World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Top US firms vie for post-war Iraq contracts
Billions in profits seen from seizing oil fields

«பாருக்கு பின்னரான ஈராக்கில் ஒப்பந்தங்களை பெறுவதில் பாரிய அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையே போட்டி

எண்ணெய் வயல்களை கைப்பற்றுவதனூடாக பில்லியன்கள்வரை லாபம்

By Bill Vann
12 March 2003

Back to screen version

ஈராக்குடன் போர் தொடங்குவதற்கு முன்னரே, அமெரிக்காவின் மிகப் பிரம்மாண்டமான கட்டுமான நிறுவனங்கள் அடங்கிய ஒரு சிறிய குழு, போருக்கு பிந்திய ஈராக்கில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக 900 மில்லியன் டொலர் ஒப்பந்தங்களை பெறுவதற்கு போட்டி போடும் முயற்சியில் இறங்கியுள்ளன. போரின் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்கப் போர் விமானங்களும், ராக்கெட்டுகளும் ஈராக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி நாசப்படுத்திய பின்பு, அதன் உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்காக ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்களை அமெரிக்கா வழங்க இருக்கிறது.

முதலாவது கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கான போட்டி, வரவிருக்கின்ற பெரிய வாய்ப்புகளுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணெய் வளமிக்க ஈராக்கை பரவலாக சூறையாடுவதற்கு முன்னரே, இப்படி அநாகரீகமாக போட்டி போட்டுக் கொண்டிருப்பது ஒன்றை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அது, இந்தப் போர் ''மக்களைக் கொன்று குவிக்கின்ற'' பயங்கர ஆயுதங்கள் சம்மந்தப்பட்டதல்ல என்றும், பயங்கரவாதம் மற்றும் சதாம் ஹூசேன் அரசு தொடர்புடையதல்ல என்பதாகும். மாறாக இந்தப் போர் எண்ணெய் வளம் மற்றும் லாபத்துடன் சம்மந்தப்பட்டதாகும். அத்துடன் மத்திய கிழக்கிலும், அதற்கு அப்பாலும் அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் சம்மந்தப்பட்டதாகும்.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு (US Agency for International Development -USAID) இத்தகைய ஒப்பந்தங்களை தற்போது வழங்கி வருகின்றது. ''அவசர சூழ்நிலைகளை'' அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தங்கள் வழங்கும்போது கடைப்பிடிக்கப்படும் சாதாரண போட்டி போடும் நடைமுறைகளை கைவிட்டுவிடுவதற்கு ஒரு விதியை மேற்கோள்காட்டி, அரசாங்கம் கொள்முதல் நடைமுறைகளாக மாற்றியுள்ளது.

இதன்படி, மிகப்பெரிய ஒப்பந்தம் ஐந்து அமெரிக்க கம்பெனிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று கெல்லாக் பிரெளன் மற்றும் ரூட் (Kellog Brown & Root) நிறுவனமாகும். இது, ஆலிபர்ட்டன் கம்பெனியின் ஒரு துணை நிறுவனமாக இருக்கின்றது. இந்த துணை நிறுவனத்தில் இன்றைய அமெரிக்க துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனி 1995 முதல் 2000 ம் ஆண்டு தேர்தல் இயக்கம் தொடங்கும் வரை தலைமை நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு வகையான இராணுவ ஒப்பந்தங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் சீரமைப்புத் திட்டங்களும் அடங்கும்.

மற்றொரு அரசியல் தொடர்புடைய நிறுவனம் ஒன்று இந்த பேரத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. பெக்டெல் கார்ப்பரேஷனில் (Bechtel Corp) றீகன் காலத்து முன்னணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் காஸ்பர் வியன்பேர்கர் (Caspar Weinberger) மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜோர்ஜ் சூட்ஸ் உட்பட பலர் முன்னணி பதவிகளில் இருந்திருக்கின்றனர். இந்த நிறுவனம் 2000 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரும் அளவிற்கு நன்கொடை கொடுத்த ஐந்தாவது பெரிய நிறுவனமாகும். அவர்கள் கொடுத்த நன்கொடையில் மூன்றில் இரண்டு பங்கு பணம் குடியரசுக் கட்சிக்காக வழங்கப்பட்டது. பேரத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள இன்னொரு நிறுவனம் லூயி பெர்ஜர் குழுவாகும். (Louis Berger Group) இது ஆப்கானிஸ்தான் ஒப்பந்தங்களிலும் சம்மந்தப்பட்டிருக்கிறது. இவற்றோடு கலிபோர்னியாவைச் சேர்ந்த புளோர் கார்ப்பரேஷனும் மற்றும் பார்சன் கார்ப்பரேஷனும் (Fluor Corporation and Parsons Corporation) பேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் ஐந்து நிறுவனங்களுக்கே முடிவு செய்யப்பட்டிருப்பதாக USAID அதிகாரிகள் தெரிவித்தனர். பென்டகன், பாதுகாப்புத் தொடர்பான அனுமதியை இந்த நிறுவனங்களுக்கு வழங்கிய பின்னர்தான் ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்கு இது ஒரு நிபந்தனையாகும். பென்டகனின் இந்த அனுமதி மூலம் ஏற்கெனவே வாஷிங்டனுக்கும், இப்போரில் புஷ் நிர்வாகத்தின் ஒரு பெரும் நட்பு நாடாக இருக்கும் பிரிட்டனுக்கும் இடையே குறிப்பிடத்தக்க அளவிற்கு கொந்தளிப்பு முற்றியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தனது தேசிய நலன்களுக்கு மிகுந்த ஆர்வத்தோடு காத்து நிற்கும் தன்மை கொண்ட பிரிட்டனின் தொழிற்சங்க அதிகாரத்துவம், அமெரிக்காவின் இந்த ஒப்பந்த முறைக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ''போரில் இரத்தம் சிந்துவதில் பங்கெடுத்துக் கொள்ளுகிற பிரிட்டன், போர் முடிந்த பின்னர் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை எடுக்கப்படும்போது ஏன் பிரிட்டிஷ் கம்பெனிகள் அனுமதிக்கப்படவில்லை''? என பிரிட்டனின் தொழில்துறை பொறியியல் தொழிற்சங்கமான அமிக்கஸ் (Amicus) பிரதிநிதி ரிச்சர்ட் ஓபெரேன் கார்டீயன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கேட்டிருந்தார்.

USAID ஆனது, "போருக்கு பிந்திய ஈராக் சீரமைப்பு'' என்ற தலைப்பில் தயாரித்திருந்த 13 பக்க அறிக்கையில், ஈராக் சீரமைப்பிற்கான ஒப்பந்த விபரங்கள் விளக்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டம் பற்றிய செய்தி ரகசியமானது அமெரிக்காவின் வால்ஸ்ரீட் ஜெர்னல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில், 1500 மைல்கள் நீளத்திற்கு ''பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வீதிகளும், பாலங்களும்'' மற்றும் போரில் சேதமடைந்த துறைமுகங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற ஆயிரக்கணக்கானவற்றை மீளக்கட்டியமைத்தல் மற்றும் மின்சாரத்தை மீண்டும் வழங்குவதற்காக 550 அவசர மின்சார ஜெனரேட்டர்களை வழங்குதல் என்பன இந்தத் திட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கின்றது.

சில மதிப்பீடுகளின்படி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 900 மில்லியன் டொலர் 6 மாதங்களில் செலவாகிவிடும் அளவிற்கு ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன. மேலும், இந்தப் போரில் உண்மையிலேயே ஏற்படும் சேதத்தின் அளவு மிகப்பெருமளவாக இருக்கும் எனக் கருதப்படுவதால் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்காது. அத்துடன், தாக்குதல் தொடங்கி முதல் 48 மணி நேரத்தில் 3.000 குண்டுகளும், ராக்கெட்டுகளும், விமானப்படை மூலம் ஏவி தாக்குவதற்கு பென்டகன் திட்டமிட்டிருக்கிறது.

தொழிற்துறையில் அனுபவம் உள்ளவர்கள் இந்த ஒப்பந்தம் மிகமிகக் குறைவாகவே உள்ளது என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஈராக்கின் எண்ணெய்த் தொழிலை மேம்படுத்துவதற்கும், சீரமைப்பதற்கும் மிகப்பெரும் அளவில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டாக வேண்டும். ஈராக்கில், 1990 ல் நடைபெற்ற வளைகுடாப் போருக்கு முந்தைய அளவிற்கு எண்ணெய் உற்பத்தி வசதிகளை செய்வதற்கு 5 பில்லியன் டொலர்கள் செலவிட வேண்டிவரும் என்று வெளியுறவுகள் தொடர்பான கவுன்சில் அண்மையில் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரிவிக்கின்றது. ஒரு நாளைக்கு 2.8 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கும் மேலும் 40 பில்லியன் டொலர்கள் செலவிட வேண்டியிருக்கும். இந்த உற்பத்தி அளவு கூட OPEC அமைப்பின் தரத்திற்கு மிக சொற்பமானது என்றே சொல்லவேண்டும்.

USAID திட்டமிட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான ரகசியங்கள் பத்திரிகையில் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கண்டனம் கிளம்பியது. புஷ் நிர்வாகம் ஈராக் போர் தொடர்பாக மிகக்கடுமையான முறையில் ரகசியங்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. புஷ் நிர்வாகம், ஈராக் போருக்கு ஆகும் செலவு பற்றிய மதிப்பீடு எதையும் இன்றும் வெளியிடவில்லை. இருப்பினும் 50 முதல் 200 பில்லியன் டொலர்கள் வரை போருக்காக செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது. போர் முடிந்த பின்னர் அமெரிக்கா தனது பொறுப்பில் ஈராக்கை வைத்திருக்கும் ஓர் ஆண்டில் மேலும் 20 பில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிட்டிருக்கின்றது.

ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெ.கார்னரை (Jay Garner) பென்டகனின் புணரமைப்பு மற்றும் மனிதாபிமான உதவி அலுவலக அதிகாரியாக புஷ் நிர்வாகம் புதிதாக தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால், அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழுக் கூட்ட விசாரணையில் அவர் கலந்துகொள்ளவில்லை. ஈராக் போருக்கு பிந்திய திட்டங்கள் பற்றிய விசாரணைக்கு அவர் பிரதான சாட்சியாக விசாரிக்கப்படவிருந்தார். அவரது ஊழியர்கள், அவர் கலந்துகொள்ளாததைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, நிகழ்ச்சி நிரல் பற்றிய மோதல் தொடர்பாக அவர் கலந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டனர்.

ஈராக்கில் சீரமைப்புத் திட்டங்களை மேற்பார்வையிடும் பணிக்கு பொறுப்பெடுத்துள்ள கார்னர், கலிபோர்னியாவில் இயங்கும் பெரிய பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனமான SY கோல்மானின் (SY Coleman) தலைவர் பதவியில் இருந்தவர். இந்த நிறுவனம் ஈராக் ஆக்கிரமிப்பு போரில், அந்த நாட்டையே சீரழிக்கும் ராக்கெட் சாதனங்களை தயாரித்து வழங்கியுள்ளது.

ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றும் போருக்காகவும், அதற்குப் பின்னர் ஆகும் கட்டமைப்பு செலவிற்காகவும் ஈடுகட்ட புஷ் நிர்வாகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்பது நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டு வருகிறது. ''இவற்றில் சில ஒப்பந்தங்கள், உண்மையான உதவியாக இல்லாமல் இருக்கலாமா என்பதுதான் மக்களது கவலையாக உள்ளது. ஈராக் மக்கள் அந்தப் பணிகளுக்காக ஆகும் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும்'' என்று சர்வதேச மற்றும் கேந்திர ஆய்வுகள் நிலையத்தில் மத்திய கிழக்கு தொடர்பான நிபுணராக பணியாற்றிவரும் அன்ரனி கார்ட்டஸ்மேன் குறிப்பிட்டார்.

ஈராக்தான் போருக்கு பின்னர் ஆகும் செலவினங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை சென்ற மாதம் வெள்ளை மாளிகை அதிகாரி ஆரி பிளிட்சர் தெளிவுபடுத்தினார். ''ஆப்கானிஸ்தான் போல் அல்லாமல் ஈராக் மிகுந்த செல்வ வளமிக்க நாடு. ஈராக்கின் மகத்தான பொருளாதார வளம் அந்த மக்களுக்கே சொந்தமானது. எனவே, தங்களது சொந்த சீரமைப்பிற்காக ஆகும் செலவின சுமையில் பெரும்பகுதியை ஈராக் பல்வேறு வழிகளில் ஏற்றுக்கொள்ள முடியும்'' என்று அவர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான திட்டமிடுவதில் முக்கிய பங்கு வகித்தவரும், அந்நாட்டு ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான பாதுகாப்புத்துறை உயர் அதிகாரியுமான ஜோசப் காலின்ஸ், இதே கருத்தை அண்மையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது எதிரொலித்தார். ''ஈராக்கானது ஆப்கானிஸ்தானைவிட பொருளாதார அடிப்படையில் உயர்ந்த நிலையில் இருக்கின்ற நாடாகும். அதனிடம் எண்ணெய் வளம் இருப்பதால், சீரமைப்பு பணிகளை சுயநிதி ஆதாரங்கள் மூலம் மேற்கொள்ள முடியும். அந்த வகையில் ஆப்கானிஸ்தானைவிட ஈராக் மேம்பட்ட நாடு'' என அவர் குறிப்பிட்டார்.

மேற்கு ஆசிய விவகாரத்திற்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குனரான எலியட் ஆபிரகாம் தலைமையில் செயல்பட்டுவரும் போருக்கு பின்னரான ''மனித நேய விவகாரங்கள்'' நிர்வாகக் குழுவில் கொலின்ஸ் உறுப்பினராக உள்ளார். றீகன் நிர்வாகத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஆபிரகாம், ஈரானுக்கு எதிரான விவகாரங்கள் தொடர்பான புலன் விசாரணையில் பாரளுமன்றத்திற்கு உண்மைக்கு மாறான தகவல்களை கூறினார் என்பதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், பின்னர் ஜோர்ஜ் புஷ் சீனியர் அவருக்கு மன்னிப்பு அளித்தார். தற்போது இவர், ஈராக்கை முறியடித்ததும் அதன் எண்ணெய் வயல்களை தன் பொறுப்பில் வைத்துக்கொள்ளும் உரிமையை அமெரிக்கா பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

புஷ் நிர்வாகத்தின் நோக்கம் என்னவென்றால், ஈராக் மக்களுக்கு சொந்தமானது என்று ஆரி பிளட்சர் குறிப்பிடும் ''மகத்தான பொருளாதார வளத்தை'' அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் எரிபொருள் ஏகபோக நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதுதான்.

ஈராக்கின் எண்ணெய் வள ஆதாரங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமானால், அமெரிக்கா தனது பொருளாதார அடிப்படையிலான எதிரிகளுக்கு தன் விருப்பப்படி நிபந்தனைகளை விதிக்க முடியும். அதற்கான வலிமையை தருகின்ற அளவிற்கு உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வளம் ஈராக்கில் உள்ளது. இந்த அடிப்படையில் தான், இந்தப் போர்த் திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையே கடுமையான பிளவு நிலவி வருகின்றது.

சென்ற வளைகுடாப் போரின் விளைவாக, ஏற்பட்டுள்ள சகித்துக்கொள்ள முடியாத நிலவரம் என்று அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும், நிதி வட்டாரங்களும் கருதுகின்றவற்றிற்கு ஈராக்கை கைப்பற்றுவதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும். ஏனெனில், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த இடைத்தரகர்கள் ஊடாகவே ஈராக்கினுடைய எண்ணெயைப் பெற்று வருகின்றன. (ஈராக் உற்பத்தி செய்யும் எண்ணெயில் 3 ல் 1 பகுதிக்குமேல் தற்போது இடைத்தரகர்கள் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது) அதே நேரத்தில் பிரான்ஸ் மற்றும் ரஷ்ய கம்பெனிகள் பல பில்லியன் டொலர்கள் மதிப்பிற்கான ஒப்பந்தத்தை ஈராக்குடன் செய்திருக்கின்றன. ஈராக்கின் பொருளாதார தடை நடவடிக்கைகள் நீக்கப்படுமானால், அதன் எண்ணெய் வள ஆதாரங்கள் இந்த நாடுகளின் நிறுவனங்களுக்கு கிடைத்துவிடும்.

ஆகவே ''ஈராக்கில் ஆட்சி மாற்றம்'' தொடர்பாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் இந்த நாடுகளின் பொருளாதார நலன்கள்தான் என்று வாஷிங்டனிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியும். அதே நேரத்தில் ஈராக்கினுடைய எண்ணெய் வளத்தை கைப்பற்றுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா ஆவேசமாக மறுத்து வருகின்ற போதிலும், தனது சூறையாடல் நோக்கம் கொண்ட போர் நடவடிக்கைகளை மறைத்துக் கூறிவருவது புஷ் நிர்வாகம் பரப்பி வரும் பல்வேறு பொய்களில் ஒன்றாக இருக்கின்றது.

அண்மையில் வெளிவந்த ''தனியார்மயமாக்கலும், எண்ணெய்த் தொழிலும். போருக்கு பின்னரான ஈராக் மீள்கட்டமைப்பிற்கான ஒரு உத்தி'' என்ற அறிக்கை புஷ் நிர்வாகத்திற்கு உள்ளேயும், குடியரசுக்கட்சி சார்புடைய நிபுணர் குழுவிற்கும் சுற்றுக்கு விடப்பட்டது. இந்த அறிக்கையானது வாஷிங்டன் விரும்புவதை செயல்படுத்திக்காட்டும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் ''ஈராக்கினுடைய பொருளாதாரம் மிகுந்த குழப்பத்தில் சிக்கி இருப்பதற்கான காரணம் நிர்வாகக் கோளாறு என்று சிலர் கூறி வருகின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல. மிக அதிகமாக உள்ள அதன் எண்ணெய் வளத்தை தனியார்மயமாக்க வேண்டும். இது வெற்றி பெறுமானால், எண்ணெயை சுத்திகரித்து குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வது உட்பட பல்வேறு துறைகளில், குறிப்பாக OPEC உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக இத்திட்டம் செயல்படும். இதன் மூலம் எரிபொருள் மார்க்கெட்டில் தற்போது மேலாதிக்கம் செலுத்தி வரும் ஒரு குழு நடவடிக்கைகள் பலவீனப்படும்'' என்று குறிப்பிட்டிருக்கின்றது. அத்துடன், உலக எண்ணெய் விநியோகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிடுக்குபிடி வலுப்படுத்தப்படுகிறது என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

''ஈராக்கினுடைய பொருளாதார செழிப்பிற்கான பாதையை மிக எளிதாக உருவாக்கிவிட முடியாது. எண்ணெய்த் தொழில் உட்பட அதனுடைய பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளை சீராகவும், வெளிப்படையாகவும் பெருமளவில் தனியார்மயமாக்கி, அதன் மூலம் அடிப்படை கட்டமைப்புக்களை சீர்திருத்துவதில் எதிர்கால அரசாங்கத்திற்கு புஷ் நிர்வாகம் உதவ முடியும்'' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இத்தகைய ''எதிர்கால ஈராக்கினுடைய அரசாங்கமானது'' எத்தகைய பண்பைக் கொண்டதாக இருக்கும்? அது, புஷ் மற்றும் அவரது நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வலியுறுத்துவது போன்று ஈராக் மக்களை ''விடுதலை செய்து'' அவர்களுக்கு ''ஜனநாயகத்தை'' கொண்டுவரும் பண்பைக் கொண்டதாக இருக்கும்?

ஈராக்கை இராணுவம் ஆக்கிரமிப்பு செய்வதற்கான செலவுகளை மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திப்பதும் மற்றும் நாட்டின் எண்ணெய் வளத்தை செவ்ரான், எக்சோன், மற்றும் ஆக்சிடென்டல் (Chevron, Exxon and Occidental) கம்பெனிகளுக்கு மாற்றித் தருவதும் ஜனநாயக முறையில் நடைபெறக்கூடிய காரியமல்ல. ஆகவே, வாஷிங்டன் திட்டமிட்டுள்ள கேந்திர நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஈராக்கில் புதிய காலணியாதிக்க பொம்மை சர்வாதிகாரம் தேவைப்படுகிறது. இந்தப் பொம்மை சர்வாதிகாரத்தை பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகள் பாதுகாப்புக் கொடுத்து அதனைத் தாங்கி நிற்கும். அத்துடன், இத்தகைய அரசை திணிக்கும்போது இந்தப் பிராந்தியம் முழுவதிலும் உருவாகின்ற புரட்சிகரமான கொந்தளிப்புகளை அமெரிக்கா நேருக்கு நேர் சந்திக்க வேண்டியதாகவும் இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved