World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan SEP speaks in Jaffna against the Iraq war இலங்கை சோ.ச.க. ஈராக் யுத்தத்திற்கெதிராக யாழ்ப்பாணத்தில் உரையாற்றியது By our correspondent சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) மத்திய குழு உறுப்பினரான எம். அரவிந்தன், மார்ச் 26ம் திகதி, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள், கல்விமான்கள் மற்றும் தொழிலாளர்கள் அடங்கிய கூட்டமொன்றில் "ஈராக் யுத்தமும் அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை நிகழ்த்தினார். யுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகியிருந்த இலங்கையின் வட பகுதியின் நெருக்கடியான சூழ்நிலையிலும் 60 பேர்வரை வருகை தந்திருந்தனர். ஈராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் பகிரங்கக் கூட்டம் இதுவாகும். இலங்கையின் வடக்கு கிழக்கில் எந்தவொரு பகிரங்க அரசியல் கூட்டங்களும் இடம்பெறுவது அபூர்வமானதாகும். கொழும்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 20 ஆண்டுகால நீண்ட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக ஒரு இலகுவற்ற யுத்த நிறுத்தம் நிலவுகின்ற போதிலும், யாழ்ப்பாண நகரை இன்னமும் இராணுவம் அதிகளவில் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. சோ.ச.க, உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி அறிக்கைகளை விநியோகித்திருந்ததுடன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் (யா.வி.ச) பல்கலைக் கழகத்தில் விளம்பரம் ஒட்டியிருந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த யா.வி.ச. தலைவர் திருமதி. செல்வநாயகம் கூட்டத்தினருக்கு பின்வருமாறு தெரிவித்தார். "நாம் ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்க்க வேண்டும். உலகின் எந்தவொரு மூலையிலும் நடக்கும் அநீதிகளையும் நாம் எதிர்க்கிறோம். எமது சமுதாயத்தின் முதுகெலும்புகள் தொழிலாளர்களேயாகும். எனவே போரை தடுப்பதில் தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய பாத்திரமுண்டு." தொழிலாள வர்க்கத்திற்க்காக முன்னுழைக்கும் சோ.ச.க. வுக்கும் அரவந்தனுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அரவிந்தன் இந்த விரிவுரையை நடத்த சந்தர்ப்பம் அளித்தமைக்காக யாழ் விஞ்ஞான சங்கத்துக்கும் அதன் தலைவருக்கும் சோ.ச.க. வின் பாராட்டுக்களை தெரிவித்தார். சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றான ஈராக்கிற்கு எதிராக, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இராணுவ கூட்டாளிகளான பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவும் முன்னெடுத்து வரும் கொடூரமான யுத்தத்தை கண்டனம் செய்வதாகத் தெரிவித்தார். அவர் தமிழ் சிங்களம் உட்பட ஒன்பது மொழிகளில் வெளிவரும் நா.அ.கு.வின் நாளாந்த வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தின் பக்கம் கூட்டத்தினரின் அவதானத்தை திருப்பினார். "அது அனைத்துலக தொழிலாள வர்க்கத்துக்கான அரசியல் முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் விரிவுபடுத்துகிறது. கடந்த ஆறு மாதங்களாக ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க யுத்தத் தயாரிப்புகளை எதிர்த்தும் அதன் அரசியல் பொருளாதார வேர்களை தெளிவுபடுத்தியும் டசின் கணக்கான கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன," என அவர் தெரிவித்தார். இந்த யுத்தத்தில், மத்திய கிழக்கிலும் அதற்கப்பாலும் உள்ள பாரிய எண்ணெய் வளங்கள் மீது தனது கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பது மற்றும் ஈராக் போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளை அமெரிக்க காலனிகளாக சுருக்குவதுமே அமெரிக்காவின் மூலோபாய நலன்களாக விளங்குகின்றன என அரவிந்தன் குறிப்பிட்டார். 20ம் நூற்றாண்டின் வரலாற்றுப் படிப்பினைகள் சிலவற்றை மீளாய்வு செய்த அவர் ஈராக் யுத்தமானது மேலுமொரு உலக அழிவுக்கு வித்திடுகிறது என தெளிவுபடுத்தினார். "முதலாளித்துவ அமைப்பு போரை உருவாக்குகிறது. கடந்த நூற்றாண்டில் பூகோளமயப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கும் தேசிய அரச அமைப்புக்கும் இடையிலான தீர்கக்கப்பட முடியாத முரண்பாடுகளின் காரணமாக இரு உலகப் போர்கள் மூண்டன. அனைத்துலக ரீதியில் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் ஏனையோரும் போரை எதிர்த்தனர்," என அரவிந்தன் கூறினார். எவ்வாறெனினும், இந்த எதிர்ப்புக்கள் யுத்தத்தை நிறுத்திவிடவில்லை. இலாப அமைப்பைத் தூக்கி வீசி, மனித குலத்தின் தேவைகளை அடைவதற்கான சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்பக் கூடிய, முதலாளித்துவ மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளில் இருந்து அரசியல் ரீதியில் சுயாதீனமான அனைத்துலக சோசலிச இயக்கம் ஒன்று அவசியமானதாகும். இதுவே உ.சோ.வ.த. மற்றும் சோ.ச.க. வின் முன்னோக்கு, என அவர் சுட்டிக் காட்டினார். விரிவுரையின் பின் கலந்துரையாடலுக்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சமூகமளித்திருந்தவர்களில் அநேகமானோர் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை கண்டனம் செய்தனர். ஒரு விரிவுரையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: "இந்த கூட்டத்தை நீங்கள் ஒழுங்கு செய்தது நல்லது. யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இந்தப் போரையிட்டு மெளனம் சாதிக்கின்றன." ஒரு மாணவன் தெளிவுபடுத்தும் போது: "உங்களது வலைத் தளத்தை நான் வாசிக்கிறேன். அண்மையில் ஒரு கட்டுரையை படிக்க இறக்கம் செய்தேன். ஈராக்கிற்கு எதிரான போரை நாமும் எதிர்க்கின்றோம். போருக்கு ஆதரவளிக்கும் பிரித்தானிய தொழிற் கட்சி ஒரு தொழிலாள வர்க்கக் கட்சி என கூறிக்கொள்வது எங்ஙனம் சாத்தியமாகும்?" எனக் கேட்டார். தொழிற் கட்சியின் வர்க்கப் பண்பு மற்றும் பிளேயர் அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளின் பதிவுகளையும் பற்றிய கலந்துரையாடல் ஒன்றுக்கான வாய்ப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் உதயன், தினக்குரல், ஈழநாடு போன்ற அநேக தமிழ் பத்திரிகைகள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டனம் செய்துள்ளன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட தமிழ் கட்சிகள் இவ்விடயத்தையிட்டு மெளனம் சாதிக்கின்றன. இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட ஒரு அதிகாரப் பகிர்வு தயாரிப்புக்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலி தலைவர்கள் வாஷிங்டனை குற்றம் சாட்டாமல் இருப்பதில் வெகு கவனமாக உள்ளனர். முதலாவது யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மார்ச் 12 அன்று இடம்பெற்றது. இதில் 1990ல் விடுதலைப் புலிகளால் யாழ் நகரிலிருந்தும் விரட்டப்பட்டு மீளத்திரும்பிய சுமார் 50 முஸ்லிம்கள் பங்குபற்றினர். கடந்த வாரம் வேறு மூன்று கூட்டங்களும் இடம்பெற்றன. |