World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா Belgium: government seeks to block war crimes case against US General Tommy Franks பெல்ஜியம்: அமெரிக்க ஜெனரல் ரொமி பிராங்ஸ் இற்கு எதிரான போர்க் குற்ற வழக்கை தடுத்துவிட அரசாங்கத்தின் முயற்சி By Richard Tyler அமெரிக்க ஜெனரல் ரொமி பிராங்க்ஸிற்கு (Tommy Franks) எதிரான போர்க்குற்றங்கள் வழக்கில், பெல்ஜிய அரசாங்கம் தலையீடு செய்து தடுக்க உள்ளது. மே 14 அன்று கூட்டாட்சி அரசு வக்கீல் அலுவலகத்தில் பிரஸ்ஸல்ஸில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, ஜெனரல் பிராங்க்ஸ், ஈராக்கின் மீதான அமெரிக்கப் போரின் பொழுது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறுகிறது. 19 மனுதாரர்களுக்காக வழக்கை நடத்தும் ஜான் பெர்மன் (Jan Fermon) உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கூறியதாவது: `குற்றச்சாட்டுத் தொகுப்புகளில் ஒன்று, அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூட்டையும், குண்டு வீசுதலையும் பொது மக்களின் மீது இலக்காகக் கொண்டிருந்தனர். நாம் இங்கே பேசுவது பொதுவாக "இரண்டாம் தர பாதிப்புக்கள்" எனப்படும் உடனிகழ்வான இழப்பு பற்றி அல்ல. இது பொதுவாக இராணுவ இலக்கிற்கு வெகு அருகில் இருந்தவர்களைப் பற்றி அல்ல. இது வேண்டுமென்றே திட்டமிட்டு மக்கள் மீது நடத்தப் பெறும் தாக்குதல்கள்: பொதுவாகக் கூறப்படும் உடன் நிகழ்வான இழப்பு எனும் கருத்திலிருந்து வேறுபட்டது. "மற்றொரு குற்றச்சாட்டு அமெரிக்கப் படைகள், செய்தி ஊடகத்தைத் தாக்கின என்பது ஆகும், குறிப்பாக அல் ஜஸீரா அலுவலகங்களைத் தாக்கியது. இந்த வழக்கு தெளிவாக இத்தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சில தாக்குதல்கள் பத்திரிகை அலுவலகங்கள் மீதும் பத்திரிகையாளர்கள் தங்கி இருந்த பாலஸ்தீன தங்கும் விடுதி மீதும் நடத்தப்பட்டன. இது செய்தி ஊடகங்கள் மீது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் ஆகும். அல் ஜஸீரா அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் டாங்க் பஸ்டர் விமானத்தால் செய்யப்பட்டவை: அது திட்டமிடப்பட்டு, குறிப்பாக அல் ஜஸீரா அலுவலகங்கள் மீது நடத்தப் பெற்றவை. (ஜான் பெர்மனுடனான பேட்டியைக் காணவும்). 2001ம் ஆண்டு ருவாண்டா போர்க்குற்றங்கள் வழக்கிலும் பெல்ஜிய "உலகளாவிய அதிகார வரம்பு சட்டத்தின்" ("universal jurisdiction") கீழ் வெற்றி பெற்ற ஒரே விசாரணையில் தொடர்பு கொண்டிருந்த பெர்மன், இராணுவத் தலைவர்கள் போர்க்குற்றங்களைத் தடுக்க கடமைப்பட்டவர்கள் என்று தெரிவித்தார். கமாண்டர்-இன்-சீப் என்ற முறையில் ஜெனரல் பிராங்க்ஸ் தன்னுடைய வீரர்கள் நடந்து கொள்ளும் முறைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று பெர்மன் கூறினார். பிராங்க்ஸிற்கு எதிரான வழக்கில் ஐந்து குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் உள்ளன. வேண்டுமென்றே மக்கள் குடியிருப்புப் பகுதியில் குண்டு வீச்சு நடத்தியது, செய்தி ஊடகத்தின் மீது (குறிப்பாக அல்ஜஸீரா பத்திரிகையாளர் ஒருவரைக் கொன்றது) தாக்குதல்கள் நடத்தியது தொகுப்பு (கிளஸ்டர்) குண்டுகளைக் கொண்டு சாதாரண மக்களைத் தாக்கியது, மருத்துவப் பணியாளர்கள், அதன் கட்டுமானம் இவற்றைக் குறிவைத்துத் தாக்கியது, மற்றும் கொள்ளையடித்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என்பனவாகும். வழக்கை விரைவிலேயே தகர்த்து விடும் முயற்சியாக, பெல்ஜியப் பிரதம மந்திரி Guy Verhof stadt யுடைய சார்புப் பேச்சாளர், இந்த வாரம் சிறப்பு அமைச்சர் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். "புதிய உலகளாவிய அதிகார வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜெனரல் பிராங்ஸிற்கு எதிரான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர அக் கூட்டம் வழிமுறையைக் காண எம்மை அனுமதிக்கும்." 1993ம் ஆண்டு முதன் முதலில் உலகளாவிய அதிகார வரம்புச் சட்டத்தை இயற்றியிருந்தது. இது பெல்ஜிய நீதிமன்றங்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும், பெல்ஜியன் குடிமக்கள் பாதிக்கப்படவில்லையென்றாலும், வழக்கை விசாரணை செய்யும் உரிமையை அளித்திருந்தது. பல பெரிய மனிதர்கள் தொடர்புடைய வழக்குகள் இந்த உலக அளவிலான அதிகார வரம்புச் சட்டத்தின் கீழ் பதிவாயின: மிகச் சமீபத்தில் 1991ம் ஆண்டு முதலாம் வளைகுடாப் போரில் மூத்த ஜோர்ஜ் புஷ் மற்றும் கொலின் பவல் ஆகியோரின் பங்கு பற்றி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஏப்ரல் 2003ல் பெல்ஜிய அரசாங்கம் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து சட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டது. பாதிக்கப்பட்டவர், மனுதாரர், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆகியோர் யாருமே பெல்ஜிய நாட்டைச் சார்ந்தவரில்லை என்றால் ஒரு வழக்கைத் தொடுப்பது கஷ்டம் என்று திருத்தப்பட்ட சட்டம் கூறுகிறது. இப்பொழுதுள்ளபடி, நிர்வாகத்துறை, நீதித்துறை தனித்தனியே இயங்க வேண்டும் என்று ஜனநாயக நெறிக்கு மாறாக புதிய சட்டம் பெல்ஜியம் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு வேறோரு அதிகார வரம்பிற்கு ஒரு வழக்கை மாற்றும் அதிகாரத்தை-- குற்றஞ்சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர் இவர்களுடைய நாடுகளுக்கோ அல்லது ஒரு பன்னாட்டு நீதிமன்றத்திற்கோ மாற்றும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஜான் பெர்மன் 17 ஈராக்கியர், 2 ஜோர்டானியர் சார்பில், ஜெனரல் பிராங்க்ஸ் மீது போர் குற்றங்களைச் சுமத்தி ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். Brussels Medicine for the Third World -என்ற அமைப்பின் உறுப்பினர்கள் சேகரித்திருந்த சான்றுகளின்படி இவ்வழக்குப் போடப்பட்டுள்ளது. மார்ச் 16லிருந்து 22 வரை இவ்வுறுப்பினர்கள் பாக்தாதில் இருந்தனர். நேரடியாகப் பார்த்தவர்கள், தாக்குதலால் கொல்லப்பட்ட மக்களின் உறவினர்கள் இவர்களிடமிருந்த வீடியோ சாதனத்தைப் பயன்படுத்தி வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டாக்டர் கோலேட் மெளலார்ட் (Dr Colette Moulaert) மற்றும் டாக்டர் ஜிர்ட் வான் மூர்ட்டர் (Dr Geert Van Moorter, இருவருமே கூட்டணி அமைப்புகள் திட்டமிட்டு, மருத்துவ வசதிகளையும் ஆம்புலன்ஸ் வண்டிகளையும், தாக்கியதாகக் கூறியுள்ளனர். Radio Free Liberty க்குப் பெர்மன் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினரும், அவர்களோடு இணைந்து பணியாற்றிய மருத்துவப்பணியாளர்களாலும், எவரையாவது இந்தச் சாதரண மக்கள் மீதான கொடூரத் தாக்குதலுக்கு பொறுப்புடையவராக ஆக்க முடியாதா, என்று மீண்டும் மீண்டும் இந்த இரு டாக்டர்களும் கேட்கப்பட்டனர். எனவே தான் இறுதியாக என்னை இந்த டாக்டர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் சுதந்திரமான ஒரு விசாரணை நடத்த ஏதேனும் வாய்ப்பு உண்டா எனக் கேட்ட அளவில், இந்த வழக்கு அந்த முதல் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பின்னர் சுதந்திரமான விசாரணை நடத்த, விசாரணையின் மூலம் வழக்கின் முடிவில் பொறுப்புக்களை ஏற்படுத்த வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்குமா என்பதைக் காண வேண்டும்."இந்த சட்ட முறை வழக்கு உடனடியாக அட்லாண்டிக் கரை கடந்து ஒர் அரசியல் புயலை உருவாக்கிய அளவில், அமெரிக்க நிர்வாகத்தின் அதிகாரிகளும், மூத்த இராணுவப் பெரும் புள்ளிகளும், பெல்ஜிய அரசாங்கத்தை, "ராஜிய விளைவுளைச்" சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தி வழக்கைத் தகர்க்க ஏற்பாடு செய்துள்ளதாக பிபிசியின் வாஷிங்டனின் நிருபரான ஜஸ்டின் வெப் கூறியுள்ளார். ப்ரஸல்ஸின் தின இதழான Le Soir, அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டின் சார்பு பேச்சாளர் பிலிப் ரீக்கர், "பெல்ஜிய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்யும் என உறுதியாய் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக " கூறியுள்ளார். கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் ரிச்சர்ட் பி. மைர்ஸ் கூறியதாவது, "அமெரிக்க அரசாங்கத்தால் இது ஒரு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நாம் எங்கு கூடியுள்ளோமோ அங்கு அதன் தாக்கம் தெளிவாக இருக்கும்" அதாவது பெல்ஜியம், நேட்டோ கூட்டங்களுக்கு செல்லக் கூடாத இடமாக ஆகிவிடும் என்ற குறிப்பைத் தெரிவித்தார். வாஷிங்டனின் எதிரொலிக்கும் விதமாக பெல்ஜியத்தின் பிரதம மந்திரி Verhofstadt மற்றும் வெளியுறவு அமைச்சர் Louis Michael இருவரும் இவ்வழக்கை உலகளாவிய அதிகார வரம்புச் சட்டத்தின் "அரசியல் துஷ்பிரயோகம்" என அழைத்துள்ளனர். பெர்மன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது, போர் அல்லது சர்வதேசப் பயங்கரவாதம் தொடர்பான அனைத்துப் பன்னாட்டு நிகழ்வுகளும் அரசியல் சார்ந்தவைதான். ஒரு வழியில், சிக்கல் என்னவென்றால் ஏதோ ஒரு விதத்தில் நடந்ததற்கு யாரேனும் பொறுப்பேற்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அது தான் வழக்கின் முக்கிய நோக்கம்." இந்த வழக்கு 12க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பன்னாட்டுச் சட்டத்தை மீறியுள்ளவையாக மேற்கோளிடுகிறது. அவற்றுள் அடங்குபவை வருமாறு: ஆயுதமற்ற சாதாரண மக்கள் மீது வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு செயல்கள். ஒரு மனுதாரர் ஏப்ரல் 15ம் தேதி ரொட்டி வாங்க முயன்றபோது தங்களை அமெரிக்க வீரர்கள் இலக்கு வைத்ததாகக் குற்றம் சாட்டினார். செய்தி ஊடகத்தின் உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள், குறிப்பாக அல் ஜஸிரா அலுவலகங்களில் தாக்குதல் நடத்தி ஏப்ரல் 8ம் தேதி செய்தியாளர் டாரிக் அயூப்பைக் கொன்றது. கிளஸ்டர் குண்டு வீச்சை சிவிலியன் பகுதிகளில் பயன்படுத்தியது. சில மனுதாரர்கள் குழந்தைகள் தெருவில் சிதறிக் கிடந்த வெடி மருந்துப் பொருளால் காயமுற்றதாகக் கூறுகின்றனர். மருத்துவ பணியாளர்களையும், நிறுவனங்களையும் தாக்கியது. வழக்கில் மூன்று தனித்தனி ஈராக்கிய ஆம்புலன்ஸ் மீதான தாக்குதல்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு மனுதாரர் அமெரிக்கப் படை ஒரு ஆம்புலன்ஸ் காயமுற்றோரை வேறு ஒன்றுக்கு மாற்றிக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்த (ஏப்ரல் 9, அல்கிண்டியில்) தாக்குதலைக் குறிப்பிடுகிறது. மற்றொன்று இரு கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு ஏப்ரல் 7 அன்று ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்ட பொழுது அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கூறுகிறது. மூன்றாவது ஆம்புலன்ஸ் தாக்குதல் ஏப்ரல் 9 அன்று அது அல்லிகாவின் மருத்துவமனையில் நுழைந்த போது நிகழ்ந்தது. மக்களுடைய உடைமைகளையும், பண்பாட்டு நிறுவனங்களையும் சூறையாடவிட்டமை. வழக்கு, அமெரிக்க டாங்கிகள் அவ்வட்டாரத்தில் நெருக்கமாக கண்காணிப்பு செய்து கொண்டிருந்தபோதிலும், Al Beit Al Iraqui Cultural Center பாக்தாதில் கொள்ளையடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. பெல்ஜிய கூட்டரசாங்க வழக்குத்தொடுப்பு அலுவலகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் விடை கூறும் அளவிற்கு வழக்குள்ளதா எனத் தீர்மானிக்க வேண்டும். ஆனால் பெடரல் பிராசிகியூட்டர் Serge Drammertz மே 16, வெள்ளியன்றே, பெல்ஜியத்தில் வழக்கு நடைபெறாது என்று கூறிவிட்டார். வாஷிங்டன் பெல்ஜியத்தின் மீது மிக அதிக அழுத்தத்தைக் கொடுத்து எந்த அமெரிக்க இராணுவத் தளபதியும் நீதிமன்றங்களில் போர்க்குற்ற வழக்குகளைச் சந்திக்கக் கூடாது என்றுதெளிவுறுத்திவிட்டது. அது அத்தகைய வழக்குகள் தற்போது விசாரிக்கக் கூடிய ஒரே இடமான, ஹேகிலுள்ள பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தை அமெரிக்கா புறக்கணிக்க வாய்ப்பு வழங்கி உள்ளது. |