World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
சீனா
SARS outbreak the result of poor social conditionsசார்ஸ் நோய்யின் கட்டற்ற வெளிப்பாடு மோசமான சமூக நிலைமைகளின் விளைவாகும் By Barry Mason சார்ஸ் (SARS) எனப்படும் கடுமையான மூச்சுத்திணறல் நோயின் வெளிப்பாடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீன மாநிலங்களில் ஒன்றான குவாங்டாங்கில் தோன்றியது; இது இன்புளுவன்ஸா வகையான ஒரு புது தொற்று வியாதியாகும். சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியை ஒட்டிய ஹாங்காங்கிற்கு அருகிலுள்ளது குவாங்டாங். குவாங்டாங்கிலிருந்து இவ்வியாதி ஹாங்காங்கிற்குப் பரவி, அங்கிருந்து தூரகிழக்கு காடுகளுக்கும் அதன்பின்னர் ஐரோப்பாவிற்கும் வடஅமெரிக்காவிற்கும் பரவியது. சீனா, சிங்கப்பூர், வியட்நாம், கனடா ஆகியவை மிகக்கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட நாடுகளாகும். தைவான், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, தாய்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற ஏனையவற்றிலும் நோயின் பாதிப்பு உள்ளதாக அறிக்கைகள் வந்துள்ளன. நவம்பர் மாதம் முதன் முதலில் இந்நோய் கண்டு அறியப்பட்டதும், சீன அதிகாரிகள் செய்தி பரவாமல் இருட்டடிப்பு செய்ததோடு நோய்களைக் கட்டுப்படுத்த உலக அமைப்புகளுக்கும் செய்தியைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நோயைத் தனிமைப்படுத்தத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை, பள்ளிகள் மூடப்படவில்லை, நோயுடன் தொடர்பு வராமல் காப்பதற்கான ஆலோசனைகள் அளிக்கப்படவில்லை. இந்த மாதம்தான் சீன உதவிப் பிரதமர் Wu Yi தேசிய அளவில் அவசர மருத்துவ வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு அறைகூவல்விடுத்துள்ளார். முதன் முறையாகப் பொதுமக்களுக்கு நோயைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் அளிக்கப்பட்டது. இந்த விளைவுகூட சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் இந்த நோய் பரவி வருவதைப் பற்றிய செய்திகள் உரிய முறையில் விளம்பர அறிவிப்பாக வராமல் இருப்பது பற்றி வருத்தம் தெரிவித்த பின்னரேயாகும். இப்பொழுதும்கூட இதைப் பற்றி மூடி மறைக்கும் முயற்சி இருப்பதுபோல் தோன்றுகிறது. ஏப்ரல் 7ம் தேதி ஒரு BBC வலைத்தளச் செய்தியின்படி பெய்ஜிங்கில் 19 பேர் சார்ஸால் பாதிக்கப்பட்டனர் என்ற அதிகாரபூர்வமான அறிக்கை, நகரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சுகாதாரப் பணியாளர்கள் கூறுவதுடன் முரண்படுவதாக உள்ளது. ஒரு சீன இராணுவ மருத்துவர் குவாங்டாங்கில் நோயினாலான பாதிப்பு பாதியாகக் குறைந்துவிட்டது என்ற அரசாங்கத்தின் கூற்றை ஏற்காமல் மாறுபட்ட கருத்தையே கூறியுள்ளார். சீன அதிகாரிகளின் இத்தகைய மூடிமறைக்கும் முயற்சியில்; முதலாளித்துவ தொழிற்துறை அபிவிருத்திக்கும் உள்ளார்ந்த முதலீட்டிற்கும் தடையேற்படுத்தும் எதனையும், அது மனித உயிருக்கு ஏற்படும் அபாயமாக இருந்தாலும் கூட, அனுமதிக்கக்கூடாது, என்ற சிந்தையே மேலோங்கி நிற்பது புலனாகிறது. சமீப ஆண்டுகளில் பெரும்பாலான சீன கிழக்குக் கரையோரப் பகுதிகளோடு குவாங்குடாங்கிலும் வியக்கத்தக்க அளவு தொழில்மயம் நிகழ்ந்துள்ளது; இவ்வாறாக சீனா