World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: For an international movement to defend pension rights

பிரான்ஸ்: ஓய்வூதிய உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு சர்வதேச இயக்கம் தேவை

13 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

பின்வரும் அறிக்கையானது, ஓய்வூதிய உரிமைகளைத் தற்காத்தல் தொடர்பாக மே 13, செவ்வாய் அன்று, நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களால் விநியோகிக்கப்பட்டது.

புஷ் நிர்வாகத்தின் சூறையாடும் நோக்கம் கொண்ட ஈராக் படையெடுப்பிலும், அந்த நாட்டை பிடித்துக்கொண்டதிலும், சிராக்கின் மோசடியான சிறிதளவு எதிர்ப்புக்கு, தற்போது எடுத்துக்காட்டு எதுவும் மேலும் தேவை என்றால், பிரெஞ்சு உழைக்கும் மக்களது பென்சன் உரிமைகள் மீதான சிராக் - ரஃப்ரன் அரசாங்கத்தின் தாக்குதலானது, முற்றிலும் மோசடியானது என்பதை தெளிவாக அடையாளம் காட்டி நிற்கிறது. இந்த இரண்டு இயல்நிகழ்ச்சிகளும், பிரான்ஸ் நாட்டின் பெரு வர்த்தக நிறுவனங்களின் தேவைகளை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், காப்பாற்றி நிற்பதில் அரசாங்கத்திற்குள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

சிராக் மற்றும் சுரோடர் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு அமெரிக்க இராணுவம் ஈராக்கை நிரந்தரமாக பிடித்துக்கொள்வதில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்குவதற்கு முயன்று கொண்டிருப்பது எந்த நம்பிக்கையில் என்றால், வெள்ளை மாளிகையில் உள்ள புஷ்சும் இதர கும்பல்களும் அவர்களுக்கு மறு நிர்மாண ஒப்பந்தங்களில் சாறு நிறைந்த ஒன்றிரண்டை விட்டெறியமாட்டார்களா, என்ற நம்பிக்கையில்தான். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் டொமினிக் டு வில்ப்பன் அங்காராவில் கூறியுள்ளதைப்போல்: "'போர் தேவையா, இல்லையா என்ற கட்டம்' முடிந்துவிட்டது........ தனது, திறந்த மனப்பான்மையையும், மற்றும் நீக்குபோக்குள்ள செயல்முறைத்தன்மையையும் காட்டுவதற்கு பிரான்ஸ் விரும்புகிறது."

சிராக், போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததானது, ஈராக்கில் பிரான்சின் சொந்த ஏகாதிபத்திய நலன்களை தாங்கி நிற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய நடவடிக்கையே தவிர, வேறு ஒன்றுமில்லை என்பது தற்போது வெளிப்படையாக தெரிகிறது. (பிரான்சின் பினா எல்ப் (Fina Elf's oil) எண்ணெய் நிறுவனத்தின் உரிமைகள், ஈராக்கில், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ளது. மேலும் பிரெஞ்சு வங்கிகளுக்கு அந்த நிறுவனம் 7-பில்லியன் டொலர்கள் கடன்பட்டிருக்கிறது.) தற்போது, கொடூரமான ரத்தக்களரி படையெடுப்பு விரைவாக முடிந்துவிட்டதால் போரில் கிடைத்தவற்றை ஏகாதிபத்தியங்கள் பங்குபோடுகின்ற நேரம் வந்துவிட்டது.

ஈராக் மீது, போர் தொடுக்கப்பட்டதும், அந்த நாட்டை பிடித்துக்கொண்டதும், உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களது, வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளோடு நெருக்கமாக சம்மந்தப்பட்டதாகும். 1970-களின் மத்தியிலிருந்து, இந்த தாக்குதல் நடவடிக்கைகளை முதலும், முன்னணியுமாக, அமெரிக்காவின் ஆளும் மேல்தட்டு முன்நின்று நடத்திவருகிறது.

ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சி நிர்வாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, வாழ்க்கைத் தரங்களை சீர்குலைக்கின்ற நடவடிக்கைகளை திணித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு AFL-CIO-தொழிற்சங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதே நேரத்தில் பணக்காரர்களுக்கு மேலும், மேலும், வரிச்சலுகைகளை, வரிக்குறைப்பை செய்துகொண்டு வருகிறார்கள். 1990-களில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட மிதமிஞ்சிய பூரிப்பு காரணமாக, தங்களது செல்வத்தை மிகப்பெரும் அளவில் பெருக்கிக்கொண்ட மெல்லிய தட்டினரான பெரும் பணக்கார வட்டாரங்கள், அண்மையில் என்ரோன் பென்சன் நிதிகள் சூறையாடப்பட்டது, மோசடி செய்யப்பட்டது, போன்ற அண்மைக்கால ஊழல்கள், விளக்கிக் காட்டியவாறு, அப்பட்டமாக கொள்ளையடித்திருக்கின்றனர்.

மிகப்பெரும் பணக்காரர்கள், மகத்தான அளவிற்கு செல்வக்குவிப்பில் ஈடுபட்டிருந்தாலும், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணும் நிலையின் விளிம்புக்கு வந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் இத்தகைய தீர்வுகாண முடியாத பிரச்சனைகள் தான், புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள கொள்ளைக்காரர்களையும், மோசடிப்பேர்வழிகளையும், ஈராக்கில் தொடங்கி சர்வதேச அளவில் கொள்ளையடிப்பதற்கு தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது.

இது, அமெரிக்காவிற்கு மட்டுமே, பொருந்துகின்ற ஒரு இயல்நிகழ்ச்சியல்ல; தாட்சர், மேஜர், மற்றும் பிளேயர், பிரிட்டனில் அதே பாதையைத்தான் பின்பற்றினர். இதேபோன்று, தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்ற தாக்குதல்கள் ஐரோப்பாவின் இதர நாடுகளிலும், குறிப்பாக, பிரான்சில் மித்திரோன், மற்றும் ஜேர்மனியில் கோல் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.

பென்சன் உரிமைகள் மீதான தாக்குதல்கள்;
சிராக் மற்றும் ரஃப்ரனுக்கு அவசியமான நடவடிக்கை

ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் ஆளுகின்ற மேல்தட்டுக்கள் மற்றும், குறிப்பாக சிராக், மற்றும் சுரோடர் ஒன்றை அறிந்திருக்கிறார்கள். அது என்னவென்றால், ``போட்டித்திறன் மிக்க வகையில்", அமெரிக்காவிற்கு இணையாக தாங்கள் செல்லவேண்டும். அமெரிக்காவில் எத்தகைய கொடூரமான நிலைகள், திணிக்கப்பட்டிருக்கின்றனவோ, அதே நிலமைகளை தங்கள் நாடுகளிலும் திணிக்கப்படவேண்டும். மற்றும் மிக அதிகமாக ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள நிலையையும்கூட திணித்து, ஐரோப்பாவில் தொழிலாளர் ஊதியத்தை மலிவாக்குவதற்காக, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

வரும் ஆண்டுகளில் இளைப்பாறியோருக்கு (ஓய்வுபெற்றவர்களுக்கு) கொடுக்கப்பட்டுவரும் பணத்தை பெருமளவில் குறைப்பதற்கு வகை செய்யும் சட்டத்தை இயற்றுவதற்கு பிரெஞ்சு பிரதமர் ரஃப்பரன் ஏற்பாடு செய்துள்ளதன் முக்கியத்துவம் இங்குதான் அடங்கியிருக்கிறது. இது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புஷ் நிர்வாகமும், அவர்களது முன்னோடிகளும், அமெரிக்கத் தொழிலாளர்கள் மீது ஏற்கனவே திணித்த, அதே நிலைகளை இங்கு பிரான்சில் இறக்குமதி செய்வதாகும்.

பிரெஞ்சு சமூக விவகாரத்துறை அமைச்சர் பிரான்சுவா பிய்யோன் (François Fillon) இதை தொலைக்காட்சி பேட்டியில் மிகவும் தெளிவாக அறிவித்திருக்கிறார்: ``இனி, 1995-நிலவரம் இருக்காது, அதற்கு வழியில்லை, நாம் காலம் கடந்துவிட்டோம். தனியார்துறை ஓய்வூதிய திட்டம் இன்னும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பற்றாக்குறை நிலைக்கு வந்துவிடும்`` - (லு மொன்ட்-26-4-03). அந்த அமைச்சர் ஒரு கருத்தை வலியுறுத்தி கூறியிருக்கிறார். மக்கள் வாழுகின்ற வயது, அதிகரிக்கும்போது, ஓய்வூதியம் தரப்படும் அளவை அப்படியே நிலைநாட்டுவது, ஓய்வூதிய முறையையே சிதைத்துவிடும் என்று கூறுகிறார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஆதரிக்கவேண்டும் என்ற நெருக்குதலோடு பிரெஞ்சு ஆளும் வட்டாரங்கள் முயல்வது, உண்மையிலேயே அவை பீதியில் இருப்பதன் மறைமுக வெளிப்பாடுதான். இலாபத்தன்மை குறையுமானால் உலகப் பொருளாதாரத்தில் தங்களது போட்டியாளர்களுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் தோல்வியடைய வேண்டியிருக்கும் என்று ஆளும் வட்டாரங்கள் கருதுகின்றன.

"நம்பவைக்க 100 நிமிடங்கள்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது திட்டத்தை பிறர் ஏற்கச் செய்ய பிய்யோன் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், அரசுத்துறை ஓய்வூதியங்கள் தொடர்பாக தமது அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஆலோசனைகளில் சில விபரங்களை வெளியிட்டார். ஜோஸ்பன் ஆட்சியின் முன்னாள் அமைச்சர் சேகோலென் ரோயால் (Ségolène Royal), 1993-ம் ஆண்டு, எடுவார்ட் பலடூரின் வலதுசாரி அரசாங்கம் அறிமுகப்படுத்திய, 20%-ஓய்வூதிய குறைப்பை மிக ஆவேசமாக கண்டித்தார், மற்றும் தற்போது, தனியார் துறையிலும், ஓய்வுபெற்றோருக்கு முழுமையாக அதே பாதிப்பு வருகிறது.

பிய்யோன் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வியை எழுப்பினார்: ``மேடம், ரோயாலுக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். அவர் ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்தார். பலடூரின் சீர்த்திருத்தத்தை திருத்துவதற்கு அவருக்கு, அவகாசம் நிறைய இருந்தது. ஜோஸ்பன் ஆட்சி அதைச் செய்யவில்லை. சீர்திருத்தம் சரிதான் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை ஜோஸ்பன் அரசாங்கம் கருத்தில் கொண்டுதான், பலடூரின் சீர்திருத்தத்தை திருத்தவில்லை."

சர்வதேச போட்டியினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சந்திப்பதில் இடதுசாரிகள் எந்த அளவிற்கு கையாலாதவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிய்யோன் மற்றும் CGT-தொழிற்சங்கத்தலைவர் பேர்னாட் திபோல்ட் (Thibault) இருவரிடையே நடைபெற்ற நேரடி மோதல்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஓய்வூதிய (பென்சன்) செலவினங்களை குறைப்பதற்கு, உரிமைகளை குறைக்கும் தனது, உத்தேச திட்டங்களுக்கு மாற்றாக திபோல்ட் கூறுகின்ற மாற்றுத் திட்டம் என்ன? என்று பிய்யோன் கேட்டார். இதற்கு பதில் அளிப்பதற்கு தொழிற்சங்கத் தலைவர் தயங்கிக்கொண்டிருந்தார்.

இந்த தயக்கத்தை புரிந்துகொண்ட பிய்யோன், தொழிற்சங்கத் தலைவர் திபோல்ட் (Thibault) தன்னோடு கலந்துகொண்ட பல கூட்டங்களில் அவர் கூறிய கருத்துக்களை கேட்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, திபோல்ட் கூறிய ஆலோசனைப்படி ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை உயரும்போது அதற்கு கம்பெனிகள் லாபத்திலிருந்து பணம் செலுத்தவேண்டும் என்பது நடைபெற முடியாத காரியம். இப்படிச் செய்தால் பிரெஞ்சு வர்த்தகர்கள் போட்டிபோடுகின்ற வல்லமை குறைந்துவிடும், மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வல்லமையும் குறைந்துவிடும் என்றார். இந்த வாதத்திற்கு திபோல்ட் பதில் சொல்ல முடியாமல் தயங்கினார்.

இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்கு

இந்தக் கருத்து மோதல்கள் ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன, தொழிற்சங்கங்களும், பிரெஞ்சு இடதுசாரிகளும், எவ்வளவுதான் தங்களது கொள்கைகளை பிரகடனப்படுத்தினாலும், பிரெஞ்சு அரசாங்கத்தின் தேசிய குறிக்கோளை அவர்களும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைத்தான் இந்த உரையாடல் எடுத்துக்காட்டுகிறது. உழைக்கும் மக்கள் மற்றும் ஓய்வூதியம் (பென்சன்) பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைத்து உலக சந்தையில் பிரான்ஸ் நாட்டு வர்த்தக நிறுவனங்களின் நலன்களை காப்பாற்றவேண்டும் என்பதில் இடதுசாரிகளும், தொழிற்சங்கங்களும் உடன்படுகின்றன. அவர்களது நோக்கம் என்னவென்றால் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற எதிர்ப்பு இயக்கம் சம்பிரதாய எதிர்ப்பு என்ற கட்டத்திற்கு மேலே சென்றுவிடக்கூடாது என்பதுதான்.

இதை வேறு வார்த்தைகளில் விளக்குவது என்றால் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்கட்சி, முதலிய கட்சிகள், அதிகாரபூர்வமாக ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமைதாங்கி நடத்திச் சென்றாலும், அவர்கள் விலைபோகும் கட்டத்திற்கு வந்துவிடுகிறார்கள், தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்களை காட்டிக்கொடுத்து வருகிறார்கள். இவர்கள்தான் கடந்த 20-ஆண்டுகளாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதற்கு பொறுப்பானவர்கள்.

"போட்டித்திறன்" மற்றும் "ஈர்க்கும் விதம்" இவற்றுடன் தொழிலாளர் உரிமைகளை காப்பது, அவர்களது நலன்களை காப்பது ஆகியவை, இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங்க வட்டாரங்களுக்கு கசக்கின்ற விஷயங்கள்; சந்தை சட்டங்களுக்கு எதிராக எதையும் செய்துவிடக்கூடாது என்று ஜோஸ்பன் பிரகடனப்படுத்திய புகழ்பெற்ற அறிவிப்பை மக்களுக்கு நினைவூட்டுவதில் அரசியல் ரீதியில் சரியில்லாத நடவடிக்கைகள் என்று தொழிற்சங்கங்களும், இடதுசாரிகளும் கருதுகின்றன. மிச்சலின் ஆட்குறைப்புகளின்போது (வேலை நீக்கத்தின்போது) இந்த பிரகடனத்தை ஜோஸ்பன் வெளியிட்டார்.

உண்மையிலேயே, கோப்பர்நிக் அமைப்பு ஒரு பிரெஞ்சு சிந்தனையாளர் குழு, அதற்கு ஜேர்மனியின் அட்டாக் அமைப்போடு தொடர்பு உண்டு. அண்மையில், ஒரு புத்தகத்தை அந்த சிந்தனையாளர் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த புத்தகத்தின் தலைப்பு ``பென்சன்களுக்கு சுதந்திர சந்தையிலிருந்து வரும் அச்சுறுத்தல்``, (Les retraites au péril du libéralisme) என்பதாகும். அதில், 1988-முதல், 1991-வரை பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி பிரதமர் மிசேல் ரொக்கா (Michel Rocard) ஆட்சி செய்து வந்தார், அப்போது பென்சனை குறைப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கை தயாரிக்கப்பட்டது. "ரொக்கா அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகள்தான், பலடூர் சீர்திருத்தங்களுக்கு நேரடி உந்துதலாக அமைந்தது" என்ற விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. "நம்பச்செய்ய 100நிமிடங்கள்" கலந்துரையாடலில், பேர்னாட் திபோல்டையும் மற்றும் சேகோலென் ரோயாலையும் முறியடித்த வேகத்தில் மிகுந்த உற்சாகத்தோடு பிய்யோன் வெளியிட்ட பிரகடனம்: "மிசேல் ரொக்கா போன்ற மனிதர்கள், ஒவ்வொரு வாரமும் என்னை தொலைபேசியில் அழைத்து, உங்களது சீர்திருத்தத்தை 'விட்டுவிடாதீர்கள்' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்`` (லு மொன்ட் -26, ஏப்ரல் 2003)

ஜோஸ்பன் நிர்வாகம், ரஃப்ரனின் அரசாங்க நிலைப்பாடுகளை ஒட்டி உத்தேச மாற்றங்களை அறிவித்ததுடன், அதற்கான ஆய்வுகளுக்கும் ஏற்பாடு செய்வதில் தனியார் துறைமீது தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது

எப்ஓ (FO) நீங்கலாக CT® (CGT) உட்பட எல்லா தொழிற்சங்கங்களும், "முடிவுகள் பட்டியலை" திணிப்பதற்கு முயன்றன. எரிவாயு மற்றும் மின்சார ஊழியர்கள் அடங்கிய தொழில்களை தனியார்மயமாக்குவதற்கு முன்னோட்டமாக, முதலாளிகள் மற்றும், ஆட்சித்தரப்போடு, தொழிற்சங்கங்கள் முடிவுகள் பட்டியலை உருவாக்கின. இந்த பேரத்தை பிரதான யூனியன்கள் ஏற்றுகொள்ளவில்லை, அப்படி ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு குறிப்பிடத்தக்க காரணம் உண்டு. தங்களது பென்சன் திட்டங்கள், சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன மற்றும் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு 50% உயர்த்தப்பட்டது.

FO உட்பட, ஏழு பிரதான தொழிற்சங்கங்களும், பெப்ரவரி முதல் தேதியன்று ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டு, ஆர்ப்பாட்டத்தையும் செய்தன. முக்கியமான கோரிக்கையான அனைவருக்கும், 37.5 வருட ஓய்வூதியம் (annuities) வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. இதுதான் பிரதான கோரிக்கை, இதையே கைவிட்டுவிட்டார்கள்.

இப்படி தொழிற்சங்கங்கள், அரசுடன் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்டு, தேசிய பொருளாதாரத்தையும் தேசிய அரசையும் தற்காத்து நிற்பது, அத்தகைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களது நலன்களை தற்காத்து நிற்பதற்கு வல்லமையில்லாதவை என்பதைக்காட்டுகிறது. "தீவிர" இடதுசாரி "ட்ரொட்ஸ்கிச" குழுக்கள், LCR (Ligue Communiste Révolutionnaire), PT (Parti des Travailleurs) மற்றும் LO (Lutte ouvrière) ஆகியவை, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இடைவிடாது, வக்காலத்து வாங்கும் அமைப்புக்கள்.

PT- யின் பத்திரிகையான, தொழிலாளர் செய்தியில் (Informations Ouvrières), தனது மே-2-ந்தேதி பதிப்பில் டானியல் குளுக்ஸ்ரைனின் (Daniel Gluckstein) தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது, அது தொழிலாளர்களுக்கு சொல்லுவது, என்னவென்றால்:- ``ஒன்றுபட்ட இயக்கத்தின், அனைத்து மட்டங்களிலும், தொழிலாளர்கள், அவர்களது தொழிற்சங்கங்கள், அவர்களது சம்மேளனங்கள், கூட்டமைப்புக்கள், ஆகியவை ஒருங்கிணைந்து பொதுவான, முழக்கத்தை எழுப்பி பொது வேலை நிறுத்தம் செய்தால்தான், ஆட்சியை நாம் கீழேயிறங்கிவந்து, அதன் திட்டத்தை கைவிடச் செய்ய முடியும், முழக்கம் என்னவென்றால், பிய்யோன்- ரஃப்ரன், திட்டம் அனைவருக்கும் 37.5-என்பதை வாபஸ் பெறவேண்டும் என்பதாயிருக்கவேண்டும்.``

இதுபோன்ற கோரிக்கைகள், வலியுறுத்தல்கள் ஒரு மாய்மாலத்தை உருவாக்குகின்றன. தெருக்களில் நடத்தப்படுகிற ஆர்ப்பாட்டங்களால் மேலும், ஒரு 6% நிதி ஒதுக்கீடு செய்வதற்கு, வழிவகை பிறக்கலாம் என்பது அந்த மாயையாகும். உண்மையிலேயே அந்த தலையங்கம் எழுதியவருக்கு முழுமையாக ஒரு உண்மை தெரியும். அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லை என்பது அவருக்கு தெளிவாகவே தெரியும். ஏனெனில், இதற்கு முன்னர் நாம் பார்த்ததைப்போல், நாம் கூறியதைப்போல் தொழிற்சங்கங்கள் அடிப்படையிலேயே அராசாங்கத்துடன், ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றன.

சீர்திருத்தத்தில் ஒரு பகுதி ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது

அனைத்து தொழிலாளர்களுக்கும் பிரான்சில் ஓய்வூதிய செலவு உயருவதை தடுத்து நிறுத்துவதற்கான திட்டம் 4-கட்டங்களைக் கொண்டது. முதலாவது கட்டம் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியங்களில் சீர்திருத்தம், இது 1993-ம் ஆண்டு (பலடூர்) மற்றும் 1996- (மேலதிக ஓய்வூதியங்கள்) மூலம் தொடக்கிவைக்கப்பட்டது. மற்றும், 2008-ம் ஆண்டிலிருந்து அரசு ஊழியர்களது ஓய்வூதியங்கள் தொடர்பான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. அவற்றின் மூலம், தனியார் மற்றும் பொதுத்துறை ஓய்வூதியங்களும் புதிதாக சீர்குலையும்.

இரயில்வே தொழிலாளர் போன்றவர்களுக்கு, சிறப்பு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோன்ற துறைகளில் தொழிலாளர்கள், அதிக வல்லமை உள்ளவர்களாகவும், போராடும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பதால், 1995-ம் ஆண்டு, யூப்பே தீட்டிய திட்டம் செயல்படவில்லை. அதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களை தனிமைப்படுத்தும் சில சலாமி தந்திரங்களை (துண்டு துண்டாக நடைமுறைப்படுத்தும் தந்திரங்களை) அரசாங்கம் கையாள முடியுமென்று நம்புகிறது. "இந்த அனுபவங்களால், எச்சரிக்கை அடைந்த ரஃப்ரன் சிறப்பு ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டங்களை, தள்ளிவைக்க முடிவு செய்தார். தனித்தனியாக ஒவ்வொரு தொழிலையும் தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்." (Le Monde, 20 April 03). இத்தகைய தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாகும் தொழில்களில் எரிவாயு, மின்சாரம், பாரிஸ் பஸ் போக்குவரத்து போன்றவையும் அடங்கும்.

தனியார்துறை பென்சன் சீர்திருத்தங்கள், (முழு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு பங்களிப்பு 37.5 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக ஆவது) 2004-ம் ஆண்டுதான் முழுமையாக செயல்படத் தொடங்கும். அவற்றை தொடுவதற்கு இடது அரசாங்கங்கள் மறுத்ததும், தொழிற்சங்கங்கள் அத்தகைய திட்டங்களை எதிர்த்து போராட மறுத்ததும், தொழிலாளர்களிடையே தங்களது சமூக உரிமைகளை தட்டிப்பறிக்கின்ற எதிர்ப்புரட்சி நடைபெற்று வருகின்றது என்ற விழிப்புணர்வை குறைத்துவிட்டது. இத்தகைய விழிப்புணர்வை மட்டுப்படுத்துகின்ற வகையில் தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. பணியாற்றாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 10%-பென்சன் இழப்பு நிரந்தர அபராதம் விதிக்கப்படும்.

பொதுத்துறை ஓய்வூதியங்களில் பிய்யோனின் சீர்திருத்தங்கள்

ஐம்பது லட்சம் பொதுத்துறை ஊழியர்களின் பென்சன்கள் இந்த முறையில், கொடூரமான தண்டனை விதிப்பு மூலம், குறைக்கப்படும். இப்படி குறைக்கப்படுவது 2008-ம் ஆண்டு வாக்கில் 3%-லிருந்து 6%-ஆக உயரும். பணியாற்றும் ஆண்டுகள், 2008-ல் 40-ஆகவும், 2012-ல் 42-ஆகவும் உயரும். தனது 25-வயதில் கல்வித் தகுதி பெறுகின்ற ஒரு ஆசிரியர் 67-வயது வரை பணியாற்றி ஆகவேண்டும். அவர் 60-ஆவது வயதில் ஓய்வுபெற்றால் 42% அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பிட்ட சம்பளத்திற்கான ஓய்வூதிய இலக்கு 66 சதவீதம் தற்போதைய 78 சதவீதத்திலிருந்து குறைக்கப்படுவது, குறிப்பிட்ட சம்பளத்தைப் பாதிப்பதோடு, வயதான ஊழியர்களை அதிக ஊதியம் பெறும்போது, வேலையிலிருந்து நீக்கிவிட்டு இளைஞர்களை முதலாளிகள் வேலையில் அமர்த்துவார்களானால், ஓய்வுபெறும் சராசரி வயது 57-ஆண்டுகளை சுற்றி நிற்கும். இதன் மூலம் ஓய்வூதியம் கடுமையாக வெட்டப்படும்.

தனிப்பட்ட ஓய்வூதிய நிதிகளை, பங்கு முதலீடுகள் அடிப்படையில் கணக்கிடுகின்ற முறையை வளர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மிக ஆவேசமாக, சுதந்திரம், தனிமனித உரிமை என்றெல்லாம் பேசுகிறார்கள். ஓய்வூதியம் என்பது ஒரு தனிமனிதன் பொறுப்பல்ல; ஒரு சமுதாய உரிமை, Medef என்ற முதலாளிகளின் அமைப்பு இதில் முதலாளிகளை முழுமையாக விலக்கிக்கொள்ள விரும்புகிறது. சமத்துவம், நீதி, என்பது எல்லாம் கோடீஸ்வரர் கூடுமிடங்களில் (club) கூறப்படுகின்ற வார்த்தைகள், தொழிலாளர்களை சுரண்டுவதறகான முயற்சி. ஓய்வுபெறுபவர்கள் இளைய தொழிலாளர்களுக்கு சுமை என்பதுபோல் இளைஞர்களுக்கு காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். இது வயதானவர்கள் மீது, வெறுப்பை கிளறிவிடுகின்ற முயற்சியாகும்.

பிய்யோனின் நடவடிக்கைகள், முதலாளிகள் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது, அபிலாஷைகளை பூர்த்தி செய்கிற அளவிற்கு அமையவில்லை என்ற குறைபாடும் தெரிவிக்கப்படுகிறது. உண்மையிலேயே ஆளும் கட்சி UMP- M.P க்களில் ஒருவரான அலன் மட்லன், (Alain Madelin) இது மேற்பூச்சு வேலைதான் என்று வர்ணித்தார். UDF- பிரதிநிதி ஒருவர், அவர் இடைநிலை குழுவைச் சார்ந்தவர், அவர் இந்த நடவடிக்கையில் துணிச்சல் காட்டப்படவில்லையென்று வர்ணித்திருக்கிறார்.

நமது உரிமைகளை காக்க ஒரு சர்வதேச கொள்கை

உலகம் முழுவதிலும், பொருளாதார அமைப்பு சிதைந்துகொண்டு வருவது, வளர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் ஆளும் வட்டாரங்கள் அத்தகைய சிதைவுகளுக்கு உழைக்கும் மக்கள் தங்களது உழைப்பால் தியாகம் செய்யவேண்டும் என தாக்குதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில்தான் பிரான்சில் பென்சன் குறைப்பு நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முடியும். புஷ் நிர்வாகம் எடுத்துக்காட்டி வருவதைப்போல, அவர்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் அவர்களது சொந்த நாட்டு உழைக்கும் மக்களையே தாக்குகின்ற அளவிற்கு விரட்டிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், ஈராக் போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் உழைக்கும் மக்களையும் அடிமைப்படுத்தி, அவர்களது வளங்களை சூறையாடுவதற்கும் விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றன. ஐவரிகோஸ்ட் நாட்டில், பிரான்ஸ் தலையிட்டிருப்பது, இந்தப் போக்கு அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதைக் காட்டுகின்றது.

இந்தப் பிரச்சனைகளை உழைக்கும் மக்கள் தங்களது சொந்த நாடுகள் என்ற குறுகிய எல்லைக் கோட்டிற்குள் கட்டமைப்பிற்குள் தீர்த்துக்கொள்ள முடியாது. பழைய, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்களோடு சேர்ந்து தங்களது பிற்போக்கு தேசிய கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டி வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தால் அவர்கள் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். பிரான்சின் சர்வதேச தொழில் போட்டித் திறனை, பாதுகாக்கிறோம் என்ற பெயரால் இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளை அவர்களே ஆதரிக்கவும், திணிக்கவும் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

சென்ற ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், உழைக்கும் மக்கள், ஐந்தாண்டு ஜோஸ்பன் அராசங்கத்திற்கு தீர்ப்பு வழங்கினார்கள். லூ பென்னை விட அவருக்கு குறைந்த வாக்குகளை இட்டார்கள். சோசலிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள், மற்றும் பசுமைக் கட்சிக்காரர்கள், தற்போது நடைபெற்றுவரும் தாக்குதல்களுக்கு நேரிடையாக கதவுகளை திறந்துவிட்டார்கள். சிராக்கிற்கு வாக்களிக்குமாறு இந்தக் கட்சிகள் கோரிக்கைவிடுத்ததன் மூலம் இதற்கு வழி செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து விசுவாசமாக PT, LO ஆகியவை WSWS- விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இரண்டாவது சுற்று வாக்குப்பதிவை, புறக்கணிக்குமாறு WSWS- அப்போது வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தக் கட்சிகள் அனைத்தும், சர்வதேச அளவில் நடைபெறும் உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிராக்கும் மற்றும் ரஃப்ரனும் கலந்துகொள்வதை தட்டிக்கேட்கவோ உரிமைகளை தற்காத்து நிற்கவோ விரும்பவும் இல்லை அதற்கான வல்லமையும் இல்லை. மாறாக பொதுத் தேர்தலில், சிராக் திட்டங்களுக்கு 82%-வாக்களித்து, அவர் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்தனர்.

மேலும், உழைக்கும் மக்கள், சர்வதேச தாக்குதலின் ஒரு பகுதியாக நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகளை முற்றிலும், தூய்மையான தன்னெழுச்சியான போராட்டங்களால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியாது. முதலாளித்துவத்தை தூக்கி வீசக்கூடிய புதிய சர்வதேச செயல் திட்டம் தேவை, தற்போது முதலாளித்துவம் சந்தித்து வருகின்ற நெருக்கடியின் மூலம், அனைத்து தொழிலாளர்கள் மீதான சமூக மற்றும் பொருளாதார தாக்குதல்களாகும். இந்த அடிப்படையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் இதர நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சர்வதேச சோசலிசத்திற்காக ஒன்றுபட்டு போராட்டத்தை நடத்தவேண்டும்.

இந்தவகையில் நீங்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து படிக்கின்ற வாசகர்களாக ஆகுமாறு நாங்கள் அழைக்கிறோம். உலக சோசலிச வலைத் தளம் அத்தகைய ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக போராடி வருகின்றது. உங்களுக்கு மேலும் தகவல் வேண்டுமெனில், அத்தகைய இயக்கத்தை கட்டுவதில் பங்குபெற வேண்டுமெனில், தயவு செய்து எம்மோடு தொடர்புகொள்ளுங்கள். இத்தாக்குதலின் சர்வதேச முக்கியத்துவம் குறித்து உங்களுடன் கலந்துரையாட ஆர்வமுள்ளவர்களாக உள்ளோம்.

Top of page