World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party holds meeting against Iraq war in Colombo

சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் ஈராக் யுத்தத்திற்கு எதிரான கூட்டத்தை நடத்தியது

By our correspondent
10 April 2003

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) கடந்த திங்களன்று ஈராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு கட்சியின் எதிர்ப்பையும் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான சோசலிச பதிலீட்டையும் தெளிவுபடுத்த கொழும்பில் ஒரு பகிரங்க விரிவுரையை நடத்தியது. சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், போரின் வரலாற்று வேர்களை புலப்படுத்தும் "ஈராக் மீதான அமெரிக்க போரும் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்" என்ற தலைப்பில் விரிவுரையை நடத்தினார்

சுமார் 100 இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் சமூகமளித்திருந்தனர். சோ.ச.க, கூட்டத்தை அறிவிக்கும் முகமாக "ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராக அனைத்துலக தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்பு!" எனும் உலக சோசலிச வலைத் தள (உ.சோ.வ.த) அறிக்கையின் 5,000 பிரதிகளை தமிழிழலும் சிங்களத்திலும் விநியோகித்திருந்தது. உ.சோ.வ.த. வாசகர்கள் உட்பட பல மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் துண்டுப் பிரசுரத்தை மதித்து கூட்டத்ததிற்கு சமூகமளித்திருந்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த உ.சோ.வ.த ஆசிரியர் குழு உறுப்பினர் கே.ரத்னாயக, 18 நாட்களாக நடக்கும் போரானது ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு பொய்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றது எனக் குறிப்பிட்டார். "பேரழிவு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை." "ஈராக்கின் 'விடுதலை' என்பது பாதுகாப்பற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் குழுந்தைகளின் படுகொலையேயன்றி வேறொன்றும் அல்ல," என அவர் தெரிவித்தார். இந்த கொடூர ஆக்கிரமிப்பானது உலகை இராணுவ வழிவகைக்கு அடிமைப்படுத்துவதற்கான அமெரிக்க திட்டத்தின் முதற்படியே ஆகும் எனவும் அவர் எச்சரிக்கை செய்தார்.

டயஸ் பிரதான உரையை சிங்களத்தில் ஆற்றினார். அது கூட்டத்திலிருந்த தமிழ் பேசும் மக்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டது. அவர், சோ.ச.க. வும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு) சம சிந்தினையாளர்களும் ஈராக்கில் நிகழும் மிலேச்சத்தனமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை ஐயத்திற்கிடமின்றி கண்டனம் செய்கின்றோம், எனக் கூறி பேச்சை ஆரம்பித்தார்.. "புஷ் நிர்வாகத்தின் தலைமையில் தொடுக்கப்பட்டுள்ள போரை எதிர்க்கும் உலகம் பூராவும் உள்ள பல மில்லியன் கணக்கான தொழிலாள ஒடுக்கப்படும் மக்களுடன் நாம் தோளோடு தோள் நிற்கின்றோம்," என அவர் குறிப்பிட்டார்.

நன்னெறி சார்ந்த நேர்மையான எதிர்ப்பும் கண்டனமும் போதுமானதல்ல. தொழிலாள வர்க்கமானது யுத்தத்திற்கு முடிவுகட்ட தனது சுய மூலோபாய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், என அவர் விளக்கினார். "ஏகாதிபத்தியத்தின் வலிந்து தாக்கும் நடவடிக்கைகளுக்கு அடிபணிந்து போயுள்ள இலங்கை அரசாங்கமும் இந்திய உபகண்டத்தின் ஏனைய முதலாளித்துவ ஆட்சிகளும் எடுத்துள்ள கோழைத்தனமான நிலைப்பாடானது, தொழிலாள வர்க்கம் அனைத்துலக ரீதியில் தனது வர்க்க சோகோதரர்களுடன் இணைத்து ஒரு சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக்காட்டுகின்றது" என அவர் குறிப்பிட்டார்.

சதாம் ஹூசேன் மீதான ஈராக்கிய மக்களின் எதிர்ப்பு, அமெரிக்கத் தலைமையிலான இராணுவங்களையும் மற்றும் நாட்டை இராணுவம் ஆக்கிரமிப்பதையும் வரவேற்பதாக திரும்பவில்லை என அவர் வலியுறுத்தினார். ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அபூர்வமான அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், பஸ்ராவில் இருக்கும் எண்ணெய் தொழிலாளர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் வேலைக்கு திரும்புவதில்லை என தீர்மானித்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். இந்தத் தீர்மானம், ஹூசேன் அரசாங்கத்தாலோ அல்லது ஈராக்கிய கனவான்களாலோ அனுமதிக்கக்கூடியது அல்ல, ஏனெனில் அவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு அஞ்சுவதிலும் பார்க்க ஈராக்கிய தொழிலாள வர்கக்திற்கு அஞ்சுகிறார்கள்."

ஈராக் யுத்தத்திற்கு எதிரான முன்னெப்போதுமில்லாத சர்வதேச ஆர்ப்பாட்டங்கள் மிக ஆழமான வரலாற்று முக்கியத்துவம் கொண்டனவாகும், என டயஸ் தெரிவித்தார். ஆனால் உண்மையில், புஷ் நிர்வாகம் மில்லியன் கணக்கான மக்களின் குரல்களை அலட்சியம் செய்துள்ளமை, போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு ஒரு அரசியல் சவாலை முன்வைத்துள்ளது: ஏகாதிபத்திய யுத்தத்தை நிறுத்துவது எப்படி சாத்தியமாகும்? இந்தக் கேள்விக்கு பதிலளிக்க கடந்த நூற்றாண்டின் அரசியல் படிப்பினைகளை பரீட்சித்துப்பார்ப்பது அவசியமாகும், என அவர் விளக்கினார்.

இரண்டு உலகப் போர்களின் வரலாற்றை ஆய்வுசெய்யுமிடத்து, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் இரண்டும் காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகள் மீதான செல்வாக்கு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளின் சர்ச்சைகளிலேயே ஆரம்பமாகின என டயஸ் சுட்டிக் காட்டினார். முதலாம் உலக யுத்தத்தின் தோற்றம், சேர்பியா மீதான ஆஸ்திரிய ஆக்கிரமிப்பாகவும் இரணடாம் உலக யுத்தத்தின் தோற்றம் போலாந்து மீதான நாசி தாக்குதலாகவும் விளங்குகின்றன.

அமெரிக்கா ஈராக்குடன் நிறுத்தப் போவதில்லை. பூகோள மேலாண்மைக்கான அதன் திட்டங்கள் அதனை தவிர்க்க முடியாதவாறு அதன் ஏகாதிபத்திய எதிரிகளுடனான மோதலுக்கு வழிவகுப்பதோடு, இன்னுமொரு உலகப் பேரழிவுக்கு களம் அமைக்கும். புஷ் நிர்வாகத்தின் அமெரிக்க ஆதிக்க வேட்கைக்கான ஓட்டம் பலம்வாந்த நிலையில் இருந்தன்றி உள்நாட்டில் காணப்படும் ஆழமான அரசியல் பொருளாதார நெருக்கடியிலுருந்து ஊற்றெடுத்துள்ளது, என அவர் விளக்கினார்.

"ஏகாதிபத்தியத்தினால் உலகம் மிலேச்சத்தனத்துக்குள் தள்ளப்படுவதை தடுக்கவல்ல சமூக சக்தி அனைத்துலக தொழிலாள வர்க்கமேயாகும். இந்த வரலாற்றுப் பணிகள், முதலாளித்துவ மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உள்ளேயே இருக்கும் அதன் சீர்திருத்தவாத அடிவருடிகளிடமிருந்தும் தொழிலாளர் வர்கக்ம் அரசியல் சுயாதீனமானவதை வேண்டுகிறது" என டயஸ் கூறினார்.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமானது, ஏகாதிபத்திய உலக ஒழுங்கை தூக்கி வீசி மனித குலத்தின் பெரும்பான்மையினரது அவசர தேவைகளை திருப்தி செய்வதன் அடிப்படையிலான சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்பும் அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். டயஸ் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களிடம் அனைத்துலுகக் குழுவின் வேலைத்திட்டத்தை படிக்குமாறும், சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்பும் அத்தியாவசிய கருவியாக உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

விரிவுரையானது, வருகைதந்திருந்த சில இளைஞர்களுக்கு மத்தியிலான உத்தியபூர்வமற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஒரு நேரடி கேள்வி பதில் களத்தை திறந்து வைத்தது. நிதியுதவிக்கான ஒரு கோரிக்கைக்கான பிரதிபலிப்பாக சோ.ச.க. வின் மாதாந்த நிதியின் காற்பங்கான 2,580 ரூபா திரட்டப்பட்டது. கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் 950 ரூபாவுக்கு மேற்பட்ட மதிப்புள்ள மார்க்சிச இலக்கியங்களை வாங்கினார்கள்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இளைஞர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்: "ஐக்கிய நாடுகள் சபை இந்தப் போரை நிறுத்தும் என நினைத்துப் பார்ப்பது கூட ஒரு நகைச்சுவையாகும். ஐ.நா. நிறுவப்பட்டது ஏகாதிபத்திய நலன்களை பேணுவதற்கேயாகும். ஐ.நா.வுக்கு முன்னோடியாக இருந்த நாடுகளின் சங்கத்துக்கு என்ன நடந்தது? இத்தாலி அபிசினியாவை ஆக்கிரமித்ததை அதனால் தடுக்க முடியவில்லை. இன்று ஐ.நா.வும் அதே தலைவிதியையே எதிர்கொள்கிறது."

"இந்த யுத்தத்தில் இலங்கை அரசாங்கமும் அமெரிக்காவை ஆதரிக்கிறது. இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. அதனால்தான் இலங்கை அரசாங்கம் அமெரிக்க போரை எதிர்க்கவில்லை. 40 நாடுகள் ஈராக்கிற்கு எதிரான தனது போரை ஆதரிப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அந்தப் பட்டியலில் இலங்கையும் அடங்கியிருக்க வேண்டும்.."

இன்னுமொரு இளைஞர் "இப்போர் புஷ் நிர்வாகத்தின் பாசிச பண்பைக் காட்டுகிறது. முதலாளித்துவ சீரழிவின் கீழ் முதலாளி வர்க்கம் பாசிசத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அமெரிக்கா பாரிய வேலையில்லா பிரச்சினையையும் பொருளாதார அழிவையும் அனுபவிக்கின்றது," என்றார்.

கூட்ட முடிவின் பின், அநேக இளைஞர்கள் தாம் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு பற்றி மேலும் கலந்துரையாட விரும்புவதாக தெரிவித்தனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved