World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

War, oligarchy and the political lie

போர், சிறுகுழுவினராட்சி மற்றும் அரசியல் பொய்

By David North
7 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 30ம் தேதி உலக சோசலிச வலைதளத்தின் ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், இண்டியானா மாநில செளத் பென்ட்டில் உள்ள Nutre Dame பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டமொன்றில் உரையாற்றினார். அவருடைய பேச்சின் சுருக்கத்தை கீழே பிரசுரிக்கிறோம்.

அமெரிக்காவின் ஈராக்கிற்கெதிரான போர் முடிந்து ஒரு மாதத்துக்கும் குறைவாக ஆகியுள்ளது - சொல்லப்போனால், போரின் மிகச் சமீபத்திய கட்டம் முடிந்து ஒரு மாத்த்துக்கும் குறைவாக ஆகியுள்ளது; ஏனென்றால் 12 ஆண்டுகளாக ஒரு வடிவத்திலோ மற்ற முறையிலோ, ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஈராக்கிற்கெதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்பதை மறந்துவிட முடியாது. அமெரிக்காவால் மிக நீண்ட காலம் இராணுவ நடவடிக்கைகளால் உட்படுத்தப்பட்ட நாடு என்ற பெருந்துயரத் தனிச்சிறப்பு ஈராக்கிற்கு உள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார அல்லது இராணுவ நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட பெருஞ்சேதத்தின் விளைவு, ஈராக்கியச் சமுதாயத்தை எந்த அளவு ஒன்று சேர்த்துக் கூட்டிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படவில்லை.

1991ம் ஆண்டு ஜனவரியில் தொடக்கப்பெற்ற முதல் வளைகுடாப் போரிலிருந்து இன்றுவரை, அதனுடைய இராணுவ நடவடிக்கைகளில் எத்தனை ஈராக்கிய வீரர்களைக் கொன்றுள்ளது என்ற பொதுவான மதிப்பீட்டை, துல்லியமான எண்ணிக்கையை விடுங்கள் - கொள்கை அடிப்படையைக் காட்டி அமெரிக்கா இன்றுவரை தெரிவிக்க மறுத்துள்ளது. இராணுவ நடவடிக்கைகளின் மிகத்தீவிரமான கட்டங்களில் -ஜனவரி-பெப்ரவரி 1991, மற்றும் மார்ச்-ஏப்ரல் 2003 -கொல்லப்பட்ட ஈராக்கியர் எண்ணிக்கை பத்துகளில் இல்லை நூறுகளின் ஆயிரங்களாக இருந்திருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது. முதல் வளைகுடாப் போருக்குப் பின்னர், குவைத்திலிருந்து வடக்கே செல்லும், ``மரணத்தின் நெடுஞ்சாலை`` என்று அழைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பின்வாங்கி ஓடிய, பாதுகாப்பற்ற பல்லாயிரம் இராணுவத்தினர் சுட்டுவீழ்த்தப்பட்டு படுகொலைக்கு உள்ளானதாக கோரமான அறிவிப்புக்கள் வந்திருந்தன. சென்ற மாதத்தில் கணினியால் வழிகாட்டி இயக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான குண்டு வீச்சும், ஏவுகணைகளும் ஈராக்கிய இராணுவத்தின் பல பிரிவுகளை முழுமையாக அழித்தன - அப்பிரிவுகள் இத்தகைய தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த வழிவகையும் கிடையாது.

பாக்தாத் விமான நிலையத் தாக்குதல் பற்றிய விவரங்கள், எவ்வளவு குறைந்ததாயினும், எந்த அளவிற்கு ஈராக்கியப் படைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன என்பது தெளிவாகக் காட்டப்பட்டது. செய்தி ஊடகங்களிலிருந்து வந்த தகவல்களின்படி, கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஈராக்கியர் கொல்லப்பட்ட அளவில் அமெரிக்க இராணுவம் ஆறுக்கும் குறைவான வீரர்களையே இழந்தது. ஓரிரு நாட்களுக்குப் பின்னர், அமெரிக்கப் பீரங்கிகள் பாக்தாத் நகரின் ஒரு பகுதியைக் கடுமையாகத் தகர்த்துச் சென்ற அளவில், மீண்டும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் (கணிசமான அளவு சாதாரணக் குடிமக்களும்) கொல்லப்பட்ட அளவில் அமெரிக்கப் படை கையளவு வீரரையே இழந்தது.

எதிரெதிர்ப் படைகளின் இராணுவ பலங்களின் பெரும் வித்தியாசம், அவை ஒன்றோடொன்று போரில் மோதிய கைகலப்பை, `போர்` என்று சொல்வதற்குக்கூட (விவரிப்பதுகூட) பொருத்தமற்றதாக உள்ளது. மாறாக, அவை குடியேற்ற ஏகாதிபத்தியக் காலத்தில் நிகழ்ந்த ஒருதலைப்பட்சமான, இழிவான படுகொலைகளையே நினைவிற்குக் கொண்டு வருகின்றன; உதாரணமாக ஒம்டுர்மன் (Omdurman) போரில் பத்தாயிரத்துக்கும் பதினைந்தாயிரத்துக்கும் இடைப்பட்ட அளவில் சூடானிய மக்கள் பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்ட அளவில் அவர்களுடைய இழப்பு சில டசின்களுக்கும் குறைவாகவே இருந்த இரத்தக்களரி, நினைவிற்கு வருகிறது.

அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளினால் நேரடியாக விளைந்த ஈராக்கிய சாதாரண குடி மக்களின் இறப்பு எண்ணிக்கை பற்றியும் கூட - ஜனவரி-பெப்ரவரி 1991ன் போதோ மார்ச்-ஏப்ரல் 2003ன் போதோ அல்லது கடந்த பத்து ஆண்டுகளில் கணக்கிலடங்கா குண்டு வீச்சுக்கள் நடத்தப்பட்டபொழுதோ சிறிதே சரியான அளவு தகவல் அளிக்கப்பட்டது. சற்று கூடுதலான அளவு தகவல் நமக்கு, அமெரிக்கா சுமத்திய பொருளாதாரத் தடைகளினால் ஈராக்கியச் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு - அதிலும் சிறிய குழந்தைகள் பற்றி வந்துள்ளது. முதல் வளைகுடாப் போருக்குப்பின் சுமத்தப்பெற்ற பொருளாதாரத் தடைகளின் விளைவாக, 500,000 லிருந்து பத்துலட்சம் குழந்தைகள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் ஈராக் மீது அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட படையெடுப்பு மட்டுமல்லாமல், 1991ல் நடந்த பாலைவனப் புயல் (Desert Storm) க்குப் பிறகிருந்தே ஈராக்கிய மக்கள் பால் அது சுமத்திய பல கஷ்டங்களுக்கும் பிரதான காரணமாக, நியாயப்படுத்தும் வகையாகக் கூறுவது சதாம் ஹூசேன் ஆட்சியிடம் ``பேரழிவு ஆயுதங்கள்`` எனக் கூறப்படுபவை இருந்தன என்றும், அத்தகைய நிலை அமெரிக்காவிற்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும், தவிர்க்க முடியாத, மாபெரும் அபாயத்தை முன்னிறுத்தின என்பதும்தான்.

``பேரழிவு ஆயுதங்கள்`` கருத்துப் பற்றி கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான பிரச்சாரம் பற்றி மீளாய்வு மற்றும் பகுப்பாய்வு செய்தால் ஒரு பெரிய புத்தகமே போடலாம். இது தற்பொழுதைய புஷ் நிர்வாகத்தின் கண்டுபிடிப்பு அல்ல. சதாம் ஹூசேனின் ``பேரழிவு ஆயுதங்கள்`` என்பது கிளிண்டனுடைய நிர்வாகத்திலேயே ஈராக்கிற்கு எதிராக 1999ல் அது நிகழ்த்திய குண்டுவீச்சு நடவடிக்கையை நியாயப்படுத்த உதவியது. உண்மையில் இந்தப் பிரச்சாரம், முதல் வளைகுடாப் போரின் முடிவு ஏற்பட்ட உடனேயே தொடக்கப்பட்டது; ஏனெனில் முதலாம் புஷ் பாக்தாதைக் கைப்பற்றி, சதாம் ஹூசேனை ஆட்சியிலிருந்து அகற்றி ஈராக் நாட்டை ஆக்கிரமிக்காததால், ஏமாற்றமடைந்த வலதுசாரிப் பிரிவுகள் இரண்டாம் ஈராக்கியப் படையெடுப்பை நியாயப்படுத்த முற்பட்டனர்.

நாம் மிகச்சமீபத்திய காலத்தை மட்டும் போர் தோன்றியதுவரை, பார்ப்போம்:

செப்டம்பர் 12, 2002ல் ஜனவரி ஜோர்ஜ் புஷ் ஐ.நா பொது மன்றத்தில், ``ஹூசேன் பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அவர் அணு ஆயுதத்தைக் கொண்டுள்ளார் என்பது பற்றி, ஆண்டவன் தடுப்பாராக, அவர் உபயோகித்த பின்னரே நாம் உறுதியாகக் கூறலாம்`` எனக் கூறினார்.

அக்டோபர் 7, 2002ல், ``ஈராக் இரசாயன, உயிரி ஆயுதங்களை உற்பத்தி செய்தும், ஏராளமான அளவில் இருப்பு வைத்தும் உள்ளது.... தான் விரும்புகின்ற எந்த தினத்திலும் இரசாயன, உயிரி ஆயுதங்களை, தீவிரவாதக் குழுக்களுக்கோ, தனிநபர்களுக்கோ ஈராக் கொடுக்க முடியும்.... இந்த உண்மை நிலைகளைத் தெரிந்துகொண்ட பிறகும், அமெரிக்கா தனக்கெதிராக சேர்க்கப்படும் அச்சுறுத்தலைப் அசட்டை செய்யக்கூடாது. ஆபத்திற்கான தெளிவான சான்று கிடைத்த பின்னரும், இறுதி நிருபணத்திற்காக - புகைகக்கும் துப்பாக்கி, காளான் மேகக்கூட்டம்போல் வடிவெடுத்து வரும் வரை நாம் காத்திருக்கவேண்டிய தேவையில்லை `` என்று புஷ் அறிவித்தார்.

ஈராக்கியரிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்று கூறப்பட்டதே, பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத, புஷ் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட அதிகாரக் கேட்டிற்கு அடித்தளமாகும். அக்டோபர் 7, 2002ல் புஷ் ``சதாம் ஹூசேன் ஆயுதங்கள் அனைத்தையும் களையவேண்டும்; இல்லாவிடில் அமைதியைக் காப்பதற்காக அவரை நிராயுதபாணி ஆக்க நாங்கள் ஒரு கூட்டணிக்கு முன்னின்று அமைப்போம்." எனக் கூறினார்.

அமெரிக்கா கூறியுள்ளபடி, ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்ற முன் அபிப்பிராயத்தையொட்டியே அந்த கோரிக்கை நடந்தது. ஈராக் அப்படிப்பட்ட ஆயுதங்களைக் கொண்டிராவிட்டால் அப்படிக் கேட்பதில் பொருளில்லை. தன்னிடத்தில் இல்லாத ஆயுதங்களிடமிருந்து, ஈராக் தன்னை அகற்றிக்கொள்ள முடியாது. ஆனால் அமெரிக்காவோ ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்த அது தயங்காது என்பதில் எந்தக் கேள்விக்கும் இடம் இல்லை என்று வலியுறுத்தியது. சொல்லப்போனால் ஈராக்கில் ஆயுத ஆய்வாளர்கள் Hans Blix, Mohammed ElBaradel ஆகியோரின் தலைமையில் வந்தபின், அவர்களால் பேரழிவு ஆயுதங்கள் கண்டறிவதில் கொண்ட தோல்வியும், இன்னும் சொல்லப்போனால் அதற்கான நம்பத்தகுந்த சாட்சியம்கூட கிடைக்காமல் போனதும், அது ஈராக்கிடம் இருக்கிறதாக புஷ் நிர்வாகத்தால் பெருமளவு முழக்கப்பட்டது -ஏனெனில் பேரழிவு ஆயுதங்கள் தயார் செய்பவர்களால்தாம் அந்த அளவு திறமையுடனும், பாதுகாப்புடனும் அவற்றை மறைக்க இயலும்! என்று கூறப்பட்டது.

23 ஜனவரி 2003 அன்று நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரையொன்றில், ``ஏன் ஈராக் பொய் சொல்வதாக நாம் நினைக்கிறோம்`` என்ற தலைப்புக்கொண்டது - தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கொண்டொலீசா ரைஸ் உறுதியாகக் கூறினார்: ``ஆயுதக் களைவை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, ஈராக் ஒரு உயர்மட்ட நிலைக்கு, ஆயுதங்களைத் தயாரித்து அவற்றை மறைத்துவைத்தல் என்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; சிறப்புப் பாதுகாப்பு அமைப்புக்களை (Special Security Organization) ஐ கட்டுப்படுத்தும், சதாம் ஹூசேனாலும், அவருடைய மகன் க்வசேயாலும் ஈராக்கிய ஆயுத மறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.``

போருக்கான பவலின் வாதங்கள்

புஷ் நிர்வாகத்தின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பிரச்சாரம் பெப்ரவரி 5, 2003 அன்று உச்சக்கட்டத்தை அடைந்தது: ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் முன் அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல் பிரசன்னமாகி அமெரிக்க அரசாங்கத்தின் ஈராக் மீதான போருக்கான வாதங்களை முன்வைத்தார். அவருடைய பேச்சிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன்:

1. ``கடந்த ஆண்டு எண்.1441 தீர்மானத்தை நாம் இந்த சபையின் அறையில் விவாதித்துக்கொண்டிருந்தபோது, எங்களுக்குத் தெரியும், நல்ல ஆதாரங்கள் மூலம் எங்களுக்குத் தெரியும் - ஒரு ஏவுகணை இராணுவப் பிரிவு பாக்தாதிற்குப் புறத்தே ஏவுகணை செலுத்திகள் மற்றும் Rocket Launchers மற்றும் ஆயுதங்கள் உயிரியல் போர் முறை ஊக்கிகளை மேற்குப்புற ஈராக்கின் பல பகுதிகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது.``

2. ``ஈராக்கில் குறைந்தபட்சம் இத்தகைய இடம்பெயரும், உயிரியல் ஊக்கி உற்பத்திக்கூடங்கள் 7 உள்ளது என அறிவோம். பெரிய ஊர்தியில் ஏற்பட்டவை இரண்டு அல்லது மூன்று அத்தகைய ஊக்கிளைச் செலுத்தும் திறன் பெற்றவை.

3. ``சதாம் ஹூசேன் உயிரியல் ஆயுதங்களைக் கொண்டுள்ளார் என்பதும் அவற்றை பெரும் அளவில், உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளார் என்பதில் கேள்விக்கே இடமில்லை; இந்தக் கொடுமையான விஷப் பொருட்களையும், வியாதிகளையும் எங்கும் பரப்பி மிகப்பெரிய அளவிலான இறப்பு, அழிவு இவற்றை ஏற்படுத்தும் ஆற்றலும் அவருக்கு உண்டு.``

4. ``ஈராக்கிடம் அப்பொழுது 100லிருந்து 500 டன்கள் வரையிலான உயிரியல் ஆயுதங்களின் ஊக்கிகள் உள்ளன என்பது எங்களுடைய குறைந்த அளவு மதிப்பீடு. அவை 16, 000 போர்முனை ஏவுகணைகளுக்குச் சமமாகும்.``

5. "சதாம் ஹூசேன் இரசாயன ஆயுதங்களைக் கொண்டுள்ளார்.... இதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது. அது பற்றிக் கூறியவர்கள் சமீபத்தில் தன்னுடைய போர்முனைத் தளபதிகளுக்கு அவற்றை உபயோகிக்க அனுமதியளித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.``

6. "ஈராக் தீவிரவாதிகளோடு தொடர்பு கொண்டிருக்கவில்லை என்ற ஈராக்கிய மறுப்பு பேரழிவு ஆயுதங்கள் தம்வசம் இல்லை என்று ஈராக் மறுப்பது போலத்தான். இவையெல்லாம் பொய்களின் மெல்லிய இழைக்கூடுதான்."

7. ``சதாம் ஹூசேனிடம் பேரழிவு ஆயுதங்களை விட்டுவைத்திருப்பது, மேலும் சில மாதங்களுக்கோ ஆண்டுகளுக்கோ, ஒரு தேர்ந்தெடுக்கும் விருப்பமாக இனி இருக்க முடியாது; அதுவும் செப்டம்பர் 11க்குப் பிறகான உலகில்.``

பெருமளவு செய்தி ஊடகங்கள் ஐ.நா.வில் பவலின் நாடகக் காட்சி போன்ற உரையில் பெரிதும் மகிழ்ந்து, அவர் ஈராக் ஆட்சிக்கெதிராக மறுக்கமுடியாத குற்றச்சாட்டை அளித்துள்ளார் என்று ஒருமனதாக அறிவித்தன. அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட விளைவு, அதன் தாராண்மைக் கொள்கையுடைய பிரிவிலிருந்தே கிடைத்தது; பவல் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி புஷ் நிர்வாகத்தின் போர்த் திட்டங்களுக்கு முழுமையாக அது துணை நின்றது.

வாஷிங்டன் போஸ்டின் ரிச்சர்ட் கோஹன், பவலின் உரைக்கு ஒரு நாள் கழித்து ஒரு பத்தி வெளியிட்டார்:

``அவர் ஐ.நா.விற்கு அளித்த சான்று -சில சூழ்நிலை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை; சில எலும்பை முழுமையாக உறையவைக்கும் விவரங்களடங்கியவை -ஈராக் தன்னிடம் உள்ள பேரழிவு ஆயுதங்களுக்கு கணக்குக் காண்பிக்கவில்லை என்பதோடு, அது இன்னமும் அவற்றைக் கொண்டுள்ளது என்பதை ஐயத்திற்கிடமின்றி எவரையும் நம்பவைக்கும். ஒரு முட்டாள்தான் அல்லது ஒரு பிரான்ஸ் நாட்டுக்காரர்தான் - வேறுவிதமாக முடிவு செய்ய முடியும்.``

மேரி மக் கிரோரி, வாஷிங்டன் போஸ்டில் அதே நாள் எழுதியதாவது:

