World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The speech that could not be delivered: What WSWS spokesman planned to tell Berlin rally

வழங்க முடியாது போன உரை - உலக சோசலிச வலைதள பேச்சாளர் பேர்லின் பேரணியில் கூற திட்டமிட்டிருந்தது என்ன?

By the Editorial Board
25 March 2003

Back to screen version

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான உலி ரிப்பேர்ட், மார்ச் 23-தேதியன்று ஈராக்கிற்கு எதிரான போரை கண்டிக்கும் பேர்லின் பேரணியில் உரையாற்ற இருந்தார். ப்ரன்டன் பேர்க் வாயில் பகுதியில் இந்த பேரணி நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்த Axis for Freedom அமைப்பு உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதியாக ரிப்பேர்ட் ஐ அந்தப்பேரணியில் உரையாற்ற சம்மதம் தெரிவித்திருந்தது. அட்டாக் (Attac) இயக்கத்தின் ஒத்துழைப்போடு சனிக்கிழமையன்று பேரணிக்கு Axis for Freedom அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

பேரணி தொடங்குவதற்கு சற்றுமுன்னர் அட்டாக் அமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர் ரிப்பேர்ட் அங்கு உரையாற்றும் உரிமையை மறுத்தார். வெளிப்படையான அரசியலால் அவர் அவ்வாறு மறுப்பு தெரிவித்தார். wsws- ஆதரவாளர்கள் விநியோகித்த (ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை கட்டி எழுப்பு) அறிக்கையை மேற்கோள் காட்டி ரிப்பேர்ட் உரையாற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் கண்டுள்ள வாசகங்கள் அட்டாக்கின் அரசியல் கருத்துகளுக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்திருப்பதை 1939-ம் ஆண்டு நாஜி படைகள் நடாத்திய கொடூரமான தாக்குதலோடு (blitzkrieg) ஒப்பிடுவது "பொறுப்பற்ற செயல்" என்று அட்டாக் பிரதிநிதி குறிப்பிட்டார். இந்த மேடையிலிருந்து அந்த உரையை அனுமதித்தால் அது அட்டாக் அமைப்பை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துவிடும். அது மட்டுமல்ல "அமெரிக்காவிற்கு அத்தகைய உரை முற்றிலும் தவறான சமிக்ஞையை காட்டிவிடும்" என்று அட்டாக் பிரதிநிதி கருத்துதெரிவித்தார்.

ரிப்பேர்ட் தயாரித்திருந்த கீழ் கண்ட உரையை பிரசுரிக்கின்றோம்: அரசியல் ரீதியில் அட்டாக் அமைப்பு முன் தணிக்கை செய்துவிட்டதால் 40,000-பேர் அடங்கிய பேர்லின் பேரணியில் ஆற்றியிருக்கவேண்டிய உரை இது. நாளை நாம் அட்டாக் அமைப்பிற்கு உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவிலிருந்து பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்புவோம்.

அன்பான நண்பர்களே,

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் நேசம் நிறைந்த வாழ்த்துக்களை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். உலக சோசலிச வலைத் தளம் என்பது தினசரி ஒன்பது மொழிகளில் பிரசுரிக்கப்படும் ஒரு இணைய செய்தி பத்திரிக்கையாகும். அதன் பிரதான ஆசிரியர் குழு அலுவலகங்கள் அமெரிக்காவில் உள்ளன. இன்றைய தினம் நாங்கள் பல நாடுகளில் இவற்றை விநியோகிக்கின்றோம். போருக்கு எதிரான பரந்த சர்வதேச இயக்கத்தை வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகளை சிதைப்பதற்கு எதிராகவும் நடைபெறும் போராட்டத்துடன் ஒன்றாய் இணைப்பதற்கு இத்தகைய கூட்டு அழைப்பு அறிக்கைகளை விநியோகித்துக்கொண்டிருக்கிறோம்.

பாக்தாத் நகரில் மிகக்கொடூரமான குண்டுவீச்சு தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இவற்றால் மக்களிடையே வெறுப்பும், ஆத்திரமும், ஆவேசமும் எழுந்துள்ளது. அப்படியிருந்தாலும் நாம் தெளிவாக சிந்தித்து பல்வேறு பிரச்சனைகளை மிகக் கடுமையாக ஆராய்ந்தாக வேண்டும்.

முதலாவது: இந்தப்போர் தனியே ஈராக் மக்களுக்கு எதிராக மட்டும் நடத்தப்படும் போரல்ல. உலகில் மிகப்பெரும்பாலான மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்றது. போருக்கு அவர்களின் எதிர்ப்பானது பூகோளம் முழுவதிலும் நடைபெறும் பேரணிகளிலும் கண்டன ஆர்பாட்டங்களிலும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாவது: சர்வதேச சட்டங்கள் அவற்றின் விதிமுறைகள் அனைத்திற்கும் விரோதமாக இந்தப் போர் நடத்தப்படுவதால் இது சட்டவிரோதமான போர். இது ஐ.நா-வின் பெரும்பாலான நாடுகளின் பெரும்பான்மை முடிவிற்கு விரோதமாக நடத்தப்படுகின்ற ஆக்கிரமிப்பு போர் ஆகும். ஒரு சிறிய நாடு --இராணுவ வலிமையில் மிகக்குறைந்த நாடு-- ஐ.நா- தீர்மானங்களை மீறி நடந்தது என்ற அடித்தளத்தில் அதை அழித்துவிடப் பார்க்கிறார்கள். உண்மையில், இந்தப் போரின் ஆக்கிரமிப்பாளர், ஐ.நா-வின் தொடர்புடைய தீர்மானங்களை புறக்கணித்திருப்பது மட்டுமல்லாமல் ஐ.நா-வை மீறி இருக்கிறார் மற்றும் பகிரங்கமாகவே சர்வதேச சட்டத்தை புறக்கணித்து இருக்கிறார்.

ஒருவர் பாக்தாத் நகரம் பற்றி எரிவதை படத்தில் காண்கின்ற பொழுது மற்றும் அமெரிக்க இராணுவம் "அதிர்ச்சியூட்டி எதிரிகளை நிலைகுலையச் செய்யும்" போர் மூலோபாயத்தை எவ்வாறு நியாயப்படுத்துகிறது என கேட்கும் பொழுது, 1939-ம் ஆண்டு நாஜி இராணுவத்தினர் போலந்து நாட்டில் நடத்திய கொடூர தாக்குதல்களை நம்முடைய மனக்கண்முன் கொண்டுவருகிறது.

70-ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் நாஜிக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எந்தக் கட்டத்திலும் எந்த நாடும் சர்வதேச சட்டத்தைக் காலின் கீழே போட்டு மிதித்துத் தள்ளிக்கொண்டு அவ்வளவு கொடூரமான அகந்தை நிறைந்த தாக்குதலை செய்ததில்லை.

கடந்த வாரங்களில் மக்களை கொன்று குவிக்கும் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டது. ஆனால் இப்போது யாரிடத்தில் இத்தகைய ஆயுதங்கள் இருக்கின்றன யார் அவற்றை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.

இந்தப்போர் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்ற உணர்வு ஜேர்மன் அரசாங்கத்திற்கு மிகத் தொலைநோக்கு விளைவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டது. நடப்பு ஜேர்மன் சட்டப்படி இந்தப்போர் ஐ.நா-வின் அங்கீகாரத்தைப்பெற்ற சட்டபூர்வமான போர் அல்ல எனவே ஜேர்மன் அரசாங்கம் ஜேர்மன் விண்வெளியையோ, அல்லது ஜேர்மனியிலுள்ள அமெரிக்க தளங்களையோ ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கான ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காக அனுமதிப்பதற்கு எந்தவிதமான சட்ட அடிப்படையும் இல்லை.

இப்படி சட்டவிரோதமான காரியத்தைத்தான் ஜேர்மன் அரசாங்கம் தற்போது செய்துகொண்டிருக்கிறது. மேலும் தனது ஃபொக்ஸ் ரக (Fuchs-type) பீரங்கிகளை குவைத்திலிருந்து விலக்கிக்கொள்வதற்கு பதிலாக ஜேர்மன் அரசு அந்த ரக பீரங்கிகளை எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

வியாழக்கிழமையன்று அந்தப்போர் தொடங்கிய பொழுது ஜேர்மன் பசுமைக் கட்சியின் பாராளுமன்ற பகுதி, ஜேர்மனியின் இராணுவத் தளங்களை விண்வெளியில் அமெரிக்கா பயன்படுத்திக்கொள்வதற்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தி தெரிவித்திருக்கிறது. அப்படி செய்ததில் இந்தக் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு அமெரிக்கா தலைமையில் நடைபெறும் போருக்கு உடந்தையாக இருந்து வருகின்றன.

உடனடியாக ஜேர்மனியிலுள்ள அமெரிக்க தளங்களை மூடிவிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் மேலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் விமானப்படை விமானங்ளுக்கு வான்வெளியில் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தப் போருக்கான காரணங்கள் குறித்து ஏற்கனவே அதிக அளவில் கூறப்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கில் மிக முக்கியமான எண்ணெய் எரிபொருள் வளங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளோடு இந்தப்போர் சம்மந்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் உலகம் முழுவதிலும் தனது மேலாதிக்க நிலையை உருவாக்குவதில் உறுதிகொண்டிருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து செல்வதற்கு தயாராக இல்லை ஏனெனில் இந்த நாடுகளுக்கு மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் தங்களது சொந்த பெரிய வல்லரசு நலன்கள் உள்ளன.

இந்தப் போருக்கான இன்னொரு காரணத்தையும் கூற விரும்புகிறேன். அந்தக் காரணம் வெளிப்படையாக தெரியாத ஒன்றாக இருக்கலாம். இந்த நேரத்தில் போர் தொடங்குகின்ற சூழ்நிலையில் அமெரிக்க அரசாங்கம் மிக அசாதாரணமான வளம் பெற்றிருப்பதாக தோன்றுகிறது. உண்மையில், அமெரிக்கா ஆழமான பொருளாதார மற்றும் சமுதாய நெருக்கடியில் சிக்குண்டு கிடக்கிறது. இந்த நெருக்கடிக்கு எந்தவிதமான தீர்வும் இல்லை. பயங்கர நடவடிக்கைகளும் போரும்தான் அந்த அரசாங்கத்துக்கு தெரிந்த தீர்வுகள்.

நேற்றைய தினம் அமெரிக்காவின் பல நகரங்களில் போர் எதிர்ப்பாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இப்போது இருக்கின்ற ஜனாதிபதி வாக்குபதிவில் பொதுமக்களது பெரும்பான்மை வாக்குகளை பெறத் தவறிவிட்டவர் தனது சொந்த மக்களுக்கு எதிராக மிக அதிக அளவில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.

மிகப் பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஏழ்மைநிலைக்கு தாழ்ந்துகொண்டே வருகிறவேளையில், சொகுசு வாழ்க்கை வாழும் மிகச்சிறிய மேல் தட்டினரின் நலனை பிரதிபலிப்பவராக அவர் உள்ளார். இந்தப் போரானது, அதன் சொந்த மக்களிடம் வளர்ந்து வருகின்ற எதிர்ப்பை தடுத்து நிறுத்தவும், உள்நாட்டில் தோன்றியுள்ள நெருக்கடிகளிலிருந்து மக்களது கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் மற்றும் சமூக வெடிப்பைத் தவிர்ப்பதற்காகவும் அமெரிக்க ஆளும் மேல்தட்டினரால் எடுக்கப்படும் ஆற்றொணா முயற்சி ஆகும்.

பாக்தாத் நகரின் மீது பயங்கரமான குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியிருப்பது அதிர்ச்சி உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது, அதில் முக்கியமான அரசியல் படிப்பினைகளும் அடங்கியிருக்கின்றன. எரிந்துகொண்டிருக்கும் பாக்தாத் நகரம் எல்லா காலத்திற்கும் ஒன்றை தெளிவாக்குகிறது. கண்டனப் பேரணிகளால் மட்டும் போரை தடுத்து நிறுத்திவிட முடியாது - உலக அளவில் ஒழுங்கு செய்யப்பட்டு பலகோடி மக்கள் கலந்து கொள்கின்ற பலமான பேரணியாக இருந்தாலும் போரை அது தடுத்துவிடாது.

புதிய அரசியல் மூலோபாயத்தை வகுக்கவேண்டியது அவசியமாகும். அப்படி செய்யும்போது இரண்டு வகையான சாத்தியக்கூறுகள்தான் உண்டு.

ஒன்று ஜேர்மன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டை ஒருவர் ஆதரிக்க முடியும். ஆனால் இப்படி செய்வதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது. முதலாவதாக இந்த அரசாங்கங்கள் தங்களது சொந்த மறு ஆயுதமயப்படுத்தல் திட்டத்தை தீவிரமாக்க முயன்று வருகின்றன. புதிய உலக ஒழுங்கு தொடர்பாக மேலும் மிகப்பெரிய அளவில் அமெரிக்காவுடன் அடுத்த மோதலுக்கு தயாராகி வருகின்றன. இரண்டாவதாக ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களே தங்களது சொந்த தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் கடந்த கால வெற்றிகள் மீது அவற்றின் சொந்த தாக்குதலை நடத்தி வருகின்றன.

போருக்கு எதிரான ஒரே யதார்த்தமான மூலோபாயம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இரு புறமும் வாழ்கின்ற உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரை அரசியல் அணிதிரட்டலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆயினும், இது போர் பற்றிய பிரச்சினையை வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான மற்றும் நலன்புரி அரசினை அழிப்பதற்கு எதிரான போராட்டத்துடன் --அதன் அர்த்தம் இந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றாய் இணைப்பதை தேவையாகக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக ஜேர்மன் அரசாங்கம் அல்லது இதர ஐரோப்பிய அரசாங்கங்களோடு சேர்வதற்கு பதிலாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களின் பரந்த மக்களை ஒன்று திரட்டுவதற்கே நாங்கள் முயன்றுவருகிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை: ஆம். இந்தக் கொடூரமான, நியாயமற்ற மற்றும் கோழைத்தனமான போரைக்குறித்து மிகுந்த கோபமும் வெறுப்பும் அடைந்திருக்கிறோம். ஆனால் மற்றவர்களது அரசியல் தார்மீகப் பொறுப்பை --இந்த விஷயத்தில் அமெரிக்க அரசாங்கத்தை கண்டிப்பது மற்றும் அதன்மேல் சீறி எழுவது மட்டும் போதாது. இதில் ஒவ்வொருவரும் தங்களது சொந்த அரசியல் பொறுப்புணர்வை உணர்ந்தாகவேண்டியது அவசியமாகும்.

பெரு முதலாளிகளின் இலாப தேவைகளுக்கு மேலாக, மக்களது ஒட்டுமொத்த நலன்களையும் பேணிக்காக்கின்ற சமூக அமைப்பை நிறுவுவதற்கான முறையான அரசியல் போராட்டமாக இந்த போருக்கு எதிரான எதிர்ப்பை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். இந்தப் போராட்டம்தான் தற்போது உலக சோசலிச வலைத் தளத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved