World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US will provide no estimate of Iraqi war casualties

ஈராக்கிய போரில் இறந்தவர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையை, அமெரிக்கா தராது

By Jerry Isaacs
28 April 2003

Back to screen version

மூன்று வாரப் போரின் பொழுது, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் கொன்ற அல்லது அவற்றால் காயப்படுத்தப் பட்ட ஈராக்கிய இராணுவ வீரர்களின் மற்றும் சாதாரண மக்களின் எண்ணிக்கைகள் பற்றிய ஒரு அதிகாரபூர்வமான மதிப்பீட்டை அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை, என்று புஷ் நிர்வாகமும் பென்டகன் அதிகாரிகளும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.

இராணுவ உயர் அதிகாரிகளின்படி, ``சடலக் கணக்கெடுப்பு`` ('Body Counts') எதையும் இப்பொழுது அமெரிக்கா எடுப்பதில்லை. இது எதைக் குறிக்கின்றது என்றால் வியட்னாமிய யுத்தத்திற்கு எதிரான சர்வதேச மற்றும் உள்நாட்டு எதிர்ப்பை அநேகமாக மிகைப்படுத்தப்பட்ட போர்க்களச் செய்திகள், மேலும் தூண்டி விட்டதையாகும். அமெரிக்க இராணுவத்தின் பெயருக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியவற்றையெல்லாம் அகற்றிவிடும், பென்டகனினதும், அமெரிக்க செய்தி ஊடகத்தினதும் முயற்சிகளுக்கு ஏற்ப, அமெரிக்க செய்தி ஊடகத்துறை ஈராக்கில் ஏற்பட்ட படுகொலையின் பரந்தளவை, உலகின் மற்றும் அமெரிக்க மக்களிடம் இருந்து மறைத்துவிட முடிவு செய்துள்ளது.

முதல் வளைகுடாப் போரின்பொழுது, தலைமை தளபதிகளின் கூட்டுக் குழுவின் தலைவராக (Joint Chiefs of Staff) இருந்த கொலின் பவல் ஏற்படுத்திய முன்மாதிரியை இப்பொழுது இராணுவம் பின்பற்றுகின்றது. பவல் அப்பொழுது எத்தனை ஈராக்கிய போர்வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர் என்பதை நிலைநாட்டுவதில் தனக்கு ஒன்றும் ``மட்டற்ற அக்கறையில்லை`` எனக் கூறியிருந்தார். அமெரிக்கப் படையெடுப்பினால் ஏற்பட்ட மனித இழப்புப் பற்றிய இந்த ஒழிவு மறைவற்ற அக்கறையின்மை, மற்றும் உலகப் பொதுஜனக் கருத்துக்குக் காட்டும் இகழ்ச்சி மனப்பான்மை என்பன வெள்ளை மாளிகையிலும், அமெரிக்க இராணுவத்தின் உயர்தட்டுக்களிலும் ஈராக்கிய பரந்த மக்கள் மனிதர்கள் என்று கூட நிஜமாகவே கருதப்படாத சிந்தனைப் போக்கு மேலாதிக்கம் செய்வதையே பிரதிபலிக்கின்றது.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஈராக்கிய உயிரிழப்புக்களைப் பற்றிய பிரச்சனை, மத்திய கட்டளை மையத்தில் (Central Command) மூத்த தளபதிகளுக்கென்று தினசரி நடத்தப்படும் கட்டளைகள் அறிவிக்கும் கூட்டத்தில் (Daily briefings) விவாதிக்கப்படவில்லை எனக் கூறுகின்றது. கொல்லப்பட்ட, மற்றும் காயப்படுத்தப்பட்ட எதிரிப் படைச் சிப்பாய்களின் எண்ணிக்கையை, எண்ணவேண்டிய பணி போர்க்களத் தளபதிகளுக்கு தேவையற்ற பணியாக இராணுவம் ஆக்கியுள்ளது என்று, அப்பத்திரிகை தெரிவிக்கின்றது.

மத்திய கட்டளை மையத்தின் பிரதிநிதித்துவ தலமை பேச்சாளரான (spokesman) கடற் படையைச் சேர்ந்த காப்டன் ஃபிராங்க் தோர்ப், படைத்தளபதிகள் சடலங்களின் மற்றும் காயம்பட்டோரின் எண்ணிக்கைகள் வளர்ந்து கொண்டு போகும் போக்கை விபரமாக அறிய முயற்சியெடுக்க வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளனர். ஏனெனில் அத்தகைய முயற்சி "அளவற்ற நேரத்தை விழுங்கி விடுவதோடு", போர்க்களத்தில் சடலங்களை எண்ணுவது "ஆபத்தானது" என்றும் கூறினார். "அங்கே, போர்க் களச் சூழலில் தளபதி அப்பொழுது நிகழ்வதில், வர இருப்பதில் மற்றும் தன்னுடைய வீரர்கள் எவ்வாறு போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதிலேயே அவரது கவனம் முழுவதும் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அவரை எதிரிகளின் சாவு பற்றிய குறிப்பிட்ட அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு கேட்கப் போவதில்லை`` என்றார்.

இந்த மனப்பான்மை, செவ்விந்தியருக்கு எதிரான இனவொழிப்புக் (Genocidal) கொள்கையையும், ஆசியாவில் மற்றும் ஆபிரிக்காவில் காலனித்துவ வாதிகளின் இறுமாப்பான காட்டுமிராண்டித்தனத்தையும் நினைவூட்டுகின்றது. இது நேரடியாக ஜனாதிபதி புஷ்ஷினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அவர், பலதடவை, ஈராக்கைக் கைப்பற்றும் போரில் "அமெரிக்கா அரைகுறை நடவடிக்கைகளுடன்" நின்றுவிடாது என்று அறிவித்துள்ளார்.

ஈராக் முழுவதிலும் போரில் இறந்தோரின் எண்ணிக்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, எவ்வளவோ மிக அதிகமானவையாக உள்ளன. குண்டு வீச்சு, சூறை, மின் துண்டிப்பு, மருந்து, சுத்தமான நீர் என்பனவற்றின் இல்லாமையால் ஏற்கனவே மருத்துவமனைகளின் வசதிகள், அவற்றின் ஆற்றலையும் கடந்து அளவுக்கு அதிகமாக நீட்டப்பட்டுள்ள நிலையில், இறந்தோர் மற்றும் காயமடைந்தோரைக் கணக்கெடுக்க நேரமே கிடைக்காது இருந்தது. அதோடு இறந்தோரையும், காயமடைந்தோரையும் கணக்கெடுத்து, அவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த அரச அதிகாரம் எதுவும் ஈராக்கில் எஞ்சியிருக்கவில்லை.

இருந்தபொழுதும், செவி வழிச் செய்திகள், கொல்லப்பட்டோரினதும் மற்றும் ஊனப்படுத்தப் பட்டோரினதும் எண்ணிக்கைகள், எந்த அளவை எட்டியள்ளன என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தென் ஈராக்கு நகரமான பஸ்ராவில் மட்டும், அம்புலன்ஸ் ஓட்டுனர்களும், ஆஸ்பத்திரிப் பணியாளர்களும் மார்ச் 20 இல் யுத்தம் வெடித்த நாளிலிருந்து 1,000 முதல் 2,000 வரையிலான சடலங்களைத் தாம் எடுத்துச் சென்றுள்ளதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.

மூன்று வாரப் போர்க் காலத்தில், பாக்தாத்திற்கு 100 மைல் தெற்கேயுள்ள நஜ்ஜாஃப் நகரத்திலுள்ள இடுகாட்டில், நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கில் காலையிலிருந்து மாலை வரை சடலங்கள் புதைக்கப்பட்டன என்று அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அப்பத்திரிகை மேலும் கூறுவதாவது: ``சோகத்தின் ஊர்வலத்தில், அவர்கள் எளிய மரச் சவப்பெட்டிகள் வாகனங்களின் கூரைகளிற் கயிற்றால் கட்டப்பட்ட மினி பஸ்களிலும், பண்டங்கள் ஏற்றும் வாகனங்களிலும், டாக்சிகளிலும் மற்றும் வான்களிலும் கொண்டு வந்தனர். அவசரமாகத் தோன்டப்பட்ட சவக் குளிகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட, நாட்களுக்குப் பின், ஏன் வாரங்களுக்குப் பின், தோண்டியெடுக்கப் பட்ட உடல்களில், சில உடல்கள் அடையாளமே காண முடியாத நிலையில் இருந்தன. மற்றவை போரின் பெருங்குழப்பத்தின் மத்தியில், மற்றைய சடலங்களோடு அடுக்கிவைக்கப்பட்டிருந்தவையாகும். இவை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருந்தும், மசூதிகளிலில் இருந்தும், கொண்டுவரப் பட்டவையாகும்.

``ஈராக்கில் எங்களிடம் இருப்பவை எல்லாமே செல்வச் செழிப்பானவை; எங்களுடைய எண்ணெய், எங்களுடைய வளங்கள், எங்களுடைய நிலங்கள்,`` என்றார், கல்லறையில் புதைக்கப் படுவதற்கு முன், சடலங்களை நீராட்டும் வேலை செய்யும் 33 வயது ஷாமில் அப்டெல் சாகிப், ``ஈராக்கில் மிக மலிவான ஒரே ஒரு பொருள், அதன் மக்கள்தான்`` என்றார்.

பென்டகன் அதிகாரபூர்வமான எண்ணிக்கையை வெளியிட மறுக்கும் நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை மையம், ஏப்ரல் 5ல் நடந்த ஒரு சண்டையில் - பாக்தாத் நகரில் அமெரிக்க டாங்கிகளினதும், கவச வாகனங்களினதும் அணி ஒன்று நிகழ்த்திய வெறித்தாக்குதலில், 2,000 முதல் 3,000 வரை, ஈராக்கிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவித்தது.

பெயர் தெரியப்படுத்தப்படாத அமெரிக்க இராணுவ அதிகாரிகள் 10,000 முதல் 15,000 வரையிலான ஈராக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறினர்; ஆனால் "தரமற்றவையாக ஆக்கப்பட்டவை'` என்று கூறப்பபடும் ஈராக்கிய படை அணிகளின் யுத்த வலிமை, இந்த எண்ணிக்கை இதிலும்பார்க்க அதிகமானது என்றே கூறும்.

போருக்கு முன், இராணுவ ஆராய்சியாளர்களின் கூற்றுப்படி, 80,000 குடியரசுக் காவல் படை வீரர்கள் உட்பட, ஈராக்கிய படை 389,000 முழுநேர இராணுவ வீரர்களைக் கொண்டிருந்தது. அமெரிக்க இராணுவச் செய்திகளின் படி, இந்தப் படையினரில், அவர்களின் போர் புரியும் ஆற்றல் கொண்டுள்ளோரின் எண்ணிக்கை 20 சத விகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது எதை எடுத்துக் கூறுகின்றது என்றால், ஆயிரக் கணக்கான ஈராக்கிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்பதையாகும். ஈராக்கில் 18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ சேவை செய்ய வேண்டும்; இராணுவத்தில் மூன்றில் இரு பகுதி, கட்டாய இராணுவ சேவை செய்வோரால் நிரப்பப்பட்டிருந்தது. அமெரிக்கத் தாக்குதலின் நிகரவிளைவு எதுவாக இருந்தது என்றால், ஈராக்கிய ஆண்களில் இளைய தலைமுறையின் மிகப் பெரும் பகுதி துடைத்துக் கட்டப்பட்டதாக உள்ளது என்பதேயாகும்.

