:
ஈராக்
Chirac and Schröder oppose Bush's war ultimatum
புஷ்ஷின் போர் மீதான இறுதிக்கேட்டை சிராக்கும் ஷ்ரோடரும் எதிர்க்கின்றனர்
By Peter Schwarz
19 March 2003
Back
to screen version
ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக் மீதான போர் இறுதிக்கேட்டை எதிர்த்து பாரிசும் பேர்லினும் அறிக்கை
விட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஐரோப்பிய நேரடிப்படி காலை 2.00 மணிக்கு புஷ்
போர் பிரகடனத்தை வெளியிட்டு சில மணி நேரத்திற்கு பின்னர், பிரான்சின் ஜனாதிபதி, போருக்குச் செல்வது என செய்திருக்கும்
முடிவானது சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக மீறுவது ஆகும் என கண்டித்து ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டது.
''ஐ.நா. பாதுகாப்பு சபையை கலந்துகொள்ளாமல் ஈராக்கிற்கு இறுதி காலக்கேடு
வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒருதலைபட்சமான முடிவு, பாதுகாப்பு சபையின் கட்டளையையும், மற்றும் சர்வதேச
சமுதாயத்தின் முடிவையும் மீறுவதாக அமைந்திருக்கிறது. ஐ.நா தீர்மானம் 1441 இன் படி ஆயுத சோதனைகள் தொடர்ந்து
நடத்தப்படவேண்டும் என்பதே ஐ.நா. பாதுகாப்பு சபையையினதும் மற்றும் சர்வதேச சமுதாயத்தின் விருப்பம்'' என்று
ஜனாதிபதி மாளிகை அறிக்கை குறிப்பிடுகிறது.
''ஐ.நா.பாதுகாப்பு சபை மட்டுமே படை பலத்தை பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான
அனுமதி வழங்க முடியும்'' என்று அறிக்கை குறிப்பிட்டதுடன், சர்வதேச சட்டத்தை மதிக்கும் அனைவரது பொறுப்புணர்வு செயல்பாட்டிற்கும்
அழைப்பு விடுவதுடன் மற்றும் ஐ.நா.வின் சட்டபூர்வமான நடைமுறைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு சட்டத்தின் வலிமைக்கு மேலே
பலாத்காரத்தை பயன்படுத்த யார் முயன்றாலும் அவர் மிகப்பயங்கரமான பொறுப்பை ஏற்றுக்கொள்பவராக ஆகிறார்''
என்று ஜனாதிபதி மாளிகை அறிக்கை குறிப்பிடுகிறது.
சில மணி நேரத்திற்கு பின்னர் தொலைக்காட்சிக்கு வழங்கிய உரையில், ஜேர்மன் பிரதமர்
ஹெகாட் ஷ்ரோடர், பிரெஞ்சு ஜனாதிபதியின் உணர்வுகளை பிரதிபலித்து, ஆனால் நிதானமான வார்த்தைகளில் கருத்து தெரிவித்தார்.
''போரின் விழிம்பில் உலகம் உள்ளது. அப்போதும், இப்போதும் உள்ள எனது கேள்வி ஈராக்கின்
சர்வாதிகாரி மூலம் உருவாகியுள்ள அச்சுறுத்தல் போரை திணிக்கிற அளவிற்கு கடுமையானதா என்பது தான். இந்தப் போரினால்
பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் மடிவார்கள். இந்த கேள்விக்கு நான் சொன்ன
பதில், இப்போதும் சொல்லுகின்ற பதில் இல்லை என்பதுதான்'' என்று ஷ்ரோடர் குறிப்பிட்டார்.
ஷ்ரோடர் தொடர்ந்து உரையாற்றும்போது ஐ.நாடுகளின் ஆயுதக்குறைப்பு நடைமுறைகளை
இரத்து செய்வதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்று குறிப்பிட்டார். இந்த பிரச்சனையில், தனது கருத்தும், மிகப்பெரும்பாலான
ஜேர்மனிய மக்களது கருத்தும், மற்றும் பாதுகாப்பு சபையின் மிகப்பெரும்பாலோரது கருத்தும் மற்றும் உலக மக்களது
கருத்தும் ஒன்றுதான் என ஷ்ரோடர் விளக்கினார்.
