World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள் Report from the World Socialist Web Site /Socialist Equality Party conference: "Socialism and the Struggle Against Imperialism and War" "Internationalism stands at the center of the history of the working class" உலக சோசலிச வலைத் தளம் / சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டிலிருந்து ஓர் அறிக்கை:
"சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கு எதிரான போராட்டமும்" 22 ஏப்ரல் 2003 உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால், "சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கெதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வேலைத் திட்டமும் மூலோபாயமும்" என்ற தலைப்பில், அன் ஆர்பர், மிச்சிகனில் மார்ச் 29-30, 2003 நடாத்தப்பட்ட மாநாட்டில் உல்றிச் றிப்பேர்ட் (Ulrich Rippert) ஆற்றிய உரையை கீழே வெளியிடுகின்றோம். உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit) தேசிய செயலாளருமான உல்றிச் றிப்பேர்ட், மாநாட்டின் விவாதத்திற்குப்பின் ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் இரண்டாவது தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்: "தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக" ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் செய்தது. ("சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு"). இதைத் தவிர உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் ஆரம்ப உரையை ("கட்டுக்கடங்கா குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்") வழங்கினார். மாநாட்டில் ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களின் வாசகங்களும் ஏப்ரல் 2லிருந்து ஏப்ரல் 4 வரை வெளியிடப்பட்டன. (உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு", "உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் கோரும் தீர்மானங்கள், ஜனநாயக உரிமைளை பறிப்பதற்கு எதிர்ப்பு", "போர் மற்றும் அமெரிக்க சமூக நெருக்கடி தொடர்பான தீர்மானங்கள், உலக சோசலிச வலைத் தள அபிவிருத்தி பற்றிய தீர்மானங்கள்") வரும் நாட்களில், மற்றைய தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்களின் கருத்துக்களையும் எஞ்சிய தீர்மானங்களையும் மகாநாட்டிற்கு சர்வதேச பிரதிநிதிகள் கொண்டுவந்த வாழ்த்துக்களின் தொகுப்பையும் நாம் பிரசுரிக்க இருக்கிறோம். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதிலும் பல முக்கியமான விவாதங்களைக் கேட்பதிலும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இங்கு பல விவாதங்களில் காணப்படும் பங்களிப்புக்கள், அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றத்தைப் பிரதிபலிப்பதாகவுள்ளதுடன் உலக சோசலிச வலைத் தளம் ஒரு மாபெரும் மாறுதலைக் கொண்டுவர இருக்கும் கருவியாகத் தோன்றுவதுடன் சர்வதேச புரட்சிக்கான கட்சியைக் கட்டுகிறது என்பதையும் குறிகாட்டுகிறது. இந்த மகாநாட்டிற்கு ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit) தோழர்களின் புரட்சி வாழ்த்துக்களை உவகையுடன் சேர்ப்பிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்தக் கூட்டம் பற்றிய அறிவிப்பு கிடைத்தவுடன் ஏறத்தாழ ஜேர்மனியிலுள்ள ஒவ்வொரு தோழரும் இங்கு வந்து பங்குகொள்ள விழைந்தனர். அரிய வரலாற்று நிகழ்ச்சியை நழுவவிடக்கூடாது என்ற கருத்தில் அவர்கள் எண்ணம் சரியென்றே நான் நினைக்கிறேன். இம்மாநாடு மிகப்பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இப்போர் ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ள நிலைமைக்கு ஒரே அடைமொழிதான் கொடுக்க முடியும் - அதிர்ச்சி! ஏனெனில் ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக ஜேர்மனியில் கடந்த நூற்றாண்டில் அனுபவிக்கப்பட்ட எல்லா விதமான வலியத்தாக்கும் இராணுவ வாதமும் இப்பொழுது மீண்டும் தலை தூக்கியுள்ளது - இம்முறை அமெரிக்காவால் வழிநடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் ஹிட்லர் பதவிக்கு வந்த 70 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும். பலரும் இந்நிகழ்ச்சியை இப்பொழுதும் பெரும்பீதியுடன் நினைவு கூருகின்றனர். ஜேர்மன் நாட்டில்தான் கடூழியச்சிறைமுகாம்கள் (Concentration Camps) எனப்பட்ட கொடூரமான சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நாட்டில்தான் அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கத்தவர்கள் போரிலிருந்து மீளாமற்போன அவலமும் ஏற்பட்டது; இப்பொழுதும்கூட உறவினர் போரிலிருந்து திரும்பாத மற்ற உறவினரைப் பற்றிப் பேசுகிறார்கள். தற்போது இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட (பன்னாட்டுச் சட்டம், ராஜதந்திர நெறிகள், சட்ட நெறிகள் இவையனைத்தும்) நடவடிக்கைகளுக்கு பணிய மறுத்து அமெரிக்க அரசாங்கம் செயல்படுகிறது என்ற உண்மையை அனைத்து ஐரோப்பிய மக்களாலும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த அதிர்ச்சியும் அழிசெயலும் ஒவ்வொரு வார இறுதியிலும் பெரும் ஆர்ப்பாட்டக் கூட்டங்களாக இடம்பெறுகின்றன, இவை மாபெரும் பேரணிகளாகும். மிக வயோதிகமானவரும், மிகச்சிறிய வயதுடைய சிறாரும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வெளிவந்த வண்ணம் உள்ளனர். மார்ச் 20 காலையில், போர் தொடங்கியபோது, ஏறத்தாழ 80,000 பள்ளி மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் பரந்த பேரணிக் கூட்டத்தை நடத்தினர். அது தன்னெழுச்சியாக வெளிப்பட்ட எதிர்ப்பின் வெளிப்பாடாகும். ஜேர்மன், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை போரைப் பற்றிய மதிப்பீடும் நிலையும் என்ன? அமெரிக்காவின் போர்க் கொள்கையை பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் எதிர்த்ததை நீங்கள் அறிவீர்கள். ஆனால், நாம் விளக்கியபடி, அவற்றின் நிலையிலிருந்து ஈராக் ஒரு அமெரிக்க காப்பு ஆட்சி நாடாக மாறுவதை அவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில் மிக முக்கியமான எண்ணெய் வளத்தில் அமெரிக்கக் கட்டுப்பாடு, அமெரிக்கப் படைகளை ஈரானை அச்சுறுத்த கூடுதலான பலத்தில் வைக்க உதவும். ஜேர்மன், பிரெஞ்சுப் பொருளாதார நலன்களையும் அங்கு பாதிக்கும். காஸ்பியன் பகுதியின் எல்லைப்புறத்திலுள்ள ஈரானின் நிலையில் முழுமையான அமெரிக்கக் கட்டுப்பாடு ஏற்பட்டால் அமெரிக்கா உலக ஆற்றல் வளங்களின் அடிப்படைகளில் 80 சதவிகிதத்தைத் தன் வயப்படுத்திக்கொண்டுவிடும். ஜேர்மன், மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இதை ஏற்கத்தயாரில்லை. இதை அவர்கள் எதிர்த்தாகவேண்டும். தொடக்கத்தில் தூதரகச் செயல்பாடுகள் மூலமும் நாடுகள் தழுவிய உறவுமுறைகள் மூலமுமே புஷ் ஆட்சியைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவை பயனளிக்கவில்லை. தங்களால் போரை நிறுத்த முடியவில்லை, முடியாது என்று அவர்கள் உணர்ந்த அளவிலேயே தங்களின் சொந்த சுதந்திரமான இராணுவ அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டனர். அதையொட்டிய விவாதங்கள் தாம் இப்பொழுது ஜேர்மனியில் நடைபெற்று வருகின்றன. கூடுதலான இராணுவ வலிமையை ஐரோப்பா ஒருங்கிணைந்து மேற்கொண்டால்தான் இந்த அமெரிக்கக் கொள்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அறிக்கைகள் அரசியல் ஆலோசகர்களாலும் இராணுவ வல்லுநர்களாலும் வற்புறுத்தப்பட்டு வருவது செய்திகளில் இப்பொழுது வருகிறது. இது சமுக வளர்ச்சிப் பணிச் செலவினங்களைக் குறைத்தல் கொள்கையுடன் இணைந்திருக்கிறது. இராணுவத்தைக் கட்டி எழுப்புவதற்கான பெரும் பணம், தொழிலாள வர்க்கத்தின் பைகளில் இருந்து எடுக்கப்பட்டு வருகின்றது. புஷ் தொலைக்காட்சியில் தோன்றி இறுதிப் போர் எச்சரிக்கையை ஈராக்கிற்கு விடுப்பதற்கு 3 நாட்கள் முன்னர்தான் ஜேர்மன் ஜனாதிபதி நாட்டிற்கு ஆற்றிய உரையில், 1930 ஆண்டு பெருமந்த நிலைக்குப் பின்னர் கூறப்படாத அளவிற்கு சமூகச்செல்வினங்களில் வெட்டை அறிவித்தார். அதனால்தான் தனக்கெதிராக போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவில்லையென்றாலும் ஜேர்மானிய அரசாங்கம் நரம்புத்தளர்ச்சி கொண்டிருக்கிறது. இந்தப் போரில் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆதரவை நோக்கி தன்நிலையை மேலும் மேலும் நகர்த்திக் கொள்கிறது. போரின் தொடக்கத்தில் பசுமைக் கட்சியின் பாராளுமன்ற பிரிவு எந்நிலையிலும் - போர் சட்டத்திற்குட்பட்டிருந்தாலும் புறம்பாக இருந்தாலும் சரி, ஜேர்மானிய ஆகாயத் தடங்களும் மற்ற வசதிகளும் அமெரிக்காவிற்கு வேண்டுமளவிற்கு வழங்கப்படும் எனவும் ஜேர்மன் மண்ணில் உள்ள அதன் தளத்தில் அமெரிக்கப் படைகள் வரையற்ற வசதிகளைப்பெற வாய்ப்புக்களை வழங்கும் அதேபோல அமெரிக்கப் படைகளுக்கு தந்திரோபாய ஆதரவை நல்கும் என்ற நிலையை ஏற்றது. நாம் இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் தலையிடும்போது, போர் எதிர்ப்பு இயக்கத்தை ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் நலனுக்கு கீழ்ப்படுத்த முயலும் அனைத்துப் போக்குகளையும் எதிர்ப்போம். இந்தப் போக்கு மிகப் பலமானது. போர் தொடர்பான எமது நிலைப்பாடு மற்றைய போக்குகளிலிருந்து முற்றிலும் எதிரான ஒன்றாகும். எமது நிலைப்பாடு ஜேர்மனிய, பிரெஞ்சு அரசாங்கங்கட்கு எவ்வித ஆதரவும் -தந்திரோபாயமோ அல்லது வேறுவிதமாகவோ- கிடையாது. இன்னும் சொல்லப்போனால், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கான முக்கிய இணைப்பாக நாங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையை வளர்த்தெடுக்கின்றோம். போருக்கெதிரான போராட்டத்தை வேலையின்மை, சமூக செலவின வெட்டுக்களுக்கு மற்றும் ஜனநாய உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்த இந்த நோக்குநிலை விழைகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் இந்த முன்னோக்கு ஆழமான வரலாற்று முக்கியத்துவம் உடையது. அதனை அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏன் கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியப் புரட்சிகள் தோல்வியுற்றன என்ற வினாவை நீங்கள் எழுப்பினால், பல விடைகள் உள்ளன, சில ஆரம்ப அறிக்கையில் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவை 1914ல் சமூக ஜனநாயகத்தின் காட்டிக் கொடுப்பு மற்றும் 1920களின் பிற்பகுதியில் ஆரம்பித்த எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிசப் போக்குகளும் கொள்ளப்படலாம். ஆனால் மற்றொரு முக்கியமான காரணியோ மிகப்பலம் வாய்ந்த தொழிலாள வர்க்கத்தை அமெரிக்க முதலாளித்துவம் தன் அரசியல் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததுதான். ஐரோப்பிய தொழிலாளர் தம்முடைய அமெரிக்கச் சகோதரரிடமிருந்து தனித்துவிடப்பட்ட நிலையில், ஐரோப்பாவில் உள்ள பிற்போக்கு சக்திகள் புரட்சியை காட்டிக் கொடுக்கவும், நசுக்கவும் மற்றும் கழுத்தை நெரிக்கவும் முடிந்திருந்தது. எனவேதான் நமக்குமுன் உள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்காக என்ற தீர்மானத்தை ஆதரிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். சர்வதேசியம் என்பது வெறும் முழக்கமோ ஒரு பொது கோரிக்கையோ அல்ல. சர்வதேசியம் என்பது ஓர் அரசியல் முன்னோக்கும் வேலைத்திட்டமும் ஆகும். கலந்துரையாடல்களின்போது, ஒரு பேராளர் எழுப்பிய கேள்வி என்னை ஈர்த்தது -தொழிலாள வர்க்கம் புரட்சியை வழிநடத்திச்செல்ல இயலும் என்பதற்கு என்ன ஆதாரம் என்ற வினாவே அது. தொழிலாள வர்க்கம்தான் சமுதாயத்தின் அனைத்துச் செல்வங்களையும் உற்பத்தி செய்கிறது என்னும் விடை அக்கேள்விக்கு முழுமையான விடையாகாது. தொழிலாள வர்க்கத்தின் முழு வரலாற்றின் மையத்தில் நிற்கும் ஒரு அரசியல் முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் என்பது உய்த்து உணரப்படவேண்டும். வர்க்கப் போராட்டத்தின் நனவுபூர்வமான தொடக்கத்தில் மாக்சும், எங்கல்சும் முதலாளித்துவம் உலக சந்தையை சர்வதேச உழைப்புப் பிரிவினையை நிறுவியது எனக் கூறினார். மேலும் சர்வதேச மட்டத்தில் மட்டுமே சோசலிச சமுதாயத்தை நிறுவுவது சாத்தியமானதாய் ஆகி உள்ளது. இன்று உற்பத்தி பூகோளமயமாதலுடன், இது இன்னும் கூட தீர்மானகரமானது. ஆளும் வர்க்கமானது தேசிய அரசுடன் ஆயிரக்கணக்கான இழைகளால் பிணைக்கப்பட்டு உள்ளது. மக்களை நசுக்குவதற்கு அதற்கு தேசிய அரசு தேவைப்படுகிறது. உற்பத்தி சக்திகளை வளர்த்து எடுக்கக் கூடிய ஒரே ஒரு சமுக சக்தி, அவற்றை தேசிய அரசின் மட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கக் கூடிய, அதுவும் அரசுடன் பிணைக்கப்படாத ஒரு வர்க்கம், தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றைப் பார்த்தால், இடம்பெற்றிருக்கும் அனைத்து பிரதானமான சர்ச்சைகளின் மையத்திலும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசுக்கும் தேசியவாத அனுசரிப்புக்கும்- தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கும் இடையிலான மோதல் இருக்கின்றது. தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளே உள்ள அனைத்துப் பெரும் போராட்டங்களும் இந்தப் பிரச்சினையில்தான் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தன. போரின் தொடக்கத்தில் தேசிய நெருக்கடியின்போது நாம் எமது தந்தை நாட்டைக் காப்போம் எனக் கூறி 1914ல் ஜேர்மன் சமூக ஜனநாயகம் காட்டிக்கொடுத்த பொழுது, இந்த தேசிய முன்னோக்கிற்கு எதிராக லெனினும், ட்ரொட்ஸ்கியும் அக்காலத்திய ஏனைய மார்க்சிஸ்டுகளும் போராடினார்கள், மற்றும் அவர்கள் நடத்திய அரசியல் போராட்டத்தின் விளைவுதான் அக்டோபர் புரட்சி. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வளர்ச்சி தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற முழக்கத்தின் கீழ் தேசிய நோக்கிற்கு அனுசரிப்பதாக இருந்தது. ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பின் போராட்டம் தேசிய முன்னோக்கு மற்றும் தேசிய வாதக் கண்ணோட்டத்திற்கு எதிரானவையாம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ஸ்தாபித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (International Committee of the Fourth International) பப்லோவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் வெளிவந்தது. பப்லோவாதம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெவ்வேறு நாடுகளில் ஆங்ஙாங்கு இருந்த சிறப்புச் சூழ்நிலைக்கேற்ப தேசிய வாதத்திற்கு வளைந்து கொடுத்து ஏற்றுக்கொண்ட நிலையாக இருந்தது. அதன் பின்னர் நம்முடைய இயக்கத்தின் ஒட்டு மொத்த வரலாறும் எந்தவிதமான தேசியவாத அனுசரிப்பு மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தை மையப்படுத்தி இருந்தது. கடந்த காலத்தில் நாம் ஏன் பரந்த இயக்கமாக இருக்கவில்லை என்ற கேள்வியைச் சந்தித்தோம். முந்தைய தசாப்தங்களில், ஒவ்வொரு நாட்டிலும் தேசியவாத, சீர்திருத்தவாத அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தைக் கட்டுப்படுத்தி வைக்க முடிந்தது என்ற உண்மையுடன் கட்டுண்டிருந்தது. அடங்கிவைக்க முடிந்திருந்தது. அது மிகக்கடினமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. தேசியவாத அதிகாரத்துவங்களின் மேலாதிக்கம் முதலாளித்துவம் தாமே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேசிய அரசு அமைப்பு முறைக் கட்டமைப்பிற்குள் இன்னும் அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்தது என்னும் உண்மையுடன் கட்டுண்டிருந்தது. உற்பத்தி பூகோளமயமாக்கலுடன் சமுதாயத்தின் அபிவிருத்தியில் நாம் புதிய கட்டத்தை கொண்டிருக்கிறோம். அனைத்து நாடுகளிலும் நாம் காணும் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் மற்றும் இவ் ஆர்ப்பாட்டங்களின் சர்வதேசத் தன்மையும் இந்த புதிய பொருளாதார, சமுதாய அடித்தளத்தின் வெளிப்படுத்தல் ஆகும். நம்முடைய பணி இந்த புரிதலை, நனவுபூர்வமான அரசியல் முன்னோக்காக மக்கள் இயக்கத்துள் கொண்டு செல்வதேயாகும். தீர்மானத்தில் நாம் கூறுகிறோம்: "இம்மாநாடு ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான பரந்த சர்வதேச அணிதரளலால் முன்வைக்கப்படும் அரசியல் பொறுப்பினை உணருகிறது." இந்தப் பரந்த ஆர்ப்பாட்டங்களில் நம்முடைய பொறுப்பை எவ்வாறு உணர வேண்டும்? புரட்சிகர சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் உலகரீதியான ஐக்கியத்தின் இந்த முன்னோக்கை அவற்றுக்குள் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதனால்தான் அண்மைய வருடங்களில் உலக சோசலிச வலைத் தளத்தை அபிவிருத்தி செய்வதில் நாம் கவனம் செலுத்தி இருக்கிறோம். எமது சர்வதேச அரசியல் முன்னோக்கை விளக்கும் கருவியாக மட்டும் இது இருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான வடிவத்தையும் அபிவிருத்திகளையும் எடுக்கும் வழிமுறையாக உலக சோசலிச வலைத் தளம் இருக்கிறது. நாம் தொழிலாள வர்க்கத்துடன் சர்வதேச வர்க்கம் என்ற அளவில் பேசுகிறோம். நாம் தொழிலாள வர்க்கத்தின் கண்களை அதன் உடனடிப் பிரச்சினைகளிலிருந்தும் சூழலிலிருந்தும் எழுப்பி, உலக அரசியலில் மிக முக்கியமான மூலோபாய அனுபவங்கள் மற்றும் மிக முக்கியமான பிரச்சனைகள் புரிந்து கொள்ளக்கூடிய மட்டத்திற்கு உயர்த்த, சர்வதேச அபிவிருத்திகளின் அடிப்படையில் கல்வியறிவூட்ட வேண்டும். எப்படி உலக சோசலிச வலைதளம் அனைவரும் சங்கமிக்கும் இணையமாகிறது, ஏன் இந்த ஆர்வத்தை அது ஏற்படுத்துகிறது, ஏன் ஏராளமானோர் இத்தளத்தை நாடுகின்றனர் என்ற கேள்வியை எழுப்பினால், அது அவ்வாறு இருக்கிறது ஏனெனில், சமுதாயத்தின் பரந்த பகுதியினரில் நிலவும் நனவற்ற அபிவிருத்தியின் நனவுபூர்வமான வெளிப்பாடாக அது இருக்கிறது. எனவேதான் இம்மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 1915ல் முதலாம் உலகப்போரின் முதலாவது ஆண்டில், ட்ரொட்ஸ்கி எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பத்தியை மேற்கோள் கூறி என்னுடைய உரையை முடிக்க விரும்புகின்றேன். நூலின் பெயர் "போரும் அகிலமும்" (The War and the International). முதலாம் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் அகிலத்தின் நிலைமுறிவு பற்றிய ட்ரொட்ஸ்கியின் முழு ஆய்விலும் விரவி இருக்கும் புரட்சிகர நன்நம்பிக்கைவாதம் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தன்னுடைய பகுப்பாய்வை கீழ்க்கண்ட சொற்களோடு ட்ரொட்ஸ்கி முடிக்கிறார். "புரட்சிகர சோசலிஸ்டுகளான நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் அதைக்கண்டு அச்சப்படவில்லை. அகிலத்தை அது தகர்த்ததைப் பற்றி நாங்கள் மனமுடைந்து போகவில்லை. இதற்கும் முன்பே வரலாறு அகிலத்தை அப்புறப்படுத்திவிட்டது." "பாட்டாளி வர்க்க சோசலிசத்தின் வற்றாத அடித்தள அடிப்படைகளிலிருந்து புதிய அமைப்பு வடிவங்களை புரட்சி சகாப்தம் தோற்றுவிக்கும்; அவை புதிய பாரிய பணிகளுக்கு நிகராக இயங்கும். இந்த அரிய பணிக்கு உடனே நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்; பீரங்கிச் சண்டைகளின் பைத்தியக்காரத்தனமான ஓசைகட்கிடையே தேவாலயங்களின் சரிவிலும், முதலாளித்துவ ஓநாய்களின் நாட்டுப்பற்று என்ற ஊளையிடல்களுக்கு இடையேயும் நம் பணி தொடரும். நரக வேதனையிலான மரண ஓலத்தின் நடுவிலும் நம்முடைய எண்ணங்களைத் தெளிவாக்கிக்கொள்வதோடு நம்முடைய பார்வையின் கூர்மை குறையாமலும் காப்போம். எதிர்காலத்தின் ஒரே படைப்பு சக்தியாக எம்மை நாமே உணர்ந்து கொள்கிறோம். ஏற்கனவே நாம் எண்ணிக்கையிலும் பலத்திலும் பெருகியுள்ளோம்; நாளை இப்போதையும் விட நம்மவர் அதிகமிருப்பர். அதற்கடுத்த நாள் பல லட்சக்கணக்கானவர்கள் நம் பதாகையின் கீழ் எழுவர்; கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தோன்றி 67 ஆண்டுகட்குப் பின்னரும், இந்த லட்சக்கணக்கானோர் தங்களுடைய அடிமைத் தளைகளைத் தவிர வேறொன்றையும் இழப்பதற்கு இல்லாது உள்ளனர்." இன்று நம்முடைய திடநம்பிக்கை அச்சுறுத்தும் போர்ச் சூழலுக்கிடையிலும் ட்ரொட்ஸ்கி முதலாம் உலகப்போரின் முதலாண்டு கொண்டிருந்த அளவிலேயே உள்ளது. இந்நம்பிக்கை செயற்கையானதும் அல்ல, வெறுமையானதும் அல்ல. அது கடந்த நூற்றாண்டு வரலாற்றின் அரசியல் பாடங்களையும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தையும் பற்றிய தெளிவான புரிதலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. |