அமெரிக்கா தன் ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளுகின்றது என்பது தெளிவானதும், புஷ் நிர்வாகமும், பென்டகனும், சாதாரண மக்களில் எத்தனை பேர் கொல்லப் பட்டாலும் சரி, இராணுவ இறப்புக்கள் எவ்வளவாக இருந்தாலும் சரி, அவற்றைப் பொருட்படுத்தாது ஈராக்கிய தற்காப்பாளர்கள் மீது அமெரிக்காவின் பிரமாண்டமான வெடித்தாக்கு சக்தியைக் (firepower) கட்டவிழ்த்துவிட முடிவு செய்தது. இதன் நோக்கம், அமெரிக்கத் தரைப்படையினர், எதிரிப் போர் வீரர்களோடு நேராடி மோதலுக்கு வரும் முன்னர், எதிரிப் படையினரில் எத்தனை பேரை இலக்கு தவறாத (precision) ஆயுதங்கள் கொண்டு கொல்ல முடியுமோ, அத்தனை பேரையும் கொல்லுவது என்பதாகும்.

``தரைப்படைத் தாக்குதலோடு இணைந்த குண்டு வீச்சுத் தாக்குதல், ஈராக்கிய இராணுவப் பிரிவுகளை நெரித்து, அவற்றை மேலும், மேலும் சிறிதாக்கப்படும் "கொலைக்கு வசதியான பெட்டிகளாக" (‘kill boxes') மாற்றின. இது ஆயிரக் கணக்கான, அனேகமாக பல பத்தாயிரக் கணக்கான போர் வீரர்களை இறக்கச் செய்தது" என்று, நியூ யோர்க் டைம்சின் செய்தி தெரிவிக்கின்றது.

இந்தப் போர்த் தந்திரத்தை, "டாங்கிகள், மற்றும் கவச வண்டிகளையும் கொண்ட ஒரு 1,500 பேர் அடங்கிய பிரிவிற்கு பீரங்கிகள், ஹெலிக்காப்டர் துப்பாக்கிக் கப்பல்கள் மற்றும் சண்டை ஜெட் விமானங்கள் என்பனவற்றின் பின் ஆதரவுடன் அனுப்பப்பட்டது" என்று நான்காம் மரைன்களின், மூன்றாம் பட்டாலியனின் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் பிரைன் மக்காய் தொகுத்துக் கூறினார். பாக்தாத்தை முதல், முதல் அடைந்த பிரிவுகளில் இந்தப் பிரிவும் ஒன்றாகும்.

டைம்ஸ் நிருபரிடம் மக்காய் தன்னுடைய போர்த் தந்திரத்தை விளக்குகையில், அமெரிக்க - பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக எவராயினும் ஒரு ஆயுதத்தை எடுப்பாராயின்,அவர்கள் விட்டோடிக் கொண்டிருந்தாலும், அவர்களைக் கொல்லுவதுதான் "பலாத்கார மேலாதிக்கத்தை" ("violent supremacy") நிலை நாட்டுவது என்றார். ``நாங்கள் சதாமும், அவருடைய கையாட்களும் இறந்துவிட்டார்கள்..... சதாமிற்காக போரிட விரும்பும் கடைசியாளின் விழிகளைச் சுற்றிலும் ஈக்கள் தவழும் போதுதான், நமக்கு நமது பணி முடியும். அதன் பின்னர் நாம் வீடு போவோம்`` என்றார் அவர்.