புஷ் போர் பிரகடனத்திற்கு, மொஸ்கோ பெய்ஜிங், ரொரன்டோ, ஜகார்ட்டா மற்றும்
பல நாட்டு தலைநகர்களில் இருந்து இதே வகையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஈராக்குடன் நடத்தப்படும்
போர் சட்டபூர்வமானதா என்பது குறித்து அவர்கள் அனைவரும் கவலை தெரிவித்தனர். பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் தவிர
ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் போலந்து ஆகிய ஒரு சில நாடுகள் தான் ஆதரவு தெரிவித்துள்னர். ஆனால், அந்த
நாடுகளிலும் பெரும்பான்மையான மக்கள் போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில், பழைமைவாத எதிர்க்கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும்
(CDU) மற்றும் கிறிஸ்தவ
சமூக யூனியனும் (CSU)
புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களது, பாராளுமன்ற குழு நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானத்தில் சதாம்
ஹூசேனுக்கு புஷ் கொடுத்திருக்கும், 48 மணிநேர இறுதிக் கெடுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ ஜனநாயக
கட்சியின் தலைவர் ஆஞ்சலா மெர்க்கல் இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இந்த பழைமைவாத யூனியன் குழுவினர் ஈராக்கிற்கு
விதிக்கப்பட்டுள்ள இறுதிக்காலக் கெடுவினால் ஏற்படுகின்ற விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று விளக்கினார்.
பழைய உலக ஒழுங்கமைப்பின் முடிவு
பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசுகள் புஷ் விடுத்துள்ள போர் பிரகடனத்திற்கு விரைவாகவும்
மிகக்கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருப்பது சில விமர்சகர்களுக்கு வியப்பாகத் தோன்றுகிறது. வாஷிங்டன் உடன் நிலவுகின்ற
அரசியல் இடைவெளியை பாரிசும், பேர்லினும் இல்லாதொழிப்பதற்கு முயலும் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால்,
சந்தேகத்திற்கு இடமில்லாமல் வாஷிங்டன் போர் பிரகடனத்தை வெளியிட்டுவிட்டது.
ஈராக்கின் உடனடி நிலவரம் தொடர்பாக தற்போது, கருத்து வேறுபாடுகள் கடுமையாகி
உள்ளன.
ஜேர்மன் அதிபர் ஷ்ரோடர் தான் வெளிப்படையாக சில ஆட்சேபனைகளை தெரிவித்து
வந்தாலும், ஒரு கருத்தை திரும்ப, திரும்ப தெளிவாக கூறிக்கொண்டே வந்தார். அதாவது அமெரிக்காவின் போர் முயற்சிகளுக்கு
எந்த வகையிலும் இடையூறு செய்கின்ற முறையில் தாம் நடந்துகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க இராணுவமும்
விமானப்படையும் ஜேர்மனியிலுள்ள தங்கள் தளங்களையும், மற்றும் ஜேர்மனியின் விமான வழித்தடத்தையும் எந்தவிதமான
கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், சில முன்னணி சட்ட நிபுணர்கள்
இந்த அனுமதி தொடர்பாக அது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு ஏற்புடையதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
ஜேர்மனியின் இரசாயன ஆயுதங்களை கண்டுபிடிக்கும் வாகனங்கள் குவைத்தில் பணியில் ஈடுபட்டுள்ளன.
மற்றும், துருக்கியின் விண்வெளியில் அவாக்ஸ் கண்காணிப்பு விமானங்கள் சுற்றிக்கொண்டுள்ளன. இவற்றில் பணியாற்றி வரும் ஜேர்மன்
இராணுவத்தினர் இந்தப் போரில் சம்மந்தப்படலாம் என்பதற்கான ஆபத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நேட்டோவின் கட்டமைப்பிற்குள்
ஈராக் ''மறுசீரமைப்பு'' பணிகள் மேற்க்கொள்ளப்பட்டால், அதில் ஜேர்மன் அரசாங்கம் கலந்துகொள்ளும் என்ற
விருப்பமும் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.
பிரெஞ்சு அரசாங்கம் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது. ஈராக்கில் தனக்கு
பிரச்சனைகள் எதுவும் வருமானால், அமெரிக்கா, பிரான்சின் ஆதரவை நம்பி செயல்படலாம் என பிரெஞ்சு அரசாங்கம்
உறுதியளித்துள்ளது. அண்மையில், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் டொமினிக் டு வில்பன் (Dominique
de Villepin) வெளியிட்டுள்ள ஒரு கருத்தில், ''இப்போது, நிலவுகின்ற
நெருக்கடியை பயன்படுத்தி எதிர்காலத்தில் சர்வதேச சமுதாயத்திற்குள் பிளவுகளை ஆழப்படுத்துகிற வகையில் பிரான்ஸ் வாதங்களை
எழுப்பி செயல்படாது. அப்படி ஒரு நிலைமை எதிர்காலத்தில் தோன்றுமானால், கருத்து வேறுபாடுகளை கைவிட்டுவிட்டு
சமரசம் செய்துகொண்டு தீர்வு காண்பதற்காக அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்போம்'' என்று விளக்கினார்.
ஈராக்கை சீரமைப்பதற்கு அப்பாலும் பல பிரச்சனைகள் உள்ளன என்பதை பிரெஞ்சு ஜனாதிபதி
வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவுபடுத்துகிறது. பாக்தாத் மீது ஒரு குண்டு விழும் முன்னரே அமெரிக்காவின் அந்த காலக்கேடு
முதல் பலியை வாங்கிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பெரிய வல்லரசுகளுக்கிடையே ஒப்பிடத்தக்களவில் ஒரு
நிலையான உறவுகளை உருவாக்கிய சர்வதேச ஒழுங்குமுறை சின்னாபின்னமாகிவிட்டது.
பிரான்சின் அறிக்கை மிகச் சுருக்கமானதாக இருந்தாலும், அதன் தாக்கங்கள் மிகப் பரவலானவை.
இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டம், சர்வதேச விதிமுறைகள் நெறிமுறைகள்
பெரும்பாலும் அமெரிக்காவின் கட்டளைப்படி நிறைவேற்றப்பட்டவை. இவை அமெரிக்காவினாலேயே மதிக்கப்படவில்லை
என்றால் எதிர்காலத்தில் அரசுகளுடையே உருவாகும் தகராறுகளை தீர்த்து வைப்பது எப்படி? வர்த்தகம் தொடர்பான
தகராறுகள், அரசியல் கருத்து வேறுபாடுகள் அல்லது இப்போதுள்ள நிலவரப்படி போர் மற்றும் சமாதானம் பற்றிய
முடிவிற்கு ஒரே அடிப்படை இனி வல்லவன் வகுத்ததே வழி என்று ஆகிவிடும்.
இந்த நிலை ஈராக் போன்ற நாடுகளோடு நடைபெறும் மோதல்களுக்கு மட்டுமல்லாது,
பெரிய வல்லரசுகளுக்கிடையே தோன்றும் மோதல்களுக்கும் பொருந்தும். பாரிய வல்லரசுகளுக்கிடையிலான
மோதிக்கொள்ளும் நலன்கள் இரண்டு உலகப்போர்கள் வெடித்துக் கிளம்புவதற்கு காரணமாக இருந்த கடந்த நூற்றாண்டின்
முதல் அரைப்பகுதியில் உள்ள நிலைமைக்கு திரும்புவதுபோன்ற அச்சுறுத்தலுக்கு உலகம் உள்ளாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக, ஐரோப்பிய பத்திரிகை விமர்சனங்கள் இதே கருத்தை வலியுறுத்தி
வருகின்றன. புஷ் நிர்வாகம் மீட்க முடியாத அளவில் பழைய உலக அமைப்புக்களை அழித்துவிட்டது என்ற உணர்வு
படிப்படியாக ஆழமாக வேரூன்றி வருகிறது. உதாரணமாக,
Frankfurter Rundschau பத்திரிகை
அண்மையில் செய்த ஒரு விமர்சனத்தில், ''வாஷிங்டன், ஐ.நாடுகள் சபை, நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை
மோசமாக நடத்துகிறது. மற்றும் ஈராக் மீது படையெடுப்பதால் ஏற்படுகின்ற சிக்கலான விளைவுகள் பற்றி கவலைப்படாமல்
கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகின்றது. இவை புஷ் ஜூனியர் உலகிற்கு தருகின்ற புதிய உலக ஒழுங்கமைப்பை எடுத்துக்காட்டுவதாக
அமைந்திருக்கின்றது'' என்று எழுதியிருக்கின்றது.
சமூக ஜனநாயக கட்சிக்கும் பசுமைக் கட்சிக்கும் நெருக்கமான அந்தப் பத்திரிகை, அரசாங்க
வட்டாரங்களின் சிந்தனைகளை எதிரொலித்து ''ஐரோப்பிய ஒன்றியம் உலக வல்லரசாக வளரவேண்டும்'' என்று அந்தப்
பத்திரிக்கை தனது கட்டுரையை முடித்திருக்கிறது. |