World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The twenty lies of George W. Bush

ஜோர்ஜ் W.புஷ் கூறிய 20 பொய்கள்

By Patrick Martin
20 March 2003

Back to screen version

திங்கள் இரவு 15 நிமிடங்கள் ஜனாதிபதி புஷ், 48 மணி நேரக் கெடு ஈராக்கிற்கு விதித்து உரையாற்றினார். உண்மைகளைத் திரித்துக் கூறுவது, அறைகுறை உண்மைகளைக் கூறுவது போன்ற வழக்கமான பாணிக்கு அப்பால் சென்று அச்ச உணர்விற்கும், பிற்போக்குத்தனத்திற்கும் இடம் கொடுத்து எளிதில் மறுக்கத்தக்க பல அப்பட்டமான பொய்களைக் கூறியுள்ளார்.

மிகப்பெரும் அளவிற்கு பொய் உரைகளை அவர் கூறியுள்ளது இரண்டு அரசியல் முடிவுகளைக் கருத்துரைக்கின்றன: ஜனநாயகத்தையும், மக்கள் கருத்தையும் அப்பட்டமாக அலட்சியப்படுத்தி புஷ் நிர்வாகம் ஈராக் மீதான போருக்கு போய்க் கொண்டிருக்கிறது. மற்றும் அதன் போர்ப் பிரச்சாரம் பொய்களை எதிர்க்காது மேலும் அதே பொய்களைத் திரும்ப திரும்ப இடையறாது வலியுறுத்திக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஊடகங்களையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

விரிவாக இல்லாவிட்டாலும், மிக முக்கியமான பொய்களை வரிசைப்படுத்தி பொதுவான அறிக்கைகளுடன் புஷ்ஷின் மாறுபடுகின்ற கருத்துக்களை வரிசைப்படுத்துவது பயன்மிக்கது. கீழேதரப்பட்டுள்ள புஷ்ஷின் தவறான அறிக்கைகள் எல்லாம் `இணைய` பதிவேடுகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை.

பொய் 1: "எனது குடிமக்களே, ஈராக் நிகழ்ச்சிகள் முடிவு எடுக்க வேண்டிய இறுதி நாட்களை தற்போது நெருங்கிவிட்டன."

நீண்ட நாட்களுக்கு முன்னரே ஈராக்குடன் போர் தொடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. இதற்கு இடைப்பட்ட காலம், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தாக்குதல் நடத்துவதற்கான அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சிக்காகச் செலவிடப்பட்டது. பத்திரிகைச் செய்திகளின்படி, மிக அண்மையில் மார்ச் 16-அன்று, பால்டிமோர் சன் பத்திரிகைத் தகவலின்படி, புஷ் தனது ஜனாதிபதி பதவி ஏற்பிற்குப்பின் கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் ஒன்றில், உலக வர்த்தக மையக் கட்டிடம் மற்றும் பென்டகன், மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு பல மாதங்களுக்கு முன்னர், சதாம் ஹூசேனை பதவியிலிருந்து தூக்கி எறிவதற்கான தனது உறுதிப்பாட்டை புஷ் வெளியிட்டார். அந்த நோக்கத்திற்காக அமெரிக்க தரைப்படைகளை அனுப்புவதற்கான தனது விருப்பத்தையும் வெளியிட்டார். இதற்கான தகுந்த சாக்குப்போக்கு தான் தேவைப்பட்டது. அதை 2001 செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள் வழங்கின.

பொய் 2: "போர் இல்லாமல், ஈராக் ஆட்சி ஆயுதக் குறைப்புச் செய்யவேண்டும் என்ற முயற்சியில் அமெரிக்காவும், இதர நாடுகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பொறுமையாகவும், கெளரவமாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன."

அமெரிக்கா தலைமையில் ஐ.நா. நிர்வாகம் ஈராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை அறிவித்தது. அத்துடன், ''போர் விமானம் பறக்காத மண்டலம்'' மற்றும் ஆத்திரமூட்டும் ஆயுதச் சோதனைகளையும் மேற்கொண்டார்கள். இது மிகக் கொடூரமான ஒடுக்குமுறையாகும். திட்டமிட்டு உணவு, மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை ஈராக்கிற்கு - ஈராக் மக்களுக்கு வழங்குவதைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஈராக் மக்கள் மரணமாயினர். அவர்களில் பாதிப்பேர் குழந்தைகள் ஆவர். எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் தலைமை அதிகாரிகளாக பணியாற்றி வந்த இரண்டு ஐ.நா. அதிகாரிகள், பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் ஈராக்கில் ஏற்பட்ட நிலவரம் குறித்து கண்டனம் தெரிவித்து பதவி விலகினர். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களை முன்னணியாக சிஐஏ பயன்படுத்தியதுடன், UNSCOM அமைப்பில் சிஐஏ ஏஜெண்டுகள் ஊடுருவினர். UNSCOM தான் ஆரம்ப ஆயுத சோதனை அமைப்பாகும். ஈராக்கின் தலைமை அதிகாரிகளை வேவு பார்ப்பதும், சதாம் ஹூசேனைக் கொலை செய்வதற்குக் குறி வைப்பதும் தான் சிஐஏ இன் நோக்கம்.

பொய் 3: "ஈராக் ஆட்சி, இராஜதந்திர நடவடிக்கைகளை முகமூடியாகக் கொண்டு, காலக்கெடுவையும், அனுகூலங்களையும் பெற்றது. முழு ஆயுதக் குறைப்புச் செய்யப்பட வேண்டுமென்ற பாதுகாப்பு சபைத் தீர்மானங்களை தொடர்ந்து ஒரே சீராக மீறி நடந்திருக்கிறது....''

1991ல் வளைகுடாப்போர் முடிவிற்குப்பின், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை ஈராக், எப்போதும் ''மீறவில்லை.'' ஐ.நா. அமைப்பின் கட்டளைகளுக்கு பொதுவாக ஈராக் ஒத்துழைத்து வந்ததுடன், அடிக்கடி கண்டனமும் தெரிவித்தது, நிபந்தனைகளையும் ஈராக் விதித்தது, ஏனெனில் பல தீர்மானங்கள் ஈராக் இறையாண்மையை மீறுவதாக அமைந்திருந்தன. 1991 முதல் 1998 வரை, ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் மேற்பார்வையில் மிகப்பெரும்பாலான இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களும், அவற்றைச் செலுத்தும் சாதனங்களும், அழிக்கப்பட்டன. (ஈரான்- ஈராக் போரின்போது, அமெரிக்க உதவியுடன் ஈராக் சேகரித்த ஆயுதங்கள் அவை) புதிய ஆயுதங்களை தயாரிப்பதற்கான வசதிகளையும் ஐ.நா. ஆய்வாளர்கள் மேற்பார்வையில் அழித்துவிட்டார்கள்.

பொய் 4: "ஈராக் ஆட்சியிடமிருந்து ஆயுதக் குறைப்பிற்கு சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சிகள் அடிக்கடி தோல்வியுற்றன. ஏனெனில் நாம் சமாதானம் விரும்பும் மனிதனோடு அந்த முயற்சிகளைச் செய்யவில்லை.''

மார்ச் 16ம் திகதியிட்ட வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் 1991 முதல் 1998 வரை, நடைபெற்ற ஐ.நா. ஆயுதச் சோதனைகள் பற்றிய விவரங்கள் வருமாறு:- தடை செய்யப்பட்ட நடுத்தரத் தொலைவு ஏவுகணைகள் 819 இல் 817 ஐ ஈராக் அழித்துவிட்டது. அத்துடன், 14 ஏவும் கருவிகள், 9 டிரெய்லர்கள், 56 நிரந்தர ஏவுகணை ஏவும் தளங்களையும் ஈராக் அழித்துவிட்டது. 75 இல், 73 இரசாயன அல்லது உயிரியல் போர்க் கருவிகளையும், 163 சாதாரண போர் வெடிப்பு குண்டுகளையும் ஈராக் அழித்துவிட்டது. 88,000 நிரப்பப்பட்ட மற்றும் நிரப்பப்படாத இரசாயன ஆயுதங்களையும், 600 தொன் இரசாயன ஆயுதங்களையும் இரசாயனப் பொருட்களையும், 4000 தொன் தடைசெய்யப்பட்ட இரசாயனப் பொருட்களையும் (விஷவாயு தயாரிக்கும் மூலப்பொருள்) இத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் முக்கிய 980 கருவிகளையும் ஐ.நா. ஆய்வாளர்கள் மேற்பார்வையில் ஈராக் அழித்துவிட்டது.

பொய் 5: "இதுவரை இல்லாத மிகப் பயங்கரமான ஆயுதங்களை ஈராக் ஆட்சி வைத்திருக்கிறது. தொடர்ந்து மறைத்து வருகிறது."

இதற்கு முன்னர், சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையிலேயே சிஐஏ அதிகாரிகள், அரசு நிர்வாக அதிகாரிகள் போக்கு குறித்து கவலை தெரிவித்தது பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ''நெடுந்தொலைவு இலக்கு ராக்கெட்டுகள், அணு ஆயுதங்கள் அல்லது இரசாயன, மரபியல் ஆயுதங்களுக்கு ஐ.நா. விதித்துள்ள தடைகளை ஈராக் மீறி வருகிறதென்று, அமெரிக்க மக்களையும், வெளிநாட்டு அரசுகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக, அந்த விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் புலனாய்வுத் தகவல்களை மிகைப்படுத்தி நிர்வாக அதிகாரிகள் கூறி வருகிறார்களா? என்பது குறித்து சிஐஏ அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.'' அந்தக் கட்டுரை, ஒரு மூத்த புலனாய்வு ஆய்வாளர் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளது. ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் ஆயுதங்கள் குவிப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏனெனில், ''அத்தகைய ஆயுதக் குவிப்பு அதிகம் இருக்காமலிருக்கலாம்'' என அந்த ஆய்வாளர் கூறினார்.

ஐ.நா. அங்கீகாரம் இல்லாமலேயே போருக்குச் செல்வதென, பிளேயர் அரசு முடிவு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் திங்களன்று பிளேயரின் அரசிலிருந்து பதவி விலகிய, பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரொபின் குக், ''நாம் பொதுவாகப் புரிந்துகொள்ளும் பொருளில் ஈராக்கிடம் மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள் எதுவும் இல்லை'' என்று அறிவித்தார். எண்பதுகளில் தன் வசம் இருந்த ஆயுதங்களில் சிலவற்றை ஈராக் மறைத்துவிட்டிருந்தால் கூட, புஷ் சித்தரித்துக்காட்டுவதுபோல் பயங்கரத்தன்மை கொண்டவையாக அவை இருக்க முடியாது. அவை பழைய, பயனற்ற ஆயுதங்களாகவே இருக்கும். ''இதுவரை இல்லாத பயங்கரமான ஆயுதங்கள்'' அமெரிக்கா ஈராக் மீது ஏவிவிட்டுள்ள ஆயுதங்கள்: குரூயிஸ் ஏவுகணைகள், ஓசை எழுப்பாத குண்டுகள், 10,000 இறாத்தல் "daisy-cutter" குண்டுகள், புளோரிடாவில் அண்மையில் சோதிக்கப்பட்ட 20,000 இறாத்தல் MOAB குண்டுகள் மேலும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதில்லை என்று அறிவிக்க அமெரிக்கா வெளிப்படையாக மறுத்துவிட்டது.

பொய் 6: "அல்-கொய்தா - தீவிரவாதிகள் உட்பட பயங்கரவாதிகளுக்கு ஈராக் உதவுகிறது, பயிற்சி தருகிறது, மற்றும் அடைக்கலம் தருகிறது."

இதை எவரும் நம்பவில்லை. அமெரிக்க அரசில் உள்ளவர்கள் கூட ஈராக்கின் மதச் சார்பற்ற தேசிய பாத் ஆட்சிக்கும், அல்கொய்தாவிற்கும் தொடர்பு இருக்கும் என்று நம்பவில்லை. இரு அமைப்புகளுமே, பல தலைமுறைகளாகக் கடுமையாக பகைமை பாராட்டி வருபவை. செப்டம்பர் 11 தாக்குதல்களில் சதாம் ஹூசைனைத் தொடர்புபடுத்துவதற்கான தீவிர முயற்சிதான், அல்-கொய்தா - ஈராக் தொடர்பு பற்றிய பேச்சுக்களாகும்.

இஸ்லாமிய அடிப்படைவாத அடிப்படையிலான, பயங்கரவாதத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் ஊட்டி வளர்த்தது என்ற பொறுப்பை மூடி மறைப்பதற்காகவும் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தற்போது அல் கொய்தா அமைப்பில் இடம்பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும், சிஐஏ ஆல் அணிதிரட்டப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு, இயக்கிவிடப்பட்டவர்கள்தான். முஸ்லிம் நாடுகளில், இடதுசாரி இயக்கங்களுக்கு எதிரான ஒரு கருவியாக இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளைப் பயன்படுத்தவேண்டுமென்ற சிஐஏ இன் நீண்ட காலக் கொள்கையின் அடிப்படையில்தான், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை சிஐஏ ஊக்குவித்தது. ஐம்பதுகளிலிருந்து இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையிட்ட நேரத்திலும், அதற்கு முன்னரும் இந்தக் கொள்கையை சிஐஏ கடைப்பிடித்து வந்தது. 1989ல் சோவியத் தலையீடு ஆப்கானிஸ்தானில் முடிவிற்கு வந்தது. 1990களில் வாஷிங்டனுக்கு எதிராகத் திரும்புவதற்கு முன்னர், ஒசாமா பின் லேடனும் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆதரவளித்த முஜாஹைதீன் படைகளின் ஒரு பகுதிதான்.

பொய் 7: "இந்த அச்சுறுத்தலைக் கவனிக்க ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றவே அமெரிக்கா முயன்றது. ஏனெனில் நாங்கள் சமாதான முறையில் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க விரும்பினோம்."

புஷ் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது ஏனெனில், இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. அங்கீகாரத்தை அது விரும்பியது, போருக்குப் பிந்திய நடவடிக்கைகளுக்காக ஐ.நா. உறுப்பு நாடுகள் நிதி ஒதுக்கீடு செய்வதை விரும்பியது. 1991 பாரசீக வளைகுடாப் போர் நேரத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வழியில் நிதிஒத்துழைப்புக்காக சென்றது. புஷ்ஷின் ஆலோசகர்களிலேயே போர் வெறி அதிகம் உள்ளவர்கள் என்று கருதப்படும் பாதுகாப்புத்துறை செயலாளர் டொனால்ட் ட்ரம்ஸ் பீல்டும், துணைக் ஜனாதிபதி செனியும் ஆரம்பத்தில் ஐ.நா.விற்கு அமெரிக்கா செல்வதை எதிர்த்தனர். இராஜதந்திர நடவடிக்கைகளால், போர் முயற்சியின் வேகம் குறைந்துவிடக்கூடாது என அவர்கள் விரும்பினர். போருக்கு ஐ.நா. ஒப்புதல் கிடைக்கும் காலம் வரை பாரசீக வளைகுடாவில் அமெரிக்கப் படைகள் திரட்டப்படலாம். அவ்வளவு அவகாசம் உள்ளது என்று அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பெளல் சமாதானம் கூறிய பின்னர் தான், அவர்கள் இருவரும் அமெரிக்கா ஐ.நா. செல்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

பொய் 8: ''இந்த அரசுகள் (பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை) ஆபத்து பற்றிய நமது மதிப்பீட்டை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அதைச் சந்திக்கும் நமது உறுதிப்பாட்டை அவை ஏற்றுக்கொள்ளவில்லை.''

இந்தக் கூற்றை பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் இதர நாடுகள் ஈராக் மீது இராணுவ நடவடிக்கையை எதிர்த்து வெளியிட்ட அறிக்கைகள் பொய்யாக்குகின்றன. ஈராக்கிடமிருந்து உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்பதை ஒவ்வொரு அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் தனது எதிரிகளை கோழைகள் என்று புஷ் வர்ணிக்கிறார். சதாம் ஹூசைனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் அஞ்சுவதாகக் கூறுகிறார். இந்த நாடுகள் உண்மையிலேயே அமெரிக்காவைக் கண்டுதான் அஞ்சுகின்றனவே தவிர ஈராக்கைக் கண்டு பயப்படவில்லை. ஏற்கனவே போர் புரிவதற்கு வாஷிங்டன் முடிவு செய்ததற்கு ஐ.நா. ஆதரவை மறுத்ததன் மூலம், புஷ் நிர்வாகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். இதில் இதுவரை அந்நாடுகள் உறுதியாக நிற்கின்றன.

பொய் 9: "உலக அமைதிக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகச் செயல்படுவதற்கு பல நாடுகள், உறுதியும், திராணியும் கொண்டுள்ள மற்றும், உலகின் நியாயமான கோரிக்கைகளைச் செயல்படுத்த தற்போது விரிவான கூட்டணி உருவாகி வருகிறது.''

மூன்று நாடுகள் மட்டுமே, போருக்கு தங்களது இராணுவப் படைகளைத் தந்திருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து 2,50,000, பிரிட்டனிலிருந்து 40,000 மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 2000 இராணுவத்தினர் போருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த "விரிவான கூட்டணியின்" இதர உறுப்பினர்கள் யாரென்றால், அச்சுறுத்தப்பட்டு அல்லது இலஞ்சம் கொடுக்கப்பட்ட நாடுகள். அத்தகைய நாடுகள் அமெரிக்க போர் விமானங்கள் தங்கள் ஆகாய பிராந்தியத்தில் பறந்து ஈராக் மீது குண்டு வீச அனுமதித்துள்ளன. படைகள் தளம் அமைக்க, கப்பல்கள் தங்க, தொழில்நுட்ப உதவிகள் மற்றும் இதர உதவிகள் தர இணங்கியுள்ளன. இந்த நாடுகள் எதுவும் போரில் கலந்துகொள்ளாது. இத்தகைய நாடுகள் தங்களது நாட்டு மக்களது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பொய் 10: "ஐ.நா. பாதுகாப்பு சபையில் தனது பொறுப்புகளுக்கு ஏற்பச் செயல்படவில்லை. எனவே, நாங்கள் எங்களது பொறுப்புணர்விற்கு ஏற்பச் செயல்படுகிறோம்.''

ஐ.நா. அமைப்பின் பொறுப்பு என்பது அமெரிக்காவின் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதற்கு அப்படியே ஒப்புதல் தருவதுதான் என்று புஷ் விளக்கம் தருகிறார். ஐ.நா.வைப் பொறுத்தவரை, அமெரிக்காவிற்குச் சில திட்டவட்டமான கடமைகள் உண்டு. உடனடி தற்காப்பிற்கு என்று அவசரம் ஏற்பட்டால் தவிர பாதுகாப்பு சபையில் ஒப்புதல் இல்லாமல், அமெரிக்கா போருக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஐ.நா. சாசனத்தின் 42-வது பிரிவு பாதுகாப்பு சபை தீர்மானம் 1441 எவ்வாறு செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1441-வது தீர்மானம் போன்றவற்றை எப்படிச் செயல்படுத்துவது என்பது பாதுகாப்பு சபை தீர்மானிக்க வேண்டும். அதை அமெரிக்காவோ அல்லது பிரிட்டனோ முடிவு செய்துவிட முடியாது. அதற்கு தனது ''விளக்கத்தை'' புகுத்த அமெரிக்கா முயல்வது, அதுவும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் முடிவு இல்லாமல் செயல்படுவது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும்.

பொய் 11: "நாங்கள் போரை தொடங்க வேண்டியுள்ளதென்றால் அது உங்களது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற சட்ட விரோதமான மனிதர்களுக்கு எதிராகத்தானே தவிர, உங்களுக்கு எதிராக அல்ல."

அமெரிக்காவின் ஈராக் தொடர்பான இராணுவ உத்தி விரிவான அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது, அதன்படி ஈராக் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி நிலை குலைய செய்யும் வகையில், மிக பயங்கரமாக குண்டு வீச திட்டமிட்டிருக்கிறார்கள். ஈராக் ஆயுதப்படைகள் சரணடையும் வகையில் அந்த தாக்குதல் அமையும். ''விமானப் படை வரலாற்றிலேயே இதுவரை எந்த நாட்டிலும் நடைபெற்றிறாத அளவிற்கு மிக பயங்கரமான தாக்குதலை போர் ஆரம்பித்த முதல் இரவில் நடத்துவதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும்'' என்று ஒரு பத்திரிகையில் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஈராக் மக்கள் பலியாவார்கள், அதைவிட அதிகமான மக்கள் நீண்ட கால அடிப்படையில் பாதிக்கப்படுவார்கள்.

பொய் 12: "எங்களது கூட்டணி பதவி ஏற்கும்போது, உங்களுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் மருந்தை வழங்குவோம்.''

இது குறிப்பாக, அப்பட்டமான திமிர் பேச்சு ஆகும். 48 மணிநேர, கெடுவை புஷ் வெளியிட்டவுடன் அதன் எல்லா ஐ.நா. மனித நேய உதவி ஊழியர்களும் வெளியேறியிருக்கின்றனர். ஈராக்கில், 60 சதவிகித மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கின்ற எண்ணெய்க்கு உணவு என்னும் திட்டமும் மூடப்பட்டுவிட்டது. கடந்த 12 ஆண்டுகளாக ஈராக் மக்களுக்கு தேவைப்படும் மருந்துகளை அவர்களுக்கு கிடைக்காமல் திட்டமிட்டு அமெரிக்கா தடுத்து வருகிறது. அடிப்படை உயிர்காப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளை (Antibiotics and syringes) இரண்டு வகை பயன்பாட்டு பொருட்கள் என கூறி, இவற்றால் உயிரியல் போருக்கான விஷப் பொருட்களை தயாரித்துவிட முடியும் என்ற காரணத்தை காட்டி தடுக்கப்படுகின்றன.

பொய் 13: "பயங்கரவாத அமைப்பை சிதைத்துவிடுவோம், செல்வ வளமிக்க, சுதந்திர புதிய ஈராக்கை நிர்மாணிக்க உங்களுக்கு உதவுவோம்."

புஷ் நிர்வாகத்தின் நோக்கம் பக்தாத்தில் ஒரு அமெரிக்க பொம்மை ஆட்சியை நிறுவுவதாகும். ஆரம்பத்தில் இது அமெரிக்காவின் இராணுவ சர்வாதிகார உருவம் கொண்டதாக அமையும். உலகம் முழுவதிலும் அமெரிக்கா தான் பல சர்வாதிகாரிகளை வளர்த்துவிட்ட முன்னணி நாடு என்பதில் மிகைப்பட கூறுவதற்கு எதுவும் இல்லை. அதுதான் உண்மை. சிலி நாட்டில் பினோசே, இந்தோனேசியாவில் சுகார்தோவில் இருந்து சதாம் ஹூசைன் வரை வளர்த்துவிட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சதாம் ஹூசைன் CIA உருவாக்கிய சதிச் செயலில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் நபராக பயிற்றுவிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டு, ஈராக்கின் இடதுசாரி தேசியவாத ஜனாதிபதி காசிமை, கொலை செய்வதற்கு சிஐஏ ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் சதாம் ஹூசைன் தாக்குதல் நடத்துபவராக பயிற்றுவிக்கப்பட்டவர்.

மார்ச்-14-ந்தேதி, லொஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறையின் இரகசிய அறிக்கை ஒன்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. போர் அழிவிற்கு பின் ஈராக்கில் ஜனநாயக முறையிலான ஆட்சி அமைவதற்கு சாத்தியம் இல்லை. அதுமட்டுமல்ல மற்றும் அமெரிக்க நலன்களின் அடித்தளத்தில் அத்தகைய ஜனநாயக ஆட்சி உகந்ததும் அல்ல; ஏனெனில் இதன் பின்னர் ஈராக்கில் "அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகள் மிக ஆழமாக அதிகரிக்கும், சிறிது காலத்திற்கு பின் தேர்தல் நடத்தினால் அமெரிக்காவிற்கு எதிரான இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தும் ஆட்சிதான் அங்கு பதவிக்கு வரும்" என்று, அமெரிக்க வெளியுறவுத்துறை இரகசிய அறிக்கை தெளிவுபடுத்துகின்றது.

பொய் 14: ''`சதாம் ஹூசேன் மோதுவதற்கு தயாரானால், போரை தவிர்க்க எல்லா வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதை அமெரிக்க மக்கள் அறிய முடியும், மற்றும் அதை வெற்றிகொள்வதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.''

புஷ்ஷின் இந்த வாசகங்களில் பொய்யும், கொடூரமான உண்மையும் சேர்ந்திருக்கிறது. புஷ் நிர்வாகம் போர் ஆரம்பமாவதை உத்திரவாதம் செய்வதற்கான ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்திருக்கிறது. ஐ.நா. ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பித்ததை தனது எதிர்ப்பு உணர்வு வெளிப்படும் வகையில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. இராஜதந்திரரீதியான தீர்வு காணமுடியும் என கூறுகின்ற நாடுகள் மீது புஷ் நிர்வாகம் விஷத்தை கக்கி வருகிறது. இந்தப் போரில் வெற்றி பெறுவதற்காக, புஷ் நிர்வாகம் அணு ஆயுதங்கள் உட்பட "ஒவ்வொரு நடவடிக்கையையும்" எடுக்க தயாராக இருக்கிறது என்பது உண்மை.

பொய் 15: ''போரில் எதுவும் நிச்சயம் அல்ல, தியாகங்கள் தான் நிச்சயம், அது ஒன்றுதான் போரில் விதிவிலக்கு.''

இந்தப் போரில் ஈராக் மக்கள் மிகப்பெரும் அளவிற்கு தியாகம் செய்யவேண்டி இருக்கும். அத்துடன் அமெரிக்க மக்களும் தங்களது இரத்தத்தையும், தங்களது பொருளாதார நலனை பறிகொடுத்து தியாகம் செய்யவேண்டியிருக்கும். புஷ்ஷை உண்மையாக சுற்றியுள்ள அமெரிக்க சமுதாயத்தின் மேல்மட்டத்திலுள்ள மிகப்பெரும் செல்வந்தர்கள் எந்தவித தியாகமும் செய்யவேண்டியதில்லை. அதற்கு மாறாக அத்தகைய செல்வந்தர்களுக்கு 700 பில்லியன் டொலர்களுக்குமேல் வரிக்குறைப்பு சலுகை வழங்க புஷ் நிர்வாகம் நாடாளுமன்றத்தில் அனுமதியை கோரியுள்ளது. இதில் கம்பெனிகள் அறிவிக்கும் பங்கு வியாபாரத்தால் கிடைகும் இலாப தொகைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த வரி ரத்து செய்யப்படுவதும் அடங்கும். ஈராக்கில் அமெரிக்கா நடத்துகின்ற தாக்குதலால் நாசமடையும் தொழில் கட்டமைப்பு வசதிகளை திரும்ப சீரமைப்பதில் பல நூறு மில்லியன் டொலர்கள் இலாபத்தை குவிக்க முடியும் என்று பெரிய அமெரிக்க கம்பெனிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதில் ஒன்று எண்ணெய் கட்டுமான நிறுவனமான ஹாலிபர்ட்டன் (Halliburton). தற்போதைய துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் இந்த நிறுவனத்தில் செனி தலைவராகயிருந்தார். இன்றைக்கும் துணை ஜனாதிபதி அந்த நிறுவனத்தில் சம்பளம் பெற்று வருகிறார்.

பொய் 16: ''போரின் தீங்குகளை குறைக்கவும் போர் நடக்கும் நாட்களை வெட்டுவதற்கும், அமெரிக்கா தனது முழுமையான வலிமையையும் படைகளையும் பயன்படுத்தியாக வேண்டும், அதைச் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.''

ஆக்கிரமிப்பாளர் ஒவ்வொருவரும் போரினால் வரும் துன்பத்திற்காக வருந்துவதாகவும், ஆக்கிரமிப்பை எதிர்த்து அந்த எதிர்ப்பில் பலியாகிறவர்கள் மற்றும் பாதிக்கப்படுகிறவர்கள் மீது அதற்கான பழிபோடவே செய்கின்றனர், மற்றும் இவ்வாறு துன்பம் நீடிப்பதாக கூறுகின்றனர். புஷ் இதற்கு விதிவிலக்கல்ல. மத்தியக்கிழக்கில் தனது மூலோபாய நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டு இந்த போரை ஆரம்பித்துள்ளது என்பதை அமெரிக்காவில் நிர்வாகத்திலுள்ள போர் ஆதரவாளர்கள் "போரை தேர்ந்து எடுத்ததை" பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர். எனவே, ஈராக் மக்களுக்கு "கவலை" தெரிவிக்கிறோம், என்ற அவரது போலித்தனமான கூற்று அந்த உண்மையை மறைத்துவிட முடியாது.

பொய் 17: ''சதாம் ஹூசேன் நிராயுதபாணியாக்கப் பட்டவுடன் அமெரிக்காவிற்கும் உலகின் இதர பகுதிகளுக்கும் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துவிடும்.''

எவரும், அமெரிக்க இராணுவ புலனாய்வு வட்டாரங்களை சேர்ந்தவர்கள் கூட இந்தக் கருத்தை மிகவும் சரியானதாக நம்பவில்லை. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகாரிகள் திரும்பத்திரும்ப ஒரு தகவலை சொல்லி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான, அரபு மற்றும் முஸ்லீம் மக்களை கொன்று குவித்து ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றுமானால் பொதுமக்களிடையே ஆத்திர உணர்வுகள் வெடித்து சிதறி அரபு உலகிலும், அதற்கு அப்பாலும் பயங்கரவாத நடவடிக்கைகள் மேலும் அதிகமாகுமே தவிர குறையாது என்று அந்த அமெரிக்க அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கின்றனர்.

பொய் 18: "இப்போது நாம் நடவடிக்கையில் இறங்குகின்றோம், ஏனெனில் செயல்படாமல் இருப்பதால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள் அதிகமாக இருக்கும். இன்னும் ஓராண்டில் அல்லது ஐந்தாண்டுகளில், எல்லா சுதந்திர நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கின்ற ஈராக்கின் வலிமை பல மடங்கு பெருகிவிடும்."

கடந்த 12 ஆண்டு கால வரலாறு இதை பொய்யாக்குகிறது. படிப்படியாக, ஈராக்கின் இராணுவ வலிமை குறைந்துகொண்டே வருகிறது. சதாம் ஹூசைன் எப்போதுமே எந்த "சுதந்திர நாட்டிற்கும்" அச்சுறுத்தலாக இருந்ததில்லை. அந்த வார்த்தைக்கு (சுதந்திர நாடுகள்) ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அவர் அச்சுறுத்தலாக இருப்பது பாரசீக வளைகுடாவில் உள்ள பிற்போக்குத்தனமான எண்ணெய் வளமிக்க, ஷேக்குகள் ஆட்சிக்கு மற்றும் பக்கத்தில் இருக்கிற ஈரானுக்கு அவர் அச்சுறுத்தலாக இருக்கிறார். இந்த ஆட்சிகள் எல்லாம் சதாம் ஹூசேனின் அரசு போன்று ஒடுக்குமுறை அரசுகள்தான்.

பொய் 19: "உலகின் நியாயமான கோரிக்கைகளை நாம் செயல்படுத்துகின்ற நேரத்தில், நமது நாட்டிற்கு நாம் அளித்துள்ள ஆழமான உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றுவோம்."

பெப்ரவரி 15 மற்றும் மார்ச் 15 ஆகிய நாட்களில் ஈராக் மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதிலும் மற்றும் பல்வேறு நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் நடத்திய கண்டனப் பேரணிகளால் உலகின் கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டன. புஷ் இப்போது இரண்டு வகைகளிலும், பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார். ஈராக்கிற்கு எதிரான முந்தைய பாதுகாப்பு சபை தீர்மானங்களை ("உலகின் நியாயமான கோரிக்கைகள்") வலிந்து செயற்படுத்துவதாய் கூறிக்கொண்டு, அதேவேள உலகின் பெரும்பாலான அரசாங்கங்களையும் உலகின் மிகப்பெரும்பாலான மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களது விருப்பினை அப்பட்டமாக புஷ் மீறுகின்றார்.

பொய் 20: ''சதாம் ஹூசேனைப்போல் அல்லாமல் ஈராக் மக்கள் தனி மனித சுதந்திரத்தை பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள், அதற்கான திறமை படைத்தவர்கள் என்று நம்புகிறோம்.... அமெரிக்கா இதர நாடுகளோடு சேர்ந்து அந்த மண்டலத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் மேம்படுத்துவதற்கு பாடுபடும்."

ஈராக் மக்கள் என்பதற்கு பதிலாக, எகிப்து மக்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது அரபு தீபகற்ப மக்கள், பாகிஸ்தான் மக்கள் அல்லது அமெரிக்க ஆதரவுபெற்ற சர்வாதிகாரங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். பாலஸ்தீன மக்களைப் பற்றிக் கூறத்தேவை இல்லை. அவர்கள் மிகக் கொடூரமான இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் அது வாஷிங்டனால் ஆதரிக்கப்படுகிறது. இவர்களில் எவருக்காவது அத்தகைய மனித சுதந்திர உரிமை உண்டு மற்றும் அதற்கு தகுதியானவர்கள் என்று அமெரிக்க அரசாங்கம் கருதவில்லை? துருக்கி நாடாளுமன்றம் மக்களது நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு துருக்கி எல்லையை ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த ஜனநாயக முடிவை ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுக்குமாறு துருக்கி இராணுவத்திற்கு புஷ் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved