:ஆசியா
:
பிலிப்பைன்ஸ்
US troops to be involved in combat operations in the southern Philippines
தெற்கு பிலிப்பைன்சில் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கப்படைகள் ஈடுபடுகின்றன.
By Peter Symonds
22 February 2003
Back
to screen version
பிலிப்பைன்ஸ் இல் அமெரிக்க இராணுவத்தின் அளவு பெருமளவில் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
பிலிப்பைன்சின் தெற்குப் பகுதி தீவான ஜோலோ (Jolo)
வில் இஸ்லாமிய அடிப்படைவாத படையினரான அபு சயீஃப்
(Abu Sayyaf) குழுவினர்
மீது பிலிப்பைன்ஸ் இராணுவம் அடுத்த மாதம் அமெரிக்க படையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் இறங்க இருக்கிறது.
அதற்காக 3,000-அமெரிக்க துருப்புகளை அனுப்ப பென்டகன் திட்டமிட்டிருக்கிறது. சென்ற ஆண்டு பக்கத்து பாசிலான்
(Basilan)
தீவில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க துருப்புகள் ஆறுமாதம் பயிற்சி
நடவடிக்கைகள் என்ற போர்வையில் நடவடிக்கையில் இறங்கின. ஆனால் தற்போது உள்ளூர் இராணுவ வீரர்களோடு
இணைந்து அமெரிக்க சிறப்பு படையினர் களத்தில் இறங்குகின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஏறத்தாழ பாலிசான் நடவடிக்கைகளை போன்று ஜோலோவில் கூட்டு பயிற்சி நடவடிக்கைகளுக்கு
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சம்பிரதாய முறையில் அனுமதி வழங்கியிருப்பதாக திங்களன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா
மக்கபாகல் ஐயரோ, அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வியாழன் அன்று அமெரிக்க அதிகாரிகள் இந்த அறிவிப்பு
குறித்து தங்களது கருத்துக்கள் அடங்கிய பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டனர். இதற்கு முந்திய இராணுவ நடவடிக்கையை
விட மிக அதிகமான அளவிற்கு அடுத்த நடவடிக்கைகளின் தன்மை அமைந்திருக்கும் என அமெரிக்க பத்திரிகைகளுக்கு அமெரிக்க
அதிகாரிகள் கொடுத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
''அமெரிக்கத் துருப்புகள் தீவிரமாக பங்கு எடுத்துக்கொள்வதன் நோக்கம் இரண்டு தரப்பும்
நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாக உடன்படுகின்ற வரை இராணுவ நடவடிக்கைகள் நீடிக்கும் என்ற நிலையோடு இந்தக் கட்டத்தில்
நாங்கள் அதில் ஈடுபடுகிறோம்'' என்று பென்டகன் அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் நிருபரிடம் தெரிவித்தார்.
''இந்த முயற்சியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல் முயற்சியில்
அவர்களோடு இணைந்து அமெரிக்க இராணுவ வீரர்கள் பணியாற்றுவர்'' என்று மற்றொரு அதிகாரி ராய்டர்ஸ் நிருபருக்கு
தெரிவித்தார். இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் ''சாஹிப் குழுவை சீர்குலைத்து தோல்வியடையச் செய்வதுதான்''
என்றும் இரண்டு அரசுகளும் எவ்வளவு காலத்திற்கு அந்த நடவடிக்கை தேவை என்று கருதுகின்றார்களோ, அவ்வளவு காலத்திற்கு
நீடிக்கும் என்றும் மூன்றாவது இராணுவ அதிகாரி அசோசியட் பிரஸ் (AP)
நிருபருக்கு தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள படைகளின் தன்மையை கருத்தில் கொண்டு
பார்க்கும்போது நடவடிக்கைகளின் தன்மையை மறைக்க முடியாது. யார் பொறுப்பு என்பதையும் வெளிப்படையாக தெரிவித்தே
ஆகவேண்டும். 350-சிறப்பு நடவடிக்கை துருப்புகள் நேரடியாக ஜோலோவில், பிலிப்பைன்ஸ் துருப்புகளோடு நடவடிக்கையில்
இறங்குவார்கள் ஆனால் அவர்கள் அமெரிக்க இராணுவத் தலைமையின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவார்கள் என்று
வாஷிங்டன் போஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சின் பிரதான தெற்கு தீவான மின்டானோவில் உள்ள
சம்போங்கா, பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 400-துணை அலுவலர்கள் அமெரிக்க படைகளுக்கு உதவியாக செல்லுகிறார்கள்.
உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தயாராக இரண்டு பெரிய போர்கப்பல்களில்
மேலும் ஆயிரம் கடற்படை வீரர்கள் தயாராக இருப்பார்கள். அந்தக் கப்பல்களில் 1300 மாலுமிகள் பணியாற்றுகிறார்கள்.
அவற்றில் கோப்ரா தாக்குதல் ஹெலிகாப்டர்களும், ஹாரியர்
AV-8B போர் விமானங்களும் தரைப்படைகளும் உதவுவதற்கும் இராணுவ
உதவிக்கும் தயார் நிலையில் இருக்கும்.
இந்த நடவடிக்கைகளுக்கு பசிபிக் பகுதி கடற்படை தளபதி மேஜர்-ஜெனரல் ஜோசப் வீபர்
தலைமை வகித்து செல்லுகிறார். இது இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் படை பலத்தையும் சுட்டிக் காட்டுவதாக
அமைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள் அமெரிக்க இராணுவ மதிப்பீட்டு குழுக்கள் ஜோலோ தீவிற்கு வர இருக்கின்றன.
மற்றைய படைகள் ஒரு மாதத்திற்குள் வந்து சேரும். இரண்டு போர்க்கப்பல்களும் அவற்றின் ஜப்பானிய தளத்திலிருந்து அனுப்பப்படும்.
பிலிப்பைன்ஸ் பழைய அமெரிக்க காலனி, அமெரிக்கப் படைகள் அங்கிருப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதை முனை மழுங்க செய்வதற்காக ஆயாரோ நிர்வாகம் திட்டமிட்டு ஜோலோ நடவடிக்கை குறித்து ''அமுக்கி வாசிக்க''
விரும்புகிறது. 1992-ல் அமெரிக்கா தனது பிரதான இராணுவ வசதிகளை மூடிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பசுபிக் கப்பற்படைத் தளம் கிளார் விமானதளம் ஆகியவற்றை மூடிவிட்டது. 40-ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க துருப்புகள்
இருப்பதற்கு அனுமதி வழங்கிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள பிலிப்பைன்ஸ் செனட் சபை அப்போது மறுத்துவிட்டது.
பிலிப்பைன்ஸ் அரசியல் சட்டப்படி, செனட் சபையின் ஒப்புதல் பெற்றால்தான் பிலிப்பைன்ஸ் மண்ணில் வெளிநாட்டுப் படைகள்
இருக்க முடியும்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11-ந்தேதி நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து
புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்தின் மீதான உலகப்போரை'' ஆயாரோ ஆதரித்து வருகிறார். வாஷிங்டனுடன் தனது
உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும் நிதி மற்றும் இராணுவ உதவியைப் பெறவும் இந்த வாய்ப்பை ஆயாரோ பயன்படுத்தி
வருகிறார். பொதுமக்களிடமிருந்து கண்டனங்கள் வந்தாலும் பாசிலான் தீவில் சென்ற ஆண்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.
அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் பாசிலான் நடவடிக்கைகள்
அரசியல் சட்டப்படி செல்லும் என்று ஆயாரோ வாதிட்டார். அமெரிக்க இராணுவம் உள்ளூர் தளபதிகள் கட்டுப்பாட்டில்
தான் செயல்பட வேண்டும். தாங்கள் சுடப்பட்டால் மட்டுமே அமெரிக்க இராணுவம் தங்களது ஆயுதங்களைப்பயன்படுத்த
வேண்டும்.
கடைசியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு ஏற்கனவே கடுமையான எதிர்ப்புத்
தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாசிலான் தீவில் அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படுவது குறித்து ஆயாரோவுடன் கருத்து வேறுபாடு
கொண்டு வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து சென்ற ஆண்டு ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி தியோபிஸ்டோ
கிங்கோனா ''பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கூட அமெரிக்க துருப்புகள் ஈடுபட்டால்
அது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறிய செயலாகும். போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிலிப்பைன்ஸ்
மக்களை கொல்வார்களானால் அவர்கள் நமது இறையாண்மையை மீறிச் செயல்படுவதாக ஆகும்'' என குறிப்பிட்டார்.
வெள்ளி கிழமையன்று செனட் சபை உறுப்பினர் அகிலினோ பிமென்டல் பாதுகாப்பு அமைச்சர்
ஆஞ்சலோ ரீஸ், அரச துரோக குற்றம் இழைத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். ''அமெரிக்கப் படைகளின் திறமை,
தந்திரம் அவர்களின் ஆயுதங்கள் சோதனை செய்து பார்பதற்கு மோரோலாந்து பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களை
பயங்கரமான சோதனைக்கூடமாகப் பயன்படுத்தி வருவதாக'' சாடினார். தெற்கு பிலிப்பைன்ஸ்சில் மிகப்பெரும்பாலான
முஸ்லீம்கள் வாழும் பகுதியை மோரோலாந்து என்று அழைப்பார்கள் அந்நாட்டு மொழியில் ''மோரோ'' என்றால் முஸ்லீமைக்
குறிக்கும்.
அமெரிக்கத் துருப்புகள் இருப்பதற்கு பொதுமக்களது கண்டனம் பரவலாக அதிகரிக்கலாம்
என்பது குறித்து எதிர்கட்சி அரசியல் வாதிகள் கவலையடைந்துள்ளனர். என்பது தெளிவாகத்தெரிகிறது. 20ம் நூற்றாண்டு
தொடக்கத்தில் அமெரிக்க காலனி ஆதிக்கத்தை எதிர்த்த முஸ்லீம்கள் மீது அவர்களை நசுக்குவதற்காக மிகக்கொடூரமான
நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்ததை உதாரணமாக தற்போது எடுத்துக்காட்டி வருகிறார்கள். ''அமெரிக்க காலனி
ஆதிக்கவாதிகள் நமது மூதாதையர்கள் மீது நடத்திய படுகொலைகளின் காயங்கள் இன்னும் ஆறவில்லை'' என்று புதிதாக
அமைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி குழுவின் தலைவர் தெமோஜின் துவாலி குறிப்பிட்டார்.
''அமெரிக்கத் துருப்புக்களும் இணைந்து செயல்படுவதற்கான விவரங்கள் இன்னும் இறுதியாக்கப்படவில்லை''
என்று கண்டனங்களுக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் ரீஸ் தெரிவித்தார். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக
மீறும்வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என உறுதியளித்தார். ''தாக்குதல் நடவடிக்கைகளில் அமெரிக்க
இராணுவ வீரர்கள் ஈடுபடமாட்டார்கள். தற்காப்பிற்காக மட்டுமே திருப்பி தாக்குவார்கள்'' என ஜனாதிபதியின் அதிகாரி
இக்னேஷியோ புன்யே வலியுறுத்திக் கூறினார். இருதரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தற்காப்பு
நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ரீஸ் நாளை வாஷிங்டன் புறப்படுகிறார்.
வாஷிங்டனின் நோக்கங்கள்
ஆயாரோ தனது மக்கள் செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எத்தகையத் தடுப்புக்கள்
வழங்கப்பட்டாலும் பிலிப்பைன்சில் கணிசமான அளவிற்கு அமெரிக்க இராணுவம் நிலை பெறுவதற்கு இப்போது எடுக்கும் நடவடிக்கைகள்
வழிவகுக்கும். ட்ரம்ஸ் பீல்ட் உட்பட தலைமை அமெரிக்க அதிகாரிகள் தங்களது பிலிப்பைன்ஸ் சகாக்களுடன் (ஆயாரோ
உட்பட) பல மாதங்களாகத் திட்டமிட்டு வருகின்றனர். ட்ரம்ஸ் பீல்ட் விளக்கம் அளித்த பின்னர் சென்ற வாரம் ஜனாதிபதி
புஷ் இதற்கான கட்டளையில் கையெழுத்திட்டார்.
ஜோலோ தீவில் அபு சயீஃப் கிளர்ச்சிக்காரர்களின் நடவடிகைகள் அதிகரித்திருப்பதைத்
தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர். பெரிய
மோரோ இஸ்லாமிய விடுதலை அணி (MILF)
யிலிருந்து பிரிந்து வந்த சிறிய குழு மோரோ விடுதலை அணியுடன்
(MNLF) இணைந்து தனிநாடு
கோரி இடைவிடாத உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருக்கிறது மிந்தானோ தெற்குப் பகுதியில் தனிநாடு கோரி இந்த உள்நாட்டு
போர் நடந்து வருகிறது. அபு சயீஃப் மற்றும் MILF,
அல் காய்தாவுடன் தொடர்புகள் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
சென்ற ஆண்டு பாசிலான் தீவில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கு
உடனடி நோக்கம் 2001-ல் அபு சாயீஃப் கிளர்ச்சிக்காரர்கள் பிடித்துக்கொண்ட இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகளை
விடுவிப்பது. மார்டின் மற்றும் கினோஹியா பர்ன்ஹாம் ஆகிய இரண்டு அமெரிக்கர்கள் பிலிப்பைன்ஸ் நர்ஸ் எடிபரோ-யாப்
என்பவருடன் மூவரும் பிணைக்கைதிகளாகப் பிடிப்பட்டனர். மூவரில் இருவர் கொல்லப்பட்டனர். சென்ற ஜூன் மாதம்
பிலிப்பைன்ஸ் படைகள் பிணைக்கைதிகளை மீட்க நடத்திய முயற்சி தோல்வியடைந்தது. மார்ட்டின், யாப்- இருவரும் கொல்லப்பட்டனர்.
அந்தத் தீவில் உள்ள அபு சயீஃப் கொரில்லாக்களை வேட்டையாடுவதில் இந்தப் பயிற்சி வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டது.
2002- ஜூலை,31-க்கு பின்னர் பிலிப்பைன்சில் 1300-அமெரிக்க துருப்புகளில்
300-துருப்புகள் மட்டும் கடைசி காலக் கெடுவிற்குப் பின்னரும் நிறுத்திவைக்கப்பட்டன. சிவில் நடவடிக்கைகளுக்காகவும்,
திட்டங்கள் செயல்பாட்டில் உதவுவதற்காகவும் இந்த துருப்புகள் அங்கு நிறுத்தப்பட்டன. வறுமையில் உள்ள அந்தப்பகுதி மக்களுக்கு
உதவுகிறோம் என்ற சாக்கில் இராணுவ
பொறியியலாளர்கள் சாலைகள், துறைமுகங்கள் இதர கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு
பணியாற்றினர். இராணுவ நடமாட்டத்திற்கு அதிகவசதி செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. சில சிறப்புபடை
பிரிவுகள் அங்கேயே தங்கிவிட்டன. ஒரு இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள சிறிய உணவுவிடுதி ஒன்றில் சென்ற அக்டோபர்
மாதம் குண்டு வெடித்ததில் ஒரு அமெரிக்க கிரீன் பெட் சிப்பாயும், மூன்று பிலிப்பைன்ஸ் காரர்களும், ஜம்பாங்கா பகுதியில்
கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்தின் மீதான புஷ் நிர்வாகத்தின் போரின் ஒரு பகுதியாக ஜோலோ தீவில் தற்போது
அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற அக்டோபர் மாதம் பாலி பகுதியில் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டதாக
குற்றம் சாட்டப்பட்டுள்ள அபு சயீஃப் மற்றும் ஜெமா இஸ்லாமிய ஆகியவற்றோடு தொடர்புகளை நிலைநாட்டியிருப்தாக
பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்போங்கா பகுதியில் ஒரு அமெரிக்க படைவீரர் கொல்லப்பட்டார். தெற்கு
பிலிப்பைன்சில் சிறிய குண்டு வெடிப்புகள் சில நடந்திருக்கின்றன. இந்த குண்டு வெடிப்பிற்கும் காரணம் அபு சயீஃப் குழு
என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
சென்ற ஆண்டு பிலிப்பைன்ஸ் நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு துறையின் அறிக்கை
தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2001-ல் 800-பேராக இருந்த அபுசை போராளிகள் தற்போது 250-பேராக
குறைந்துவிட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த
புள்ளி விபரங்களை மீண்டும் சரிபார்த்தனர். அதன்படி தற்போது அபுசாஹிப் போராளிகள் 500-பேர் அவர்களில் மிகப்பெரும்பாலோர்
ஜோலோவில் உள்ளனர் என இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சிறிய கொரில்லாக்கள் குழுவை வேட்டையாடி பிடிப்பதற்கு அப்பால் பல காரணங்களை
அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா ஜோலோவில் தனது படைபலத்தை பெருக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
10-ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்சில் இருந்த தனது இராணுவத் தளங்கள் இழந்துவிட்டதை வாஷிங்டன் எப்போதுமே ஏற்றுக்
கொண்டதில்லை. விரிவான அடிப்படையில் பார்த்தால் வியட்நாம் போர் தோல்விக்குப் பின்னர் தென்கிழக்கு ஆசியாவில்
அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து கொண்டுவருவதை அமெரிக்காவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பிலிப்பைன்ஸ்
உட்பட இந்த மண்டலத்தில் வலுவான அடிப்படையில் மீண்டும் அமெரிக்காவின் இராணுவ நடமாட்டத்தை நிலைநாட்ட
வேண்டுமென்று வலதுசாரி நிபுணர் குழுக்களும் பென்டகன் அதிகாரிகளில் சிலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த மண்டலத்தில் உடனடியாக அமெரிக்காவின் பொருளாதார நலன்களை காத்து நிற்பதற்காக
மட்டும் அல்லாமல் தென்கொரியா, மற்றும் ஜப்பானில் இருந்து மத்திய ஆசியா முழுவதிலும் சீனாவை சுற்றி சங்கிலித்தொடர்
போல் இராணுவ தளங்களை அமைப்பதற்கு ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸ் விளங்குகிறது. சீனாவை புஷ் ஏற்கனவே தனது
"கேந்திர போட்டியாளர்" என வர்ணித்திருக்கிறார். உடனடியாக ஈராக்கிற்கு எதிரான போர் தொடங்கும் சூழ்நிலையில்
மத்திய ஆசியாவிலும், மற்றும் மத்திய கிழக்கிலும் பெருமளவில் இராணுவ படைப்பிரிவுகளை வாஷிங்டன் நிறுத்துவதற்கான
ஆற்றல் நீண்ட தூரத்திலிருந்து இராணுவத்திற்கான தளவாடங்களையும், இதர பொருட்களையும் வழங்கும் வல்லமையுள்ள வழிகளை
பொறுத்தே அமையும்.
பிலிப்பைன்சுடன் அமெரிக்காவிற்கு இராணுவ உறவுகள் வளர்ந்து வருகின்றன. நீண்ட காலமாக
ஆலோசனையில் இருந்துவந்த இராணுவ நடமாட்ட மற்றும் உதவி உடன்பாட்டை
(MLSA) பிலிப்பைன்சுடன்
வாஷிங்டன் உருவாக்கி கையெழுத்து போட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தப்படி அமெரிக்க இராணுவப்படைகள் இந்த மண்டலத்தில்
பிலிப்பைன்சை தனது சப்ளை மையமாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த பேரத்தின் சிறப்பை இரண்டு தரப்புமே அமுக்கி வாசிக்க விரும்புகின்றன. இந்த ஒப்பந்தப்படி
பிலிப்பைன்சின் தகவல் தொடர்புகள் மற்றும் மருத்துவ சேவைகளை அமெரிக்க படைகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
(MLSA)- ஒப்பந்தப்படி
அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக இரண்டு இராணுவங்களும் பரஸ்பரம், படைநிலை, ஆதரவு வழங்க வேண்டும் என்று
வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கை என்பதில் இரு இராணுவங்களும் இணைந்து மேற்கொள்ளும்
பயிற்சிகள், போட்டி பயிற்சிகள், நடவடிக்கைகள் மற்றும் இதர இராணுவ நடமாட்டங்கள் அடங்கும். இதர இராணுவ
நடமாட்டங்கள் என்பதை வேண்டுமென்றே தெளிவில்லாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் அந்தப் பிரிவை உடனடியாக வாஷிங்டன்
பயன்படுத்திக் கொள்வதற்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு தேவையான
தளவாடங்கள், இதர பொருட்களை வழங்குவதற்கு இந்த ஷரத்து மூலம் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். |