: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraqi resistance shatters US propaganda of
"liberation" war
''விடுதலை'' செய்யும் போர் என்ற அமெரிக்க பிரச்சாரத்தை சுக்குநூறாக்கிய ஈராக்கின்
எதிர்ப்பு
By Patrick Martin
25 March 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஞாயிறு மற்றும் திங்களன்று (23-24) ஈராக்கின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில்
வெடித்துக் சிதறிய போரானது, ஈராக் அரசாங்கம் மிக விரைவாக வீழ்ச்சியடையும் என்ற புஷ் நிர்வாகத்தின் கூற்றை
தகர்த்தெறிந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஈராக்கை விடுவிக்க வந்ததாக வரவேற்கப்படுவார்கள்
என்று கூறியதற்கு மாறாக மிகக் கடுமையான எதிர்ப்பை உம் கஸார், நசீரியா மற்றும் கர்பாலா நகர்களில்
அவர்கள் சந்தித்து கொண்டிருக்கின்றனர்.
ஈராக்கின் மிகச் சிறப்பான பயிற்சி மற்றும் சிறந்த ஆயுதங்களைக் கொண்ட இராணுவப்
பிரிவுகள் குடியரசுப் படைகள் (Republican Guard)
என்று அழைக்கப்படுகின்றன. இந்த படைப்பிரிவுகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்குமிடையே திங்களன்று காலை ஈராக்கின்
மத்தியில், பாக்தாத்திற்கு தெற்கே 60 மைல்களுக்கு அப்பால் உள்ள கர்பாலா நகரில் கடுமையான மோதல் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் பதினோராவது ஹெலிகாப்டர் தாக்குதல் பிரிவைச் 32 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், இராணுவத்தின் வி
படைப்பிரிவுகள் (V Corps) மற்றும்
90 டாங்கிகள் அடங்கிய படைப்பிரிவுகளுடன் ஈராக்கின் குடியரசுப் படைகள் கடுமையாகப் போரிட்டன.
CNN நிருபர் கார்ல் பென்ஹால்
கொடுத்துள்ள தகவலின் படி, அமெரிக்க போர் ஹெலிகாப்டர்கள் தரையிலிருந்த ஈராக் படைகளின் பலத்த விமான
எதிர்ப்பு பீரங்கித் தாக்குதல்களை சமாளிக்க வேண்டியிருந்ததாக தெரிவித்தார். இச்சண்டையில் இரண்டு ஹெலிகாப்டர்கள்
சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் மற்ற ஹெலிகாப்டர்கள் அவ்விடத்தைவிட்டு விலகிச் சென்றுவிட்டன. ஈராக் தரப்பிலிருந்து இவ்வளவு
எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்காததால் அவர்கள் ''நிலை குலைந்து'' போய்விட்டனர் என்றும், இதனால் அமெரிக்க
விமானிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதாகவும் பென்ஹால் விவரிக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதல்
வலயம் ''குளவிக்கூட்டைப்'' போல் இருந்ததாகவும், ஈராக் படைகளின் தாக்குதல்கள் ''எல்லாப் பக்கத்திலிருந்து''
வந்ததாகவும் அமெரிக்க போர் விமானி ஒருவர் இந்த நிருபரிடம் தெரிவித்தார்.
இத் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கப் படைகள் தமது தாக்குதலை கைவிட வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது. ஹெலிகாப்டர்கள் ஏதாவது ஒரு வகையில் சேதம் அடைந்திருப்பதுடன் ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும்
15 அல்லது 20 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த வடுக்கள் காணப்படுகின்றன. தரையிலிருந்த ஒரு ஹெலிகாப்டரை சுற்றி
நின்றுகொண்டு ஈராக்கிய படைகள் மகிழ்ச்சியில் நடனமாடும் காட்சியானது ஈராக் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த ஐந்துநாள் போரில் மிகவும் கொடூரமான இரத்தம் சிந்தும் போர் ஞாயிறன்று
நடைபெற்றிருக்கிறது. நாசீரியா நகரம் பாக்தாத்திற்கு தென்கிழக்கே 230 மைல்களுக்கு அப்பால், ஈராக் - குவைத்
எல்லையிலிருந்து 100 மைல் தூரத்தில் உள்ளது. இங்கு தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படையினருக்கும் ஈராக்கின்
துருப்புகளுக்கும் இடையே மிகக் கடுமையான போர் வெடித்தது. இச் சண்டையில் 24 பேருக்கு மேற்பட்ட அமெரிக்க
சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன் 50 மேற்பட்டோர் காயமடைந்தனர். வியட்நாம் போருக்குப்பின்னர் ஒரு நாள்
போரில் இவ்வளவு அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் பலியானது இச்சண்டையிலாகும். சில பொதுமக்கள் ஆயுதம்
தாங்கி ஈராக் துருப்புகளுடன் சேர்ந்து சண்டையில் ஈடுபட்டதாகவும், அவர்களை தாம் தாக்கி வருவதாகவும் அமெரிக்க
படையினர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
உம் கஸார் நகரத்தில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஈராக் படைகளின் எதிர்த்
தாக்குதல்களை சமாளிக்கவேண்டிய அவசியத்தில் உள்ளனர். இந்த நகரம் ஈராக்கின் தெற்குப் பகுதி எல்லையில்
இருப்பதுடன், பாரசீக வளைகுடாவிலுள்ள அதன் ஒரேயொரு துறைமுகத்தையும் கொண்டிருக்கின்றது. இந்தத் துறைமுகத்தை
இரண்டு நாள் போருக்குப்பின் அமெரிக்கப் படையினர் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆனால் ஈராக் படைகள் நகரத்தில்
மறைந்திருந்து ஞாயிறன்று மீண்டும் திடீரென்று எதிர்த்தாக்குதலை மேற்கொண்டார்கள். அதிக ஆயுத வலிமையோடு
இருந்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் எந்தவித தடங்கலுமின்றி போர் விமானங்களை கொண்டுவரவும் பீரங்கி
மற்றும் தாங்கிகளை எடுத்துவரவும் கடற்படை கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தவும் வழிவகைகளுடன் இருந்தன. ஆனால்
சாதாரண துப்பாக்கிகளோடும், RPG
(rocket-propelled grenades)
ராக்கெட்டுகளோடும், மோட்டர்
(mortars)
குண்டுகளோடும் போரிட்ட ஈராக்கினுடைய படைகளை அவர்களால் முறியடிக்க முடியவில்லை.
இந்தப் போரின் தொடக்க நாட்களில் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள்,
குண்டுகள் என்பன இலக்கு மீறி செயல்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறியிருக்கின்றன. இவர்கள் வீசிய குண்டுகள் குறிதவறி
ஈரான் மற்றும் துருக்கிக்குள் விழுந்திருப்பதுடன் குறைந்தபட்சம் ஒரு பிரிட்டனின் போர் விமானம் அழிந்துபோயுள்ளது.
ஒரு குண்டு பாரசீக வளைகுடாவிலுள்ள அமெரிக்காவின் கடற்படை கப்பலுக்கருகிலேயே நெருங்கிவந்து விழுந்தது. அமெரிக்க
இராணுவத்திடம் மிகப்பெரும் தொழில்நுட்ப அனுகூலம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அமெரிக்க
பாதுகாப்பு அமைச்சர் டோனால்டு ரம்ஸ்பெல்ட் கூறுவதைப்போல் அமெரிக்க குண்டுகளும், ராக்கெட்டுகளும் முன்னெப்போதும்
இல்லாதவகையில் துல்லியமான தாக்குதலில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.
வெள்ளிக்கிழமை இரவு ஈராக் நகரின் மீது தொடங்கிய விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள்
இன்னும் தொய்வின்றி தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. ஈராக் அதிகாரிகள் சில விவரங்களைக்
கொடுத்து இறப்பு வீதங்களை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்து அறிக்கை தருகின்றனர். ஏனென்றால் மக்கள் பீதி
அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறைத்து மதிப்பீடு செய்துள்ளனர். அமெரிக்காவினால் இதுவரை வீசப்பட்ட
குண்டுகளின் எடையை கணக்கிட்டால் அது அதிர்ச்சியூட்டும் அளவிற்கு இருக்கின்றது. முதல் நான்கு நாட்களில் ஹீரோஷிமாவில்
வீசப்பட்ட அணுகுண்டுக்கு இணையான வலிமையோடு குண்டுவீச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன.
இப்படி முதலாவது அலைத் தாக்குதல்களின் மூலம் ஈராக்கை அடிப்பணியச் செய்வதில் புஷ்
நிர்வாகம் தோற்றுவிட்டது. எனவே தற்போது பல்வேறு பகுதிகளை அடியோடு நாசம் செய்திடும் வகையில் குண்டுகளை
வீசுவதற்கான திட்டத்தில் புஷ் நிர்வாகம் இறங்கியிருக்கிறது. இந்த ஆபத்தினால் ஈராக் நகரங்கள் அடியோடு அழிந்துவிடும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்படுவார்கள். பிரிட்டனிலுள்ள விமானப்படை தளங்களிலிருந்து புறப்படும்
பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் இந்தக் குண்டுகளை வீசி வருகின்றன. - இவை வியட்நாம் போரில் அதிக அளவில்
உயிர்சேதம் ஏற்படுத்திய குண்டுகளை வீசிய விமானங்களாகும் - எனவே இதைவிட மிகக் கொடூரமான தாக்குதலை ஈராக்கில்
நடத்துவதற்கு அமெரிக்கா தற்போது திட்டமிட்டு வருகிறது.
இந்தப் போரின் முதல்வார நிகழ்ச்சிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது புஷ்
நிர்வாகமும், அமெரிக்க ஊடகங்களின் ஆதரவாளர்களும் தெரிவித்த பல மெத்தனமான அனுமானச் செய்திகள் பொய்யாகி
இருக்கின்றன. ஈராக் ஆட்சி சிதைந்துவிடவில்லை. ஈராக் துருப்புக்கள் பெருமளவில் சரணடைந்துவிடவில்லை. குடியரசு
இராணுவத்திலும் பார்க்க சாதாரணமான ஈராக் இராணுவத்திலுள்ளவர்கள் எளிதிலும், பாரியளவிலும் சரணடைந்துவிடுவார்கள்
என்று கருதப்பட்டபோதும் அது நடைபெறவில்லை. இதுவரை வந்துள்ள செய்திகளின்படி சதாம் ஹூசேனின் ஆட்சிக்கு
எதிராக அமெரிக்க, பிரிட்டன் இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொண்டு மக்கள் ஆனந்தக் கூத்தாடும் நிகழ்ச்சி எதுவும்
இடம்பெறவில்லை. இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் எதுவும் இந்தப்போரில் பயன்படுத்தப்படவில்லை. அல்லது
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் இந்த ஆயதங்களைக் கண்டுபிடிக்கவும் இல்லை. இஸ்ரேல் மீதோ அல்லது ஆக்கிரமித்துவரும்
படைகள் மீதோ ஸ்குட்-ரக ஏவுகணைகள்
வீசப்படவில்லை. எண்ணெய் வயல்களை திட்டமிட்டு அழிப்பதற்கோ நாசப்படுத்துவதற்கோ
தெற்கு அல்லது வடக்கு ஈராக்கில் எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆயுத வலிமையில் ஈராக் படைகள் குறைந்திருந்தாலும் அவர்களது வீரமும் உறுதிப்பாடும்
அமெரிக்க இராணுவத் தலைமைக்கு மட்டுமல்ல சதாம் ஹூசேன் ஆட்சிக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் இராணுவத்
தலைமையானது நாட்டின் தென்பாதியை ஆரம்ப போர்க்கால நாட்களிலேயே கைகழுவிவிட்டதுடன் தமது படைகளை
பாக்தாத் நகரைப் பாதுகாப்பதற்காக அழைத்துக் கொண்டது. அப்படி இருந்தும் தென்பகுதி நகரங்களின் மக்களிடையே
அமெரிக்க-பிரிட்டன் ஆக்கிரமிப்புக்கு எதிராக, தன்னிச்சையான எதிர்ப்புணர்வுகள் தோன்றி தற்போது அவர்களுக்கு
எதிராக நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.
எதிர்பாராத வகையில் ஈராக் தரப்பிலிருந்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகளுக்கு
எதிர்ப்பு வலுத்துக் கொண்டுவருவதால் புஷ் நிர்வாகத்தின் இராணுவ உத்திகள் குறித்து மறுபரிசீலனை நடைபெற்றுவருவதாக
அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் தனது முதல்பக்க
ஆய்வுக் கட்டுரையை திங்களன்று வெளியிட்டிருக்கிறது. ''பென்டகன் அதிகாரிகள் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் எங்கு
சென்றாலும் அவர்களுக்கு வரவேற்பிருக்கும் என்றும், தங்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவர்கள் என்றும் மக்கள்
பாராட்டுவார்கள் என எதிர்பார்த்தார்கள். குறைந்த பட்சம் சியாக்கள்
(Shiite) அதிகம்
வாழ்கின்ற தென்பகுதியில் இப்படி வரவேற்பிருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அத்தோடு சதாம் ஹூசேனுடைய அரசாங்கத்தின்
கதை முடிந்துவிட்டது என்ற பிரச்சாரத்தின் மூலம் ஏற்றுக்கொள்ள வைத்து ஈராக் மக்களையும், அதன் இராணுவத்தையும்
வென்றுவிடலாம் என்ற கணக்கில் உத்திகளை வகுத்து செயல்பட்டார்கள்'' என்று இப்பத்திரிகை எழுதியுள்ளது.
இந்த நோக்கத்தை கருத்தில் கொண்டுதான் பாக்தாத் நோக்கி அமெரிக்கப் படைகள்
மிகவேகமாக முன்னேறின. இதர முக்கிய நகரங்களையும் அவற்றின் படைப்பிரிவுகளையும் தவிர்த்துவிட்டு அமெரிக்க
மற்றும் பிரிட்டன் துருப்புகள் பாக்தாத்தை நோக்கி முன்னேறின. ஆனால் ''அமெரிக்க தளபதிகளுக்கு தாங்கள் மேற்கொள்ளும்
நடவடிக்கையில் பெருமளவு ஆபத்து உள்ளது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். தற்போது அமெரிக்கப் படைகள்
ஈராக்கிற்குள் நீண்ட தூரம் சென்றுவிட்டன. ஆனால் அந்த இடைவெளியில் அவர்களுக்கு வேண்டிய பொருட்கள் வருவது
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளது'' என வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது. நசீரியா நகரத்தின் நிகழ்ச்சிகள்
எடுத்துக்காட்டுவது என்ன? அது, இந்தப்போர் மிக விரைவாக முடியவில்லையென்றால் ஈராக் நகரத்தை
நெருங்கிக்கொண்டுள்ள அமெரிக்கப்படைகள் எதிர்த் தாக்குதலை சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதுடன், மேலும் தங்களுக்கு
வேண்டிய சாதனங்கள் மற்றும் அவசியப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்
என்பதாகும்.
இந்தப் போர் நீண்டு போய்விடுமோ என புஷ் நிர்வாகத்திற்கு கவலையை
உருவாக்கியுள்ளது. ஏனென்றால் அமெரிக்க தரப்பில் சாவு எண்ணிக்கை கணிசமாக உயரும்போது, அது அமெரிக்க இராணுவத்தின்
உறுதிப்பாட்டை குலைப்பதுடன் மேலும் உள்நாட்டில் பொதுமக்களது ஆதரவையும் மேலும் குறைந்து போகச் செய்யும்.
பென்டகனைப் பொறுத்தவரை ஒரு கவலை தரும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. வியட்நாம்
பாணியில் நடைபெற்ற ''எறிகுண்டுத் தாக்குதலினால்'' அமெரிக்காவின் 101 வது விமானப்படை பிரிவைச் சேர்ந்த
ஒரு அதிகாரி கொல்லப்பட்டதுடன், அதில் குறைந்தபட்சம் 12 பேர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல்
போருக்கான அரசியல் எதிர்ப்பாக இருக்கலாம் என்று பத்திரிகைகள் கோடிட்டு காட்டியுள்ளன. ஏனென்றால் ஒரு அமெரிக்கப்
படையாளே தமது இராணுவ முகாமிற்குள் வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார். இச்சம்பவத்தின் பின் ஒரு இஸ்லாமியரான
அமெரிக்க சார்ஜென்ட் அஸன் அக்பர் கைது செய்யப்பட்டு இழுத்து வரப்படும்போது பின்வரும் முழக்கத்தை எழுப்பி இந்தப்
போரைக் கண்டித்தார். ''நீங்கள் எங்கள் நாடுகளுக்குள் வந்து எங்களது பெண்களை மானபங்கம் செய்யப்போகிறீர்கள்.
நீங்கள் எங்களது குழந்தைகளை கொல்லப் போகிறீர்கள்'' என்று கூச்சலிட்டார்.
ஞாயிறன்று நாசீரியா நகருக்கு அருகில் முதலாவது அமெரிக்க போர்க் கைதிகள்
பிடிப்பட்டதைக் குறித்து பாதுகாப்பு அமைச்சர் டோனால்டு ரம்ஸ்பீல்ட் தெரிவித்துள்ள கருத்து மிகவும் குறிப்பிடத்தக்க
அம்சமாகும். பிடிபட்ட ஐந்து கைதிகளையும் விசாரணை செய்வதை ஈராக் தொலைக்காட்சி ஒளிபரப்பியதை ரம்ஸ்பீல்ட்
கண்டித்தார். அது ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணானது என்று குறிப்பிட்டார்.
இப்படி ரம்ஸ்பீல்ட் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பது சில குறிப்பிட்ட
சம்பவங்களைப் பற்றித்தான் ஆகும். ஆப்கானிஸ்தான் போர் முனைகளில் தாலிபான் துருப்புக்கள் கைது செய்யப்பட்டபோது
பென்டகன் ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி செயல்பட்டது. நூற்றுக்கணக்கான தாலிபான் போர்க் கைதிகள் அமெரிக்க
ஆதரவு வடக்கு கூட்டணிப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ
உளவாளிகளும் அதனது சிறப்புப் படைப்பிரிவு ஆலோசகர்களும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கான
இதர போர்க் கைதிகள் ஜெனீவா ஒப்பந்தப்படி அவர்களுக்குரிய அந்தஸ்து கொடுக்கப்படாமல் குவான்டனாமோ சிறை
முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இப்படி போர்க் கைதிகள் பிடிபட்ட நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கொண்டு
செல்லப்படுவது ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணானது ஆகும்.
மேலும் அமெரிக்க செய்தி ஊடகங்கள் மார்ச் 21 அன்று போர் தொடங்கியது முதல்
ஈராக் போர்க் கைதிகளை சுதந்திரமாக படம்பிடித்து வெளியிட்டனர். சில நாட்களில் ஈராக் போர் முடிந்துவிடும்
என்றும், அமெரிக்க மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்து அவர்களது கருத்தை தமக்கு ஆதரவாக திருப்புவதற்காகவும்
இவ்வாறு சுகந்திரமாக வர்ணப் புகைப்படங்களை வெளியிட்டனர். ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட் தனது
முதல் பக்கத்தில் ஈராக் போர்க் கைதி ஒருவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை
வெளியிட்டிருந்தது. இதே நாளில்தான் ரம்ஸ் பீல்ட் இந்தப் புகாரையும் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் இந்த ஆக்கிரமிப்பு போருக்கு மக்களது ஆதரவு மிகக்குறைவானதாக
இருப்பதால், இந்தப் போரில் நடைபெறும் இரத்தகளறி பற்றிய செய்திகள் மற்றும் உண்மை நிலவரங்கள் அமெரிக்க
மக்களுக்கு சென்று சேர்ந்துவிடும்போது, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளைப்பற்றி ரம்ஸ்பீல்ட் கவலைப்பட்டுதான் ஈராக்
தொலைக்காட்சி மீது தனது ஆத்திரத்தை வெளியிட்டிருக்கிறார். புஷ் நிர்வாகமும் செய்தி ஊடகங்களும் திட்டமிட்டு ஈராக்
நிலவரம் தொடர்பாக கூறிவந்திருக்கிற கட்டுக்கதைகள் அம்பலத்திற்கு வந்துவிடுமானால் பொதுமக்களது எதிர்ப்பு
மற்றும் அவர்களின் கோபம் மேலும் இரட்டிப்பாகும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
See Also :
அமெரிக்க
வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான நாள்
அமெரிக்க குண்டு மழை பாக்தாத் நகரை பயங்கரக் காட்சிக்களமாக மாற்றுகின்றது
Top of page
|