World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

As hunt for captured "contractors" continues
US escalates Colombian military intervention

கொலம்பியாவில் அமெரிக்க இராணுவத் தலையீடு அதிகரிப்பு
By Bill Vann
1 March 2003

Back to screen version

கடந்த மாதம் பென்டகன், கொலம்பியாவில் தனது இராணுவப் படைகளை இரட்டிப்பாக்கியிருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. அங்கு, அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவுகள் நேரடியான தேடுதல் வேட்டைகளில் இறங்கியுள்ளன. பெப்ரவரி 13 ந் தேதி கொலம்பியாவில், கொரில்லாக்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு பகுதியில் விமானம் தரையிறங்கியபோது, அதிலிருந்த மூன்று அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களை கொரில்லாக்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இதனால், அவர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்காக கொலம்பிய மற்றும் அமெரிக்க இராணுவம் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இச் சம்பவத்தில் மற்றொரு பென்டகன் ஒப்பந்தக்காரரையும், கொலம்பிய இராணுவ புலனாய்வு அதிகாரியையும், FARC (Revolutionary Armed Forces of Colombia -FARC) கொரில்லாக்கள் பிடித்தபோது, அவர்கள் எதிர்ப்புக் காட்டியதால் கொலை செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

புஷ் நிர்வாகம் தந்திருக்கும் புள்ளி விபரங்களின்படி, கொலம்பியாவில் பணியாற்றிவரும் இராணுவத்தினர் எண்ணிக்கை ஜனவரியில் 208 ஆகவிருந்து சென்ற வாரம் 411 ஆக உயர்ந்தது. தெற்கு கொலம்பியாவில், காகேட்டா (Caqueta) மாகாணத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரில்லாக்களால் கடத்தப்பட்ட இந்த ஒப்பந்தக்காரர்களைத் தேடிக் கண்டுபிடிக்க அமெரிக்காவின் 150 சிறப்பு நடவடிக்கை துருப்புக்கள் அனுப்பப்பட்டிருப்பதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் மறுத்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி பிலிப் ரீக்கர் பிப்ரவரி 25 ந் தேதி அளித்த பேட்டியில், பிடிபட்ட அமெரிக்கர்களை மீட்பதற்கு புதிதாக 49 துருப்புகள் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், இதர 101 துருப்புக்கள் ''ஏற்கெனவே திட்டமிட்டபடி புதிதாக அனுப்பப்பட்டவர்கள்'' என்றும், இவர்களுக்கும் தேடுதல் வேட்டைக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவித்தார். எப்படியிருந்த போதிலும், காகேட்டா மாகாண நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதும் வாஷிங்டனின் இராணுவத் தலையீட்டின் அளவையும், குறிப்பான கவனத்தையும் உள்நாட்டுப் போரினால் சிதைந்து கிடக்கும் இந்த தென் அமெரிக்கா நாட்டில் பெருமளவில் பெருகியிருக்கின்றது.

காகேட்டாவில் பிடிக்கப்பட்ட அமெரிக்கர்களின் பெயர் முதலிய விபரங்களை அல்லது அவர்கள் எந்த நோக்கத்திற்காக அங்கு சென்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதையும் தருவதற்கு புஷ் நிர்வாகம் தொடர்ந்து மறுத்துக்கொண்டு வருகிறது. கொல்லப்பட்ட ஒருவர் 56 வயதுடைய தோமஸ் ஜனிஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் முன்பு வியட்நாம் போரில் பணியாற்றியதோடு இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவராவர். இவர், தரையிறங்கிய செஸ்நா (Cessna) விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி என்று கருதப்படுகிறது.

ஐனிசும் இதர மூன்று அமெரிக்கர்களும் கலிபோர்னியா மைக்ரோவேவ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்காக பணியாற்றியவர்கள். இந்த நிறுவனம் நோர்த்ராப் கிரம்மான் (Northrop Grumman) நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பதுடன், பென்டகனின் மிகப்பெரும் ஒப்பந்த நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்தக் கம்பெனி விமானத்திலிருந்து இலக்குகளை புலனாய்வு செய்யும் நுட்பக் கருவிகளை தயாரித்து விற்பனையும் செய்து வருகிறது. கொலம்பியா இராணுவப் படைகள் FARC தலைவர்களை குறிவைத்து தாக்குவதற்கு வசதியாக, இந்த விமானம் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக அமெரிக்கா மற்றும் கொலம்பியா வட்டாரங்கள் கோடிட்டு காட்டின.

மூன்று அமெரிக்கப் ''போர்க் கைதிகள்'' தங்கள் வசம் இருப்பதாகவும், தமது குழுவைச் சேர்ந்த சிறையிலிருக்கும் உறுப்பினர்களை விடுதலை செய்தால், இந்த மூன்று அமெரிக்கப் போர் கைதிகளை விடுவிப்பதாக FARC அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் பிடிக்கப்பட்ட அமெரிக்கர்களைத் தேடி பெருமளவில் படைகளை ஈடுபடுத்தியிருப்பது அவர்களது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கொரில்லாக்கள் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கின்றனர். 3000 கொலம்பியா துருப்புக்கள், குண்டுவீச்சு ஹெலிகொப்டர்கள் மற்றும் அமெரிக்க இராணுவம் மற்றும் FBI ஆலோசகர்கள் கடத்திச் செல்லப்பட்டவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, கைதிகள் பரிமாற்றம் எதற்கும் இடமில்லை என்று அமெரிக்கா மற்றும் கொலம்பியா அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.

1999 ம் ஆண்டு கொலம்பியா அரசாங்கத்திற்கும் FARC க்கிற்கும் இடையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, காகேட்டா மாகாணம் இராணுவ நடமாட்டம் இல்லாத பிராந்தியமாக ஆக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை பின்பு புஷ் நிர்வாகம் எதிர்த்த காரணத்தினால் ஓராண்டிற்கு முன்னர் இது ரத்தாயிற்று. ஆதலால், கொலம்பியா துருப்புகளும் மற்றும் வலதுசாரி இராணுவப் படைகளும் இப்பகுதிக்குள் மிக வேகமாகப் புகுந்துகொண்டன. கொரில்லா அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட்ட போதிலும் FARC ன் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலான காட்டுப் பகுதிகளும், அதற்கப்பாலுள்ள கிராமங்களும் இன்றும் உள்ளன.

கொலம்பியா உள்நாட்டுப் போரில் அமெரிக்கத் தலையீட்டின் தன்மை ஏற்கெனவே விரிவாகிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் பெருகியதின் தாக்கத்தை காகேட்டா மாகாணச் சம்பவம் காட்டுகின்றது. கொலம்பியாவிற்கு அமெரிக்கா 2 பில்லியன் டொலர் அளவிற்கு இராணுவ உதவியை வழங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் எகிப்திற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் இராணுவ உதவியைப் பெருமளவில் பெற்றுவரும் மூன்றாவது நாடு கொலம்பியாவாகும்.

கொலம்பியாவின் வலதுசாரி ஜனாதிபதியான அல்வாரோ உருபி வேலெஸ் (Alvaro Uribe Velez) சென்ற மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், தனது நாட்டில் அமெரிக்க ஈடுபாடு அதிகரிக்க வேண்டுமெனக் கோரி வந்தார். அண்மையில் ஈராக்கிற்கு எதிராகத் திட்டமிடுவது போன்று பெரும் எடுப்பில், கொலம்பியாவில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

கொலம்பியாவின் துணை ஜனாதிபதி பிரான்சிஸ்கோ சாந்தோஸ், சென்ற வாரம் தனது நாட்டில் அமெரிக்க இராணுவ ''ஆலோசகர்கள்'' எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றிய ஒரு செய்திக்கு மறுப்புத் தெரிவித்தார். படிப்படியாக, கொலம்பியா மண்ணில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன் ''இம் மோதல், வியட்நாம் பாணியில்'' சென்று கொண்டிருப்பதான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகளை மறுத்த துணை ஜனாதிபதி, கொலம்பியாவுக்கு அமெரிக்கா தரும் உதவிகளை விரும்பாத எதிரிகள் தான் இத்தகைய இராணுவத் தலையீடு பற்றி செய்திகளைத் தருவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் கொலம்பியாவில் அமெரிக்கத் தலையீட்டின் அடிப்படை அம்சத்தையே புஷ் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது. கிளின்டன் நிர்வாகத்தில் ''போதைப் பொருட்களுக்கு எதிரான போர்'' என்ற சாக்குப்போக்கில் இராணுவ உதவித் திட்டம் கொலம்பியாவிற்கு வழங்கப்பட்டது. தற்போது ''உலக ரீதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்கிற அடிப்படையில் உதவிகள் அதிகரிக்கப்பட்டு வருவதால், இதற்கு முன்னர் கொக்கையின் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த இராணுவ வசதிகள் முழுவதும் FARC மற்றும் தேசிய விடுதலை இராணுவம் அல்லது ELN ஆகிய அமைப்புக்களின் கொரில்லாக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

காகேட்டா மாகாணத்தில் அமெரிக்க உளவு விமானம் வீழ்த்தப்பட்டதானது இந்த கிளர்ச்சி இயக்கத்திற்கு ஏற்பட்ட சரிவுகளில் ஒன்றாக இருப்பதுடன், இதன் மூலம் வாஷிங்டன் தனது நேரடி இராணுவ ஈடுபாட்டை அங்கு அதிகரித்துள்ளது. புதன்கிழமையன்று அமெரிக்கா வழங்கிய பிளாக் ஹாக் ஹெலிகொப்டர் கொலம்பியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மலைப்பாங்கான இடத்தில் கொரில்லாக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீழ்ந்து நொறுங்கியதில் அதிலிருந்த 23 கொலம்பியா துருப்புக்கள் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் இது பருவநிலை கோளாறுகளால் ஏற்பட்ட விபத்து என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அந்தப் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் இந்த ஹெலிக்கொப்டர் விழும் முன்னர் பீரங்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகத் தெரிவித்தனர். துருப்புக்களை ஏற்றிச் செல்லவும், குண்டு வீசி தாக்குதல் நடத்தவும், ஏறத்தாழ 50 பிளாக் ஹாக் ஹெலிகாட்டர்களை அமெரிக்கா கொலம்பியாவிற்கு வழங்கியிருக்கிறது.

இதற்கிடையில் தற்போது கொலம்பியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நலன்களைக் காப்பாற்றுவதில் அரசாங்கமானது அதீத கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக கொலம்பியாவின் எண்ணெய்க் குழாய்களை பாதுகாப்பதற்கு 70 அமெரிக்க சிறப்புப்படை துருப்புக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இக் குழாய்களைக் காப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய கொலம்பியா படைக்கு பயிற்சி தருவதற்காக, 98 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொலம்பியா எண்ணெய்க் குழாய் இணைப்பை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சார்ந்த ஆக்சிடென்டல் பெட்ரோலியம் நிறுவனமும், கொலம்பியாவின் ஈக்கோ-பெட்ரோல் நிறுவனமும் கூட்டாக இயக்கி வருகின்றன. ஈக்கோ-பெட்ரோல் கொலம்பியா அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம். ஈராக்கிற்கு எதிரான போர் நடைபெறும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. வெனிசூலாவிலிருந்து அமெரிக்காவிற்கு எண்ணெய் வருவது தொடர்ந்து சீர்குலைந்து கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கொலம்பியாவிலிருந்து தடையில்லாமல் எண்ணெய் அமெரிக்காவிற்கு வழங்கப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு வருகிறது.

கொலம்பியாவின் எண்ணெய் வளத்தை தனது ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்காக, எண்ணெய்த் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. இந்நாட்டின் தொழிலாளர்களில் மிகுந்த போர்க்குணம் கொண்டவர்கள் எண்ணெய்த் தொழிலாளர்களாகும்.

கொலம்பியா இராணுவம் மற்றும் போலீசார் இரண்டு பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளான கட்டாகனாவிலும் (Cartagena) பாரங்கா பெர்மேசா (Barrancabermeja) என்பவற்றை பிடித்துக் கொண்டனர். இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்திற்குள் மாசி 21 அன்று கண்டனப் பேரணி நடத்திய தொழிலாளர்களை அடக்குவதற்காக இராணுவத்தினரும், போலீஸாரும் அழைக்கப்பட்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் 9 தொழிலாளர்கள் காயம் அடைந்ததோடு, 15 பேர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின்போது படையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி ரப்பர் குண்டுகளால் தொழிலாளர்களை நோக்கி சுட்டனர்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஈக்கோ பெட்ரோல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் 6.000 தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கம் தற்போது ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. பல தசாப்த காலமாக எண்ணெய்த் தொழிலாளர்கள் பெற்று வந்த சலுகைகளை ரத்து செய்வதற்கு, குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை இத் தொழிற்சங்கம் கண்டித்தது. குறிப்பாக, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலையில்லை என்று அறிவிக்கும் பிரிவிற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒப்பந்தத்தில் இப்படி ஒரு பிரிவை சேர்ப்பதன் மூலம் உரூபி அரசாங்கம் நாட்டின் எண்ணெய் வளங்களை தனியார் மயமாக்க தயாராகி வருகிறது என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையுங்களைச் சுற்றி இராணுவ மயமாக்கியிருப்பதன் மூலம் அரசாங்கம் கதவை அடைத்துள்ளதாகவும், அதே நேரத்தில் நிர்வாகத்தின் சார்பில் ''சதி வேகைள்'' ''நாச வேலைகளை'' தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. கொரில்லாக்களைப்போல் தொழிற்சங்கத் தலைவர்களும் நடத்தப்படுவார்கள் என்று மிரட்டுவதுதான் இதனுடைய நோக்கமாக இருக்கின்றது.

தொழிற்சங்கமானது, அரசாங்கத்திற்கும் டெக்சாக்கோ-செவ்ரான் (Texaco-Chevron) நிறுவனத்திற்கும் இடையில் உருவாகியுள்ள பேரத்தை கண்டித்திருக்கிறது. தற்போது செயல்பட்டு வரும் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைந்த பின்னர் 12 ஆண்டுகளுக்கு லா-கஜீரா (La Guajira) பகுதியிலுள்ள நாட்டின் முக்கியமான இயற்கை எரிவாயு வயல்களை பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு தந்துவிட இப்பேரம் வகை செய்கிறது. தற்போது நடைமுறையிலுள்ள பழைய பேரத்தின்படி 2004 டிசம்பரில் அரசிற்கு சொந்தமான ஈக்கோ-பெட்ரோல் நிறுவனம் இந்த வளங்களையும், அதன் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளையும் தன் வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொழிற்சங்கமான USO இந்தப் பேரத்தின் பல்வேறு விவரங்களைத் தந்திருக்கிறது. எண்ணெய்க் குழாய்களின் கட்டுப்பாட்டை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தந்துவிடுவது. எரிவாயு விலைக்கான மானியங்களை ரத்துச் செய்வது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைப் பராமரிப்புச் செலவினங்களை வெட்டுவது போன்ற இன்னபிறவற்றை உருபி அரசாங்கம் செய்வது, நாட்டின் பெட்ரோலிய வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிடத் திட்டமிட்டுவிட்டதற்கான எச்சரிக்கைகள்தான் என்று USO எச்சரித்திருக்கிறது.

எண்ணெய்த் தொழிலாளர் சங்கம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், உருபி அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும், புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சிகளையும் தொடர்புபடுத்தி கண்டித்துள்ளனர். ''USO தொழிற்சங்கத்தைத் தாக்கித் தகர்க்கும் நடவடிக்கைகளுக்கு அப்பால் முறைகேடான திட்டம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஈக்கோ பெட்ரோல் கொலம்பியா மக்களின் பொதுச் சொத்தாக இருப்பதை ஒழித்துக்கட்டத் திட்டமிட்டுவிட்டார்கள். பூர்வாங்க ஆய்வு, எண்ணெய் சுத்திகரிப்பு, போக்குவரத்து, விநியோகம், பெட்ரோலியம் தொழில்நுட்ப ஆய்வுகள், மற்றும் இதர தேசிய வளர்ச்சிக்கு தேவையான கேந்திர எரிபொருட்களை விற்றுவிட பன்னாட்டு நிறுவனங்களுக்கு திட்டமிட்டுவிட்டார்கள்.

''இந்த நடவடிக்கை புஷ் நடத்தும் ''எண்ணெய்க்காக இரத்தம்'' என்ற புனிதப் போரிலிருந்து வேறுபட்டதல்ல. சென்ற வாரம் இந்த நியாயமற்ற போரை ஈராக் மீது திணிக்க மேற்கொள்ளும் முயற்சியை, உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் கண்டித்து பேரணிகள் நடத்தினர். இந்த நியாயமற்ற போரை வட அமெரிக்க ஏகாதிபத்தியம் வளர்த்து வருகிறது''.

எண்ணெய்த் தொழிலாளர் யூனியன், இராணுவம் மற்றும் வலதுசாரி கொலைக் குழுக்கள் ஆகிய இரு தரப்பினரின் இடைவிடாத அடக்குமுறைகளால் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறது. 1988 முதல் 80 க்கு மேற்பட்ட எண்ணெய் ஊழியர்கள் மற்றும் பல தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட பலர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளபோதும், அரசாங்கம் இந்தக் கொலைகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved