By the Editorial Board
21 March 2003
Back
to screen version
உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு வெளியிட்டுள்ள,
கீழ்க்கண்ட அறிக்கை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில், வரும் வாரக்கடைசியில் நடைபெறவிருக்கும்
போர் எதிர்ப்பு கண்டனப் பேரணிகளில் விநியோகிக்கப்பட உள்ளது. எவ்வளவு விரிவான அடிப்படையில் ஆதரவாளர்களுக்கு
சென்று சேர வேண்டுமோ, அந்த அளவிற்கு இந்த அறிக்கை சேரவேண்டியது மிகமிக அவசியமாகும். நமது வாசகர்கள்
அனைவரும் தங்களது கணினி மூலம்
இந்த அறிக்கையை
இறக்கம் செய்து பேரணிகளிலும், மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த
அறிக்கை பிடிஎப் வடிவமைப்பில் கிடைக்கிறது.
உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சோசலிச சமத்துவ
கட்சியும், அமெரிக்கா மற்றும் அதன் இராணுவ கூட்டணிகளான, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றால் ஈராக்கிற்கு
எதிராக தொடுக்கப்பட்டுள்ள இந்த கிரிமினல் போரை ஐயத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றன.
பாதுகாப்பற்ற மக்கள் மீது எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள
ஆரம்ப குண்டு வீச்சுகள் உலகம் முழுவதிலும், வெறுப்பையும், அதிர்ச்சியையும், பயங்கர உணர்வுகளையும் உருவாக்கியுள்ளது.
முதலாவது தாக்குதல்கள் நடைபெற்ற சில மணி நேரத்திற்குள் உலகம் முழுவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்
சாலை, சதுக்கங்களில் அணிவகுத்து வந்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் மற்றும் ஈராக் மீது தாக்குதலை
நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இப்போது, கட்டவிழ்ந்து கொண்டிருப்பது மிக பயங்கரமான சமமற்ற
போட்டி, இந்தப் போட்டியில், இலட்சக்கணக்கில் அல்லாவிட்டாலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாவார்கள்.
உலகில் உள்ள மக்களின் மிகப்பெரும்பாலோர் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் உண்மையான மிரட்டல் வாஷிங்டனிலிருந்து
தான் வருகிறது, பாக்தாத்தில் இருந்து அல்ல என்பதை சரியாக புரிந்துகொண்டிருக்கின்றனர். ஈராக்கிலும் மக்களைக்
கொன்று குவிக்கும் பயங்கரமான ஆயுதங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு -அல் கொய்தா பயங்கரவாதிகளுக்கும் ஈராக்கிற்கும்
இடையில் நிலவுவதாக கூறப்படும் உறவுகள்- ஐ.நா. தீர்மானங்களை ஈராக் மீறிவிட்டதாக கூறப்படுவது- இப்படி
போரை நியாயப்படுத்தும் எல்லாவிதமான நியாயப்படுத்தல்களும் பொய்யானவை என்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன
மற்றும் நீண்ட காலத்திற்கு முன்னரே, முடிவு செய்யப்பட்டுவிட்ட ஆக்கிரமிப்பு செயலை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள
குற்றம் நாடுகிற சாக்குபோக்குத்தான் இது.
ஈராக்கிற்கு எதிரான போர் உலக வரலாற்றில், ஒரு இறுதியான
திருப்புமுனையை குறிக்கின்றது. வாஷிங்டன் ஈராக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும், மற்றும் மத்திய கிழக்கிலும்,
அதற்கு அப்பாலும் தனது பரந்த அபிலாசைகளின் ஒரு பகுதியாக மிகப்பெரும் எண்ணெய் வளத்தை தன் கட்டுப்பாட்டில்
கொண்டு வருவதற்காகவும், இந்த ஆக்கிரமிப்பு சூறையாடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. ஐ.நா.விற்கு
புறம்பாகவும் போருக்குச் செல்லவுமான புஷ் நிர்வாகத்தின் முடிவு, இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள
சர்வதேச உறவுகள் தொடர்பான முழு கட்டமைப்பையும் சிதைத்துவிட்டது என்று முதலாளித்துவ அரசியல் விமர்சகர்கள் கூட,
பரவலாக அங்கீகரித்துள்ளனர். தனது பூகோள மேலாதிக்கத்தை பெறுவதற்கு எந்த சட்டங்கள் அல்லது ராஜதந்திர
கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட போவதில்லை என்று அமெரிக்கா பிரகடனப்படுத்தி இருக்கிறது.
ஈராக்கை வென்று கைப்பற்றல் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலியுறுத்தும்
முதல் நடவடிக்கை, வாஷிங்டன் ஏற்கனவே, ஈரானையும் வடகொரியாவையும் குறி வைத்துவிட்டது. இப்போது அத்தகைய
இலக்கிற்கு ஒரு நீண்ட பட்டியலையே வைத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் சிரியா, லிபியா, மற்றும் சீனா ஆகியவை அடிமைப்படுத்துவதற்காகக்
குறிக்கப்பட்டுள்ளன. பூகோள அபிலாஷைகளை பின்பற்றுவதற்கு புஷ் நிர்வாகம் விளைவைப் பற்றிக் கவலைப்படாது செயல்பட்டு
வருவதால், ஏற்கனவே அமெரிக்காவின் ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கிடையே பிளவுகள் உருவாகியுள்ளன. மற்றும் அது
சர்வதேச உறவுகளை நச்சுச் சூழலில் சிக்கவைக்திருக்கிறது. அமெரிக்காவும் பிரிட்டனும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு
எதிராக வெட்கக்கேடான பேரினவாதத்தைக் கக்குவது, ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையிலேயே புதிய போர்
வெடித்துச் சிதறும் என்ற மேகமூட்டம் தோன்றியுள்ளது.
பாசிச இத்தாலி, எத்யோப்பியா மீதும் மற்றும் அல்பேனியா மீதும் படையெடுப்புக்களை
நடத்திய பின்னர் - நாஜிக்கள் செக்கோஸ்லேவாக்கியாவை பிடித்துக்கொண்டு, போலந்து மீது படையெடுத்த பின்னர்,
இதுவரை எந்த இராணுவ அரசாங்கமும் இந்த அளவிற்கு அப்பட்டமாக, சர்வதேச சட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு தங்களது
பொருளாதார மற்றும் கம்பெனி ஆதிக்க செல்வந்தத் தட்டுக்களின் நலன்களை கடைப்பிடித்தது இல்லை. வாஷிங்டனின் இராணுவ
தந்திரங்கள் "அதிர்ச்சி மற்றும் அச்சுறுத்தல்" நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, நாஜிக்கள் பயங்கர உணர்வை மக்களிடையே
தூண்டும் வகையில் மேற்கொண்ட அதிரடி தாக்குதல் பற்றிய அவர்களின் கொள்கையை நினைவுகூர்வதாக அமைந்திருக்கின்றது.
புஷ் நிர்வாகத்தின் தற்காப்புப் போர் பற்றிய தத்துவம், சென்ற நூற்றாண்டில்
ஜேர்மன் ஏகாதிபத்தியம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போர் பற்றிய இராணுவ கொள்கைகளை புதுப்பிப்பதாக இது
அமைந்திருக்கிறது. இத்தகைய இராணுவ ஆக்கிரமிப்பு கொள்கையால், ஜேர்மன் ஏகாதிபத்தியம் சென்ற நூற்றாண்டில் மிக
இழிவான நிலைக்கு சென்றது. நூரெம்பேர்க்கில் நடைபெற்ற சர்வதேச போர்க் குற்ற விசாரணைகளில், நாஜி தலைவர்கள்மீது
கூறப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு, அவர்கள் ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு செயல்படுத்தினார்கள் என்பது நினைவு
கூரப்பட வேண்டும். அந்தக் குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அப்போது, ஆக்கிரமிப்பு போர் பற்றி அந்த நீதிமன்றம் அளித்த விளக்கம்தான் இப்போதும் அப்படியே நடைமுறையில் உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் உலகின் ஒவ்வொரு
நாட்டிலும், மிகப்பெரும்பாலான மக்கள் -அவர்கள் நாட்டு மக்கள் உட்பட எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், ஈராக்கிற்கு
எதிராக போரை நடத்தி வருகின்றன. அரசியல் தலைவர்களும் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்ற
ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்குத்தனமான சமுதாய தட்டுக்களின் உணர்வுகளை
தூண்டிவிட முயன்று வருகிறார்கள் மற்றும் மக்களது மிகக்கீழான குறுகிய நோக்கம், அச்ச உணர்வு மற்றும் தப்பெண்ணங்களை
தூண்டிவிட முயன்று வருகிறார்கள்.
உழைக்கும் மக்களும் மற்றும் இளைஞர்களும் இந்த போர் முயற்சியை தடுத்து
நிறுத்துவதற்கும் மற்றும் மற்றொரு உலக கொந்தளிப்பு போரை தடுப்பதற்கும் -அடுத்த போர் இதற்கு முந்தையவற்றைவிட
பயங்கரம் நிறைந்ததாக இருக்கும்- இவற்றிற்கு எல்லாம் மேலாக என்ன தேவை என்றால், இன்றைய நெருக்கடியின் புறநிலை
வரலாற்று அடிப்படையிலான ஆணிவேரை சரியாக புரிந்துகொள்ளவேண்டும். இப்படி தெளிவாக புரிந்துகொண்டு, அதன்
அடிப்படையில் முழுமையாக திட்டமிடப்பட்ட மற்றும் ஒத்திசைவான அரசியல் மூலோபாயத்தை வகுக்கவேண்டும்.
இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர், பலதசாப்தங்களாக, அரசியல்
தலைவர்கள், ஊடகங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களால் வழங்கப்பட்ட கருத்து 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில்
நடைபெற்ற பொருளாதார நெருக்கடிகள், போர் மற்றும் காட்டு மிராண்டித்தனங்கள், வரலாற்றில் கடந்த கால
சம்பவங்களாக ஆகிவிடும் என்பதாகும். அத்துடன், இதனூடாகவும் மற்றும் அறிவொளி கொள்கைகளாலும், தேசிய இறையாண்மையை
மதிக்கக் கற்றுக்கொண்டதுடன், ஐ.நா.வின் தலையீடு மூலம் உலகில் சமாதானம் நிலவும் என்வும் கூறப்பட்டது. தற்போது
இவை அத்தனையும் வெட்டித் துண்டாக ஆக்கப்பட்டுவிட்டன.
இந்தப் போர் பலதசாப்தங்களாக ஒன்றுதிரண்டு பக்குவமடைந்திருந்த, நீண்டகாலமாய்
கிடந்த மற்றும் ஆழமாய் வேர்விட்டிருந்த நெருக்கடியின் உச்சக்கட்ட நிலை ஆகும், மற்றும் அது உலக ஏகாதிபத்தியத்தின்
மையமான ஐக்கிய அமெரிக்க அரசுகளில் அதன் மிகச்செறிவான வெளிப்பாட்டைக் காண்கின்றது. இதற்கான அடிப்படைக்
காரணங்கள் -உற்பத்தி பூகோளமயமாதல் மற்றும் உலகம் பகைமை கொண்ட தேசிய அரசுகளாக பிளவுண்டிருப்பது மற்றும்
உற்பத்திச் சாதனங்களின் தனிச்சொத்துடைமையாலும் இலாப நோக்கினாலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள
பொருளாதார வாழ்க்கை இவற்றிற்கிடையேயான, முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயான அடிப்படை முரண்பாடுகளில் காணக்
கிடக்கின்றன.
