:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
The Columbia shuttle tragedy: Lessons of the Challenger inquiry
கொலம்பியா விண்வெளிக் கல விபத்து: சேலஞ்சர் விசாரணையில் கிடைத்த
படிப்பினைகள்
By Shannon Jones
6 May 2003
Back
to screen version
பிப்ரவரி முதலாம் தேதி அன்று கொலம்பியா விண்வெளிக் கலம் தரையிறங்கும்போது
வெடித்துச் சிதறியது தொடர்பான ஆரம்ப விசாரணையில் சில உண்மைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அது, விண்வெளி ஆய்வுத்
திட்டத்தின் பாதுகாப்புத்தரம் படிப்படியாக குறைந்துகொண்டு வந்திருக்கிறது. மற்றும் வர்த்தக நலன்களுக்கும், பென்டகனுக்கும்
கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், விண்வெளி ஆய்வு நிறுவனம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது
என்பதாகும்.
கொலம்பியா விண்வெளிக் கல எரிபொருள் தாங்கிகளில் ஏற்பட்ட கசிவினால்
விண்வெளிக் கலத்தின் வலதுபக்கத்தில் உள்ள வெப்ப தடுப்புக் கவசங்கள் சேதமடைந்து இந்த அழிவு ஏற்பட்டிருக்கக்கூடும்
என்று விசாரணையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வெப்ப வாயுக்களானது தடுப்புக் கவசங்களில் உள்ள இடைவெளிகளில் ஊடுருவிச்
சென்றுள்ளதால், பூமிக்குள் இந்த விண்வெளிக் கலம் நுழையும்போது வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள்
கருதுகின்றனர்.
விண்வெளிக் கல திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக பல்வேறு
எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னரும், கொலம்பியா விண்வெளிக் கலம் வெடித்துச் சிதறி அதன் மூலம் ஏழு விண்வெளி
வீரர்கள் பலியாகிவிட்டனர். இந்த துன்பியல் சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாங்களுக்கு முன்பு நாசாவில் (NASA)
பணிபுரிந்த ஓய்வுபெற்ற ஒரு பொறியாளர் ஜனாதிபதி புஷ்ஷிற்கு விண்வெளிக் கல பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பாக
எச்சரிக்கை விடுக்கும் பல கடிதங்களை எழுதி, விண்வெளிக் கல பயணத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு
கேட்டுக்கொண்டார். அத்துடன் விண்வெளிக் கலத்தின் நுட்பக் கருவிகளில் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளையும் அவர்
சுட்டிகாட்டியிருந்தார்.
அதே ஆண்டு நாசாவில் உள்சுற்றுக்கு விடப்பட்ட ஒரு குறிப்பில், விண்வெளிக்
கல செயல்பாடு தொடர்பான முப்பது வகை ''உயர் ஆபத்துக்கள்'' பற்றிய கவலை தெரிவிக்கப்பட்டது. விண்வெளிக்
கலத்தின் வெளிப்புற தாங்கிகள் மற்றும் பாதுகாப்பு தடுப்பு பகுதிகள் தொடர்பான தரக் கட்டுப்பாட்டு பிரச்சனைகள்
ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. கவனக்குறைவு காரணமாக ஏதாவது ஒரு தவறை கண்டுபிடிக்காது விட்டுவிட்டால்,
இதுபோன்ற நுட்ப தவறுகளால், விண்வெளிப் பயணமே ''தோல்வியடைந்துவிடும்'' என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
அதே ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில்
நாசாவில் ஊழியர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகவும், இருக்கின்ற ஊழியர்கள் ''அளவிற்கு அதிகமாக'' பணியாற்றி
களைப்புற்றிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. 2001 மார்ச் மாதம் நாசாவின் விண்வெளி ஆலோசனைக்குழு ஒரு அறிக்கையை
வெளியிட்டிருந்தது. நீண்ட கால பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான பணி சீர்குலைந்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், நாசா ஐந்து ஆலோசனைக்குழு உறுப்பினர்களையும் மற்றும் இரண்டு ஆலோசகர்களையும்
பதவி நீக்கம் செய்தது.
கொலம்பியா விண்வெளிக் கலம் சிதைந்து விழுந்த பின்னர் நடைபெற்ற முதலாவது
பொது விசாரணையில், ஜோன்சன் விண்வெளி ஆய்வு நிலைய இயக்குநரான ஜபர்சன் ஹோவல் (Jefferson
Howell) தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்தார்.
விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 10.000 ம் பேரில் 3.000 பேர் மட்டுமே நாசாவின்
ஊழியர்கள் இருப்பதுடன், மற்றவர்கள் துணை ஒப்பந்தக்காரர்கள் என்று குறிப்பிட்டார் அத்துடன் நாசாவில் பணியாற்றும்
ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்று அவர் எச்சரித்தார்.
விண்வெளிக்கல திட்ட இயக்குநர் ரான்திட்டமோர் (Ron
Dittemore) சாட்சியம் அளிக்கும்போது 1993 முதல் விண்வெளி
ஏஜென்சி தனது சிவில் சேவை தொழில்நுட்ப ஊழியர்களில் 50 வீதமானவர்களை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு அம்சங்களை உத்திரவாதம் செய்துகொள்ளும் வகையில் போட்டி போட்டு பணியாற்றுகின்ற, விழிப்போடு
கண்காணிக்கின்ற அம்சங்களை படிப்படியாக இழந்துகொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இப்படி சாட்சியம் அளித்து
பல வாரங்களுக்குப் பின்னர் அவர் நாசாவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
வெள்ளை மாளிகையும் மற்றும் நாசாவின் தலைமை அதிகாரிகளும் தங்களது
கம்பெனிகள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டுவதற்கு ஏராளமான துல்லியமான சான்றுகள்
கிடைத்திருக்கின்றன. ஆதலால் கொலம்பியா விபத்து பற்றிய விசாரணையானது மூடி மறைக்கும் செயலாகத்தான் அமையும்.
விசாரணையில் உயிர் நாடியான பிரச்சனைகள் எதையும் கடுமையாக விசாரிக்கமாட்டார்கள் என்றும் கருதப்படுகிறது.
கொலம்பியா விபத்து விசாரணை வாரியத்தில், நாசாவில் பணியாற்றுபவர்கள்
தான் இடம்பெற்றிருக்கிறார்கள். மிகப்பெரும்பாலான விசாரணை உறுப்பினர்களை நாசாவின் நிர்வாகியான சியான் ஓக்கீஸ்
(Sean O'Keefe)
நியமித்திருக்கிறார். இந்த விசாரணை வாரியத்தின் தலைவர் கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற
அட்மிரல் ஹேரோல்ட் கெக்மேன் ஜீனியர் என்பவராவர். இவர் நேட்டோவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தலைமை தளபதியாக
பணியாற்றியவர். விசாரணை வாரியத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் பாதிப்பேர் இராணுவ பின்னணி உள்ளவர்கள்.
இவர்கள் இந்த விசாரணையின்போது எவர் மீதும் பழிபோடவோ அல்லது குற்றத்தை நிரூபிக்கவோ வழிவகை இல்லை
என்பதை கெக்மென் தெரிவித்துவிட்டார். ''சாட்சிகளுக்கு சிறப்பு உரிமை அந்தஸ்து வழங்கப்படும்'' என்று உறுதியளித்து,
அவர்களது பெயர்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று குறிப்பிட்டு, ''இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க
விரும்புகிறோமே தவிர குற்றம் செய்த தரப்பினரை கண்டுபிடிப்பதற்காக அல்ல'' என்று கெக்மேன் தெளிவுபடுத்தினார்.
கொலம்பியா விண்வெளிக் கலம் நொறுங்கியதைத் தொடர்ந்து நாசா
உருவாக்கிய ஐந்து விண்வெளிக் கலங்களில் மூன்று தான் பாக்கியிருக்கின்றன. சேலஞ்சர் விண்வெளிக் கலம் 1986 ஜனவரி
மாதம் விண்ணில் செலுத்தப்பட்டதும் வெடித்துச் சிதறியதால் அதிலிருந்த 7 பேர்கள் பலியாகினர்.
சேலஞ்சர் விசாரணை
அழிந்துபோன சேலஞ்சர் புலன் விசாரணையில் எடுக்கப்பட்ட மூடி மறைக்கும்
நடவடிக்கைகள் ஆகியவற்றை மிகவும் நுணுக்கமாக ஆராயவேண்டும். அப்போதுதான் கொலம்பியா விசாரணையை சரியாக
அணுகமுடியும். சேலஞ்சர் விண்வெளிக் கலம் வெடித்து சிதறிய நேரத்திலும் இதேபோன்று நாசா ஊழியர்களுக்கு கடுமையான
நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்டன. பல எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் அந்த துயர நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலஞ்சர் விண்ணில் வெடித்துச் சிதறிய விபத்தானது, அதுவரை நடைபெற்ற
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் மிக மோசமான பின்னடைவாக இருந்தது. தரையிலும் மற்றும்
தொலைக்காட்சி வழியாகவும் மில்லியன்கணக்கான மக்கள் இந்தக் கலம் வெடித்துச் சிதறுவதை நேரில் பார்த்தனர். அதில்
பலியானவர்களில் முதலாவது விண்வெளி ஆசிரியரான கிறிஸ்டா மெக் ஆலிவ் (Christa
McAuliffe) என்பவரும் ஒருவராவர்.
ஜனாதிபதி ரோனால்ட் ரீகன், சேலஞ்சர் விண்வெளிக் கலம் வெடித்துச்
சிதறியது குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் வெளியுறவு செயலாளர் வில்லியம் ரோஜர்ஸ் (William
Rogers) தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தார்.
இருபது பேர் கொண்ட அந்த விசாரணைக் கமிஷனில் பல்வேறு தரப்புக்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். சந்திரனில்
காலடி எடுத்துவைத்த முதல் விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்டிரோங் மற்றும் இயற்பியல் நேபால் பரிசு பெற்ற விஞ்ஞானியான
ரிச்சார்ட் பேமன் உட்பட பலர் இந்த விசாரணைக் கமிஷனில் இடம்பெற்றிருந்தனர்.
ஆரம்பத்திலிருந்தே இந்த விசாரணைக் கமிஷன் எதிர்கொண்ட சாட்சியத்தில்
பாதுகாப்பு பற்றிய எச்சசரிக்கைகளை பொருட்படுத்தாமல் நாசா அதிகாரிகள் சேலஞ்சர் கலத்தை செலுத்துவதற்கு
கட்டளையிட்டார்கள் என்பதுதான். அன்று மாலை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரீகன் தனது உரையை துவக்குகின்ற நேரத்தில்
சேலஞ்சர் விண்வெளிக் கலம் விண்ணில் செலுத்தப்படவேண்டும் என்று வெள்ளை மாளிகையின் தலையிட்டால் கட்டளையிடப்பட்டதாக
அப்போது குற்றம் சாட்டப்பட்டது. சேலஞ்சர் செலுத்தப்படுவதில் மேலும் தாமதம் செய்யப்படக்கூடாது என்று வெள்ளைமாளிகை
தலையிட்டு அவசரப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்பு மெக் ஆலிபருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனாதிபதி
தனது உரையில் சேர்த்துக் கொள்வதற்காக நாசா குறிப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தது.
பூமியின் சூழற்சிக்கு மனிதர்களை வெடிமருந்துகள் ஏற்றிய ராக்கெட்டில் அதிவேகமாக
செலுத்துவது என்பது சிக்கல் மற்றும் ஆபத்துக்கள் அதிகம் நிறைந்ததாகும். சேலஞ்சர் விண்வெளிக் கலம் விண்வெளியில் அழிந்ததானது
வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரும் அணு ஆயுதம் அல்லாத வெடிப்பாகும். இந்த வெடிப்பு ஏறத்தாழ 1000 தொன்
TNT
வெடிமருந்துக்கு சமமானதாகும்.
பாதுகாப்பு தொடர்பாக நாசா அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டது
மிகவும் வருந்தத்தக்கது. ரீகனின் நட்சத்திரப் போர்த் திட்டத்தில் முக்கியமாக இடம்பெற்றிருந்தது இந்த விண்வெளிக் கலமாகும்.
எனவே இராணுவம் நிர்ணயித்த நிறைவேற்ற முடியாத காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக சேலஞ்சர் செலுத்தப்பட்டது.
அத்துடன் நாசாவின் கம்பெனி வாடிக்கையாளர்கள் கொடுத்துவந்த நிர்பந்தமும் இதில் சேர்ந்துகொண்டது.
விண்வெளிக் கலத்தின் இறுதிக்கட்ட வடிவமைப்பை பட்ஜெட் மற்றும் அரசியல்
நிர்பந்தங்கள் பாதித்தன. சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது முதல் நாசாவின் பட்ஜெட் தொடர்ந்தும் குறைக்கப்பட்டு
வருவதுடன் செலவினங்களை வெட்டுவதற்காக வடிவமைப்பு தரத்தையும் குறைத்துக் கொண்டார்கள். நாசாவிற்கு தனது
பட்ஜெட்டை நியாயப்படுத்துவற்காக விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இராணுவ பயன்பாட்டை வெளிக்கிக்காட்டவேண்டிய
அவசியம் ஏற்பட்டது. இதனால், வடிவமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆகவே விண்வெளிக்
கலத்தின் தரையிறங்கும் வல்லமையும் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டன.
O-வளையங்கள்
(O-Ring)
செயல்படாத தன்மை
சேலஞ்சர் விண்வெளிக் கலம் செயல்படாமல் வெடித்து சிதறியதற்கு உடனடிக்
காரணத்தை விசாரணைக் கமிஷன் விரைவில் நிலைநாட்டியது. உறுதியான ராக்கெட் பூஸ்டர்களை இணைக்கும் பிரிவுகளில்
பொருத்தப்பட்டிருந்த O-
வடிவ ரப்பர் வளையங்கள் செயல்படவில்லை. விண்வெளிக் கலம் செலுத்தப்பட்ட நேரத்தில் வரலாறு காணாத அளவிற்கு குளிர்
சூழ்நிலை நிலவியதால் O-
வளையங்கள் செயல்படவில்லை என்பதை இயற்பியல் விஞ்ஞானி பேமன் நிரூபித்தார்.
விசாரணைக் கமிஷன் நடத்திய ஒரு தொலைக்காட்சி நேரத்தில் இந்த
அம்சத்தை விளக்கிக் காட்டுவதற்காக, அந்த விஞ்ஞானி குளிர்ந்த நீரில் அந்த வளையத்தைப் போட்டார். அது உடனடியாக
நெறுங்கும் நிலைக்கு வந்துவிட்டது. இத்தகைய வளைங்கள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் சரியாக மூடமுடியாமல் போய்விட்டதால்,
வெப்பவாயுக்கள் வெளியேறி பூஸ்டரின் பக்கவாட்டில் தீப்பிடித்தது. ஆகவே விண்வெளியில் செலுத்தப்பட்டு 73 வினாடியில்
இந்த தீயினால் வெளியிலிருக்கும் பிரதான எரிபொருள் தாங்கி வெடித்தது.
விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில்
O-வளையங்கள் நீண்ட காலமாகவே
கவலை தருவதாக அமைந்திருந்தது என்பது நிரூபிக்கப்பட்டது. 1972-73 களில் உறுதியான பூஸ்டர்கள்பற்றி
ராக்கெட்டிற்கான அடிப்படை வடிவமைப்பு கட்டத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில்
விண்வெளி ஆய்வுத்திட்டம் துவக்கப்பட்ட முதல் 20 ஆண்டுகளில் உறுதியான ராக்கெட் பூஸ்டர்கள் பயன்படுத்தப்படவில்லை.
ஏனென்றால், அவை மிகவும் ஆபத்தானவை என்று கருதப்பட்டன. ஆனால், பாதுகாப்பான திரவ எரிபொருள் பூஸ்டர்களைவிட,
உறுதியான பூஸ்டர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு மிகக்குறைந்த அளவில் செலவிட்டால் போதுமானதாகும்.
உறுதியான ராக்கெட் பூஸ்டர்களுக்கான திட்டத்தை நாசா ஏற்றுக்கொண்டாலும்,
மேலும் செலவினங்களை வெட்டுவதற்கு அது முயன்றது. O-வளையங்கள்
இல்லாத ஒரே உறுதியான ராக்கெட் பூஸ்டர்களை அமைக்கும் முயற்சியை நாசா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக,
மோர்டன்-தியாக்கோல் (Morton-Thiokol)
நிறுவனம்
தாக்கல் செய்த செலவு குறைந்த திட்டத்தில் ராக்கெட் பூஸ்டர்களை அமைப்பதற்கு
ஏற்றுக்கொண்டது. அத்துடன் அரசியல் செல்வாக்கும் இந்த முடிவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம்
அமைந்திருக்கும் ஊட்டா (Utah)
பகுதியிலிருந்து வந்தவர்தான் நாசாவின் பட்ஜெட்டை கண்காணிக்கும் செனட் குழு தலைவராவர்.
எனவே தியாக்கோல் வடிவமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1981 ஆம் ஆண்டு விண்வெளிக் கலத்திட்டம் துவங்கியதிலிருந்து
O-வளையங்கள் தொடர்ந்தும்
கவலையளித்துக்கொண்டே வந்தன. 1982 ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தில் இவைகள் ஆபத்தை உருவாக்கக்கூடும்
என்று எச்சரிக்கை செய்திருந்தது. உண்மையில், விண்வெளிக் கலங்கள் பலமுறை செலுத்தப்பட்டபோது,
O-வளையங்கள் கணிசமான
அளவிற்கு சிதைந்து இருந்தன.
நாசாவின் ஆய்வு அறிக்கை ஒன்று விண்வெளிப் பயணத்தின் பாதுகாப்பு
அம்சங்கள் தொடர்பாகவும், ''கலம் செலுத்தப்படும்போது ஏற்படும் தவறுகள்'' மிகப்பெரிய பேரழிவாக ஆகிவிடும்
என்றும் எச்சரித்தது. சேலஞ்சர் வெடித்து சிதறுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாசாவிற்கு ஒரு அறிக்கை கிடைத்தது.
அந்த அறிக்கையில் உறுதியான ராக்கெட் பூஸ்டர்கள் ஆனது விண்வெளிக் கலத்திலேயே அதிக ஆபத்துக்களை உருவாக்கின்ற
பகுதி என்றும், இந்த பூஸ்டர்கள் 35 க்கு 1 என்ற விகிதத்தில் செயல்படத் தவறிவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
விண்வெளிக் கல நுட்பக் கருவிகள் அனைத்தும் தவற முடியாதவை
பாதுகாப்பானவை என்று நாசா உத்திரவாதம் செய்துகொள்ள விரும்பினாலும்,
O-வளையங்கள் தொடர்பாக
விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
இதர பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் நிலவின. விண்வெளி
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் விண்வெளிப் பயணத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடு திட்டமிடக்கூடாது என்று எச்சரிக்கை
செய்திருந்தன. அத்துடன் விமானிகள் வாரத்தில் 7 நாட்களில் 10 முதல் 12 மணிநேரம் பணியாற்றியுள்ளார்கள். பென்டகன்
குறிப்பாக, தனது உளவு செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கு நிர்பந்தங்களை அதிகரித்து வந்ததோடு, ரீகனின்
''நட்சத்திரப் போர்'' திட்டத்தில் ராக்கெட்டுகளுக்கு எதிரான உளவு செயற்கைக் கோள்களை உருவாக்கும் ஆய்வுகளுக்காக
ஊழியர்களுக்கு அதிக நிர்பந்தம் கொடுத்து வந்தது.
சேலஞ்சர் செலுத்தப்பட்டது
சேலஞ்சர் விண்வெளிக் கலம் செலுத்தப்பட்ட நேரத்தில் வெப்பநிலையானது
வழமையைவிட அளவிற்கு மிகக்குறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன்னர் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு
ஜனவரி 28 ந்தேதி மீண்டும் சேலஞ்சரை செலுத்துவதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டபோது, இரவு வெப்பநிலை 23F
பாகையாகயிருந்தது. விண்வெளியில் செலுத்தப்படுகிற நேரத்தில் 38
பாகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்னரான பயனங்களில் 52 பாகை குளிரில் விண்வெளிக் கலம்
செலுத்தப்பட்டிருந்தது. சேலஞ்சர் செலுத்தப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் மோர்டன் தியாக்கோல் (Morton-Thiokol)
பெறியாளர்கள், உறுதியான ராக்கெட் பூஸ்டர்களுக்கும் மற்றும்
குறிப்பாக O-வளையங்களுக்கும்
குளிர்காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து நாசா அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தனர்.
அந்த நேரத்தில்,
O-வளையங்களுக்கு குளிரினால்
ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தெரியவில்லை. என்றாலும் முந்தைய ஆண்டு குளிர்நிலையில் செலுத்தப்பட்ட விண்வெளிக் கலத்தில்
பொருத்தப்பட்டிருந்த O-வளையங்கள்,
கணிசமான அளவிற்கு சிதைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மோர்டன் தியாக்கோல் பொறியாளர்கள் குளிர்நிலை
O-வளையங்களின்
நெகிழும் தன்மையை குறைத்துவிடலாம். ஆதலால் முறையாக சீலிடுவதில் தவறு ஏற்பட்டு வெப்ப வாயுக்கள் இணைப்புகள்
வழியாக வெளியேறக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருந்தனர்.
விண்வெளிப் பயணத்தை திட்டமிட்ட தேதியில் நடத்தவேண்டும் என்று நிர்பந்தம்
கொடுக்கப்பட்டு வந்ததால், மார்ஷல் விண்வெளிக்கல நிலைய அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கையை
எடுத்தனர். விண்வெளிக் கலம் செலுத்தப்படுவது பாதுகாப்பற்ற நிலையாக அமைந்துவிடும் என்பதை மோர்டன்-தியாக்கோல்
நிரூபிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நாசா அதிகாரிகளின் இந்த கோரிக்கையானது வழமைக்கு மாறானதாக
இருந்தது. அதாவது துணை ஒப்பந்தக்காரர்கள் தங்களது கருவிகள் பாதுகாப்பானவை என்று நிரூபிக்கவேண்டும்
என்பதாகும். ஆனால் அந்த நிறுவனப் பொறியாளர்கள், தங்களது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. அப்போதிருந்த
நிலவரத்தில் விண்வெளிக் கலத்தை செலுத்துவது பாதுகாப்பான நடைமுறையல்ல என்று வலியுறுத்தினர். தனது உயர் அதிகாரம்
படைத்த, முக்கியத்துவம் வாய்ந்த வாடிக்கையாளருக்கு எந்தவிதமான பிரச்சனையும் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக
மார்டன்-தியாக்கோல் நிர்வாகம், தனது பொறியாளர்களின் கருத்துக்களை தள்ளுபடி செய்துவிட்டு நாசா விண்வெளிக்
கலத்தை செலுத்துவதற்கு ஒப்புதலை வழங்கியது.
விண்வெளிக் கருவிகளை தயாரிக்கும் சர்வதேச ரொக்குவல் (Rockwell
International) நிறுவனமும் குளிர் நிலையில் விண்வெளிக் கலத்தை
செலுத்துவது குறித்து தனது கவலையை தெரிவித்தது. விண்வெளிக் கலத்திலிருந்து அல்லது அது செலுத்தப்படும் மேடையிலிருந்து
பனிக்கட்டிகள் விழக்கூடும். அவை விண்வெளிக் கலத்தை பாதிக்கும் என்று அந்த நிறுவன பொறியாளர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.
என்றாலும், நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக ரொக்வெல் பொறியாளர்கள் தங்களது எச்சரிக்கையின் கடுமையை குறைத்துக்
கொண்டு, விண்வெளிக் கலத்தின் பாதுகாப்பிற்கு தாங்கள் உத்திரவாதம் தரமுடியாது என்று மட்டுமே எச்சரிக்கை செய்தனர்.
எந்தச் சூழ்நிலையிலும் விண்வெளிக் கலத்தை செலுத்தியே ஆகவேண்டும்
என்பதில் நாசா நிர்வாகம் உறுதியாகயிருந்தது. துணை ஒப்பந்தக்காரர்களை மிரட்டி, விண்வெளிக் கலத்தை செலுத்துவதற்கு
நிபந்தனையுடன் அவர்களது ஒப்புதலை பெற்றதன் பின்னர் விண்வெளிக் கலத்தை செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்தது.
அந்த விண்வெளிக் கலத்தில் பயணம் செய்த ஏழு விண்வெளி வீரர்களுக்கும் பொறியாளர்கள் தெரிவித்த தகவலைக்கூட நாசா
நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
விசாரணைக் கமிஷன் அறிக்கை
சேலஞ்சர் விண்வெளிக் கலம் வெடித்துச் சிதறியது தொடர்பாக விசாரணை
செய்வதற்காக ஜனாதிபதி நியமித்த விசாரணைக் கமிஷன் 1986 ஜூன் 6 ம் தேதி தனது அறிக்கையை வெளியிட்டது.
விண்வெளிக் கலத் திட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளை அறிக்கை சுட்டிக் காட்டியது. ''தவறான சீல்
வடிவமைப்பு தொடர்பாக உள்நிர்வாக பகுதிகளில் எடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக தியாக்கோல் நிறுவனமும்
மற்றும் நாசாவுமே பொறுப்பு'' என்ற அறிக்கை கூறியது. விசாரணைக் கமிஷனர்களில் ஒருவரான இயற்பியல் விஞ்ஞானி ஹேயன்
குறிப்பிட்டதைப்போல், ''ஏதோ ரஷ்ய சூதாட்டம் நடப்பதுபோல் முடிவை எடுத்துவிட்டார்கள். விண்வெளிக் கலம் பறக்கிறது.
O-வளையம்
சிதைந்தும் பறக்கிறது ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த விண்வெளிப் பயணத்தில் ஆபத்து அதிகம் இல்லை என்று கருதி
தரத்தை சற்று குறைத்தனர். சென்ற முறை நீங்கள் தப்பிவிட்டார்கள். ஆனால் இதேபோன்று நீங்கள் அடிக்கடி செய்துகொண்டிருக்க
முடியாது'' என்று அந்த விஞ்ஞானி குறிப்பிட்டார். (1)
O -வளையம் சேலஞ்சர் பயணத்திற்கு
முன்பே செயல்பாட்டில் சீர்குலைந்துவிட்டது என்பதற்கு சான்றுகள் இருந்தன. அந்த சீர்குலைவு குறிப்பிடத்தக்க அளவிற்கு கடுமையாகயிருந்தது.
அந்த குறைப்பாட்டை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் முந்திய ஆய்வுகளில் குளிர்ந்த
பருவ நிலைக்கும் O-வளையத்தின்
சேதத்திற்கும் இடையே நிலவுகின்ற உறவுகளை பாதிப்புக்களை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும் என்று இந்த அறிக்கை கூறியது.
இந்த அழிவு மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிற தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப்
பிரச்சனைகளில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படவேண்டும் எனவும்,
O-வளையங்கள்
முற்றிலுமாக மறு வடிவமைப்பு செய்யப்பட வேண்டுமெனவும், மேலும் பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகள் சீரமைக்கப்பட
வேண்டும் எனவும் விசாரணைக் கமிஷன் பரிந்துரை செய்தது.
இருந்தபோதிலும் இந்த அறிக்கையானது ரீகன் நிர்வாகத்தின் மீதும், மற்றும்
நாசாவின் தலைமை அதிகாரிகள் மீதும் எந்தவிதமான பழியையும் போடவில்லை. விண்வெளிக்கு கலம் செலுத்தப்படும்போது
பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று பொறியாளர்கள் தெரிவித்த கவலைகள் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
மாறாக, நாசாவின் மார்ஷல் விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் பல இடைநிலை அதிகாரிகள் மீதே விசாரணைக் கமிஷன்
பழிபோட்டது.
விசாரணைக் கமிஷன் உறுப்பினர்களை குறிப்பாக இயற்பியல் விஞ்ஞானி ஹேமனை,
விசாரணை அறிக்கையில் கடுமையான வாசகங்களை பயன்படுத்தாது மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரோஜர்ஸ்
நிர்பந்தங்களை தொடுத்தார். நாசாவின் ஆபத்துக்களை மதிப்பிடும் நிர்வாக நடைமுறைகளை ஹேமன் மிகக் கடுமையாக
கண்டித்து எழுதியிருந்தார். 100.000 க்கு ஒன்று என்ற விகிதத்தில் விண்வெளி ஓட விபத்து நடக்கும் என்று அவர்கள்
மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இது தன்னிச்சையாக அவர்கள் விருப்பப்படி ஆபத்து இல்லை என்று காட்டுவதற்காக
உருவாக்கிய புள்ளி விபரமாகும். உண்மையிலேயே இந்த விகிதம் 50 க்கு 1 அல்லது 100 க்கு 1 ஆகயிருக்கலாம் என்று
இந்த விஞ்ஞானி எழுதியிருந்தார்.
''பொறியாளருடைய முடிவைப் பார்க்கும்போது, அதற்கும் நிர்வாகத்தின்
மதிப்பீடுகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி காணப்படுகிறது. ஆனால் இத்தகைய மதிப்பீடுகளை உள்ளே பணியாற்றும் அதிகாரிகள்
அல்லது வெளியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்வதற்காக இப்படி செய்திருந்தாலும், நாசா நிர்வாகம் மிதமிஞ்சிய கற்பனைத்
தேரை ஓடவிட்டு, நம்ப முடியாத அளவிற்கு ஆபத்துக்களை மதிப்பீடு செய்திருக்கிறது'' என்று இந்த விஞ்ஞானி மேலும்
எழுதியுள்ளார். (2)
விசாரணைக் கமிஷனின் பல உறுப்பினர்கள் இந்த அறிக்கை குறித்து தங்களது
அதிருப்தியை தெரிவித்தனர். நாசாவின் தலைமை அதிகாரிகளுக்கு பிரச்சனைகள் தெளிவாக தெரிவிக்கப்படாமல்
இருந்திருந்தால்கூட, தங்களது கீழ் அதிகாரிகளுக்கு தலைமை அதிகாரிகள் தெளிவான ஓர் கட்டளையை பிறப்பித்திருந்தனர்.
அதாவது விண்வெளிக் கலத்தை செலுத்துவதை தடுத்து நிறுத்தும் எதையும் கேட்க விரும்பவில்லை என்று அவர்கள் தங்களுக்கு
கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டனர் என்பதாகும்.
மேலும், தாமதம் எதுவும் செய்யவேண்டாம் என்று நாசாவை கோருகின்ற
வகையில் ரீகன் அதிகாரிகள் தலையிட்டார்கள் என்று நிலவுகின்ற வதந்திகள் குறித்து விசாரணைக் கமிஷன் உறுப்பினர்கள் வெள்ளை
மாளிகையில் ஏன் விசாரணை நடத்தவில்லை? என்று செனட் சபை உறுப்பினர் எர்னஸ்ட் ஹோலிங்ஸ் விசாரணைக் கமிஷன்
உறுப்பினர்களைக் கேட்டார். அதற்கு ரோஜர்ஸ் கொதித்தெழுந்து ''ஜனாதிபதி அப்படி எதுவும் நடக்கவில்லை என்று
கூறிவிட்டார். அப்படி நடந்ததற்கு எந்தவிதமான சான்றும் இல்லை'' என்று கூச்சலிட்டார்.
கொலம்பியா விண்வெளிக் கலம் வெடித்துச் சிதறியது அதே வகையான நிர்பந்தங்கள்,
முரண்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆகும். கொலம்பியா விண்வெளிக் கலம் 1970 களின் துவக்கத்தில் செலவுகளை
வெட்டிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட சமரச வடிவமைப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்டது தான். விண்வெளிக்
கலங்கள் 21 வது நூற்றாண்டுத் தொழில்நுட்ப தரத்திற்கு உயர்த்தப்படுவதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் நாசாவிற்கு
வழங்கப்படவில்லை. எனவே, முதிர்ச்சியாகிக் கொண்டு வருகின்ற விண்வெளிக் கலங்கள் பேரழிவை நோக்கி பயணம் செய்வதற்காக
காத்துக்கொண்டு நிற்கின்றன.
அறிவியல் அடிப்படையிலான புலனாய்வு மற்றும் விண்வெளி வீரர்களின்
பாதுகாப்பு ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இராணுவத் தேவைகளையும் மற்றும் வர்த்தக நலன்களையும் முதன்மையாக்கி
காரியங்கள் நடைபெறுகின்றன. கொலம்பியா விண்வெளிக் கலத்தின் சிதைவு பற்றிய விசாரணை சேலஞ்சர் விசாரணைக்
கமிஷனைவிட அரைகுறையாக மோசமானதாகத்தான் இருக்கும். விபத்திற்கான திட்டவட்டமான காரணங்கள் நிலைநாட்டப்படுவதற்கு
முன்னரே விண்வெளிப் பயணம் விரைவில் மீண்டும் துவக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் நிதி ஆதிக்கக் தட்டின் நலன்களுக்கு கீழ்படிந்து
நடைபோடுகின்ற நிலவரம் இருக்கின்றவரை விண்வெளித் திட்டங்களில் நியாயமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை
காணமுடியாது. இன்று விண்வெளி ஆய்வுத் திட்டமானது பிரதானமாக தேசிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு வாய்ப்பாக இருப்பதுடன்
இராணுவ வலிமையை உயர்த்துகின்ற கருவியாகவும் மாறிவிட்டது. அத்தோடு கம்பெனிகளின் லாபத்திற்கு ஒரு வாய்ப்பாக
கருதப்படுகின்றவரை, நியாயமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்த விண்வெளி ஆய்விற்கு வழியில்லை.
பொருளாதாரம், சமூகம் மற்றும் அறிவியல் வாழ்வு ஆகிய ஒவ்வொரு துறையிலும்
தற்போது நடைபெறுவதைப்போல் விண்வெளி ஆய்விலும் முன்னேற்றம் இல்லை. தனியார் லாப நோக்கை மட்டுமே உந்துசக்தியாக
கொண்டிருக்கும் ஒரு பொருளாதார அமைப்பில், சமுதாயம் முழுவதற்குமான தேவைகளை பொருட்படுத்தாத ஒரு முறையில்,
முற்போக்கு வழியில் அமைந்த விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் சாத்தியமல்ல.
குறிப்புகள்:-
Notes:
1. The Presidential
Commission on the Space Shuttle Challenger Accident Report, June 6, 1986
chapter 6
2. Ibid. Appendix F, Personal observations on the reliability of the Shuttle
|