ஆக்கரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு, சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு அளிக்கும் அரசியல் ஆதரவிற்குச் சமன் என்ற மக்காயின் வாதம், புஷ் நிர்வாகம், பென்டகன் மற்றும் பரந்தளவு ரீதியான ஊடகம் (mass media.) என்பன இடைவிடாது கக்கிவரும் போர்ப் பிரச்சாரத்தின் ஒரு மாதிரி எடுத்துக் காட்டாகும். தொலைக்காட்சி செய்திகளில், அச்சு ஊடகத்தின் செய்தி சேகரிப்போரின் அறிக்கைகளில், எதிர்ப்பாளர்கள் எல்லோரையும், "ஹுசைன் பக்கம் சார்ந்தவர்கள்", "ஆட்சியின் ஆதரவாளர்கள்" மற்றும் இன்னோரன்ன பிறவும் என்றே அழைக்குமாறு வார்த்தை புழக்கத்தில் விடப்பட்டிருந்தது என்பது தெளிவாக இருந்தது. இந்த மொழிப் பிரயோகம் பொதுமக்களுடைய மனதில், அமெரிக்கா ஈராக்கியப் போரை எதிர்ப்பவர் அனைவருமே ஈராக்கிய ஆட்சியின் அடக்குமுறையில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளனர் என்றபடியால் இறக்க வேண்டியவர்கள், என்ற எண்ணத்தை தூண்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியை எதிர்க்கும் ஈராக்கியர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பையும், தமது நாடு கைப்பற்றப்படுவதையும் எதிர்க்கக் கூடிய சாத்தியக்கூறு இருக்கமுடியாது என்று புறக்கணிக்கப்பட்டது.

ஈராக்கிய போர் வீரர்களின் முன்னோக்கில் இருந்து நடந்தவை என்ன என்ற விபரங்கள் சர்வதேச செய்தி ஊடகங்களில் வரத் தொடங்கியுள்ளன. உதாரணத்திற்கு குடியரசுக் காவற் படையின் ஆறாவது பிரிவைச் சேர்ந்த காலாட்படை வீரர் ஒருவர், எப்படி ஒன்பது நாட்களாக நடந்த குண்டு வீச்சு, குட் என்ற பாக்தாதிலிருந்து 100 மைல்கள் தெற்கேயுள்ள நகரத்தைக் காக்க அனுப்பப் பட்டிருந்த தனது படைப் பிரிவின் 2,000 பேரில் பெரும் பகுதியை அழித்தொழித்தது என்பதை வருணித்தார்.

குடியரசுப் பாதுகாப்புப் படை வீரர்கள் மிகச்சிறந்த பயிற்சி பெற்ற, மற்றும் ஈராக்கிய போராளிகளில் கடும் வெறியார்வம் உள்ள வீரர்கள் என்று அமெரிக்க செய்தி ஊடகம் தொடர்ச்சியாகப் படம் பிடித்து வந்துள்ளது. இந்த வீரர்களில் ஒருவரான, 21 வயது கணித மாணவரும், கல்லூரிப் படிப்பு முடிந்துக் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டவருமான, பஹா அல்டின் ஜலால் அப்துல் அமீர், இரண்டே மாதப் பயிற்சிக்குப்பின், குட் நகரைத் தற்காக்க அனுப்பி வைக்கப்பட்டார்.

டோரொன்டோ குளோப் அன்ட் மெயில் பத்திரிகைக்கு அவர் கூறியதாவது: ``ஆரம்பத்திலிருந்தே எனது நண்பர்களில் நிறையப் பேர் குண்டுகளால் கொல்லப்பட்டனர். நான் அறிந்திருந்தவர்களில், குறைந்தது 150 பேர் முதற் சில நாட்களில் இறந்தனர். குண்டுகள் எங்கும் விழுந்த வண்ணமாக இருந்தன. அவை மக்களைச் சின்னாபின்னமாகச் சிதைத்துச் சிதறடித்தன, அனைத்தையும் அப்படியே அவை அழித்தன..... எந்த நேரத்திலும் நாம் இறந்துவிடுவோம் என்று நாம் எண்ணினோம். இரவுகளில் அமெரிக்கப் படைகள், இருட்டில் இருந்து நம்மைத் தாக்கத் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தனர். இரவுப் பார்வைப் பாதுகாப்புக் கண்ணாடிகள் (night-vision goggles) அவர்களிடம் இருந்தன. எம்மால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. நம்மை அவர்கள், அவர்கள் விருப்பியபடி கொல்ல முடிந்தது"

இந்த ஒருதலை பட்சமான படுகொலை, பல அமெரிக்க இராணுவ வீரரிடையே மனக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு ஈராக்கிய போர் வீரர்கள் ஒரு போராட்டமும் இன்றிச் சரணடைவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. ஒரு போருக்குப் பின்னர், மூன்றாம் பட்டாலியனின் மறைன் சிப்பாய் தனிப்பட்ட ரீதியில் கிரிஸ்டியன் சயன்ஸ் மாணிட்டர் பத்திரிகைக்கு குறிப்பிடுகையில், ``இதிலும் பார்க்க வேறு சொற்கள் கிடைக்காததால், நான் ந்ேத கொன்று குவித்தல் பற்றி ஏறக்குறைய குற்ற உணர்வுள்ளவனாக உள்ளேன். நாம் நிறைய மக்களை விரையம் செய்துள்ளோம். இவர்களில் எத்தனைபேர் அப்பாவிகள் என்று எம்மை சிந்திக்க வைக்கின்றது. எங்கள் பெருமையிலிருந்து இது கொஞ்சத்தை எடுத்துவிடுகின்றது. நாம் வெற்றிபெற்றுவிட்டோம், ஆனால் அதற்கு நாம் என்ன விலை கொடுத்துள்ளோம்?" என்றார்.

சாதாரண மக்கள் சாவு

ஈராக்கிய உயிர்கள் பற்றிய இந்த ஏளன இகழ்ச்சி மனப்பான்மை சாதாரண மக்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. போரின் இலக்கு, ஈராக்கிய மக்களின் "விடுதலை" என்று படம் சித்தரித்துக் காட்ட அமெரிக்க அதிகாரிகள் முயன்ற பொழுதும், அவர்கள் ஈராக்கிய குடிமக்களில் எத்தனைபேர் இறந்தனர், மற்றும் காயமடைந்தனர் என்ற கணக்கை, மற்றும் குடிமக்களின் பொருளாதார உட்கட்டுமானத்திற்கு ஏற்பட்ட உடைமைச் சேதங்களைப் பற்றிய மதிப்பீட்டைத் தாம் செய்யப் போவதில்லை எனக் கூறிவிட்டனர்.

ஆரம்ப ஆஸ்பத்திரி அறிக்கைகள், செய்தி ஊடகங்களில் வெளியான விபரங்கள், மற்றும் மற்றைய தகவல் தோற்றுவாய்கள், குறைந்தது. 3,500 குடிமக்களாவது கொல்லப்பட்டிருப்பர் என்றும், 5,000 துக்கும் அதிகமானோர் காயமுற்றிருப்பார்கள் எனவும், மதிப்பிடுகின்றன. இந்த எண்ணிக்கை அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்ந்தும், குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டாளர்களை அடக்குவதில் காட்டிவரும் வன்முறையினாலும் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது. இவை தவிர ஆயிரக் கணக்கானோர், வெடிக்காத வெடிகள், பசி, வாந்திபேதி மற்றும் வயிற்றுப் போக்குப் போன்ற தூய நீர் இல்லாமை, சுகாதார நிலமைகள் இல்லாமை என்பனவற்றால் தோற்றுவிக்கப்படும், கடும் நோய்களால் இறக்கின்றனர்.

பென்டகன் அதிகாரிகள் குடிமக்களின் இந்த இறப்புக்களை அப்படியே நிராகரித்துள்ளனர். அவர்கள் இறந்தவர்களில் பெரும்பாலானோர், சாதாரண மக்களின் உடைகளை அணிந்து கொண்ட ஈராக்கிய படை வீரர்கள், அல்லது தற்காக்கும் ஈராக்கிய படையினருக்கு இரையானவர்கள் என்றுள்ளனர். அவர்கள் அமெரிக்க விரை ஏவுகணைகள் (cruise missiles), குண்டுகள் மற்றும் ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்க தரைப் படைகள் என்பனவற்றிற்கு இரையானவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அரச செயலாளர் கொலின் பவல், ஏப்பிரல் 13ம் தேதி பி.பி.சி. நிருபர் ஒருவரிடம், `` எத்தனை சாதாரண மக்கள் இறந்துள்ளனர் என்பது பற்றி நமக்கு உண்மையிலேயே தெரியாது. இந்த இறப்புக்களில் எத்தனை இறப்புக்கள் ஈராக்கிய படைகள் தம்மைத் தற்காத்துக் கொள்ள எடுத்த நடவடிக்கைகளினால் ஏற்பட்டவை என்பதற்கு எதிராகக் கூட்டணிப் படைகளின் நடவடிக்கைகளினால் ஏற்பட்டவை என்று நமக்குத் தெரியாது," என்றுள்ளார்.

போர் சாதாரண ஈராக்கிய மக்கள் சார்பில் யுத்தம் தொடுக்கப்பட்டது என்ற கந்தலாய்ப்போன பாசாங்கைத் தக்கவைக்கும் முயற்சியில், அமெரிக்க சட்டமன்றத்தில் சமீபத்தில் கொண்டுவரிப்பட்ட 7,850 கோடி டாலர் யுத்தத்திற்கான அவசரச் செலவு மசோதாவில், அமெரிக்கப் படைகளால் உயிரிழந்தோர் அல்லது படுகாயமுற்றோர் குடும்பங்களுக்கு அடையாள உதவி அளிக்க ஷரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், உடல்நலப் பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட 250 கோடி டாலர் உதவி மற்றும் சீரமைப்புத் தொகையிலிருந்து இதற்கான பணம் எடுக்கப்பட உள்ளது.

ஜனநாயகக் கட்சி செனட் சபை உறுப்பினரான பாட்றிக் லீஹி, அமெரிக்க சட்டமன்றத்தில் இந்த ஷரத்தை முன்வைத்திருந்தார். இவருடைய பிரதிநிதித்துவ உரையாளர், அமெரிக்க சட்ட மன்றம் ஈராக்கியர்கள் முறைமை (formal) ரீதியில் இழப்பீடு கோருவதற்கான ஒரு நடைமுறையையோ அல்லது அமெரிக்க இராணுவத்தை காயமுற்ற தனிமனிதர் அல்லது மக்கட் பகுதியினரை அடையாளம் காட்ட வேண்டிய கடமைக்கு உட்படுத்திவிடும் நோக்கமோ அதற்கு இல்லை, என்றார்.

இந்த ஷரத்திற்குப் பதிலளிக்கும் முகமாக பென்டகன் இரு வாக்கியங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது. அதில் அது பாதுகாப்பு இலாகாவிடம் குடிமக்களின் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று நிர்ணயிக்க "எவ்வித திட்டமும் " இல்லை என்றுள்ளது.

ஈராக்கியர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறியத் தமக்கு வழியெதுவும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இது ஒரு பொய்யாகும். தங்களது ஆயுதங்களின் அழிக்கும் ஆற்றல் என்ன என்பதைக் மதிப்பீடு செய்யும், வழக்கமாக செய்தி ஊடகத்திற்கு முன் பென்டகன் நடத்தம் பத்திரிகையாளர் மாநாடுகளில் காட்டப்படும், செயற்கைக்கோள் ``குண்டு வீச்சு மதிப்பீட்டுப்`` புகைப்படங்கள் உள்ளிட்ட மிகச் சிறந்த தொழில் நுட்பம், அமெரிக்க பாதுகாப்பு இலாகாவிடம் உண்டு.

இது மட்டுமல்லாது, சடலங்களைக் கையாளுவது பற்றிய ஜெனிவா உடன்பாட்டின் குறிப்புகளுக்கு ஏற்ப, அமெரிக்கப் போர்வீரர்கள், இறந்த எதிரிப் போர் வீரர்களின் அடையாளத்தைப் பதிவு செய்து, அவற்றை அடையாளமிட்ட கல்லறைகளிற் புதைப்பதற்குமுன் குவைத்திலுள்ள "பிணமனை அலுவல்கள்" (mortuary affairs) அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளனர், என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நம்பத்தகுந்த சாட்சிகளிடம் இருந்து எத்தனை பேர் என்ற விபரத்துடன் அப்படியான ஆவணங்களைத் தயாரிக்க முடியும். இதன் மூலம் இறந்த ஈராக்கியரின் குறைந்தபட்ச எண்ணிக்கையை ஆவது தொகுக்க முடியம். இவ்வாறு செய்ய மறுப்பது, ஒரு அரசியல் தீர்மானமாகும்.

வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புச் சட்ட மையத்தின் ராபர்ட் ரேணர், பிட்ஸ்பேர்க் போஸ்ட் கேசட் பத்திரிகையிடம் பேசுகையில், நீண்ட காலத்திட்டம், போருக்குப்பின் ஈராக்கிய விவகாரங்களைக் கொண்டு நடத்துவதையும் உள்ளடக்கியுள்ளது. இராணுவம் இறப்போரின் எண்ணிக்கையை எவ்வளவு குறைவாக வைத்திருக்க முடியமோ அவ்வளவு குறைவாக வைத்திருக்க விரும்புகின்றது. ``எவ்வளவுக்கு எவ்வளவு அதிக தாய், தந்தையர் தமது பிள்ளைகளை இழக்கின்றனரோ, எவ்வளவுக்கு அதிகமாக மனைவிகள் தமது கணவர்களை இழக்கின்றார்களோ, அந்தளவு அதிகமாக, அவர்களைக் கொன்றோர் மீது கோபம் வரும்`` என்றார் ரேணர்.

இதுமட்டுமல்லாது பென்டகன் அமெரிக்காவைப் பேரழிவு ஆயுதங்கள் கொண்டு அச்சுறுத்திய சக்திமிக்க எதிரிக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது`` என்ற மோசடியை நிலைநாட்ட விரும்புகின்றது. கூட்டணிப் படையினரில் ஆக 165 பேர்தான் கொல்லப்பட்டுள்ள நிலையில், பத்தாயிரங்களின் எண்ணிக்கையில் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது, அமெரிக்கா மிகக்கொடூரமான பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி ஏழ்மையிலும், பாதுகாப்பற்ற நிலையிலும் இருந்த ஒரு நாட்டை ஏகாதிபத்திய காலனித்துவப் போரின் மூலம் கைப்பற்றியுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

கொல்லப்பட்ட எதிரிப்படையின் எண்ணிக்கைக்கும், இறந்த அமெரிக்கப் படையினருக்கும் இடையிலான விகிதாசாரம், மிகச் சில முன்னோடி நிகழ்ச்சிகளையே கொண்டுள்ளது. அப்படி ஒரு முன்னோடி இருக்குமாயின், அது ஜேர்மன் இராணுவ வரலாற்றாசிரியரான றல்ப் ரொட்டின்படி, 1898ல் சூடானில் நிகழ்ந்த ஓம்டுர்மன் போராகும். அப் போரில் வாள்கள் மற்றும் ஈட்டிகளை மட்டும் தமது ஆயுதங்களாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான சூடானிய பழங்குடியினரை, சுழல் துப்பாக்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திய பிரிட்டிஷ் இராணுவம், தனது துப்பாக்கிகளில் இருந்து பாயும் ரவைக் குண்டுகளின் மழை கொண்டு வெட்டிச் சாய்த்துத் துடைத்துக் கட்டியதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved