World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Brandenburg intelligence service slanders the WSWS: What really took place in Frankfurt-Oder?

பிரான்டன்பேர்க் உளவுத்துறையினர் உலக சோசலிச வலைத் தளத்தின் மீது அவதூறு கூறுகின்றார்கள்: பிராங்பேர்ட்-ஓடர் இல் உண்மையில் நிகழ்ந்தது என்ன?
By Ulrich Rippert
1 November 2003

Back to screen version

6 வாரங்களுக்கு முன்னர், பிராங்பேர்ட்-ஓடர் நகரத்தில் உள்ள குடிவரவு காரியாலயத்தின் மீது நடந்த ஒரு தாக்ககுதலை பயன்படுத்தி உலக சோசலிச வலைத் தளம் வன்முறையை தூண்டுவதாகவும் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் வன்முறைமிக்க ''இடது தீவிரவாத அமைப்புகளின்'' ஒரு பிரிவு என குறிப்பிட்டது. அத்தாக்குதலின் பின்னர், அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக குறைந்தளவு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16ம் திகதி அதிகாலை, பிராங்பேர்ட்-ஓடர் நகரத்தில் உள்ள குடிவரவு காரியாலயத்தின் யன்னல்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்ததுடன், அறையினுள் துர்நாற்றும் வீசும் பொருளை வீசியதுடன், அவ்வறையின் பூட்டுக்கள் மீது பசை போன்ற பதார்த்தத்தை ஊற்றியதுடன், சுவர்கள் மீது வார்த்தைகளை எழுதிவிட்டு சென்றனர். இதை செய்த இனந்தெரியாத நபர்கள், அகதிகள் தொடர்பான ஜேர்மன் அரசாங்கத்தின் கொள்கைகளை கண்டித்து உலக சோசலிச வலைத் தளத்தால் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றை அவ்விடத்தில் விட்டுச்சென்றிருந்ததாக கூறப்பட்டது.

அதன் பின்னர், பிரான்டன்பேர்க் மாநில உளவுத்துறையின் வலைத் தளத்தில், அத்தாக்குதலின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட பெப்ரவரி 2001 இல் உலக சோசலிச வலைத் தளத்தால் வெளியிடப்பட்ட கட்டுரையானது அத்தாக்குதலுக்கு ''இடது தீவிரவாத பின்னணி'' இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதேபோன்ற கட்டுரைகளை போல் இக்கட்டுரையும் வன்முறை தோன்றுவதற்கும் பரவுவதற்கும் காரணமாக இருப்பதாக உளவுத்துறை குறிப்பிட்டது. அதன் அறிக்கை ''இப்படியான வார்த்தைகளால் வன்முறைக்கு பாதை அமைக்கப்படுகின்றது'' என்று குறிப்படுவதுடன் முடிவடைகின்றது.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு இந்த மதிப்பிக்கச்செய்யும் அவதூற்றை ஏற்கனவே உறுதியுடன் நிராகரித்திருந்தது. (பார்க்க: பிராண்டன்பர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது)

அன்றிலிருந்து, பொலிசாராலும், அரச வழக்குத்தொடுனராலும் நடாத்தப்படும் விசாராணைகள் குறிப்பிடத்தக்களவு மிகவும் மெதுவாக நடைபெறுவது தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாாரித்தபோது அரச வழக்குத்தொடுனரான Ulrich Scherding விடுமுறையில் சென்றுள்ளதால் விசாரணைகள் இன்னமும் பொலிசாரின் கைகளிலேயே உள்ளதாக பிராங்பேர்ட்- ஓடர் அரச வழக்குத்தொடுனர் காரியாலயம் தெரிவித்தது. ஆனால், பொலிஸ் காரியாலயத்தின் செய்தித்துறை பொறுப்பதிகாரியான Peter Salender ''விசாரணைகளுக்கும் மற்றும் அதுதொடர்பான தகவல்களை வழங்குவதும் அரச வழக்குத்தொடுனரின் பொறுப்பு'' எனக்குறிப்பிட்டார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு பலதடவை எழுத்துமூல கேள்விகளை முன்வைத்தபோது, பிராங்பேர்ட்- ஓடர் பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு ஒரு கூட்டத்திற்கு வருமாறு எமது ஆசிரியர் குழுவின் அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எவ்வாறிருந்தபோதும், அங்கு மிகக்குறைந்த தகவல்களே கிடைத்தது.

பின்வரும் கேள்விகள் உலக சோசலிச வலைத் தளத்தால் முன்வைக்கப்பட்டது:

''யாரால், எத்தனை மணிக்கு அத்தாக்குதல் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது? அக்குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்தலத்தில் எந்த பொலிஸ் நிலையத்தால் ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது?

அயலில் உள்ளவர்கள் அல்லது வழிப்போக்கர்கள் யாராவது என்ன நடந்தது என்பதற்கு சாட்சியமாக உள்ளார்களா? ''விசாரணைக் காரணங்களுக்காக'' இக்கேள்விகள் தொடர்பாக எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது முக்கிய கேள்விகள்: இன்றுவரை இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எவ்விதமான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது?. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இத்தாக்குதலில் பங்குபற்றியிருந்தார்களா? ஏதாவது சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் நடைபெறுகின்றதா? அவ்வாறான சந்தேகநபர்கள் மீது அல்லது வேறு நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா? இவற்றிற்கும் பதில் ஏதும் வழங்கப்படவில்லை.

மூன்றாவது கேள்வித்தொடர்கள்: யாரால் உலக சோசலிச வலைத் தள கட்டுரை கண்டு எடுக்கப்பட்டுது? சரியாக எப்போது, எங்கு இக்கட்டுரை கண்டெடுக்கப்பட்டது? அக்கட்டுரையில் கைவிரல் அடையாளங்கள் பரிசோதிக்கப்பட்டதா அல்லது சாட்சியங்களுக்காக அச்சடிக்கப்பட்டவிதம் பரிசோதிக்கப்பட்டதா? அப்பிரசுரத்தில் வேறு ஏதாவது கையால் எழுதப்பட்டிருந்ததா அல்லது வேறு ஏதாவது அடையாளப்படுத்தும் குறியீடுகள் காணப்பட்டதா? இவற்றிற்கும் பதில் ஏதும் வழங்கப்படாததுடன், சகலவிதமான விசாரணை மற்றும் தொழில்நுட்பங்கள் பிரயோகிப்பட்டு ஒரு தரமான விசாரணை நடாத்தப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டது.

பொலிஸ் பேச்சாளரான Peter Salender ''இக்கட்டுரையின் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக எவ்விதமான ஐயுறவும் இல்லை என வலியுறுத்தினார். அவர் மேலும், ''இத்தாக்குதலின் அரசியல் நோக்கம் என்னவென்பதை தெளிவுபடுத்தவே இனந்தெரியாதோர் இப்பிரசுரத்தை அங்கு விட்டுச் சென்றதாக'' குறிப்பிட்டார். அவரது கூற்றை நியாயப்படுத்தும்படியும் மற்றும் எங்கு மற்றும் யாரால் அது கண்டெடுக்கப்பட்டது என்பதையும் நாம் கேட்டபோது, அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை.

அயலவர்கள் விசாரிக்கப்படவில்லை

உலக சோசலிச வலைத் தளத்தால் பிராங்கபேர்ட்-ஓடர் பகுதியில் நடாத்தப்பட்ட விசாரணையானது உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பான விபரமான படத்தை வழங்குகின்றது. அத்துடன், அதிகாரிகள் என்ன நடந்தது என்பதை விசாரிப்பதில் குறைந்தளவு அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதை எமது விசாரணை உறுதிப்படுத்தியது.

பிராங்கபேர்ட்-ஓடர் போலந்து ஜேர்மனி எல்லைப்பகுதியிலும், பேர்லினின் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. 70,000 மக்களை கொண்ட இப்பகுதியின் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. முன்னாள் தொழிற்துறைநகரத்தின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் அரசியல், சமூக பதட்டங்களை காணக்கூடியதாக உள்ளது. அங்குள்ள தொழில்புரியக்கூடிய வயதுடையவர்கள் ஜேர்மனியின் ஏனைய பகுதியை நோக்கி சென்றுவிட்டார்கள். வேலையின்மை படிப்படியாக அதிகரித்துவருகின்றது. 2001 இன் இறுதியில் உத்தியோகபூர்வமான வேலையின்மை 18.1% ஆக இருந்தது. இவ்வருட ஆரம்பத்தில் இது 22% ஆக அதிகரித்துள்ளது.

அரசியல்ரீதியாக இந்த நகரமானது சமூக ஜனநாயக கட்சியால் (SPD -Social Democratic Party ஆளுமை செலுத்தப்பட்டுவந்தது. 4 வருடங்களுக்கு முன் நடைபெற்ற மாநில தேர்தலில் 65% வாக்காளர்கள் சமூக ஜனநாயக கட்சிக்கு அல்லது ஜனநாயக சோசலிச கட்சிக்கு (PDS-Party of Democratic Socialism) வாக்களித்தனர். பழைமைவாத எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU -Christian Democratic Union) 25.3% வாக்குகளை பெற்றது. 2 வலதுசாரி கட்சிகளான ஜேர்மன் மக்கள் யூனியனும் (DVU-German Peoples Union) ஜேர்மன் தேசிய கட்சியும் ( NPD- German National Party) 5% வாக்குகளை பெற்றன.

அதிலிருந்து, ஆளும் சமூக ஜனநாயக கட்சியின் கொள்கைகளுக்கு பாரிய எதிர்ப்பு அதிகரித்து வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர்26) நடந்த உள்ளூர் ஆட்சிசபை தேர்தல்களில் பிராங்கபேர்ட்-ஓடர் பகுதியில் சமூக ஜனநாயக கட்சி 15% வாக்குகளையே பெற்றது. வாக்காளர்களின் தொகை 74.% இலிருந்து 38.3% ஆக வீழ்ச்சியடைந்தது. இது சமூக ஜனநாயக கட்சி 1998 இல் பெற்ற 39,000 இலிருந்து 9,000 ஆக குறைந்தது. ஜனநாயக சோசலிச கட்சியின் வாக்குகள் விகிதாசார ரீதியில் பார்க்கையில் 5% அதிகரித்தபோதிலும், உண்மையான வாக்குகளின் அடிப்படையில் 16,000 வாக்குகள் குறைவாகப்பெற்றது.

செப்டம்பர் 16ம் திகதி அதிகாலை தாக்கப்பட்ட குடிவரவு காரியாலயம் நகரின் மிகவும் அமைதியான பகுதியில் அமைந்துள்ளது. குடியிருப்பு கட்டிடங்கள் ஒரு சில அடிகள் தூரத்தில் அமைந்துள்ளன. குடிவரவு காரியாலயத்தின் 12 யன்னல் கண்ணாடிகள் தாக்கப்பட்ட சத்தத்தினால் அண்மையில் உள்ள பல குடியிருப்பாளர்கள் அச்சமடைந்தனர்.

குடிவரவு காரியாலயத்தை நன்கு பார்க்க கூடிய குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ள Bischoff வீதியில் வசிக்கும் வயதான ஒருவர், உலக சோசலிச வலைத் தளத்திற்கு தாக்குதல் தொடர்பாக தெரிவிக்கையில் ''தாக்குதல் நடந்த நேரத்தில் தாம் விழிப்பாக இருந்ததாகவும், அதிகாலை 3.30 அளவில் கண்ணாடிகள் உடையும் பலத்த சத்தத்தை கேட்டதா தெரிவித்தனர். தன்னால் ஒருவரையும் அடையாளம் காட்டமுடியாது போனது எனவும், ஆனால் வீதியில் ஓடிய பலரின் -ஆகக்குறைந்தது இரண்டுபேரின்- சத்தத்தை கேட்டதாக தெரிவித்தார். இன்னொரு அயலவர் பொலிசிற்கு தகவல் கொடுத்து, ஒரு சில நிமிடங்களில் அவர்கள் வந்தனர்.

குடிவரவு காரியாலயம் தாக்கப்பட்ட சூழ்நிலையை பற்றி தெளிவுபடுத்துவதற்கு பொலிசாரோ அல்லது அரசியல் அதிகாரிகளோ உண்மையில் அக்கறை கொண்டிருந்ததாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார். உள்ளூர் பத்திரிகைகளிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் இது தொடர்பான ஆரம்ப செய்திகளுக்கு பின்னர் எவ்வித செய்தியையும் காணமுடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். அன்றிரவு நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தன்னிடமும் விசாரணை நடாத்தவில்லை என கூறினார்.

இதே போன்ற கருத்தை இன்னுமொரு பெண் குடியிருப்பாளரும் தெரிவித்தார். அவரிடம் சில தகவல்கள் இருந்தபோதிலும், பொலிசாராலோ அல்லது வேறு விசாரணை அதிகாரிகளாலோ தான் விசாரிக்கப்படவில்லை என அவர் கூறினார். 16ம் திகதி அதிகாலை யன்னல்கள் உடையும் சத்தத்தால் கண்விழித்த தான், சில நிமிடங்களில் பொலிஸ் வாகனம் ஒன்று வந்ததை தனது மொட்டைமாடியில் இருந்து அவதானித்தாக அவர் குறிப்பிட்டார். என்ன நடந்தது என்பது பற்றி பொலிஸார் அக்கறையீனமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரே தாக்குதல் நிகழ்ந்திருந்தபோதிலும், பொலிசார் ஐயுறவுள்ளவர்களை தேடாதது குறித்து தான் ஆச்சரியம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கட்டிடத்தை சுற்றிவந்து பார்ப்பதற்கு பதிலாக, வாகனத்தில் வந்த பொலிசார் தமது தலைமையகத்திற்கு ''எல்லோரும் கேட்க கூடியளவு உரத்த குரலில்'' தமது வானொலி மூலம் தகவல் கொடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அவ்வானொலி செய்தியில் 12 யன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகவும், மற்றும் ''ஜேர்மனி மீண்டும் நாடுகடத்த ஆரம்பித்துவிட்டது. இதை எதிர்ப்பது அவசியமும் சாத்தியமானதும்'' என்ற வசனங்கள் கட்டிட சுவரில் மையினால் எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடப்பட்டது. மேலும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கும்வகையிலான 3பக்க பிரதி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்தது. சிறிது நேரத்தில் அப்பகுதியை இதுவரை தடைசெய்திருந்த பொலிஸ் வாகனத்தை அங்கு வந்து இன்னொரு வாகனம் பிரதியீடு செய்தது.

தனது பெயரை குறிப்பிட விரும்பாத அக்குடியிருப்பாளர், பொலிஸார் தமது தலைமையகத்துடன் தொடர்புகொள்ளும் நேரத்தில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100-150 மீட்டர் தூரத்தில் உள்ள பாடசாலை வாயிலில் ஒரு நபர் நின்றுகொண்டிருந்தை கண்டதாக தெரிவித்தார். அவர் என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொண்டிருந்தது போலிருந்தது. மெல்லிய நிறமுடைய நீள்கால்சட்டை அணிந்திருந்த அந்நபர் கைகளில் ஒரு பை வைத்திருந்ததாக அக்குடியிருப்பாளர் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு ''மெல்லிய நிறமுடைய நீள்கால்சட்டை'' அணிந்திருந்த இன்னொரு நபர் வந்ததாகவும், ஆனால் பொலிசார் அவரின் அடையாளம் தொடர்பாகவோ அல்லது விசாரிக்கவோ அக்கறைகாட்டவில்லை எனவும், அதிகாலை நேரம் அப்பிரதேசம் பொலிசாரால் தடைசெய்யப்பட்டிருந்தபோதிலும் அவ்விடத்திற்கு வந்தவரிடம் விசாரிப்பது முக்கியம் அல்லது அவர் ஏதாவது அவதானித்தாரா என்பது தொடர்பகவும் பொலிசார் விசாரிக்காதது பற்றி தான் மிகவும் ஆச்சரியப்பட்டதாக அக்குடியிருப்பாளர் தெரிவித்தார்.

இன்னொரு வழமைக்குமாறான சம்பவம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். தான் அக்கட்டிடத்தில் 5 வருடங்களாக வசிப்பதாகவும், இக்காலகட்டத்தில் குடிவரவு காரியாலயத்தில் 3 அல்லது 4 தடவை எச்சரிக்கை மணி ஒலித்தது எனவும், ஒவ்வொரு தடவையும் அது தவறுதலாக நிகழ்ந்தது என தான் அறிந்ததாக குறிப்பிட்டார். ஆனால், இச்சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று எச்சரிக்கை மணி இயங்காது இருந்தது. இது ஒரு வித்தியாசமானதாக தெரியவில்லையா? நீங்கள் என்னிடம் கேட்டால், ஏதோ காரணத்திற்காக எச்சரிக்கை மணி நிறுத்தப்பட்டிருந்தது என்றே கூறுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

குடிவரவு காரியாலயத்தின் தலைமையகத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்

குடிவரவு காரியாலயம் அமைந்திருந்த கட்டிடம் முன்னாள் கிழக்கு ஜேர்மனிக்குரிய வழமையான காங்கிரீட் கட்டிடமாகும். குடிவரவு காரியாலயம் முதலாவது மாடியில் அமைந்துள்ளது. அக்கட்டிடத்திற்கு காவலாளர் இல்லை என குடிவரவு காரியாலயத்தின் தலைவரான திரு.Terlach உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். நகர பாதுகாப்பு பிரிவானால் அக்கட்டிடம் வழமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும், பொலிசாரின் வழமையான கண்காணிப்பு பகுதியாகும் என தெரிவித்தார். இக்கட்டிடம் பொலிஸ் ரோந்தின் போது எத்தனை தடவை கண்காணிக்ப்படுகின்றது என்பது கூற இயலாது என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

தான் நகரத்திற்கு வெளியில் வசிப்பதாகவும் 4.30 மணியளவில் தனக்கு அத்தாக்குதல் தொடர்பாக அறிவிக்கப்பட்டதாக திரு.Terlach தெரிவித்தார். தாக்குதல் நடந்த கட்டித்திற்கு தான் வரும்போது அக்கட்டிடம் சுற்றிதடைசெய்யப்பட்டிருந்தது என கூறினார். தான் வரும்வரை காத்திருந்ததால் பொலிசார் கட்டிடத்தின் கதவுகளை உடைக்கவில்லை. எவ்வாறிருந்தபோதிலும், இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏனெனில் கதவு பூட்டுகளுக்கு பசை ஊற்றப்பட்டிருந்ததால், அவசரகால பூட்டு திறக்கும் சேவையினர் அழைக்கப்பட்டே திறக்கமுடியும். கட்டிடத்தின் அறைகளுக்கு எவரும் சென்றிருக்க முடியாது. கோப்புகளுக்கும் கணனிகளுக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாததுடன், எதுவும் அகற்றப்படவுமில்லை. எனினும், யன்னல்கள் ஊடாக வீசப்பட்ட துர்நாற்றமிக்க திராவகம் பல அறைகளின் தரைவிரிப்புகளில் பரவியிருந்தது.

இத்தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, அங்கு விடப்பட்டிருந்த பிரசுரம் தொடர்பாக தனக்கும் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். குடிவரவு காரியாலய பொறுப்பாளர் என்ற வகையில் அந்நகரத்தின் குடிவரவு கொள்கைகளுக்கு அவரும் கூட்டுப்பொறுப்பு உள்ள போதிலும் அவர் அப்பிரசுரத்தை காணவில்லை. பின்னர் அப்பிரசுரம் ஒரு பொதுவான, பழைய பிரசுரம் என தான் அறிந்ததாக குறிப்பிட்டார். அப்பிரசுரம் குறிப்பாக அவரது காரியாலயத்திற்கு மட்டும் எதிரானது அல்ல எனவும், தாக்குதல் நடாத்தப்பட்டவர்களால் அது எழுதப்படவில்லை. வழக்குவிசாரணை தொடர்பாக மேலதிக விபரங்கள் தனக்கு தெரியாது எனவும் அவர் கூறினார்.

புதிய கேள்விகள்

தாக்குதலின் 6 வாரங்களுக்கு பின்னர், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிகமான பதிலளிக்கப்படாத கேள்விகள் எழுந்துள்ளன. பொலிஸ் ஏன் மிகவும் மெதுவாகவும், அக்கறையற்றும் இவ்விசாரணையை நடாத்துகின்றது? சாட்சிகள் என கருதப்பட்டவர்களிடம் ஏன் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை? இவ்வழக்கின் பாதுகாப்பிற்கு உடனடியான தாக்கங்கள் இல்லதபோதிலும், ஏன் விசாரணை தொடர்பான விபரங்கள் தெரியப்படுத்தவில்லை?.

தாக்குதலின் 6 வாரங்களுக்கு பின்னர், தாக்குதல் நடாத்தப்பட்ட அடுத்தநாள் தொலைத்தொடர்பு சாதனங்களில் வெளிவந்த தகவல்களை தவிர வேறு எதையும் விசாரணை அதிகாரிகளால் வழங்க முடியவில்லை.

பொலிசாரின் மெதுவான விசாரணை, உளவுத்துறையின் உடனடியான நடவடிக்கைக்கு முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. உளவுத்துறையானது குடிவரவு காரியாலயம் மீதான தாக்குதலை ஒரு சோசலிச பிரசுரத்திற்கும் ''இடது தீவிரவாத பிரிவுகளுக்கும்'' மற்றும் வன்முறைக்கும் தொடர்புபடுத்தி காட்ட பாவிக்கின்றது. இதுவரை விசாரணை அதிகாரிகளால், இத்தாக்குதலின் சந்தேகநபர்கள் தொடர்பாகவோ அல்லது அதன் பின்னணி பற்றியோ எவ்வித தகவல்களையும் வழங்கு முடியாது அல்லது விரும்பாது உள்ளது என்பதே உண்மையாகும். உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான குற்றச்சாட்டை சுமத்தும் உளவுத்துறையின் கட்டுரை, அத்தாக்குதல் நடந்த தினமான செப்டம்பர் 16 என திகதியிடப்பட்டுள்ளது.

இத்தகவல்களின் அடித்தளத்தில், எமது ஆரம்ப கட்டுரையில் எழுப்பப்பட்ட கேள்வியான, பிராங்பேர்ட் குடிவரவு காரியாலயம் மீதான செப்டம்பர் 16 தாக்குதலில் உளவுத்துறை கையாட்கள் தொடர்புபட்டுள்ளனரா? அது ஒத்துக்கொள்வதைவிட இதுபற்றி அதிகமாக உளவுத்துறைக்கு தெரியுமா? தாக்குதல் நடந்த இடத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரையை வைத்ததில் உளவுத்துறை பங்குவகித்துள்ளதா? என்பன இன்னும் பதிலளிக்கப்படவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved