WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Provocative naval attack threatens future of Sri Lankan peace talks
ஆத்திரமூட்டும் படகுத் தாக்குதல் இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலத்தை
அச்சுறுத்துகின்றது
By Wije Dias
9 April 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப்
பேச்சுவார்த்தைகளின் ஆறாவது சுற்று, மார்ச் 10 அன்று இலங்கை கடற் படையினரால் விடுதலைப் புலிகளின் படகுகளில்
ஒன்று மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, அதன் தலைவர்கள் வெளியேறுவதாக அச்சுறுத்திய போதிலும் மார்ச் 18-21
திகதிகளில் ஜப்பானில் இடம்பெற்றது. எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகளின் எதிர்காலத்தின் மீது ஒரு கேள்விக்குறியை
இட்டவண்ணம், எதிர்கால மோதல்களை தவிர்ப்பது பற்றியோ அல்லது எந்தவொரு நிலையான விடயத்தினதும் நிச்சயத்
தன்மை பற்றியோ உடன்பாடுகள் எதுவும் காணப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் படகு மீதான தாக்குதலானது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தால்
முன்னெடுக்கப்பட்டு வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை கீழறுக்கும் உள்நோக்கம் கொண்ட இலங்கை இராணுவத்தின்
உயர் மட்டத்தினரின் சில பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட ஆத்திரமூட்டல் நடவடிக்கையாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கத்தின் அறிக்கையின்படி, "தலைவருடன் (வேலுப்பிள்ளை
பிரபாகரன்) மிகவும் நெருக்கமான முக்கிய காரியாளர்கள்" உட்பட பதினொரு விடுதலைப் புலி அங்கத்தவர்கள்
கொல்லப்பட்டுள்ளார்கள்..
இந்தக் கப்பல் அதன் வியாபாரக் கப்பல்களில் ஒன்று எனவும் அது தாக்குதலுக்குள்ளாகும்
போது சர்வதேசக் கடற்பரப்பில் இருந்துகொண்டிருந்தது எனவும் விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டினர். இந்தப் படகு
அடையாளக் குறிகளையோ கொடிகளையோ கொண்டிருக்காததோடு கடற்பரப்பில் 200 மைல்களுக்கு நீண்டிருக்கும்
நாட்டின் பொருளாதார வலயத்துக்குள் "மையங்கொண்டிருந்தது" என கடற்படையினர் குற்றம் சாட்டினர். விடுதலைப்
புலிகளின் கப்பல் ஒன்று ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு தீவின் கிழக்குப் பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக ஒரு
முன்கூட்டிய தகவலை தாம் பெற்றிருந்ததாகவும் இராணுவம் வலியுறுத்தியது.
கடற்படையின் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையாக இருந்தாலும் கூட, 2000 பெப்பிரவரியில்
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில்
விடுதலைப் புலிகளின் படகுகளை மூழ்கடிப்பதை மட்டுமன்றி இடைமறிப்பதற்குக் கூட அனுமதி கிடையாது. அது அரசாங்கக்
கட்டுப்பாட்டிலான பிரதேசங்களுக்கு ஆயுதங்களை நகர்த்துவதிலிருந்து விடுதலைப் புலிகளை தடை செய்கிறது. அது "வெளி
ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும்" காப்பதற்காக இலங்கையின் ஆயுதப்
படைக்கு அனுமதியும் வழங்குகிறது. கடற்படை இலங்கை கண்காணிப்புக் குழுவில் உள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள்
முன்னிலையில் விடுதலைப் புலிகளின் படகுகளில் தேடுதல் நடத்துவதற்கான உத்தரவை விரிவாக்கிக்கொண்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக கடற்படையின் சொந்தக் கணிப்பீடுகள் பெருந்தொகையான
விடையளிக்கப்படாத கேள்விகளை தோற்றுவிக்கின்றன. இராணுவத்துக்கு படகில் ஆயுதங்கள் இருப்பதற்கான முன்கூட்டியத்
தகவல் கிடைத்திருந்திருக்குமேயானால், யுத்தக் கப்பலை பரிசோதிப்பதற்காக கண்காணிப்புக் குழுவின் அலுவலர்கள்
அழைக்கப்படாதது ஏன்? மற்றும், படகு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது என்பதை அது அறிந்திருந்தால், "விடுதலைப்
புலிகளுக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை" தடுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு
நிலைமையை சீர்செய்ய முயற்சிக்காதது ஏன்?
இராணுவம், இலங்கைக்கும் விடுதலைப் புலிகளின் கப்பலுக்குமான இடைவெளிக்கு பல
எண்ணிக்கைகளை குறிப்பிடும்போது படகு நாட்டின் பொருளாதார வலயத்துக்குள் இருந்தது என்ற அதன் குற்றச்சாட்டுக்கள்
மீது சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. சமாதான முன்னெடுப்புகளில் இணைச்செயலாற்றும் அரசாங்கத்தின் செயலகமானது,
கடற்படை கடற்கரையிலிருந்து 240 மைல்களுக்கு அப்பால் -அதாவது சர்வதேச கடற்பரப்பில்- ஒரு சந்தேகத்துக்குரிய
கப்பலைக் கண்டதாக கண்காணிப்புக் குழுவுக்கு அறிவித்திருந்தது. கண்காணிப்புக் குழுவின் அலுவலர், கண்காணிப்பாளர்கள்
களத்துக்கு சமூகமளிப்பார்கள் எனவும், படகு சர்வதேச கடற்பரப்பில் இருக்குமேயானால் அக்கறைகொள்ள அவசியமில்லை
எனவும் உறுதிப்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு அறிவித்திருந்தார்.
ஆனால் கண்காணிப்புக் குழு களத்துக்கு செல்வதற்கான வாய்ப்பைப் பெறவில்லை.
கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ட்ரைகவ் டெலிப்சன் கடற்படையைத் தொடர்பு கொண்டபோது,
கண்காணிப்புக் குழுவுக்கு முதல் முறையாக அறிவித்ததற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஒரு துப்பாக்கிச்
சமர் இடம்பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் படகு மூழ்கடிக்கப்பட்டது ஏன் எப்படி
என்பதையிட்டு துல்லியமாக தெளிவுபடுத்தப்படவில்லை. விடுதலைப் புலிகளின் படகை வசதிக்கேற்ப பொருளாதார
வலயத்துக்குள் வைக்கும் பொருட்டு, கரைக்கும் படகுக்கும் இடையிலான தூரம் அறிவிக்கப்பட்ட 240 மைல்களில் இருந்து
185 மைல்களாக சுருங்கிப்போனது. விவகாரத்தையோ அல்லது கடற்படையின் கணக்கீட்டையோ சவால் செய்ய விடுதலைப்
புலிகளின் படகில் யாரும் உயிர்பிழைத்திருக்கவில்லை.
இந்த துன்பகரமான உயிரிழப்புக்கள், பெப்பிரவரி ஆரம்பத்தில் முன்னைய சுற்றுப்
பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இதேபோன்ற ஒரு சம்பவத்தை அடுத்து உடனடியாக நிகழ்ந்துள்ளன. விடுதலைப் புலிகளின்
மீன்பிடி படகு ஒன்றுக்கும் ஒரு கடற்படை துப்பாக்கிப் படகுக்கும் இடையில் இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் ஒரு
விட்டுக்கொடுப்பற்ற நிலை காணப்பட்டது. கடற்படையினர் படகில் தேடுதல் நடத்துவதை வலியுறுத்தியதோடு, அவ்வாறான
ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுமானால் தற்கொலை செய்துகொள்வதாக படகில் இருந்த மூன்று விடுதலைப் புலி
உறுப்பினர்களும் தெரிவித்தனர். கண்காணிப்புக் குழுவினர் பேர்லினில் இருந்துகொண்டிருந்த அரசாங்க மற்றும் விடுதலைப்
புலி பேச்சுவார்த்தையாளர்களுடன் நிலைமையை சீர்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க படகில் தேடுதல் நடத்துவதற்கான கட்டளையை பிறப்பித்து ஆத்திரமூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டார்.
மூவரும் படகுக்கு தீவைத்து அதை வெடிக்கச் செய்தனர்.
அன்றைய தினம், ஜனாதிபதி என்றவகையில் அரசாங்கத்தை புறக்கணிக்க தனது அதிகாரத்தைப்
பயன்படுத்திய குமாரதுங்கவின் நடவடிக்கையானது சமாதானப் பேச்சுவார்த்தையையிட்டு கொழும்பில் உள்ள ஆளும்
வட்டாரத்துக்குள்ளேயான ஆழமான பிளவை அம்பலப்படுத்துகிறது. ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கும் பெரும் வல்லரசுகள்
மற்றும் பெரு வர்த்தகர்களின் பகுதியினரும் நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டும் முகமாக விடுதலைப் புலிகளுடன்
அதிகாரப் பகிர்வு ஒழுங்கு ஒன்றை எதிர்பார்க்கின்றனர். ஆனால் குமாரதுங்க, அவரது பொதுஜன முன்னணி மற்றும் யுத்தத்தில்
இலாபம் பெற்ற சக்திவாய்ந்த ஆக்கிரமிப்பு நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இராணுவ உயர் மட்ட பகுதியினரும்
அதை நாசம் செய்யவதில் அக்கறைகொண்டுள்ளனர். ஜனாதிபதி அதை "சமாதானக் களியாட்டம்" என முத்திரை குத்தியுள்ளார்.
மார்ச் 10 அன்று நடைபெற்றத் தாக்குதலானது விடுதலைப் புலிகளின் படகு மீதான தாக்குதல்களில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட
முயற்சி மாத்திரமேயாகும்.
விடுதலைப் புலிகளின் பிரதிபலிப்பு
படகு மூழ்கடிக்கப்பட்டதும் பதினொரு விடுதலைப் புலி காரியாளர்களின் உயிரிழப்பும் விடுதலைப்
புலிகளுக்கிடையில் மேலும் பதட்டங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளது. சில உள்ளூர் தலைவர்கள் கண்டனத்தின்
ஒரு பாகமாக ஜப்பானில் தீர்மானிக்கப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் பங்குபற்றாமல்
இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். விடுதலைப் புலிகள் அதன் பிரதேச தலைவர்களுக்கிடையிலான அவசர
மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளபோதிலும் பேச்சுவார்த்தைகள் முன்செல்வதையிட்டு எந்தவொரு உண்மையான
சந்தேகமும் இருக்கவில்லை.
விடுதலைப் புலி பிரிவுகளுக்கான ஒரு சலுகையாக, விடுதலைப் புலி தலைவருடன் பேசுவதற்காக
மார்ச் 13 அன்று விடுதலைப் புலி கட்டுப்பாட்டிலான கிளிநொச்சி நகருக்கு சென்றிருந்த நோர்வே வெளியுறவு பிரதி
அமைச்சர் விதார் ஹெல்கிசனை பிரபாகரன் கடிந்து கொண்டார். இப்பொழுதும் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கமைப்பதில்
நோர்வே பிரதான பாத்திரம் வகித்துவருகிறது. எவ்வாறெனினும் ஐந்து நாட்களின் பின்னர் ஜப்பானிய நகரான
ஹக்கோனில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கான பச்சைவிளக்கை அவர் காட்டினார்.
விடுதலைப் புலிகள், தமிழ் கும்பல்களின் பகுதியினரின் பேரில் எதிர்பார்ப்பது
என்னவென்றால், யுத்தத்துக்கு முடிவுகட்டும், வெளிநாட்டு மூதலீட்டை அபிவிருத்தி செய்யும் மற்றும் தொழிலாள வர்க்கம்
மீதான பரஸ்பர சுரண்டல்களை அனுமதிக்கும் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கேயாகும். ஒரு பெறுபேறாக, எந்தவொரு
வெளியேற்றமும் சர்வதேச நிதி உதவி மற்றும் முதலீட்டை இல்லாமல் செய்யும் என்ற எச்சரிக்கைகளை அடுத்து விடுதலைப்
புலிகள் வழிக்கு வந்ததனர்.
நாடுகளுக்கான உலக வங்கி ஆணையாளர் பீட்டர் ஹெரால்ட் மார்ச் 16 சண்டே
டைம்ஸ் பத்திரிகைக்கு குறிப்பிட்டதாவது: சமாதானப் பேச்சுவார்த்தைகளின் உந்துவிசை நிறுத்தப்படுமானால்,
அது பின்னடைவுக்குச் செல்லுமானால், உதவியாளர்கள் தன்னிச்சையாக எதிர்ச்செயலாற்றுவார்கள். நன்கொடையாளர்களைப்
பொறுத்தமட்டில் சமாதான முன்னெடுப்புகளின் தரம், ஆழம் மற்றும் வேகமுமே உதவி வாக்குறுதிகளின் தரம் மற்றும்
விநியோகத்தின் வேகத்தையும் தீர்மானிக்கும்.
மார்ச் 18ம் திகதி ஜப்பானில் தனது படகை மூழ்கடித்ததற்கான விடுதலைப் புலிகளின்
கண்டனத்துடன் பேச்சுவார்த்தை ஆர்ம்பமானது. கலந்துரையாடல்களின் போது, பாலசிங்கத்தின் ஒரு கூற்றானது ஜனாதிபதி
குமாரதுங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பிளவு எந்தளவுக்கு ஆழமானது என்பதை வெளிப்படுத்தியது.
சண்டே லீடரில் அறிக்கை செய்யப்பட்டிருந்ததைப் போல, சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் தாம் ஜனாதிபதியைப்
போல் யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல என கண்காணிப்புக் குழுவிடம் குறிப்பட்டதாக
பாலசிங்கம் முறையிட்டார். ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆவனத்தில் கைச்சாத்திடவில்லை.
அரசாங்கப் பேச்சுவார்த்தையாளர்கள் அந்த சமயத்தில் முறைப்பாடு தவறு என நிரூபிக்கவில்லை.
மற்றும் அந்தப் பிரசுரத்தை அடுத்து குமாரதுங்கவும் இராணுவமும் குற்றச்சாட்டுக்களை மறுக்கவில்லை. இது உண்மையானால்,
இராணுவ உயர்மட்டத்தினரில் ஒரு பகுதியினர் இன்றைய அரசாங்கத்தையோ அல்லது யுத்த நிறுத்த உடன்படிக்கையையோ
கணக்கில் எடுப்பதில்லை என்பதே இதன் அர்த்தமாகும். விளைபயன் உடைய இரு அரச அதிகாரங்களையும் -ஜனாதிபதி
மற்றும் அரசாங்கம்- பிளவுபட்ட இராணுவ விசுவாசத்தையும் கொண்ட, வளர்ச்சி கண்டுவரும் அரசியல் நெருக்குடியுடனுமான
ஒரு அரசு இருந்து கொண்டுள்ளதை இது உறுதிப்படுத்துகின்றது.
சில வேளைகளில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குமாரதுங்கவை கைச்சாத்திடக் கோரும்
தீர்மானத்தை முன்மொழிந்த பாலசிங்கத்தின் பிரதிபலிப்புகள் மிகவும் அசாதாரணமானதாக விளங்கின. "அவரையும் உடன்படிக்கையில்
கைசாத்திடுவதற்கு சேர்த்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவில்லையா? அவ்வாறானால் யுத்த நிறுத்த உடன்படிக்கையை
அச்சுறுத்தும் இதுபோன்ற மோதல்களை நாம் தவிர்த்துக்கொள்ள முடியும்" என அவர் வருத்தத்துடன் கேட்டார். அரசாங்க
பேச்சுவார்த்தையாளர்கள் பிரச்சினையை மறுக்கவில்லை, ஆனால் அவர் ஒரு வருடத்துக்கும் மேலாக கசப்புடன்
விமர்சித்து வந்த ஆவணத்தில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதியை இணங்கச் செய்வதில் உள்ள தெளிவான சிரமங்களை
சாதாரணமாக சுட்டிக்காட்டினர். இரு சாராரும் முன்னைய இரண்டு கடற்படை மோதல்களையும் தவிர்ப்பதில் ஐயத்துக்கிடமின்றி
தோல்வி கண்ட "கண்காணிப்புக் குழுவின் கரங்களை பலப்படுத்துவதற்கு" உடன்படுவதன் மூலம் விடயத்தை மேசையின் கீழ்
கூட்டித்தள்ள இணங்கினர். இதில் கலந்துரையாடப்பட்ட ஒவ்வொரு விடயத்துக்கும் விடுதலைப் புலிகள் களம் கொடுத்தனர்.
* பொருளாதார ஒழுங்குகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது
சுற்றை ஜப்பானின் விசேடத் தூதுவர் யசுசி அகாசி கண்காணித்தார். பேச்சுவார்த்தைகளில் உறுதியான முன்னேற்றங்கள்
காணப்படும் வரை வரவுள்ள சர்வதேச உதவிகள் கிடைக்காது என்பதை அவர் மீள வலியுறுத்தினார். யுத்தத்தால் அழிந்த
பிரதேசங்களுக்கான உடனடி நிவராணம் மற்றும் மனிதநேய உதவிகளையிட்டு விடுதலைப் புலிகள் அக்கறை
காட்டியபோது, "பெரும் அபிவிருத்திகள்" மேற்கொள்ளப்படவிருந்ததாகவும் விடயம் அங்கேயே நின்றுவிட்டதாகவும்
அரசாங்கம் சுட்டிக் காட்டியது.
* அரசாங்கம் இராணுவ உயர் பாதுகாப்பு வலையங்களை அமைப்பதற்காக
இடம்பெயர்ந்த 100,000 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் விடுதலைப் புலிகளின் மீள்
கோரிக்கையை நீக்கியது. தமிழ் பொது மக்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கும் முன் விடுதலைப் புலிகளை
நிராயுதபாணிகளாக்க வேண்டும் என இராணுவம் வலியுறுத்தியது. பாலசிங்கம் வடக்கில் நிலைகொண்டுள்ள 40,000
துருப்புக்களை குறைக்குமாறு பரிந்து பேசியதோடு, ஒரு உடனடி எதிர்தாக்குதல் படையை ஸ்தாபிக்குமாறு
ஆலோசனையும் கூட வழங்கினார். ஆனால் அரசாங்கம் வடக்கில் இராணுவ முன்நிலைகளை மாற்றுவதையோ அல்லது
உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் அகதிகள் திரும்புவதையோ மறுத்துவிட்டது.
* ஜனநாயக உரிமைகள் மீதான கொழும்பின் துஷ்பிரயோகங்கள் எவ்வாறிருப்பினும்,
நோர்வே பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கிசன் விடயம் சம்பந்தமாக விடுதலைப் புலிகளுக்கு ஒரு தலைப்பட்சமான
விரிவுரை வழங்கவும் நிதி சம்பந்தமான பிரச்சினையை ஞாபகப்படுத்தவும் அவகாசம் எடுத்துக்கொண்டார். "விடுதலைப்
புலிகள் மனித உரிமைகளுக்கான சர்வதேச அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிடில், அவர்களால் (சமாதான உதவியாளர்களால்)
அதை நிதி வழங்குபவர்களுக்கு கொடுக்க முடியாது எனவும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட
விடயத்திற்கு வெளியில் இருக்கும் நிலையை நிதி வழங்குபவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த எல்லா விவகாரங்களும் ஒரு உண்மையற்ற புறத்தோற்றத்தைக் கொண்டுள்ளன. "சமாதான
முன்னெடுப்புகளின்" பல மாதங்களின் பின்னரும் மிகச் சிறய நகர்வுகளால் இரண்டு தசாப்தங்களாக யுத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்த
மக்களுக்கு அடிப்படை தேவைகளையோ ஜனநாயக உரிமைகளையோ வழங்க உடன்பாடுகள் ஏற்படவில்லை. அடிப்படையான
அரசியல் விடயங்கள் மற்றும் தீவின் வடக்கு மற்றும் கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வை வழங்கவுள்ள
அதிகாரப் பகிர்வு கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமான பேச்சுக்கள் இன்னமும் கூட ஆரம்பிக்கப்படவில்லை. மற்றும்
பின்னணியில் குமாரதுங்கவும் இராணுவத்தின் பகுதியினரும் இறுதியாக காணப்படும் எந்தவொரு உடன்பாட்டையும் கீழறுப்பதற்காக
சிங்களப் பேரினவாதக் குழுக்களுடன் அணிசேர்ந்து வருகின்றனர்.
Top of page
|