World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடுReport from the World Socialist Web Site /Socialist Equality Party conference: "Socialism and the Struggle Against Imperialism and War"The historic background and content of the struggle for the political independence of the working classஉலக சோசலிச வலைதளம்/சோசலிச சமத்துவக்கட்சி 23 April 2003உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால், "சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கெதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வேலைத் திட்டமும் மூலோபாயமும்" என்ற தலைப்பில், அன் ஆர்பர், மிச்சிகனில் மார்ச் 29-30- 2003ல் நடாத்தப்பட்ட மாநாட்டில் பரி கிரே ஆற்றிய உரையை கீழே வெளியிடுகின்றோம். உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் உறுப்பினரான கிரே மாநாட்டில் விவாதத்திற்குப்பின் ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் மூன்றாம் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்: "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக!" ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் செய்தது. ("உலக சோசலிச வலைத் தளம் சோசலிசம் மற்றும் போருக்கெதிரான போராட்டத்தைப் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்துகிறது"). இதைத் தவிர உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் தொடக்க உரையை ("கட்டுக்கடங்காத நெருக்கடிக்குள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்") வழங்கினார். மாநாட்டில் ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களின் வாசகங்களும் ஏப்ரல் 2லிருந்து ஏப்ரல் 4 வரை வெளியிடப்பட்டன. (ஈராக்கில் நிகழ்த்தப்பெறும் போரை வன்மையாகக் கண்டிக்கும்; தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அறைகூவி அழைக்கும் தீர்மானங்கள்", "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக அழைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் தீர்மானங்கள்", "போர் மற்றும் அமெரிக்கச் சமுதாய நெருக்கடி மீதான தீர்மானம், உலக சோசலிச வலைதளத்தின் வளர்ச்சி பற்றிய தீர்மானம்") ஏப்ரல் 22 அன்று உலக சோசலிச வலைத் தளமானது முதல் மற்றும் இராண்டாவது தீர்மானங்களை முறையே அறிமுகம் செய்த மார்ட்டின் மற்றும் உலி ரிப்பேர்ட் ஆகியோரின் கருத்துக்களை வெளியிட்டது. (பார்க்க: ஈராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த போருக்கான அவர்கள் கூற்றிலுள்ள முரண்பட்ட கருத்துக்களும் பொய்களும்``, "தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றின் மையத்தில் சர்வதேசியம் நிற்கிறது``) வரும் நாட்களில் மற்றைய தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்களின் கருத்துக்களையும் எஞ்சிய தீர்மானங்களையும் மகாநாட்டிற்கு சர்வதேச பிரதிநிதிகள் கொண்டுவந்த வாழ்த்துக்களின் தொகுப்பையும் நாம் பிரசுரிக்க இருக்கிறோம். இந்தத் தீர்மானத்தில் விளக்கப்படுவதும், மேலும் இந்த மாநாடும் உலக சோசலிச வலைதளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவற்றின் அனைத்துச் செயல்களும் வெறும் எதிர்ப்பல்ல; ஒரு முன்னோக்கு ஆகும். சர்வதேச தொழிலாள வர்க்கம் மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கம் ஆகியவை அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தயாரிப்பு ஆகும். இது ஒரு அறிவார்ந்த, தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகளின் உயர்ந்த அபிவிருத்தி தேவைப்படுகின்ற மிகச் சிக்கலான மற்றும் கடுமையான போராட்டம் --உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களிடமும், இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கலந்துரையாடி, பொறுமையாய், தீர்மானகரமாக நடத்தும் போராட்டம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம் பற்றிய தீர்மானத்தின் இரண்டு அடிப்படை அம்சங்களை நான் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தீர்மானம் கூறுகிறது: "ஜனநாயகக் கட்சிக்கு அமெரிக்க தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக கீழ்ப்பட்டிருக்கும் நிலை தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியில் ஒரு முக்கியமான வரலாற்றுச் சிக்கலாக உள்ளது. இந்தச் சிக்கலை நாம் தவிர்த்துவிடமுடியாது." தீர்மானத்தின் பெரும்பகுதி ஜனநாயகக் கட்சியின் வெறுக்கத்தக்க, பிற்போக்கு நடவடிக்கைகளையும் தற்போதைய ஈராக்கிற்கான போரில் புஷ் ஆட்சிக்கு அளித்த அதன் ஆதரவையும் சுட்டிக்காட்டுகிறது. அது முற்றிலுமாக ஏற்புடைத்ததேயாகும். நாம் அனைவரும் அறிந்தபடி ஜனநாயகக் கட்சியின்பால் வளர்ந்துவரும் ஏமாற்றப்பட்ட நிலையும், அருவருப்பும் பரந்த தட்டினர் மத்தியில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அது பிரதிபலிக்கவில்லை என்ற உணர்வு உள்ளது. இதைக் கூறிய பின், ஜனநாயகக் கட்சியின் சிக்கலை -இந்தக் குறிப்பிட்ட சிக்கல் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டு இருப்பதால் அமெரிக்க அரசியலில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது. இது மீண்டும் ஒரு சிக்கல் வாய்ந்த வரலாற்றுப் பிரச்சினை, இதற்கு பெருமளவு ஆய்வும் தத்துவார்த்த வேலையும் தேவை. உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னுள்ள பல திட்டங்களில் இப்பிரச்சினையை பகுத்தாய்வதும் ஒன்றாகும். ஆனால் இம்மாநாட்டில் நமக்குள் குறுகிய கால அவகாசத்தில் சிலவற்றைச் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். ஜனநாயகக் கட்சி அமெரிக்க முதலாளித்துவ முறையில் நெடுங்காலமாக ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்துள்ளது. இது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பேணும் முதலாளித்துவக் கட்சியாக இருக்கின்ற அதேவேளை சராசரி உழைக்கும் மனிதனின் உரிமைக்குப் பாடுபடும் இயக்கமாகவும் காட்டிக்கொண்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பாத்திரம் அமெரிக்க வரலாற்றில் நெடுங்காலமாக உள்ளது. அதனுடைய சிறப்புப்பணி, பல காலமாகவே, சமூக அதிருப்தியை ஆளும் வர்க்கத்திற்கு தீங்கு செய்யா அரசியல் வழிகளில் சேர்ப்பித்து, அதன் மூலம் அனைத்துச் சமுதாய எதிர்ப்புக்களையும் முறியடித்தலாம். இது 19ம் நூற்றாண்டிலிருந்தே நிகழ்ந்து வருகிறது. 1820களில் நிச்சயமாக ஆன்ட்ரூ ஜாக்ஸன் காலத்திலிருந்து ஒரு கட்சியாக இயங்கி, அடிமைகளை சொந்தமாகக் கொண்டிருந்த வேளாண் குடியினரின் அமைப்பாக விளங்கியது. வடக்கில் வணிக நலன்களைப் பேணும் பிரிவுகளுடன் கூட்டுக்களைக் கொண்டிருந்தாலும் அடிமை முதலாளிகளின் ஆட்சியையே அத்தியாவசிய அடித்தளமாகக் கொண்டிருந்தது. வினோதமான முறையில் இக்கட்சி அப்பொழுது வடக்குப் பகுதியில் மலரத் தலைப்பட்டிருந்த தொழில்துறை முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பாக விளங்கியது. கொண்டு செல்லத்தக்க அடிமை உடைமை முறையை தனக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், வடக்கில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் குறைகளை கவனித்தது. கூலி அடிமை முறைக்கு ஒரு வகை மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. வரலாற்றின் பெரிய வேடிக்கை விந்தைகளுள் ஒன்றாக இந்த கடுமையான பிற்போக்குவாதக் கட்சி வடக்கில் உள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு குறைகள்பால் வேண்டுகோள் விடுக்க முடிந்தது. உள்நாட்டுப் போரின்போது இது ஒரு குமட்டும் போக்கையே கடைபிடித்தது; ஒவ்வொருவரும் ஜனவரியில் நாம் வெளியிட்ட நியூயோர்க்கின் கும்பல்கள் (Gangs of New York) என்ற திரைப்படத்திற்கு பிரமாதமான ஆய்வுரை டேவிட் வோல்ஷால் எழுதப்பட்டதை மீண்டும் வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன் (Misanthropy and contemporary American filmmaking). 1863ல் நியூயோர்க் நகரத்தில் ஆளெடுப்புக்கெதிரான கலவரங்கள் திரைப்படத்தில் ஓரளவு கூறப்படுகிறது. நியூயோர்க் உட்பட வடக்கில் செல்வாக்கு மிகுந்த ஜனநாயகக் கட்சியில் மேலாதிக்கம் செய்தவர்கள் தாமிரத் தலையினர் என அறியப்பட்டிருந்தனர். அவர்கள் தெற்கு அடிமை முறைக்கு ஆதரவாளர்கள். தொழிலாள வர்க்கத்திடையே காணப்பட்ட நியாயமான அடக்கப்பட்ட உணர்வுகளை ஜனநாயகக் கட்சி பயன்படுத்தியது; அதிலும் குறிப்பாக அயர்லாந்திலிருந்து வந்த குடிபெயர்ந்தவர்களின் போக்கை போர் ஆளெடுப்பிற்கெதிராகக் கொண்டு சென்று ஒன்றியத் தேவைக்கெதிராகவே தூண்டிவிட்டனர். தெற்கின் கலகம் மற்றும் அடிமைமுறைக்கு எதிராக லிங்கனால் தொடுக்கப்பட்ட போராட்டத்திற்கு எதிர்ப்பாக நியூயோர்க்கின் மிக ஒடுக்கப்பட்டிருந்த தொழிலாளர்களைத் திரட்டினர். இதை அவர்கள் அக்காலத்திய தொழிற்சங்கத் தலைவர்களின் ஒத்துழைப்போடு செய்தார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டும். ஜனநாயகக் கட்சியினருடனான தொழிலாளர் அதிகாரத்துவத்தின் பிற்போக்கு கூட்டானது 19ம் நூற்றாண்டில் அதனுடைய வேர்களைக் கொண்டுள்ளது. மீண்டும் மீண்டும் முன்னேற்றத்திற்கான தன்மையைக் கொண்ட சமுதாய இயக்கங்கள், இருக்கும் நிலையை எதிர்க்கும் இயக்கங்கள் -உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஏகபோக மூலதனம் வலுப்படலுக்கு எதிர்ப்பு, ராபர் பாரன்ஸ் எனப்படும் பண முதலைகள் எதிர்ப்பு, அமெரிக்க ஏகாதிபத்திய நாடாக வெளிப்படுவதற்கு எதிர்ப்பு - ஜனநாயக்க் கட்சிக்குள் வழிப்படுத்தப்பட்டு குரல்வளை நெரிக்கப்பட்டுவிட்டன. உள்நாட்டுப் போருக்குப் பிறகு எழுந்த பாபுலிஸ்ட் இயக்கம் இதற்குச் சான்று ஆகும். அடிப்படையில் விவசாய எதிர்ப்பு இயக்கமாகும் இது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் முதலாவது ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியின் முழு ஆதிக்கத்தின் கீழ்ப்படுத்தப்பட்டதால் அதன் சாவுமணிக்கு சமிக்கை காட்டப்பட்டது. முதல் உலகப் போரையொட்டி சோசலிசக் கட்சி ஒரு சக்திவாய்ந்த இயக்கமாகத் தோன்றியது. ஆனால் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் அது உடைந்துபோயிற்று. வலதுசாரியினர் ஜனநாயகக் கட்சியோடு தம்மைச் சேர்த்துக்கொண்டனர். இடதுசாரி புதிய கம்யூனிஸ்டு கட்சியின் அங்கமாக மாற்றிக்கொண்டது. இதன் பின்னர் 1930களில் சிஐஒ இயக்கம் தோன்றியது -பொருளாதார மந்தநிலையின் கொடுமைகட்கு கெதிரான மிகப்பெரிய தொழிலாள வர்க்கத்தின் அபார வளர்ச்சி; அது கார்ப்பொரேட்டுகளின் பலத்திற்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களில் பரந்த தொழிற்சங்கங்கள் தோன்றலின் வடிவத்தை எடுத்தது. அப்பொழுது அமெரிக்காவின் வர்க்கப் போராட்டத்தை மிகுந்த கவனத்துடன் ட்ரொட்ஸ்கி கண்ணுற்றார். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உள் விவாதங்களில் இப்புதிய சக்திவாய்ந்த புரட்சிகரத்தன்மை நிறைந்த இயக்கமான சிஐஒ ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகவேண்டுவது அவசியமென சோசலிச தொழிலாளர் கட்சி முன் வைத்தது. சிஐஒ ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி புதிய சோசலிச வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் கட்சியை ஆரம்பிக்கவேண்டும் என்ற நுட்பமான கோரிக்கையை எழுப்பினார். அப்பொழுது நம் இயக்கத்தால் அது ஏற்கப்பட்டது. சிஐஒ இயக்கத்தின் தலைமையிலிருந்த ஜான்.எல்.லெவிஸ் மற்றும் ஏனையோர் போன்ற கம்யூனிச விரோத தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருக்கு எதிராக மட்டுமல்லாமல், சிஐஒ இயக்கத்தை ரூஸ்வெல்ட்டுடனும் ஜனநாயக கட்சியுடனும் கட்டிப்போடுவதற்கு போராடிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிராகச் செயல்பட்டது. அரசியல் ரீதியாக தொழிலாளர்கட்கு கல்வியூட்டவும், முதலாளித்துவ வர்க்கத்துடன் வர்க்கக்கூட்டு வைப்பதற்கு வக்காலத்து வாங்கியவர்களிடமிருந்து தலைமையைப் பறிக்கவும், நம் கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கு புதிய தலைமையாகக் கட்டி எழுப்பவும் அது ஒரு நெம்புகோலாகச் செயல்பட்டது. சிஐஒ வைத் தோற்றுவித்த உள்ளிருப்புப் போராட்டங்கள் உச்ச நிலையிலிருந்த மாதங்களிலேயே 1938ல் ட்ரொட்ஸ்கி கீழ்கண்டவாறு கூறினார்: ``வர்க்கப் போராட்டம் நக்கப்படாமலிருக்க வேண்டுமானால், மனத்தளர்ச்சியால் பதிலீடு செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் ஒரு புதிய வழியை அவ்வியக்கம் கண்டாக வேண்டும், அது அரசியல் வழியாகும். அதுதான் இந்த முழக்கத்தின் அடிப்படைவாதம் ஆகும்." நாம் பின்னர் அறிவோம், இவ்வியக்கம் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகவில்லை; அதுவே அதன் அடிப்படையுணர்வை அழித்துவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் தொழிற்சங்க அதிகாரத்துவம் வலுப்படுத்திக் கொள்ளல் கம்யூனிஸ்ட்டுகளைக் களையெடுக்கும் வடிவத்தைப் பெற்றது. மிகவும் போர்க்குணம் உள்ள மற்றும் சோசலிச எண்ணம் கொண்டவர்கள், உண்மையில் தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான போராட்டத்திற்குத் தலைமை வகித்தவர்கள், சங்கங்களிலிருந்து விரட்டப்பட்டனர். அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்துள் விரைந்து அபிவிருத்தி அடைந்த சீரழிவு உருவாகத் தேவையான முன் காரணங்களை இது தோற்றுவித்தது. நமது இயக்கம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்கட்சியை உருவாக்க தொடர்ந்து குரல்கொடுத்தது. அவற்றின் பிற்போக்குத் தலைமையும் வளர்ந்து வரும் அதிகாரத்துவமயமாதலும் இருப்பினும், இன்றும் பெரிய மற்றும் செயலூக்கமான தளத்தைத் தக்கவைத்திருக்கின்றன, மற்றும் கடந்த காலத்து போர்க்குணமிக்க தொடர்பையும் கொண்டுள்ளன. இந்நிலைமைகளின் கீழ், சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமான தொழிலாள வர்க்க கட்சியை கட்டி எழுப்புதற்கும் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகுதற்குமான தேவையை பிரபலமான வகையில் முன்வைக்கும் ஒரு வழிமுறையாக தொழிற் கட்சி கோரிக்கையின் அதன் பயன்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது. தொழிலாளரின் அரசியல் நனவை உயர்த்துவதற்கான மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகத்தை அம்பலப்படுத்துவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏனைய அரசியல் அமைப்புக்களிலும் உள்ள "இடது" வக்காலத்து வாங்குவோரையும் அம்பலப்படுத்தும் சக்திவாய்ந்த நெம்புகோலாக உள்ளது. ஆயினும், தொழிற்சங்கங்களின் சீரழிவு முற்றுப் பெறலை 1980கள் குறித்தன. 1990களின் முற்பகுதியில் ஏஎப்எல்-சிஐஒ தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு, வேலை நிறுத்த முறியடிப்புக்கு மற்றும் ஊதிய வெட்டுக்கு எதிரான கடும் போராட்டங்களை தொடர்ச்சியாய் வரலாற்று ரீதியாகக் காட்டிக்கொடுத்தல்களை மேற்கொண்டது. அது கார்ப்பொரேட் கம்பெனிகளின் கொள்கையான தொழிற்சங்க நிர்வாகத்தினரின் பங்காண்மையை ஏற்று பழைய வர்க்கப் போராட்டங்களின் மரபுகளுடனான தொடர்பை முற்றிலுமாக மறுதலித்துவிட்டன. ஏஎப்எல்-சிஐஒ, ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ளவும் தொழிற்கட்சியைக் கட்டி எழுப்பவுமான கோரிக்கையின் தந்திரோபாயம் அதன் முற்போக்கு உள்ளடக்கத்தை இல்லாததாக்கிவிட்டது. சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பில் பெரும் நிறுவனங்களின் உறுப்புக்களாக உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் மாறத் தொடங்கின. தொழிலாள வர்க்கத்திடம் இந்த உண்மையைக் கூறவும் இறக்குதறுவாயிலுள்ள இவ் அமைப்புக்களின் செல்தகைமை மீது எந்தவிதமான பிரமைகளை ஊக்கமிழக்கவும் செய்வது அவசியமானதாக இருந்தது. 1990களின் நடுவில், வேர்க்கர்ஸ் லீக் என்பதிலிருந்து சோசலிச சமத்துவக் கட்சியாக நம் இயக்கம் மாற்றமடைந்தது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கான ஊடகமாக எமது இயக்கத்தை கட்டி எழுப்புவது பற்றிய நேரடி முன்வைத்தலாக பிரச்சினை ஆனது. அது தொழிற் கட்சியைக் கட்டுவதற்கான நமது கோரிக்கையின் சாரமாக எப்பொழுதும் இருந்து வந்தது. ஆனால் பன்னாட்டு அளவிலும் அமெரிக்க நிலையிலும் ஏற்பட்டுள்ள பெரும் மாறுதல்கள் பழைய தொழிற்கட்சிக்கான கோரிக்கையை பயனற்றதாக்கிவிட்டன. இன்று ஜனநாயகக் கட்சி பெருமளவு செல்வாக்கிழந்து உள்ளது. அமெரிக்கத் தாராண்மையின் துர்நாற்றம் வீசும் பிணமாக -ஏற்புடைத்ததே- அதைக் குறிப்பிடுகின்றோம். ஆனால் சில அரசியல் போக்குகள் அக்கட்சியை மீண்டும் எப்படியோ புணருத்தாரணம் செய்து தொழிலாள வர்க்கத்தின் கண்முன் பளபளப்பாக்கப் அர்ப்பணித்துள்ளன. பல மேடைகளிலும் அணிகளிலும் பற்பல பேச்சாளரும் அரசியல் அமைப்புக்களும் - சில சோசலிஸ்ட் எனக் கூறிக்கொள்பவர்கள் உள்ளடங்கிய மேடையைக் கொண்ட பேரணிகளிலும் இங்குள்ள ஒவ்வொருவரும் இருந்திருப்பீர்கள் - அணியினரிடையே ஜனநாயகக் கட்சி அலுவலரைக் காட்டுவதைப் பார்த்திருப்ப்பீர்கள் அல்லது திட்டவட்டமாக அக்கட்சியைக் குறை கூறாமல் விடுத்தலையும் பார்த்திருப்பீர்கள். இவையனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் கட்சி உருவாவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை. இது தீர்மானத்தில் எழுப்பப்பட்ட இரண்டாவது முக்கியமான கருத்திற்கு எம்மைக் கொண்டு வருகிறது, அது கூறுகிறது: ``ஆயினும் தேவைப்படுவது, பசுமைக்கட்சி அல்லது ஏனைய சீர்திருத்தவாதக் கட்சி போன்ற மூன்றாவது முதலாளித்துவக் கட்சியல்ல. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம், முதலாளித்துவ முறையின் பொருளாதார அடிப்படைகளை-- உற்பத்திச் சாதனங்களில் தனிச்சொத்துடைமை மற்றும் இலாப நோக்கிற்கான உற்பத்தி ஆகியவற்றை-- தகர்க்கும் கட்சியை கட்டுவதனூடாக மட்டுமே அடையப்பட முடியும். சமுக செல்வம் ஒரு செல்வத்தட்டால் ஏகபோகமாக அனுபவித்தலைக் கட்டாயம் தடுக்கின்ற கட்சியாக, தொழிலாள வர்க்கத்தின் மூலம் பொருளாதார வாழ்வு ஜனநாயக ரீதியாய் கட்டுப்படுத்தலுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்ற கட்சியாக மற்றும் சோசலிச சமத்துவத்தை அடையும் கட்சியாக இருக்க வேண்டும். அதுதான் சோசலிச வேலைத் திட்டம்`` இப்பந்தி ஒரு கேள்வியை எழுப்புகிறது: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் உள்ளடக்கம் என்ன? இது ஓர் அமைப்பின் பிரச்சினை அல்ல; இது ஜனநாயகக் கட்சியிலிருந்து முறிக்கும் பிரச்சினை அல்ல. அது முக்கியமாயினும் கூட. இது ஒரு மூன்றாம் கட்சி என்று அழைக்கப்படுவதை, சில சீர்திருத்தவாதக் கட்சியை, அது பசுமைக்கட்சி (Green Party), குடிமக்கள் கட்சி (the Citizens Party) அல்லது முற்போக்குக் கட்சியாயினும் சரி, ஒரு சீர்திருத்தக் கட்சியோ, கொள்கைகளுடன் ஓடிப்பிடித்து மறைந்து விளையாடும் கட்சியோ சரி அவற்றை அமைக்கும் விஷயம் அல்ல. அமெரிக்காவில் அதுபோன்ற கட்சிகளுடனான அனுபவம் பல காலமாக உள்ளது; அவை எவ்வகையிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக, தொழிலாள வர்க்கம் நனவுபூர்வமாக ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாக உருவாவதை துல்லியமாகத் தடுக்க இட்டுச்செல்லும் புதிய பொறிகள் ஆகும். தற்பொழுதைய அரசியல் நிலையில் காதை முழக்கும் அமைதி பசுமைக் கட்சியின் 2000ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் ரால்ப் நடரின் ஈராக் போர் பற்றிய எக்கருத்தும் வராததுதான். தான் அக்கட்சியின் உறுப்பினர்கூட இல்லை என்று நாடர் கூறிவிட்டார். நாம் அதைப் பற்றிப் பேசவில்லை. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் உள்ளடக்கம் வரலாற்றால் திணிக்கப்பட்ட பணிகளின் மட்டத்திற்கு தொழிலாளரிடையே அரசியல் நனவு உயர்ந்து நிற்கவேண்டும். அல்லது தோழர் நோர்த் தொடக்கத்தில் கூறியபடி, பெரும்பாலும் நனவற்றதாய் இருக்கின்ற சமூக நிகழ்ச்சிப்போக்கை ஒரு நனவான அரசியல் நிகழ்ச்சிப்போக்காய் மாற்றுவது ஆகும். இதற்கு மார்க்சிசத்தின் வரலாற்று, விஞ்ஞான கோட்பாடுகளை உறுதியாய் தளமாகக் கொண்ட ஒரு கட்சி தேவை; அக்கட்சி, தொழிலாள வர்க்க அனுபவங்களின், அதிலும் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் அனுபவங்களை -அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள், சந்தர்ப்பவாதத்திற்கெதிரான போராட்டங்கள், ஸ்ராலினிசத்திற்கெதிரான போராட்டங்கள், முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான போராட்டம், சர்வதேசியத்தின் முக்கியத்துவம் பற்றிய அத்தியாவசிய படிப்பினைகளின் தசாப்தகாலங்களான போராட்டத்தினூடாக வடித்து எடுக்கப்பட்ட கட்சியாக கட்டாயம் இருக்க வேண்டும். இந்தப் படிப்பினைகள் அனைத்தும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ளன; எனவேதான் இவ்வியக்கம் ஒன்றுதான் இந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கான முன்னோக்கை முன்னெடுப்பதிலும் அரசியல் நிகழ்ச்சிகளின் பகுப்பாய்வை வளர்த்தெடுப்பதிலும் திறமையைக் கொண்டிருக்கிறது. என்னுடைய உரையை தீர்மானத்தின் இறுதிப் பகுதியை மேற்கோள் காட்டி முடிக்கிறேன். "முதலாளித்துவ முகாமில் ஒரு காலையோ அல்லது இரண்டு கால்களையுமோ ஊன்றியுள்ள ஜனநாயகக் கட்சியோ அல்லது ஏனைய கட்சிகளிலிருந்து முறித்துக்கொள்ள அது அழைக்கிறது. சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தைப் பெற போராடும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டி எழுப்பும் பணியை நாம் பொறுப்பெடுப்போம்." ஒவ்வொருவரையும் இத்தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். |