WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
A million workers march against pension cuts in France
ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்த்து மில்லியன் தொழிலாளர்கள் பிரான்சில் நடத்திய பேரணி
By Antoine Lerougetel and Stephane Hughes
26 May 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
பிரான்ஸ் முழுவதும் சிராக் - ரஃபரன் அரசாங்கம் முன்மொழிந்த ஓய்வூதியக் குறைப்புகளுக்கு
எதிராக மே 25, 2003 ஞாயிறன்று ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கு மேல் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாரிஸ்
நகரத்தில் மட்டும் 600,000க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்; 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்
மாகாணங்களிலிருந்து 1000- பேருந்துகளிலும் 35- சிறப்பு ரயில் வண்டிகளிலும் வந்து கலந்து கொண்டனர்.
இதனை ஒழுங்கு செய்தோர் பாரிஸ் பகுதிக்கு வெளியேயிருந்து பங்கு பெற விரும்புவோர்
எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டிருந்ததையடுத்து, நாடெங்கிலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படலாயிற்று.
Marsailles, Bordeanx, Toulouse போன்ற
நகரங்களில் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றனர்.
ஜனாதிபதி ஜாக் சிராக்கும் பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃபரனும் அளிக்கும் புதிய 'சீர்திருத்த'
திட்டங்களை ஏற்க மறுத்துவிட்ட அனைத்து தொழிற்சங்கங்களாலும் இந்தப் பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பெற்றது.
இது நாள் வரைக்கும் புதிய திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள ஒரே பெரிய தொழிற்சங்கம், எப்பொழுதும் வலதுசாரிக்கு
அருகில் நிற்கும் சோசலிஸ்டு கட்சியின் தொழிற்சங்கம் CFDT
ஒன்றுதான்.
பாரிசில் உள்ள உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் ''பிரான்சில்
தொழிலாளர்கள் ஓய்வூதியத்தின் மீதான தாக்குதலை எதிர்க்க ஓர் அரசியல் மூலோபாயம்'' என்ற ஆசிரியர்
குழுவின் அறிக்கையின் 7000- பிரதிகளை விநியோகித்தனர்.
மே-13-ம் தேதியே வேலைநிறுத்தத்தை தொடங்கிவிட்ட பல்லாயிரக்கணக்கான கல்வித்
தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்தபோதே, ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
கல்வித் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் ஓய்வூதிய மாற்றத்திட்டத்திற்காக மட்டுமின்றி அரசாங்கத்தின் தேசியக்
கல்வி முறையின் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான போராட்டமாகும். இந்த கல்வித் தொழிலாளர்களின் உறுதியான
மனப்பான்மை காலவரையற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 2500- பள்ளிகளிலிருந்து பல்லாயிரம் வீட்டுத்தயாரிப்பு
அட்டைகள், பாரிசுக்குச் கொண்டு வரப்பட்டதில் எதிரொலித்தது.
தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மற்ற ஊழியர்கள் ஆகியோருடைய
பிரதிநிதிகள் பெரும் அளவில் கலந்து கொண்டனர். இவர்களைத்தவிர தபால்துறை, மருத்துவமனைகள், இரயில்வே அமைப்பு,
சிறைத்துறை, பொது போக்குவரத்து மற்றும் பல பொதுப்பணித் துறைகளிலிருந்தும் பிரதிநிதிகள் கூடியிருந்தனர். தனியார்
தொழில் அமைப்புக்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
SNECMA aerospace company, எரிக்ஸன் தொலைபேசி
Aventis, Pechiney மற்றும்
FNAC போன்றவையும் பங்கு பெற்றன.
அனைத்து வயதுப்பிரிவைச் சார்ந்தவர்களும் இதில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். பள்ளிச்சிறுவர்களிலிருந்து
முதுமை ஓய்வூதியம் பெறுபவர் வரை பல ஆர்ப்பாட்ட அணியினர் தங்கள் குடும்பங்களோடு வந்து கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்களின் கொடிகளும், தோரணங்களும் பெருமளவில் காணப்பட்டதுடன்; கம்யூனிஸ்ட் கட்சியுடன்
பாரம்பரியமாக இணைந்து செயலாற்றும் பெரிய தொழிற்சங்கமான
CGT; இன்னொரு சோசலிசக் கட்சி வழிப்பட்ட தொழிற்சங்கமான போர்ஸ் ஊவ்ரியேர்
(FO); பிரிந்து சென்ற தீவிர தொழிற்சங்கமான
SUD மற்றும் சிறிய தொழிற்சங்கங்களும் பங்குகொண்டன.
இவற்றைத் தவிர எந்த சங்கத்திலும் சேராத தொழிலாளர்களும் ஏராளமான அளவில் பங்கு பெற்று, தாங்களே தயாரித்த
முழக்க அட்டைகளையும் கையிலேந்தி அணிவகுத்து நின்றனர்.
பிரான்சில் "அதி இடது" எனப்படும் பல குழுக்களும் பழைய பன்மை இடது அரசாங்கம்
கடைப்பிடித்துத் தோல்வியுற்ற கொள்கைகளைத் தவிர, புதிதாக எதையும் அறிவிக்கும் நிலையில் இல்லை. பன்மை இடது
அரசாங்கம் அப்பொழுது சோசலிச கட்சியின் தலைவராக இருந்த லியோனல் ஜொஸ்பனால் தலைமை தாங்கப்பட்டிருந்தது.
எல் சி ஆர் அமைப்பின் நான்கு பக்க சிறுநூல் ஜொஸ்பன் அரசாங்கத்தைக் குறைகூறாமல், ஓய்வூதியங்களையும் ஏனைய
சமூக நிலைமைகளையும் பாதுகாக்க சிராக்-ரஃபரன் மைய -- வலதுசாரி அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்ற
போராட்டம் தேவை என்ற எந்தவிதமான கருத்துரைப்பையும் தவிர்த்தது.
லுத் ஊவ்ரியேர் (எல்ஓ) அதனுடைய அண்மைய செய்தித்தாள் தலையங்கத்தில், மக்கள்
கொண்டு வரும் அழுத்தம்தான் அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களை சமாளித்து நிறுத்தும் என்று அறிவித்ததோடு,
"25ம் தேதி தொடங்கி, அதற்குப் பிறகும் இயக்கம் கட்டாயம் வளர வேண்டும்" என்றது. ரஃபரன்-சிராக் அரசாங்கம்
தன்னுடைய திட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடர வேண்டும்; எவ்வாறு யூப்பே தன்னுடைய திட்டத்தைத்
திரும்பப் பெற்றாரோ, அதேபோல்" என்றும் கூறியுள்ளது. மீண்டும் ஜொஸ்பனின் பன்மை இடது அரசாங்கத்தைப் பற்றி
எந்த விமர்சனமும் சொல்லப்படவில்லை.
இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் ஒருவிதமான கவலையற்ற தன்னிறைவுடனும் அரசியல்
தெளிவின்மையும் இருந்த அளவில், ஆர்ப்பாட்டக்காரர்களுடைய நிலையோ அரசாங்கத்துடன் மோதுதலில் எப்படிப்பட்ட
விளைவு ஏற்படுமோ என்ற ஆர்வமும் கூடுதலான அக்கறையும் நிறைந்து காணப்பட்டது. மக்கள் எதிர்ப்பு மட்டுமே
போதும் என்பதில் பெருமளவு ஐயுறவாதம் இருந்தது.
"எங்களுடைய குழந்தைகளுக்காக இங்கே வந்திருக்கிறோம். இதை நிறுத்தினால், எங்களுக்கு
எல்லாம் போய்விடும்" என்று பிலிப் எனும் EDF (Électricité
de France) பணியாளர் கூறினார். அவர் நாற்பது வயது அரம்பநிலையிலும் ஆஞ்சர்ஸ்
(Angers) இலிருந்து தன் மணைவி பேர்னாடெட் (Bernadette)
உடனும் இரு குழந்தைகளுடனும் வந்திருந்தார். அவர் மணைவி கூறுகையில், "ஆம் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக
வந்துள்ளோம். நான் ஓர் இல்லத்தரசி; ஆனால் இந்தப் போராட்டத்தில் எங்கள் குழந்தைகளுக்காக முழுமையாக
என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்" என்றார்.
பிலிப் விவரித்தார்: "ஒவ்வொருவருக்கும் குறிப்பிடத்தக்க அளவாவது ஓய்வூதியம்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இங்கு முதலாளித்துவ முறையையும் பெரு நிதிய முறையையும் எதிர்த்துப்
போராட வந்துள்ளேன்; EDF-ல் உள்ள எங்களுக்கு உடனடியாக
ஓய்வூதிய திட்ட திருத்தம் இல்லை என்றாலும் எங்களையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்று நாங்கள் அறிவோம்.
நான் சிஜிடி இல் உள்ளேன், சிஜிடி எப்பொழுதும் போராட்டங்களில் உள்ளது; நான் அட்டாக்கிலும்
(ATTAC) உறுப்பினராக உள்ளேன்."
"பலடூர் உடைய சீர்திருத்தங்களை சோசலிஸ்டுகள் ரத்துச்செய்யவில்லை என்பது எங்களுக்குத்
தெரியும். பன்மை இடதுகள் உடைய அரசியல் மென்மையான சமரசப் போக்கு உடையது. எனவேதான் ஜொஸ்பன் தேர்தலில்
தோற்றார்."
உலக சோசலிச வலைத் தள நிருபர் அவரிடம் கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கையைப்
பற்றியும் அதன் தலைவர் றொபர்ட் ஹியூவைப் பற்றியும் கேட்டார். அதற்கு அவர் விடையிறுக்கையில், "எந்த வழியில்
செல்ல வேண்டும் என்று ஹியூவிற்குத் தெரியவில்லை. தன்னைத்தானே அவர் தாக்கி அழித்துக் கொண்டுள்ளார். ஜோஸ்பன்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்சிலோனா ஆவணத்தில் தொழிலாளர்களுடைய உழைக்கும் ஆயுளை அதிகப்படுத்திக் கையெழுத்திட்ட
அளவில் இடதுசாரியினர் கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது" என்றார்.
இந்தப் போட்டத்தில் வெற்றி என்பது அவருக்கு எப்படி முக்கியத்துவம் என்று கேட்டதற்கு
பிலிப் கூறினார்: "அரசாங்கத்தின் தீயவிளைவுகளை அளிக்கும் வேலை வாய்ப்புக் கொள்கைகளுக்கு பொதுமக்கள் பொருளிழக்கத்
தேவை இல்லை; உற்பத்தியிலிருந்து கிடைக்கும் வருமானமும் இலாபமும் வரிக்கு உட்படுத்தப்படும், செல்வத்தில் ஒரு
பகுதி சாதாரண மக்களுக்கு செல்லும்."
உலக சோசலிச வலைத் தளம், அரசாங்க எரிபொருள், மின்வசதி நிறுவனங்கள் தனியார்
மயமாக்கப்படலை ஆதரிக்கும் EDF நிர்வாக முன்மொழிவை
சிஜிடி ஆதரித்ததில் அதன் பாத்திரத்தையும், அதில் தொழிலாளர் ஓய்வூதியப் பங்கு செலுத்தும் தொகை 50 சதவீதம்
கூடுதலாகும் என்றும் சுட்டிக்காட்டியது.
அதற்குப் பதில் கூறுகையில் பிலிப், "நாங்கள் தொடக்கத்தில் அது சரிதான் என்று நினைத்தோம்.
நிர்வாகம் எங்களை அம்முடிவிற்கு வருமாறு விரட்டியது. ஆனால் அதைப் பற்றிக் கூடுதலாக சிந்தித்துப் பார்க்கையில்,
திட்டங்கள் தவறு என்று தோன்றிய அளவில் தொழிலாளர்கள் அவற்றிற்கு எதிராக வாக்களித்துவிட்டனர்" என்றார்.
அது தொழிலாளருக்கு விரோதமாக இருந்தபோது, சிஜிடி தொழிலாளர்களை திட்டத்திற்கு
ஆதரவாக வாக்களிக்குமாறு கூறியதை உலக சோசலிச வலைத் தளம், சுட்டிக்காட்டியபோது பிலிப், "என்னால் அதற்கு
விளக்கம் அளிக்க முடியவில்லை" என சொன்னார்.
அதேபோல், சமீபத்திய வேலை நிறுத்தத்தில் இரயில், மற்ற போக்குவரத்துத் துறை
தொழிலாளர்களும் ஆசிரியர்களும் பங்குபெற்றிருப்பினும், பேர்னார்ட் திபோல்ட் (Bernard
Thibault) தலைமையில் சிஜிடி அனைத்துக் கூட்டமைப்பையும் போராட்டத்திற்கு இழுக்க முடியாமல்
தோல்வியுற்றது பற்றியும் அவரால் விளக்கம் அளிக்க முடியவில்லை.
உலக சோசலிச வலைத் தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரிஸ் மாணவர் சிலரையும்
பேட்டி கண்டது. சோர்போனிலுள்ள செசில் (Cécile)
என்ற தத்துவத்துறை மாணவர், ஜோன் பாப்டிஸ்ட் (Jean-Baptiste)
என்னும் IPAG வணிகப் பள்ளியில் நிர்வாகம் பயிலும் மாணவர்
இருவரும் தாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்லர் என்றும், ஆனால் கம்யூனிச சோசலிசக் கட்சிகளில்
மற்றும் அட்டாக் எனும் பூகோளமய எதிர்ப்பு இயக்கத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்தப் பேரணியில் கலந்துகொள்ள அவர்களை ஊக்கியது எது என்று கேட்டதற்கு செசில்:
"இறுதியில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியாக" என பதில் சொன்னார்.
ஜோன் பாப்டிஸ்ட்டும் சேர்ந்து கூறியதாவது: "ரஃபரன், தெரு நாட்டை ஆள
முடியாது" என்று கூறிய சொற்றொடர் என்னை ஈர்த்து வரவழைத்துள்ளது, நாங்கள் ஓய்வூதியத்திட்டத்தை திரும்பப்
பெறவேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளோம். மக்கள், 85 சதவீத சட்டரீதியான குறைந்த அளவு ஊதியத்தில்
(SMIC-TM)
மக்கள் வாழ்வதற்குக் கொள்ள வேண்டும் என்ற ஓய்வுத் திட்டம் எங்களுக்கு தேவை இல்லை. மருத்துவமனைப்
பணியாளரைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஓய்வுத் தொகை கணக்கிடும் முறையைப் பற்றி சிந்தித்து வருகிறேன் "
"அரசாங்கத்தை தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்க வைக்க முடியும் என்று நீங்கள்
நினைக்கிறீர்கள். ஆனால் இதைத் தொடர்ந்து வரவிருப்பதை (திட்டமிடப்பட்ட சுகாதார சேவை சீர்திருத்தம் மற்றும்
நோய்க்கான நல சேவைகள்) பற்றி நினைத்தால், அது எளிதாக இருக்கும் என்பது எனக்கு வியப்பைத் தருகிறது."
செசில் மேலும் கூறியதாவது:" முழுப் பிரச்சினையையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்து
பேச்சுவார்த்தைகள் மூலம் ஆராய்ந்து ஐரோப்பிய அளவில் ஏற்கப்படக் கூடியதாக முடிவுக்கு வரவேண்டும்."
தொடர்ந்து ஜோன் பாப்டிஸ்ட் கூறியதாவது: "நாங்கள் சீர்திருத்தவாதிகள். ஐரோப்பிய
மட்டத்தில் இந்த ஓய்வூதியத்திட்டங்கள், சமூக உரிமைகள் ஆகிய பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்றே நாங்கள்
நம்புகிறோம்."
உலக சோசலிச வலைத் தள நிருபர், பெரு நிறுவனங்கள் தங்கள் இலாப விகிதத்தைக்
குறைத்துக்கொள்ள முன்வருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறதா என்று கேட்டதற்கு -- அதிலும்
ஐரோப்பா முழுவதும் சமூக நல, தொழிலாளர் நல வகைச் செலவினங்களைக் குறைக்கும் போக்கு உள்ள நிலையில்,
செசில் பதில் கூறியதாவது: "ஜொஸ்பனும் பன்மை இடதும் சந்தைப் பொருளாதாரத்தின் அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்துத்
தடுக்க முடியவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் சோசலிச கட்சியின் இடதுசாரியிலிருந்து ஓரு உண்மையான
இடதுசாரி மாற்று முறை ஏற்படுத்தக் கூடும் என்றே நாங்கள் நம்புகிறோம்."
ஏர்வ் (Hervé) என்ற ஒரு
சிஜிடி உறுப்பினர், நோர்மண்டி பிரந்திய சபையின் சாலைப் பணிகள் துறையில் வேலை பார்ப்பவர், அவர் உலக சோசலிச
வலைத் தளத்திடம் கூறியதாவது: "1945 லிருந்து சிறிது சிறிதாக வளர்த்துக் கட்டப்பட்ட ஓய்வூதியத்திட்டம் தகர்க்கப்படுமோ
என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது." அவருடைய கல்லூரி நண்பர் ஆல்பர்ட் தெரிவித்தார். "இந்த மைய பரவலாக்கல் மூலம்
அவர்கள் பொதுப் பணிகளை அடித்து நொறுக்கத் திட்டமிட்டுள்ளனர்."
ஏர்வ் மேலும் கூறியதாவது: "இந்தப் போராட்டம் அதிக அளவு பரந்து விரிய
வேண்டும், அரசாங்கத்தைப் பின்புறம் தள்ள வேண்டும் என்றால். ஜீன் மாதத்தில்தான் முக்கியத்துவம் உள்ளது. இரயில்வே
தொழிலாளர்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் களத்தில் இறங்கி விட்டால், பலூன் மேலே போகும். நாம்
அரசாங்கம், தனியார் துறை, பொதுத்துறை ஊழியர்களைப் பிரிக்காமல் ஒற்றுமையை உடைத்துவிடாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். மே13ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இரயில் பணியாளர்கள் சோராமற் போனது
வெட்ககரமானது."
"என்னைப் பொறுத்தவரையில், போராட்ட வெற்றி முற்றிலும் மாறுபட்ட அடிப்படையில்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டால்தான் முடியும். பெரு நிறுவனங்கள் இலாபத்தில் வரி விதிக்கப்பட வேண்டும்.
ஐரோப்பிய அளவில் தேவையானால் உலக வணிக அமைப்பின் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்."
ஒரு குறிப்பிட்ட தேச அடிப்படையில் இதற்கு ஒரு தீர்வு கிடையாது. அரசாங்கத்தை ராஜினாமா
செய்யுமாறு நாம் செய்ய முடிந்தால், சோசலிஸ்டுகள் (சோசலிச கட்சி) வேறுவிதமாக செயல்பட்டு விடப் போவதில்லை.
ஐரோப்பாவில் பல நாடுகளில் சோசலிஸ்டுகள் ஆட்சியில் உள்ளனர். ஆனாலும் அவர்கள் ஓய்வூதிய திட்ட சிக்கலுக்கு
முடிவுகாண ஒன்றும் செய்துவிடவில்லை. ஜொஸ்பன் ஆட்சியில் இருந்த பொழுதுதான் பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில்
பங்குபற்றியிருந்தது. இதுபற்றி ஏதேனும் அப்பொழுது செய்திருக்க முடியும். ஆயினும் அவர் செய்யவில்லை."
"ஒரு சர்வதேச இயக்கம் அமைப்பதற்கு ஒரு முயற்சி தேவை. நான் அது போன்ற
அரசியல் இயக்கத்தை எதிர்பார்த்துள்ளேன்."
See Also :
பிரான்சில் தொழிலாளர்களின் ஓய்வுதியங்கள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராட ஒரு அரசியல் மூலோபாயம்
பிரான்ஸ்:
ஓய்வூதிய உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு சர்வதேச இயக்கம் தேவை
Top of page
|