World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Antiwar protests in Pakistan rattle the Musharraf regime

பாகிஸ்தானில் முஷராப் ஆட்சியை ஆட்டம் காணச்செய்யும் போர் எதிர்ப்புக் கண்டனப் பேரணி

By Vilani Peiris
15 March 2003

Back to screen version

கடந்த இரண்டு வாரங்களாக, வார இறுதி நாட்களில் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் போர் எதிர்ப்புக் கண்டனப் பேரணிகள் ஏற்கெனவே ஆட்டம் கண்டுவரும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜனாதிபதி பர்வேஷ் முஷராபின் ஆட்சியை மேலும் நிலை குலையச் செய்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ஈராக்மீது படையெடுக்க அனுமதி கோரும் தனது தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆதரிக்குமாறு அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. மற்றொரு பக்கம் அமெரிக்காவிற்கு எந்த வகையிலும் எந்தப் போருக்கும் ஆதரவு தரக்கூடாது என்று பாகிஸ்தான் மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் - மார்ச் 2 மற்றும் 9 - கராச்சியிலும், ராவல்பிண்டியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்து போர் எதிர்ப்பு கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்டனர். புஷ் நிர்வாகத்தின் போர்த் திட்டங்களுக்கு முஷ்ராப் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். முத்தஹிதா மஸ்ஜிலிஸ்- இ- அமல் (Muttahida Majlis-i-Amal - MMA) என்ற 6 இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் அடங்கிய கூட்டணி இந்தப் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்ததோடு, விரிவான அடிப்படையில் இந்த அமைப்புகள் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட போர் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தப் பேரணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ''அரசாங்கம், அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளை ஆதரிக்குமானால் பொதுமக்களது ஆத்திரமும், ஆவேச உணர்வுகளும் அதற்கு எதிராகத் திரும்பி விடும்'' என MMA அணியில் இடம் பெற்றுள்ள ஜமாத்தே இஸ்லாமிய தலைவர் காஜி ஹூசேன் அஹமது எச்சரித்தார்.

மார்ச் 2 அன்று கடுமையான இராணுவக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மீறி கராச்சி நகரில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பேரணிகளில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அல்கொய்தா அமைப்பின் உறுப்பினர்களைக் கைது செய்யும் நோக்கோடு மார்ச் முதல் தேதியன்று கராச்சியில் பல்வேறு திடீர் சோதனைகளை நடத்தியதை தொடர்ந்து குறிப்பாக இந்த நகரத்தில் கொந்தளிப்பு நிலவுகின்றது. ராவில்பிண்டியில் கைது செய்யப்பட்ட பலரில் அல்கொய்தா முன்னணித் தலைவர்களில் ஒருவர் என்று கருதப்படும் காலித் ஷேக் முஹமதுவும் ஒருவராவார்

''ஈராக் மீது தொடுக்கப்படும் போர் முஸ்லீம்களுக்கு எதிரான போராகக் கருதப்படும் என நாங்கள் அமெரிக்காவிற்குச் சொல்ல விரும்புகிறோம். ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் வாக்களிக்குமானால் முஷ்ராப் ஆட்சியைக் கீழே இறக்கிவிடுவோம் என்று அவருக்கு கூற விரும்புகிறோம்'' என ஜமாத்தே இஸ்லாமி தலைவர் காஜி உசேன் அஹமது கராச்சி பேரணியில் குறிப்பிட்டார்.

இந்தப் பேரணிகளில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதக்கட்சிகளின் ஆதரவாளர்கள் அல்லர். 17 வயது இளைஞர் பளில் அஹமது ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ''முஸ்லீம்கள் துன்பப்படுகிறார்கள் என்று நான் நம்புவதால்தான் இங்கு வந்திருக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார். ஒரு வர்த்தகர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது ''நான் போரை எதிர்க்கிறேன். அது முஸ்லீம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் இடையில் நடக்கும் போராக இருந்தாலும் அது தவறானது. போரினால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படாது'' எனக் குறிப்பிட்டார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை ராவல்பிண்டியில் 200.000 மக்கள் கலந்துகொண்ட போர் எதிர்ப்பு பேரணியானது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் கண்டிராத மிகப்பெருமளவிற்கு இருந்தது. நூற்றுக்கணக்கான போலீஸார் இரும்புத் தொப்பி, உலோகக் கவசங்களுடன் வீதிகளில் தடியேந்தி காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளிகளிலிருந்து குறிப்பாக, வடமேற்கு எல்லை மாகாணம் பஞ்சாப் மற்றும் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து பேருந்துகளில் பலர் வந்திருந்தனர்.

ஆர்பாட்டம் செய்தவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் ''இரத்தவெறி கொண்ட புஷ் ஒரு சர்வதேச பயங்கரவாதி'' ''புஷ் இன்றைய பரவோன் (Pharaoh) மன்னன்'' என்பது போன்ற முழக்கங்கள் இடம் பெற்றிருந்ததோடு, முஷ்ராப் பதவி விலகக்கோரும் பதாகைகளும் அதில் இடம் பெற்றிருந்தன. உள்ளூர்ப் பத்திரிகை கார்டூன்களில் (கேலிச்சித்திரங்களில்) புஷ் இரத்தம் குடிப்பது போன்ற சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி ஒன்றும் கொளுத்தப்பட்டது. ஒலி பெருக்கிகளில் ''பாகிஸ்தானே! விழிப்புணர்வு கொள்! இது ஜிஹாத் தருணம்! உனது இஸ்லாமிய நம்பிக்கை உன்னை அழைக்கிறது'' என்று தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஐ.நா.பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது பாகிஸ்தான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஒதுங்கி விடக்கூடாது என்றும், தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் MMA தலைவர்கள் முஷ்ராபை எச்சரித்தனர். ''உலகம் முழுவதும் அமெரிக்காவின் போர் திட்டத்திற்கு எதிராக உள்ளது'' என MMA யின் தலைவர் மெளலானா நூராணி பேரணியில் குறிப்பிட்டார். ''ஈராக்கில் ஆட்சி மாற்றம் என்பது மத்திய கிழக்கின் எண்ணெய் விநியோகங்களை கைப்பற்றுவதற்கும், இஸ்ரேலை பலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் சாக்குபோக்கு'' என்று நூராணி அறிவித்தார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஹெரீப் தலைமையில் இயங்கும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-N மற்றும் இம்ரான்கான் தலைமையில் இயங்கும் பாகிஸ்தான் டெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

பரவலாக போருக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பு உணர்வைத் தங்களுக்கு சாதகமாகத் பயன்படுத்திக் கொள்ள இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் முயன்று வருவதுடன், அதனை பிற்போக்குத்தனமான வகுப்புவாத வழியில் திருப்பிவிட முயன்று கொண்டுள்ளன. ஆனால் இந்த இயக்கம் பரவலான சமூகப் பிரிவுகளை உள்ளடக்கியது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. சிறிய அளவில் கண்டனக் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெற்று வருவதால், இவை சமுகத்தின் பல்வேறு நிலைகளில் நிலவும் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மார்ச் 8 அன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வக்கீல்கள் சங்கம் (Bar Association) இஸ்லாமாபாத்தில் ''ஈராக்கில் சமாதானம். ஐ.நா மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் அமெரிக்கா'' என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட்டுச்சேர்ந்து உலக எண்ணெய் வளத்தைத் கைப்பற்ற நடவடிக்கையில் இறங்கி இருப்பது உலக அமைதிக்கே மிரட்டல் என்பது தெளிவு என இங்கு உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர். முந்திய நாளில் லாகூரில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் எந்த வகையான போரும் கூடாது என்று, போருக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ''ஈராக்கிற்கு எதிரான போரைக் கண்டிக்கும் துண்டு பிரசுரங்களை கராச்சி பல்கலைக்கழகத்தில் விநியோகித்துக் கொண்டிருந்த முற்போக்கு இளைஞர்களுக்கு எதிராக போக்கிரிக் குழுத்தனமான நடவடிக்கையில் இறங்கிய மத அடிப்படைவாதிகளை மகளிர் கடுமையாகக் கண்டித்ததாக'' ஒரு செய்தி வெளியிடப்பட்டது.

இப்படி போருக்கு எதிரான உணர்வுகள் வலுவடைந்து கொண்டு வருவதால் முஷ்ராபும் மற்றும் பிரதமர் ஜபருல்லா ஜமாலியும் புஷ் நிர்வாகத்தின் போர் திட்டங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு காட்டுவதில் அச்ச உணர்விற்கு ஆட்பட்டுக் கொண்டு வருகின்றனர். இதை அவர்கள் வெளிப்படையாகவும் தெரிவிக்கவேண்டி வந்துள்ளது. செவ்வாயன்று ஜமாலி தேசிய தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது ''ஈராக்கிற்கு எதிரான போரை பாகிஸ்தான் ஆதரிப்பது மிகவும் சங்கடமான ஒன்று என தமது மந்திரிசபை ஒருமனதாக முடிவு செய்திருப்பதாக'' ஜமாலி குறிப்பிட்டார். மேலும், ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் எவ்வாறு வாக்களிக்கும் என்பதை அவர் திட்டவட்டமாக அறிவிக்க மறுத்துவிட்டார்.

அடுத்த நாள் புஷ் தொலைபேசி மூலம் முஷ்ராபை தொடர்புகொண்டு தமக்கு ஆதரவு தரவேண்டுமென நிர்ப்பந்தித்தார். அதேநேரம், பாகிஸ்தான் ஜனாதிபதி பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படையில் வாஷிங்டனை பெருமளவில் மலைபோல் நம்பி இருக்கிறார். நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஜமாலி இத்தொலைபேசி அழைப்பை அடக்கி வாசித்து, இதனை முக்கியமில்லாதது போல் காட்ட முயன்றார். ''எங்களைப் பொறுத்தவரை நிர்ப்பந்தம் எதுவும் இல்லை'' என்று அவர் கூறியதோடு, பாகிஸ்தான் எப்படி வாக்களிக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்ட மறுத்துவிட்டார். அவர், ''சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு தரப்படவேண்டும்'' என்று மட்டுமே பதிலளித்தார்.

தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் குற்றங்களை எதிர்கொள்வதற்கு வசதியாக அமெரிக்கா 30 மில்லியன் டொலர் உதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு அறிவித்தது. அதிகார வட்டாரங்கள் அமெரிக்கப் பணத்தை வரவேற்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் இந்தத் திட்டம் மேலும் எதிர்ப்புணர்வை உருவாக்கவே செய்யும். குறிப்பாக எல்லைப்பகுதிகளில் அல்கொய்தா உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை வேட்டையாடிப் பிடிப்பதற்கு அமெரிக்க இராணுவம், CIA மற்றும் FBI போன்ற அமைப்புகளுக்கு முஷ்ராப் அனுமதி வழங்கிய விதம் ஏற்கெனவே கணிசமான அளவிற்கு இங்கு எதிர்ப்புணர்வை வளர்த்திருக்கிறது.

அடுத்தவாரம் முஷ்ராப் மேலும் அதிகளவில் போர் எதிர்ப்பு ஆர்பாட்டங்களைச் சந்திக்க வேண்டிவரும். மார்ச் 23 அன்று லாகூரில் MMA பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்திருப்பதுடன், பெஷாவர், குவெட்டா, பைசலாபாத் முதலிய வடமேற்கு எல்லை மாகாணங்களிலும் பேரணிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved