:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
The Bush administration repudiates
international law
புஷ் நிர்வாகம் சர்வதேச சட்டங்களை நிராகரிக்கின்றது
By the Editorial Board
18 March 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்தி, திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி
புஷ் ஆல் வழங்கப்பட்ட 15 நிமிட உரையானது, முற்றுமுழுதான திரிபுபடுத்தல்களையும், அரை உண்மைகளையும் மற்றும்
முழுப்பொய்களையுமே உள்ளடக்கியிருந்தது.
இவ் உரையை முழுதாக நிராகரிப்பதற்கு ஒவ்வொரு வரியாக ஆராயவேண்டியுள்ளது. ஏனெனில்,
அதில் உள்ளடங்கியுள்ள ஒரு தனி வசனம்கூட உண்மையான தகவல்களை வழங்குவதை அடித்தளமாக கொண்டிருக்கவில்லை.
அவரது முதல் வசனமான ''எனது குடிமக்களே, ஈராக்கின் நிகழ்வுகள் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய இறுதிநாட்களை
அடைந்துள்ளது'' என்பது ஒரு பொய்யாகும். உண்மையில், அவர் குறிப்பிடும் ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பான
தீர்மானமானது பல மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது.
யுத்தத்திற்கான புஷ்ஷின் விவாதமானது, ஒரு பிழையான திரிபுபடுத்தப்பட்ட சாட்டுக்களை
கோடிட்டுக்காட்டுகின்றது. கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 1441 ஆவது தீர்மானம்,
யுத்தத்திற்கு செல்வதற்கு தேவையான அமெரிக்காவிற்கான உரிமையை வழங்கியுள்ளது. உண்மையில், இத்தீர்மானத்தில்
எவ்விடத்திலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் எந்தவொரு உறுப்பினருக்கும் ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை
எடுப்பதற்கான உரிமையை வழங்கவில்லை.
தனது உரையில் பிரான்சின் ஜனாதிபதி தொடர்பாக குறிப்பிடுகையில், ''ஈராக்கை நிராயுதபாணியாக்கும்
எந்தவொரு தீர்மானத்திற்கும் எதிராக வீட்டோவை பிரயோகிப்பதாக பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள்
சிலர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்'' என் புஷ் குறிப்பிட்டார்.
இது ஒரு படுமோசமான பொய்யாகும். சிராக் உண்மையில் குறிப்பிட்டது என்னவெனில்
''எவ்வாறான நிலைமைகளின் கீழும் பிரான்சு இல்லை என வாக்களிக்கும் என்பது எனது நிலைப்பாடாகும். இந்த மாலைப்பொழுதில்,
ஈராக்கை நிராயுதபாணியாக்குவது என்று நாம் முன்வைத்த குறிக்கோளை அடைவதற்காக யுத்தத்திற்கு செல்வதற்கு
எவ்விதமான காரணமும் இல்லை என அது கருதுகின்றது''.
பல மணித்தியாலங்களுக்கு பின்னர், யுத்தத்தை செய்வதற்கான உரிமையை வழங்குவதற்கு
ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்தை பின்வாங்குவது தேவையானது என புஷ் முடிவிற்கு வந்தார். ஏனெனில்,
இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் பாரிய தோல்வியை சந்திக்கும் அபாயத்தை எதிர்நோக்கியது. ''உலகின் தற்போதைய
கோரிக்கைகளை பலப்படுத்துவதற்கான ஒரு பாரிய கூட்டு உருவாகி வருவதாக'' புஷ் வெட்கம்கெட்டதனமாக குறிப்பிட்டார்.
உண்மையில், அமெரிக்காவும், பிரிட்டனும் பாதுகாப்பு சபையில் கிட்டத்தட்ட முற்றுமுழுதான அந்நியப்படுத்தலுக்கு
முகம்கொடுத்தன.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் உருவாகிய சர்வதேச சட்டங்களின் முழுக்கட்டமைப்பை
நிராகரித்து, பாதுகாப்பு சபையை ஒருதலைப்பட்டசமாக (தன்னிச்சையாக) அமெரிக்கா எதிர்க்க எடுத்த முடிவினதும்,
ஈராக்கிற்கு எதிராக ஒரு சட்டவிரோதமான யுத்தத்தை செய்வதிலும் உள்ளடங்கியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மற்றும்
அரசியல் விளைபயன்கள் தொடர்பாகவும் குறைத்துமதிப்பிடல் எதுவும் இருக்ககூடாது.
ஹிட்லரினதும், முசோலியினதும் பாசிச அரசாங்கள் அதியுச்ச கட்டத்தில் இருந்த காலகட்டமான
1930 களுக்கு பின்னர், புஷ் நிர்வாகம் இன்று செய்வதுபோல் எந்தவொரு பிரதான வல்லரசின் அரசாங்கமும்
போரை அரசின் கொள்கையின் ஒரு கருவியாக அந்த அளவு வெளிப்படையாக அரவணைத்துக்கொண்டதில்லை. அது தடுத்துநிறுத்தப்படாவிட்டால்
இவ்வாறு செய்வதனூடாக, தான் முன்னெடுத்துள்ள பாதையினால் உலகம் முழுவதும் நூறு ஆயிரக்கணக்கான மக்களின்
மரணத்திற்கு காரணமாக அமைய கூடிய ஒரு புதிய ஏகாதிபத்திய காட்டுமிராண்டி காலகட்டத்திற்கு உலகத்தை
இட்டுச்செல்லும்.
எதிர்வரவுள்ள போரை அறிவிக்கையில், குறிப்பிட்டுகூற முடியாத ஒரு எதிர்காலத்தில் ஐக்கிய
அமெரிக்க அரசுகளுக்கு ஒரு அபாயத்தை உருவாக்கலாம் என்ற அடிப்படையில் ஈராக் மீதான இராணுவ தாக்குதலை
புஷ் நியாயப்படுத்துகின்றார். அவர் மேலும் ''நாங்கள் இப்போதே நடவடிக்கை எடுக்கின்றோம், ஏனெனில் செயற்படாதுவிடுவதால்
ஏற்படும் அபாயம் பாரியளவிலானதாகும். ஒரு வருடத்தில் அல்லது 5 வருடத்தில் சுதந்தரமான நாடுகள் மீது தீங்கை
விளைப்பதற்கான ஈராக்கின் ஆற்றல் பல மடங்குகள் அதிகமாக பெருகக் கூடும்.'' என கூறினார்.
இந்த விவாதத்தின் அடித்தளத்தில், உலகத்தில் உள்ள எந்தவொரு நாடும் புஷ் நிர்வாகத்தால்
ஒரு முறைமையான இலக்காக வரையறுக்கப்படலாம். இன்று ஈராக் மீது அமெரிக்க குண்டுகள் வீசப்படவுள்ளன.
நாளை, ஈரான், வடகொரியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்றவையும் அண்மையில் பிரச்சனைக்குரியதாக ஜனாதிபதி
புஷ்ஷால் மதிப்பிடப்பட்ட ஜேர்மனியும், பிரான்சும் வாஷிங்டனின் யுத்த வெறிபிடித்த கும்பலால் அமெரிக்காவிற்கான ஒரு
சாத்தியமான அபாயம் என தீர்மானிக்கப்பட்டு குண்டுவீச்சிற்கு உள்ளாகலாம்.
புஷ்ஷினது சிறிய தொலைக்காட்சி உரையில் உள்ள குறிப்பிடத்தக்க பகுதி என்னவெனில்,
''தனது சொந்த தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பலத்தைப் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு
சுயமான அதிகாரம் உண்டு'' என புஷ் வெளிப்படையாக கூறினார். இந்த கூற்றின் துல்லியமான அர்த்தம்
என்னெவெனில், ஐக்கிய அமெரிக்க அரசுகளானது தனது இலக்கை அடைவதற்கு இராணுவ பலத்தை பாவிப்பதை தடுக்கும்
எந்தவிதமான சர்வதேச கட்டுப்பாடுகளையும் நிராகரிக்கின்றது என்பதாகும்.
1930 களில் ஜேர்மனியிலும், இத்தாலியிலும் இருந்த பாசிச ஆட்சிகள் சர்வதேச
சங்கத்தில் (League of Nations) இருந்து வெளியேறின.
ஏனெனில் அவர்களால் தமது வெளிநாட்டு கொள்கைகளின் இலக்கை, ஏதாவது சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்படுத்தும்
அமைப்பிற்கு கீழ்ப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. முசோலினி எத்தியோப்பியாவை ஆக்கிரமிப்பதில்
இருந்து கட்டுப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. ஹிட்லர் அவரது பிராந்திய அபிலாஷைகள் வெட்டிக் குறுக்கப்படுவதை
அனுமதிக்கவில்லை. ஹிட்லரால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜேர்மனியின் வெளிநாட்டுக்கொள்கை தொடர்பாக ஒரு முக்கிய
வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ''தமது நோக்கங்களை கட்டுப்படுத்துவதையும், பொதுவான உடன்பாடுகளையும்,
உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் உடைப்பதும் மற்றும் சர்வதேச சட்டங்களாலோ அல்லது ஒப்பந்தங்களாலோ
கட்டுப்படுத்தப்படாது தமது நடவடிக்கைகளுக்கான முழுமையான சுதந்திரமுமே ஜேர்மன் அதிகார அரசியலின் தேவை
என கருதப்பட்டது''[1].
நாசி அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையின் தன்மை இன்றைய ஐக்கிய அமெரிக்க
அரசுகளுக்கு முழுவதும் பொருந்துகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினை நிராகரிப்பதன் மற்றும் ஈராக் மீதான
தாக்குதல் மூலமும் ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவாக உருவாக்கப்பட்ட ஏனைய
அமைப்புகளினதும் கட்டமைப்பினுள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது பூகோள அபிலாஷைகளும், வேட்கைகளும் கட்டுப்படுத்த
முடியாது என்பதை புஷ் நிர்வாகம் தெளிவாக காட்டியுள்ளது.
புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை புகழ்கையில், வோல் ஸ்ரீட் ஜேர்னல் பத்திரிகை,
இந்நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையினது இறப்பை மட்டுமல்லாது, 85 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி
வூட்ரோ வில்சனால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட தாராண்மைவாத சர்வதேச கோட்பாடுகளினுள்ளும், ஜனநாயக
உலக ஒழுங்கினுள்ளும் எஞ்சியிருந்த கொள்கைகளும் முடிவடைந்துவிட்டதை எடுத்துக்காட்டுவதாக ஒத்துக்கொண்டது. ''வில்சனின்
உறுதியான சிந்தனாவாதம் போதுமான அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய படிப்பினைகளை
கவனத்திற்கெடுத்தால், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் எந்த ஜனாதிபதியும், ஐக்கிய நாடுகள் சபையினது அல்லது
நாடுகளது சங்கத்தினது சட்டபூர்வத்தன்மை தொடர்பாக ஒருபோதும் சிந்திக்கமாட்டார்கள்'' என மார்ச் 17ம்
திகதியின் வோல் ஸ்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது.
ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக முன்னொருபோதுமில்லாத சதியை செய்ததன் மூலமாக
ஆட்சியதிகாரத்திற்கு வந்த ஒரு நிர்வாகத்தால் சர்வதேச சட்டங்கள் நிராகரிக்கப்படுவது தற்செயலானதல்ல. இறுதி
ஆய்வுகளில், உள்நாட்டு கொள்கைகளுக்கும், வெளிநாட்டு கொள்கைகளுக்கும் இடையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பான
உறவு உள்ளது. உலகை வென்று கைப்பற்றலுக்கான திட்டங்களானது, ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள முதலாளித்துவ
ஆட்சியை பண்பிடும் அதே குற்றவியல் மற்றும் ஜனநாயக விரோத நிகழ்ச்சிப்போக்குகளின் உலக அரங்கிலான ஒரு
முன்னிலைப்படுத்தலாக இருக்கின்றன.
குறிப்புக்கள்:
1. Ian Kershaw,
நாசி சர்வாதிகாரம்: விளக்கங்களின் பிரச்சினைகளும் முன்னோக்குகளும் (லண்டன், 2000), பக்கம்
139.
இந்த உரைப் பகுதியில் திரு. Kershaw,
ஜேர்மன் வரலாற்றாசிரியரான மார்ட்டின் புரோசாட்டின் (Martin
Broszat) ஆய்வுக்கு விளக்க
உரை தருகிறார்.
Top of page
|