World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Bolivia: Mass upheavals topple US-backed president

பொலிவியா: அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியை கவிழ்க்க பெரும் கிளர்ச்சி எழுச்சி

By Tomas Rodriguez and Bill Vann
21 October 2003

Back to screen version

பொலிவியா நாட்டையே முடக்கிவிட்ட பொது மக்கள் கிளர்ச்சி மற்றும் பாதுகாப்பு படைக்களால் 86 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவியாவின் ஜனாதிபதி லோசாடா சென்ற வெள்ளிக்கிழமையன்று பதவி விலக வேண்டிய கட்டாயம் எற்பட்டு , அவர் தப்பியோடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

துணை ஜனாதிபதி கார்லோஸ் மெசா அவருக்குப் பதிலாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். நிராயுத பாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனது ஆதரவை அவர் விலக்கிக் கொண்டது பொலிவியாவை புரட்சியின் விளிம்பிற்கே கொண்டுவந்து விட்டது. மெசா "தொழில் நுட்ப நிபுணர்களின்" புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார் மற்றும் அதனை தேசீய ஐக்கிய அரசாங்கம் என்று குறிப்பிட்டார்.

யதார்த்தத்தில், புதிய ஜனாதிபதி இதற்கு முந்தியவர் எந்த சலுகை பெற்ற சமுதாயத் தட்டினரைச் சார்ந்தவரோ அதே சமுதாயத் தட்டினரைப் பிரதிநித்த்துவம் செய்கிறார். மெசா முழு அளவிற்கு உள் நாட்டு புரட்சி வெடிக்கக்கூடும் என்று, தெளிவாக தெரிகின்றவரை முந்திய அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருந்தார். பொலிவியாவின் தொலைக்காட்சி அமைப்பின் சொந்தக்காரர் ஆன கோடீஸ்வரர் மெசா, லோசாடாவைப் போன்று எம். என். ஆர் அல்லது புரட்சிகர தேசீய இயக்கத்தின் உறுப்பினர் ஆவார். இந்த வலதுசாரி கட்சி,1980கள் முதல், பன்னாட்டு நாணய நிதியமும் வாஷிங்டனும் கட்டளையிடும், தனியார் மய திட்டங்களையும், பொருளாதார சிக்கன நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்திய தொடரான பொலிவிய கூட்டரசாங்கங்களில் இந்தக் கட்சியும் ஆட்சி செய்து வந்திருக்கிறது.

1993 முதல் 1997 வரை சாஞ்செஸ் லோசாடா முதலில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அரசுத் துறையை, குறிப்பாக பெட்ரோலியத் தொழிலை தனியார் மயமாக்குவதற்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். அந்த நேரத்தில், முதலீடுகள் அதிகரித்தன. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. தொலைபேசி மற்றும் ரயில்பாதைகள் உள்பட நாட்டில் பொருளாதார வளங்களும் அத்தியாவசிய சேவைகளும் பேர விலைகளுக்கு ஏலம் விடப்பட்டதனால் ஏற்பட்ட முதலீட்டு அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி இவற்றைக் காட்டும் புள்ளிவிரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது கொள்கைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், முதலீடுகளை விட மிக வேகமாக வேலையில்லாத் திண்டாட்டமும், சமுதாய அவலங்களும் அதிகரித்தன.

முன்னாள் குடியரசுத் தலைவரைப் போன்று மெசாவும் தனியார் மய கொள்கையை வலுவாக ஆதரிப்பவர். குறிப்பாக, பொலிவியாவின் இயற்கை எரிவாயுவை சிலி துறைமுகத்தின் வழியாக அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் ஏற்றுமதி செய்வதற்கு, 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் குழாய் இணைப்புகளை உருவாக்கும், திட்டத்தை மெசா ஆதரிப்பவர். இந்த பேரத்தை கண்டிப்பவர்கள், இந்த பேரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மிகப் பெரும் அளவில் லாபம் கிடைக்கும், அதே நேரத்தில் உள்ளூர் வர்த்தகர்கள் ஒரு சிறு குழுவினர் பணக்காரர்கள் ஆவதற்கு வழி ஏற்படும், அதே நேரத்தில் பொலிவியாவில் மிக மதிப்புள்ள இயற்கை வளம் பறிபோய் விடும்.