மலிவுக் கூலிக்கு பெரிய பன்னாடு தழுவிய நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை இணக்கும் களமாக இன்று திகழ்கின்றது. உதாரணமாக குவாங்டாங் பகுதியிலிருந்து உலக உற்பத்தியில் 40 சதவிகித மைக்ரோவேவ் அவன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் தொழில் உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் கடந்த ஆண்டைவிட 17.5 சதவீதம் கூடுதலாக இருந்தது. சீனப் பொருளாதாரமும் கடந்த ஆண்டு முந்தைய ஆண்டைவிட 8 சதவீத வளர்ச்சியைக் காட்டியது. பெரும்பான்மையான மக்களின் சமூக நிலை சரிந்து கொண்டிருக்கும் அளவில் ஒரு சிறிய வட்டம் மட்டுமே இவ்வளர்ச்சியின் பயன்களை அனுபவித்து வருகிறது. சீனாவில் ஒரு தனி மனிதனின் ஆண்டு சராசரி வருமானம் பற்றாக்குறையான 700 டாலர்களே. ஆண்டிற்கு 5,000 டாலர் வருமானம் காண்பவர் மக்கட்தொகையில் 5 சதவிகிதத்தினராவர்; ஆக 2.4 மில்லியன் மக்கள் 100,000 டாலர் மதிப்புடைய சொத்துக்களைக் கொண்டுள்ளனர். குவாங்டாங் மாநிலத்தில் ஒரு பெரிய நகரமான குவாங்ஷுவில் சீனப் பகுதியின் மேற்குப் பகுதிகளிலிருந்து பெருமளவு தொழிலாளர்களும் விவசாயிகளும் குவிந்துள்ளனர். திறந்த சந்தை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவால் விவசாயப் பொருட்கள் 23 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுவிட்டு நகரங்கட்குப் பெயரும் நிலை உள்ளது. குவாங்ஷு போன்ற நகரங்களில் அவர்கள் அலைமோதி ஆலைகளிலும் கட்டிடப் பணியிலும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களாக மாறிவருகின்றனர். ஊதியங்கள் மிகக் குறைவாக உள்ளன. உற்பத்தித் துறையில் தொழிலாளரின் சராசரி வருமானம் மணி ஒன்றுக்கு 60 சென்ட்ஸ்; மெக்சிகோவில் 1 மணி நேரத்திற்கு 1 டாலர் 40 சென்ட்ஸ் என்ற நிலை உள்ளது. நகர்ப்புற வளர்ச்சி என்ற மாறுதல் நிகழ்ந்துவரும் வேளையில் பிராணிகளை வளர்த்து அங்காடிகளில் விற்கும் முயற்சியில் வாழ்க்கையை ஓட்ட முயற்சிக்கும் பல மக்களும் உள்ளனர். தாங்கள் வளர்க்கும் விலங்கினங்களோடு அவர்களும் நெருக்கமாக வாழ்கின்றனர். பல தெருவோரங்களில் கணக்கிலடங்கா அங்காடிகள் தோன்றி உயிருடனுள்ள பிராணிகள் விற்கப்படுகின்றன. மனிதர்கள் மிக ஏழ்மையான நிலையில் விலங்குகளோடு நெருக்கமாக வாழ்வது விலங்கு வைரசுக்கள் மக்களிடையே பரவுதற்குச் மிகச்சாதகமான சூழலைக் கொடுப்பதாக உள்ளது. இவ்வாறுதான் சார்ஸ் தொற்றுநோய் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஹாங்காங்கில் நெரிசல் மிகுந்த சுகாதார வசதிகள் குறைந்த வீடுகள் இந்நோயின் பரவலுக்குக் காரணமாயின. ஒரு குறிப்பிட்ட வீட்டுத் தொகுதியில் முழுமையாக இத்தொற்றுநோய் கரப்பான்பூச்சிகள் மூலமாக ஒரு குடியிருப்பில் இருந்து மற்றொன்றுக்கு என பரவியதாக நிபுணர்கள் இப்பொழுது கருத்துத் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கிற்கு நோய் வந்ததும் விரைவாக உலகின் ஏனைய பகுதிகளுக்கு பரவுது சாத்தியாமாகிவிட்டது. மிகப்பெரிய வணிக மையமாக ஹாங்காங் திகழ்வது பெருமளிவில் சர்வதேச பயணிகள் போக்குவரத்துக்கு ஏதுவாவக இருப்பதால், அவர்களால் இது பரவியது. மிகுந்த காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நாட்களில் மூச்சுத்திணறல் ஆகியவை நோயின் அறிகுறிகளாகும். இந்நோய்க்கு ஆளானவர்களில் நான்கு சதவிகிதத்தினர் உயிரிழக்க நேரிட்டது. இன்றுவரை கிட்டத்தட்ட 2800 பேரை இந்நோய் பாதித்துள்ளது; அதில் 2000 பேர்கள் சீனா/ஹாங்காங் ஆகியவற்றைச் சார்ந்தவர். இறந்த 100க்கும் மேற்பட்டோரில் பாதி பேருக்குமேல் சீனர்கள் ஆவர். Lancet வலைத் தளத்தில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரையின்படி இவ்வியாதி தோன்றுவதற்கு காரணமாகவுள்ள வைரஸ் ஒரு கரோனா வைரஸ்சாக (corona virus) இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஹாங்காங்கில் தொற்றுநோய் பரவிய 50 நோயாளிகளின் மீது ஆராய்ச்சி நடத்தப்பட்டது. கரோனா கிருமிகள் பொதுவாக உயிர்க்கொல்லிகள் அல்ல; அவற்றால் சாதாரண ஜலதோஷம் மட்டுமே ஏற்படும். இது இக் குறிப்பிட்ட வடிவம் மாறி ஒருவகை விலங்கினதிலிருந்து தாவி மனித இனத்திற்கு தொற்று ஏற்படுத்துகின்றது எனக் கருதப்படுகிறது.உலகச் சுகாதார அமைப்பு (WHO) அண்மையில் சார்ஸ் தொற்று நோயைப் பற்றிய நிலையை ஆராய்ந்து ஏப்ரல் 10ம் தேதியன்று சீன ஆய்வுக்கூடங்களில் சார்ஸ் நோயாளிகளிடம் கரோனாக் கிருமியைக் கண்டறிந்ததைக் கூறுகிறது; Lancet முடிவுகளை இவை உறுதி செய்வதுடன் சீன மாநிலமான குவாங்டாங்கில் இது தொடங்கியது என்பதும் புலனாகிறது. ஹாங்காங்கில் சுகாதார அதிகாரிகள் சார்ஸ் நோயாளிகள் 10 நாட்களுக்கு தத்தம் வீட்டிற்குள்ளேயே அனைத்துத் தொடர்புகளையும் வைத்துக்கொள்ளவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிகிறது. சிங்கப்பூரில் 10 சார்ஸ் நோய்வாய்ப்பட்டவர்கள் உறுதிப்படுத்தப்ட்டுள்ளனர், சந்தேகத்திற்கிடமான முறையில் 33 நோயாளிகளும் உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட சீனரிடமிருந்து பரவியிருக்கக்கூடுமென்று நம்பப்படுகின்றது. வியட்நாமில் இப்பொழுது 62 நோயாளிகளின் பட்டியல் உள்ளது. கனடாவில் 97 பேர் பாதிக்கப்பட்டு 10 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் பலரும் ஒன்டரியோப் பகுதியைச் சார்ந்தவராவர். சார்ஸ் எய்ட்ஸ்/எச்.ஐ.வி.யை விட உலகிற்கு அச்சம் விளைவிக்கும் நோய் என்ற பயம் சார்ந்த கூக்குரலும் முன்னறிவுப்புக்களும் தோன்றியுள்ளன. ஆனால் தக்க நடவடிக்கைகள் மூலம் சிகிச்சை மூலமும் இந்த வியாதி கட்டுக்கடங்கும். இதன் இறப்பு விகிதமான நான்கு சதவீதம் விதிவிலக்கானதல்ல. ஆனால் இதுபோன்ற புதிய தொற்றுவியாதிகள் பரவுதலும் இப்பொழுதுள்ள அமைப்பில் காணப்படும் குறைகளும் வருங்கால அச்சுறுத்தல்களும் தெளிவாகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில் மேலை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பெருமளவு தொற்றுநோய்களைக் குறைத்தது பெரிய சாதனைகளில் ஒன்றாகும்; இது தூய குடிநீர் வழங்குதல், தொற்றுநோயைத் தொடர்ந்து கண்காணித்துத் தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்துதல் போன்றவற்றால் சாத்தியமாயிற்று. அபிவிருத்தியடைந்த உலகில் சுகாதார நடவடிக்கைகளுக்குமேல் செய்யப்படும் தாக்குதலாக இப் பணிகளுக்குச் செலவிடப்படும் பணம் வெட்டப்படுகின்றது என்பது மாத்திரமல்ல; ஆனால் அதனிலும் மேலாய் பூகோளமயமாக்கம் முன்னர் என்றுமில்லாதவாறு உலகளாவிய பொதுச் சுகாதார வளர்ச்சிக்கு கூடுதலான முன்னேற்பாட்டு வழிவகை செய்யவேண்டும் என்பதைக் குறித்துநிற்கின்றது. |