World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பாEurope on rations: the Afghan war and the dilemma of European capitalism பங்கீட்டில் ஐரோப்பா: ஆப்கான் யுத்தமும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சிக்கலான நிலைமையும் பகுதி 1 | பகுதி 2 By Peter Schwarz உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழுவின் உறுப்பினரான பீட்டர் சுவாட்ஸ் ஜனவரி 17, 2002 அன்று வழங்கிய விரிவுரையின் முதலாவது பகுதியை இங்கு பிரசுரிக்கின்றோம். இந்த விரிவுரை அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னி நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அனைத்துலகப் பாடசாலையில் வழங்கப்பட்டது. ஐரோப்பாவின் பன்னிரண்டு நாடுகளில் கடந்த ஜனவரி 1ம் திகதி புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெஸ்டாஸ், (Pesetas) லிரா, (Liras) ட்ரெக்மா, (Drachmas) பிராங்க், (Francs) மார்க் (Marks) ஆகிய நாணயங்களுக்குப் பதிலாக, ஏறத்தாள 300 மில்லியன் ஐரோப்பியர்கள் தற்போது ஒரு பொது நாணயமான யூரோவை (Euro) பயன்படுத்துகின்றனர். யூரோ வலையமானது தெற்கில் போர்த்துக்கல், ஸ்பெயின் இத்தாலி மற்றும் கிரீசில் இருந்து மத்திய பிரதேசமான பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பேர்க், ஒல்லாந்து, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா ஊடாக வடக்கில் பின்லாந்துவரை நீண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பதினைந்து நாடுகளில் பிரித்தானியா, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் மாத்திரம் இதில் இணைந்து கொள்ளவில்லை. யூரோவின் அறிமுகமானது கண்டத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பின் ஊடாக ஒரு பாரிய நகர்வை பிரதிநிதித்துவம் செய்வதோடு அந்தவகையில் இது சந்தேகத்துக்கிடமின்றி முற்போக்கானதாகும். எடுத்த எடுப்பில் இந்த நகர்வுகளுக்கும் தற்போது ஆப்கானிஸ்தானில் நிகழும் யுத்தத்துக்குமிடையில் சிறிதளவே தொடர்புள்ளதாக தோன்றலாம். எவ்வாறெனினும் ஒரு ஆழ்ந்த வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்கும்போது தவிர்க்க முடியாத விதத்தில் இவ்விரண்டுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பு புலப்படும். இவை இரண்டுமே கடந்த பத்தாண்டுகளாக சர்வதேச அரசியலில் முக்கியமான விடயங்களுடன் சம்பந்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரதான வல்லரசுகளிடையே மீண்டும் பூகோள ரீதியிலான மேலாதிக்க நிலைக்கான போராட்டம், உலகில் மேலாதிக்க பலம் மற்றும் உலகை மீளப்பங்கிடல் என்பன வெடித்தெழுந்துள்ளன. மூன்றாண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாணயங்களுக்கிடையே இந்த யூரோ ஒரு பரிமாற்றல் நாணயமாக நிச்சயிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் சர்வதேச கொள்கை பற்றிய சஞ்சிகைகளின் பல கட்டுரைகள் இந்நடவடிக்கையின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடின. யூரோ பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், இதன் விளைவாக ஸ்ரேலிங் (sterling) நாணயத்துக்கு பதிலாக சர்வதேச நாணய அரங்கில் முதன்மையானதாக டொலர் அறிமுகப்படுத்தப்பட்ட 1920 ம் ஆண்டுக் காலம் முதல் அமெரிக்கா வகித்துவரும் அரசியல் மேலாதிக்க நிலைக்கும் ஒரு சவாலாகலாம் என் அவர்கள் முடிவுக்கு வந்தனர். உதாரணமாக ஒரு அமெரிக்க பொருளியலாளரான சீ.பிரட் பேர்க்ஸ்டன் (C. Fred Bergsten) Foreign affairs இல் எழுதுகையில்: "அனைத்துலக பொருளாதார கட்டமைப்பில் யூரோ அறிமுகமானது புதிய அம்சத்தை வழங்கியுள்ளதோடு, 2ம் உலக யுத்தத்திலிருந்து அமெரிக்கா வகித்துவரும் மேலாதிக்க நிலைக்கு மாற்றாக உயரக் கூடும். யூரோ சர்வதேச நிதி ஆதிக்கத்தில் டொலர் வகிக்கும் இடத்திற்கு சவாலாக அமையக் கூடும்." [1] இவரின் ஜேர்மன் சகபாடி ஒருவர் பிரெட்ரிக் ஏபேட் அமைப்பின் (Friedrich Ebert Foundation) ஒரு வெளியீட்டில், ஐரோப்பிய நாணய ஒன்றியம் "அமெரிக்காவின் எதிர்கால அதி உயர் தனி பலத்துக்கு ஓர் சக்திமிக்க மற்றும் பலமான சவாலாக விளங்குகிறது. மேலும் எழுபதாண்டுக்கு பின்னர் முதல் தடவையாக டொலர் நாணயம் ஒரு பலத்த எதிரியான யூரோவை சந்திக்கப் போகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். [2] அமெரிக்க மூலதனமானது தனது மேலாதிக்க நிலைக்கு சவாலாகும் இதனை ஓர் அமைதியான ரீதியில் ஏற்றுக்கொண்டிருக்கப் போவதில்லை. தனது பொருளாதார ஆதிக்க நிலைக்கு ஏற்பட்டுள்ள சவாலை எதிர் கொள்ளத் தனது இராணுவ மேலாண்மையை பாவிக்கும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திரும்பத் திரும்ப ஒலிக்கும் அமெரிக்க இராணுவமயமாக்கலில் அடங்கியுள்ள தர்க்கம் இதுவேயாகும். அதுவே தற்போதைய ஆப்கானிஸ்தானிய யுத்தத்தில் உச்ச கட்டத்தை அடைந்துள்ள வெளிப்பாடாகும். எதிர்கால அமெரிக்க - ஐரோப்பிய முரண்பாடுகள் அதிகரிக்கும் எதிர்கால அரசியல் அபிவிருத்திகளில் ஆதிக்கம் செலுத்தும் பிரச்சினையின் வித்துக்களையே நாம் இங்கு காண்கிறோம். ஒரு சில அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் தற்போது இதனை வெளிப்படையாக ஊர்ஜிதப்படுத்தினாலும் கூட, உலக பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களைக் கொண்டு பார்க்கையில்: அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நலன்களின் பேரிலான மோதல் ஒன்று தவிர்க்க முடியாதுள்ளது. அத்துடன் இந்த பூகோளரீதியிலான ஆளுமைக்கும், பொருளாதார நலன்களுக்குமான போராட்டமானது மேன்மேலும் வெளிப்படையான இராணுவ ரீதியிலான வடிவங்களுக்கே இட்டுச் செல்லும். கடந்த உரையில் டேவிட் நோர்த் குறிப்பிட்டபடி அமெரிக்காவுக்கு எதிராக, ரஷ்யாவும் சேர்ந்த அல்லது சேராத சகல ஐரோப்பிய வல்லரசுகளினது கூட்டு இத்தகைய பிரச்சினைகளின் எந்த வடிவத்தை பெறும் என்பதைப் பற்றி நாம் முன் கூட்டியே கூற முடியாதுள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் பலத்துடன் உள்ள ஐரோப்பாவின் மீள் பிரிவாக்கம்; சீனா, ரஷ்யா அல்லது இந்தியாவுக்கு எதிரான ஐரோப்பாவுடனான அமெரிக்க உடன்படிக்கையாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்த பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு கிடையாதென்று மட்டும் நாம் கூறலாம். உண்மையில் நாம் இதனை ஒரு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விடயம் அடிப்படையில் பார்க்கவில்லை. தொழிலாள வர்க்கம் இதனை எதிர்க்காதிருப்பின் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முலதனங்களை ஒன்றுக்கொன்று எதிராக இட்டுச் செல்லும் இதே போக்கானது 1945ம் ஆண்டிலிருந்து கண்டிராத இராணுவ கொந்தளிப்புகளை உருவாக்குவதுடன் சமூக மோதல்களை தீவிரப்படுத்தி பரந்துபட்ட அரசியல் தகர்வுகள் பல கோடி மக்களை அரசியல் பக்கம் ஈர்ப்பதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கு வழி காட்டுவது எமது பணியாகும். மற்றுமொரு ஏகாதிபத்திய யுத்தத்தின் அச்சுறுத்தலுக்கு பதிலாக, அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தை சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் ஐக்கியப்படுத்துவதே ஒரே ஒரு வழியாகும். இப்பணியின் மையமாக தேசிவாத, பேரினவாத போக்குகளுக்கு எதிரான போராட்டம் உள்ளது. இது குறிப்பாக ஐரோப்பாவில் முக்கியமானது. ஏனெனில் ஓரளவு அது பலவீனமாக காணப்படுவதால், அமெரிக்காவுக்கு எதிரான பேரினவாதம் இடதுசாரி குறியீடாக மாற்றப்படலாம். அமெரிக்க இராணுவமயமாக்கல் தோற்றத்திற்கான எமது பதில் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு அதனை எதிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதல்ல. ஐரோப்பிய கலாச்சாரமானதும், நியயமான ஐரோப்பிய அரச பாங்கிற்கு எதிராக டெக்ஸாஸ் ஜோர்ஜ் டபிள்யு புஷ் உடைய கொள போய் (cow boy) நடவடிக்கையை முன்வைக்கவில்லை. தற்போது ஐரோப்பா அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் பலவீனமாயிருக்கலாம். ஆனால் வரலாறானது, ஐரோப்பிய முதலாளித்துவம் விசேடமாக ஜேர்மன் முதலாளித்துவம் இந்த வாய்ப்பின்மையிலிருந்தும் விடுபடும் முகமாக பாரிய மிலேச்ச குற்றங்களை செய்யக் கூடியதே என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தற்போதைய எழுச்சியானது, முழு முதலாளித்துவ அமைப்பின் தீர்க்க முடியாத முரண்பாடுகளின் பெறுபேறுகளாகும் என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அமெரிக்க பொருளாதாரம், இராணுவம் மற்றும் அரசியல் ஆதிக்கத்தின் பூர்வீகம் கடந்த நூற்றாண்டின் முதல் அரைபகுதியிலிருந்து அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கமும் அரசியல் அதிகார பலமும் உதயமானது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா ஒரு விரைவான கைத்தொழில் பொருளாதார அபிவிருத்திக்குள்ளாகி, மிகவும் அகன்ற அதன் தேசிய எல்லைகள் அதன் பொருளாதார வளர்ச்சியை தாங்குமளவிற்கு விரைவில் குறுகியமைந்தன. ஐக்கிய அமெரிக்காவானது முதலில் கரிபியனிலும் தென் அமெரிக்காவிலும் பசுபிக்கிலும் பின்னர் ஐரோப்பாவிலும் ஏகாதிபத்திய விரிவாக்கலில் இறங்கியது. முதலாம் உலகப் போரானது பழைய கண்டத்தில் அதன் மேலாதிக்க நிலையின் ஆரம்பத்தை குறிப்பிடுகின்றது. இந்த யுத்தம் அமெரிக்காவை உயர்த்தியும் ஐரோப்பாவை கீழிறக்கியும் உலக சமநிலையை ஒரு பாரிய மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. ஐரோப்பிய வல்லரசுகள் தம் முன் ஒருவரை ஒருவர் அழித்தும் நாசப்படுத்திக் கொண்ட அதே வேளையில் அமெரிக்கா யுத்தத்தில் செல்வந்தனாகவும், முன்னரிலும் பார்க்க அதிகார பலம் மிக்கதாகவும் வெளிப்பட்டது. முன்னர் ஐரோப்பாவுக்கு குறிப்பாக இங்கிலாந்துக்கு உரிமையாயிருந்ததான முக்கிய தொழிற்சாலை, பண்டங்களுக்கான களஞ்சியம், உலகின் மத்திய வங்கி என்பதை அது கைப்பற்றிக் கொண்டது. அமெரிக்காவின் அரசியல் மேலாதிக்க நிலை அதன் பொருளாதார மேலாதிக்க நிலையை அடிப்படையாக கொண்டிருந்தது. அது உலகின் தங்க வளத்தின் 69 சதவீதத்துக்கு உரிமை கொண்டிருந்ததுடன், உலகின் முக்கிய பண்டங்களின் மூன்றில் இரண்டுக்கு இடைப்பட்டவற்றை உற்பத்தி செய்தது. 80 சதவீதமான உலகின் கார்கள், 70 சதவீதமான உலகின் எண்ணெய் வளத்தையும், மேலும் இரும்பு, உருக்கு உற்பத்தியில் 60 வீதமானவை அமெரிக்க மண்ணிலும் உற்பத்தியாகின. ஐரோப்பாவானது யுத்தத்தில் உருக்குலைந்து சிதைவுற்றதுடன், பல எல்லைகளாக பிரிக்கப்பட்டதுடன், அமெரிக்க கடன்களில் இவை தங்கியிருந்துடன் அதன் அழுத்தத்தின் கீழ் சுகப்படுத்தப்படும் வந்தது. முதலாளித்துவத்தின் கீழ் இதைனத் தவிர வேறெந்த வழியுமே எஞ்சியிருப்பதில்லை. ஏனெனில் தொழிலாளர் இயக்கம் அதன் தலைமைத்துவ நெருக்கடியினால் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஐரோப்பிய முதலாளித்துவம் பாசிசம் என்ற வியாதியை நோக்கி அபிவிருத்தியுற்றது. இந்த பாசிசத்தின் கடமைகள் இரு அம்சம்களைக் கொண்டது: ஒன்று, தொழிலாளர் அமைப்பினை சிதைப்பது, மற்றது முதலாளித்துவத்தின் மரண முடிவை இராணுவ சக்தியினால் வேறுவழியை காட்டுதல் என்பதாகும். 1918ல் ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்புதலில் தோல்வி கண்ட ஜேர்மனி 1947ல் மீண்டுமொரு முறை முயற்சித்து மேலும் ஒரு தடவை தோல்வி கண்டது. அமெரிக்காவின் பொருளாதார வளங்கள் உள்நாட்டில் சமூக நெருக்கடியை "புதிய கொடுக்கல்வாங்கல்" (New Deal) தீர்க்குமளவு பலம் கொண்டிருந்தமையினால் நாசி ஜேர்மனிக்கும், ஜப்பானுக்கும் எதிராக ஓர் திடகாத்திரமான யுத்தத்தில் தலையீடு செய்தது. ஸ்ராலினிசத்தின் துரோகப் பாத்திரத்தின் மத்தியிலும் சோவியத் யூனியன் யுத்தத்தின் முக்கிய பங்கினை பொறுப்பேற்று நடத்தியதுடன் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தின் சகல வீரம் மிக்க மக்களையும் அணிதிரட்டியது ஆனால் இறுதி வெளிப்பாடாக அமெரிக்க பணம், படைகள் மற்றும் ஆயுதங்கள் என்பன தீர்க்கரமான பாத்திரத்தை வகித்தன. யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் ஆதிக்கம் முன்னரிலும் பார்க்க சக்திவாய்ந்ததாக இருந்தது. எவ்வாறெனினும் ஐரோப்பாவில் சமூகப் புரட்சி ஒன்று ஏற்படுவதை தவிர்க்கும் முகமாகவும், சோவியத் யூனியனில் புரட்சியை தடுக்கவும், மேலும் தனது பண்ட, மூலதன ஏற்றுமதிகளின் நலன் கருதியும் அமெரிக்கா தனது எதிரிகளான ஐரோப்பா, ஜப்பானியர்களுக்கு உதவி வழங்கி அவர்களது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப உதவியது. 1960 களின் இறுதியில் அமெரிக்கா உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறையில், தான் வகித்த மேலாதிக்க நிலையை பெருமளவில் இழந்தது. உலக வர்த்தகத்தில் வகித்த பங்குக்கு சமமாக பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு சமமான நிலையை அடைந்திருந்தது. ஜப்பான் அரைவாசிக்கும் மேல் உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்தது. ஒருவர் தற்காலிக தளர்வுகள் ஏற்பட்டதை மனங்கொண்டாலும் கூட இதுவரை இத்தகைய நிலைமையே இருந்தது. இத்தகைய உலக பொருளாதாரத்தின் மாற்றத்தை ஏற்படுத்திய சக்திகள் தமது பாரிய அரசியல் வெளிப்பாட்டினை, 1971 ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையாக பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தை (Bretton Woods monetary agreement) இல்லாதொழித்த சமயம் வெளிப்படுத்தி காட்டின. யுத்தத்தின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்படிக்கையானது யுத்தத்தின் பின்னைய பொருளாதார அமைப்பின் அடித்தளமாக அமைந்து அமெரிக்க மேலாதிக்க நிலையை பேணி வந்துள்ளது. சோவியத் ஒன்றியத்துடன் மோதலைத் தவிர்க்க ஆரம்பத்திலிருந்து ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டநிலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. ஜேர்மன் முதலாளித்துவத்தின் சில பிரிவுகள் முக்கியமாக சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) பிரிவுகள், மொஸ்கோவுடனும் கிழக்கு ஜேர்மனியுடனும் நெருங்கிய உறவை நிறுவியதானது அமெரிக்காவிடம் இருந்து மேலதிக சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகலாம் என்று கருதின. 1973ல் இருந்து ஒரு புதிய அத்லாந்திக் உடன்பாடு பற்றிய பலத்த விவாதஙகள் ஓராண்டு காலமாக நீடித்தன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கீசிங்கர் ஐரோப்பாவிற்கான எதிர்கால அமெரிக்கவின் பாதுகாப்பு உத்தரவாதம் பொருளாதார துறையில் ஐரோப்பாவிற்கான சலுகைகளுடன் தொடர்புள்ளதாக கட்டாயம் விளங்க வேண்டுமென வற்புறுத்தினார். இறுதியாக 1974ன் அத்திலாந்திக் பிரகடனத்தின் பிரகாரம், உடன்படிக்கையின் ஐரோப்பிய அங்கத்தவர்கள் அத்தகைய தொடர்பினை ஏற்றுக் கொண்டனர். "தமது பாதுகாப்பு உறவுகள் அரசியல் பொருளாதாரம் சார்ந்த துறைகளில் அமைதியான உறவுகளால் பலப்படுத்தப்பட வேண்டுமென" அவர்கள் இறைஞ்சிக் கேட்டனர்.'' [3] அந்த சமயம் அமெரிக்க அழுத்தத்தின் முயற்சியானது ஐரோப்பிய ஒன்று சேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க மேலாதிக்க நிலைக்கு சவாலாயிருக்காத பட்சத்தில், அமெரிக்கா 1920 களில் அரசியல் நெருக்கடி சமூக கிளர்ச்சிகளின் மீள் எழுச்சியை தவிர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்று சேர்தலுக்கு ஊக்கமளித்து வந்தது. அத்துடன் எல்லைகள் மற்றும் சுங்க வரிகளை அகற்றுதல் காரணமாக அமெரிக்க பண்டங்கள் மூலதனம் என்பன கண்டத்துள் சுலபமாக ஊடுருவக் கூடியதாக இருந்தன. இப்போது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரதான பிரிவுகள் ஐரோப்பிய ஒன்று சேர்தல் அமெரிக்க மேலாதிக்க நிலையுடன் போட்டியிடவைக்கும் என எண்ணத் தலைப்பட்டன. 1970 களில் ஐரோப்பிய ஒன்றியம் கணிசமான அளவில் அபிவிருத்தியடைந்தது. பிரித்தானிய அங்கத்துவத்துக்கு பிரான்ஸ் வழங்கிய எதிர்ப்பை கைவிட்டது. அங்கத்துவ எண்ணிக்கை ஒன்பதிலிருந்து பன்னிரண்டாகி பின்னர் பதினைந்தாகியது. ஐரோப்பிய பொருளாதார சமூகமானது ஐரோப்பிய சமூகமாக பலதுறைகளில் அதிகரித்த பெருமையுடையதாக மாற்றம் கண்டது. ஐரோப்பிய நாணயங்களை நெருங்கி ஒருங்கமைப்பது முதல் முயற்சியாக அமைந்தது. பிரான்ஸ் ஜனாதிபதி வலெரி கிஸ்கார்ட் எஸ்ராங்கும் (Valéry Giscard d'Estaing) மற்றும் பெரும் பொருளியலாளராக தம்மை கருதும் ஜேர்மனிய அதிபர் ஹெல்முட் ஷிமித்தும் (Helmut Schmidt) இதற்காக பெரும் பங்காற்றினர். எவ்வாறெனினும், எவ்வளவு தூரம் அமெரிக்காவுடனான மோதல் இட்டுச் செல்லும் என்பதில் ஒரு நிச்சயமான வரையறை காணப்பட்டது. கெடுபிடி தளர்த்தல் கொள்கைகள் காணப்பட்டாலும் சோவியத் ஒன்றியத்துக்கு விரோதமாயிருப்பது இன்றும் உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காரணியாக காணப்பட்டது. ஐரோப்பிய முதலாளித்துவத்துவத்தின் இராணுவ பாதுகாப்பிற்கு அமெரிக்கா தேவையாயிருந்தது. அமெரிக்கா இப்போதும் "தயவுள்ள தலைவன்", உதாரணமாக அதன் இராணுவ மேலாதிக்க நிலையானது ஐரோப்பாவின் நலன்ககளுக்காகவே உள்ளதென கருதப்பட்டது. சோவியத் யூனியனின் சிதைவும் இறுதியில் அதன் வீழ்ச்சியும் இந்த வரையறையை அகற்றி, அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவுகளில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழச்சியின் தாக்கங்கள் ஒரு புறத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கணிசமானளவு கனவான்கள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை சவாலற்ற பூகோள மேலாதிக்க நிலைக்கான ஒரு வாய்ப்பாக கருதினர். "1990 களின் நடுப்பகுதியுடன் இதுவரை மேற்குலகின் மேலாதிக்க நிலை தலைமைத்துவத்துக்கான உரிமை கோரல் பூகோள ரீதியிலான ஆட்சிக்கான உரிமைக் கோரலாக விரிவடைந்தது," என ஒரு ஜேர்மன் வரலாற்றறிஞர் கூறுகிறார். [4] மறுபுறத்தில் ஐரோப்பிய கனவான்கள் இனிமேலும் அமெரிக்க மேலாதிக்க நிலைக்கு கீழ் தாம் கட்டுண்டிருப்பது அவசியமற்றதென கண்டனர். "அமெரிக்க மேலாதிக்க நிலைக்குள் ஐரோப்பா ஒருங்கு சேர்தல் சோவியத் யூனியனுடனான முரண்பாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அதன் முடிவுடன் இது பயனற்றதாகி விட்டது", என அதே எழுத்தாளர் எழுதினார். ஐரோப்பிய முதலாளி வர்க்கம், அத்திலாந்திக் பங்காளருடன் ''சமத்துவத்தை'' வேண்டுகின்றது. அமெரிக்கா அதற்கு தயாராக இல்லை. மொத்தத்தில் இன்றுவரை தீர்க்கப்படாத ஒரு தொடர்ச்சியான மோதல்கள் உடனடியாக அபிவிருத்தி கண்டன. பொருளாதார ரீதியில் பார்ப்பின், ஒரு புறத்தில் ஐரோப்பா அமெரிக்காவின் ஆளுமை நிலையை தொடர்ந்து வைத்திருப்பதில் சவாலாக இருப்பதுடன் உலக முக்கிய நாணயமாக டொலர் வகிக்கும் பங்கிற்கும் சவாலாகிறது. இரண்டாம் உலகப் போரிலிருந்து டொலரினது மதிப்பு, பரிமாற்றல் பெறுமானம், உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டாளரின் கணக்கீட்டு அலகாகவும் வேறெந்த ஒரு நாணயமும் கொண்டிராத முக்கிய பாகத்தை வகித்து வருகின்றது. 1990 ன் நடுப்பகுதியின் இறுதியில் டொலரின் மதிப்பு சர்வதேச சந்தைகளில் உலக மொத்த தேசிய உற்பத்தியிலும், (GNP) வர்த்தகத்திலும் அமெரிக்க பொருளாதாரம் வழங்கும் பங்களிப்பு இருமடங்காகியது. 1995ல் டொலர் உலக வர்த்தகத்தின் 50% விலைப்பட்டி நாணயமாகவும், ஐரோப்பிய உள்ளார்ந்த வர்த்தகத்தின் மூன்றிலொன்றாகவும் விளங்கியது. டொலரானது சர்வதேச வங்கி கடன்களில் ஆதிக்கம் செலுத்தும் நாணயமாக 77% சதவீதமாகவும் 40% சர்வதேச கடன்பத்திர விடயங்கள் கொண்டதாகவும் 44% சதவீத யூரோ நாணய வைப்பீடுகளாயும் 62% பூகோள ரீதியான நாணய வளங்களை கொண்டதாயும் காணப்பட்டது. இத்துடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றிய நாணயங்கள் 26% மட்டுமே ஆகும். டொலரின் ஆதிக்கப் பங்கு அமெரிக்காவின் மூலதனத்திற்கு கணிசமானளவு வாய்ப்புக்களை வழங்கியது. சர்வதேச சொத்து மூதலீடுகளுக்கான கவர்ச்சியை ஊட்ட அது வசதி செய்தது. அமெரிக்க அதிகாரத்துவத்துக்கு ஒரு அகன்ற பொது வரிக் கொள்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை காணப்பட்டது. அத்துடன் வெளிநாட்டு அரசாங்கங்களும் டொலரின் ஸ்திரப்பாட்டிற்கு தம்மிடையே அக்கறை காட்டின. ஐரோப்பிய நாணய ஒன்றியம் 1991 டிசம்பரில் அதாவது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட அதே மாதத்தில் ஐரோப்பிய யூனியனின் சகல அரச, அரசாங்கத் தலைமைகளும் மாஸ்ரிச்சில் (Maastricht) கூடி டொலருக்கு எதிராக பாரிய சவாலை தொடுத்தன. அவர்கள் 1999ம் ஆண்டளவில் ஐரோப்பிய நாணய ஒன்றியம் ஒன்று நிறுவுவதாக தீர்மானித்தனர். இந்த முடிவுக்கு பின்னாலுள்ள உந்து சக்தியாக பிரெஞ்சு ஜனாதிபதி மித்திரோனும், (Mitterrand) ஜேர்மன் அதிபர் ஹெல்மட் கோலும் (Helmut Kohl) விளங்கினர். மித்திரோனை பொறுத்தமட்டில், மீள் இணைக்கப்பட்ட பின் ஐரோப்பாவில் பெரியதும் பொருளாதார பலம் வாய்ந்ததுமாக காணப்பட்ட ஜேர்மனியை கட்டுப்பாட்டில் வைக்கும் சாதனமாக அது விளங்கியது. மறுபுறத்தில் கோல், நாணய ஒன்றிய உருவாக்கமானது ஐரோப்பாவில் ஆதிக்கம் கொண்டதாக ஜேர்மனியை மாற்றிவிடும் என நம்பிக்கை கொண்டிருந்தார். கொன்ராட் அடினோவரின் (Konrad Adenauer), மேற்கு ஜேர்மனியின் முதலாவது பிரதமர் தத்துவப்படி ஜேர்மனி மீண்டும் ஒரு முறை தனிமைப்படுத்தப்பட்டு தனது ஐரோப்பிய அயலவர்களுடன் நெருங்கி ஒன்று சேர ஆர்வம் காட்டலாமென அவர் அஞ்சினார். மித்திரோன், கோல் ஆகிய இருவருமே நாணய ஒன்றியம் டொலரின் ஆதிக்க நிலைக்கு சவாலான ஒன்றாக விளங்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தினால் தீர்மானிக்ப்பட்ட நீண்ட கால விடயங்கள் பலவற்றை போலன்றி முரணான விதத்தில் நாணய சங்கமானது குறித்த நேரத்தில் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. மாஸ்ட்ரிச்சில் திட்டமிடப்பட்டபடி, யூரோ தொழில் நுட்பமானது அநேக ஐரோப்பிய யூனியன் நாணயங்களுக்கு பதிலீடாக 1999ல் அமைந்தது. மூன்றாண்டுகளுக்குப் பின் 2002 ஜனவரியின் ஆரம்பத்தில் வங்கி நோட்டுக்களுக்கும், நாணயங்களுக்கும் பதிலீடாக அமைந்து ஐரோப்பிய குடித் தொகையில் ஒரு ஸ்தூல வடிவிலான நிஜமான பொருளாதாரமாக யூரோ மாற்றமெடுத்துள்ளது. இந்த நடவடிக்கையானது பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு ஜேர்மன் அவதானி கூறியது போல், "அத்திலாந்திக் உடன்படிக்கைக்குள்ளான அதிகாரப் பகிர்வில் இது குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்தும். மாஸ்ரிச்சில் ஒரு வெறும் கருத்தாக பிரகடனப்படுத்தப்பட்டது போலன்றி, இது தற்போது ஒரு முக்கிய துறையில் நிதர்சனமான ஒன்றாக மாறியுள்ளது. இதன் பன்னிரண்டு அங்கத்தவர்களும் டொலர் வலையத்திலிருந்து விலகிவிட்டது மட்டுமல்ல, ஓர் இரண்டாவது உலக முக்கியத்துவம் வாய்ந்த நாணயமாக யூரோவை கட்டியெழுப்பியும் உள்ளனர்.... அமெரிக்காவில் தங்கியிருக்கும் தன்மையிலிருந்தும் மேற்கு ஐரோப்பாவின் விடுபடுதல் நிலையானது ஓர் புதிய தகுதியை பெற்றுள்ளது. இது வாஷிங்கடனில் மிக தெளிவாக கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது". [5] இராணுவரீதியில் பார்க்குமிடத்து, அமெரிக்க மேலாதிக்க நிலையை சவாலுக்குள்ளாக்குவது ஐரோப்பாவிற்கு பெரிதும் கஷ்டமானது. இவ்விடத்தில் அமெரிக்காவிற்குள்ள வாய்ப்புகள் மேலதிகமாகும். அதன் 283 பில்லியன் டொலர்களுடன் பார்க்கையில் அமெரிக்காவின் முழு நேட்டோ செலவினத்திற்கான பங்களிப்பு 50 வீதமாகவும் அதாவது முழு ஐரோப்பிய நேட்டோ அங்கத்தவர்களும் கூட்டாக வழங்கும் பங்களிப்புடன் பார்க்கையில் அதி உயர் வீதமாயும் உள்ளது. அத்துடன் சராசரி ஐரோப்பிய நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் இராணுவ செலவு 2.2 வீதமும், ஜேர்மனியில் சராசரி 1.5 வீதமும் அதே சமயம் அமெரிக்கா தனது மொத்த தேசிய உற்பத்தியில் 3.1 வீதத்தை இராணுவ நடவடிக்கைக்காக பயன்படுத்துவதையும் காணலாம். எவ்வாறெனினும் இந்த தரவுகள் உண்மையான பலத்தின் அளவை பிரதிபலிப்பனவாக விளங்காது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் ஆய்வின்படி ஐரோப்பிய நேட்டோ படைகளின் தகுதி அமெரிக்க சகபாடிகளிலும் பார்க்க பத்தில் இரண்டு பகுதியே எனத் தெரியவந்துள்ளது. இதற்கான காரணமாக ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தன் சுய கட்டளையமைப்பு நிதியிடல், சுய ஆய்வு அபிவிருத்தி என்பவற்றை தனித்தனியாக கொண்டிருப்பது விளங்குகிறது. அதிக செலவீனம் சம்பளமாகவும், கூலியாகவும் செலவிடப்படுகிறது. ஐரோப்பா அநேகமாக குறைந்தளவு பயிற்சி திறனுடைய ஆயுதபாணியான 2.3 மில்லியன் படைகளை கொண்டுள்ளது. இதற்கு மாறாக அமெரிக்கா பயிற்சி பெற்ற உத்தியோபூர்வமான 1.4 மில்லியன் படையணியை வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா தனது இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் கூலிக்காக 39 வீதத்தையே செலவிடுகிறது. இத்துடன் ஒப்பிடும்போது ஜேர்மனி தனது வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 60 வீதத்தையும் போர்த்துக்கல் 79 வீதத்தையும் செலவிடுகிறது. இதேபோல ஒரு படையாளுக்கான இராணுவத் தளபாடத்துக்கான செலவீனம் ஜேர்மனிய ஐரோப்பிய சராசரியுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்ததாக அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் பிரகாரம், இராணுவ சீர்திருத்தங்களுக்கான ஐரோப்பாவின் முயற்சிகள் கூட்டுக் கட்டளை அமைப்பு, அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியாளரிடம் இருந்தும் விலகிய சுதந்திரமான (புதிய ஏயர் பஸ் இராணுவ போக்குவரத்து விமானம் போன்று) கூட்டு ஆயுத கொள்கைகளை அபிவிருத்தி செய்தல், படைகளின் எண்ணிக்கையை குறைத்து குறைப்பயிற்சியுள்ள படையினரை உயர்ந்த மட்டத்தில் பயற்சியளிக்கப்பட்ட படையினராக மாற்றுதல் ஆகிய கருத்தினை கொண்டுள்ளன. இது எவ்வாறாயினும் மிகவும் செலவு கூடிய காலதாமதப்படுத்தும் நீண்ட திட்டமாக அதாவது சகல ஐரோப்பிய அரசாங்கங்களும் பாரிய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை கொண்டும், இராணுவ செலவினங்கள் பெரிதும் கூடியதாகவும் - முக்கியமாக சமூக சேவை நலன்புரி சேவைகளின் பாரிய வெட்டுக்கள் கொண்டதுமான போராட்டத்திலுள்ள நிலைமைகளில், அசாத்தியமான கடின திட்டமாயுள்ளது. இதற்கும் மேலாக உள்ளார்ந்த ஐரோப்பிய எதிரிகள் - குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் என்பன அமெரிக்கா ஐரோப்பாவில் அழுத்தத்தை கொண்டுவரும் போது - இன்னும் பிரதான பங்கினை வகிக்கும் உள்ளார்ந்த முரண்பாடுகளை எவ்வாறு சமாளித்து பொது நிகழ்ச்சி நிரலுக்கு வருவது என்பதை குறித்து ஐரோப்பிய முதலாளித்துவத்துக்கு மிகவும் கஷ்டமான நிலை காணப்படுகிறது. 1990 இலிருந்து உலக அரங்கில் ஐரோப்பாவிற்கு ஒரு சுதந்திரமான இராணுவ அரசியல் பங்கினை வழங்கும் நோக்குடனான ஓரளவு அமுலாக்கப்பட்டதும் திட்டமிடப்பட்டதுமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானதாக 1992 ல் கைச்சாத்திடப்பட்ட மாஸ்ட்ரிட்ஸ் ஒப்பந்தம் சந்தேகத்துக்கு இடமின்றி விளங்குகிறது. ஒரு ஐரோப்பிய நாணய சங்கத்துக்கு வழி வகுத்தது மட்டுமன்றி ஒரு பொது வெளிநாட்டு கொள்கைகளுக்கும் வழிகோலியது. அத்துடன் நீண்ட கால கட்டத்தில் ஆபத்தை எதிர்த்து நிற்கின்ற ஒரு அரசியல் ஒன்றியமாக அமையவும் இடமளித்தது. அதே வருடத்தில், முன்னர் ஜேர்மனிய - பிரான்சிய படையணியாக நிறுவப்பட்ட படையினர், சகல ஐரோப்பிய படைவீரரை கொண்டதாக மாற்றப்பட்டது. அத்துடன் உலக யுத்தத்தின் பிற்பட்ட காலப்பகுதியில் சோம்பியிருந்த விரிவான மேற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு ஒன்றியமாக புனரமைக்கப்பட்டது.. இந்த இரண்டு நடவடிக்கைகளின் நோக்காக, பிரான்சிய ஜனாதிபதி மித்தரண்ட் ஜேர்மனிய சான்சலர் ஹெல்மட் கோல் இருவரது கூற்றுப்படி, "ஐரோப்பிய ஒன்றியத்தை சுதந்திர இராணுவ செயல்களுக்கான அடிப்படையிலமைப்பது" என்பது விளங்கியது. [6] பிரித்தானியாவின் ஆதரவைப் பெற்ற அமெரிக்க அரசாங்கம், ஆரம்பத்தில் சுதந்திரமான ஐரோப்பிய இராணுவத் திட்டத்தினை கடுமையாக எதிர்த்தது. ஜனாதிபதி புஷ் மேற்கு ஐரோப்பிய யூனியனை (WEU) ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அலகாக மாற்றுவதையும், யூரோ படைகளை (Euro-corps) சுதந்திர ஐரோப்பிய இராணுவ அமைப்பின் மையமாக்குவதையும் பலமாக எதிர்த்தார். பெப்பிரவரி 1991 ன் அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ராஜதந்திர அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது. "எமது கருத்து என்னவென்றால் நேட்டோவின் பங்கினை வரையறைக்குட்படுத்தி மீளமைத்து ஒரு ஐரோப்பிய தூண் ஒன்றை நிறுவுவதான முயற்சியானது அதன் அமைப்பினை பலவீனப்படுத்தவும், சிற்பம் போன்ற குறிப்பிட்ட அங்கத்தவர்களை இதற்காக தயாரித்து, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சிகள் வன்மையாக எதிர்க்கப்பட வேண்டும் என்று நாம் கருதுகிறோம்." மற்றுமோர் அமெரிக்க அறிக்கையான, "1994 - 1999 க்கான வரி ஆண்டுக்கான பாதுகாப்பு திட்ட வழிகாட்டி" தெரிவிக்கின்றது. "ஐரோப்பிய ஒருங்கு சேர்த்தல் இலக்கினை அமெரிக்கா ஆதரிக்கும் அதே சமயம் நேட்டோவை குறைத்து மதிக்கும் குறிப்பாக ஒப்பந்தங்களின் ஒன்றிணைந்த கட்டளை அமைப்பினை குறைத்து மதிக்கும் ஐரோப்பா மட்டும் என்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் உருவாக்கத்தை நாம் தடுக்க வேண்டியுமுள்ளோம்." [7] நேட்டோ இராணுவ கட்டமைப்புக்களில் பிரான்ஸ் மீண்டும் இணைவதற்கு இணங்கியதினை தொடர்ந்து கிளின்டன் நிர்வாகமானது மிகவும் சிநேக நோக்குடையதான போக்கை கையாண்டு ஒர் சமரசத்தை எட்டியது. 1994 ல் புரூசலில் நடைபெற்ற நேட்டோ, மகாநாடு மேற்கு ஐரோப்பிய யூனியனின் ஆசியின் கீழ் சுதந்திர இராணுவ நடவடிக்கைக்கு இடமளிக்கப்படலாம் என்ற ஒப்பந்த மீள் அமைப்புக்கு பச்சைக் கொடி காட்டியது. எவ்வாறாயினும் ஓர் முக்கிய நிபந்தனை ஒன்று காணப்பட்டது. அதாவது இத்தகைய நடவடிக்கைகள் நேட்டோ கவுன்சிலில் ஏகமனதாக தீர்மானிக்கப்ட வேண்டும் என்பதாகும். இது அமெரிக்காவுக்கு வீட்டோ (Veto) பலத்தை வழங்கியது. இந்த அரச விவகாரங்களில் தாமாகவே விலகிக்கொள்ள ஐரோப்பிய அரசாங்கங்கள் தயாராக இல்லை. 1997 ன் அம்ஸ்டர்டாம் ஒப்பந்தந்தின்படி ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொதுவான வெளியுறவு பாதுகாப்பு கொள்கையை அபிவிருத்தி செய்வதாக தனது திட்டங்களை ஸ்திரப்படுத்தியது. இத்தீர்மானத்தின் அமுலாக்கத்திற்கு பிரித்தானிய நிலைப்பாட்டில் ஒரு திருப்பம் காரணமாக அமைந்தது. முன்னர் பிரித்தானிய அரசாங்கம் சுதந்திரமான இராணுவ பங்கினை வகிக்க பிரான்ஸ், ஜேர்மனி எடுத்த முயிற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. டோனி பிளேயர் பிரதமரான காலத்தில் 1998 டிசம்பரில் சென்ட் மாலோவில் (St. Malo) கூடிய பிரான்ஸ், பிரித்தானிய உச்சி மகாநாட்டில் பிளேயர் ஐரோப்பிய இராணுவத்தின் சுய பங்களிப்புக்கு முழு ஆதரவு வழங்கினார். பிளேயரும், பிரான்ஸ் ஜனாதிபதி ஜக்குலிஸ் சிராக்கும் உடன்பட்டு விடுத்த கூட்டு அறிக்கை பின்வருமாறு: "சர்வதேச நெருக்கடிகளுக்கு பதிலளிக்க இந்த யூனியன் கணிசமான இராணுவ பக்க பலத்துடன் அவற்றை பயன்படுத்தவும் தயாராயிருக்கவும் தேவையான நடவடிக்கைக்கான சுய தகுதியை கொண்டிருக்கும்." பிரித்தானிய நிலைப்பாட்டின் மாற்றம், இராணுவ சுதந்திரத்தை நோக்கிய ஐரோப்பிய முயற்சிகளுக்கு ஓர் திருப்பமாக அமைவதற்கு கொசோவா யுத்தம் பின்னணியாக அமைந்தது. ஒரு ஐரோப்பிய விமர்சகரது கருத்துப்படி, "அமெரிக்கா இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஐரோப்பாவின் ஒரே ஒரு பாதுகாப்பு சக்தியாக அமெரிக்க ஆதிக்கத்திலுள்ள நேட்டோ படையை அனுப்பி தனது எதிரிகளை விரட்டிவிட பார்க்கும்", "சேர்பிய போரின்போது" "ஐரோப்பிய இராணுவம் மிகவும் பின் தங்கிய தகுதியற்ற பழைய பாணியிலான நடவடிக்கைகளை கையாண்டது," என அவர் குற்றம் சாட்டி சேர்பியாவுக்கு எதிரான போரின் தீர்மானம் ஜேர்மனியின் ராம்ஸ்டைன் நகரிலுள்ள விமானத்தள கூட்டுத்தலைமை காரியாலயத்தில் தீர்மானிக்கப்படாது அமெரிக்க பென்டகனால் தீர்மானிக்ப்பட்டு நேட்டோவிற்கு அமுல் படுத்துமாறு அனுப்பப்பட்டது. நேட்டோ கூட்டாளிகளுக்கு அமெரிக்காவின் நீண்டதூர குண்டு வீச்சு பற்றி திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை," என அவர் தெரிவிக்கின்றார். [8] ஐரோப்பிய ஒன்றியம் இந்த ''அவமானகரமான'' கேள்விக்கு பதிலளித்தது, மேற்கூறிய ஆசிரியர் குறிப்பிட்டபடி 1999 ஜூனில் கொலோனில் (Cologne) கூடிய உச்சி மகாநாட்டில் தனது சுய இராணுவப் படை ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளுக்கான ஒரு சில தீர்க்கமான முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன. 2003 ம் ஆண்டுக்குள் தயாரான நிலையில் 50,000 - 60,000 வரையிலான ஒரு ஐரோப்பிய படையொன்றை நிறுவுவதெனவும் அங்கு முடிவெடுக்கப்பட்டது. இந்த ஐரோப்பிய படைகள் சுதந்திரமானவையாகவும் தொழில் நுட்ப ரீதியில் அமெரிக்க படைகளின் மட்டத்தில் அமைந்ததாகவும் விளங்கும். அதே ஆண்டில் ஹெல்சிங்கியில் (Helsinki) கூடிய உச்சி மாகாநாட்டில் இந்த கொலான் உச்சி மகாநாட்டு தீர்மானம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. பெய்ராவில் (Feira) 2000 ஜூனில் கூடிய உச்சமகாநாட்டில் டிராஸ் அட்லான்டிக் உறவுகளிடையே ஒரு குறிப்பிடத் தக்க திருப்புமுனை ஏற்பட்டு இராணுவ பங்காளர், இராணுவ போட்டியாளாராக மாற்றமெடுத்தனர். இந்த நடவடிக்கையின் அரசியல் நோக்கு மிகவும் தீர்க்கமானது. "உண்மையான சமத்துவம்" என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ரூடோல்வ் சார்பிங் (Rudolf Scharping) சார்பில் முன்வைத்ததான அடிப்படையிலமைந்த அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்குமான ''புதிய சமபலத்தை'' உருவாக்குதல் அதன் இலக்காக அமைந்தது. [9] 1999ன் கொலோன் உச்சிமகாநாட்டிலும், யூரோவின் உருவாக்கத்தின் பின்னருமான அபிவிருத்திகள் அமெரிக்க மேலாதிக்கத்தை சவாலுக்குள்ளாக்க ஐரோப்பா எடுத்த முயற்சிகள் அதிகளவு பயனளிக்கவில்லை என சுட்டிக் காட்டுகின்றார். யூரோ தனது தோற்றத்துக்கான எதிர்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. அத்லாந்திக்கின் இரு புறத்திலிலுள்ள விசேட நிபுணர்களால் எதிர்பார்க்கப்பட்டபடி அமெரிக்க டொலருக்கு எதிராக உயர்வதற்கு பதிலாக, அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாண்டுகளுக்குள் யூரோ தனது மதிப்பிலிருந்தும் கால் பங்கு குறைந்த நிலையையே அடைந்துள்ளது. இது சர்வதேச முதலீட்டின் பாய்ச்சலை கவருமளவிற்கு டொலர் பலமிக்கதென்பதை நிரூபித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தின் பலம் இதற்கு காரணமல்ல. அமெரிக்காவில் ஏற்படும் பாரிய நெருக்கடியின்போது யூரோ திட்டவட்டமாக மீண்டும் உயரும் என்பதை மறுப்பதற்கில்லை. எவ்வாறெனினும், அதன் ஆரம்ப வீழ்ச்சியானது, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமான முரண்பாடுகளையும், பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டுவதுடன் அமெரிக்காவுடனான மோதல் உக்கிரமடையும் போது இது மேலும் அதிகரிக்கும். ஐரோப்பாவும் ஆப்கானிஸ்தானில் யுத்தமும் இராணுவ மட்டத்தில் ஆப்கானிஸ்தானிய யுத்தமானது முன்னர் நிகழ்ந்த சேர்பிய யுத்தம் போன்றே, அமெரிக்க யுத்த தந்திரத்தின் முன் ஐரோப்பிய இராணுவத்தின் தாழ்ந்த நிலையையே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த யுத்தத்தின் ஒரே இலக்கு அமெரிக்க மேலாதிக்க நிலைக்கு சவாலாக இருந்து கொண்டுள்ள அமெரிக்காவின் ஐரோப்பிய எதிரிகளை பலவீனப்படுத்துவதே என்ற கூற்று சற்று மிகைப்படுத்தலாக கருதக் கூடியதாகும். ஆனால் நிச்சயமாக அதுவும் ஒரு பிரதான குறிக்கோளாகும். அமெரிக்காவின் யுத்த முயற்சியின் முக்கிய அடிப்படை நோக்கை நாம் பார்க்கும் போது இது புலப்படும். சிபிக்னியேவ் பிரேன்ஸ்சியின் (Zbigniew Brzezinski) கருத்துப்படி, உலகின் முக்கிய எரிபொருள் வளங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஒரு பகுதியில் இராணுவ முகாம்களை அமைப்பதும் 21 ம் நூற்றாண்டின் உலக அதிகாரத்துவத்துக்கான திறவுகோலாக விளங்குகிறது. ஆயினும் உடனடியாக பார்ப்பின் அமெரிக்காவுக்கு எதிரான ஐரோப்பாவின் சவாலை யுத்தம் அடக்கி வைத்துள்ளது. இது தவறான வழியில் அது ஐரோப்பாவை கைப்பற்றியுள்ளது. யுத்தம் ஆரம்பமானதும் ஒரு பொதுவான ஐரோப்பிய வெளியுறவு கொள்கை உருவாக்கும் முயற்சி துண்டு துண்டானது. கொசோவோ யுத்தத்தின் பின் ஐரோப்பிய வெளியுறவு கொள்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஜேவியர் சொலானா, (Javier Solana) வெளியுறவு நடவடிக்கை ஆணையாளரான கிரிஸ் பட்டேன் (Chris Patten) என்பவர்களது பெயர்கள் (பத்திரிகை) தலைப்பிலிருந்தும் விலக்கப்பட்டன. வெளியுறவு கொள்கை, லண்டன், பாரிஸ் மற்றும் ஜேர்மனியின் கைகளினால் திடமாக செயற்படுத்தப்பட்டன. குறிப்பாக புஷ் நிர்வாகத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் டோனி பிளேயரது விரைந்த நடவடிக்கை, ஒரு பொதுவான ஐரோப்பிய பொறுப்பை விரக்தி நிலைக்குள்ளாக்கியது. படிப்படியாக சகல ஐரோப்பிய அரசாங்கங்களும் அமெரிக்க அரசாங்கத்தின் செயலுக்கு குறைந்தோ, கூடியோ நிபந்தனையற்ற ஆதரவை பிரகடனம் செய்தன. இதன் பிண்ணனியில், அமெரிக்காவின் கடினப்போக்கின் அச்சுறுத்தல் என்பனவும் காரணமாக விளங்கியது. இவ் யுத்தத்தில் அவர்கள் பங்கு கொள்ளாமல் விடில், இந்த எண்ணெய் வள மூலோபாய நலன்களுக்கான மாபெரும் விளையாட்டிலிருந்து தாம் முற்றாக விலக்கப்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்து கொண்டுள்ளது. தொடரும்....... Notes: 1. C. Fred Bergsten (Director of the Institute for International Economics), America and Europe: Clash of the Titans, Foreign Affairs, March/April 1999 2. Hans-Joachim Spranger, Der Euro und die transatlantischen Beziehungen: Eine geo-ökonomische Perspektive, International Politics and Society 2/1999 (Friedrich Ebert Stiftung) 3. Vergl. Werner Link, Europäische Sicherheitspolitik, Merkur Sept./Okt. 2000, pp. 919 4. Ernst-Otto Czempiel, Nicht von gleich zu gleich?, Merkur Sept./Okt. 2000, pp. 905-06 5. ibid. S. 909 6. Erklärung von La Rochelle, 22. Mai 1992, nach Link, ibid., pp. 922 7. Zitiert nach ibid., pp. 922 8. Ernst-Otto Czempiel, ibid., pp. 909 9. ibid. pp. 924 |