:
மருத்துவமும் சுகாதாரமும்
The science and sociology of SARS
Part 2: Science, internationalism and the profit
motive
சார்ஸினுடைய அறிவியல், சமூகவியலின் தன்மை
பகுதி-2: விஞ்ஞானம், சர்வதேசியம் மற்றும் இலாப நோக்கமும்
By Joseph Kay
13 May 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
சார்ஸ் எனப்படும் (SARS -Severe
acute respiratory syndrome) கடுமையான தீவிரமான மூச்சு திணறல் நோய் அறிகுறிக்கு காரணமான
புதிய வைரசின் பரவல் பல மருத்துவ, அறிவியல், சமூக பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள்
குழு மேற்கொண்ட விரைவான சமாளிப்பு முயற்சியும், கூட்டுச் செயற்பாட்டினாலும் இவ் வைரசு சற்றே
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுளது. ஆனால் உலகம் முழுவதும் 7000 பேரில் அது தொற்றி உள்ளதுடன் 500
பேரின் உயிரையும் காவு கொண்டு விட்டது. சீனாவில் மிகப் பெரிய சுகாதாரக் கேட்டை தோற்றுவித்துள்ளது. இப்பொழுதும்
சர்வதேச தொற்று நோயாக அதிகரித்து பேரழிவு விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சார்ஸ் - அறிவியல், சமூகவியல் ஆய்வு பற்றிய இரு கட்டுரைகளில் இது இரண்டாம் பகுதியாகும்.
முதல் கட்டுரை வைரசுகள் பற்றிய சில அறிவியல் கூறுபாடுகளை, குறிப்பாக சார்ஸ் தொற்று நோய் ஏற்படுத்தும் வைரசை
பற்றி விளக்கியது. ("சார்ஸ்
தொடர்பான அறிவியலும், சமூகவியல் தன்மையும்
பகுதி-1: வைரசுக்களும் தற்போதைய பரவலின் தன்மையும்
"). இந்தக் கட்டுரை சார்ஸின் தொற்று
நோயைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சமூக முக்கியத்துவம் பற்றி ஆராய்கின்றது.
அனைத்து தகவல்களின்படியும் சார்ஸ் நோயோடு போராட மேற்கொள்ளப்பட்ட
விஞ்ஞான முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதன் வெளிப்பாடு ஏற்பட்டதாகக்
கொள்ளப்படுகிறது. 2003 பெப்பிரவரிக் கடைசியில் சீனாவிலிருந்து வியட்நாமிற்குப் பரவிய அளவில் அங்கு 22 மருத்துவமனைப்
பணியாளர்களைத் தொற்றுதலுக்கு உட்படுத்தியது. சர்வதேச விஞ்ஞானிகளுக்கு நோயின் தீவிரம் மார்ச் வரை தெளிவாகத்
தெரிந்திருக்கவில்லை. மார்ச் 12ம் தேதி உலக சுகாதார அமைப்பு (WHO),
ஆசியாவில் சாதாரணமாகக் காணப்படாத கடுமையான சுவாசப்பை நோய் உள்ளதாக உலகம் முழுவதற்கும் ஒர் உஷார்
எச்சரிக்கையை விடுவித்தனர். சார்ஸ் பரவத் தொடங்கிய பின்னர், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெளிவான
சிகிச்சை முறை இல்லாத அளவில் உலக சுகாதார அமைப்பு
உலகளாவிய எச்சரிக்கை விடுத்ததுடன், ஓர் வழமைக்கு மாறான அவசரகால பயண எச்சரிக்கையையும் வழங்கியது.
அப்பொழுது இதற்கான காரணம் தெரியாமலிருந்ததோடு இது ஒரு விதமான குளிர் ஜீரமாக
(Influenza) இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
உலக சுகாதார அமைப்பின் உலகந்தழுவிய உஷார் நிலை அறிவிப்பிற்கு இரண்டு வாரத்திற்குள், நோயின் சந்தேகத்திற்குட்பட்ட
காரணம் ஒரு குறிப்பிட்ட Corona வைரசின் கடுமையான
அழிக்கும் சக்தியுடைய பிரிவாக இருக்குமோ என்று கருதப்பட்டது. வைரசினை தனியாகப் பிரித்தெடுத்த இரண்டு வாரங்களுக்குள்,
அதன் முழு மரபணுத் தொடரும், அதனுடைய சரியான வடிவமைப்பு அனைத்துமே உறுதி செய்யப்பட்டு அனைவரும் அறியும்படி
வெளியிடப்பட்டது.
ஏப்ரல் 16ம் தேதி, வைரசின் தொற்றுதலுக்கு உட்படுத்தப்பட்ட குரங்குகள் நோயின்
அறிகுறிகளைத் தோற்றுவித்த அளவில், கோரோனா வைரஸ் அறிவியல் பூர்வமாக சார்ஸுக்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது.
இது Koch postulates எனப்படும் அடிப்படைகளில்
தொற்று வியாதி பரவும் காரணத்தை உறுதிப்படுத்தும் நான்காவது காரணியாகும். இது வைரசால் பீடிக்கப்பட்ட
எல்லா நபர்களிடமும் காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனியாக வளர்க்கப்பட
வேண்டும். தொற்று நோயில்லாத உயிரினத்திடம் (Host)
புகுத்தப்படும் பொழுது, அது நோயை உருவாக்க வேண்டும். புதிதாக நோயுற்ற உயிரினத்திடமிருந்து அது மீண்டும்
பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
1980èOTM AIDSக்கு
HIV காரணம் என்று அறியப்படுவதற்கு இரண்டு ஆண்டுகள்
ஆயின. அதற்கு மாறாக தற்பொழுது விஞ்ஞான விளக்கத்தின் வேகம் உள்ளது. இது
AIDSன் காரணத்தை அறிய எடுத்துக் கொள்ளப்பட்ட பாரிய
முயற்சிகளை பற்றி தவறாகக் கூறும் எண்ணத்தில் இல்லை. மாறாக தற்கால விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும்.
கோரோனா வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டு மரபணுத் தொடர் அறியப்பட்ட பின்னர்,
தற்போது தடுப்பூசிகள் தயாரிப்பதிலும், கூடுதலான நேரடிச் சிகிச்சை முறைகளைப் பயன்படுதற்கான முயற்சிகளை
தீவிரமயப்படுத்தலாம். பின்னர் நாங்கள் அறிந்ததுபோல் தீவிரமான அபாயம் கொண்டது என்று தெரிந்தவுடன்
நோயினை சமாளிக்க உலக சுகாதார அமைப்பு விரைவாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் வியட்னாம், சிங்கப்பூர்,
கனடா போன்ற நாடுகளின் மக்களிடையே பரவிடுவதைத் தற்காலிகமாகவேனும் நிறுத்தி வைத்தது. ஆரம்பத்தில் சீனாவிலிருந்து
வந்த பயணிகளால், சார்ஸ் மேற்கூறிய நாடுகளில் பரவியது. ஆனால் தற்பொழுது மேலும் பரவுவது குறைந்துள்ளதுடன்,
வியட்நாமில் முற்றிலுமாக பரவாது தடுக்கப்பட்டுவிட்டது.
சர்வதேச கூட்டு நடவடிக்கைகளின் விளைவே இது
வைரசினால் தோன்றியுள்ள ஆபத்து உண்மையிலேயே அதிகம் தான். இப்பொழுதும் சீனாவில்
பரவிவருகிறது. பெய்ஜிங்கிலிருந்தும் மற்ற பெரிய நகரங்களிலிருந்தும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் மாணவர்களும்
தொழிலாளர்களும் தங்களுடன் நோய்கிருமியினையும் கொண்டு வருவர் என்பது ஐயுறவிற்குரியதல்ல. வைரஸ் பரவிடும்
அளவில் அது தொடர்ந்து நோயாளிகளைக் கொல்லும். தற்போது இறப்பு விகிதம் 15 சதவிகிதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் பெரும்பாலான எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது பரவுமேயானால் மிகக் கடுமையான அழிவை அது
ஏற்படுத்தும். ஏனெனில் எய்ட்ஸ் நோயாளிகளைப் பொறுத்தவரையில் குறைந்த எதிர்ப்பு சக்தியே உடலில் இருப்பதால்,
வியாதியிலிருந்து தப்புவதற்கு அவர்களிடம் தடுப்பு சக்தி குறைவாகும்.
நோய் அதிக அளவு பரவுமெனில், ஒரு உலகளாவிய நோயாக தன்னை அது ஸ்திரப்படுத்திக்
கொள்ளக் கூடிய நோயாக்கிக் கொள்ளும் தன்மையும் அதிகமாக்கிவிடும். உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்
துறையின் நிர்வாக இயக்குனரான டேவிட் ஹேமன் ''சார்ஸ் வைரஸ் இப்பொழுதுள்ள நோய் உண்டு பண்ணும் முறையினையும்
பரப்பும் தன்மையையும் தொடர்ந்து கொண்டிருக்குமானால், 21ஆம் நூற்றாண்டின் முதல் கடுமையான புதிய வியாதியாக
உலகளாவிய தொற்றுதலைப் பரப்பும் ஆற்றலைப் பெற்றுள்ளதாக பெயரெடுக்கும். இப்பொழுது அதனுடைய மருத்துவ
அணுகுமுறையும் மற்றும்
தொற்றும் தன்மை பற்றியும் குறைவாக அறியப்பட்டிருந்தாலும்
கவலைக்கு காரணமாயுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நூற்றாண்டின் பல புதிய நோய்களின் பரவும் ஆற்றல், குறைந்தனவாக இருந்தன.
''அதற்கு மாறாக சார்ஸ் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் வழி வகைகளைப் பார்க்கும் போது மிகவும் அதிகமான
அளவு நெருங்கியுள்ள தொடர்புகளையுடைய உலகமும், அதிகமான ஓரிடத்திலிருந்து வேறோரு இடத்திற்கு விரைவில்
செல்லும் தன்மையினதும் காரணமாக சர்வதேச அளவில் பரவுவதற்கான சாதகமான காரணங்கள் உள்ளதாக'' ஹேமன்
கூறியுள்ளார். அது ஒரு உலக நோயாக வளர்ந்து விட்டால், மற்றொரு குளிர் காய்ச்சல் நோயாக (Influenza-type)
உருவெடுக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால் அதனுடைய மாறுதல் தொடர்பாக இடைவிடாமல் கண்காணித்தலும்,
புதிய தடுப்பூசிகளும் சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
வைரசின் உலகளவிலான சமுதாயத்தின் இடைதொடர்புகளின் காரணத்தால் பரவுமானால்
(மே 2, Science வெளியீடு குறிப்பிடுவதுபோல்
`தொற்று நோய்கள் தேசிய எல்லைகளை மதிப்பதில்லை) அதைச் சமாளிக்கும் வழிவகைகளும் அதேபோன்ற சக்திகளை
நம்பியிருக்கின்றன. இந்நோயோடு போராடி வெற்றிபெற வேண்டியமை சர்வதேசரீதியாக இணைந்து செயலாற்ற
வேண்டியதில் தங்கியிருக்கையில், அதற்கான ஒவ்வொரு தடையும் நாடுகளிடையே உள்ள போட்டிகளுடனும் குறுகிய சமூக
நலன்களுடனும் தொடர்புற்றுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அறிவியல் வல்லுநர்கள் நோயைப் பற்றித் தெரிந்து கொள்ள
தங்கள் அடிப்படை ஆற்றல், சிறப்புத் தகுதி இருப்பது எல்லாவற்றையும் திரட்டி இணைந்து ஒன்றுபட்ட நோக்கத்தைக்
கொண்டிருந்தனர். உலக சுகாதார நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இம் முயற்சியைப் பற்றி ஹேமன் பின்வருமாறு
விளக்குகிறார் ''இந்த ஆய்வுகூட இயக்குனர்கள் இலாப நோக்கு, நிச்சயமாக கெளரவம், தேசியப் பெருமை இவற்றை
மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து விட்டு, இந்த வியாதியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பொதுக்களத்தில் சேர்த்து,
ஒன்றான இணைந்து செயலாற்றியுள்ளார்கள். மேலும் இப்படிப்பட்ட அரிய செயல் ஒரு குறுகிய காலத்திற்குள் செய்யப்பட்டுள்ளது''.
உலக சுகாதார அமைப்பின் வைரசியலாளரும், உலக சுகாதார அமைப்பின் உலகம் தழுவிய
இணையதள ஒருங்கிணைப்பாளருமான Karl Stohr, ஹேமனுடைய
கருத்துக்களையே எதிரொலிக்கிறார். உலகில் அப்படிப்பட்ட இணைந்து செயலாற்றும் முறைதான் புதிதாக வெளிப்படும்
வியாதிகளைச் சமாளிப்பதற்கான வழி வகையாகும் என்று அவர் தெரிவிக்கிறார்.
இந்த நோயைச் சமாளிக்க உலகந்தழுவிய முயற்சிகளின் முக்கியத்துவம் அவ்வளவு தெளிவாகத்
தெரிந்ததால், பெயரளவு பாராட்டு இதழையாவது பாராளுமன்றத்தின் மூலம் சுகாதார மனிதாபிமான சேவைகளுக்கான
செயலாளரான Tommy Thompson, மற்றும் நோய்த்தடுப்பு
கட்டுப்பாட்டு நிலையத்தின் (CDC) தலைவரான
Dr. Julie Gerberding மூலமும் புஷ் நிர்வாகத்தை
தெரிவிக்க வைத்தது.
தன்னுடைய பாராட்டில் Gerberding
''அமெரிக்க சுகாதாரமும், உலகச் சுகாதாரமும் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ளன என்பதும், நோய்த்தடுப்பு
மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் -CDC உள்நாட்டுப் பணி
நிறைவேற்றப்பட உலக உணர்வும், உள்நாட்டு மற்றும் சர்வதேச நெருங்கிய உறவினால் தான் தொற்றுநோய்களின் தடுப்பை
மேற்கொள்ள முடியும். சார்ஸ் பெரிய சவாலை அளித்துள்ளது. ஆனால் அது எவ்வாறு உலக விஞ்ஞான சமுதாயத்திடம்
தீவிரமான ஒருங்கிணைந்து செயலாற்றுதலை உலகந்தழுவிய தொற்றுநோயைத் தடுக்க தீவிர ஆர்வம் இருந்தது என்பதற்கு
மிகச் சிறந்த உதாரணமாக அமைந்தது'' எனக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் ''சார்ஸ் தொடர்பான அனுபவம் உலகம் முழுவதிலுமான
கண்காணிப்பு, உடனடியாக அது தொடர்பாக அறிவிப்பதும், இவ்வறிவிப்பு போதுமான மிக நவீனமான நோயின்
தன்மையை ஆராயும் பரிசோதனை ஆற்றலோடு இணைக்கப்படுவது ஆகியவற்றை வலுப்படுத்தும் முயற்சிகள் மீண்டும்
வலுவடைகின்றன. பலம் வாய்ந்த, உலகந்தழுவிய பொது சுகாதார முறைகளின் தேவை, சக்திமிகுந்த சுகாதார
சேவை அடிப்படைக் கட்டுமானங்கள், சிறப்பு பயிற்சி, அனுபவம் இவற்றைக் குறுகிய காலத்தினுள் திரட்டி தேசிய எல்லைகளுக்கு
அப்பாலும் வியாதி நடமாட்டங்கள் தொடர்பாக பிரதிபலிக்கும் முறை ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது''
எனக் குறிப்பிட்டார்.
தற்கால நவீன தகவல் தொடர்பு முறைகள், குறிப்பாக வலைத்தளம் (Internet)
ஆற்றிய பணியைப் பற்றியும் குறிப்பிடுதல் முக்கியமானது ஆகும். இதன் மூலம் உலகின் வேறு வேறு பகுதிகளில்
உள்ள விஞ்ஞானிகள் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடிந்தது, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது,
முடிவுகளை அறிந்து கொள்ள முடிந்தது. ஹேமன் இது தொடர்பாக ''ஒருங்கிணைந்து செயலாற்றியது கண்கூடு: விஞ்ஞான
வலைத் தளத்தின் உறுப்பினர்கள் அன்றாடம் உலக சுகாதார நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைபேசி கலந்தாலோசனைகளில்
(Teleconferences) பங்கு பெற்றதோடு,
பாதுகாப்பான தளத்தின் மூலம், electron microscopic
படங்கள், மரபணுத் தொடர் தகவல்கள், கிருமி அடையாளம் காண்தலுக்கும், தன்மையை அறிதலுக்கும்,
பரிசோதனை விளக்கங்கள், முடிவுகள், ஒருங்கிணைப்பு சந்தேகத்திற்குட்பட்ட காரணக்கருவியை அடையாளமிடவும்,
நோய் அறிகுறியை ஆராயும் 3 சோதனைகளின் வளர்ச்சி நிலை, இவை இதுவரை இல்லாத அளவு வேகத்தில் செய்து
முடிக்கக் காரணமாயிற்று'' என்றார்.
பிரிட்டிஷ் கொலம்பியா புற்றுநோய் அமைப்பின் (British
Columbia Cancer Agency) ஸ்ரீவ் ஜோன்ஸ் தங்களுடைய கனேடியக்குழு அவர்கள் கண்டறிந்த
முடிவுகளை, மரபணுத் தொடரை வலைத் தளத்தில் கொடுத்தனர். அதற்கு சில நிமிஷங்களுக்குள், பல இடங்களில்
விஞ்ஞானிகள், அவற்றைப் பெற்று தங்களுடைய சோதனைக் கூடங்களிலும், கணினிகளிலும் சோதனை செய்யவும்
பகுப்பாய்வு செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இந்தச் செய்தித் தொகுப்பு பங்கிடப்பட்டதும் விஞ்ஞானிகள் எவ்வாறு ஒத்துழைக்க
முடிந்தது என்பதும், வலைத் தளத்தின் ஆழ்ந்த ஆக்கபூர்வமான தாக்கத்தைத் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பினதும் மற்றும்
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் CDC
இணைய தளங்களில் வியாதியின் பரவும் நிலை, அதைக் கண்டறிய வேண்டிய சோதனை முறை, பொது மக்களுக்கு
அதைக்கட்டுப்படுத்தும் வகையிலான பரிந்துரைகள் ஆகியவை பற்றிய இறுதியாக கிடைத்த தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இலாப நோக்கு முன்னணியில் உள்ளது
சார்ஸ் ஆராய்ச்சியில் பங்கு பெறும் விஞ்ஞானிகளுடைய சர்வதேச ஒத்துழைப்பு ஆர்வம்,
பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உண்மையானதே. ஆனால், முதலாளித்துவ முறையிலான
சமுதாய அமைப்பில் உள்ள காலங்கடந்துவிட்ட உட்தடைகளான இலாப நோக்கு, தேசங்கள் இடையேயான போட்டி
இவற்றை விஞ்ஞானம் தாண்டி வந்து செயல்பட முடியாது.
உண்மையில் வியாதியின் ஆரம்பத்தில் தேசிய நலன்கள் விஞ்ஞான ஒருங்கிணைப்புச் செயலின்
முன்னேற்றத்தைத் தடுத்துள்ளன. சீனாவில் ஸ்ராலினிச அதிகாரக்குழு மாதக் கணக்கில் நோய் வெடிப்பின் பரப்பைப்
பற்றி மூடிமறைக்கும் முயற்சிகளைச் செய்தது. அது தங்கள் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ பொருளாதாரத்தோடு
இணைக்கும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்துவிடுமோ என்ற கருத்தில் சீன அரசாங்கம் நோய் சீனா முழுவதும் பரவுவதற்கும்,
மற்ற இடங்களில் பரவுவதற்கும் சீன அரசாங்கமே அதிக பொறுப்பேற்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
எங்கெல்லாம் வைரஸ் பரவியதோ, அங்கெல்லாம் பொருளாதார அடிப்படைகள்
கஷ்டங்களுக் உள்ளாகியுள்ளன. ஏனெனில் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டுக் கிடக்க நேரிட்டதில், செலவினங்களின்
குறைவும், சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டில் இதன் பொருளாதார
விளைவுகள் 30 பில்லியன் டொலர்கள் அளவு உயர்ந்திருக்கக் கூடும் என்று கூறுவதுடன் அதன் பெரும்பகுதி ஆசியாவில்
உணரப்பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதன் பாதிப்பு உள் வியாபாரத்திலும் தேசியப் பொருளாதாரத்திலும்
மற்றெதைக் காட்டிலும் கூடுதலாக இருக்கலாம் என்ற எண்ணமே அரசாங்க நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில்
தீர்மானித்திருக்கிறது. உதாரணமாக கனடா, உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட டொரொான்டோ
நகரத்தின் மீதான பயணத்தடுப்பு எச்சரிக்கையைக் கடுமையாக எதிர்த்தது.
அதனுடைய முக்கியமான அச்சம் என்னவென்றால் அப்படிப்பட்ட எச்சரிக்கை சுற்றுலாத்துறைத்
தொழிலைப் பாதிக்கும் என்பது, அதையொட்டி அரசாங்க அதிகாரிகள் தங்களால் முடிந்த அளவு நோயின் தன்மையைப்
பற்றியும், அதனுடைய பாதிப்புத் தன்மையின் முக்கியத்துவத்தையும் குறைத்துப் பேசினர். அதே நேரத்தில் கனேடியர்கள்
மற்ற நாடுகளுக்குப் பரப்பும் தன்மையுடைய தொற்று வியாதி வைரசுகளை எடுத்துக் செல்கிறார்கள் என்ற ஆவணச்
சான்றுகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
மேலும், சிகிச்சை முறை பற்றிய தெளிவான வளர்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில், உடலியல்
தொழில் நுட்ப நிறுவனங்களும், அரசாங்கங்களும் சில பல்கலைக்கழகங்களும் ஏற்கனவே நோயின் அறிகுறிச் சோதனைகள்
முதல் கோரோனா வைரஸ் வரை அதிகார உரிமைப் பத்திரம் பெறுவதற்கு விரைந்து செயலாற்றுகின்றனர்.
கனடாவிலும், ஹாங்கொங்கிலும் பல்கலைக்கழகங்கள் தனித்தனியான அதிகார உரிமைப் பத்திரத்திற்கு
(Patent Applications) விண்ணப்பங்களைக்
கொடுத்துள்ளன. அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையமும் அவ்வாறே செய்துள்ளது. விஞ்ஞான
அடிப்படைச் செய்திகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தான் அவ்வாறு செய்வதாக அமெரிக்காவின்
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.
ஆனால் இவ்வுரிமையைப் பெற நடத்தப்படும் போட்டியைக் காணும்போது பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே,
எச்ஐவியை ஒட்டிய கண்டுபிடிப்பு, மரபணுத் தொடர்பு பற்றிய தன்மைகளுக்குத் தாங்கள் தாம் காரணம் என ஏற்பட்ட
போட்டிதான் நினைவிற்கு வருகின்றது. உரிமை ஊதியங்களும், இலாபங்களும், தடுப்பூசி விற்பனை, நோய் அறிகுறிகளையறிய
சோதனை பற்றியவை, இவற்றிலிருந்து வருபவை இப்பொழுது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஹாங்கொங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நுண்ணோக்கியில் (Microscope)
முதல் முறையாக வைரசைப் பார்த்தனர். வெர்ஸிடெக் லிமிடெட் (Versitech
Ltd) என்னும் பல்கலைக் கழகத்தின் உரிமைப் பத்திர துறையின், துணை மேலாளர் ஹாலிசன் யூ,
பல்கலைக்கழகத்தின் இச்செயல் வைரசின் மீதான உரிமையில் கழகம்தான் முதல் பறவை (புழுக்களை பிடிப்பதில்) எனக்
கருதப்படும் என்கிறார். அப்படிப்பட்ட உரிமை அதற்குக் கிடைக்குமேயானால் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும்
வியாதியிலிருந்து இலாபம் பெற பெருமளவில் முதலீடு செய்யத் தயாராக உள்ளவை, அதிலிருந்து பொருளீட்ட முதல் நிலையில்
அப்பல்கலைக்கழகம் இருக்கும். டாக்டர். மாலிக் பியரிஸ் என்ற ஆராய்ச்சியாளர் இப்பல்கலைக்கழகம் அத்தகைய பத்திரத்திற்கு
உரிமை கொண்டாடுவது, மற்ற பல்கலைக் கழகங்கள் தாம் தான் கண்டுபிடித்தன என்ற உரிமைப்பத்திர தாக்கல் செய்த
பின்னர் தான் என்று கூறுகிறார்.
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா புற்றுநோய் அமைப்பின் விஞ்ஞானிகள்தான் வைரசின்
மரபணுத் தொகுப்பின் தொடரை முதலில் கண்டறிந்தவர்கள். இது அமெரிக்காவில் மரபணுத் தொடரை வியாபார ரீதியாகப்
பயன்படுத்தினால் அதற்கான உரிமை ஊதியம் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளது. சில விஞ்ஞானிகள் இந்த அவசரத்திற்கு
உரிமை பெற உடன்படவில்லை என்பது அவர்களுடைய கெளரவத்தைக் காட்டுகின்றது. மார்கோ மாரா என்ற
கனேடியக் குழுவின் தலைவர் தன்னுடைய பெயரை விண்ணப்படிவத்தில் போடுவதை மறுத்துவிட்டதால் அந்த அமைப்பிற்கு
பணம் ஏதும் கிடைக்காது. அவர், வோல்ஸ்ரீட் ஜேர்னலுக்கு அளித்த பேட்டியில் மரபணுக்களை பத்திர
(Patent) உரிமைக்கு உட்படுத்தக் கூடாது என்று
நம்புவதாகவும் கூறியுள்ளார்.
சில உடலியல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள் சிகிச்சை முறைக்கான பத்திர உரிமை
விண்ணப்பங்களைக் (Patent Application)
கொடுத்துள்ளனர். வெற்றிகரமாகப் பல பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், இந்நிறுவனங்களிடையே உள்ள
நம்பிக்கையை ஒரு நிர்வாகி கூறியுள்ளது போல், லாட்டரி பரிசு கிடைப்பது போல் தங்களுடைய நிறுவனத்தின் உரிமை
ஏற்கப்பட்டால் கிடைக்கும் ஆதாயத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நெருக்கடிக்கு உலக அரசாங்கங்களின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கக் கூடும்? சார்ஸின்
படிப்பினைகள் தெளிவாக உள்ளன. தற்கால உலகம் பரந்த சமுதாயத்தின் வைரஸ் தொற்று நோய்களின் பரவல் அச்சத்தை
எதிர்கொள்ள, சர்வதேச அமைப்பு ஒன்று உலகளாவிய சுகாதார முறையில் வளர்க்கப்பட வேண்டும், அதற்கான தடையற்ற
செலவினங்களும் பொதுச் சுகாதாரக் கண்காணிப்பு முறைகளும் வளர்ந்து வரும் நாடுகளில் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட
வேண்டும். மேலும் புதிய வியாதிகளின் தோன்றுதலுக்குக் காரணமாகவும் பழைய வியாதிகள் பரப்பப்படுவதற்கும் வழமான
இடங்களாக உள்ள ''அபவிருத்தி அடையாத'' தன்மையை இப்பகுதிகளில் குறைப்பதற்கும், சுகாதாரக் கேடுகள் மலிந்த
சூழ்நிலையை அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் தேவை. தற்கால விஞ்ஞான, தொலைத் தொடர்பு வளர்ச்சி
(Telecommunications) இந்த அச்சத்திற்கு எதிராக
போராட தேவையான தொழில் நுட்ப அடிப்படையைத் தருகிறது.
ஆனால் இவை உலக முதலாளித்துவத்தின் போக்குடன் முரண்படும் அடிப்படைக்
கருத்துக்களாகும். தனியார் சொத்துக்கள் மீதான தடைகள் மற்றும் குறிப்பாக பொது சுகாதார கட்டமைப்பு மீதான
தடைகள் அனைத்தையும் தகர்க்க வேண்டும். அமெரிக்க அரசாங்கம் குறிப்பாக தன்னுடைய கொள்கைகளை சர்வதேச
முயற்சிக்கு கீழ்ப்படுத்த விரும்பாது. அது எள்ளி நகையாடும் அப்படிப்பட்ட நிலையான சர்வதேச முயற்சியை ஏற்க
முடியாத தடையென்றே கருதுகிறது. அதிலும் அமெரிக்க ஆட்சியின் ஆளும்தட்டின் பார்வையில் இது தங்களுடைய நலன்களைத்
தாங்களே தேர்ந்தெடுக்கும் பிறருக்கு விட்டுக் கொடுக்காத உரிமையின் மீதான தடையென்று கருதுகின்றது.
ஈராக்கிய சமுதாயத்தின் அடிப்படைக் கட்டுமானமும், குறிப்பாக சுகாதாரப்பணி முறையின்
மீதான முழு அழிப்புச் செயலையும் கொண்டுவந்த ஈராக்கின் மீதான போர் ஒரு படிப்பினையாகும். ஈராக்கிய மக்கள்
இப்பொழுது கொலராவினால் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். தற்போதுள்ள சுகாதார சீர்கேடுகள் இருக்கும்
பட்சத்தில் அதன் பரவுதல் தவிர்க்க முடியாது. அதே நேரம் அமெரிக்கா தன்னுடைய நாட்டிலேயே பொது சுகாதார
நலன்கள் பணியை செலவினக் குறைப்புக்கு உட்படுத்தியுள்ளனர். அமெரிக்க மக்கட் தொகையின் ஒரு சிறிய பகுதியின் நலன்களுக்காக
உலகம் முழுவதும் சமுதாய நலன்களை அழிவிற்குட்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோயினால் தோன்றிய அழிவு நெருக்கடியையும் முதலாளித்துவமுறை அவ்வாறான
சமுதாய நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலையையும் எடுத்துக்காட்டுகின்றது. எய்ட்ஸ் மருந்துகளின் பத்திர உரிமைகளைக்
கொண்ட தனியார் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தோடு இணைந்து, பொதுவான நல்ல மருந்துகள் வளர்ச்சியடையாத
நாடுகளுக்குச் சென்று குறிப்பாக ஆபிரிக்காவில் பேரழிவை தடுக்கும் முயற்சிகளில் பங்கு பெறவிடாமல் தடை செய்கின்றன.
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகள் குறைந்த விலைக்குத் தகுந்த மருந்து இல்லாமல் போவதற்கு, அமெரிக்க
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொள்ளை இலாப முயற்சியில் ஈடுபடுவதே காரணமாகும். இந்நிலை மனித குலத்திற்கெதிரான
பெருங்குற்றமாகும், இவற்றால் தேவையற்ற அகால மரணமும், மில்லியன் கணக்கான மக்களின் கஷ்டங்களும் ஏற்படுகின்றன.
சார்ஸ் ஒரு உலகளாவிய ஆபத்தாக ஏற்படுமானால், இது தனியார் இலாபத்திற்கு
பொது சுகாதாரத்துறையை கீழ்படுத்தப்படும் முறையால் அது அணுகப்பப்படலாமா? சார்ஸ் பரவுதல் எடுத்துக்காட்டும்
அடிப்படையான படிப்பினை, சர்வதேச ஒருங்கிணைப்பு முயற்சியில் வியாதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதன்
சாதகமான பக்கத்தையும், அதனுடைய சிகிச்சை முறைக்காக பத்திர உரிமைக்கு விரைந்து செல்லும் காட்சியில் அதன்
பாதகமான பக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இது உலக மக்களின் தற்கால சமூகத்தின் சுகாதாரம், தனியார் இலாபத்தை
அடிப்படையாக கொண்டுள்ள சமுதாய அமைப்போடு பொருந்தாது.
Top of page
|