WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
சீனா
High death toll continues in China's coal
mines
சீன நிலக்கரிச் சுரங்கங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகளவு தொடர்கிறது
By David Harvey and Terry Cook
28 April 2003
Back
to screen version
2003
ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே ஆபத்திற்குப் பெயர்போன
சீன நிலக்கரிச் சுரங்கங்களில், கொடூரமான முறையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுரங்கச் சரிவுகள், வெள்ளத்தால்
பீடிக்கப்பட்ட சுரங்கங்கள், நிலவாயு வெடிப்புக்கள் இவற்றால் ஏற்பட்ட தொடர்ச்சியான விபத்துக்கள் என்பன 200
க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்களின் இறப்பிற்கு வழிவகை செய்துவிட்டன என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இந்த சாவுகள் யாவும் பெரும் பனிப்பாறையின் உச்ச விளிம்புதான். கடந்த ஆண்டு அதிகாரபூர்வமான
புள்ளி விவரங்களின்படி 5971 சுரங்கத் தொழிலாளர்கள் விபத்துக்களில் உயிரிழந்தனர் என்று தெரிய வருகிறது. அதிகாரபூர்வமற்ற
தகவல்களோ 7000 ஆக எண்ணிக்கையை உயர்த்திக் கூறுகின்றன. இந்த விபத்துக்களை வேண்டுமென்றே சுரங்க உரிமையாளர்களால்
சட்டப்பூர்வ குற்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கும், இழப்புக்களை கூறுவதை தவிர்ப்பதற்கும் மறைக்கப்படுகின்றன. அத்துடன்
நெருக்கடியைக் குறைந்த அளவில் காட்டுவதற்காக அதிகாரிகளும் இவற்றைப் பற்றி அறிக்கைகள் வெளியிடுவதில்லை.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த விபத்துக்களில் 30 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஏப்ரல் தொடக்கத்தில் ஹுனன் (Hunan)
மாநிலத்திலிலுள்ள லியானுவான் என்ற அரசு உடைமைச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால்
17 சுரங்கத் தொழிலாளர்கள் மாண்டனர்.
அடுத்து, 13 பேர் ஹெபெய் மாநிலத்திலுள்ள டோங்ஷாங்க்வின் நிலக்கரிச் சுரங்கத் தீ விபத்தில் கருகிப்போயினர். அத்துடன்,
மண்ணிற்குள் புதைந்தபோன ஏழு பேர்களை காப்பாற்றச் சென்ற ஆறு தொழிலாளர்கள், சுரங்க முன்வாயிலில் எழுந்த அழுத்தமான
கறுத்த புகை மண்டலத்தால் மூச்சுத்திணறி மாண்டுபோயினர்.
மார்ச் 22 ல், சானெக்ஸி (Shanxi)
மாநிலத்திலுள்ள லுலியாங் மாவட்ட மெங்னான்ஷிவாங் நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தானது மிகவும் மோசமான
ஒன்றாகும்: அங்கு 87 பேரடங்கிய தொழிலாளர்களில் 72 பேர்கள் மிகப்பெரிய வெடிவிபத்தில் அகப்பட்டு மரணத்தை
தழுவினர். எந்த சூழ்நிலையில் இது நிகழ்ந்தது என்று சீன லேபர் புல்லட்டினிTM (China
Labor Bulletin) வெளிவந்த குறிப்பு தெரிவிக்கின்றது.
அரசாங்க மற்றும் தனியார் சுரங்க உரிமையாளர்களும், அரசாங்க அதிகாரிகளும் எந்த அளவிற்கு இழிவாக சுரங்கத்
தொழிலாளர்களின் உயிர்களைக் கருதுகிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் சிகரமாக உள்ளது.
மெங்னான்ஷிவாங் தொழிலாளர்கள் மெதேன் வாயு (methane
gas) வெளிப்பட்ட துர்நாற்றத்தை முகர்ந்தவுடன், அது வெடிப்பதற்கு
முன் இடத்தைவிட்டு ஓட முயன்றனர். ஆனால் உற்பத்திக் குறைவு பற்றி கவலைப்பட்ட சுரங்க அதிகாரி ஒருவர் அவர்களை
திரும்பவும் சுரங்கத்திற்குள் அனுப்பினார். இவ்விபத்து நடந்தபோது 15 பேர் உயிரோடு இருப்பதற்கான காரணம்
அவர்கள் தமது அதிகாரியை புறக்கணித்துவிட்டு தப்பியோடியதுதான் ஆகும்.
மெதேன் வாயு படிப்படியாகப் பரவியபோது, சுரங்கத்தின் காற்றோட்டம் மற்றும்
அவசரமாக வெளியேறும் துணை வாயில்களில் மின்சாரம் செயலிழந்தது. வெடி விபத்து நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு
முன்பு ஏற்பட்ட பிழையானது, முக்கியமான காற்றோட்ட இயந்திரத்தைச் செயலற்றதாக ஆக்கிவிட்டது. சிதைந்துபோன
பல சடலங்கள், விபத்து நடந்த மூன்று நாட்கள் வரை பிளாஸ்டிக் விரிப்புக்களில் தரையில் கிடத்தப்பட்டிருந்ததினால் அழுகத்
தொடங்கின.
இப்பேரழிவை பார்வையிட்ட மாவட்ட உயர் அதிகாரிகள் இச்சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சியாக,
அப்பகுதிக்கு மக்களை வராமல் தடுப்பதற்காக ஆயுதம் தாங்கிய 500 போலிசார்களை குவித்தனர். இந்த சுரங்கத்தின்
பாதுகாப்பற்ற நிலைபற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு முன்னரே நன்கு தெரிந்திருந்ததால் கடந்த ஜனவரி மாதம் இதனை மூட
அவர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் சுரங்கமோ தொடர்ந்தும் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
இதேபோன்ற பரிதாப சம்பவம் ஒன்று குயிஷூ (Guizhou)
மாநில ஷூய்செங் பகுதியிலுள்ள முச்சோங்ஹூ நிலக்கரிச் சுரங்கத்தில்
24 பெப்ரவரியில் ஏற்பட்டது. ஒரு வாயு வெடிப்பு 40 தொழிலாளர்களை பலியெடுத்ததுடன் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தி
மற்றும் பலரை மோசமான உயிராபத்துக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்திலும் சுரங்கத்தின் காற்றோட்டக் கருவிதான்
காரணமாக இருந்திருக்கவேண்டும். இம்முறை மெதேன் வாயு வெளியேறாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஏற்பட்ட
தவறுதான் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முச்சோங்ஹூ சுரங்கத்தின் கவனமற்ற பாதுகாப்பு முறை மற்றும் கருவிகள் பழுதடைந்து
விபத்தை ஏற்படுத்தியுள்ளதை தெளிவாகக் காட்டுகின்றது. இவ்வெடிச் சம்பவத்திற்கு முன் தொழிலாளர்கள் ஒவ்வொரு
நாளும் 12 மணி நேர வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
மாதத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே அவர்களுக்கான விடுமுறையாகும். சமீபத்திய பேரழிவானது சுரங்கங்களில் ஏற்பட்ட
முதலாவது சம்பவம் அல்ல. செப்டம்பர் 2000 த்தில் காற்றோட்டக் கருவியின் சீர்குலைவு மற்றும் தோண்டியெடுக்கும்
குழாய்களில் ஏற்பட்ட கசிவு ஆகியன வாயு வெடிப்பிற்குக் காரணமாகி 62 உயிர்களைப் பறித்தன.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுரங்கத் தொழில்துறையில் மேற்கொண்டுள்ளோம்
என்ற சீன அதிகாரத்துவப் பிரிவினரின் கூற்றை, தொடரும் இப்படுகொலைகள் கேலிக் கூத்தாக்கியுள்ளது.
சென்ற ஆண்டு அரசு நிலக்கரிச் சுரங்கப் பாதுகாப்பு
(SAWS) நிறுவனம் விடுத்த
அறிக்கையில்,
சுரங்க விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20.4 வீதமாகவும், 2002 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் தொன் நிலக்கரி
உற்பத்தியில் 4.86 வீத இறப்பு என்றும் கூறப்பட்டது. இந்தப் புள்ளி விவரம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதொன்றாகும்.
ஏனெனில் நிலக்கரி உற்பத்தி பெருகி வருகின்றது. அதேபோன்று இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அதாவது,
2000 ல் 5798 பேர்கள், 2001 ல் 5395 பேர்கள், 2002 ல் 5791 பேர்கள் என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.
அரசாங்கம் ஆயிரக்கணக்கான சிறிய சட்டவிரோதமான நிலச்சுரங்கங்களை மூடிவிட்டதாக
அறிவித்தது. இது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
மாறாக, நிலக்கரி பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில்
விலைச் சரிவைச் சந்திக்காமல் இருப்பதற்காக, உற்பத்தியைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவாகும். இதன் பின்னர்
ஏற்பட்ட விலை உயர்வினால் சட்ட விரோதம் என மூடப்பட்ட சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டு அதிகளவிலான லாபத்தைப்
பெற வழி திறக்கப்பட்டது.
சிறிய எண்ணிக்கையிலான சட்டபூர்வமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் சுரங்கங்களை
தனியாரோ அல்லது கிராமக் குழுக்களாலோ நடத்தப்படுபவை இறப்பு விகிதத்திற்குக் காரணமென்றாலும், பெரிய அளவிலான
இறப்புக்கள் அரசாங்க உடைமையிலான சுரங்கங்களிலேயே நிகழ்கின்றன. இவைகள் குறைந்த உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு,
மூடுதலுக்கோ அல்லது தனியார்மயமாக்குதலுக்கோ தயார் செய்யப்படுகின்றன. காற்றோட்டம், கண்காணிப்பு, அபாயமணி
ஆகியன பாதுகாப்பற்ற, நாட்பட்ட இயந்திரங்களாக இருக்கின்றன. அத்துடன் இக் கருவிகள் பழுதுபார்க்கப்படுவதோ
அல்லது நவீனப்படுத்தப்படுவதோ கிடையாது.
2002 TM சீன லேபர் புல்லட்டினில் பட்டியலிடப்பட்ட 47 மோசமான விபத்துக்களில்
14 அரசுக்கு சொந்தமான சுரங்கங்களில் ஏற்பட்டதுடன், அதில் 400 பேர்கள் பலியாகினர். அனைத்து விபத்துக்களிலுமே
10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஜிக்ஸி நகரம், ஹெய்லோஸ்ஜியாங்கிலுள்ள அரசுக்கு சொந்மான செங்கிஹே சுரங்கத்தில்
கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வாயு வெடிப்பினால் 124 பேர்கள் இறந்தனர். இது நாட்டின் நான்காவது பெரிய அளவிலான
சுரங்க விபத்து எனக் கணிக்கப்படுகின்றது.
கடந்த ஜூனில் இயற்றப்பட்டு நவம்பரில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தொழில்
பாதுகாப்பு சட்டத்தைப்பற்றி, சமீபத்தில் சீன அரசாங்கப் பேச்சாளர்
உயர்த்திப் பேசியுள்ளார். இந்த ஆண்டு நடந்த உயிரிழப்புக்கள் தெளிவாக்குவதுபோல்
புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அதிக நன்மையைக் கொடுக்கவில்லை. அரசாங்கத்தின் பல மட்டங்களிலும் உள்ள தமது நலன்களைப்
பாதுகாக்கும் குழுக்கள், புதிய சட்டத்தினை சரியான முறையில் இயங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றன.
பல இடங்களில் கிராமத்தவர்களால் நடத்தப்படும் சுரங்கங்கள் அப்பகுதி வாழ் மக்களுக்கு
வருமானம் பெற வழியாக உள்ளது. ஆனால் பணத்திற்கு கஸ்டப்படும் நிலையிலுள்ள கிராமத்தினர் பாதுகாப்புக் கருவிகளை
வாங்க முடியாமல் உள்ளனர். மாநில அளவில் பணமற்ற அதிகாரிகள் நிலக்கரிச் சுரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை
நம்பியிருப்பதால் இந்நிலையைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.
பெய்ஜிங்கிலிருந்து சுரங்கப் பாதுகாப்புப்பற்றி ஆணைகளை வெளியிடும் அதிகாரத்துவம் அதற்குத்
தேவையான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்வதில்லை. கடந்த செப்டம்பரில் வெளியான அரசாங்க அறிக்கையில், சமீப ஆண்டுகளில்
சீனாவின் முக்கிய சுரங்கங்களில் பாதுகாப்புக் கருவிகளுக்கான முதலீடு ''3 லிருந்து 4 பில்லியன் யென் ($400
மில்லியன்) குறைந்துவிட்டதாக'' தெரிவித்தது. ஹெலாங்ஜிலாங் மாநிலத்தில்
மட்டும் திட்டமிட்ட பாதுகாப்பு முதலீட்டு இலக்கில் 507 மில்லியன் யென் குறைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஷானிக்ஸ், ஹினன், கொய்ஷூ ஆகியவற்றில் நடந்த மோசமான சுரங்க விபத்துக்களுடன் சேர்ந்து ஹெலாங்ஜிலாங்கும்
இணைந்து கொண்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேறு வழியின்றி அபாயகரமான சுரங்கங்களில்
வேலை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதில் பெயிஜிங்கிற்கும் பங்கு உண்டு. அரசுக்கு சொந்தமான
நிறுவனங்கள் மூடப்பட்டு அல்லது மாற்றுமுறை புகுத்தப்பட்டதையடுத்து மில்லியன் கணக்கிலான வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன.
நாட்டுப் புறத்தில், பல சிறிய விவசாயிகள் வேலை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில் அரசு உதவியுடன் நடத்தப்பட்ட விவசாயக் கூட்டுப் பண்ணைகள் அரசு உதவியற்ற நிலையில் மூடப்பட்டுவிட்டன.
ஆகவே இந்நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. 2001 டிசம்பரில் உலக வர்த்தக
அமைப்பு (WTO)
மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிற்குள் நுழைவதற்கு வசதியாக, பெரும்பாலான தடைகளை 2006 க்குள் அகற்ற
பெய்ஜிங் உறுதிமொழி கொடுத்துள்ளது. புதிய அளவிலான ஆலை மூடல்கள் மற்றும் வேலை வெட்டுக்கள் என்பன மேலும் மில்லியன்கணக்கான
மக்கள் வேலை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பற்ற சுரங்கத் தொழிலுக்குள்
அவர்களை மேலும் தள்ளுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
|