WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மருத்துவமும் சுகாதாரமும்
The science and sociology of SARSPart 1: Viruses and the
nature of present outbreak
சார்ஸ் தொடர்பான அறிவியலும், சமூகவியல் தன்மையும்
பகுதி-1: வைரசுக்களும் தற்போதைய பரவலின் தன்மையும்
By Joseph Kay
12 May 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
சார்ஸ் எனப்படும் (SARS -Severe
acute respiratory syndrome) கடுமையான தீவிரமான மூச்சு திணறல் நோய் அறிகுறிக்கு காரணமான
புதிய வைரசின் பரவல் பல மருத்துவ, அறிவியல், சமூக பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள்
குழு மேற்கொண்ட விரைவான சமாளிப்பு முயற்சியும், கூட்டுச் செயற்பாட்டினாலும் இவ் வைரசு சற்றே
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுளது. ஆனால் உலகம் முழுவதும் 7000 பேரில் அது தொற்றி உள்ளதுடன் 500
பேரின் உயிரையும் காவு கொண்டு விட்டது. சீனாவில் மிகப் பெரிய சுகாதாரக் கேட்டை தோற்றுவித்துள்ளது. இப்பொழுதும்
சர்வதேச தொற்று நோயாக அதிகரித்து பேரழிவு விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது இரண்டு பகுதிகளான கட்டுரையில் முதலாவது ஆகும். சார்ஸின் அறிவியல் சமூகவியல்
தன்மைகளைப் பற்றி ஆராய உள்ளது. இதில் தற்போதைய தொற்றுதல் பற்றி அறிந்து கொள்ளத் தேவையான சில
விஞ்ஞான, வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறோம். இரண்டாவது கட்டுரையில் சார்ஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியின்
சமூக முக்கியத்துவத்தை ஆராய்ந்து, அதனுடைய காரணத்தைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
வைரசும் வைரசியலும்
சார்ஸ் இப்பொழுது வைரசுப்பரவலால் ஏற்படும் தொற்று நோய் என்றும்,
விலங்கினத்திலிருந்து இது வந்திருக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது. சார்ஸின் தனிப்பட்ட தன்மையை அறிந்து கொள்ள,
முதலில் எவ்வாறு வைரசுக்கள் பரவுகின்றன என்றும், முன்பு அவற்றின் பரவல் தடுப்பதற்கு எப்படிப்பட்ட முயற்சிகள் கையாளப்பட்டது
என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
வைரசுக்கள் எளிமையான கட்டமைப்பை உடையவை. ஒரு மரபியல் பொருளை- டிஎன்ஏ
(DNA)
அல்லது ஆர்என்ஏ (RNA)
கொண்டுள்ளவை. இதனை சுற்றி ஒரு விதப் புரதம் மற்றும் சில சமயம் ஒரு கூடுதலான சவ்வையும் கொண்டது. இப்பொழுதும்
கூட வைரசுக்கள் உயிருள்ளவையா அல்லது உயிரற்ற பொருளா என்ற வகைப்படுத்தல் தொடர்பாக விடை காணா வினா
உண்டு. E. coli போன்ற பாக்டீரியாவிற்கு
மாறுபட்ட அளவிலும் மற்றும் தைபோய்டு, எலும்புருக்கி நோய் மற்றும் பல வியாதிகளை ஏற்படுத்தும் அது போன்ற,
வேறு விதமான நுண்ணுயிர்கள் போலல்லாது வைரசுக்கள் கலங்களை கொண்டிராததுடன் மற்றும் ஒரு உயிரை தக்க வைத்துக்
கொள்ளத் தேவையான இரசாயனக் கூறுபாடுகள் அவற்றிடம் கிடையாது. இதனால் அவை ஏதாவது ஒரு உயிரமைப்பு
இல்லாது தனிப்பட்ட அளவில் பெருகிவிட முடியாது.(1)
எனவே அடிப்படையில் வைரசுக்கள் தன்மையில் ஒட்டுண்ணித் தன்மையானவை
(parasites).
அவை இனப்பெருக்கத்திற்கு இடமளிக்கும் தாவர, விலங்கின கலங்களை (நுண்ணுயிரை) தாக்கி, ஆக்கிரமித்து ஈடுபடவேண்டும்.
கலங்களின் (நுண்ணுயிரின்) உட்செயல்பாடுகளைப் பயன்படுத்தி, மரபணுப் பொருட்களைத் பயன்படுத்தி பெருகுவதால் கூடுதலான
வைரசுக்களை உற்பத்தி செய்து அதனால் மேலும் கூடுதலான கலங்களை தாக்குகின்றன. இந்த வழிமுறையில் அவை உயிரணுத்
தொகுப்பைத் (host organism) தாக்கிக் கொன்று
அல்லது காயப்படுத்திவிடும்: அதையொட்டி சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அதைக் கொண்ட உயிரமைப்பிற்கு
விளைவுகள் நேரும். ஒரு ஜலதோஷம் என்பது கூட, வைரசுக்களின் தொற்றுதல் ஆகும். தொற்றின் தொடர்புடைய அறிகுறிகளான
தொண்டைப் புண்களோ, தசைவலிகளோ வைரசுக்கள் உடலின் பல பகுதிகளிலும் உள்ள கலங்களை படையெடுத்துத்
தாக்குவதால் ஏற்படுகின்றன.
ஒரு கலத்தினுள் வைரசு தொற்றிக் கொள்ள வேண்டுமென்றால், கலத்தின் பாதுகாப்புப்
படலம் (சவ்வு) மூலம் நுழைய வேண்டும் -ஒவ்வொரு வகையான கலங்களும் தனித்தன்மை பெற்றது. சுருங்கக் கூறின்,
வைரசு இந்தச் செயலை செய்து முடிக்க தன்னை வெளிப்புறத்தில் புரதம் போல் மறைத்து காட்டிக்கொள்வதால் அது
கலத்தினாலும் அதன் உட்பொருட்களாலும் அக்கலத்தின் சவ்வாக ஏற்கப்படுகின்றன. இவ்வாறு வெவ்வேறு வைரசுக்கள்
பல வேறுபட்ட கலங்களை (உயிரணுக்களை) பலவிதமான புரதங்கள் போல நடித்துத் தாக்குகின்றன. எபோலா வைரஸ்
(Ebola virus) இரத்தக் குழாய்களின் உள்மென்சவ்வினை
உருவாக்கும் கலங்களை தாக்குவதால், விபரீதமான விளைவான இரத்தப்போக்கை ஏற்படுத்திச் சில சமயம் உயிரிழப்பைக்
கூட ஏற்படுத்தி விடுகின்றன.
வைரசுக்கள் வேறொன்றைச் சாராமல் தனித்து உயிர்த்திருக்க முடியாததால்,
பொதுவாக அவை நேரடித் தொடர்பு மூலமாகவோ அல்லது வைரசு அடங்கிய உடலின் திரவப்பொருளின் பரிமாற்றம்
மூலம் உட்புகுந்துவிடுகின்றன. உதாரணமாக இருமும் போது வெளிப்படும் திரவக்கசிவுகள், வைரசுகளை வெளிப்படுத்தி
அவற்றின் வாயிலாக சின்னம்மை, தட்டம்மை மற்றும் சார்ஸ் போன்றவற்றைப் பரப்பிவிட முடியும்: மலத்துகள்களால்
அசுத்தப்படுத்தப்பட்ட தண்ணீர் ரோடாக் கிருமிகளைப் பரப்பி ஏழைகளையும், சுகாதார வசதிக்குறைவான பகுதிகளையும்
பெரிய அளவில் பாதிக்கும். பாலியல் தொடர்பு, இரத்த மாற்று இவற்றின் மூலம் எச்ஐவியைப் (Human
immunodeficiency virus- HIV) பரப்பும்.
மனித உடல் வைரசுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பு முறையைக் (Immune
system) கொண்டுள்ளது. தாக்கும் வைரசுக்கு எதிரடி கொடுக்க நினைக்கும் தடுப்பு முறையில் முதலில்
அது அந்நியப்பொருள் என்பதை உணர்ந்திடல் வேண்டும். இந்த அடையாளக் கண்டுபிடிப்பு, ஒரு சில வைரசுகளால்
ஏற்கனவே அவற்றால் பாதிப்பிற்குட்பட்டிருந்தால் தெரிய வரும். எனவே தடுப்பூசிகள் மூலம் சிறிய அளவில் அல்லது
குறைந்த ஆற்றல் உடைய வைரசின் பிரிவை உட்செலுத்துவதன் மூலம் உடலில் தடுப்புச் சக்தி பெருகி எதிர்வரும்
தொற்றையும் எதிர்த்து நிற்கும்.
அவற்றின் சிறப்புத்தன்மை என்பது வைரசுகள் பொதுவாக குறிப்பிட்ட சாரும் உயிர்
வகைக்கு நன்றியுணர்வோடு இருக்கும். ஆனால் சில நேரங்களில் ஒரு வைரசு ஒரு சார்பினத்திலிருந்து வேறொன்றுக்கு
மாறக் கூடும். எச்ஐவி இவ்வாறு தான் மனித இனமில்லாத வேறு உயிரினத்திலிருந்து வந்திருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.
1993ம் ஆண்டு அமெரிக்காவில் தோன்றி, தொற்று நோயை ஏற்படுத்திய
Hanta வைரசு
deer mice (ஒரு வகை எலி) இருந்து வந்ததாகக்
கூறப்படுகிறது. மனிதர்கள் இயற்கையோடு தங்கள் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவில், அப்படிப்பட்ட பரிமாற்றங்கள்,
அதிலும் சுகாதாரக் குறைவு, மக்கட்தொகை மிகுந்த இடங்கள், ஆகியவற்றால் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
தற்காலத்திய வைரஸ் இயலும் -சொல்லப்போனால் வைரசுகளைப் பற்றிய புரிந்து கொள்ளுதலும்-
உயிரணு மற்றும் உடலில் உள்ள மற்ற தன்மைகளிலிருந்து -தனித்து ஆராயும் பாங்கும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில்
வளர்ச்சியுற்றது. அவை மிகச் சிறியதாக இருந்ததால், 1938ல் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின்
(Electron Microscope) உதவியால் தான் நேரடியாக
ஆழ்ந்து காணமுடிந்தது. அந்த கண்டுப்பிடிப்பே 1920களில் கதிரியக்க பெளதீகவியல் (Quantum
physics) வளர்ச்சிக்குப் பின்னர் தான் நிகழ்ந்தது. 1950களில்
DNA வடிவமைப்பு தெளிவானவுடன், அறிவியல் வல்லுநர்கள் வைரசுகளின்
கட்டமைப்பை புரிந்து கொள்ளத் தொடங்கியவுடன் அவை எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதையும்
விளங்கிக்கொண்டனர்.
இந்தப் பெரிய அளவிலான அறிவியல் முன்னேற்றங்கள் விஷத்தொற்று நோய்களை அடக்குவதில்
மனிதர்களுடைய திறமையைப் பெரிதும் வலுப்படுத்தின. உதாரணமாக, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும், சாதரணமாகக்
காணப்பட்ட விஷக்காய்ச்சலை ஏற்படுத்திய influenza வைரஸிற்கு
எதிரான போராட்டத்தில் இதைக்காணலாம். காச்சல் (Flu -ப்ளு)
தோன்றல்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றன. பெருமளவிலான தொற்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும்.
வருடந்தோறும் திடீரென ஏற்படும் ப்ளு தொற்று, பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம். ஆனால்
பெரும் பரவலான தொற்றாக ப்ளு வெளிப்படும்போது, அடிக்கடி அவ்வாறு நிகழவில்லையென்றாலும், கடும்
விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த ப்ளு தோன்றல்கள் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. ஏனெனில் இன்ப்ளுயன்ஸா வைரசு
(Influenza virus) மாறுபட்ட வடிவில் தொடர்ச்சியாகத்
தோன்றிச் செயல்படுகிறது. அதன் விளைவாக ஒரு தாக்குதலுக்குப் பின்னர் உடலில் ஏற்படும் தடுப்புச் சக்தியை அது
ஒதுக்கிவிட்டு வேறு வழியாக மீண்டும் தாக்குகின்றது. 1918ல் முதல் உலகப் போருக்குப் பின்னர் ஸ்பானிஷ் ப்ளு (Spanish
flu) என்று அழைக்கப்பட்ட பெரும் பரவலான தொற்று ஒன்று ஏற்பட்டது. உலகின் மக்கட் தொகையில்
பாதி பேர் அதனால் பாதிக்கப்பட்டனர், தொற்றுக்குட்பட்ட இருபது பேரில் ஒருவர் உயிரிழந்தார். அதாவது கிட்டத்தட்ட
25 மில்லியன் மக்கள். 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆசியன் ப்ளு (Asian
flu) மற்றும் 1968ம் ஆண்டு ஏற்பட்ட ஹொங்காங் ப்ளு (Hong
Kong flu) ஆகியவை மொத்தமாக 4.5 மில்லியன் உயிர்களைப் பலி வாங்கின.
ப்ளு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. ஆனால் மாறுதல்கள் நிகழ்ந்த அளவில் அவை அன்றைய
நாள் வரையிலான ஆய்வுகளைக் கொண்டு தயார் செய்யப்பட வேண்டும். உலக சுகாதார அமைப்பு சர்வதேச அளவில்
வைரசுகளின் பரவலைக் கண்காணிப்பதுடன், ஒவ்வொரு புதிய பருவத்திற்கும் தயார் செய்யப்டுகின்ற புதிய தடுப்பூசிகளையும்
கண்காணிக்கின்றது. இம்முயற்சிகள் பெருமளவு ப்ளு விஷக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த உதவியுள்ளதோடு, ப்ளுவினால்
பெற்ற அனுபவம், விஞ்ஞானிகள் சார்ஸ் குறித்த அபாயம் பற்றிய முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும் உதவியுள்ளது.
மற்றொரு பெரிய வைரசுயியல் விஞ்ஞான சாதனை, சர்வவதேச அளவில் கடந்த அரை
நூற்றாண்டில் ஒருங்கிணைப்பு வாயிலாக அம்மை நோய் உண்டாக்கும் வைரசு அழிக்கப்பட்டுவிட்டது தான். சமீபத்திய
மனித வரலாற்றில் மிகப் பெரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாக இது இருந்தது. 20ம் நூற்றாண்டில் மட்டும் இதற்கு 300
மில்லியன் மக்கள் இரையானார்கள். அம்மை நோய் தடுப்பூசிகள் 18ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில்
தோன்றியிருந்தும், சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தினால் 1966ம் ஆண்டு முதல் தான் செயல்படுத்தப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் தீவிரமான முயற்சிகளின் விளைவாக இவ்வைரசு 1980ம் ஆண்டு முடிவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
சார்ஸ் வைரஸின் குணங்கள்
வைரசுகளின் வரலாறு, புதிய வகை வைரசுகளுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் உடலின்
தடுப்புச் சக்தி இல்லாமையினால் ஏற்படும் ஆபத்து தொடர்பாக எடுத்துக்காட்டுகின்றது. அப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள்
கடந்த 10 ஆண்டுகளில் தோன்றியுள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது எச்ஐவி (HIV)
ஆகும். 13 மில்லியன் மக்களுக்கு மேலாக எய்ட்ஸ் நோயின் பீடிப்பால் இறந்துள்ளனர். மேலும் அதிகமானோர்
இப்பொழுது எச்ஐவி ஆல் பாதிப்படைந்துள்ளனர். உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இது பரவியிருந்தாலும், குறிப்பாக
வளர்ச்சியுறாத ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இந்த வைரசு பெரும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் எய்ட்ஸ் நோயின் நிலைமை விளக்கியுள்ளது போன்று, வளர்ந்து வரும் சர்வதேச
அளவிலான சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு, மிகப் பெரும் தூரங்களுக்குப் பரவிடும் ஆற்றலை வைரசுகளுக்குத் வழங்கியுள்ளது.
சார்ஸ் பரவுதலும் இப்படித்தான். கிராமப்புறச் சீனாவில் தோன்றியதாக நம்பப்படும் இந்த தொற்று நோய் பல
மாதம் அங்கேயே முடங்கியிருந்தது. ஆனால் பெரிய வர்த்தக நாடான ஹொங்காங்கை வந்து அடைந்தவுடன், அது
திடீரென உலகளாவிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்தது. இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் (WHO)
உலகம் தழுவிய சுகாதார எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.
வைரஸினால் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நோய் நுண்மப்பெருக்க
நிலை (அடைகாக்கும் காலம்-
Incubation period) உண்டு.
நோய் பாதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட காலத்திலிருந்து நோயின் அறிகுறிகள் தோன்றும் வரை அது நீடிக்கின்றது.
இக்கால அளவு சார்ஸ் நோய்க்கு 2 முதல் 10 நாள் வரையிலாகும்.
இந்த கூடுதலான நாட்களே, தாங்கள் தொற்றுதலுக்குள்ளாகியுள்ளோம் என்று அறியாமலேயே பாதிக்கப்பட்டுள்ளோர்
பயணம் மேற்கொள்ளச் செய்வதுடன் அறியாமலேயே மற்றவர்களையும் தொற்றுதலுக்கு உள்ளாக்கி, உலகளாவிய பரவலுக்கு
காரணமாகின்றனர். எபோலா (Ebola)
வைரஸ் இதை விட உயிரைப்பறிக்கும் தன்மை உடையதாகும். ஆனால்
இந்நோயால் பாதிக்கப்பட்டோர் மிகவிரைவாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவதால் மற்றவர்கட்கு பரப்ப
முடியாமற் போகிறது.
சார்ஸ் நோய் பாதிப்பில் முதலில் காய்ச்சல், தலைவலி மற்றும் களைப்பு தோன்றுகின்றது.
இதனைத் தொடர்ந்து வரட்டு இருமலும், மூச்சுத் திணறலும் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட சதவிகித நோயாளிகள் சுயமாக
சுவாசிக்க இயலாமல் போய் செயற்கை சுவாசம் உபயோகிக்க வேண்டியுள்ளது. சார்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளோரில்
15 சதவிகிதம் பேர்கள் உயிரிழக்கின்றனர். நோய் முற்றிய நிலையினை மிகக் குறைந்த இடைவெளியில் அடைந்தோர்
இறக்க நேரிட்டதால், இந்த எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளது.
சார்ஸ் ஒரு புது வகை
Corona வைரசால் பரப்பப்படுகிறது என்று அறியப்பட்டுள்ளது. இது
சவ்வுக்குள் பாதுகாக்கப்படும் RNA
வைரசாகும். இவை RNA
வைரசுகளில் மிகப் பெரியவையாகும். கிட்டத்தட்ட 30,000 மைய கருக்களை (நியூக்கிளியோடைடுகள்-DNA,
RNA ஆகியவற்றின் மூலக்கூறு அமைப்புகள்) ஒரு மரபணுத்தொடர்ச்சியில்
கொண்டுள்ளன.
Corona வைரசுகள் ஒரு குறிப்பிட்ட
மாதிரியான வைரசாக மனிதர்களில் மெதுவாக மேற்புற சுவாச தொற்றாக தாக்க ஆரம்பித்து (சாதரண கபம்,
ஜலதோஷம்), சில நோயாளிகளிடையே (தடுப்பு சக்தி குறைவாக இருக்கும் அளவில்) கபவாதத்தை ஏற்படுத்துகின்றன.
சார்ஸ் ஒரு அதிக பலம் கொண்ட வகையாக உள்ளதால், விஞ்ஞானிகள் இது மனிதன் அல்லாத விலங்கினத்திலிருந்து
தோன்றியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். எனவே இது மனிதருள் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த வைரசின் மரபணுத் தொடர் அமைப்பு கனடாவின் வான்கூவரில் உள்ள ஆராய்ச்சியாளர்களாலும்
அமெரிக்காவினுள்ள US Centers for Disease
Control and Prevention (CDC)
ஆராய்ச்சியாளர்களாலும் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு கண்டறியப்பட்டது. இரண்டு வகைகளின்
மரபணு தொடர் அமைப்பு பொதுவாக ஒரே மாதிரியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. (வெளியிடப்பட்டுள்ள ஆய்வு
முடிவுகளை
www.sciencemag.org/feature/data/sars/
என்ற இணைய வலைத்தள முகவரியில் காணலாம்.
இந்த மரபணுவின் அமைப்பு மற்றைய வைரசுகளின் அமைப்பினின்று மாறுபட்டதாக உள்ளது.
இந்த மரபணுத் தொகுப்பு முழுவதும் அடிப்படையில் புதியவை என்று ஹாங்காங் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் வல்லுநர் Malik Peiris
தெரிவித்துள்ளார். இது மனிதர்களிடையே இதற்கு முன்பு இருந்ததில்லை என்றும்,
விலங்கினங்களிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்றும்
Yuen Kwok-yung என்ற அதே பல்கலைக் கழகத்தின் மற்றொரு
நுண்ணுயிரியல் வல்லுநர் கருத்துரைத்துள்ளார். மரபணுத் தொகுப்புத் தொடரிலிருந்து தெளிவாக எந்த விலங்கிலிருந்து
வந்திருக்கக் கூடும் என்பது அறியப்பட முடியவில்லை. ஏனெனில் அது எந்தத் தெளிவான ஒற்றுமைகளையும்
Corona வைரசுகளோடு
(விலங்குகளுக்குத் தொற்று ஏற்படுத்துபவை) காட்டவில்லை.
பெரும்பாலான சாதாரண கபம் ஏற்படுத்தும் கிருமிகளைப் போலவே, சார்ஸை ஏற்படுத்தும்
Corona
வைரசும் ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு, இருமல், தும்மல் மூலமாகவோ, நெருக்கமான தொடர்பினாலோ
ஏற்படக்கூடும். ஒவ்வொரு இருமலும், மிகச் சிறிய உமிழ் நீர்த்துளிகள் அல்லது சளியைக் காற்றில் செலுத்தும் பொழுது
கிருமியினைப் பரப்புகின்றது.
ஹாங்கொங்கிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் வைரசுகள் விரைவாக மாற்றமடையலாம் (Mutating)
எனவும் இதனால் எளிதாகவும் பரவியிருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார்கள்.
கடந்த மார்ச் இறுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகையில் வைரசு ஒரு வீட்டுத் தொகுதி வளாகத்தில் வாசித்தோர்
ஒருவருக்கொருவர் நேரடித் தொடர்பு கொள்ளாமல் இருந்த நிலையில், அங்கு வசித்த 218 பேரை நோய் தாக்கியதையும்
சுட்டிக் காட்டுகின்றனர். இந்த பரவுதலின் காரணம் இப்பொழுதும் தெளிவாகயில்லை. அசுத்தமான தண்ணீர் அல்லது வேறு
வகையில் இது விளைந்திருக்க வேண்டும்.
''வைரசு விரைவாக மாற்றமடையலாம். அதனால் அதற்குரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும்
அது பயனற்றுப் போய்விடும். மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அதனை பரிசோதனை மூலம் கூட கண்டுபிடிக்க இயலாது''
என்று Dennis Lo
என்ற ஹாங்காங் பல்கலைக் கழகத்தில் இந்நோய் குறித்து ஆய்வினை மேற்கொண்டிருக்கும்
குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
CDC இன் இயக்குநரான
Julie Gerberding
அவ்வாறு இருக்க முடியாது என கருதுகிறார். அவர் ''இது ஒரு ஒற்றை இழை
RNA கிருமி எனவும்
அது தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்து கொள்ளும் போது தவறுகளைச் செய்யும்.
HIVம் அதைப்
போன்ற RNA
கிருமி தான். அதுவும் அதைத்தான் செய்கிறது. எனவே புதிய படிவங்கள் ஏற்படுவது
வியக்கத்தக்கது அல்ல'' என்று கூறுகிறார். HIV
இற்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பதில் உள்ள பெரும் இடர்பாடுகளுள் ஒன்று அது
இடைவிடாமல் மாற்றமடைவதுதான்.
இன்னும் ஏராளமான கேள்விகள் வைரசு பரவுதலைப்பற்றி எழுப்பப்பட்டுள்ளன. சில
நோயாளிகள் அதி வேகமாக பரப்புவோராக உள்ளனர். சிங்கப்பூரில் 100 பேருக்கு மேலான நோயாளிகள் ஒரு
விமானப் பணியாளரால் தொற்றுதலுக்கு ஆளாகி ஹாங்கொங்கிற்கு அந்நோயினைக் கொண்டு வந்துள்ளனர். ஏன் ஒரு
நோயாளிக்கு அப்படிப்பட்டத்தன்மை இருக்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை. அது ஒரு உயிரியல் மற்றும் மரபணு
மற்றும் சுற்றுப்புறச் சூழல் காரணமாக இருக்கலாம். ''மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது சரியான குறிப்புகள்
கிடைக்கவில்லை. இதனைப் பரப்புவதற்கு யார்தான் மற்றவரை விட முக்கியமான காரணமாக இருக்கக் கூடும் என்று தெளிவாகக்
கூற இயலவில்லை'' என Dr. Ling Ai Ee
என்ற வைரசு நோய் வல்லுநர் மற்றும் சிங்கப்பூர் சார்ஸ் ஆய்வுக் குழுவின் தலைவர்
தெரிவிக்கிறார்.
Notes : 1. For a good introduction to virology see :
The Invisible Enemy : A Natural History of Viruses; Dorothy H. Crawford,
Oxford University Press, 2000.
Top of page
|