: மத்திய
கிழக்கு :
ஈராக்
A glimpse into the background of an Iraqi "oppositionist"
ஈராக் - ''எதிர்ப்பாளரின்'' பின்னணி பற்றிய ஒரு கண்ணோட்டம்
By Peter Symonds
12 March 2003
Back
to screen version
அவுஸ்திரேலியன் செய்திப் பத்திரிகையானது, சென்ற வெள்ளிக்கிழமையன்று முதல் பக்கத்தில்
சிட்னியில் தஞ்சம் புகுந்துள்ள ஈராக்கைச் சேர்ந்த எதிர்ப்பாளர் ஒருவரை பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. வாஷிங்டன்,
தனது ஈராக் தொடர்பான ஆலோசகர்களாகவும் மற்றும் திட்டமிடுபவர்களாகவும் எத்தகைய நபர்களை அமர்த்தியுள்ளது
என்பதை இந்தப் பேட்டி தெளிவுபடுத்தியிருக்கிறது. ''சதாம் ஹூசேனால் துரோகம் செய்யப்பட்ட ஆதரவாளர்
பழிக்குப்பழி வாங்க திட்டமிடுகிறார்'' என்ற தலைப்பில் ஈராக்கின் முன்னாள் தலைமை இராஜதந்திரியும், பாத்
கட்சி அதிகாரியுமான மொகமட் அல் ஜாபரியின் (Mohamed
Al Jabiri) பேட்டி அதில் வெளியாகியிருந்தது.
சிட்னியின் தென்மேற்கு புறநகர் பகுதியில் ஒரு சிறிய அலுவலகத்திலிருந்து அல் ஜாபரி பணியாற்றிக்
கொண்டிருப்பதாக இந்தப் பத்திரிகை பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை இயக்கிவரும் ''தற்காலிக
நீதிக்கட்சி பணிக்குழுவில்'' அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரே உறுப்பினரான அல் ஜாபரி, வாஷிங்டனுக்கு விமானத்தில் புறப்பட
இருக்கிறார் என்பதும், அவர் ஏற்கனவே அங்கிருக்கும் இதர 30 எதிர்க்கட்சி உறுப்பினர்களோடு சேரவிருக்கிறார்
என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கிடையில் தற்போது ஈராக்கில் புதிய காலனி ஆட்சியை உருவாக்குவதற்கான ஒரு
திட்டத்திற்கு மூத்த அமெரிக்க அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
முன்னாள் இராஜதந்திரியான அல் ஜாபரி இதர பல ஈராக்கிய மக்களைப் போன்று
சதாம் ஹூசேனின் சர்வாதிகார ஆட்சியில் துன்பத்தை அனுபவித்தவர் என்பதில் சந்தேகம் இல்லை. அல் ஜாபரி இரண்டு
ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்றும், அவரது விடுதலைக்குப்பின் வீட்டுக் காவலில் இருந்து வந்தார்
என்றும், அத்தோடு அவரது சகோதரரையும், மகனையும் கொலை செய்வதற்கு ஹூசேன் ஏற்பாடு செய்தார் என்றும் இப்பத்திரிகைக்கு
தகவல் தந்துள்ளார். பின்பு மருத்துவ சிகிச்சைக்காக 1993 ஜனவரி மாதம் அல் ஜாபரி ஈராக்கிலிருந்து வெளிநாடு
செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, 1995 மே மாதம் அவுஸ்திரேலியாவில் ஒரு அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்
இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்னவென்றால், அல் ஜாபரி தனது
இளமைக் காலத்தில் சதாம் ஹூசேனோடு கொண்டிருந்த உறவுகள் பற்றிய விளக்கமாகும். ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும்
இந்த இருவரும் இளைஞர்களாக இருந்தபோது, 1959 ம் ஆண்டு இருவரும் முதல் தடவையாக சந்தித்துள்ளனர். அப்போது,
அல் ஜாபெரிக்கு 30 முதல் 40 வயதுக்குள்ளேதான் இருக்கும். ஈராக்கில் புதிதாக வளர்ந்துகொண்டிருந்த பாத் கட்சியில்
''ஒரு அதிகாரத் தரகரைப் போன்று'' அல் ஜாபரி பணியாற்றி வந்ததோடு, அவர் வசதியான ஒரு வர்த்தக
குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார். சதாம் ஹூசேன் அப்போது 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞராக
இருந்தபோது, அவர் அழகோ அல்லது கவர்ச்சியோ இல்லாத ஒருவராக காணப்பட்டதாக அல் ஜாபரி நினைவு கூர்ந்திருக்கிறார்.
''நான் ஈராக் இளைஞர்கள் குழுவோடு அமர்ந்திருந்தபோது, இரண்டு பேர் எங்களை அணுகினார்கள்.
அவர்களில் ஒருவர் சதாம் ஹூசேனாக இருந்தார். அவர் எங்களுடன் உட்கார்ந்து பேசிய பின்பு அவருக்கு நாங்கள் உதவுவதற்கு
முடிவு செய்தோம். ஏனெனில் அந்த நேரத்தில் ஈராக்கில் பிரதமராகயிருந்த அப்துல் கரீம் காசிமை (Abdul
Karim Qasim) கொலை செய்யத் திட்டமிட்டுள்ள
அந்தக் குழுவில் சதாம் ஹூசேன் சம்மந்தப்பட்டிருந்தார். நல்லவரைப்போல் தோற்றமளித்த ஹூசேன், ஒரு இரக்கமற்ற
கொலைகாரராக மாறுவார் என்று நான் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை''. என்று அல் ஜாபெரி மேலும்
கூறியுள்ளார்.
இந்த வியப்பூட்டும் வாசகங்கள் எதனைக் காட்டுகின்றன? முதலாவது, சதாம் ஹூசேனது
வன்முறைகள் பற்றி எவ்வளவுதான் அவர் ஆட்சேபனை தெரிவித்தாலும், அல் ஜாபரியும் அவரது வட்டமும் சதாம் ஹூசேனை
ஆதரிப்பதற்கு ஒரே காரணம் அந்த இளைஞர் ஒரு கொலைகாரர் என்பதற்காகத்தான். இரண்டாவதாக, இந்தப் பேட்டி
அவுஸ்திரேலியன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் அப்பட்டமான அகம்பாவ போக்கை வலியுறுத்திக் கூறுவதுடன்,
இந்தப் போரை நியாயப்படுத்த சதாம் ஹூசேனின் கொடூரமான நடவடிக்கையே காரணம் என்றும் கூறி வருகிறது. ஆனால்,
ஹூசேனின் கொடுங்கோன்மைக்கு உடந்தையாக இருந்தவரை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதில் இந்தப் பத்திரிகை
வெட்கப்படவில்லை. அல் ஜாபரியின் கரம் எந்த அளவிற்கு இரத்தக் கறை படிந்தது என்பதை ஒரு சிறிய வரலாற்று
குறிப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.
1959 அக்டோபரில், சதாம் ஹூசேனும் அவரது குண்டர்களும் பிரதமர் காசிமை கொல்வதற்கு
முயற்சி செய்தனர். இச்சம்பவத்திற்கு முதல் ஆண்டுதான் சுதந்திர அதிகாரிகள் இயக்கத் (Free
Officers movement) தலைவர் என்ற முறையில் காசிம் மக்களது
வெறுப்பிற்கு இலக்கான மன்னர் ஆட்சியை வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்தார். இந்த இராணுவப் புரட்சிக்கு பரவலான ஆதரவு
இருந்ததோடு புதிய நிர்வாகமானது தீவிரமான ஜனநாயக மற்றும் சமூக சீர்த்திருத்தங்களைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்புக்களையும்
பெருமளவில் உருவாக்கியிருந்தது. காசிம், பெருமளவிற்கு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை நம்பியிருந்ததால், புதிய
ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சி எந்தவிதமான விமர்சனமும் இன்றி ஆதரித்தது. இதன்மூலம் மக்கள் இயக்கம் பகிரங்கமாக முதலாளித்துவத்திற்கு
எதிரான திசையில் செல்லாது தடுப்பதற்கு புதிய ஆட்சியானது நடவடிக்கைகளை மேற்கொண்டது.
புதிய நிர்வாகத்தின் ''இடதுசாரித்தன்மை'' காரணமாக பாத் கட்சி மற்றும் வாஷிங்டன்
உள்ளடங்கிய பல்வேறு வலதுசாரிக் குழுக்கள் பிரதமர் காசிமை குறிவைத்து தாக்கத் தொடங்கினர். ஹூசேன் காசிம் மீது
மேற்கொண்ட கொலை முயற்சி தோல்வியில் முடிந்தபோதும் அவரது டிரைவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். காயம்
எதுவுமின்றி உயிர் தப்பிய பிரதமரின் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களும் மற்றும் பாத் கட்சி தலைவர்களில்
பெரும்பாலானோர்களும் ஈராக்கிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். அதுவரை எவருக்கும் தெரியாமலிருந்த சதாம்
ஹூசேன் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்பு ஓரளவிற்கு அறிந்து கொள்ளப்பட்டார்.
ஹூசேன் மேற்கொண்ட கொலை முயற்சிக்கு அல் ஜாபெரியின் ஆதரவானது பாத் கட்சியின்
பண்பை தெளிவாக இனம் காட்டியது. இந்தக் கட்சி அரசியல் சதி வேலைகள் மற்றும் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை
தனது வழியாகக் கொண்டிருந்ததுடன், ஹூசேனின் குழு போன்ற பல குண்டர் குழுக்களின் இணைப்பாகவும் இருந்தது.
1963 ம் ஆண்டு பாத் கட்சியானது தமக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்த
ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் காசிமை பதவியிலிருந்து நீக்கியதன் பின்பு, இடதுசாரிகள் மீது பயங்கரவாத நடவடிக்கைகளை
கட்டவிழ்த்துவிட்டது. இந்த நிகழ்ச்சிகள் பற்றி ஈராக் வரலாற்று நூல் ஒன்று கீழ்கண்டவாறு விளக்குகிறது. ''இரண்டாவது
உலகப்போருக்குப்பின் 1963 பிப்ரவரிக்கும், நவம்பருக்கும் இடைப்பட்ட மாதங்களில் மத்திய கிழக்கு சந்தித்திராத பயங்கர
வன்முறை நிகழ்ச்சிகள் ஈராக்கில் நடைபெற்றன. பாத் கட்சியானது பிரதான கேந்திர மையங்களை கைப்பற்றி
காசிமையும் மற்றும் தனது எதிரிகளையும் கொலை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியது......
''இந்த காலகட்டத்தில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை துல்லியமாக
மதிப்பிடுவது இயலாத காரியம். ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும், விளையாட்டு மைதானங்கள்
தற்காலிக சிறைகளாக மாற்றப்பட்டு அங்கு ஏராளமான கைதிகள் சிறை வைக்கப்பட்டனர். வீதிகளில் மக்கள் கொல்லப்பட்டதோடு
சிறைகளிலும் சித்திரவதைகளினால் கொலைசெய்யப்பட்டனர். அல்லது ''விசாரணை'' என்ற நாடகம் நடத்தி தூக்கில்
தொங்கவிடப்பட்டனர். அல்லது சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உயிரோடு தப்பியவர்கள் நீண்ட காலம் சிறைகளில் மிகக்
கொடூரமான நிலையில் காவலில் வைக்கப்பட்டனர்''. (1958 லிருந்து ஈராக்: ''புரட்சியிலிருந்து சர்வாதிகாரம்
வரை'' ஆசிரியர்கள் மரியன் பாரூக் சிலக்லெட் மற்றும் பீட்டர் சிலக்லெட் - பக்கங்கள் 85-86)
இந்த நூல் சுட்டிக்காட்டியது போல், இந்தக் கட்டத்தில் பாத் கட்சியானது இதர வலதுசாரி
தேசியக் குழுக்களின் ஆதரவோடு 850 முழு நேர உறுப்பினர்களையும் 15.000 ஆதரவாளர்களையும் கொண்டிருந்த ஒரு
சிறிய கட்சியாக இருந்தது. ஆனால் நடைபெற்ற படுகொலைகளின் அளவைக் கொண்டு பார்க்கும்போது, வெளிநாட்டு
உதவிகள் இதில் நீண்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. ஈரானில் 1953 ம் ஆண்டு இடதுசாரிகளுக்கு எதிரான ஆட்சிக்
கவிழ்ப்புக்களிலும், 1965-66 ல் இந்தோனேஷியாவிலும் மற்றும் இதர இடங்களிலும்
C.I.A ன் கறைபடிந்த
கரம் நீண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
''இதற்கு முந்தைய ஆண்டுகளில் இடதுசாரிகள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு
வந்தாலும், 1963 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் வரை நடைபெற்ற படுகொலைகள் மற்றும் கைதுகளைக் கணக்கிட்டு
பார்க்கும்போது, ஒருங்கிணைந்த இயக்கம் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட
பட்டியல்களின் அடிப்படையில் சந்தேகத்திற்குரியவர்களின் வீடுகள் மீது திடீரென்று சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தப்
பட்டியல்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதை அனுமானங்கள் மூலம் தெரிந்துகொண்டாலும், சில பாத் கட்சித் தலைவர்கள்
அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது நிச்சயமாக இருக்கின்றது. மேலும், ஈராக்கிலும்
இதர இடங்களிலும் பல்வேறு வகைப்பட்ட குழுக்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிக வலுவான மக்கள் செல்வாக்கு
நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சியை சிதைப்பதில் வலுவான ஆதிக்க நலனோடு செயல்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்''
(அதே நூலில் பக்கம் 86)
அல் ஜாபரி அவுஸ்திரேலியன் பத்திரிகையில் தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறார்.
கட்சியை தூய்மையாக வைத்திருக்க முயன்றதாகக் கூறுகிறார். ஆனால், 1959 ம் ஆண்டு கொலை முயற்சியை ஊக்குவித்தவராகவும்,
தனது அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டுவதில் கருணையின்றி இருந்த கட்சியின் தலைமைக் குண்டர்களில் ஒருவருக்கு
நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். 1968 ம் ஆண்டு கட்சி தனது சொந்தப்
பலத்தில் ஆட்சியைப் பிடித்தபோது, கட்சித்தலைவர் அஹமத் ஹசன் அல்பாக்கருக்கு தவிர்க்க முடியாத நண்பராக ஹூசேன்
மாறினார். அவர் இராணுவத்தின் மீது தனது அதிகாரத்தை இறுக்கமாக்கி, செல்வாக்கை பெருக்கிக்கொண்டு மிகவும்
கொடுமையான புலனாய்வு மற்றும் போலீஸ் அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டார்.
அப்போது சதாம் ஹூசேன் இளைஞராகயிருந்தாலும், மிக விரைவாக பதவிகளில் உயரே
சென்று துணை ஜனாதிபதியாக உயர்ந்தபோது, அல் ஜாபரி அவரது விசுவாசமான நம்பிக்கையாளராக இருந்து ஆட்சிக்கு
பல்வேறு இராஜதந்திர பணிகளில் உதவி புரிந்திருக்கிறார். ''நான் அவரை வழக்கமாக சந்திக்கும்போது ஆலோசனைகளையும்
வழங்குவேன்'' என்று அவர் அவுஸ்திரேலியன் பத்திரிகைக்கு கூறியுள்ளார். 1979 ல் ஜனாதிபதி அல்பாக்கர்
இடத்திற்கு ஹூசேன் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து இடைவிடாத உட்கட்சி சண்டைகள் நடைபெற்றபோதுதான், அல்
ஜாபரி சதாம் ஹூசேனோடு மோதுகின்ற நிலை ஏற்பட்டது. இம்மோதலில் பாத் கட்சியின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு
அல் ஜாபரியும் அவரது குடும்பத்தினரும் இலக்காகினர். எந்த சர்வாதிகாரத்தை உருவாக்க அவர் உதவி அதில் பங்கெடுத்துக்கொண்டாரோ,
மற்றும் ஒரு இராஜதந்திரியாக பணியாற்றி அதனைத் தாங்கி நின்று நியாயப்படுத்தினாரோ அந்த சர்வாதிகாரத்திற்கே
அவர் இறுதியில் இலக்கானார்.
ஆகவே அல் ஜாபரி போன்ற மனிதர்களை வாஷிங்டன் மிகுந்த விருப்பத்தோடு பயன்படுத்திக்
கொண்டிருப்பது மீண்டும் ஒரு உண்மையை வலியுறுத்தி நிற்கின்றது. அது ஈராக்கிற்காக அமெரிக்கா தீட்டியுள்ள திட்டத்திற்கும்,
ஜனநாயகம் மற்றும் நீதிக்கும் எதுவித சம்மந்தம் இல்லை என்பதுதாகும். ரூபர்ட் முர்டோக்கின் அவுஸ்திரேலியன்
செய்திப் பத்திரிகை அல் ஜாபரியின் சாதனைகளை விமர்சனம் இல்லாமல் வெளியிட்டிருப்பது, எத்தனையோ உண்மைகளை
அமைதியில் அம்பலப்படுத்தும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. |