எதிர்ப்புக்கள் மட்டுமே, ஏகாதிபத்திய போரை தடுத்து நிறுத்திவிட
முடியாது. இராணுவ வாதம் மற்றும், போருக்கான அடிப்படை காரணத்தை கண்டுபிடித்து போராடுகின்ற மூலோபாயம்
தேவை - முதலாளித்துவ ஒழுங்கையே எதிர்த்துப் போராட வேண்டும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக
தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமாய் அணிதிரட்டல் வேண்டும் மற்றும் சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக அல்லாமல்
பெரும்பான்மையினரின் சமூகத் தேவைகளை நிறைவேற்ற சமுதாயத்தை சோசலிச பாதையில் மாற்றியமைக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில், குறிப்பாக 1990களில், ஊகவாணிக நிதிக் குமிழிகளின்
பொழுது, சமுதாயத்தின் மேல் மட்டத்துக்கு வந்த அமெரிக்காவின் ஆளும் செல்வந்தத்தட்டின் அரசியல் வடிவமாகவே புஷ்
நிர்வாகம் விளங்குகிறது. அவர்கள் தங்களது செல்வத்தை மோசடிகள், திருட்டு, மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளால்
பெருக்கிக்கொண்டார்கள் மற்றும் கம்பெனிகள் சீரமைப்பு, சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரால் தொழிலாளர்கள்,
தங்களது நலன்களை, வேலை நிலைகளை, ஆதாயங்களை இழந்தார்கள். இதனுடைய விளைவு என்னவென்று பார்த்தால்,
பணக்காரர்களுக்கும் மிகப்பெரும்பாலான மக்களுக்கும் இடையே சமுதாய இடைவெளி மிகப்பெரும் அளவில் தீவிரமாக
வளர்ந்து வருகின்றது.
ஊகவாணிக நிதிக் குமிழி வெடிப்பு மற்றும் அமெரிக்க வோல்ஸ்டீரீட்டில் தொடர்ந்து
பங்கு விலைகள் சரியத் தொடங்கி நீடித்தல், உலக முதலாளித்துவத்தை, குறிப்பாக ஐக்கிய அமெரிக்க அரசுகளில் ஆழ்ந்த
நெருக்கடிக்குள் தூக்கி எறிந்தது, இந்த நெருக்கடிக்கு ஆளும் செல்வந்தத் தட்டின் எந்தப் பிரிவினரிடமும் எந்தத் தீர்வும்
இல்லை. இப்படி சமுதாய முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவதை நேருக்கு நேராக சந்திக்கும் புஷ் நிர்வாகம், தனது
பொருளாதார தேக்க நிலையினை சரிக்கட்டுவதற்காக மற்றும் பெருகி வரும் சமுதாய பிரச்சனைகளிலிருந்து உள்நாட்டு
மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக, சர்வதேச அளவில் கொள்ளையடிப்பது, சூறையாடுவது என்ற நடவடிக்கையில்
தீவிரமாக இறங்கி இருக்கிறது.
உள்நாட்டு மற்றும், வெளிநாட்டு கொள்கை ஒன்றொடொன்று பிரிக்க
முடியாத வகையில் பிணைக்கப்பட்டவை. வெளிநாடுகளை இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல், உள்நாட்டில் வேலை
வாய்ப்புக்கள், சமூக சேவைகள், வாழ்க்கைத் தரம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டும்
உள்நாட்டு நிகழ்ச்சி நிரலுடன் பிரிக்கமுடியாது கட்டுண்டுள்ளது. அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும் அந்த
நாட்டு அரசாங்கங்கள் எந்த அரசியல் சாயல் கொண்டதாக இருந்தாலும், அந்த அரசாங்கங்கள் உழைக்கும் மக்கள்
போராடிப் பெற்ற சமுதாய நன்மைகளை, மிகப்பெரும் செல்வந்த அதே ஒட்டுண்ணித்தட்டின் நலனுக்காக பறிப்பதற்குத்தான்
முயன்று வருகின்றனர்.
இலட்சக்கணக்கான மக்கள் இந்தப் போருக்கு எதிராக கண்டன பேரணிகளை
நடத்தி வருகின்றனர். ஆனால், இந்தப் போரை நடத்துகின்ற அரசாங்கங்கள் மக்களது ஜனநாயக விருப்புக்களுக்கு தாங்கள்
பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற பாணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. புஷ் நிர்வாகம், டோனி பிளேயரின்
தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் ஜோன் ஹோவர்ட்டின் லிபரல் ஆட்சி ஆகியவை ஊழல் மிகுந்த செல்வந்த மேல்தட்டின்
அரசியல் பிரதிநிதிகளாகவே செயல்பட்டு வருகின்றனர். அவர்களது கட்டளைப்படி மட்டுமே செயல்படுகின்றனர்.
இராணுவ வாதத்திற்கு எதிரான கிளர்ச்சியும், உழைக்கும் மக்களது ஜனநயாக
உரிமைகள் மற்றும் சமூக அந்தஸ்திற்கான தற்காப்பு நடவடிக்கைகளும், ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் பின்னிக் கிடக்கின்றன.
இது இந்த அல்லது அந்தத் தலைவர் அல்லது அரசாங்கத்தை மாற்றும் பிரச்சனையல்ல. இந்தப் போரினால் தாராண்மைக்
கொள்கைகளும் மற்றும் சமூக ஜனநாயகக் கொள்கைகளும் முழுமையாக சிதைந்துவிட்டன. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியானது,
போருக்கு எதிரான ஆவேச உரைகளை அவர்கள் நிகழ்த்தினாலும், புஷ் நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு
எதையும் உருவாக்குவதற்கு வல்லமை எதுவுமில்லாதவர்கள் என்று எடுத்துக் காட்டி இருக்கிறது.
மேலும் ஐ.நா. வோ அல்லது பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தலைமையில் இயங்கும்
ஐரோப்பிய அரசாங்கங்களோ, அமெரிக்க இராணுவ மயத்திற்கு எதிரான அரணாக செயல்படும் என்று கருதும் பிரமையைக்
கொண்டிருத்தல் மிகவும் ஆபத்தாகிவிடும். பிரான்சும் ஜேர்மனியும் அமெரிக்காவோடு மோதலுறும் மட்டத்துக்கு, அவை
தங்களது முக்கிய நலன்களை உறுதிப்படுத்த இராணுவ வலிமை மூலமாக மீள ஆயுதபாணி ஆக்கிக் கொள்ளுவன. அந்த நாடுகள்,
போரில் தயாரிப்புக்களுக்கு தங்களது பொருளாதார போட்டி வலிமையை பெருக்கிக்கொள்வதற்கு, விலையாக
தொழிலாள வர்க்கத்தின் சமுதாய அந்தஸ்து மீது தங்களின் தாக்குதலை ஆழப்படுத்துவர்.
இப்போது போரில் இறங்கியிருப்பவர்கள், உலகம் முழுவதிலும் எந்த
அளவிற்கு எதிர்ப்பு மற்றும் கண்டனப்போக்கு வளர்ந்திருக்கிறது என்பதை சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள். லட்சக்கணக்கான
மக்கள் இப்போது, முதல் தடவையாக அரசியலுக்கு வந்திருக்கின்றனர். இதற்குமுன்னர், சாதாரண மக்கள் எந்தெந்த கட்சிகளுக்கு,
விசுவாசமாக ஆதரவு தந்து வந்தார்களோ, அந்த கட்சிகளுக்கு எதிரான இயக்கத்தில் தற்போது, சாதாரண உழைக்கும்
மக்கள் திரும்பியுள்ளனர்.
உலக சோசலிச வலைதளமானது நான்காவது அகிலத்தின் அனைத்துலகக்
குழு மற்றும் அதன் இணைந்த பகுதிகளான சோசலிச சமத்துவ கட்சிகள் ஆகியவற்றின் அரசியல் அங்கமாக செயல்பட்டு வருகிறது.
தொழிலாள வர்க்கம் எதிர்நோக்கும் புரட்சிகர சர்வதேச பணிகளைப் பற்றிய அரசியல் புரிதலை வளர்க்கவும் ஆதரித்துப்பேணவும்
முக்கிய குறிக்கோளாகக் கொண்டு அது பணியாற்றி வருகிறது.
போருக்கு எதிரான இயக்கம் ஒரு சிறு குழுவினர் மற்றும் எவருக்கும்
கட்டுப்படாத மேல்தட்டினர் ஏகபோகமாக செல்வத்தை அனுபவித்து வருவதற்கு எதிர்ப்புடன் கட்டாயம் இணைத்து நடத்தப்பட
வேண்டும். வேலை வாய்ப்பிற்கான உரிமை, வாழுவதற்கு ஏற்ற ஊதியம், கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை
உத்திரவாதம் செய்து தருகின்ற வகையில் சோசலிசக் கொள்கைகள் அடிப்படையில் இந்த இயக்கம் நடத்தப்படவேண்டும்
மற்றும் இப்பொழுது படிப்படியாக தாக்குதலுக்குள்ளாகி வரும் ஜனநாயக உரிமைகளை விரிவாக்கித் தரவும்
பேணிக்காக்கவும் அந்த சோசலிசக் கொள்கைகள் உறுதி செய்து தரவேண்டும்.
உலகில் ஒரே ஒரு சமுதாய சக்தி மட்டுமே, ஏகாதிபத்திய போருக்கு முற்றுப்புள்ளி
வைக்கின்ற வல்லமை பெற்றது. அந்த சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். உலகின் ஒவ்வொரு மூலையிலும் பீறிட்டு
வருகின்ற போருக்கு எதிரான கண்டனங்களும் பேரணிகளும் வரவிருக்கின்ற எதிர்காலத்திற்கு நல்வரவு கூறுகின்ற
முன்னோடியாக தோற்றம் அளிக்கின்றன. மேலும் உழைக்கும் மக்கள், அவசியத் தேவைகளையும் வரலாற்று நலன்களையும்
நிறைவேற்றும் ஒரு திட்டத்தின் அடிப்படையைச் சுற்றி ஒன்றுபட வேண்டியது அவசியம் என்பதையும் இந்த பேரணிகள் சான்று
கூறி நிற்கின்றன.
தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய வல்லமையை திரட்டுவதற்கு மிக
அவசியமான முன்தேவை என்னவென்றால், பெரு வர்த்தக நிறுவனங்களின் முகவாண்மைகளாக செயல்பட்டு வரும் எல்லா
அரசியல் கட்சிகளில் இருந்தும் பெரு முதலாளிகளது அரசியல் முகவாண்மைகளிலிருந்தும் பெறும் அரசியல் ரீதியான சுதந்திரம்
ஆகும். இப்படி தொழிலாளர்கள் விடுபட வேண்டிய கட்சிகளில், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும், மற்றும் அதிகாரபூர்வமான
தொழிற்கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆகியவையும் அடங்கும், இந்தக் கட்சிகள் போரை தடுத்து நிறுத்துவதற்கும்
மற்றும் உழைக்கும் மக்களது உரிமைகளை தற்காத்து நிற்பதற்கும் முழுமையாக தவறிவிட்டன என்பதை நிரூபித்திருக்கின்றன.
தொழிலாள வர்க்கம் தனது சொந்த அரசியல் கட்சியை கட்டி எழுப்புவதுடன் அரசியல் அதிகாரம் பெறுவதற்கு கட்டாயம்
போராட வேண்டும்.
போருக்கு எதிராகவும் இராணுவவாதம் வளர்வதற்கு எதிராகவும் மற்றும்
சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும் உள்ள அனைவரையும், தொழிலாள வர்க்கத்தின் புதிய சர்வதேச சோசலிச இயக்கத்தை
கட்டி எழுப்புவதில் அவர்கள் அனைவரும் பங்குபெற வேண்டுமென்று நாங்கள் வரவேற்கின்றோம். கட்டுரைகளையும் செய்திகளையும்
தருவதற்கு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேருவதற்கு மற்றும் புதிய சர்வதேச சோசலிசக் கட்சியை கட்டுவதில்
பங்குபெறுவதற்கு நீங்கள் உலக சோசலிச வலை தளத்தோடு தொடர்புகொள்ளுமாறு உங்களை நாம்
மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறோம்.