``சதாம் ஹூசேனுக்கு எதிரான கொலின் பவலின் குற்றச்சாட்டு உரையை ஐ.நா. எப்படி உணர்ந்தது என்பது எனக்குத் தெரியாது. நான் பிரான்ஸ் போல கடின உள்ளம் கொண்டுள்ளவன்தான் என்னை நம்பவைப்பது எளிதல்ல.... சதாம் ஹூசேன், தன்னுடைய கிடங்கில் ஏராளமான அளவு நரம்பியல் வாயு, மரணந்தரும் இரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளது, நான் நினைத்ததைவிட, பெரும் அபாயம்தான்.``

ஒரு வாரத்திற்குப் பின்னர், பெப்ரவரி 15, 2003 அன்று நியூயார்க் டைம்ஸ் அடித்துக் கூறியது:

``ஈராக் பெரும் மயக்கப் (விஷப்) பொருட்களான VX நரம்பியல் விஷ வாயு, மற்றும் அந்த்ராக்ஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது என்பதற்கும், இன்னும் கூடுதலான அளவில் அவற்றை உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளது என்பதற்கும் போதுமான ஆதாரம் உள்ளது. இவற்றை அது மறைத்து வைத்துள்ளதுடன், அவற்றைப் பற்றி பொய்யும் கூறியுள்ளது, மேலும் சமீபத்தில் அவற்றைப் பற்றி, தற்பொழுதைய ஆய்வாளர்களிடம் கணக்கையும் கொடுக்கவில்லை.``

செய்தி ஊடகம், புஷ் நிர்வாகத்தால் ஏமாற்றப்படவில்லை என்பதை வலியுறுத்தியாக வேண்டும்; ஆனால் அமெரிக்க மக்களிடையே பரப்பப்பட்ட திட்டமிட்ட கபட நாடகத்திற்கு அது விருப்பத்துடன் துணை நின்றது. அரசாங்கத்துடைய பிரச்சார நடவடிக்கைகளில் எந்தவிதமான நவீனமயப்படுத்தலும் காணப்படவில்லை. அது கூறிய பல தகவல்களும் ஏற்கப்பட்ட உண்மைகளாலும், அடிப்படைத் தர்க்க நெறியாலும் மறுக்கப்பட்டுவிட்டன. ஈராக் அணுவாயுத உற்பத்தி மூலப்பொருட்களை கேட்டது என்ற புஷ் ஆட்சியின் செய்தி மட்டமான போலி ஆவணங்களை ஆதாரமாய் உடையது என்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும்கூட, செய்தி ஊடகம் அந்த அதிர்ச்சியடைய வைக்கும் வெளிப்பாட்டை பெரிய பிரச்சனையாக்க விரும்பவில்லை.

இப்பொழுது கணக்கிலடங்கா பல்லாயிரம் ஈராக்கிய உயிக்களைப் போக்கிய அளவில் போர் முடிந்துவிட்டது. நாடு அழிவில் தள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில்துறை, சமுக, பண்பாட்டு அடிப்படைக் கட்டுமானங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்க இராணுவப் படையினர் ஈராக் முழுவதும் பேரழிவு ஆயுதங்களைத் தேடும் முயற்சியில் சல்லடையிட்டுப் பார்த்துவிட்டனர்; அது கிடைத்தால் அதைப் பற்றிக் கொண்டு நிர்வாகமும் செய்தி ஊடகமும் போரை நியாயப்படுத்த முடியும். ஆனால் கிடைத்தது என்ன? ஒன்றுமில்லை.

போர் தொடுப்பதை நியாயப்படுத்துவதற்கும், அதற்குமுன் பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பெறுவதற்குக் காரணமாகவும் இருந்த பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கப்பெறாத தோல்வியை அடுத்து, அதற்கேற்றாற்போல் செய்தி ஊடகம் தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டுவிட்டது.

ஏப்ரல் 25ம் தேதியன்று நியூயோர்க் டைம்ஸ் அதன் முதல் பக்கத்தில் ஒரு மண்டையோட்டின் நெருக்கமான படத்தைப் பிரசுரித்தது - சதாம் ஹூசேன் ஆட்சியில் பழிவாங்கப்பட்ட ஒரு நபரின் மண்டையோடாக இருக்கலாம் என்ற ஊகத்துடன். அவ்வாறே அது இருந்திருக்கவும் கூடும். எவரும் சதாம் ஹூசேனின் ஆட்சித் தன்மையின் குரூரத்தைப் பற்றி சந்தேகப்பட்டதில்லை - ஈராக்கின் வரலாறு பற்றி நன்கறிந்தவர்கள் அவருடைய கொடுமையான குற்றங்கள் அமெரிக்காவின் அரசியல் ஆதரவை அவர் பெற்றிருந்தபோது செய்தவைதான் அதிகம் என்று அறிவர்.

1963 பெப்ரவரி மாதம் வன்முறை மூலம் முதல் பாதிஸ்டு அதிகாரம் கைப்பற்றல் கென்னடி நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்டது என்பது ஈராக்கிய சோஷலிஸ்டுகள் மத்தியில் நன்கு தெரியப்பட்ட உண்மையாகும். சிஐஏ பாதிஸ்டுகளுக்கு, ஈராக்கிய கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரில் யார் கொலை செய்யப்பட்ட வேண்டுமென்பதைத் தெரிவித்திருந்தது. பாதிஸ்டுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவுகள் கடந்த 27 ஆண்டுகளில், பன்னாட்டு, வட்டார நிலைமைகளையும் அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையில் அவை ஏற்படுத்தக்கூடிய சிறப்பு மாறுதல்களையும் ஒட்டி, வளர்ந்தும் தேய்ந்தும் மாறி மாறி இருந்தன.

இந்த வரலாற்றின் படிப்பினையைச் சற்று அறிந்தவர்கள், அந்த புகைப்படம் டைம்ஸின் முதல் பக்கத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காகத்தான் பிரசுரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று ஐயத்திற்கிடமின்றி உணர்ந்தனர்; விரைவில் அது தெளிவாயிற்று. இரண்டு நாட்களுக்குப் பிறகு டைம்ஸ் ``ஒரு மண்டையோட்டின் பொருள்`` என்ற தலைப்பில் தோமஸ் எல். பிரைட்மன் ஆல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை பிரசுரித்தது.

``வெள்ளிக்கிழமை டைம்ஸ் ஒரு முதல் பக்க மண்டையோட்டுப் படத்தைப் பிரசுரித்திருந்தது; ஈராக்கியர் அதைச் சுற்றிக் குழுமியிருந்தனர். சதாம் ஹூசேனின் ஆட்சியில் ஒரு அரசியல் கைதியின் மண்டையோடு அது; சதாம் ஹூசேனின் சித்தரவதைக்குட்பட்டு மடிந்த பல ஈராக்கியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்திலிருந்து இந்த மண்டையோடும் துயரத்தில் ஆழ்ந்துள்ள உறவினர்களால் தோண்டி எடுக்கப்பட்டது. புகைப்படத்தின் கீழே ஜனாதிபதி புஷ் அவர் உறுதியளித்திருந்தபடி பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் கண்டுபிடிக்கப்படும் என்று சபதம் எடுத்ததைப் பற்றிய கட்டுரை உள்ளது.

``என்னைப் பொறுத்தவரையில் பேரழிவு ஆயுதங்கள் எவற்றையும் நாம் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லை. அந்த மண்டையோடும், இன்னும் ஆயிரக்கணக்கான தோண்டியெடுக்கப்படுகின்ற மண்டையோடுகளும் எனக்குப் போதும். காணாமற்போன இரசாயன ஆயுதங்களைப் பற்றி உலகத்திற்கு எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை (வெள்ளை மாளிகை இந்த விஷயத்தில் கூடுதலான பரபரப்பு ஏற்படுத்தியிருந்தாலும்கூட)."

ப்ரைட்மன் தொடர்கிறார்:

``நமக்குப் புதைக்கப்பட்ட விஷமடங்கிய பீப்பாய்கள் கிடைத்தாலென்ன, கிடைக்காவிட்டாலென்ன? யார் கவலைப்படுவார்கள்? அவை இந்த புதைக்கப்பட்ட மண்டையோடுகளைவிடக் கூடுதலான தார்மீக சக்தியைக் கொண்டுள்ளனவா? இருக்க வழியில்லை.``

ப்ரைட்மனின் ஹூசேனிடம் ஏமாந்தவர்கள் பிணங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி, நடந்த பின்னர் போரை நியாயப்படுத்துவதற்காகக் கொள்ளும் அதற்கான நேரம் மிகச்சரியாக துணை நிற்கிறது என்று கூறவியலாது. அவருடைய கட்டுரை வெளிவந்த அதே வார முடிவில் உலகம் ஞாபகப்படுத்தப்பட்டது --அமெரிக்கா அதன் ஏராளமான எலும்புக்கூடுகளை அடையாளமிடப்படாக் கல்லறைகளில் உலகெங்கிலும் கொண்டிருப்பதாக. ஹோன்டுராசில் அரசாங்க வழக்கறிஞர்கள், குறைந்தது நான்கு இரகசிய கல்லறைத் தோட்டங்களையாவது-- அமெரிக்காவில் பயிற்சியும் பணமும் பெற்ற இராணுவ கொலைப்படைகளால் பயன்படுத்தப்பட்டவை -அரசாங்க அடக்குமுறையில் உயிரிழந்தோரின் சடலங்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டவை என்று கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள்ளனர். இந்த நான்கு கல்லறைகளுள் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்களில் ஒன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹோண்டுராசுக்குள் காணாமற்போன ஜேம்ஸ் பிரான்ஸிஸ் கார்னி என்ற அமெரிக்க ஜீசுட் பாதிரியாருடையது ஆகும். 1980 களில் அந்த நாட்டில் அடக்குமுறையில் இறந்தோர் எண்ணிக்கை பல ஆயிரங்களுக்கும் மேலாகும். அரசாங்க கொலைப்படையின் பகுதியினராக இருந்த பல ஹோண்டுரான் இராணுவ அதிகாரிகள் தங்களின் பயிற்சியை அமெரிக்காவிலேயே பெற்றனர்.

ஹோண்டுராசில் நடந்தவை தனித்தன்மை வாய்ந்தவை அல்ல. ஒரு லத்தின் அமெரிக்க நாடோ, மத்திய அமெரிக்க நாடோ அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நேரடி உதவியைப் பெறாமல் எந்தக் கொடூரமான அடக்குமுறையையும் கையாண்டது இல்லை.

அரசாங்கப் பொய்களின் அரசியல் முக்கியத்துவம்

ஆனால் இன்றிரவு என்னுடைய நோக்கம் அமெரிக்காவின் கைப்பாவைகளாகச் செயல்பட்ட அரசாங்கங்கள் செய்த குற்றங்களை, ஈராக்கிய சதாம் ஹூசேன் ஆட்சியில் செய்யப்பட்ட குற்றங்கட்கு, மாற்றாகக் காண்பிப்பது அல்ல. நாம் சற்று கூடுதலாகவும், ஆழமாகவும் அரசியல் முக்கியத்துவத்தை -ஈராக் மீதான போர், பொய்களை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்க அரசாங்கத்தால் நியாயப்படுத்தப்பட்டதும், அப்பொய்கள் தெளிவாகவே வெளிப்பட்டதும் அமெரிக்கச் செய்தி ஊடகம் அவற்றை அசட்டையுடன் ஒரு பெரிய ``அதனாலென்ன?`` என்று கேட்டு, ஒதுக்கும் செயலை-- சிந்திக்கவேண்டும்.

அமெரிக்க அரசியலில் எப்பொழுதும் ஒரு பொற்காலம் இருந்ததில்லை. கடைசியாக உண்மையிலேயே மறுக்கமுடியாத அளவு நேர்மையான ஆட்சி அமெரிக்க வரலாற்றில் இருந்தது. முழுமையாகவும் எந்த முறையிலும் அசைக்க முடியாத அளவு, மிக உயர்ந்த ஜனநாயக நெறிகளுக்கான பற்றினைக் கொண்டது ஆப்ரஹாம் லிங்கனுடைய நிர்வாகம் தான். அதற்காக தற்கால அமெரிக்க வரலாறு ஒரு நீண்ட, முடிவில்லாத பிற்போக்கான கால கட்டம் என்று கூறுவது உண்மையைக் கேலிப்படுத்துவது போலாகிவிடும்.

முதலாளித்துவ அரசியற் கட்டமைப்பிற்குள்ளேயும்கூட, மாபெரும் சமுகப் போராட்டங்கள் இல்லாமல் இருந்ததில்லை. அவற்றில் மக்களாட்சி, சமத்துவ உணர்வுகள் தோன்ற நாடு முழுவதும் சமுதாயத்தின் பரவலான பகுதிகளில் அவை எதிரொலித்தன. இந்த உணர்வுகள் செய்தி ஊடகத்திலும் பிரதிபலித்து, அதன் உரிமையாளர்கள் ஒரு சில எழுத்தாளர்கள், ஒலிபரப்பாளர்கள், ஆசிரியர்கள் முதலியோரை நடுத்தர வகுப்பிலிருந்து தேர்ந்தெடுப்பர்- அப்படிப்பட்டவர்கள் ஜனநாயகக் கொள்கைகள் மீது ஆழ்ந்த பற்றுதலை உளப்பூர்வமாகக் கொண்டிருப்பர்.

ஒரு தலைமுறைக்கு முன்பு -அரசாங்கப் பொய்கள் வெளிப்படுத்தப்பட்டு, அரசாங்கம் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட வேண்டும் என்று உண்மையாக நம்பிய செய்தியாளர்களையும், ஆசிரியர்களையும் காணமுடிந்தது. "நம்பகத்தன்மை இடைவெளி" ("Credibility gap") என்ற சொற்றொடர் ஜோன்சன் நிர்வாகம் வியட்நாம் போரில் ஈடுபடுவதற்காகக் கூறிய காரணங்களுக்கும், வரலாறு, அரசியல், சமுக உண்மைகள், அவற்றின் உண்மைநிலை மாறுபட்ட தன்மைக்கும் இடையே பெரும் பிளவு இருந்தை குறித்தது. இச்சொற்றொடர் செய்தி ஊடகத்தால் பெருமளவு மக்களிடையே பரவி 1960களில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக ஆயிற்று. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நிக்சன் நிர்வாகத்தின் Pentagon Papers என்பது ஏற்கனவே நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்ததையடுத்து அதிர்ந்துபோன ஆட்சி -வாட்டர்கேட் ஊழலில் உச்சநிலை அடைந்து இழிநிலைக்குத் தள்ளப்பட்டு ஒரு கிரிமினல் ஜனாதிபதி ராஜிநாமாச் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இப்பொழுது நிர்வாகம் பெரிய பொய் ஒன்றை வெளிப்படையாக, அமெரிக்க மக்களுக்கும், உலகம் முழுவதற்கும், ஒரு போரைத் தொடக்க நியாயப்படுத்தும் வகையில், கூறியுள்ளது; எப்படிப் பார்த்தாலும் பன்னாட்டுச் சட்டத்தை மீறியது.

ஆனால் இந்த மாபெரும் அரசியல் பொய் வெளிப்பட்டுவிட்ட அளவில் எந்தப் பெரிய கண்டனத்துக்கும் (அரசாங்கம்) உட்படுத்தப்படவில்லை; செய்தி ஊடகத்தின் இன்னும் புதிய கூடுதலான, திமிரான நியாயப்படுத்துதல்கள்தாம் வெளிவந்துள்ளன.

நாம் இங்கு ஒரு பெரிய அரசியல், சமுதாய இயல்நிகழ்ச்சியை ஆராயவும் விளக்கவும் அணுகியுள்ளோம். தாங்கள் வாழும் சமுதாயத்தின் தன்மை பற்றிய முக்கியமான, கவலையளிக்கும் விஷயத்தை அமெரிக்க மக்களுக்கு இந்த நிலைமை கூறிக்கொண்டிருக்கிறது.

முதலில் இந்த அரசியல் பொய்யின் புறநிலைரீதியான முக்கியத்துவத்தைக் காண்போம். ஓர் அறவழி சார்ந்த பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படாமல், சமுதாய நிகழ்வாக இது கட்டாயம் அணுகப்பட வேண்டும். ஒரு தனிமனிதன் பொய் கூறும்போது, தன்னுடைய சுயநலன்களுக்கும், ஏற்கப்பட்ட சமுதாய நெறிகளுக்கும் நடுவிலே அவன் அவ்வாறு செய்கிறான். இந்த முறையில் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்குமிடையே உள்ள இயல்பான பூசலைக் காட்டுகிறது. அந்தப் பூசலின் பரப்பு, ஆழம் மற்றும் தீவிரத்தன்மை, பொய்யின் செயல்பரப்பையையும் கடுமையையும் நிர்ணயிக்கிறது. ஒரு பொய் அது ஒப்பிடப்படும்போது ஒரு குறைந்த தீமையுடைய, நகைச்சுவையுணர்வினதாக "வெள்ளைப் பொய்" என்ற வடிவத்திலோ அல்லது கூடுதலாக வருந்ததக்க அளவிலான பொய்ச்சாட்சி வடிவத்திலோ இருக்கலாம்.

அரசாங்கம் கூறும் பொய்களும் எதிரெதிர் சக்திகளின் வெளிப்பாடேயாகும் -தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே அல்ல, ஆனால் சமூக வர்க்கங்களுக்கு இடையே ஆனதாகும். இறுதி ஆய்வில், அரசு என்பது வற்புறுத்தலின் கருவியே, சமுதாயத்தின் சக்திவாய்ந்த வர்க்கத்தின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பேணும் கருவியேயாகும். ஆனால் ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தில் அந்தப் பலாத்கார முறை தலையீட்டுக்குள்ளாகிறது, ஒரு குறிப்பிட்ட கணிசமான அளவு, பெருமளவு அரசியல் மற்றும் சட்ட மேற்கட்டுமானத்தால் மறைக்கப்பட்டு, அரசு ஏறத்தாழ மாறுபட்ட வர்க்கங்களுக்கும் சமூக நலன்களுக்கும் நடுநிலை வகிப்பதாய்த் தோன்றும், -நாடு முழுவதிற்கும் பொதுவாகப் பணியாற்றுவதாய்த் தோன்ற அனுமதிக்கிறது. நாட்டின் சட்டபூர்வமான செயலாற்றும் அதிகாரம், பரந்த மக்கள் பார்வையில் இந்த முறையில்தான் காணப்படும்- அதாவது அரசாங்கம் ஜனநாயக முறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒட்டு மொத்த மக்களது பிரதிநிதி.

அரசியல் நிலைமைகளும் பொருளாதார நிலைமைகளும் வர்க்க சமரசக் கொள்கையை அனுமதித்து, மற்றும் அதற்கு சார்பாக இருக்கும் வரைக்கும், ஜனநாயகப் பிரமைகள் பேணப்படுகின்றன --அரசின் பொய்கள் ஏற்கப்படுகின்ற அளவிற்குள் ஒத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் தொடர்ந்த தீவிரமான, சமுக நெருக்கடிகளின்போது, சமுக வர்க்கங்களின் நலன்கள் மிக அதிக அளவில் மோதல்களுக்குட்படும்பொழுது, அரசு சமுதாயத்தின் வர்க்க ஆட்சியின் பாதுகாவல் என்ற முறையில் ஜனநாயக நிறத்தைத் தள்ளிவிட அதிகமாக முயற்சிகளெடுக்கும். அப்படிப்பட்ட கால கட்டங்களில்தான் அரசின் பொய்கள் அதிரடியாகவும் அருவருக்கத்தக்கதாகவும் வெளிப்படுகின்றன. அதாவது பொய்யின் வேலை, நாட்டையாளும் அதிகாரக் குழுவிற்கும், பரந்த பெருமளவிலான மக்களுக்குமிடையே விரிவடைந்துள்ள பிளவை மூடிமறைப்பதே ஆகும்.

பேரழிவு ஆயுதங்கள் பிரச்சாரம், கொள்ளையில் ஈடுபடக்கூடிய அளவு போருக்கான உந்தலின் கீழான வெறிபிடித்த வர்க்க நலன்களை பரந்த அமெரிக்க மக்களிடமிருந்து மறைப்பதற்கான ஆளும் மேல்தட்டின் தேவையிலிருந்து உறுப்பாய் எழுகிறது.

போர் தொடக்கப்படுவதற்கான காரணங்களை நேர்மையாக விளக்கும் உரை எப்படி அமைந்திருக்கக்கூடும்? ஒரு கணம் திருவாளர் புஷ் அமெரிக்க மக்களுக்கும் ஈராக்கிய போரின் உண்மையான காரணங்களைக் கூறத் தீர்மானித்துவிட்டார் என்று கொள்வோம். அந்தப் பேச்சு ஒருவேளை கீழ்க்கண்ட வண்ணம் இருந்திருக்கக்கூடும்:

"என் சக அமெரிக்கர்களே: இன்றிரவு அமெரிக்கா ஈராக்கின்மீது மாபெரும் அளவில் குண்டு வீச்சுக்கத்ை தொடங்கியுள்ளது; நிலத்திலிருந்து அந்த நாட்டின் மீதான படையெடுப்பு இதையடுத்து, அதன் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் முற்றிலும் அத்துமீறலாக இருக்கும் வரை, உங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கான ஒரு நேர்மையான விளக்கத்தைக் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும்.

``பெரும்பாலான என்னுடைய அமைச்சர் குழுவினர் பெரு வணிக நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவியை வகித்தவர்கள் என்பதும், அவர்களில் சிலர் எண்ணெய் தொழிலில் நெருக்கமான தொடர்பு உடையவர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என் தந்தை, அவருடைய பெருஞ்செல்வத்தை அந்தத் தொழிலில்தான் ஈட்டினார் என்பதும், இப்பொழுதும்கூட அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அரசியலில் நான் நுழைவதற்கு முன் வகித்த அக்கறையான வேலை எண்ணெய் வர்த்தகம்தான், நான் அதிக வெற்றியடையவில்லை என்றாலும், அது தொடர்பான அக்கறைகளில் அதிக உணர்வுடையவனாக இருக்கிறேன். எமது துணை ஜனாதிபதி, டிக்செனி - ஒரு நல்ல மனிதர் - ஹாலிபர்டன் நிறுனத்தில் நிறைவேற்று அதிகாரிகளின் தலைவராக பணியாற்றியவர் -இப்பொழுதும் ஆண்டு ஒன்றுக்கு 600,000 டொலர் அந்நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்கிறார்- அந்நிறுவனம் எண்ணெய் தேடும் பணியில் பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

``இது என்னுடைய நிர்வாகத்தை மிக அதிகமான அளவிற்கு பன்னாட்டு எண்ணெய்த் தொழிலைப் பற்றிய நெருக்கடிகளைப் பற்றிய உணர்ச்சி மிகுந்த கவனத்தைக் காட்டவைத்துள்ளது. எண்ணெய் ஓர் எல்லைக்குட்பட்ட வளம்தான்; 2025 ஐ ஒட்டி உலகம் முழுவதும் அதன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் நம்புகிறார்கள். எனவே எண்ணெய்த் தொழிலில் நிறையச் சம்பாதிக்கலாம் என்றிருந்தாலும், எங்களுடைய போர் தொடுக்கவேண்டும் என்ற நினைப்பு முழுமையாகத் தனிப்பட்ட பயன்பாடுகளுக்காகத் தோன்றவில்லை. நாங்கள் அமெரிக்கா உலகில் பெரிய ஆதிக்க நிலையை அடையவேண்டும் என்று விரும்புகிறோம்; அதற்கு இராணுவ முறையில் பாரசீக வளைகுடாப் பகுதியின் எண்ணெய் வளங்களுக்குத் தடையற்ற நுழைவாயிலைக் கொள்ளக் கருதுகிறோம்.

``சொல்லப்போனால், ஈராக்கை வெற்றிகொள்ள வேண்டும் என்ற திட்டங்கள் கடந்த பத்தாண்டுகளாகவே செயல்முறையில் இருந்துவருகின்றன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு யாரும் அமெரிக்காவை தான் என்ன செய்தாலும் தடுக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது; எனவே அமெரிக்கா பூகோள மேலாதிக்கத்தில் யாரும் சவால்விட முடியாத அளவு உயர்ந்து நிற்கும் திட்டங்களைத் தயாரிக்கத் தொடங்கியது; இந்தத் திட்டங்களில் எண்ணெய் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது; ஈராக் -உலகிலேயே இரண்டாவது அதிக அளவிலான எண்ணெய் வளத்தையுடையதாக நிரூபிக்கப்பட்டுள்ளது- நமக்கு முக்கியமான தாக்கப்படவேண்டிய இலக்காக உள்ளது. அதையொட்டித்தான் நாங்கள் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய எண்ணத்தை கைக்கொண்டோம்.``

``செப்டம்பர் 11க்குப் பின்னர் முக்கியமாக, ஆயுத அழிப்புத்திட்டம் அதன் இயல்பிலேயே நன்கு தோன்றியது. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் ஈராக் செப்டம்பர் 11-உடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரியும் -அமெரிக்காவின் மீதான அந்த்ராக்ஸ் தாக்குதலை விடுங்கள்- இவை கூடுதலான உற்சாகம் கொண்ட வலதுசாரிக் கிறுக்கர்களால், எங்கள் ஆதரவாளராலேயே நடத்தப்பட்டவை. ஆனால் யார் கேள்விகளைக் கேட்கிறார்கள்?

``எவ்வாறாயினும் போரை ஒரு வழியாக இன்று தொடங்கிவிட்டோம். கடவுளுக்குத்தான் தெரியும். இதற்கு எத்தனை பில்லியன்கள் செலவாகும் என்று. ஆனால் திட்டமிட்ட வரிக்குறைப்பைச் செய்வதோடு, மருத்துவ பராமரிப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு, கல்வி இவற்றிற்கான செலவைக் குறைத்து எப்படியும் போர்ச் செலவைச் சமாளித்துவிடுவோம்.``

``உங்களுக்கு விளைவுகள் பிடிக்காமற்போகலாம்; ஆனால், ஏய், அதுதான் வாழ்க்கை. எப்படியும் 2004 தெருமுனைக்கு வந்துவிட்டது; நாம் அனைவரும் தேர்தல்கள் என்ற பாசாங்கில் அப்பொழுது ஈடுபடுவோம்.``

``உங்களுக்கு நன்றி, ஆண்டவன் உங்களைக் காப்பாராக: என்னுடைய நண்பர்களும் நானும் எங்களைக் காப்பாற்றிக்கொள்வோம்.``

எவரும் இப்படிப்பட்ட உண்மையை அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து வெளிப்படும் உரையில் எதிர்பார்க்கமாட்டார்கள் - அதிலும் ஒருவருடைய பதவிக்காலம் தேர்தல் தில்லு முல்லுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அளவில்.

இருப்பினும், இந்தப் போர் அடிப்படையாகக் கொண்டிருந்த பெருமளவிலான, அப்பட்டமான பொய்யின் தன்மை, மற்றும் அசட்டையும் எதிலும் நம்பிக்கையற்ற தன்மை கொண்ட ஒரு செய்தி ஊடகத்தின் பதில் மொழி, இவை முதலாளித்துவ ஜனநாயக முறையின் பொதுவான நிலைமுறிவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடுகளாகும். ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அரசியல் வாழ்வு அமெரிக்க அரசின் சிறு குழுவினர் ஆட்சியின் கூடுதலான குணநலன்களை, கோணல்மாணலான பார்வையில் பிரதிபலிக்கிறது.

நாட்டின் செல்வத்தின் அதிகமான சதவீத மக்கள் தொகையின் மிகச்சிறிய அளவிலான சதவீதத்தினரிடையே ஈர்க்கப்பட்ட நிலையில், ஆளும் தட்டுக்கள் எந்த உண்மையான மக்கள் ஆதரவையும் அரசின் கொள்கைகளுக்கு தயார் செய்ய முடியவில்லை. அரசைக் கட்டுப்படுத்தும் சிறு குழுவினர் நலன்களுக்கும் பெரும்பாலான மக்களின் நலன்களுக்கும் இடையிலான ஒத்துப்போதல் மிக நுண்ணிய அளவினதாக உள்ள நிலையில், பொய்கள் ஒரு முக்கியமான பணியைச் செய்கின்றன -அன்றாடம், மக்களின் நனவை திசை திருப்பி, கருத்துக்களை இட்டுக்கட்டி "மக்கள் கருத்து" என்ற பெயரில் உலவ விடுகின்றன. தற்காலிகமான, குறுகிய கால வெற்றியை இந்த அடிப்படையில் அடைந்துவிடலாம்; ஆனால் இப்படிப்பட்டதான நீண்டகால நடவடிக்கைகளான உணர்வை மாற்றுதல், ஏமாற்றுதல் ஆகியவை அரசியல் கட்சிகளிடம் இருந்து மக்களை நிரந்தரமாக அந்நியப்படுத்திவிடும்.

இந்த அந்நியமாதல் தொடக்கத்தில் மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அசட்டையாயும், அக்கறையில்லாத வடிவமாயும் கருதத் தோன்றும். ஆனால் அதிகாரபூர்வமான அரசியலின் கீழே சிக்கல் மிகுந்த சமுதாய, அறிவார்ந்த நிகழ்ச்சிப்போக்குகள் வினையாற்றிக் கொண்டுள்ளன. அன்றாட வாழ்வின் அழுத்தங்கள் மெதுவாக, ஆனால் உறுதியாக மக்களின் நனவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நனவானது, இருப்பைவிட, சற்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பது உண்மையே. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாள வர்க்கம் ஒட்டச் சுரண்டப்படுவதற்கும் மற்றும் ஒடுக்கப்படுவதற்கும் இடையிலான தொடர்பு ஒரு சோசலிசக் கற்பனை அல்ல; மாறாக அது புறநிலை உண்மையாகும். தவிர்க்கப்பட முடியாத அளவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தப் புதிய வெடிப்பின் சமூக விளைபயன்கள், ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தாலேயே தீவிரமாக அறியப்பட்டுவிடும்.

சோசலிஸ்டுகள் வெறுமனே எதிர்பார்ப்புகளோடு நின்றுவிடாமல், அரசியல் போராட்டத்திற்குத் தேவையான சமூக ரீதியான மற்றும் வேலைத்திட்ட ரீதியான ஒரு புதிய அடித்தளத்தை நிறுவுவதன் மூலம் அரசியல் வர்க்க நனவை புதுப்பித்தலை விரைவுபடுத்த வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு இயக்கத்தின் அபிவிருத்திக்கான உண்மையான மக்கள் அடித்தளம் அமெரிக்காவிலும் சரி சர்வதேசரீதியாகவும் சரி தொழிலாள வர்க்கம் என்பதை இது உணர்த்துகின்றது. மேலும் அதற்கு, போருக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது என்ற தெளிவான புரிதல் ஒன்று தேவைப்படுகிறது.

See Also :

உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு
 

Top of page