவேதான்
நாம் இங்கு வந்தோம்."
கொழும்பு தெற்கில் உள்ள மொரட்டுவவில் வசிக்கும் ஒரு இளைஞர் தான் ஒரு இளைஞர்
குழுவோடு வந்ததாக குறிப்பிட்டார். "நாங்கள் ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்கள் அல்ல. எங்கள் குழுவில் சில
உறுப்பினர்கள் கடந்த தேர்தலில் தற்போதைய ஐ.தே.மு. அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தார்கள். எங்களது
குழுவில் பெரும்பான்மையானவர்கள் தொழில் செய்கின்ற போதிலும் எமது தொழில் நிலையானதல்ல," என அவர் குறிப்பிட்டார்.
தமது குழு கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஏனெனில், அது விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு
சலுகையையும் ஒரு காட்டிக் கொடுப்பாக கருதுவதாலாகும் எனவும் அவர் விளக்கினார்.
"ஐ.தே.மு. நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்ததால்
நாம் அதற்கு வாக்களித்தோம். முன்னால் பொதுஜன முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இந்தளவு சலுகைகளை
வழங்கவில்லை," என அவர் குறிப்பிட்டார். "இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்ததன் இரண்டாவது காரணம் வாழ்க்கைச்
செலவாகும். எங்களுக்கு நிலையான தொழில் இல்லாததால் வாழ்க்கை செலவைத் தாங்க முடியாது. உங்களுக்கு ஒரு
நிரந்தரத் தொழில் இருந்தாலும் கூட இந்த வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது. இந்த விடயங்களில் பொதுஜன
முன்னணி மாற்றங்களை ஏற்படுத்தும் என நாம் நினைக்கின்றோம்," என அவர் தெரிவித்தார்.
தீவின் பிற்படுத்தப்பட்ட தென்கிழக்குப் பகுதியில் உள்ள மொனராகலையில் இருந்து வந்த
ஒரு பெண் குறிப்பிட்டதாவது: "ஐ.தே.மு. அரசாங்கம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ததாக சொல்கின்றது.
ஆனால் நாம் அதை நம்பவில்லை. ஏனெனில் எங்களது எல்லா வருமானமும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாங்கள் விவசாயக்
குடும்பங்களை பிரதிந்தித்துவம் செய்கின்றோம். அதிகளவிலான உரம், மருந்து மற்றும் ட்றெக்டர் செலவுகளின் காரணமாக
எம்மால் எமது வயல்களில் பயிரிட முடியாதுள்ளது. ஒப்பீட்டளவில் ஐ.தே.மு. வை விட பொதுஜன முன்னணி சிறந்தது.
காரணம் பொதுஜன முன்னணி காலத்தில் எங்களுக்கு உர மானியம் கிடைத்தது. எமது பிரதேசத்தில் உள்ள கருத்தானது
பொதுஜன முன்னணிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் ஒரு கூட்டணியை அமைக்க முடியுமானால் அது எமக்கு சிறந்ததாக
அமையும் என்பதாகும்."
ஸ்ரீ.ல.சு.க. இளைஞர் அமைப்பின் தலைவர் விளக்கியதாவது: நாங்கள் பரம்பரை
பரம்பரையாக ஸ்ரீ.ல.சு.க. வில் இருக்கிறோம். எனது பாட்டனாரும் ஒரு முன்னணி ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர். நாங்கள்
பொதுஜன முன்னணி-ஜே.வி.பி. கூட்டணியை விரும்பவில்லை. நான் நினைக்கிறேன் இந்த பெரும் கூட்டம் ஜே.வி.பி.யின்
ஆதரவின்றி ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றது. அடுத்து கருத்தானது ஜே.வி.பி. கூட்டணியில்
ஆதிக்கம் செலுத்தும். நாம் அவர்களின் செல்வாக்கின் கீழ் வேலைசெய்ய வேண்டியதில்லை.."
இறுதி உரையை குமாரதுங்க ஆற்றுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள்
கூட்டம் சுருங்கிப்போயிருந்ததோடு ஏற்கனவே வெளியாகியிருந்தவை பற்றி பார்வையாளர்கள் ஆர்வமிழந்து போயிருந்தனர்.
ஆகவே, "தவிர்க்க முடியாத காரணத்தால்" ஜனாதிபதியால் வரமுடியாது என தலைவர் அறிவித்தார். அடுத்த நாள்,
"பாதுகாப்பு விடயங்கள்" தொடர்பாக ஊடகங்களில் ஊகங்கள் காணப்பட்டன. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது
போல் கூட்டமானது ஒரு அரசியல் தளமாக இருக்கவில்லை என குமாரதுங்கவின் ஆலோசகர்கள் தீர்மானித்திருக்கலாம்
என்ற சிறிய சந்தேகம் உள்ளது.
அதற்குப் பதிலாக, தலைவர் அவரது பேச்சை வாசித்தார். ஐ.தே.மு. வின் நடவடிக்கைகளின்
பெறுபேறாக நாடு முகம்கொடுத்திருக்கும் "கடுமையான ஆபத்து" பற்றி எச்சரிக்கை செய்த அவர், "மக்களின்
நம்பிக்கையை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன்," எனப் பிரகடனம் செய்தார். பின்னர் அவர் வாக்குறுதிகளின்
பட்டியலொன்றை முன்வைத்தார்: இராணுவத்துக்கும் பொதுத் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு, 50,000 வேலையற்ற
பட்டதாரிகளுக்கு தொழில் மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு சலுகைகள். பார்வையாளர்கள்
நகராமல் இருந்தனர். மிகப் பெரும்பாலானவர்கள் இத்தகைய வாக்குறுதிகளை ஏற்கனவே கேட்டிருந்ததோடு, பொதுஜன
முன்னணி ஆட்சியில் இருக்கும் போது அவை நிறைவேற்றப்படாததையும் கண்டனர்.
Top of page
|