இந்த திட்டத்திற்கு பொது மக்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் வளங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்று, கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியில், உழவர்களும், நகர்ப்புற ஏழைகளும், தொழிலாளர்களும் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். கடந்த இருபது ஆண்டுகளாக பொலிவியாவில், தொடர்ந்து நிலவுகின்ற, மிகப்பெரும் வறுமை, மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் மக்களிடையே தேங்கியிருந்த ஆத்திர உணர்வுகளை கிளறிவிட்டன.

இப்போது நடைபெற்ற கிளர்ச்சியின், ஆணிவேர் ஸ்பெயின் காலனித்துவம் எந்தவிதமான இடையூறும் இல்லாமல், பொலிவியாவின் வளங்களை சூறையாடிய வரலாற்றின் நினைவுக்குள் ஆழமாக செல்லுகின்றது. பொலிவியாவின் சுரங்கத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய உழைக்கும் மக்கள் மீது கொடூரமான ஒடுக்கு முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்ததுடன் இணைந்து,வெள்ளி, தகரம், எண்ணெய் வளம் மற்றும் தற்போது, எரிவாயு ஆகியவை வெளிநாட்டு முதலாளித்துவத்தால் சுரண்டப் பட்டது.

தற்போது நடைபெற்று வரும் பொதுமக்களது கண்டனத்தை ரத்தக் களரியாக மாற்றுகின்ற, நடவடிக்கைகளை, அமெரிக்க ராணுவ அதிகாரிகள், ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்திலும், பொலிவியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திலும், இருந்து கொண்டு ஒடுக்கு முறை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நெடுஞ்சாலையில் விசாயிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட படுகொலை, நடவடிக்கைகளாலும், எல் ஆல்டோ தொழில்துறை புறநகர்ப் பகுதியில் பல தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும், நாடு முழுவதிலும் கொந்தளிப்புக்களை உருவாக்கியது, பொது வேலை நிறுத்தம் பரவுதற்கு வழிவகுத்தது மற்றும் தலைநகரும் நாட்டின் இதர நகர்களையும் தொடர்புகளைத் துண்டிக்கும் வகையில் சாலைத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

லொசாடா ராஜினாமா செய்த அன்றைய தினம் சுரங்கத் தொழிலாளர்கள், டைனமைட்டுடன் லாபாஸ் நகருக்கு அணிவகுத்து வந்தனர். பரந்த எதிர்ப்பில் சேருவதற்கும் தெருக்களில் தடைகளை உருவாக்கவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் லாபாஸில் குவிந்த்தானது, நகரின் நடவடிக்கைகளை முடக்கின.

வாஷிங்டனுடன் கலந்து ஆலோசித்துத்தான் ஆட்சித்தலைமையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மெசா பதவியேற்றதும், உடனடியாக அவர் மேற்கொண்ட நடவடிக்கை பொலிவியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் டேவிட் கிரீன் லீ -யுடன் நடத்திய சந்திப்பு தான். இவர் பொலிவியா நாட்டில் இதற்கு முன்னர் சிஐஏ-ன் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர்.

கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அமெரிக்கத் தூதரகமும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசுத் துறையும், தற்போது உள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பொது மக்களது கிளர்ச்சி வெற்றி பெறுமானால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று பகிரங்கமாக அச்சுறுத்தல்களை வெளியிட்டன, "தெருக்களில் உருவாகும் நிர்பந்தங்களில் இருந்து, பொலிவியாவின் ஒரு புதிய அரசு உருவாகுமானால், சர்வதேச சமுதாயம் பொலிவியாவை தனிமைப்படுத்திவிடும்" என்று அமெரிக்க தூதர் 'கீரின்லீ' பொலிவியா நாட்டு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

புஷ் நிர்வாகம் மற்றும் உள்ளூர் ஆளும் குழுவினர், தற்போது நடைபெற்று வரும் கிளர்ச்சியை, ஆறப்போட்டு விட்டு, பொதுமக்களுக்கு எதிராக மற்றொரு அரசியல் தாக்குதலை நடத்துவதற்கு தயாராவதற்கு அவகாசமாகத்தான், ஆட்சி மாற்றத்தினைப் பயன் படுத்திக் கொண்டிருக்கின்றனர். எரிவாயு பேரம் தொடர்பாக பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், நாட்டின் எரிபொருள் தொடர்பான சட்டத்தை திரும்பவும் எழுதப்படும் என்றும், பதவி விலகும் முன்னர் லோசாடா தந்திருந்த உறுதி மொழிகளை மேசாவும், திரும்ப கூறியுள்ளார். விரைவில், தேர்தல்களை நடத்தப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். எந்த கருத்துக் கணிப்பும், அல்லது பொது வாக்கெடுப்பும், அரசாங்கத்தை கட்டுப்படுத்தும், என்பது இந்த அறிவிப்புக்களில் கோடிட்டுக் காட்டப்படவில்லை. புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை.

இடைக் காலத்தில் அரசியல் தலைமையில் செய்யப்பட்டுள்ள மாற்றம், அவர்கள் விரும்பிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. தொழிற் சங்கத் தலைவர்களும், விவசாய தலைவர்களும், மேற் கொண்டுள்ள சமரச கொள்கையின் காரணமாகத்தான் இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது. கொக்கோ விவசாயிகளின் முன்னாள் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியான MAS- அல்லது சோசலிசத்தை நோக்கி இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான இவோ மோராலஸ், ஜனாதிபதி பதவிக்கு "அரசியல் சட்டப்பூர்வமான தீர்விற்கு" மெசாவை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும், அதுதான் வாஷிங்டன் ஏற்றுக் கொள்வதாயிருக்கும் என முன்மொழிந்தார். "ஜனாதிபதி கார்லோஸ் மெசா தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளவும் தனது உறுதி மொழிகளை நிறைவேற்றவும் நாம் மூசெசடுக்கும் நேரத்தைக் கொடுப்போம்" என்று மொராலெஸ் குறிப்பிட்டார்.

பொலிவிய விவசாயத் தொழிலாளர்களின் ஐக்கிய சங்க சம்மேளனம் தலைவர் Felipe Quispe Huanca, மெசாவின் உறுதி மொழிகள் பொய்யானவை என நிராகரித்தார், ஆனால் பழங்குடி விசாயிகளின் தலைவர், தனது அம்ைப்பு புதிய ஜனாதிபதிக்கு மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு 90 நாட்கள் அவகாசம் தரும் என்று கூறினார்.

இறுதியாக, பொலிவிய தொழிலாளர் சம்மேளனம் அல்லது COB, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தது. அதேவேளை, தொழிறசங்க சம்மேளன தலைவர் ஜெய்ம் சோலாரெஸ் மெசாவைச் சந்திக்க ஜனாதிபதி அரண்மனை சென்று, இருபது கோரிக்கைகள் அடங்கிய பட்டியலைக் கொடுத்தார். "அவர் ஊழலை எதிர்த்து மிக உற்சாகமாக போராடுகின்ற வரையில் அவர் ஆதரவைப் பெறுவார் என்று நாம் சுட்டிக் காட்டினோம்" சந்திப்பிற்குப் பின்னர் சோலாரெஸ் குறிப்பிட்டார்.

இருக்கின்ற தொழிலாளர் மற்றும் விவசாய அமைப்புக்கள் இறங்கி வந்து இருப்பினும், அவரது அரசாங்கம் புரட்சிகர கிளர்ச்சி எழுச்சியை கட்டுப்படுத்த முடியும் என்பதில் பெரும் நம்பிக்கை இல்லாமையை மெசா வெளிப்படுத்தினார். "அதல பாதாளம், நம் கண்முன்னே தெரிகின்றது. நாம் ஏதாவது தவறு செய்தால், நமது முன்னோக்கில் ஏதாவது தவறு ஏற்படுமானால், நாம் மிக கடுமையாக நடந்து கொள்வோமானால், நமது நடவடிக்கைகளால், அந்த அதல பாதாளத்தில் நம்மைத் தள்ளி விடக்கூடும்" என்று தமது புதிய அமைச்சரவை சகாக்களிடம் ஞாயிறன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

புஷ் நிர்வாகம் உடனடியாக லோசாடாவிற்கு அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.அவர் பொலிவியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆவார். அவர் அமெரிக்காவில் படித்ததாலும் வளர்ப்பு முறையின் விளைவாலும், அவருடைய உரையாடலில் ஸ்பானிஷ் மொழி அழுத்தம் அதிகமாக இருப்பதன் காரணத்தாலும், "the gringo" என பொலிவியர்களுக்கு நன்கு அறியப்பட்டவராவார்.

லோசாடா மியாமி ஹெரால்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சாஞ்செஸ் டி லோசாடா பொது மக்கள் நடத்தி வரும் இயக்கத்தை கடுமையாக சாடினார். தெற்கு அமெரிக்காவில் போதைப் பொருள் தொழிற்சங்க அரசாங்கத்தை உருவாக்குவதற்கு "நடத்தப்பட்ட சதி" இந்த கிளர்ச்சி என்று அவர் வர்ணித்தார்.

பொலிவியாவில் மனித உரிமைகள் கமிஷன் சாஞ்செஸ் டி லோசாடா மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்களை, தாக்கல் செய்வதற்கு உத்தேசித்திருக்கின்றது. கடந்த 14 மாதங்களாக அவரது ஆட்சியில் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகள் காரணமாக ஏறத்தாழ 200 சாவுகள் நேர்ந்திருப்பதாக கூறி அவர் மீது, கிரிமினல் குற்றச்சாட்டு தாக்கல் செய்யவிருக்கின்றது.

சென்ற பிப்ரவரி மாதம் பன்னாட்டு நாணய நிதியம் கட்டளைப்படி வருமான வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டன மற்றும் இதர சிக்கன நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டன. அந்த நேரத்தில், பொது மக்கள் கண்டனம் செய்த போது, அவர்கள் மீது அரசாங்கம் இராணுவத்தை ஏவி விட்டது. அந்த ஒடுக்கு முறை நடவடிக்கையே பொலிவியாவில் "கருப்பு பெப்ருவரி" என்று அழைக்கப்படுகின்றது. போலீசார் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களை துருப்புக்கள் சுட்டனர். ஆர்ப்பாட்டங்களின் போது 33 பேர் கொல்லப்பட்டனர். பெப்ருவரி படுகொலைக்குப் பின்னர் லோசாடாவை பதவியிலிருந்து நீக்கி அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

லோசாடா உடந்தையாகயிருந்து நடைபெற்ற குற்றங்களுக்காக அவர்மீது, வழக்குத் தொடரப்பட மாட்டாது என்றும் அவர், பொலிவியாவிற்கு கொண்டு வரப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும், மெசா தெளிவுபடுத்தியிருக்கிறார். அதே நேரத்தில், ராணுவ அல்லது போலீஸ் தலைமையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்றும் அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், மியாமியில் உள்ள அமெரிக்க தெற்கு இராணுவ தலைமையகம் வெள்ளிக்கிழமையன்று பொலிவியாவிற்கு ராணுவ ஆலோசகர்கள் குழு ஒன்று அனுப்பப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் குழு "பொலிவியாவில் நிலவுகின்ற சூழ்நிலையை மதிப்பீடு செய்து", அந்த நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவ குழுவிற்கும், பொலிவியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் ஆலோசனைகளை வழங்கும் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

பிரேசில் நாட்டு சம்பவங்கள் தனது கட்டுப்பாட்டை மீறி சென்று விடக் கூடாது என்பதில், புஷ் நிர்வாகம் உறுதியாக உள்ளது. ஏனென்றால், IMF மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் கோருகின்ற பொருளாதார கொள்லீைகளுக்கு எதிர்ப்பு வலுத்து கட்டு மீறி சென்று விடுமானால், தென் அமெரிக்கா முழுவதிலும், அந்த கொந்தளிப்பு பரவி விடும் என்று புஷ் நிர்வாகம் பயப்படுகின்றது.

பொலிவியா தென் அமெரிக்காவிலேயே மிகவும் ஏழ்மை நிறைந்த நாடு மற்றும் இந்த மண்டலம் முழுவதிலும் எடுக்கப்பட்டுள்ள சமூக செலவினங்களில் வெட்டுக்கள், "சுதந்திர சந்தை" கொள்கைகள் தனியார் மய கொள்கைகள் ஆகியவற்றால், பொலிவியா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதிகாரப்பூர்வமாக வேலையில்லாத் திண்டாட்டம் 12 சதவீதம் என்று இருந்தாலும், பொலிவியாவின் தொழில் மற்றும் வேளாண்மைத் துறை ஆய்வு மையம் தந்திருக்கின்ற புள்ளி விபரங்களின் படி, மக்களில் உழைத்து சம்பாதிக்கும் தகுதியுள்ள 45 சதவீதம் பேருக்கு எந்த விதமான நிரந்தர வேலையும் இல்லை, முறைசாரா தொழில்கள் என்று அழைக்கப்படுவனவற்றில் பகுதி நேர வேலையையே நம்பியிருக்கின்றனர்.

பொலிவியா நாட்டு மக்கள் தொகை 8.8 மில்லியன் பேருக்கு அந்த நாட்டு வேளாண்மைத் துறை மூலம் எளிதாக உணவு கிடைத்து விடக் கூடும் என்ற உண்மை இருப்பினும், ஐ.நா. உலக உணவு திட்டத்தின் கீழ் தென் அமெரிக்காவில் ஊட்டச்சத்துக் குறியீட்டெண் அர்த்தத்தில் அடிமட்டத்தில் இருக்கும் நாடு பொலிவியா என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்றைய நிலவரம் என்னவென்றால், குறைந்த பட்சம் இருபது லட்சம் மக்கள் நிரந்தரமாக பட்டினி கிடக்கிறார்கள் என்று ஐ.நா ஏஜென்சி மதிப்பீடு செய்துள்ளது. பொலிவியா மக்களிலேயே 12 சதவீதம் குடும்பங்கள்தான் குறைந்த பட்ச தினசரி கலோரி தேவைகளை ஈடுகட்டுகின்ற வகையில் உணவுப் பொருட்களை உட்கொள்ளுகின்றனர்.

பொலிவியா நாட்டில் இயங்கி வருகின்ற ஆய்வு அமைப்பான, பொருளாதார மற்றும் சமூக்க் கொள்கை பற்றிய ஆய்வுக்கால பிரிவின் மதிப்பீட்டின்படி, 1995-ம் ஆண்டு 50,76,000 வறுமையில் வாழ்ந்தார்கள், 2001-ம் ஆண்டு இந்த தொகை 54,48,000 ஆக உயர்ந்து விட்டது.

பொலிவியாவின் நிலைமை மிக கடுமையானது என்றாலும், அவை தனித்தன்மை கொண்டவையல்ல. அண்மையில் உலக வங்கி லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. உதாரணமாக,தென் அமெரிக்க மண்டலத்தில் வாழுகின்ற மக்களில் மிகப் பெரும் பணக்காரர்களில் பத்து சதவீதம் பேர் மண்டலத்தில் மொத்த வருவாயில் 48 சதவீதத்திற்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். பரம ஏழைகளாகயிருக்கின்ற பத்து சதவீத மக்கள் மொத்த வருவாயில் 1.6 சதவீதத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளுக்கான பொருளாதார கமிஷன் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்கா நாடுகளின் வறுமையில் வாடுகின்ற மக்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 220 மில்லியனாக, அதாவது 43.4சதவீதமாக உயர்ந்துள்ளது. 18.8சதவீதம் பேர் அதாவது, 95 மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளவர்கள் என்று, அறிக்கை விளக்குகின்றது. கடந்த 5 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பிற்கான திட்டம் செயல்படாமல் முடக்கப்பட்டு விட்டது. தற்போது பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகக் குறைவு எனவே, நிலைமை மேலும், மோசமடையவே செய்யும். சென்ற மாதம் பன்னாட்டு நாணய நிதியம் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்ட ஏற்பாட்டை 1.1 சதவீதம் என்று குறைத்திருக்கின்றது. எனவேதான், தற்போது பொலிவியாவில் வெடித்துள்ள சமுதாயக் கிளர்ச்சியானது, இந்த மண்டலத்து நாடுகளுக்கு பரவுகின்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக இந்த மண்டலத்தில் பொருளாதார சிக்கனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதன் வளர்வீதப் பாதிப்புக்களாக மற்றும் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு சர்வதேச வங்கிகளும், நாடு கடந்த நிறுவனங்களும், இந்த பிராந்தியத்தின் செல்வத்தை சூறையாடியுள்ளதின் பாதிப்புக்களாகப் பரவக் கூடும் வளர்ந்து வரும் அறிகுறிகள் இருக்கின்றன..

ஈக்வடார் நாட்டில் Lucio Gutierrez அரசாங்கம், பன்னாட்டு நாணய நிதியம் ஆணையிடும் சிக்கனக் கொள்கைகள் கோருகின்ற தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்கள், சமூக நிலைமைகள் மற்றும் ஓய்வூதியங்களில் ஒரேயடியான தாக்குதல்கள் இவற்றைத் திணிக்க முயற்சிக்கையில் பரந்த மக்களின் எதிர்ப்புக்களை எதிர் கொள்கிறது. அரசாங்க ஊழியர்கள் திரும்பத் திரும்ப எதிர்ப்புக்களை நடத்தி வருகின்றனர். Gutierrez-ஐ முன்னர் ஆதரித்த பழங்குடி விவசாயிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்களும் அரசாங்க கொள்கைளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஈக்குவடார் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. அதே நேரத்தில் கடன் சுமை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. நாட்டின் கடன் தொகை கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு ஆண்டு உற்பத்தியில் ஏறத்தாழ 42 சதவீதம் ஆகும்.

இதற்கிடையில், லத்தின் அமெரிக்காவின் இன்னொரு மிகஏழை நாடாகிய ஹொண்டூராஸ் நாட்டில், அரசாங்கம் பன்னாட்டு நாணய நிதியத்துடனான அதன் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, அதனால் முன்மொழியப்பட்டிருக்கும் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்டித்து சென்ற வாரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெடுஞ்சாலைகளில் மறியல் செய்தனர். ஹொண்டூராஸ் அரசாங்கம் நாட்டின் தண்ணீர் வழங்கும் துறையை தனியார் மயமாக்க திட்டமிட்டிருக்கின்றது. 100,000 லட்சம் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஹொண்டூராஸ் நாட்டின் 80சதவீதம் மக்கள் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பொலிவிய சம்பவங்கள் ஏற்கனவே எடுத்துக்காட்டுகிற படி, இந்த மண்டலத்தில், அமெரிக்கா தனது பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் தனக்கு தேவையான எரிபொருள் மற்றும் மூலோபாய வளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தனது சொந்த கொடுமையான அடக்குமுறையை ஆதரிப்பதற்கும் மேற்கொள்வதற்கும் வாஷிங்டன் தயாராக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறை இருப்பினும், இக்கண்டத்தைப் பீடித்திருக்கும் பரந்த சமூக நெருக்கடியானது, தனது "புழக்கடை" என்று நீண்ட நெடுங்காலமாக அமெரிக்கா கருதிவந்த லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் மண்டலத்து நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது நேருக்கு நேராக, புரட்சிகர வெடிப்பினை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved