World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Air France/KLM merger heralds further rationalisations and job cuts

எயர் பிரான்ஸ் / KLM இணைப்பு மூலம் மேலும் வேலை வாய்ப்புக்கள் குறையும்

By Jean Shaoul
7 October 2003

Back to screen version

நெதர்லாந்து விமான நிறுவனமான KLM உடன் இணையப் போவதாக எயர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதுதான் முதல் தடவையாக ஒரு ஐரோப்பிய நாட்டின் விமான நிறுவனம் மற்றொரு ஐரோப்பிய நாட்டு விமான நிறுவனத்தோடு இணையும் நடவடிக்கையாகும். பொருளாதார மந்த நிலை, பொருளாதார கட்டுப்பாடுகளின் தளர்வு, குறைந்த கட்டணத்தில் ரியான் ஏர் மற்றும் இஸிலெட் (Ryanair and EasyJet) போன்ற நிறுவனங்கள் விமான சேவையில் உருவாக்கும் போட்டி மற்றும் சர்வதேச அளவில் விமான சேவைகளில் உருவாகியுள்ள நெருக்கடிகள் ஆகிய காரணங்களால் இந்த இரு நாட்டு விமான நிறுவனங்களும் இணைகின்றன.

இப்படி இரண்டு நிறுவனங்களும் இணைவதன் மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகவும் உலகிலேயே மிக அதிகமான வருவாய் வருகின்ற நிறுவனமாகவும், அமெரிக்காவின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நான்காவதாக சர்வதேச அளவில் விமானப்பயணிகளை பெருமளவில் ஏற்றிச்செல்லும் நிறுவனமாக இணைக்கப்பட்ட விமான நிறுவனம் செயல்படத் தொடங்கும். இதன் மூலம் வேலைவாய்ப்புக்கள், ஊதியங்கள் மற்றும் விமானப்பயண தொழிலில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை ஆகியவை மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படும். பெரிய நிறுவனங்கள் இணைப்பு மற்றும் பிரிட்டிஷ் ஏர்வைஸ், லுப்தான்சா மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் கடுமையான போட்டிகளின் காரணமாக இது போன்ற நெருக்கடிகள் உருவாகியுள்ளது.

பாரிசை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் கூட்டு நிறுவனமான ஏர்பிரான்ஸ்-KLM தலைமையில் புதிய கம்பெனி செயல்படும். ஏர் பிரான்சின் 54 சதவீத பங்குகள் பிரஞ்சு அரசாங்கத்திற்கு சொந்தமானது. இழப்பில் சென்றுகொண்டிருக்கும் KLM நிறுவனத்தின் 80 சதவீதமான பங்குகளை கையகப்படுத்துவதற்காக 913 மில்லியன் டொலர்களை பிரஞ்சு அரசாங்கம் கொடுக்கும். இந்தப் பேரம் உருவாகுவதற்கு முன்னர் பங்கு மார்க்கெட்டுகளில் KLM பங்குகள் விற்ற விலையை விட 40 சதவீதம் கூடுதலாக தற்போது KLM பங்குகளுக்கு விலை தரப்படுகின்றது. புதிய கம்பெனியின் KLM பங்குகள் 19 சதவீதமாக இருக்கும். குறைந்த பட்சம் அடுத்த மூன்றாண்டுகளில் புதிய நிறுவனம் ஏர்பிரான்சின் 100 சதவீதம் பங்குகளை தன்னுடைய உடைமையாக ஆக்கிக் கொள்ளும். KLM நிறுவனத்திற்கு 49 சதவீதம் பங்குகள் தான் புதிய நிறுவனத்தில் சொந்தமாகயிருக்கும்.

இந்த இணைப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பாரீசிலும், ஆம்ஸ்ரடாமிலும் உள்ள தங்களது தளங்களில் இருந்து இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக இயங்கும். அமெரிக்க போக்குவரத்து விமானத் தொழிலுடன் 1992 ம் ஆண்டு உருவான ஒப்பந்தத்தின்படி KLM நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சர்வதேச உரிமைகளை பேணிக்காப்பதற்காக இந்த தனித்தனி செயல்பாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள சர்வதேச விமானங்கள் இயங்குவதில் வழிதடங்கள் மற்றும் இறங்குகின்ற உரிமை ஆகியவை அந்தந்த சர்வதேச விமான நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளுக்கு சொந்தமானவையோ அந்தந்த நாடுகளின் பதிவு எண்கள் மற்றும் தேசிய கொடிகள் பறந்தாக வேண்டும்.

எல்லா பிரதான ஐரோப்பிய தேசிய விமான நிறுவனங்களும் இத்தகைய சர்வதேச வழித்தட மற்றும் விமானம் இறங்குவதற்கான கட்டுப்பாடுகளை சமாளிப்பதற்கு ஒற்றோடொன்று ''இணைந்து அல்லது இணையாமலும்'' செயல்படுகின்றன அல்லது உடன்பாடுகளை செய்து கொள்ளுகின்றன. இந்த மிகப்பெரிய குழுவில், தான் ஒரு அங்கமாக டச்சு ஏர்லைன் மறுபடியும் முயற்சித்துள்ளது

1989 ம் ஆண்டு அமெரிக்க நோர்த் வெஸ்ட் விமான நிறுவனத்தின் பங்குகளை KLM வாங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை KLM தொடக்கியபோதும், நெறிமுறைகள் தொடர்பான தடைக்கற்கள் சமாளிக்க முடியாதவையாக இருந்த காரணத்தினால் இப்பேச்சுவார்த்தை இடையில் கைவிடப்பட்டது. அதே போன்று ஸ்கேன்டி நேவியாவின் SAS தற்போது செயல்படாமல் கிடக்கும் சுவீஸ் ஏர் மற்றும் ஆஸ்திரேலியன் ஏர்லைன்சுகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் 1993 ம் ஆண்டு தோல்வியடைந்தன. அலிடாலியா நிறுவனத்துடன் 2000ம் ஆண்டு இணைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு 208 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்பதால் அந்த யோசனையும் கைவிடப்பட்டது. அதற்கு பின்னர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், அமெரிக்க நெறிமுறை அதிகாரிகள் அமெரிக்காவில் சில விமானம் இறங்கும் உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அந்த ஏற்பாடும் நடைபெறவில்லை.

ஏர்பிரான்ஸ் உடன் இணைவதால் KLM நிறுவனம் ஸ்கைடீம் (SkyTeam) கூட்டணியோடு சேர்ந்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்க பார்ட்டனரான கொன்டினன்டல் ஏர்லைன்ஸ் மற்றும் நார்த்வெஸ்ட் ஏன்கெனவே வர்த்தக உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதால் ஸ்கைடீம் கூட்டணியில் இணைகிறது. இப்படிப்பட்ட இணைப்புக்களால் உலக விமான சேவையில் ஸ்கை டீமின் பங்கு 12 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயருகின்றது. ஸ்டார் அலையன்சிற்கு அடுத்து இரண்டாவதாக இந்த அணி வருகின்றது. இந்த மூன்று கூட்டணிகளிலும் ஏறத்தாழ திவாலாகும் நிலையிலுள்ள கிரேக்க நாட்டின் ஒலிம்பிக் ஏர்லைன்சும், தத்தளித்துகொண்டிருக்கும் போர்த்துக்கலின் TAP ஏர்லைன்சும் சேரவில்லை.

அதே நேரத்தில் இத்தாலி அரசாங்கம் நஷ்டத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அலிடாலியா விமான நிறுவனத்தின் மிச்சமிருக்கும் 62 வீதமான பங்குகளை விற்றுவிட முடிவு செய்திருக்கின்றது. அலிடாலியா ஸ்கைடீம் கூட்டணியின் ஓர் அங்கமாகும். ஏர்பிரான்ஸ் KLM கூட்டணியுடன் விரைவில் சேர்ந்து கொண்டு வேலை வாய்ப்புக்களை பெருமளவில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் அறிவிக்க இருக்கின்றது.

இந்த முயற்சிகள் 2001 ம் ஆண்டில் இரண்டு தேசிய விமான நிறுவனங்களான பெல்ஜியத்தின் சபேனா மற்றும் சுவிஸ் ஏர் திவாலானதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏர்வைஸ் அண்மையில் சுவிட்சர்லாந்தின் விமான நிறுவனத்துடன் இணைந்து கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த பேரத்திற்கு ஐரோப்பிய பொது மார்க்கெட் கமிஷனும் அமெரிக்க விமான சேவை அதிகாரிகளும் ஒப்புதல் தரவேண்டும். அத்துடன் பிரிட்டிஷ் ஏர்வைஸ்சும், லுப்தான்சாவும் அதிருப்தியோடு இருப்பதாக தெரிகிறது. பிரிட்டிஸ் ஏர்வைஸ் KLM நிறுவனத்திடம் சில கோரிக்கைகளை வைக்க இருக்கின்றது. KLM ஆம்ஸ்டர்டாமில் தனது தரையிறங்கும் சில உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வைஸ்சின் மேலாதிக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த பேரத்தின் மூலம் அட்லாண்டிக் சமுத்திரத்திற்கு அப்பால் ஐந்து வகை விமான நிறுவன கூட்டணி உருவாகின்றது. இந்தக் கூட்டணியில் இரண்டு ஐரோப்பிய மற்றும் மூன்று அமெரிக்க நிறுவனங்கள் சேர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் இதுவரை நிலவி வந்த இரு தரப்பு உடன்படிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் போக்குவரத்துத்துறை இந்த பேரத்திற்கு ஒப்புதல் வழங்குமானால் பிரிட்டிஷ் ஏர்வைஸ், அமெரிக்கன் ஏர்லைன்சுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்கும். இந்த பேச்சுவார்த்தையானது லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் 224 விமானம் இறங்கும் உரிமங்கள் சம்மந்தப்பட்டதாகும்.

பங்குச் சந்தைகள் வேலை வாய்ப்புக்களை வெட்டித்தள்ள கோருகின்றன.

பங்குச் சந்தைகள் இத்தகைய பேரங்களை உற்சாகமாக வரவேற்கவில்லை. இரண்டு விமான நிறுவனங்களும் திட்டமிட்டுவரும் இந்தப் பேரத்தால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்களில் ஏற்படுகின்ற தாக்கம் குறித்து குறிப்பிடுவதை தவிர்த்தே வந்திருக்கின்றன. SNPL பிரஞ்சு விமானிகளது பிரதான தொழிற்சங்கமாகும். ஏர் பிரான்சில் இந்த யூனியனுக்கு அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக அதிக பங்குகள் உள்ளன. கட்டாயமாக வேலை இழப்பு எதுவும் இருக்காது என்று இத் தொழிற்சங்கம் கூறுகின்றபோதும், ஆட்குறைப்பு இந்த தொழிற்சங்க ஒப்புதலோடுதான் நடைபெறவேண்டும். KLM நிறுவனம் தனது 30,000 ஊழியர்களில் 4500 பேரை பணியிலிருந்து நீக்கிவிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைவதன் மூலம் மேலும் 13 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப்படும்.

எல்லா விதமான நிறுவனங்களுமே மிகுந்த நெருக்கடியான நிதிநிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் தருகின்ற மானியத்தொகைக்கு தடை விதித்திருக்கின்றது. அதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் வீழ்ச்சியடைகின்றன. குறைந்த கட்டணத்தில் இயங்குகின்ற விமான சேவை நிறுவனங்கள் மக்களிடம் பிரபலமாக செல்வாக்கு பெற்றுள்ள வழித்தடங்கல்களில் தங்களது விமானங்களை நிரப்புவதற்காக குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அதன் விளைவாக பெரிய விமான நிறுவனங்கள் சிறிய கம்பெனிகளை பின்பற்றி கட்டணக் குறைப்பு செய்ய வேண்டி வருகின்றது. அதே நேரத்தில் பொருளாதார மந்த நிலை, ஈராக் போர் மற்றும் சார்ஸ் தொற்றுநோய் ஆகியவை, லாபகரமாக நடந்து வந்த வடக்கு அட்லாண்டிக் வழித்தடத்தை மிகப்பெருமளவில் பாதித்துள்ளன. இந்த ஆண்டு மேலும் சில விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் பிரான்ஸ் மற்றும் KLM விமான நிறுவனங்கள் 450 முதல் 550 மில்லியன் டொலர்கள் லாபம் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றன. செலவுகளை மிச்சப்படுத்தியும் வழித்தடங்களை சீரமைத்தும் விமான இருக்கைகளை பெருமளவில் பயன்படுத்தியும் இத்தகைய லாபம் எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற முறையில் குறைந்த செலவில் மிகவேகமாக வளர முடியும் என்று இந்த நிறுவனங்கள் கூறிவருகின்றன. பாரிசில் உள்ள சார்ல்ஸ் டு கோல் (Charles de Gaulle) மற்றும் ஆம்ஸ்ரடாமில் உள்ள சிபோல் (Schipol) விமான நிலையங்கள் உலகிலேயே மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ளன. போட்டி விமான நிறுவனங்களைவிட குறைந்த செலவில் தமது நிறுவனத்தை விரிவுபடுத்தி விடமுடியும் என்பதால், பாரீஸ் நகரத்தின் மூன்றாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. ஏனென்றால் அதற்கு செலவு அதிகம் என்பதினால் ஆகும்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பங்கு மார்கெட்டுக்கள் இந்த ஏற்பாடு குறித்து அதிருப்தி கொண்டுள்ளன. பேரம், அறிவிக்கப்பட்ட நேரத்தில் KLM பங்குகளின் விலை 12.5 வீதம் உயர்ந்தது. அதே நேரத்தில் ஏர் பிரான்சின் பங்குகளின் விலை 4.2 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

விமானத் தொழில் சம்மந்தப்பட்ட பைனான்சியல் டைம்ஸ் நாளேட்டின் ஆய்வாளர் கிரிஸ் டாரி செலவை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையை மிகவும் சொற்பமானது என்று வர்ணித்திருக்கின்றார். ''ஏர் பிரான்ஸ் மற்றும் KLM நிறுவனங்களின் உத்தேச சிக்கன நடவடிக்கைகளால் வருகின்ற சேமிப்பு மிகவும் சொற்பமானது. இந்த சொற்ப தொகையும் கிடைப்பதற்கு நீண்டகாலம் ஆகும். இந்தத் தொழிலில் பயன்படுத்தப்பட வேண்டிய திறனளவு மிக அதிகமாக உள்ளது. எனவே இரண்டு விமான நிறுவனங்களையும் இணைப்பது மட்டும் போதுமான நடவடிக்கையல்ல. இருக்கின்ற திறனையும் அதற்கு ஆகும் செலவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக டச்சு அரசாங்கத்திற்கும் அதன் தொழிற்சங்கங்களுக்கும் ஏற்புடைய ஓர் ஏற்பாட்டை செய்தால் அது முன்பிருந்த நிலையை நீடிக்கச்செய்யும் நடவடிக்கையாக இருக்கும்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் சீரமைப்பு

1993 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் விமானக் கட்டணங்களையும் வழித் தடங்களையும் சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்த விமான நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. பல்வேறு சிறிய விமான நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடிக்கு உள்ளாயின. அல்லது பெரிய நிறுவனங்கள் அவற்றை கையகப்படுத்திக் கொண்டன. இதில் ஏர் பிரான்ஸ் மட்டுமே தப்பி பிழைத்தது. இதற்கு காரணம் அரசாங்கம் 1994 ம் ஆண்டு ஏர்பிரான்ஸ் நிறுவனத்திற்கு FF22 பில்லியன் கடன் வழங்கியது. 2001 ம் ஆண்டு சபேனா மற்றும் சுவிஸ் ஏர் நிறுவனங்கள் திவாலடைந்தன.

இந்த நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். அத்தோடு வேலை நிலைமைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பல்வேறு வேலை நிறுத்தங்கள் உருவாயின. இங்கு ஒரு எடுத்துக்காட்டை ஆராய்ந்தால் போதுமானதாகும். அரசுக்கு சொந்தமாக இருந்த பிரிட்டிஸ் ஏர்வைஸ் நிறுவனம் 1987 ம் ஆண்டு முதலாவதாக தனியார் மயமாக்கப்பட்டது. இந்த நிறுவனம் தனது கேந்திர சேவைகளை வெளிநாடுகளில் இருந்து மேற்கொண்டது. கிளை வழித்தடங்களை குறைந்த கட்டண விமான நிறுனவங்களுக்கு குத்தகைக்கு விட்டது. சிறிய நிறுவனங்களின் விமானங்களை குத்தகைக்கு எடுத்து குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிற்சங்கம் சாராத ஊழியர்களை இதற்கு பயன்படுத்தியது. விமான ஊழியர்கள் விமானம் இயக்கப்படும் நாட்டிலிருந்து நியமிக்கப்படுவதில்லை. பதிலாக உலகம் முழுவதிலும் இருந்து சம்மந்தப்பட்ட நிறுனவத்தின் தளங்களிலிருந்து நியமிக்கப்பட்டார்கள். குறைந்த கட்டணத்தில் இயங்கும் விமான நிறுவனங்களோடு போட்டிபோட வேண்டிய நிலைமை ஏற்பட்டதால், இந்த நிறுவனமானது இணையத்தளத்தின் ஊடாக நேரடியான விற்பனைகளை மேற்கொண்டு சுற்றுலா ஏஜென்ட்டுகளை தவிர்த்தது. அத்துடன் இந்தியா போன்ற ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் குறைந்த ஊதியத்தில் இயங்கி வருகின்ற கோல் சென்டர்களை (call centres) பயன்படுத்தி, இப்படிப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளின் ஊடாக சிக்கன நடவடிக்கைகளை உருவாக்கியது. இதனால் 2003 ம் ஆண்டு கோடையில் விமான நிலைய விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

வழித்தடங்கல் கட்டமைப்பும் கட்டண விகிதங்களும் சீராக அமைக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பு இல்லாமல் பல்வேறு விமான நிறுவனங்களும் தேவையற்ற முறையில் மிகப் பெருமளவில் இரட்டிப்பு கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளன. இதனால் விமான ஓடுபாதைகள் இதர போக்குவரத்து வசதிகள் சீரமைக்கப்படாமல் இரட்டிப்பு செலவினங்கள் அதிகரித்துள்ளன. ஒதுக்குப்புறமாக உள்ள நகரங்களில் லாபம் வரவில்லை என்று கருதி தனியார் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு ''திறந்த வானவெளி'' என்ற உடன்படிக்கை அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற நேரத்தில் ஏர்பிரான்ஸ் KLM இணைப்பு நடைபெற்றிருக்கின்றது. விமானப் போக்குவரத்து சுதந்திர வர்த்தகத்தை நிலைநாட்டுவதன் மூலம் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களோடு போட்டி போட்டு மேலாதிக்கம் செலுத்தி வருவதால் சிறிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் அவற்றை சார்ந்துள்ள பயணிகள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயமே பாதிக்கப்படுகின்றன.

ஐரோப்பிய யூனியனிற்கும் அமெரிக்காவிற்கும் பகிரங்க விமான சேவை தொடர்பாக நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கான நிர்பந்தத்தை ஐரோப்பிய யூனியனிற்கு உருவாக்குவதற்காக அமெரிக்கா முயன்று வருகின்றது. இது ''சூதாட்டம் போன்றது'' என்று விமானத் தொழில் தொடர்பான பொருளாதார ஆலோசகராக லண்டனில் பணியாற்றி வரும் கீத் மேக்மல்லன் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தகைய உடன்பாடு உருவாக்கப்பட்டு விடுமானால் இருதரப்பு தேசிய உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டுவிடும். எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிடும். தேசிய விமான நிறுவனங்களில் எந்த நாட்டவரும் சுதந்திரமாக முதலீடு செய்ய முடியும். ஐரோப்பிய விமான நிறுவனங்கள் அமெரிக்காவின் உள்நாட்டு மார்க்கெட்டில் புக முடியும். அதே போன்று அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் சுதந்திரமாக ஈடுபட முடியும். இத்தகைய உடன்படிக்கை விமானத் தொழிலையே முற்றிலுமாக தனியார் உடைமையாக்கிவிடும். இப்படி தனியார்மய உடன்படிக்கை வேலை வாய்ப்புக்களை சீர்குலைக்கும். விமானத் தொழில் முழுவதிலுமே தொழிலாளர்களின் நிலை மோசமடையும்.

ஆனால் அத்தகைய உடன்படிக்கை இருதரப்பிற்கும் இடையே உருவாகுமா? என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் அமெரிக்கா, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அதிக அளவில் அமெரிக்க விமானம் இறங்குவதற்கு அனுமதி கோருகிறது. தற்போது இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது ஹீத்ரோ விமான நிலையத்தில் நிலவுகின்ற இட நெருக்கடி காரணமாக பிரிட்டிஸ் ஏர்வைஸ் நிறுவனத்தின் விமான இறங்கும் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டால், அந்த நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்படும். இந்த வருடம் அமெரிக்க விமான நிறுவனங்கள் 5 மில்லியன் டொலர்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால், அவை உயிர் வாழவே தத்தளித்துக்கொண்டுள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய போட்டி நிறுவனங்களுடனான போட்டிகள் இன்னமும் நெருக்கடிகளை அதிகரிக்கவே செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved